Friday, 25 November 2011

ஜூனியர் விகடனில் ஒரு மக்கள் விரோதி?செய்திக்குள் செல்லும் முன் சிறு முன்னோட்டம்.

மக்களின் மிகப்பெரிய போராட்டங்கள் அரசினை எதிர்த்தோ அல்லது மிகப்பெரிய நிறுவனங்களை எதிர்த்தோ நடைபெறும் பொழுது அதை ஒடுக்க,முடக்க, செயலிழக்கச்செய்ய,நீர்த்துப் போகச் செய்ய ஆட்சியில் இருப்பவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும்,இதனால் பாதிக்கப்படும் குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்தவர்களும் பல்வகை உத்திகளையும் செயல்களையும் செய்வது வாடிக்கை.எதிர்ப்பை என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராவர்.

அப்பொழுது அவர்கள் செய்யும் முதல் வேலை ஊடக நிறுவனங்களை வளைப்பது.ஊடகமுதலாளிகளுக்கு விளம்பரங்களைக் கொட்டிக் கொடுப்பது,வர்த்தக ரீதியாகவோ அல்லது பொருளாதார நலன் சார்ந்தோ,தனிப்பட்ட நலன் சார்ந்த விஷயங்களையோ செய்து கொடுப்பதும் இதில் அடங்கும்.ஜாதி,அரசியல் கட்சிகளின் தொடர்பு,தரகு வேலை பார்ப்பவர்களின் பங்கு,அதிகாரத்தில் இருப்பவர்களின் தயவு இதில் கணிசமாக இருக்கும்.அதை வெற்றிகரமாக முடித்து விட்டால் பெரும்பாலும் பிரச்சனை இல்லை.அனைத்தும் இலகுவாக முடிந்து விடும்.தினமலர் மற்றும் ஆங்கில ஊடகங்கள் ”கொள்கை” அளவில் எப்பொழுதும் எதிர்ப்பது தனிக்கதை.

பத்திரிக்கை நிறுவனம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது என்று கொள்கை அளவில் முடிவெடுத்து விட்டால் இவர்களின் அடுத்த கட்டம் அங்கு வேலை செய்யும் பத்திரிக்கையாளர்களை தங்களது வலையில் விழ வைப்பது தான்.நேர்மையான பத்திரிக்கையாளர்கள் இதற்கு பலியாவது இல்லை.அவர்களை அணுகுவதும் இல்லை.ஊசலாட்டத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள்,ஊழல் பேர்வழிகள் தங்கள் வலையில் விழுந்தவுடன் அவர்களை நன்கு கவனிக்கத் தவறுவதும் இல்லை.

இவ்வாறு வலையில் விழும் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் கிம்பளப் பட்டியலில் வந்து விடுவர்.
அவர்களின் விருப்பமும் தேவையும்,பரிந்துரைகளும் சிறிதும் தாமதமின்றி நடந்துவிடும்.மேலும் அதன்பின் அவர்கள் கேட்கும் தகவல்கள் உடனுக்குடன் கிடைத்து விடும்.

அடுத்து வரும் காலங்களில் மற்றவர்களுக்குத் தெரியாத அதிகாரத்தில் உள்ளவர்களின் செய்திகள் இவர்களுக்கு முதலில் தெரிந்து விடும்.இந்தத் தகவலை  பத்திரிக்கைத் தொழிலில் தங்களைப் பலப்படுத்த பயன்படுத்திக் கொள்வர்.

நீ எனக்கு அட்ஜஸ்ட் பண்ணு நான் உனக்கு அட்ஜஸ்ட் பண்றேன் என்பது தான் இந்த பாலிசி.

பத்திரிக்கை நிர்வாகம் என்ன முடிவு  எடுத்தாலும் இவர்கள் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் மாற்றுக் கருத்தைப் பதிவு செய்கிறேன் என்ற பெயரிலும் எழுத ஆரம்பிப்பர். இவர்களின் பதிவுகள் சில சமயங்களில் முழுக்க எதிர்நிலையாகவும்,சில நேரங்களில் மக்களைக் குழப்பும் விதமாக ரெண்டுங்கெட்டானாகவும்,அல்லது போராடும் மக்களிடையே நிலவும் சிறு சிறு பிரச்சனைகளை ஊதிப் பெரிதுபடுத்துவதாகவும் அல்லது அவர்கள் மீது அவதூறு செய்வதாகவும் அல்லது கருத்தியல் ரீதியாக எதிர்ப்பாகவும் இருக்கும்.

