Wednesday 24 December 2014

விகடனில் ப்ரியா தம்பி - "இவர் பிழைப்பு, அவர்கள் உழைப்பு " ..!

ப்ரியா தம்பி

டகங்களில் தகுதி,திறமை,அனுபவம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். நிர்வாகம் அல்லது எடிட்டோரியலில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுடன் சாதி,நட்பு தொடங்கி என்ன காரணம் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத வண்ணம் வரைக்குமாக  ஒவ்வொருவரும் ஒருவித வலைப்பின்னலில் கோர்த்துக்கொண்டு தங்களது தகுதிக்கும் திறமைக்கும் எட்டாத  உயரத்தைப் பிடித்து விடுகின்றனர். இது  எப்பொழுதும் நடப்பது தான் என்றாலும் இப்பொழுது மிக அதிகமாய் நடக்கிறது.

உயர் பொறுப்பில் இருப்பவரின் நட்பும், கூச்சமில்லாமல் சுயமரியாதையற்று லாபி செய்யும் குறுக்குப் புத்தியும் அறிந்தால்,எவ்விதத் தகுதியுமற்ற ஒருவர் உயரே ஏறி உச்சாணிக்கொம்புக்கு வர முடியும் என்பதை அம்பலப்படுத்தும் பதிவு இது.

"ப்ரியா தம்பி' என்பவர் விகடன் குழுமத்தில் இருந்து வெளியாகும் 'டாக்டர் விகடனுக்கு' பொறுப்பாசிரியராய் ஒரு மாதத்திற்கு முன்பு நியமிக்கப்ப‌ட்டுள்ளார்.

இது பற்றிய செய்திக்குச் செல்வதற்கு முன் பிறிதொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற வளாகம், எழும்பூர். முதல் மாடி.

சென்னை பெருநகரத்தில் வசிக்கும்,பத்திரிகை நடத்த விரும்பும் 'பண்பாளர்கள்' அனைவரும் இந்த நீதிமன்றத்தில் தான், புது டில்லி  RNI அலுவலகத்தினால் ஒப்புதல் அளிக்கப்ப‌ட்ட தங்களது பத்திரிகையின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.அதன் பின் தான் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட முடியும்.

பதிவிற்கென‌ சில நடைமுறைகள் உள்ளன‌.

அதில் முக்கியமானது,பத்திரிகை வெளியீட்டாளர் ஒரு படிவமும்,அச்சிடும் அச்சக உரிமையாள‌ர் ஒரு அறிவிக்கை படிவத்தையும்  நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

பத்திரிகை பெயர்,விலை, வெளியிடும் மொழி,முகவரி,ஆசிரியர் பெயர்,பதிப்பாளர் பெயர்,உரிமையாளர் பெயர்,காலம்,அச்சிடுபவர் பெயர் உட்பட அனைத்து விபரங்களையும் நிரப்பிய‌ படிவம் (FORM1 ) வெளியீட்டாளரால் அளிக்கப்படும்.

அச்சக உரிமையாள‌ர் கொடுக்கும் ஒப்புகைப் படிவத்தில், தான் குறிப்பிட்ட பத்திரிகையை அச்சிடுவதாக இருக்கும். இந்த அறிவிக்கையானது section 6,Press and registration of books act 1867 இன் படி உள்ள நடைமுறை. எந்த மொழி பத்திரிகை என்றாலும் இரண்டு படிவங்களும்  ஆங்கிலத்தில் இருக்கும்.

நிரப்பப் பட்ட இரண்டு படிவங்க‌ளையும் நீதிமன்ற‌த்தால் இதற்காக நியமிக்கப்ப‌ட்ட முதல் மாடியில் இருக்கும் அலுவலரிடம் கொடுத்த பின் அது பட்டியலில் இடப்படும். பெரும்பாலும் பதிவு செய்யும் நடைமுறை  வேலை நாட்களில் நீதிமன்றம் காலை 10.45 க்கு துவங்கியதும் முதல் அலுவலாக நடைபெறும் வழக்கம் இருக்கிறது.

பதிவுக்கு, ஒரு நாள் முன்பே இந்த படிவங்கள் அனைத்தும் நீதிமன்ற‌ அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டு தவறுகள் திருத்தப்படுவதால், சமர்ப்பிக்கப்படும் படிவத்தில் பெரும்பாலும் தவறுகள் இருக்க வாய்ப்பு இல்லை. நீதிமன்றத்தில், சம்பிரதாயமான கேள்விகள் மட்டும் கேட்கப்படுவதாலும் சிக்கல் இல்லை.

என்று நமது பதிவு நாள் பட்டியலில் இடப்படுகின்றதோ அன்று, மாஜிஸ்டிரேட் முன்பு கூண்டில் ஏறி நின்று வெளியீட்டாளரும்,அச்சக உரிமையாளரும் ஒருவர் பின் ஒருவராக‌ பத்திரிகை குறித்த தகவலைக் கூறிப் பதிவு செய்யும் நடைமுறை இருக்கிறது. சில நேரம், மாஜிஸ்திரேட் எழுப்பும் வினாக்களுக்கு உரிய பதிலை கூற வேண்டும். (அதில் அவருக்குத் திருப்தி இல்லையென்றால் பதிவு அன்று நிறுத்தப்படும்.)

பெரும்பாலும் பதிவு எளிது முடிந்து விடும்.

னி விஷயத்துக்கு வருவோம்.

வழக்கம் போல் ஒரு அலுவல் நாள். சென்னை முதன்மை பெருநகர குற்றவியல் நீதிமன்றம்.எழும்பூர்.நீதீமன்ற அறை எண்.12.காலை நேரம்  10.45.

வழக்கமான நடைமுறையில் இல்லாமல், நீதிமன்ற அலுவல் துவங்க இருக்கும் சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு பத்திரிகையின் பதிவுக்கான ஆவணங்கள் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கொடுக்கப்ப‌டுகிறது. நீதிமன்ற அலுவலரும் பதட்டத்தில் அவசர அவசரமாய் எதனையும் சரிபார்க்காமல் அனுமதிக்கிறார்.

