Tuesday 30 August 2011

முன்னாள் காட்பாடி மந்திரியின் அர்ச்சனை-இதுதான் உண்மை






ஊர் உலகத்தில் உள்ள அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கிறேன் என்ற பெயரில் உண்மை கொஞ்சமும் பொய் நிறையவும் கலந்து அரசியல் புலனாய்வு பத்திரிக்கைகள் என்ற பெயரில் சில முன்னணி நிறுவனங்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகள் மற்றும் பெயர் தெரியாதவர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளிலும் தொடர்கள் எழுதப்படுகின்றன.


இந்தத்தொடர்களின் பின்னணியில் பிளாக்மெயில் நடைபெற்று சில நேரங்களில் பல ஆயிரங்கள்,லட்சங்களும் கூட கை மாறியிருக்கிறதாம்.
வாரம் இரு முறை வெளியாகும் ஒரு அரசியல் இதழில் சொல்வதெல்லாம் உண்மை என்ற தொடர் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கிறது.இந்தத்தொடரில் சமீபத்தில் முன்னாள் மந்திரி ஒருவரைப்பற்றி அவர் மனசாட்சி பேசுவதாக எழுதப்பட்டிருந்தது.


அதே இதழில் அதே முன்னாள் மந்திரியின் நேர்காணலும் சொல்லி வைத்தாற் போல வெளியானதாம்.இதனைப் படித்த அந்த முன்னாள் மந்திரி தொடர் என்ற பெயரில் அக்கப்போர் எழுதும் சம்பந்தப்பட்ட செய்தி ஆசிரியர் மற்றும் நேர்காணல் எழுதிய பழனி ஆண்டவர் பெயரைக் கொண்ட நிருபரையும்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாலு தலைமுறையைத் தோண்டி எடுத்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து விட்டு காட்பாடிக்கு காரில் பறந்தாராம்.


இதனால் நடுங்கிப்போன தொடர் எழுதும் அந்த செய்தி ஆசிரியர் அலுவலகத்துக்கு இரண்டு நாள் ஆப்செண்ட் ஆனாராம்.அந்தளவுக்கு அவருக்கு மன தைரியம் அதிகமாம்.

நேர்காணல் செய்த முருகக் கடவுள் பெயர் கொண்ட நிருபரோ,மாண்புமிகுக்களாக இருந்தவர்கள் கூட இப்படிப் பேசுகின்றார்களே என்று சக நிருபர்களிடம் கூறி முகம் வெளிறிப் போனாராம்.

எலும்புத் துண்டுக்கு விசுவாசம் காட்டும் இரட்டையர்கள்


நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்னும் அரசியல் வாரம் இருமுறை பத்திரிக்கையில் அன்புக்குப் பாத்திரமானவர் பணியாற்றிய பொழுது தனது புரோக்கர் தொழிலில் கோட்டையிலே கொடி கட்டிப் பறந்தார்.
இவரின் பிளாக் மெயில் மற்றும் புரோக்கர் தொழில் குறித்து அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பலரும் இவர் பணியாற்றும் பத்திரிக்கை நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.இந்தப் புகார் தொடர்பாக நிர்வாகம் ரகசியமாக புலனாய்வு மேற்கொண்டது.புகார்கள் உண்மை என்பது புலனாய்வில் தெரிய வந்ததால் இவர் பணியாற்றிய பத்திரிக்கையிலிருந்து நீக்கப்பட்டார்.
இவர் நீக்கப்பட்ட செய்தி அதே பத்திரிக்கையில் கட்டம் கட்டி வெளியிடப்பட்டது.இதன்பிறகு இவர் ஒய்வு பெற்ற முருகக் கடவுள் ஐஏஎஸ் பெயர் கொண்ட அதிகாரியைக் காக்கா பிடித்து சூரியக் குழுமத்திலிருந்து வெளிவரும் மாலை நாளிதழின் தலைமை நிருபர் என்ற பொறுப்பை வாங்கிக் கொண்டார்.இந்த நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது தன்னை மேனேஜ்மெண்ட் ஆள் என்று சக ஊழியர்களை மிரட்டி வந்தார்.
மாலை பத்திரிக்கையிலும்  கோட்டை செல்லும் பணி மட்டுமே தனக்கு வேண்டும் என்று கேட்டுப்பெற்றார்.ஆளும்கட்சி ஆதரவுப் பத்திரிக்கை என்னும் பந்தாவில் இவர் புரோக்கர் தொழிலும் மிரட்டலும் கொடிகட்டிப் பிறந்தது.அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரிவதைப்போல் இந்த நிறுவனத்தில் சில காலமே கொடிகட்டிப் பறந்த இவரின் செயல்கள் நிர்வாகத்திற்குத் தெரியவர அல்பாயுசில் இவரின் வேலை பறிபோனது.
இவருக்குப் பரிந்துரை செய்த முருக்க் கடவுள் பெயர் கொண்டவரே  இவரின் வேலை பறிபோகக் காரணமாகி விட்டார்.காரணம் வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பதைப் போல பரிந்துரை செய்த அதிகாரியிடமே இவர் மோசடி வேலையைக் காட்டி விட்டார்.