இவர்களின் செய்திகள் சில நேரங்களில் விளம்பரம் போல பளிச்சென்று அனைவருக்கும் தெரியும் வண்ணம் இருக்கும்.ஆனால் சிறிதும் கூச்சநாச்சமின்றி இதனைச் செய்வர்.சில நேரங்களில் போராட்டம் கொழுந்து விட்டு எரியும் பொழுது அதனைப் பதிவு செய்யாமல் அதனை நீர்த்துப் போகச் செய்வதும் உண்டு.அல்லது பிரச்சனையத் திசை திருப்ப வேறு பிரச்சனையில் கவனத்தைத் திருப்புவர்.

ஈழப்பிரச்சினையில் இது தான் நடந்தது.நிருபரில் இருந்து ஆசிரியர்,பதிப்பாளர் வரை அனைவரும் இதில் அடக்கம்.(தனது அலுவலகம் முழுவதற்கும் பயன்படுத்த ஒரு பத்திரிக்கை அதிபர் 30கணிப்பொறிகளை புதிதாக வாங்கினார்.கொழும்பு உல்லாசச் சுற்றுலாவில் இருந்து திருவான்மியூரில் பிளாட் வாங்கியது வரை,ஒரு இறக்குமதி ரம் பாட்டில் வரை,செம்மொழி மாநாட்டு காண்ட்ராக்ட் எடுத்தது வரைக்கும், கலைஞர் டிவியில் புரோகிராம் நடத்தியது வரைக்கும்)பல்வேறு ஊடகங்களில் இதற்கு விலை போனவர்கள் பல ரகம்.

மூன்று தமிழர்களுக்கு தூக்கு பிரச்சனையிலும் இது தான் நடந்தது.சமீபத்தில் கூடங்குளம் பிரச்சனையிலும் இவ்வாறு நிறைய ரிப்போர்ட்டர்கள் இப்பொழுது இவ்வாறு விலை  போக ஆரம்பித்துள்ளனர்.இவர்களின் பதிவுகள் இவர்களின் நோக்கத்தைப் பளிச்சென்று காட்டிக் கொடுத்துவிடும்.

இந்த மாதிரி ஆட்களை காசுக்கு பீயைத் திங்கிறான் என்று கிராமத்துப் பக்கம் சொல்வார்கள்.

இனி மேட்டருக்கு வருவோம்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் கடந்த மூன்று மாதங்களில் மக்கள் அனைவரும் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்டு கட்சி பாராது,சாதி பாராது,மதம் பாராது  போராடிய விஷயங்கள் உண்டென்றால் அது இரண்டு விஷயங்கள் தான்.

1)மூவருக்கு மரண தண்டனை விதிப்பதை எதிர்த்து நடைபெற்ற நாடு தழுவிய போராட்டம்.

2)கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலையை எதிர்த்து நெல்லை மாவட்ட மக்கள் நடத்திய போராட்டம்.இந்தப் போராட்டம் அனைத்துப் பகுதிக்கும் பரவவில்லை என்றாலும் அனைத்து மட்டத்தினரின் ஆதரவும் இதற்கு இருக்கிறது.

மக்கள் நலனுக்கு விரோதமாகச் சிந்திக்காத யாரும் மேற்கண்ட இரண்டு விஷயங்களிலும் எதிர்நிலை எடுக்கவில்லை.இந்த இரண்டு விஷயங்களிலும் விகடன் குழும இதழ்கள் மற்ற நிறுவன இதழ்களைக் காட்டிலும் உண்மையாகவும் நேர்மையாகவும்,(வணிக நோக்கம் இருந்தாலும்)செயல்பட்டன என்றால் அது மிகையில்லை.

