Friday 21 June 2013

பாரதிராஜா ஏந்தி வரும் விகடன் வீச்சரிவாள்....!



ZEE தமிழ் தொலைக்காட்சியின் சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சி.

கருத்து வேறுபாட்டாலும் இதரக் காரணங்களாலும் பிரிந்த குடும்பங்களை,கணவன் மனைவியை தங்களது ஆலோசனை மற்றும் அறிவுரை மூலம் மீண்டும் வாழ்வில் இணைத்து வைப்பதாகச் சொல்லுவது தான் இந்த நிகழ்ச்சி.

அந்த நிகழ்ச்சியில் ஒரு நாளில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஒரு காட்சி..

வழக்கம் போல் கணவன் மனைவி பஞ்சாயத்து

மனைவி தனது கணவன் குறித்து ஒரு குற்ற‌ச்சாட்டைச் சொல்லுகிறார்.வழக்கம் போல் பாலியல் குற்ற‌ச்சாட்டு.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனைத் தவிர அரங்கத்தில் யாருமில்லை.

மனைவியின் குற்ற‌ச்சாட்டு கடுமையாகிக் கொண்டிருக்க...திடீரென்று அரங்கில் கணவன் ஆவேசமாய் நுழைகின்றான்.

அவன் கையில் செருப்பு.அதனை எடுத்துக் கொண்டு மனைவியை நோக்கி அடிக்க ஓடுகிறான்.

கணவன் செருப்பால் மனைவியை அடிக்கப் போகிறான் என்று பதட்டத்திலும் பரிதவிப்பிலும் பார்வையாளன் அமர்ந்திருக்கும் இருக்கையின் நுனிக்குச் செல்கிறான்.

அடிக்கப் போவதைத் த்டுக்க முடியவில்லையே என்று பச்சாதபத்தில் இருக்கிறான்.

அடிக்கப் போவது பார்வையாளனுக்கு முன் கூட்டியே தெரிவதைப் போல கண்டிப்பாய் அரங்கில் இருப்பவர்களுக்கும் தெரிந்திருக்கும்.

உண்மையான சமூக அக்கறை உள்ளவர்கள் என்றால் என்ன செய்வார்கள்..?கணவனைத் தடுப்பார்கள்.மனைவியைப் பாதுகாப்பார்கள்.

ஆனால் இங்கோ தொலைக்காட்சி காமரா,கண‌வன் கையில் ஏந்தியிருக்கும்  செருப்பை பாலோ செய்கிறது.கணவன் கையில் இருக்கும் செருப்பை காம‌ரா zoom செய்கிறது.கண‌வன் மனைவியை செருப்பால் அடித்து துவைக்கிறான்.செருப்பினால் அடிக்கும் பொழுது பல கோண‌த்தில் பதிவு செய்கிறார்கள்.

என்னே 'சமூக அக்கறை'.....!

கணவன்-மனைவியைச் செருப்பினால் அடித்து ஓய்ந்தவுடன் எங்கிருந்தோ அரங்கில் நுழையும் ஆசாமிகள் கணவனைத் தடுக்கிறார்கள்.

ஆக ஆள் இல்லாமல் தடுக்காமல் இருக்கவில்லை.

அடிக்கப் போவது தெரிந்திருக்கிற‌து.அதனால் தான் செருப்பினை zoom  செய்கிறார்கள்.

கணவனைத் தடுக்கப் போதிய பல‌ம் இல்லாமல் இல்லை.ஆனாலும் அடிக்கும் வரை காத்திருந்து,அடித்து முடிந்தவுடன் உள்ளே நுழைந்து காப்பாற்றுகிறார்கள்.

இது தான் சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சி.இதற்குப் பின்னால் பிரிந்திருக்கும் குடும்பத்தை இணைக்கும் சமூக அக்கறை இருக்கிற‌தாம்.அதனால் அனைத்தையும் ஒளிபரப்பி சமூகத்தின் பார்வைக்கு வைக்கிறார்களாம்.