வழக்கறிஞர்களும் தங்கள் வழக்குக்காய் வந்தவர்களாலும்,அலுவலர்களாலும் நீதிமன்றம் நிரம்பி இருக்கிறது.

வழக்கம் போல் முதலில் பத்திரிகை பதிவு நடைபெற ஆரம்பிக்கிறது.

பதிவுக்கான பத்திரிகையின் விபரம் இது தான்.

Oli vilakku.  Rs.10. Hindi magazine. Monthly 

'ஒளி விளக்கு' என்னும் இந்தி மொழி மாத பத்திரிகை.விலை ரூ.10. முதலில் வெளியீட்டாளர் கூண்டில் ஏறி நிற்கிறார்.


(இந்த பத்திரிகையைப் பொறுத்த வரை  வெளியீட்டாளர் தான் எடிட்டர் பொறுப்பையும் வகிக்கிறார்.)

விண்ண‌ப்ப படிவ‌ம் தப்பும் தவறுமாய் இருக்கிறது.இதை ஆங்கிலத்தில் இப்ப‌டி எழுதி இருக்கிறார்கள்.

'ol vilakku விலைக்கு நேரே ரூ.1014 என்று இருக்கிறது.

மாஜிஸ்திரேட் படித்து விட்டு கோபமாகிறார்.

மாஜிஸ்திரேட்,பத்திரிகை பெயர் என்ன ? .

ஒளி விளக்கு.

"அப்படியா..? இங்கு அப்படி எழுத வில்லையே ?"

எதனால் இப்படிக் கேள்வி எழுகிறது என்பது தெரியாததால் இந்தக் கேள்விக்கு வெளியீட்டாளர் தடுமாறுகிறார்.

என்ன விலை ?

ரூ.10.

அங்கோ Rs..10/- என்பதற்குப் பதில் 1014 என்று இருக்கிற‌து. இந்தப் பதிலும் கடும் எரிச்சலை உண்டாக்குகிறது.

"நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ரெண்டு பக்கத்தையே தப்பில்லாமல் ஒழுங்கா எழுதத் தெரியலை.நீங்க எப்படி 50 பக்கம் பத்திரிகை தயாரிப்பீங்க.? " என்று சொல்லி விட்டு அடுத்ததாய் பத்திரிகை அச்சிடுபவரை அழைக்கச் சொல்கிறார்.

வெளியீட்டாளருக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து,அவர் என்றுமில்லாத பயத்துடன் கூண்டில் ஏறுகிறார்.

வழக்கமான கேள்வி எதுவும் இல்லாமல் அச்சிடுபவரிடம் மாஜிஸ்திரேட் கேட்ட முதல் கேள்வி.

"உங்களுக்கு இந்தி எழுதப் படிக்கத் தெரியுமா..?"

அச்சிடுபவர் தயங்கித் தயங்கி,"எனக்கு ஹிந்தி கொஞ்சம் புரியும். பேசினால் ஓரளவுக்குப் புரிந்து கொள்வேன்"

கேட்ட கேள்விக்குப் பதில்."ஹிந்தி எழுதப்படிக்கத் தெரியுமா..?"

"தெரியாது." பளிச்சென உண்மையை ஒப்புக் கொள்கிறார்.

"அப்படின்னா இந்த பத்திரிகையை எப்படி படித்துப் பார்த்து அச்சிடுவீங்க.?  என்ன எழுதுகிறார்கள் என்பதை தெரியாமல் எப்படி நீங்கள் அச்சிடலாம்..? இது தவறுக்கு வழி வகுக்கும். இது சட்டப்ப‌டி தவறு. முதலில் இந்தி நன்கு படித்து விட்டு வாருங்கள். அதன்பின் பத்திரிகையை நீங்கள் அச்சிடலாம்."

 அந்தப்பத்திரிகை அன்று பதிவு செய்யப்ப‌டவில்லை. நிராகரிக்கப்படுகிறது.

இனி நாம் கட்டுரைக்கு வருவோம்.

இதனை அப்படியே பொருத்திப்பாருங்கள்.

ஒரு பத்திரிகையில் அச்சிடுபவரை விட ஆசிரியருக்கு முதன்மைப்பொறுப்பு இருக்கிறது. பொறுப்பாசிரியர் நியமிக்கப்ப‌ட்டால் அனைத்துப் பொறுப்பும் அவரைச் சார்ந்து விடுகிறது.

பத்திரிகையில் எதைப் பிரசுரிக்கலாம் என முடிவு செய்வதும்,அதை யாரிடம் இருந்து பெறலாம் என முடிவு செய்வதும்,அதன்பின் பிரசுரத்துக்காய் வரும் படைப்புகளைச் சரி பார்ப்பதும்,அதில் இருக்கும் பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டித் திருத்துவதும்,வந்துள்ள கட்டுரை போதுமான விவரங்கள், தகவல்களுடன் இல்லாத பட்சத்தில் கூடுதல் விபரங்களைக் கோரிப்பெறுவதும் தான் பொறுப்பாசிரியரின் பணி.

மேற்கண்டவற்றைச் செய்வதற்கு, இதழ் எந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறதோ அத்துறை குறித்த ஞானம் கொண்டிருக்க வேண்டும். இதழுக்குப் பங்களிப்பவர்கள் எது குறித்து எழுதுகிறார்களோ அத்துறை குறித்த விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டும்.அரசியல் பத்திரிகை என்றால் அரசியல் ஞானமும்,திரைத்துறை குறித்த பத்திரிகை என்றால் அத்துறை குறித்த விஷயங்களையும் தெரிந்திருக்க வேண்டும்.

தினமணி ஆசிரியர் பொறுப்பு வகித்த‌ திரு.சம்பந்தமோ,தினகரன் ஆசிரியர் பொறுப்பு வகித்த‌ திரு.கதிர்வேலோ தாங்கள் வகித்த பொறுப்பை உணர்ந்தவர்கள்,அதற்கான தகுதியை உடையவர்கள்.இது போல‌ எத்தனையோ பேரை அடையாளம் காட்ட முடியும்.