அதற்கு முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் மேற்கண்ட இரண்டு விஷயங்களிலும் மக்கள் விரோதமாக எதற்கோ ஆசைப்பட்டு,அல்லது யாருக்கோ வழக்கம் போல அடிமையாகி ஜூனியர் விகடனில் எதிர்க்கருத்தைப் பதிவு செய்தவர் என்ற சந்தேக வட்டத்தில் இருப்பவர் தான் பாலகிஷன்.நாம் கடந்த சில வருடங்களாக இவரது பதிவைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

யார் இந்த பாலகிஷன்?
(இவரது புகைப்படம் கிடைக்கவில்லை.வைத்திருப்பவர்கள் கலகக்குரல் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்)

இவரது ஒரிஜினல் பெயர் பாலகிருஷ்ணன் என்ற பாலகிஷன். பாலகிஷன்,சூர்யா,ஆர்.பி.,கனிஷ்கா என்று பல்வேறு பெயரில் இவர் தனது செய்தியைப் பதிவு செய்கிறார் என்பது நமது புலனாய்வில் தெரியவந்தது.

இவர் ஜூனியர் விகடனின் சிறப்புச் செய்தியாளர்.இவரும் எஸ்.சரவணகுமார் என்பவரும் தான் சில காலங்களுக்கு முன்வரை  ஜூ.வி.யில் உச்சத்தில் கோலோச்சியவர்கள்.

இதில் பாலகிஷனுக்கு அதிகார மட்டத் தொடர்புகள் அதிகம்.அதனைப்பயன்படுத்தி எந்தச் செய்தியையும் உட்கார்ந்த இடத்தில் இருந்து தனது விருப்பத்திற்கு ஏற்ப தயாரித்து பத்திரிக்கைக்கு அளித்து விடுவார்.இவர் தான் சிறப்புச் செய்தியாளராயிற்றே!இவரது எழுத்துக்கள் அனைத்தும் இவர் எதிர்பார்க்கும் படி வெளிவந்து விடும்.

சரவணகுமார்,பாலகிஷன் என்ற இந்த இருவருமே மிகப்பெரிய விடாக்கண்டர்கள் கொடாக் கொண்டர்கள்.நீண்ட காலம் ஜூ.வி.பத்திரிக்கையில்கோலோச்சிய இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் நிர்வாகத்திடமே தங்கள் தில்லாலங்கடி வேலையைக் காட்ட முதலில் எஸ்.சரவணகுமாருக்கு கல்தா கொடுத்த நிர்வாகம் அதன் பின் பாலகிஷனுக்கு கல்தா கொடுக்க முடிவு செய்தது.

ஆனால் இடையில் என்ன நடந்ததோ பத்திரிக்கையில் பாலகிஷனின் அதிகாரத்தை மட்டும் பிடுங்கி விட்டு வேலையில் மட்டும் தொடர்ந்து நீடிக்க அனுமதித்தது. பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மாறினாலும் பாலகிஷன் அவ்வப்பொழுது தனது வேலையைக் காட்டத் தவறுவது இல்லை.

க்கள் தன்னெழுச்சியுடன் போராடிய மூவருக்கு மரண தண்டனை விதிப்பதை எதிர்த்து போராட்டம்,கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஆகிய விஷயங்களில் இவரது கைவரிசையைப் பார்ப்போம்.

நாடு முழுவதிலும் மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டம் வெடித்துக் கொண்டிருந்தது.ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழ் அவர்களின் குரலை முழுமையாக வெளிக் கொணர்ந்தது.

ஜூ.வி.,21-8-2011 தேதியிட்ட இதழில் மூன்று தமிழர் தூக்குத் தண்டனைக்கு எதிராக  6 செய்திகள் இடம் பெற்றுள்ளன.

ஜூ.வி நிருபர் ந.வினோத்குமார் எடுத்துள்ள அ,ஞா.பேரறிவாளன் தாயாரின் நேர்காணல், ஜூ.வி செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் எடுத்துள்ள வைகோ நேர்காணல், ஜூ.வி நிருபர் தி.கோபிவிஜய் எடுத்துள்ள,ராஜீவ் கொலை வழக்கு விசாரணையின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும் சி.பி.ஐ.இன்ஸ்பெக்டரின் நேர்காணல்,சட்டப்படி தூக்கில் இருந்து தப்பிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி பற்றிய நிருபர் தமிழ்க்கனலின் பதிவு,மேலும் கழுகார் பதில்களில் தூக்குத் தண்டனைக்கு எதிராய் 2  பதில்கள் ஆகியவையும் அந்த இதழில் இடம் பெற்றுள்ளன.