நிகழ்ச்சியைப் பார்க்கும் நமக்குக் காறித் துப்ப வேண்டும் போல் இருக்கிற‌து.

ZEE தமிழ் தொலைக்காட்சி தமிழ்ச் சமூகத்தை இப்படிக் கெடுத்துக் கொண்டிருக்க அதன் பங்குக்குச் சற்றும் குறையாமல் ஒரு பதிவு 'பாரம்பரியமிக்க' ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கிறது.

முழுக்க முழுக்க கேவலமாக திட்டமிட்டு நடத்தப்ப‌டும் சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையும்,ஓரளவு சிற‌ப்புடன் வெளிவரும் கேள்வி பதில் பகுதியையும் துளியும் ஒப்பிட முடியாது என்றாலும் மணிவண்ணன் குறித்த பாரதிராஜாவின் பதில் பகுதியைப் படித்த நம்மால் அந்தப் பதிலையும் சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆ.விகடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பல ஆளுமைகள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.இதுவரை ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு,கூடங்குளம் அணு உலை உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உட்பட பல பிரபல்யங்கள் தங்கள் அனுபவங்களை,சந்தித்த மனிதர்களை,கருத்துக்களை வாசகர்களின் கேள்விகள் வழியாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.(சு.சாமியும் இதில் பங்கெடுத்திருக்கிறார்)

இந்தப் பகுதி குறித்து இதுவரை கடுமையான விமர்சனங்கள் வந்தது இல்லை.

இரண்டு வாரங்களாகத் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பதிலளித்துக் கொண்டிருக்கிறார்.பதில்கள் பெரும்பாலும் ஆணவத்துடனும் அகம்பாவத்துடனும் வந்து கொண்டிருக்கின்றன.

பொதுவாக ஆனந்த விகடன் உட்பட சில பத்திரிகைகளில் வெளிவரும்,நானே கேள்வி-நானே பதில்,வாசகர் கடிதம்,மற்றும் வாசகர்கள் கேள்விகள் போன்றவை மாதிரியான பகுதிகள் அனைத்தும் முழுக்க முழுக்க வாசகர்கள் பங்களிப்புடன் வருபவை அல்ல.

சில உண்மையாகவே வாசகர்களிடமிருந்தும்,சில சமூக அக்கறையுடன் டெஸ்க்கில் நிருபர்களால் உருவாக்கப்ப‌ட்டும்,சில உள்நோக்கத்துடன் திட்டமிட்டும், சில பக்கங்களை நிரப்புவதற்கும் உருவாக்கப்ப‌டுபவை தான்.

பாரதிராஜாவிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள் பாரதிராஜாவுக்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்னும் தோற்றத்தில் இருக்கின்றன.அதில் ஒன்று தான் மணிவண்ணன் குறித்துக் கேட்கப்ப‌ட்ட கேள்வியும்.


மணிவண்ணன் எப்பொழுதும் உங்களைக் கடுமையாய் விமர்சிக்கிறாரே என்பது கேள்வி.(19-06-2013 தேதியிட்ட‌ இதழ்)

(சிதம்பரத்தைச் சேர்ந்த எஸ்.குரு என்பவரின் பெயரில் இந்தக் கேள்வி வந்துள்ளது.கேள்வி கேட்ட குரு பாத்திரம் யார் என்பது ஆ.வி.சினிமா ரிப்போர்ட்டர் திருவாரூர் குணாவுக்கே வெளிச்சம்.)

இதற்கு பாரதிராஜாவின் பதில்....

இங்கே ஒரு ஃப்ளாஷ்பேக் கட் பண்றேன்... என் முதலாளி கே.ஆர்.ஜி-யும் 
நானும் வேலை விஷயமாக அடிக்கடி ஒரு ஆபீஸுக்குப் போவோம். அங்கே அக்கவுன்ட் 
செக்ஷன்ல வேலை பார்க்கிற ஒரு ஆள் என்னைப் பார்க் கிறப்பலாம் எந்திரிச்சு 
வணக்கம் வைப்பான். நான் அதை ஆச்சர்யமா பார்க்கிறப்ப, 'பாரதி... உன் மேல 
அவன் ரொம்பப் பிரியமா இருக்காம்பா... அதான் வணக்கம் வைக்கிறான்’னு 
சொல்வார் கே.ஆர்.ஜி. 