இவ்வளவு ஏன்? விகடன் குழுமத்தின் அரசியல் பத்திரிகையான 'ஜூனியர் விகடன்' ஆசிரியராய் ப.திருமாவேலன் இருக்கிறார். இவருக்கு இதழில் ஒரு ரிப்போர்ட்டர் எழுதுவதை எடிட் செய்யும்,அதிலிருக்கும் தகவல்களைச் சரி பார்க்கும் திறனும்,தலைப்பு வைப்பதிலிருந்து அனைத்தையும்  செய்யும் வல்லமை  உண்டு. இதழ் முடிக்கும் கடைசி நேரத்தில் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு நடக்கிறது என்றால் அது குறித்து அவரே எழுதி அந்தப்பக்கத்தை நிரப்பும் திறமையும் அவருக்கு உண்டு. தமிழ் நாட்டின் அரசியல் சூழல் அவருக்குத் தெரிந்ததனால் அவரால் இதைச் செய்ய முடிகிறது. இதே திருமாவேலனால் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு அரசியல் பத்திரிகைக்கு ஆசிரியராய் நியமிக்கப்ப‌ட்டால் செயல்பட முடியாது என்பது வேறு விஷயம். அங்குள்ள அரசியல் அவருக்குப் பரிச்சயம் கிடையாது என்பது தான் காரணம்.

மேற்கண்டவர்களின் அரசியலில் நமக்கு முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் வகித்த பொறுப்புக்குத் தகுதியானவர்கள் தான்.

விகடன் மட்டுமல்ல, எந்த நிறுவனத்திலும் அனுபவம் இல்லாத கத்துக்குட்டிகளை, எடுத்தவுடன் தலைமைப் பொறுப்புக்கு நியமிப்ப‌தில்லை. தினமலர்,தினகரன்,தினத்தந்தி போன்ற நிறுவனங்கள் ஒருவரை தலைமைப்பொறுப்புக்கு நியமிக்கிறது என்றால் அவர் எதற்கு ஆசிரியராய் நியமிக்கப்ப‌டுகிறாரோ அது குறித்து அனைத்தும் தெரிந்தவராகத் தான் இருப்பார். இவ்வளவு ஏன் ஒரு நிருபரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது எத்தனை கேள்விகள் கேட்கின்றனர்.

இது தான் நடைமுறை.

'பிரியா தம்பி' என்பவர் 'டாக்டர் விகடன்' பத்திரிகையின் பொறுப்பாசிரியராய் நியமிக்கப்ப‌ட்டிருக்கிறார்.

டாக்டர் விகடன்,ரா.கண்ணன்,ப்ரியா தம்பி,குங்குமம் டாக்டர்

பொறுப்பாசிரியர் பணிக்குத் தகுதி உடையவரா 'பிரியா தம்பி'  ..?

'டாக்டர் விகடன்' பத்திரிகை முழுக்க முழுக்க மருத்துவம் சார்ந்தது. வயிற்றில் இருக்கும் கருவிலிருந்து மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் உயிர்கள் வரை எதிர்கொள்ளும் உடல் நல சிக்கல்கள் அனைத்தையும் அந்த இதழ் விவாதிக்கிறது. மனித உடல்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனையும்  தீர்வும் சொல்கிறது. இதில் பெரும்பாலானவற்றை மருத்துவத்துறையில் நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் மற்றும் இத்துறை சார்ந்தவர்கள் எழுதுகின்றனர். தங்களது ஆலோசனைகளைச் சொல்கின்றனர். இந்த இதழுக்குத்தான்  பொறுப்பாசிரியராய் 'பிரியா தம்பி' நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த பத்திரிகையும் இவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அவர்கள் எழுதும் கட்டுரையைச் சரி பார்ப்பதற்கும் அவர்கள் எழுதுவதில் தவறு இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டுவதற்கும், கட்டுரை அதிக பக்கங்கள் இருந்தால் அதனைச் சுருக்கவும், கட்டுரையில் சொல்லப்ப‌ட்டுள்ள‌வைகள் முழுமையாய் இல்லையென்றால் கூடுதலாய் தகவல்களைக் கோரவும் இத்துறையில் பரிச்சயம் இருக்க வேண்டும். இதுவும் போக மருத்துவ உலகில் சமீபத்திய அனைத்தும் அப்டேட்டாக இருக்க வேண்டும்.

நிபுணத்துவம் மிக்க மருத்துவர்களின் படைப்புகளைச் சரி பார்க்க அவர்கள் அளவுக்கு திற‌மையும் அறிவும் இல்லையென்றாலும்,குறைந்த பட்சம் அடிப்படை விஷயங்களாகவது தெரிந்திருக்க வேண்டும். ஆனால் 'டாக்டர் விகடன்' பொறுப்பாசிரிய‌ருக்கோ மருத்துவம் குறித்து எதுவும் தெரியாது. இவர் இதற்கு முன் மருத்துவ இதழ்கள் எதிலும் வேலை பார்க்கவில்லை. அல்லது மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் எதையும் எழுதவில்லை.

ஆனால் இவர் ஏற்றிருக்கும் வேலையோ 'டாக்டர் விகடன்' என்னும் மருத்துவ இதழுக்கு பொறுப்பாசிரியர்.

இதில் இடம் பெற்றிருக்கும்  கட்டுரைகள் பெரும்பாலானவற்றை எழுதுபவர்கள் புகழ் பெற்ற மருத்துவர்கள். இது எப்ப‌டிச் சரியாகும்..?

 நம் உயிரையும் உடலையும் குறித்து எழுதும் மருத்துவ இதழுக்கு பொறுப்பாசிரியராய் மருத்துவம் குறித்து தெரியாத ஒருவர் நியமிக்கப்ப‌டுகிறார் என்றால் அதன் வாசகனின் உயிர் குறித்து 'விகடன் குழுமம்' மயிர் அளவுக்கும் கவலைப்ப‌டவில்லை எனத் தெரிந்து கொள்ள‌லாம். மற்ற துறை இதழ்களின் நிருபர்களின் தகுதியின்மை போல் இதனை எளிதாய் ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஏனென்றால் இது படிப்பவனின் உயிரும் உடல்நலமும் சம்பந்தப்பட்ட விஷயம்.