இதன் பிறகு இவரின் மோசடி வேலைக்கு எந்தப் பத்திரிக்கை நிறுவனமும் அகப்படாததால் சிறிது காலம் திருவண்ணாமலையில் இருந்து வெளிவரும் பத்திரிக்கையின் சென்னை பதிப்பு நிருபராக வேலை பார்த்தார்.அங்கும் இவரது மோசடி வேலைகள் தொடர்ந்தது.
ஏழுமலையான் பெயரைக் கொண்டவரும் ஜூனியரின் அண்டர்கிரவுண்டில் சீனியர் வேலை பார்த்ததால் தெருவில் நிறுத்தப்பட்டு நிர்வாகத்தால் துரத்தி அடிக்கப்பட்ட மோசடிப் பேர்வழியும் அங்கு பணியாற்றியதால் ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது.என்னும் முதுமொழியின் படி இரண்டு மோசடிப் பேர்வழிகளுக்குள் ஏற்பட்ட மோதலால் சென்னைப் பதிப்பே இழுத்து மூடப்பட்டு இருவரும் வெளியேற்றப்பட்டனர்.


அதன்பின்பு இருவரும் திசைக்கு ஒருவராகப் பிரிந்து சென்றனர்.ஒருவர் புதிய தமிழகத்தைப் படைப்பதாகச் சொல்லி அரசியல் நடத்தும் கட்சியின் பத்திரிக்கையில் அன்பாக அடைக்கலம் புகுந்தார்.மற்றொருவர் அரசியல் பத்திரிக்கையில் ஆசிரியராக இருக்கும் தனது சிஷ்யனைக் குருவாக ஏற்று அங்கு பணிவிடை செய்து கொண்டிருக்கிறார்.


இந்த இரண்டு மோசடிப் பேர்வழிகளுக்கும் பொதுவாக ஒரு விஷேஷ குணம் உண்டு.அது,தாங்கள் எங்கு பணியாற்றினாலும் அந்த நிறுவனத்தின் எஜமானர்களிடம் அளவற்ற விசுவாசத்தைக் காட்டுவார்கள்.நிறுவனத்தை விட்டு .வெளியில் வந்த பிறகு அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களைப் பற்றியும்,எஜமானவர்களைப் பற்றியும் குற்றப்பட்டியலை வாசிப்பார்கள்.


அதன்படி அன்பானவர் தனது முன்னாள் எஜமானர்களை விமர்சித்து புத்தகம் வெளியிட்டார்.ஜூனியரில் பணியாற்றிய சீனியரோ தனது பழைய எஜமானரையும் அதில் பணியாற்றும் தனக்குப் பிடிக்காதவர்களைத் திட்டவும் ஒரு பிளாக் நடத்துகிறார். 