பாலகிஷனோ அவர்களைத் தூக்கில் இட வேண்டும் என்று ஓய்வு பெற்ற சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமனின் நேர்காணலைப் பதிவு செய்துள்ளார்.அதுதான் இது.
ஜூ.வி. செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் உட்பட நிருபர்கள் மூவரும் தனது பெயரில் செய்திகளைப் பதிவு செய்துள்ளனர்.ஆனால் சிறப்புச் செய்தியாளர் பாலகிஷனோ ஆர்.பி.,என்ற தனது இனிஷியலில் செய்தியினை மறைமுகமாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த நேர்காணலை வணிகப் பத்திரிக்கையில் மாற்றுக் கருத்தினைப் பதிவு செய்துள்ளார் என்ற அளவில் தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம்.

டுத்த விஷயத்தைப் பார்ப்போம்.

ரகோத்தமன் நேர்காணல் வந்த அடுத்த 2 வாரத்தில் அதாவது,செப்டம்பர் 4,2011
தேதியிட்ட ஜூ.வி.இதழில் தலைமை நிருபர் டி.எல்.சஞ்சீவிகுமார் என்பவர் மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிராய்,பெங்களூரு ரங்கநாத் என்பவரின் நேர்காணலைப் பதிவு செய்துள்ளார்.அதில் ரங்கநாத்,ரகோத்தமன் பற்றிக் குற்றம் சாட்டியுள்ளார்.இது தான் அந்த நேர்காணல்.
அதே இதழில் அவரது குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும் விதமாக ரகோத்தமனின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது.இங்கு தான் நமக்குப் பல கேள்விகள் ஏற்படுகின்றன.

1)பொதுவாக ஒரு செய்தியில் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால்,யார் மீது குற்றம் சுமத்தப்பட்டதோ அவரது கருத்தினையும் 4 வரியில் அதிகபட்சம் 10 வரியில் தாங்கித் தான் எந்த இதழும் வரும்.அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் அவர் கருத்துக் கூறினால் வெளியிடத் தயாராய் இருக்கிறோம் என்ற செய்தியுடன் இதழ் வரும்.செய்திப் பதிவு என்றால் தான் இந்த முறை.

2)ஆனால் டி.எல்.சஞ்சீவிகுமார் எடுத்துள்ளதோ பெங்களூரு ரங்கநாத் நேர்காணல்.அதில் அவர் சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் மீது குற்றம் சுமத்தியுள்ளார். நேர்காணலில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கெல்லாம் பதில் வாங்கிப் போட வேண்டிய அவசியம் இல்லை.

அப்படி அவசியம் என்றால்,இதுவரை எத்தனையோ தலைவர்கள்,எழுத்தாளர்கள்,ஆளுமைகள் நேர்காணல் ஜூ.வி.இதழில் வந்துள்ளது.அத்தகைய நேர்காணல்களில்  எல்லாம் அவர்கள் எத்தனையோ நபர்களைக் குற்றம் சாட்டியுள்ளனர்.அதற்கெல்லாம் இது வரை பதில் சொல்லும் விதமாக பதிலுக்கு எத்தனை நேர்காணல்கள் அதே இதழில் இடம் பெற்றுள்ளன?ஒரு நேர்காணலும் இதுவரை இல்லை.மறுப்பு அல்லது விளக்கம், அதிகபட்சம் ஓரிரு வாரம் கழித்து பதில் சொல்லும் விதம் வேறொரு நேர்காணல் வரும்.

3) பொதுவாக இதழ் வந்த பின்பு தான் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வெளியில் தெரியவரும்.அதன்பின் அவரது எதிர்க்கருத்து வெளியே வரும்ஆனால் பாலகிஷன் தான் சிறப்புச் செய்தியாளராயிற்றே! ஆசிரியருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறாரே!அவருக்கு ரகோத்தமன் மீது குற்றம் சாட்டப்பட்ட டி.எல்.சஞ்சீவிகுமாரின் நேர்காணலை முன்கூட்டியே படிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

இந்த இதழ் வெளிவந்தால் நாலு பேர் ரகோத்தமனைத் தப்பாக நினைப்பார்களே,இதழ் வந்தபின் அவர் பதில் விளக்கம் அளித்து அது வெளிவர 4 நாட்கள் ஆகிவிடுமே?அதுவரை சமூகத்தில் அவருக்கு கெட்டபெயர் ஏற்படுமே என்று உள்ளம் பதைபதைத்து உடனே அதற்கு பதில் சொல்லும் விதமாக ரகோத்தமனின் நேர்காணலை அதே இதழில் பதிவு செய்திருக்கிறார்.