தண்டு வடப்பிரச்சனை குறித்தோ, நரம்புச்சிதைவு நோய் குறித்தோ,இதய மாற்று அறுவைச் சிகிச்சை குறித்தோ,மார்பகப் புற்று நோய் குறித்தோ,ஸ்டெம்செல் குறித்தோ ஒரு மருத்து நிபுண‌ர் கட்டுரை எழுதுகிறார் என வைத்துக் கொள்வோம்.

அந்தக்கட்டுரையை வெளியிடுவதில் பொறுப்பாசிரியராய் இருக்கும் பிரியா தம்பியின் பங்கு என்ன..? இதைப்பற்றி எதுவுமே தெரியாத இவரால் என்ன செய்ய முடியும்..? எழுதப்பட்ட விஷயங்கள் சரியான முறையில் சொல்லப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எப்படி முடிவு செய்வார்..? தகவல்கள் போதுமானவையா இல்லையா என்பதை எப்படி முடிவு செய்வார்..? மூன்று பக்க கட்டுரைக்கு நான்கு  பக்க மேட்டர்  வந்தால், அதனை எப்படி கையாள்வார்..?

அவர் எதைச் செய்தாலும் அதும் படிக்கும் வாசகனின் தலையில் தானே வந்து இடியாய் இறங்கும்.எதுவுமே தெரியாத ஒருவர் பொறுப்பாசிரியராய் பணியாற்றுவது படிக்கும் வாசகனின் உயிரைப் பணயம் வைக்கும் ஒன்றுக்கு சமம் இல்லையா..?

இல்லை,இல்லை  பிரியா தம்பி மருத்துவர்கள் எழுதும் இது போன்ற‌ கட்டுரையில் திருத்தமோ,எடிட்டிங்கோ எதுவும் செய்வதில்லை,அதனால் வாசகன் இது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என்று சொன்னால் அவர் வகிக்கும் பொறுப்பாசிரியர் பதவி என்பது அலுவலகத்தில் அமர்ந்து இருக்கும் அலங்காரப் பதவியா.? பதவிக்காக அவர் வாங்கும் நாற்பத்து சொச்சம் ஆயிரம் சம்பளம் என்பது தண்டமா..?

மலையாள சினிமா விமர்சனம் எழுதும் ஒருவரை,தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம்  எழுதிக்கொண்டிருந்த ஒருவரை டைம்பாஸ் இதழில் பணி செய்யச் சொல்வதில் நமக்குப் பிரச்சனை இல்லை,அல்லது விகடன் நிருபராக பத்தோடு ஒன்றாக பதினொன்றாக‌ பணி செய்யச் சொல்வதில் நமக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் ஒட்டுமொத்த  டாக்டர் விகடனைத் தாம்பாளத்தில் வைத்து கொடுத்திருக்கிறது விகடன்.

 தெருவுக்குத் தெரு புற்றீசல் போல் முளைத்திருக்கும் மெடிக்கல் ஸ்டோரை நடத்துவதற்கே, குறைந்த பட்சம் பார்மசி படிப்பில்  டிப்ளமோ படித்திருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ரெண்டு பக்கம் ஒழுங்காய் எழுத தெரியவில்லை,உனக்கு வெளியீட்டாளர் கம் எடிட்டர் பதவி கேடா ? எனவும்,அச்சிடுவதை படிக்கத் தெரியாது எனவே நீ அச்சிடக் கூடாது என நீதிமன்றம் பதிவு செய்ய மறுக்கிறது. ஆனால் கட்டுரையாளர் எழுதுவதை படிக்கத் தெரிந்தாலும் அது பற்றி ஒன்றுமே தெரியாதவர் இங்கு பொறுப்பாசிரியர்.  நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய ஆசிரியர் நிலையில் இருப்பவர். மருத்துவம் குறித்து எதுவும் தெரியா விட்டாலும்,உள்ளடக்கம் பற்றி எதுவுமே தெரியா விட்டாலும் ஒருவரை பொறுப்பாசிரியராய் விகடன் குழுமமும் ஆசிரியர் ரா.கண்ணனும் நியமிக்கிறார்கள்.

உள்ளே ஒரு அறிவிப்பு இருக்கிறது.

மருத்துவர்களின் ஆலோசனையைப்பெற்றுத்தான் படிப்பவர்கள் செயல்பட வேண்டும் என்று. இதைப்படித்தால் 'புகை உள்ளத்துக்கும் உடலுக்கும் தீங்கானது' என்று அட்டையில் சிறியதாய் அச்சிட்டு விட்டு ஊரெங்கும் உள்ள‌வனின் உயிரைப்பறிக்கும் புகையிலை நிறுவனங்கள் தான் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.

இது தான் 80 ஆண்டு பாரம்பரிய நிறுவனம் எனச் சொல்லிக்கொள்ளும் விகடனின் தரம்.

(விகடன் மட்டுமல்ல 'டாக்டர் விகடன்','குமுதம் ஹெல்த்','குங்குமம் டாக்டர்' என அனைத்து பத்திரிகைகளுக்கும் கட்டுரையின் இந்தப்பகுதி பொருந்தும்.அப்படியே பொருத்திக் கொள்ளலாம்.)

துவரை தகுதியற்ற ஒருவரின் நியமனம் குறித்து நாம் பார்த்தோம். இனி நாம் இந்த நியமனத்தால் பாதிக்கப்ப‌ட்ட விகடன் பத்திரிகையாளர்களைப் பார்ப்போம் .




ந்த  பத்திரிகையிலும் பொறுப்பாசிரியர் பதவிக்கு ஒருவர் வர வேண்டுமென்றால் அவர் நிருபர்,மூத்த நிருபர்,உதவி ஆசிரியர் போன்ற படிநிலைகளைக் கடந்து வர வேண்டும். அனைத்து கட்டங்களையும் கடந்து வந்தால் தான் அவர் தான் வகிக்கும் உயர் பொறுப்புகளில் மிளிர முடியும் என்பதற்காகத் தான் இந்த நடைமுறை. இல்லையென்றால் கத்துக்குட்டிகள் எல்லாம் தலைமைப்பொறுப்புகளுக்கு வந்து விடுவார்கள் அல்லவா..?