குற்றவாளிகளின் புகலிடமான பத்திரிக்கையாளர்கள் அறை




புது ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சட்டசபையில் நடந்து வருகின்றது.பட்ஜெட் கூட்டத்தொடர் என்றாலே சட்டசபை செய்திகளைச் சேகரிக்க தலைமைச் செயலகத்துக்குச் செல்லும் ஒருசில பத்திரிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் தான்.


துறைவாரியாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கி மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சென்றடைகின்றதோ இல்லையோ பத்திரிக்கையாளர்களின் வயிற்றைப் பிரியாணி பொட்டலங்கள் நிரப்பும்.பாக்கெட்டுகளை கவர் நிரப்பும்.கைப்பையை காம்ப்ளிமெண்ட் நிரப்பும்.இதனால் தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறை எப்பொழுதும் நிரம்பி வழியும்.


இதில் குறிப்பாக தற்பொழுது எதிர்க்கட்சியாக உள்ள அரசியல் கட்சியைச் சார்ந்த பிரமுகர் ஒருவரை கடந்த பொதுத் தேர்தலின் பொழுது மிரட்டிப் பணம் கேட்ட புகாரில் திண்டுக்கலில் கைதான ஆனந்தமான நிருபரும்,செல்வத்தில் ராஜாவான பெயரைக்கொண்ட பிளாக்மெயில் நிருபரும்,மற்றும் இவர்களைப் போன்ற மற்ற ஒரு சிலராலும் பத்திரிக்கையாளர்கள் அறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கும்பல்கள் அமைச்சர்களின் அறை தோறும் சென்று அமைச்சர்கர்களை வானளாவப் புகழ்ந்து வசூல் வேட்டையாடி வருகின்றார்களாம்.


சூடு,சொரணையற்ற,மானங்கெட்ட எந்தப் பத்திரிக்கையிலும் பணியாற்றாத இந்த கும்பலைக்கண்டு நேர்மையான செய்தியாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் அறைக்குள் செல்வதே பாவம் எனக்கருதி ஒதுங்கி ஓடி விடுகின்றனர்.
அன்னா ஹசாரே வலியுறுத்தும் லோக்பால் மசோதாவில் பத்திரிக்கை துறை ஊழல்களையும் சேர்த்தால் நல்லது.

வீர நீரால் வீறு கொண்ட சுய மரியாதை

அன்று மதுரையை எரித்தாள் கண்ணகி.சில ஆண்டுகளூக்கு முன் மதுரையில் உள்ள நாளிதழ் அலுவலகத்தை எரித்தனர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள். இந்த நாளிதழின் தலைமை அதிகாரி சமீபத்தில் அதன் செய்தி ஆசிரியர்களில் ஒருவரை நள்ளிரவு நேரத்தில் செல்லிடப்பேசியில் அழைத்து நாக்கில் நரம்பில்லாமல் பேசினாராம்.


எப்பொழுதும் அர்ச்னையை அமைதியாக வாங்கிக் கொண்டிருக்கும் செய்தி ஆசிரியர் அன்று வீர நீரை உள்ளே செலுத்தியிருந்ததால்,சுயமரியாதை அவரைச் சுட்டெரிக்க அவர் நாவும் பதிலுக்கு அன்று நர்த்தனம் ஆடியதாம்.எப்பொழுதும் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கும் எதிர்முனை அன்று நர்த்தனம் ஆடியதால் தலைமை அதிகாரியின் பேச்சு தாழ்ந்து போனதாம். தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை எப்பொழுதும் நாக்கில் நரம்பில்லாமல்  பேசும் தலைமை அதிகாரி நா அன்று மட்டும் தழுதழுக்க ஆரம்பித்து விட்டதாம்.


இனிமேலாகினும் தலைமை அதிகாரி அனைவரிடமும் நாவடக்கத்துடன் நடந்து கொண்டால் எதிர்முனை நா நர்த்தனம் ஆடாது என்பதைப் புரிந்து கொண்டால் சரி.