கொஞ்ச நாளுக்கு அப்புறம் பார்த்தா, அந்த ஆள் யோகாம்பாள் தெருவில் நான் 
குடியிருந்த வாடகை வீட்டு வாசலுக்கு வந்து தினமும் நிக்க 
ஆரம்பிச்சுட்டான். வீட்டு வாசல்ல என்னைப் பார்க்கிறப்பலாம் வணக்கம் 
வைப்பான். இப்படியே ஒரு 15 நாள் போச்சு. ஒரு நாள் அவனை அழைச்சுட்டு வரச் 
சொன்னேன். வந்து உக்காந்தவனுக்கு உயிர் கண்ணுல இருந்தது. எதுவும் கேக்காம 
அவனுக் குக் குடிக்கத் தண்ணியும் கொஞ்சம் டீயும் கொடுக்கச் சொன்னேன். 
குடிச்சான். அவனுக் குள்ள ஏதோ ஒரு திறமை இருக்குன்னு எனக்குள்ள தோணுச்சு. 
'கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அவனை வேலை பார்க்கச் சொன்னேன். அப்போ 
என்கிட்ட இருந்த பலர், 'அவன் மூஞ்சியே சரியில்லையே’னு சொல்வாங்க. 
'போங்கடா... அவன் திறமைசாலிடா’னு 'நிழல்கள்’ படத்துல வசனம் எழுதும் 
பொறுப்பை அவனுக்குக் கொடுத்து, நடிக்கவும்வெச்சேன். அவன்தான் மணிவண்ணன். 


“மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு. அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம்.

ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம். அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், ‘அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே’னு சட்டுனு கேட்டுட்டான்.

அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். ‘ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா… அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்’னு அவங்க சொன்னாங்க. ஒரு வருஷம் போனது. ‘மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க’னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான்.

‘சரி’ன்னு முடிவெடுத்து, அந்தப் பொண்ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன். அப்புறம் ‘காதல் ஓவியம்’ படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத்தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன்.

‘நான் தனியாப் படம் டைரக்‌ஷன் பண்ணப்போறேன்’னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன்.

மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு… வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும்.

ஒரு ராஜா கதை இருக்குமே… வீதில கஷ்டப்பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. ‘இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க’னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க… பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!”

ந்தப் பதிலைப் படித்தால் ஒவ்வொரு வரியும் ஒரு குடிகாரனின் போக்கிரித்தனமான உளறல் போலத் தான் தோன்றுகிற‌து.ஒரு மூத்த படைப்பாளியின் பொறுப்பான பதில் போலத் தோன்றவில்லை.பாரதிராஜா கையாண்ட மொழி நடை உட்பட அனைத்தும் அப்படித்தான் இருக்கின்ற‌ன.

இதில் உச்சகட்ட கேவலமான அவதூறு என்ன தெரியுமா..?

“மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு. //

பாரதிராஜா நடந்ததாகச் சொல்லும் இந்தச் சம்பவம்,ஏற‌த்தாழ 30 வருடங்களுக்கு முன்பு.பாரதிராஜாவுக்கு அப்பொழுது தோராயமாக வயது 35 முதல் 40 வரை இருக்கலாம் .

பாரதிராஜா போன்ற தனிப்பட்ட வாழ்க்கையில் 'தரமற்ற‌' ஒருவர் என் கண்காணிப்பில் அந்தப் பொண்ணு இருந்துச்சு என்று சொல்வது,படிப்பவர்களுக்கு எவ்வளவு தவறான பார்வையைத் த‌ரும் என்பது திரைத்துறையுடன் தொடர்புடையவர்களுக்குத் தெரியும்.மணிவண்ண‌னை மட்டுமல்ல அந்தப் பெண்ணையும் மிக மோசமாக பாரதிராஜாவின் பதில் இழிவு படுத்துகிறது.