வேறு பத்திரிகையில் இருந்து ஒருவர்,இன்னுமொரு பத்திரிகைக்கு வந்தாலும், அவரது பழைய பொறுப்பையோ அல்லது அதற்கு அடுத்த படிநிலையையோ தான் அடைய முடியும்.

நிருபர் பதவி வகித்த ஒருவர் புதிதாய் இன்னொரு நிறுவனத்தில் சேரும் பொழுது அவருக்கு ஆசிரியர் பதவியையோ,பொறுப்பாசிரியர் பதவியையோ யாரும் தருவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதுவும் நாளிதழ்களில் கனவில் கூட நினைக்க முடியாது. பிளாக்மெயில் பேர்வழிகள் நடத்தும் பத்திரிகைகள்,கட்டப்பஞ்சாயத்து நபர்கள் நடத்தும் பத்திரிகைகள் வேண்டுமானால் இப்படிச் செய்யும்.

பாரம்பரிய குழுமம் என்று பெருமை பீற்றிக்கொள்ளும் விகடன் இப்பொழுது இதைச் செய்துள்ளது. இது வரை இப்படி அந்த நிறுவனம் செய்ததில்லை.

அந்த நிறுவனத்தின் ஆசிரியர் பதவி வகித்த அனைவரும் இதுவரை விகடனில் கடைநிலையில் இருந்து தான் முன்னேறி இருக்கின்றனர். இல்லையென்றால் அதற்கான அனுபவத்துடனும் தகுதியுடனும்  பிற பத்திரிகையில் இருந்து வந்திருக்கின்றனர்.

அசோகன்,ரா.கண்ணன்,திருமாவேலன் என அனைவரும் இதைக்கடந்து வந்தவர்கள் தான்.

இவ்வளவு ஏன் ? விகடனின் வெளியீடான டைம்பாஸ் விகடனுக்கு ஆசிரியராய் நியமிக்கப்பட்டுள்ள ரீ.சிவக்குமார் என்ற சுகுணா திவாகர் வரை நியமனம் இப்படித்தான் நடந்துள்ள‌து.

ஆபாசம்,வக்கிரம்,சினிமா,கிசுகிசு,துணுக்கு,ஜாலி உள்ளடங்கிய பத்திரிகைக்கே விகடன் நிறுவனம், அந்த நிறுவனத்தில் நிருபர்,மூத்த நிருபர்,முதன்மை நிருபர் என படிநிலைகளைக் கடந்த ஒருவருக்குத் தான் முறைப்படி பொறுப்பைக் கொடுக்கிற‌து.

இனி விஷயத்துக்கு வருவோம்.

'டாக்டர் விகடன்' பொறுப்பாசிரியர் பதவி காலியாய் சிறிது காலம் இருக்கிறது. இதனை நிரப்ப வேண்டும். அதற்கு 'டாக்டர் விகடன்' வெளியிடுபவரும் ஆசிரியரும், விகடன் நிர்வாகமும் என்ன செய்ய வேண்டும்?

தற்பொழுது டாக்டர் விகடனில் உதவிப் பொறுப்பாசிரியர் பொறுப்பு வகிப்பவர் அதற்கான தகுதியுடன் இருந்தால் அவரை நியமனம் செய்ய வேண்டும்,அல்லது விகடன் குழுமத்தில் இருக்கும் பிற பத்திரிகையாளர்கள் யார் அதற்குத் தகுதியாய் இருக்கிறார்களோ அவர்களை நியமிக்க வேண்டும்,அல்லது வெளியில் இருந்து உரிய தகுதியுடன் ஒருவரை வேலைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால் இங்கோ விகடனின் அனுபவமிக்க பத்திரிகையாளர்கள் கண்டு கொள்ளப்படாமல் வெளியிலிருந்து 'ப்ரியா நாயர்' பொறுப்பேற்றுள்ளார்.

பத்திரிகையாளராக 'ப்ரியா தம்பி' அனுபவம் என்ன ? அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா..?

கேரள‌ கைரளி நிறுவனத்தில் ஐந்து மாதங்கள். அதன் பின் இடைவெளி,அதற்கடுத்து 'சுட்டி விகடனி'ல் ஒரு ஆறு  மாத காலம்,அதன் பின் 'தமிழ் முரசு' நாளிதழில் நிருபராய் ஒரு எட்டு மாத காலம் (பணி நீக்கம்), அதன் பின் 'கிழக்கு' பதிப்பகத்தில் மிகக் குறைந்த காலம்,அதன் பின் நீண்ட இடைவெளி, அதன் பின் 'குமுதம் ரிப்போர்ட்டரி'ல் சில காலம், அதன் பின் நீண்ட இடைவெளி.

இவ்வளவு தான் இவரது பத்திரிகையாளர் அனுபவம்.

எல்லாவற்றையும் கூட்டினால் துறை அனுபவம்  மூன்று வருட சொச்ச பணிக்காலம் கூட வராது. இவரைத் தான் தொடக்க நிலையிலேயே 'டாக்டர் விகடன்' பொறுப்பாசிரியராய் நிர்வாகம் நியமனம் செய்துள்ளது.

இது எப்படிப்பட்ட முறைகேடு ?

 தகுதி,திறமை,படிநிலை பற்றி இம்மியளவு விட்டுக்கொடுக்காமல் பின்பற்றுவதாய்ச் சொல்லிக் கொள்ளும் விகடன் நிறுவனம் அப்படி என்ன யாரிடமும் இல்லாத தகுதியை ப்ரியா தம்பியிடம்  கண்டுவிட்டது..? தகுதிக்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறது.? அதை வெளிப்படையாகக் கூட சொல்ல வேண்டாம். கிசுகிசு பாணியிலாவது செப்புமா..?

அவர் பத்திரிகை பணிக்கு வந்த காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ச்சியாக இத்துறையில் இருந்திருந்தால் வேண்டுமென்றால் ஒருவேளை அவருக்கு இப்பொறுப்பு கொடுத்திருப்பதில் ஒரு நியாயம் இருப்பதாய் வாதிட முடியும்..? அப்பொழுதும் வாதிடத்தான் முடியும். அது சரியென்று தீர்ப்பு சொல்லி விட முடியாது.