அதனால் தான் ரகோத்தமன் நேர்காணல் வந்த அடுத்த 2 வாரமே ஆகியிருந்த நிலையிலும்  ரகோத்தமனின் நேர்காணலை மீண்டும் பதிவு செய்துள்ளார்.அதுவும் சூர்யா என்ற புனைப்பெயரில்.

4)ஆகஸ்ட் 21 ஆம் தேதியிட்ட சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் நேர்காணலை ஆர்.பி.என்ற பெயரில் பதிவு செய்துள்ள அவர்,இரண்டு வாரம் கழித்து செப்டம்பர் 4 ஆம் தேதி எடுத்த அதே சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் நேர்காணலை சூர்யா என்ற பெயரில் ஒளிந்து கொண்டு பதிவு செய்துள்ளார்.

ஏன் இந்தக் திருட்டுத்தனம்?இதற்கு என்ன தேவை?

5)ஒரு வாதத்திற்காக மாற்றுக் கருத்து என்ற அளவில் நேர்காணலை ஏற்றுக் கொண்டாலும் 2 வாரத்தில் அதுவும் இரண்டு நேர்காணல் வருமளவுக்கு ரகோத்தமனுக்கு என்ன முக்கியத்துவம்?

இதுவரை ஜூ.வி.யில் யாருக்கும் இப்படி ஒரு பொன்னான வாய்ப்புக் கிட்டவில்லையே?

இதற்கு விளம்பரக் கட்டணம் என்ன?யாருக்குச் செலுத்தப்பட்டது?கொஞ்சம் சந்தேகப்பட வேண்டியதிருக்கிறது.
டுத்து சென்ற இதழ் ஜூனியர் விகடனில் கூடங்குளம் பற்றிய இவரது செய்தியைப் பார்ப்போம்.
கூடங்குளம் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்ற பெயரில் 27-11-2011 தேதியிட்ட இதழில் வெளிவந்த 3 பக்க பதிவு.

வணிகப் பத்திரிக்கை,அதனால் கொள்கை மட்டும் பேச முடியாது,அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் அதனால் மாற்றுக் கருத்தினை அனுமதிக்க வேண்டும் என்ற கோணத்தில் இதனைத் தாராளமாக அனுமதிக்கலாம்.

ஆனால் பதிவின் கடைசி வரியைப் பார்த்தால் முழுப் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாமல் நாளுக்கு நாள் போராட்ட வேகம் குறைவதும்,அணு மின் உலைக்கு ஆதரவுப் போராட்டங்கள் நடக்க ஆரம்பிப்பதும் இந்த ஏரியாவுக்குப் புதுசு

என்று முடித்துள்ளார்.

கருத்தியல் ரீதியில் விஞ்ஞானிகள் எனப்படுவோர் சொல்வதை அப்படியே 3 பக்கங்கள் எழுதி விட்டு நடைபெறும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி ஒரு வரி கூட  செய்தியில் தெரிவிக்காமல்,அலசி ஆராயாமல், எழுத்தில் அதற்குச் சிறிதும் தொடர்பு இல்லாமல்,ஆனால் அணு உலைக்கு ஆதரவுப் போராட்டங்கள் அதிகரித்துள்ளன என்று சம்பந்தம் இல்லாமல் செய்தியை முடித்துள்ளார்.

இதன் மூலம் போராட்டத்தை முடக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் இருப்போரின் விருப்பத்தை புராஜக்டாக மாற்றி இதழில் பதிவு செய்துள்ள இவரின் ஆர்வம் நமக்குப் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.இதன் மூலம் நாடெங்கிலும் உள்ள மக்களின் மனதில் போராட்டம் தோல்வியை நோக்கிச் செல்கிறது என்பது போன்ற பிரமையை ஏற்படுத்துவது தான் இவரது நோக்கம்.