இப்படி நாலாந்தர கழிசடைத்தனமான வார்த்தைகளுடன் பாரதிராஜா பதில் சொல்லியிருக்கிறார்.பாரதிராஜாவின் வார்த்தைகளில் எவ்வளவு வன்மம்.மிக இழிவான தனிப்பட்ட அவதூறு.

பாரதிராஜா என்பவரை ஒரு ஆளுமையாகக் கருதி அவரது அனுபவங்களை,எண்னங்களைப் பதில்களாக்கி விகடன் வாங்கி வெளியிட்டால் அவர் தான் யார் எனத் தனது பதில்களின் மூலம் நிருபித்திருக்கிறார்.

இதில் பாரதிராஜாவை மட்டும்  நாம் குற்ற‌ம் சாட்ட முடியாது.இதனை வெளியிட்ட  ஆனந்த விகடன் தான் அதிகம் குற்ற‌ம் சாட்டப்பட வேண்டிய இதழ்.




பாரதிராஜாவின் அனைத்து உளறல்களுக்கும் ஆ.விகடன் எதற்கு இடம் கொடுக்க வேண்டும்..? அவர் வாந்தி எடுத்தையெல்லாம் தணிக்கை செய்யாமல்வாசகனுக்குப் பரிமாற வேண்டும் என்ற அவசியம் விகடனுக்கு எதற்கு..?

இதே பாரதிராஜா,நாளை ரஜினிகாந்த் குறித்தும் கமலஹாசன் குறித்தும் எதை எழுதினாலும் அதனை ஆனந்த விகடன் தணிக்கையின்றி வெளியிடுமா..? அதற்குத் துணிவு இருக்கிற‌தா..?

இவ்வளவு ஏன் இந்த வாரம் ஒரு கேள்வி- பதிலில் விஜயகாந்த் குறித்தும்,சீமான் குறித்தும் பாரதிராஜா குற்றம் சாட்டியிருக்கிறார்.ஆனால் அவர்களது பெயரைக் கவனமாகக் கத்தரி போட்டு விட்டதே..?

ஏன் மணிவண்னன் பின்பு கோஷம் போடவும், கொடி பிடிக்கவும், விகடன் அலுவலகத்திற்கு போன் செய்து திட்டவும் நான்கு பேர் இல்லை என்பதாலா..?

பாரதிராஜா குறித்து உண்மையாகவும் நேர்மையாகவும் விமர்சிக்க எத்தனையோ துணை,இளம் இயக்குனர்கள் இருக்கிறார்கள்.அவர்களைப் பேட்டி கண்டு அப்படியே வெளியிட விகடனுக்குத் துணிச்சல் உண்டா..?

துணிந்து சொல்லலாம் விகடனுக்குத் துணிவிருக்காது என்று.

இந்த லட்சணத்தில் மணிவண்ண‌ன் இறந்த பின்பு அவரைப் புகழ்ந்து இந்த இதழில் (26-06-2013 தேதியிட்ட இதழ்) 2 பக்க மேட்டர் .அதற்கு சத்யராஜ் பங்களிப்பு செய்திருக்கிறார்.பாரதிராஜாவின் கேவலமான ப்தில் மணிவண்ணனை உளவியல் ரீதியில் நெருக்கடிக்கு கொண்டு சென்றிருக்கிறது.அவர் இறந்த பின்பாவது,அதற்கு போகிற போக்கில் ஒரு வருத்த‌ம் கூடத் தெரிவிக்காமல் பாராட்டு கட்டுரை இரண்டு பக்கம்.