'ப்ரியா தம்பி'யின் நியமனத்தால் டாக்டர் விகடனில் பணியாற்றிய மூவர் பாதிக்கப்பட்டுள்ள‌னர். அதை முதலில் பார்ப்போம்.

பலி கொடுக்கப்பட்டவர்களுக்கு விருந்து-டாக்டர் விகடன் டீம்.

பிரேமா நாராயணன்.

இப்பொழுது உதவிப் பொறுப்பாசிரியராய் பதவி வகிக்கிறார்.டாக்டர் விகடன் ஆரம்பித்ததில் இருந்து அங்கு பணியாற்றி வருகிறார். இவர் தான் பொறுப்பாசிரியராய் நியமனம் ஆகி இருக்க வேண்டும். ஆனால் இவருக்கு நியமனம் மறுக்கப்பட்டுள்ளது. ப்ரியா தம்பியை விட துறை அனுபவம் மிக்கவர்.

எஸ்.ரேவதி.உதவி ஆசிரியர்.

இவர் பல வருடங்களாய் விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகிறார். அடிமட்டத்தில் இருந்து இந்த நிலைக்கு வந்தவர். விகடனின் வள‌ர்ச்சிக்கு வியர்வையையும், விகடன் குழுமங்களின் தலைவர் மறைந்த‌ பாலசுப்ரமணியம் மனைவிக்கு தனது ரத்தத்தை தானமாகவும் அளித்தவர்.இவரும் ப்ரியா தம்பியை விட இத்துறையில் அனுபவம் மிக்கவர்.

இதற்கடுத்து பா.ப்ரவீண் குமார். 

பா.ப்ரவீண் குமார்

இவரும் 'டாக்டர் விகடன்' ஆரம்பித்ததில் இருந்து இங்கு பணியாற்றி வருகிறார்.பத்திரிகைத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாய் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் 'தமிழ் முரசு' நாளிதழில் ப்ரியா தம்பி பணிக்கு வரும் முன்பே 'தினகரனில்' பணியில் இருந்தவர்.

மேற்கண்ட மூவரும் ப்ரியா தம்பியை விட இத்துறையில் அனுபவம் மிக்கவர்கள். இத்துறையை விட்டு வேறு எங்கும் செல்லாதவர்கள். மருத்துவத்துறை குறித்து அதிகமாய்த் தெரியா விட்டாலும் தொடர்ச்சியாய் டாக்டர் விகடன் முதல் இதழிலிருந்து பணிபுரிந்ததன் மூலம் யாரிடம் படைப்புகளை வாங்கலாம்,எந்தப் பிரச்சனைக்கு யார் கட்டுரை சிறப்பாய் இருக்கும் என்பது மட்டுமல்ல,போட்டி இதழ்களின் போக்கையும் அறிந்த அனுபவமிக்க‌வர்கள்.

ஆனால் இவர்கள் அனைவருக்கும் பணி உயர்வு மறுக்கப்ப‌ட்டு ப்ரியா தம்பியை ராஜபாட்டையில் அழைத்து வந்து பொறுப்பாசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவரது நியமனத்தால் டாக்டர் விகடனில் பாதிக்கப்ப‌ட்டவர்கள் இவர்கள். விகடன் குழுமத்தில் பாதிக்கப்பட்ட சில எடுத்துக்காட்டுகளைச் சொல்கிறோம்.

தமிழ் மகன்.




'தமிழ் மகன்' என்பவர் சென்னையைச் சேர்ந்தவர். 'தினமணி' இணைப்பிதழான கொண்டாட்டம் பொறுப்பாசிரியராய் (பொறுப்பாளராய் )இருந்தவர். ஆனால் அவரோ இப்பொழுது 'ஜூனியர் விகடன்' உதவிப் பொறுப்பாசிரியராய் இருக்கிறார். 'தினமணி'யில் இருந்து விலகி விகடன் குழுமத்தில் சேரும் பொழுதே இப் பொறுப்பிற்குத் தான் தெரிவு செய்யப்பட்டார்.




விகடனை விட பாரம்பரிய இதழான 'தினமணி'யின் இணைப்பிதழில் பொறுப்பாசிரியராய் பணியாற்றியவரையே, உதவிப் பொறுப்பாசிரியருக்குத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு கடுமையான அளவுகோல் வைத்திருக்கும் விகடன்,சொற்ப காலம்  துறையில் நிருபராகப் பணியாற்றிக்கொண்டிருந்து விட்டுத் துறையை விட்டு நீண்ட காலம் விலகியிருந்த ஒருவ‌ரை பணிக்குச் சேர்க்கும் பொழுதே, பொறுப்பாசிரியராய் நியமிப்பதற்கு என்ன காரணம்..?
**

னந்த விகடனில் மூத்த நிருபராய்  பணியாற்றும் டி.அருள் எழிலன் என்பவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
அருள் எழிலன்


ஆ.வி.நிருபராய் சில ஆண்டுகளுக்கு முன் பொறுப்பு வகித்தார். அதன் பின் அந்த நிறுவனத்தை விட்டு விலகினார். சில ஆண்டுகள் இடைவெளியில் அவர்  மீண்டும் ஆ. விகடனுக்கு வேலைக்கு வந்தார். இடைப்பட்ட காலத்தில் அவர் குங்குமம் வார இதழிலும்,இன்னும் சில இதழ்களிலும் வேலையில் இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவர் இத்துறையை விட்டு எங்கும் சென்று விடவில்லை,ஆனாலும் மீண்டும் விகடன் நிறுவனத்தில் சேர்ந்த பொழுது அவருக்கு 'மூத்த நிருபர்' பொறுப்பு தான் வழங்கப்பட்டது. இது அவர் ஏற்கனவே வகித்த நிருபருக்கு அடுத்த நிலை தான். இப்பொழுது ஓர் ஆண்டு பணிபுரிதலுக்குப்பிறகு அவருக்கு 'முதன்மை  நிருபர்' பொறுப்பு கிடைத்துள்ளது.