இதனை அணு உலை தயாரிக்கும் நிறுவனத்தின் விளம்பரம் என்று சொல்லலாம்.விளம்பரக் கட்டணம் நிர்வாகத்துக்குச் செல்லாமல் செய்தியாக வெளிவந்திருக்கிறது.இதற்கு அணு உலை தயாரிக்கும் நிறுவனம் கொடுத்த விலை என்னவென்று நமக்குத் தெரியவில்லை.

னி இறுதிப் பகுதிக்கு வருவோம்.

கூடங்குளமாகட்டும்,மூவர் தூக்குத் தண்டனையாகட்டும் எப்பொழுதும் மக்கள் கருத்துக்கு எதிரான மாற்றுக் கருத்தினையே பதிவு செய்கிறாரே பாலகிஷன்.இதற்கு என்ன காரணம்?எதிர்க்கருத்து உள்ளோர் எல்லாம் இவரிடம் மட்டுமே நேர்காணல் அளிக்கின்றனரே?அது ஏன்?

இவர் சிந்தனையே மக்கள் நலனுக்கு எதிராய் இருக்கிறதா?அல்லது இவரை யாரும் பயன்படுத்திக் கொள்கிறார்களா?அல்லது தனது சிந்தனையை மற்றவர்கள் நல்ல விலைக்குப் பயன்படுத்த அனுமதிக்கிறாரா?அதற்கு ஜூ.வி.இதழைப் பயன்படுத்திக் கொள்கிறாரா?தெரியவில்லை.

சிறப்புச் செய்தியாளர் என்று சொல்லிக் கொள்ளும் இதுவரை இவர் எத்தனை மக்கள் பிரச்சனையில் தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார்?

இவர் மீதான நமது மேற்கண்ட குற்றச்சாட்டிற்கு நிருபிக்கத்தக்க வலுவான ஆதாரம் எதுவும் இல்லை.
ஆனால் இவரது எழுத்தே இவர் மீதான ஐயப்பாட்டையும் இவரது நடத்தையையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஆகவே தான் நிராகரிக்க முடியாத நமது சந்தேகங்களை இங்கு கேள்விகளாக எழுப்பியுள்ளோம்.

நாம் பத்திரிக்கையை காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறோம்.ஆகவே கேள்வி எழுப்புவது நமது உரிமை.
அதுவும் சமீப காலமாக கூடங்குளம்,கல்பாக்கம் அணு உலைக்கு ஆதரவாய் அனைத்து ஊடகங்களிலும் செய்தி இடம் பெறச் செய்வதற்காக மிகப்பெரிய சக்தியுடன் ஒரு குழு களம் இறங்கியுள்ளது.

அவர்களின் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் ஓரளவுக்கு நிறைவேறியுள்ளது.இனி வரும் வாரங்களில் ஊடகங்களில் ஆதரவாய் அதிகச் செய்திகள் வெளிவர வாய்ப்புள்ளது.

ஆகவே தற்பொழுது நடைபெறும் கூடங்குளம் பிரச்சனையாகட்டும்,கல்பாக்கம் பிரச்சனையாகட்டும் யார் என்ன செய்தி எழுதினாலும் அதனை சந்தேகக் கண் கொண்டு பாருங்கள்.

குறிப்பாக சூர்யா,கனிஷ்கா,ஆர்.பி.,பாலகிஷன்.கிஷன்,என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு இவர் எப்பொழுது  எந்தப் பிரச்சினை  குறித்து எழுதினாலும் பகுத்தறிவு கொண்டு வாசியுங்கள்.

இறுதியாக வள்ளுவப் பெருந்தகையின் குறளுடன் முடிக்கிறோம்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு


1 comment:

சாத்தப்பன் said...

இன்னைக்கு கடைக்கு வந்த ஜூனியர் விகடனில் கல்பாக்கம் அணு உலை பாதுகாப்பானது,சுனாமி வந்தாலும் தாங்கும் அப்படின்னு விஞ்ஞானிகள் சொன்னாங்கன்னு சஞ்சீவிகுமார் என்பவர் எழுதியிருக்காரே?அதுவும் கட்டிங் மேட்டர் தானா சார்?சொல்லுங்க பிளீஸ்.