(பாரதிராஜாவின் சாக்கடை பதில்,இரு நாட்களில் மணிவண்ண‌ன் மரணம்,என நிகழ்ந்ததனால் இந்த விஷயத்தில் ஆ.வி.அடுத்த இதழில் எதும் துளி வருத்தமாவது வெளியிடுமோ என்று எதிர்பார்த்தோம்.அதனால் தான் தாமதமான இந்தப் பதிவு)


சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் உலகமறிய கணவனிடம் செருப்பால் அடிவாங்கிய அந்த பரிதாபத்திற்குரிய பெண் இன்று எங்கிருக்கிறார் என்று நமக்குத் தெரியாது.ஒருவேளை கணவணே கண் கண்ட தெய்வம் என்று அவனுடன் வேறு வழியின்றி இணைந்து வாழ்ந்து கொன்டிருக்கலாம்.அல்லது உயிருடன் அனுதினமும் செத்துக் கொண்டிருக்கலாம்.அல்லது அவனுடன் வாழ்வதை விடச் சாவதே மேல் என முடிவெடுத்திருக்கலாம்.அல்லது கணவனைத் தூக்கி எறிந்து விட்டு மானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம்..

ஆனால் பாரதிராஜா ஆனந்த விகடன் இதழ் பதில் மூலம் மணிவண்னனை நோக்கி வீசிய அவதூறு மற்றும் தரம் தாழ்ந்த விமர்சனம் என்னும் வீச்சரிவாள் அவரைப் பதம் பார்த்து விட்டது.தடுக்க வேண்டிய ஆனந்த விகடனோ எதுவும் செய்யாமல் பாரதிராஜா என்னும் 'ஆளுமை'யைப் பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிற‌து.

சொல்லாத சொல்லுக்கு நீ எஜமான்..
சொன்ன சொல்லோ உனக்கு எஜமான்...

பாரதிராஜா போன்ற நபர்கள் கண்டிப்பாய் இந்தப் பழமொழியைக் கடைப்பிடிக்க என்றும் வாய்ப்பு இல்லை.

நாம் ஆனந்த விகடன் இதழைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறோம்.அதனால் ஆ.விகடன் கடைப்பிடிக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வும் கடமையும்  இருக்கிறது.

Wednesday 19 June 2013

புதிய தலைமுறை-கருப்புப் பணத்தில் மறைக்கப்பட்ட ஊரறிந்த‌ உண்மை..!



ஜி 8 கூட்டத்தில் கருப்பு பணம் குறித்த விவாதம்-வரி ஏய்ப்பைத் தடுக்க நாடுகள் உறுதி

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம்-காசியாபாத் பகுதிகளில் சிபிஐ சோதனை.

ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது..

சுகாதார ஆய்வாளர் மீது  லஞ்சப் புகார் 

என உலக அளவில் இருந்து உள்ளூர் முறைகேடு வரை விலாவாரியாகச்  நேற்று செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி, தனது தொலைக்காட்சி அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் கல்வி முறைகேடு தொடர்பாகவும் அதில் நன்கொடை என்ற பெயரில் பெற்ற கணக்கு வழக்கற்ற‌ பணம் தொடர்பாகவும், திரைப்படத் தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்ட‌ கருப்புப் பண பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் வருமானவரித்துறையினர்  நேற்று (18--06-2013)நடத்திய சோதனை மற்றும் விசாரணை குறித்து நேற்று காலையில் வெளியிட்ட ஒருவரிச் செய்தியுடன் சில நிமிடங்களில் நிறுத்திக் கொண்டது.

'புயலைத் தொடரும் புதிய தலைமுறை' என்ற தலைப்பில் நீலம் புயல் குறித்து, புயல் அங்கு கரையைக் கடக்கிறது,அங்கே பலத்த சேதம்,இங்கு பெரும் பாதிப்பு என பல பரிமாணத்தில் சில மாதங்களுக்கு முன்பு செய்தி வழங்கிய பு.த.தொ.,தனது அலுவலகம் மற்றும் சகோதர குழுமங்களில் நடந்த சோதனை குறித்து ஒரு பதிவும் செய்யவில்லை.

அதிகம் கூடச் சிரமப்பட்டிருக்க வேண்டாம்.

ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து புயல் சீற்றத்தை விலாவாரியாக ஒளிபரப்பியவர்கள் தனது தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையை பைசா செலவில்லாமல் விலாவாரியாக காட்டியிருக்கலாம்.
250 ந்பர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நடத்திய சோதனையை அமைதியாக ஒன்றுமே நடக்காதது போலக் கடந்து சென்றார்கள்.

6.75 கோடிப் பணத்தை  எஸ்.ஆர்.எம்.குழுமத்தில் இருந்து கைப்பற்றினோம் என்று வருமான வரித்துறை காலையில் வெளியிட்ட  அறிக்கையை வெளியிடாத பு.த.தொ., அதற்கு எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் மறுப்பையும் இணைத்து நேற்று (19-06-2013)இரவில் இருந்து ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறது.

'உண்மை உடனுக்குடன்' என்பது ஊருக்கு மட்டும் தான் என்பது நாம் அறிந்த செய்தி தானே..!

மாணவர்களிடமிருந்து நன்கொடை என்ற பெயரில் ரத்தத்தை உறிஞ்சிய பணத்தில் உருவான புதிய தலைமுறை தொலைக்காட்சி இப்படி நடந்து கொள்ளும் என எதிர்பார்த்தது தான்.நாம் ஆரம்பம் முதலே இதனைப் பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

இதில் புதிதாய் ஒன்றுமில்லை.நேற்றும் இன்றும் நடைபெற்ற வருமானவரிச் சோதனைகளின் விசாரணை இறுதிவரை உண்மையாகவும் சரியான திசையில் சென்றால் பு.த. நிறுவனமே கருப்புப் பணத்திலும் முறைகேட்டிலும் சம்பாதித்த பணத்தில் நடைபெறுவது தான் என்று உறுதிப்படுத்தப்படும்.

அப்படி எல்லாம் நடைபெற்றுவிடுமா என்ன.?

இந்தச் சோதனையை ஊத்தி மூட இனி  என்ன சமரசங்கள் நடைபெறுமோ அது பகிரங்கமாக நடைபெறாது.ஆனால் ஊத்தி மூடப்படும் என்பது உறுதி.


ழத் தமிழர்களுக்கு ஆதரவாய்ச் செய்திகளை வெளியிட்டமையால் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் இளங்கோவன் எங்களை மிரட்டுகிறார் என்று,சில மாதங்களுக்கு முன்பு 'புரட்சி' முகம் காட்டி வாசகர்களைப் பரவசப்படுத்திய ,அவர்களின் உரோமம் துடிக்கும் அளவுக்கு ஆதரித்து இணையத்தில் எழுதச் செய்த புதிய தலைமுறை தொலைக்காட்சி இந்த முறை அப்படி 'புரட்சி' அரிதாரம் பூசாது.

குறைந்த பட்சம் புதுப்புதுஅர்த்தங்கள் அல்லது நேர்படப் பேசு போன்ற நிகழ்ச்சியிலாவது வருமான வரித்துறையின் 'அத்துமீறல்' குறித்து போகிற போக்கில் ஒற்றை வரி கூடப் பேசவில்லை.

இப்பொழுது அப்படி 'புரட்சி' வேடம் கட்டினால் மக்களிடம் அது எடுபடாது என்பதைத் தாண்டி,அது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்கி அட்மிஷன் கொள்ளையை மட்டுமல்ல,திரைப்படத் தயாரிப்பு உட்பட இருக்கும் அனைத்துப் பிழைப்பையும்  கெடுத்து விடும் என்பது நன்கு தெரியும். ஆகவே அமைதியாய் 'காரியம்' சாதிக்க எண்ணுகிறது.

ஏனென்றால் எப்பொழுது எதைச் செய்ய வேண்டும்..?

எப்பொழுது எதைச் செய்தால் வெற்றி கிட்டும் என்பது  கொள்கைவாதிகளைக் காட்டிலும் பிழைப்புவாதிகளுக்கு நன்கு தெரியும்.

தொடர்புடைய இணைப்புக்கள்

http://www.vinavu.com/2012/08/30/puthiya-thalaimurai/

http://www.vinavu.com/2012/08/24/bday-wishes-pachamuthu/

http://kalakakkural.blogspot.in/2012/07/blog-post_17.html

http://kalakakkural.blogspot.in/2012/07/blog-post_22.html

http://www.dinakaran.com/News_Detail.asp?nid=52789



Friday 7 June 2013

இந்தியா டுடே ஆசிரியர் ரேஸில் 3 பேர்...!



'இந்தியா டுடே'வின் தமிழ்ப் பதிப்புக்கு ஆனந்த் நடராஜன் என்பவர்தான், பல ஆண்டுகளாக ஆசிரியராக இருந்து வந்தார். அண்மையில் அவர் வேலையில் இருந்து விலகியதால், அந்த இடத்திற்கு ஆள் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பே நடராஜன் விலகல் கடிதம் அளித்ததாகவும் அடுத்தவர் வரும்வரை பணியில் நீடிக்குமாறும் நிர்வாகம் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்.

இதையொட்டி, தமிழின் முக்கிய செய்தி இதழுக்கு ஆசிரியர் பணிக்காக, பல தரப்பிலும் ஆள்தேடல் நடந்திருக்கிறது. ஆனால், தமிழ் ஊடகத்துறையின் சோகமா(!), ஊடக முதலாளிகள் செய்யும் அக்கிரமமா தெரியவில்லை, இந்த செய்தி இதழுக்கு ஏற்ற ஆசிரியர் கிடைக்கவில்லையாம். ஆனந்த் நடராஜன் விலகியபின்பு யாரையாவது அந்த இடத்துக்கு வேறு வழியின்றிஅமர்த்தித்தானே ஆகவேண்டும். 

இதற்கிடையில், புதிய தலைமுறையில் பிரேம் சங்கருடன் இணைந்து வழங்கிய கருப்பு கட்சியைச் சேர்ந்த வெள்ளை குணாவுக்கு, அங்கு நிலவரம் கலவரமாக மாறிவிட்டது.

இந்தக் கடை போனால் சந்தைக் கடை.

காட்சி ஊடகம் போனால் என்ன, இதோ இந்தியா டுடே வாய்ப்பு... நல்லதுதான், இதுபோன்ற (அது என்னவோ சொல்றாகளே, அப்கண்ட்ரி, வடக்கத்தியான் கம்பெனி) இடங்களில் உங்களின் அரசியல் கூர்மையைக் காட்டினால், இந்த தமிழ்ச் சமூகம் பயன்பெறட்டுமே! குணசேகரனுக்கும் முன்னதாக, திராவிட‌ அன்பர்கள் இப்படி நினைக்கலாம்.

குணா மீது சில‌ விமர்சனங்கள் இருந்தாலும் , இவர் இந்தியா டுடேவுக்குப் போய்விட்டால், புதிய தலைமுறைக்கு ஒரு இழப்புதான்!

குணா மட்டும் இல்லை,இந்தியாடுடே ஆசிரியர் பணிக்கு, இன்னும் இருவரும் களம் இறங்கியிருக்கிறார்கள்.

ஒருவர், டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழில் கடைசியாக வேலைபார்த்த கவிதா முரளிதரன். அதன் பிறகு, தந்தி டிவி, புதிய தலைமுறை, விஜய் டிவி ஆகியவற்றில் அடிக்கடி தோன்றி பல்வேறு பிரச்னைகளுக்கும் கருத்துத் தெரிவித்து வருவதை வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.

இவரைத் தவிர, தமிழ் நாளிதழ் ஒன்றில் நீண்ட காலம் பணியாற்றிய ஒருவரும் முயற்சி செய்கிறார்.

சபாஷ், சரியான போட்டி! 

சகலரும் சகல திறமைகளையும் கொண்டவர்கள்தான்! 

யாருக்கு வெற்றி கிடைக்கும் பார்ப்போம்.

ஆனால் யார் வந்தாலும் வியாபாரத்துக்காக அந்த நிறுவனம் 2 மாதத்திற்கு ஒருமுறை வெளியிடும் வக்கிர சர்வே மட்டும் நிற்காது என்பது மட்டும் நிச்சயம்...!