பாரதி தம்பி


பாரதி தம்பி என்பவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். சில காலங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் மூத்த நிருபராய் பணி புரிந்தார். அதன் பின் விகடனை விட்டு விலகி 'சன் டிவி'யில் பணி புரிந்தார். அதன்பின்பு அங்கிருந்து விலகி மீண்டும் விகடனில் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு ஏற்கனவே வகித்த மூத்த நிருபருக்கு அடுத்த நிலையான 'முதன்மை  நிருபர்' பதவி தான் கொடுக்கப்பட்டது. அதன் பின் இப்பொழுது அவர் 'உதவிப் பொறுப்பாசிரியர்' ஆகி இருக்கிறார்.

இவர்கள் எல்லாம் பத்திரிகைத் துறையை விட்டு விலக வில்லை. இவர்கள் திறமைக்கும் குறைவில்லை. ஆனாலும் இவர்கள் எத்தனை வருடம் கழித்து வந்தாலும் இவர்கள் ஏற்கனவே வகித்த பொறுப்பிலோ,அல்லது அடுத்த நிலையிலோ தான் பணிபுரிய அழைக்கப்படுகின்றனர்.

ப்ரியா தம்பியை ஒப்பிடும் பொழுது மேலே சொல்லப்பட்டவர்கள், இத்துறையில் பல வருடங்கள் அதிக அனுபவம் உள்ளவர்கள். இவர்களின் பத்திரிகை அனுபவம் தமிழ் மகனுக்கு 20 வருடமும்,மீதமுள்ளவர்களுக்கு 15 வருடங்களை ஒட்டிய அனுபவமும் இருக்கும்..

நாம் மேலே சொன்ன தமிழ்மகன்,அருள் எழிலன்,பாரதி தம்பி ஆகியோர் நூல்களையும் எழுதியுள்ளனர்.

இவர்களைப் போல் கலீல் ராஜா,'டைம்பாஸ்' இதழின் பொறுப்பாசிரியர் சரண் உட்பட‌ விகடனில் இன்னும் அனுபவமிக்க,திறமைமிக்க  எத்தனையோ பத்திரிகையாளர்களைக் காட்ட முடியும். இவர்கள் எல்லாம் இன்னும் உதவி ஆசிரியர்,மூத்த,முதன்மை நிருபர்,உதவி பொறுப்பாசிரியர் பதவியைத் தாண்ட முடியாமல் இருக்கின்றனர்.

தனது எழுத்தின் மூலம் , நந்திக்கடலில் நாதியற்றுச் செத்துப்போன தமிழனுக்காக‌ படிப்பவர் மனதில் குற்ற உணர்வை  உருவாக்க டி.அருள் எழிலனால் முடியும், உழைப்புச் சுரண்டல் குறித்து பக்கம் பக்கமாய் எழுத பாரதி தம்பியால் முடியும்,கொரிய சினிமாவை ஏமாற்றி தமிழ் திரை உலகினர் படம் எடுக்கிறார்கள் என கலீல் ராஜாவால் அம்பலப்படுத்த  இயலும்.

ஆனால் இவர்களின் உரிமையோ, பணி உயர்வோ 'ப்ரியா தம்பி' போன்றோரால் கண் முன்னே சத்தமில்லாமல் பறிக்கப்படும் பொழுது அறிந்தும் அறியாமலும் கையறு நிலையில் தான் இவர்களால் இருக்க முடியும்.சகித்துக்கொண்டு கடந்து தான் செல்ல முடியும். இவர்கள் எல்லாம் பொறுப்பாசிரியர் ஆவதற்கு இன்னும் எத்தனை யுகம் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

னால் மொத்தமே மூன்று வருடத்து சொச்சம் அனுபவம் உள்ள ப்ரியா தம்பி, நீண்ட காலம் துறையில் இல்லாத சீரியல் வசனகர்த்தா ப்ரியாதம்பி   திரும்பவும் துறைக்குள் நுழையும் பொழுதே, பொறுப்பாசிரியராய் நியமிக்கப்ப‌டுகிறார்.  ப்ரியா தம்பிக்கு இவர்களை விட சில ஆயிரம் ஊதியமும் அதிகம்.

துவும் போக‌ பொறுப்பாசிரியர் பதவி என்பது மிகவும் கவுரமானது. இதில் அடிக்கடி ஆட்களை மாற்ற‌ முடியாது. ப்ரியா தம்பியோ ஆறு மாதத்திற்கு மேல் அதிகபட்சம் எட்டு மாதம் இதற்கு முன் எந்த நிறுவனத்திலும் தொடர்ச்சியாக‌ பணிபுரிந்ததில்லை.இவரை நம்பி எப்படி இந்தப் பொறுப்பை விகடன் நிர்வாகம் அளித்தது..?

அடுத்ததாக  முகநூலில் கவனிக்கத்தக்க லைக்கும் கமெண்டும் வாங்குபவர் என்று குஷியாகி வேலைக்கு எடுத்தார்கள் என்று வாதத்துக்காய் வைத்துக்கொண்டால் கூட இவரை விட பல மடங்கு திறமையான டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆக‌ அதுவும் இல்லை. மீண்டும் கேட்கிறோம். என்ன தான் உங்கள் அளவுகோல்..?

அவரிடம் அப்படி என்ன திறமையைக் கண்டனரோ விகடன் நிர்வாகிகளும் அதன் ஆசிரியரும்..? அதற்கு என்ன தேர்வு வைத்தனரோ..? தேர்வின் அளவுகோல் என்ன..? 

**



டாக்டர் விகடனுக்கு சந்தையில் போட்டி இதழ் தினகரன் நிறுவனம் நடத்தும் 'குங்குமம் டாக்டர்'

அங்கு 'வைதேகி' என்பவர் முதன்மை ஆசிரியராய் இருக்கிறார். இவரது ஆசிரியர் நியமனம் ஒரு வருடத்திற்குள்ளாகத்தான் நடந்துள்ளது.

 20 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் மிக்கவர். இவர் பழைய தினகரனில் இருந்து அங்கு பணியில் இருப்பவர். மிகத்திறமை வாய்ந்தவர்.இன்னும் சொல்லப்போனால் பழைய தினகரன் நடத்திய மருத்துவம் குறித்த 'ஆரோக்யா' இலவச இணைப்பில் பணியாற்றியவர். அதன்பின் குங்குமம் வார இதழின் தலைமை உதவி ஆசிரியர். அதற்குப்பின் 'குங்குமம் தோழி' பத்திரிகை பொறுப்பாசிரியர்.(இவரது தாய் ஒரு எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது)

இன்று 'குங்குமம் டாக்டர்' முதன்மை ஆசிரியர்.

 'வைதேகி' 


ஆக ஒருவர் என்ன தான் திற‌மையானவராய் இருந்தாலும் ஒரே நிறுவனத்தில் தொடர்ச்சியாய் பணியாற்றியவராய் இருந்தாலும் 20 வருடங்கள் அனுபவமிக்கவராய் இருந்தாலும் அவர் 'முதன்மை ஆசிரியராய்' நியமிக்கப்ப‌ட இவ்வளவு பணிக்காலம் தேவைப்படுகிற‌து. குறுக்கு வழிக்கோ 3 ஆண்டு காலம் போதுமானதாய் இருக்கிறது.

ஒன்றுக்கு 3 வருட பதவி புரிந்தவர் பொறுப்பாசிரியர். அதன் போட்டி இதழுக்கு  20 வருடங்கள் அனுபவமிக்கவர் முதன்மை ஆசிரியர்.

எந்த பத்திரிகை தரத்துடனும்,சிறப்புடனும் வெளிவரும் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.



க எப்பத்திரிகை பொறுப்பாசிரியராய் பொறுப்பு ஏற்றுள்ளாரோ,அதன் உள்ளடக்கம் குறித்த ஞானமும் இல்லை. இன்னொரு புறம் துறை அனுபவமும் இல்லை.

மொத்தத்தில் ப்ரியா தம்பியை நியமித்தது எந்த வகையில் பார்த்தாலும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமும் குறுக்கு வழியில் லாபி செய்ததன் மூலமும் பதவியை அடைந்தது தெரிகிற‌து.


ஏற்கனவே விகடனில் நடைபெற்ற இதுபோன்ற துஷ்பிரயோகத்தை ஒரு பதிவாக எழுதியுள்ளோம். 

தங்களது நிறுவனத்தில் இப்படியான செயல்களை எவ்விதக்குற்ற உணர்வும் இன்றி செய்பவர்கள் தான் அரசியல்வாதிகளையும்,அதிகார மட்டத்தினரையும் கடுமையாய் விமர்சனம் செய்கின்றனர்.

இன்னொருபுறமோ,இப்படிக் குறுக்கு வழியில் அடுத்தவரின் வாய்ப்புக்களைத் தட்டிப்பறித்து தங்களுக்குத் தகுதி இல்லாத இடத்துக்கு தாவி வந்தவர்கள் தான்,பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொண்டு அனைவரையும் விமர்சனம் செய்கின்றனர்.

 தகுதியும் திறமையும்  இல்லாமல் குறுக்கு வழியில் பத்திரிகை தலைமையைப் பிடிக்கும் ப்ரியா தம்பி போன்ற இப்படிப்பட்ட 'பண்பாளர்கள்' தான் பொதுவெளியில் நியாயவான்களாக உருமாறுகிறார்கள். எத்துறை குறித்த விவாதம் என்றாலும் அது குறித்து துளியும் தெரியாவிட்டாலும்  கருத்துச் சொல்லவும்,மேடையில் இடம்பிடிக்கவும் முதல் ஆளாய் கிளம்பி விடுகிறார்கள்.ஊடகர் என்றால் பொது வெளியில் இருக்கும் மதிப்பும் ஒளி வட்டமும் இவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது.அதுவும் ஊடகங்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ள கடந்த ஐந்தாண்டுகளில் இப்படி 'நியாயவான்களின்' எண்ணிக்கை பல்கிப் பெருகியிருக்கிறது.

சாதியச் சண்டையில் இருந்து திரைப்பட விமர்சனம் வரை, அரசியல்வாதிகள் முதல் அதிகார வர்க்கம் வரை அனைவரையும் நடுநிலைச் சொம்பெடுத்து முகநூல் முதல் தொலைக்காட்சிப் பெட்டி வரை கருத்து வாந்தியெடுக்கிறார்கள். சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார்கள்.

இந்த நியமனம் அதன் ஆசிரியர் ரா.கண்ணன் பரிந்துரை மற்றும் விரைவுபடுத்தல் இல்லாமல் துளியும் சாத்தியமில்லை. ரா.கண்ணன் அவர்களே நீங்கள் கை நீட்டிக் காசு வாங்காதவராய் இருக்கலாம். ஆனால் நேர்மை என்பது பணத்துடன் மட்டும் தொடர்பு கொண்டது அல்ல. இப்படி முறையற்ற நியமனத்துக்கு துணை புரிந்ததன் மூலம் நீங்கள் மிகப்பெரிய தவறு இழைத்திருக்கின்றீர்கள்.

டாக்டர் விகடனுக்கு ப்ரியா தம்பியை நியமித்ததன் மூலம்,திறமையான எத்தனையோ விகடன் பத்திரிகையாளர்கள் பணி உயர்வு தடுக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு புறமோ அறிவார்ந்த டாக்டர் விகடன் வாசகர்களை மூடர்களாக விகடன் குழுமம் கருதியிருக்கிறது,அதனால் அவர்களின் உயிரும் உடல் நலமும் பணயம் வைக்கப்பட்டிருக்கிறது.

தங்கள் நிறுவனத்தில் முறையற்ற நியமனத்தைச் செய்யும் விகடன் தான்,அலைக்கற்றை ஊழல் முதல் பல விஷயங்களில் முறைகேடு நடந்திருக்கிறது என கூப்பாடு போடுகிறது.போலி மருத்துவர்களையும்,அங்கீகாரம் இல்லாத மருத்துவக்கல்லூரி நடத்துபவர்களையும் சாடுகிறது. ஒரு வருட மூப்பு குறைவான ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.அதிகாரிக்கு பதவி உதவி வழங்கினால் அதை எதிர்த்து கவர் ஸ்டோரி எழுதுகிறது.

இதைச் செய்வதற்கான‌ தகுதி உங்களுக்கு இருக்கிறதா..? உங்கள் மனசாட்சியிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி.