Monday 15 September 2014

சாதி வெறிக்கு சாமரம் வீசுகிறதா விகடன்..?


மிழ் பத்திரிகை உலகில் கடந்த சில ஆண்டுகளாக பத்தி,கட்டுரை எழுதும் எழுத்தாளர்கள் அருகிக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையான எழுத்தாளர்களுக்குப் பஞ்சமா? இல்லை, அதைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை எழுத வைப்பது இவர்களுக்கு சிரமமாய் இருக்கிறதா?

 தெரியவில்லை.

 அதனால்தான் தங்களுக்குத் தெரிந்தவர்களையும், நெருக்கமான வட்டங்களில் இருப்பவர்களையும், முகநூலில் நாலு வரி ஸ்டேட்டஸ் எழுதி கவனிக்கும் படியான லைக் வாங்குபவர்களையும்,பேஸ்புக்கில் ஆதரவாக கமெண்ட் போடுபவர்களையும் எழுத்தாளர்களாக்குகிறார்கள். இதனை நாம் ‘குமுதம்‘,‘ஆனந்த விகடன்‘ போன்ற இதழ்களில் இருந்து புதிதாய் வந்துள்ள ‘தி இந்து‘ வரை உணர முடியும்.

இங்கு நாம் விவாதிக்க இருப்பது அப்படி ஒரு தொடர் குறித்து அல்ல. அப்படி ஒரு தொடரை எழுதுபவர் குறித்து.

 தமிழ்நாடு கேரளாவை விட கல்வி கற்கும் விகிதாச்சாரம் உட்பட ஒரு சில விஷயங்களில் பின் தங்கி இருக்கலாம். பல விஷயங்களில் கண்டிப்பாய் முன்னேறித்தான் இருக்கிறது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியும்.
 அதில் ஒன்று சாதி.

 சாதியை ஒழிப்பதிலும், சாதி வெறியை மட்டுப்படுத்துவதிலும் இன்னும் தமிழகம் பயணிக்க வேண்டிய தூரங்கள் எவ்வளவோ இருக்கலாம். ஊடகங்கள் உட்பட எல்லாத் துறைகளிலும் சாதி இங்கும் அடிநாதமாய் இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி.கேரளாவை விட இந்த மண் பதப்பட்டும், மக்கள் பண்பட்டும் முற்போக்காய்த்தான் இருக்கிறார்கள். கேரளாவை விடத் தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமண‌ங்கள் அதிகம் நடைபெறுகிறது என்பது புள்ளி விவரங்கள் காட்டும் கணக்கு.

 அதனால்தான் இங்கு சாதிச் சங்கங்கள் ஆரம்பித்த பெரும்பாலான தலைவர்கள் கூடத் தங்கள் பெயருக்குப் பின் சாதிப்பெயரைப் போடுவதில்லை. ஊடகத்தில் இருப்பவர்களுக்கு உள் மனதில் சாதி வெறியும், பற்றும் இருந்தாலும் வெளிப்படையாய் தான் இன்ன சாதி என்று பெருமை பீற்றித் திரிவதில்லை.

 இந்த சூழல் இருப்பதால்தான், தமிழ்நாட்டில் நடிக்க வந்த பார்வதி மேனன் என்னும் மலையாள நாயர் சாதிப்பெண் கூட “எனக்கு மேனன் சாதி வேண்டாம்,பார்வதி மட்டும் போதும்“ எனச் சொல்லும் சூழல் இங்கே இருக்கிறது.

 இந்தச் ‘சாதி ஒழிப்பைப்‘ பாராட்டி ஒரு மாதத்திற்கு முன் ஆனந்த விகடனில் செய்தி  வந்தது.



 திரைப்பட  நடிகைகள் அழகாகவும், திற‌மையாகவும் இருக்கிறார்களா ? என்றுதான் இங்கு எதிர்பார்ப்பார்களே தவிர, முற்போக்காய் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் நாட்டுக்கேற்ப நடிகை பார்வதி தனது சாதியைத் துறந்தார்.

 இது ஆனந்த விகடனுக்கு மட்டுமல்ல, சாதிச் சமயமற்ற சமூகம் எதிர்பார்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எல்லோரும் இவரைப் பின்பற்றி ஜாதிப்பெயரை மாற்றுங்கள் என்று ஆனந்த விகடன் வேண்டுகோள் விடுத்தது.

 ஆனால் திரைப்பட நடிகை பார்வதி துற‌ந்த மேனன் சாதிப் பெயரை,  தன்னை முற்போக்காய் காட்டிக்கொள்ளும் ஒரு பெண் எழுத்தாளினி அதே கேரளாவில் இருந்து ... அதே சாதியை ஏந்தி இங்கே வந்து,  சாதிச் சமயமற்ற சமூகத்தை எதிர்பார்க்கும் விகடனில் கடைபரப்பியிருப்பது நமக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ள‌து.

 பார்வதியைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல்,மற்ற நடிகைகள் தங்கள் ஜாதியைத் துறக்க வேண்டும் என வலியுறுத்திய ‘ஆனந்த விகடன்‘ வார  இதழ் இந்தப் பெண்ணின் சாதி வெறிக்கு, சாதிப் பெருமிதத்துக்குத் தளம் அமைத்து கொடுத்திருப்பது நமக்கு கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது.

 பிரியா தம்பி என்பவர் “பேசாத பேச்செல்லாம்“ என்னும் தொடரை விகடனில் எழுதி வருகிறார். “பெண்கள் உடை,வாழ்க்கை,பாலியல் சுதந்திர‌ம்,ஆண்-பெண் சமத்துவம் என பெண்கள் வெளிப்படுத்த முடியாத,பேச வாய்ப்பற்றவர்களின் குரலாக பிரியா தம்பியின் குரல் ஒலிக்கிறது“ என்று அவரைப் பாராட்டுபவர்களும் அவரது சிந்தையை ஒட்டியவர்களும் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கமோ அதன் எதிர்வினை கடுமையாய் இருக்கிறது.

முதலில் பிரியா தம்பி யாரென்றால் ?

இவர் சுதந்திரத்துக்கு முந்தைய திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டுவிட்ட தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அதாவது பூர்வீக மலையாளி.

‘தமிழ் முரசு‘ மாலை நாளிதழில் சிறிது காலம் வேலை பார்த்தவர். சிறிய இடைவெளிக்குப் பின் ‘குமுதம் ரிப்போர்ட்டர்‘ வாரமிருமுறை இதழில் மிகச் சிறிது காலம் பணி புரிந்திருக்கிறார். (இரண்டு ஊடகங்களிலும் சேர்ந்து மொத்தம் 2 வருடங்கள் இருக்கலாம்.)

 முகநூலில் இவரது நிலைச் செய்திகளைத் தொகுத்து ஒரு நூல் ‘கயல்கவின் பதிப்பகம்‘ சார்பில் 'மின்னுவும் அம்மாவும்' என்னும் நூல் வெளிவந்திருக்கிறது. இப்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தாயுமானவன்‘ என்னும் சீரியலுக்கு வசனம் எழுதுகிறார் என்பதையும் அறிகிறோம்.

இதுதான் அவரது பின்னணி.இவரைத்தான்  2 லட்சத்து சொச்சம் விற்கும் ஆனந்த விகடன் வாரந்தோறும் அவர் நினைத்த‌தை எல்லாம் எழுதித் தள்ளும் வாய்ப்பை அளித்திருக்கிறது.

பிரியா நாயர் எழுதும் டைரிக்குறிப்புகள்


 இவர் எழுதும் தொடரின்  முதல் அத்தியாயத்தில் ஒரு பத்தியை இங்கு நினைவு படுத்துகிறோம்.

//கோயில்களுக்குப் போய் வந்த அண்ணன்கள், நமக்குப் பாசிமாலை வாங்கி வருவது, நம் மேல் உள்ள அன்பால் என எவ்வளவு காலங்கள் பொய்யாக நம்பித் திரிந்திருக்கிறோம். நம் கழுத்தில் போட்ட அந்த மாலையை அந்த அண்ணன் தடவிப்பார்க்கும்போது எவ்வளவு அப்பாவியாகச் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தோம்.//

 இது ‘பேசாத பேச்செல்லாம்‘ முதல் வாரம்.

(குஷ்புவின் கருத்துக்கு கொதித்த தமிழ், திராவிடக் கலாச்சாரக் காவலர்கள் இந்த அபத்தத்துக்கு எதிராய் ஏன் கொதிக்கவில்லை ?  எவரும் விகடனில் பிரியா நாயர் தொடரைப் படிப்பதில்லையா? தெரியவில்லை. )

நாம் இப்பொழுது பிரியா தம்பி (நாயர் ) கட்டுரை குறித்து இங்கே விவாதிக்க விரும்பவில்லை. அது அவரது சொந்தக்கதை, சோகக்கதை. (கற்பனை,தனி மனித விருப்பு வெறுப்பு கணிசமான அளவு உண்டு.) அவர் தனது நாட்குறிப்பில் கூட அதை எழுதியிருக்கலாம். ஆனால் விகடனுக்கு எழுத்தாளர் பஞ்சம் இருப்பதால் நாம் அதைப்படித்துத் தொலைய வேண்டியிருக்கிறது.

நாம் இங்கே பேச வருவது அவர் தன் பெயருடன் ஏந்தி வரும் ‘தம்பி‘ என்னும் சாதி வெறி குறித்தே.

 பிரியா என்பது அவரது பெற்றோர் இட்ட பெயர். 'தம்பி' என்பது?

 “பாலு என்பது பெயர். தேவர் என்பது நீங்க வாங்கின பட்டமா?“ என பாரதிராஜாவின் ‘வேதம் புதிது‘ படத்துப் பொடியன் சத்யராஜைக் கேட்ட மாதிரி....  கேட்கிறோம்.

“பிரியா என்பது பெயர். தம்பி என்பது நீங்க வாங்கின பட்டமா?”

 கேள்வியோடு பதிலையும் நாமே சொல்லிவிடுகிறோம்.

தம்பி என்பதுஅவரது நாயர் சாதி.



நாயர்,மேனன்,நம்பியார்,தம்பி, பணிக்கர் என நாயர் சாதியினர் பலவாறாக அழைக்கப்பட்டாலும் அவர்கள் நாயர் தான். பிரியா தன் பெயருடன் இணைத்திருப்பது சாதி. அதையே பெருமிதத்துடன் சேர்த்து  இந்தப் பெரியார் மண்ணில் வலம் வருகிறார்.



வாசிப்பவர்கள் அனைவருக்கும் புரியும் படியாக இங்குள்ள தமிழ்நாட்டு  சூழலுக்கு ஏற்ப சொல்லுகிறோம்.

தேவர் ஜாதியில் கள்ளர்,மறவர்,அகமுடையர் என மூன்று பிரிவுகள் இருக்கின்றன. பிரமலைக் கள்ளர்களும்,கொண்டையங்கோட்டை மறவர்களும் தங்கள் பெயருக்குப் பின் தேவர் என வைத்துக் கொள்கின்றனர். மதுரை,ராமநாதபுரத்தைச் சேர்ந்த‌ அகமுடையார்கள் தங்கள் பெயருக்குப் பின் ‘சேர்வை‘ என இணைப்பதையே விரும்புகின்றனர். அவர்கள் சேர்வை என அழைத்துக் கொண்டாலும்  தேவர் ஜாதியின் கீழ்தான் அடங்குவர்.

இன்னொரு எடுத்துக்காட்டு.

நாஞ்சில் வேளாளர்,சைவ வேளாளர்,துளுவ வேளாளர் என பல பிரிவுகளாய் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே வேளாளர்கள் தான்.

அதைப்போலதான் நாயர் பிரிவில் பணிக்கர்,மேனன்,நாயர்,தம்பி என பல பிரிவுகள் இருக்கின்றனர்.சிலர் நாயர் எனவும், சிலர் மேனன் எனவும்,சிலர் தம்பி எனவும் ஜாதியை வைத்துக் கொள்கின்றனர். ஆனால் அனைவரும் நாயர் தான். அந்த மரபுப்படி ப்ரியா நாயர் தம்பியை இணைத்து ப்ரியா தம்பியாகக் காட்சியளிக்கிறார்.

 அந்தப் பெயரில்தான் ஆனந்த விகடனில் தொடர் எழுதுகிறார். இதனை விகடன் நிர்வாகம் அனுமதிக்கிறது. அவரது எழுத்தைப் பாராட்டும் பெண்ணியவாதிகள், பின்-முன் நவீனத்துவாதிகள்..... மேலும் ஏனைய முற்போக்காளர்கள், சக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பெரும்பாலானோர் இந்தச் சாதி வெறியை அறியாமலும்,சிலர் தெரிந்தும் கண்டுகொள்ளாமலும் கடந்து செல்கின்றனர்.
 ---

பிரியா நாயர் (தம்பி)

பிரியா தம்பியின் இச்செயலை நாம் கடுமையாய்க் கண்டிக்கிறோம். அவரது இந்தச் சாதி வெறி சாதியைப் பொதுவெளியில் வெளிப்படுத்த தயங்கும்  தமிழ் மண்ணில் ஒரு புதிய தொடக்கத்தை  ஊடக உலகில் உருவாக்குமோ என அஞ்சுகிறோம்.

 இதைத்தாண்டி இந்த பெயர் விஷயத்தில் நாம் பிரியா நாயரிடம் கேட்பதற்கு வேறு எதுவும் இல்லை. அவர் பேசும் சாதி ஒழிப்பு உள்ளிட்ட இதர முற்போக்கான விஷயங்களில் அவர் நேர்மையாய் இருக்கிறாரா ? என்பதே எமக்குத் தேவை. அவரது நண்பர்கள்,இதர முற்போக்காளர்கள் இதைக் கேள்விக்குட்படுத்த மாட்டார்கள்தான். இவர் ஒரு பெண் 'போராளி' என்பதாலும், அந்தப் 'போராளி' மலையாளியாக இருப்பதாலும் அவர்களும் அமைதி காப்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.

 ஆனால் ‘விகடன்‘ நிர்வாகத்திடம் நாம் கேள்வி கேட்க முடியும். 

ஏனென்றால் சமீப காலங்களில், தர்மபுரி இளவரசன்- திவ்யா காதல் உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சனையில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரானதாகத்  தன்னை அது சித்தரித்துள்ளது.

தர்மபுரி இளவரசன்- திவ்யாவின் காதல் பிரச்சனையில் பிற‌  இதழ்கள் ஒரு வாரம் இளவரசன் தரப்புக்கு ஆதரவான செய்தியையோ,நேர்காணலையோ வெளியிட்டால்.... அடுத்த வாரம் திவ்யா  குடும்பத் தரப்பு ஆதரவான செய்தியை வெளியிட்டு ‘சமன்‘ செய்து விடுவார்கள். ஆனால் ஆனந்த விகடனோ இந்தச் சாதி விஷயத்தில் (இதில் மட்டும்) நிலைப்பாடு ஒன்றினை நிலையாக எடுத்து தன்னை ஜாதி வெறிக்கு எதிரானதாய்க் காட்டி வந்திருக்கிறது. அதனால்தான் கேட்கிறோம்.

 //தர்மபுரியில், மூன்று கிராமங்களை எரித்து, பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கிய சாதி வெறி, திவ்யா-இளவரசன் காதலையும் வன்முறையாகப் பிரித்திருக்கிறது.//

 /சாதி வெறி எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை, தன் சொந்த‌ அனுபவத்தில் திவ்யா புரிந்துகொண்டிருப்பார். இப்போது அவர் பேச வேண்டும். தன் அன்புக் கணவனை, பாசத்துக்குரிய அப்பாவைப் பறிகொடுத்த அநியாயத்துக்கு நீதி கேட்க வேண்டும். அப்படி திவ்யா துணிவுடன் களமிறங்கினால், அவருக்குப் பின்னால் இளைஞர் கூட்டம் திரண்டு நிற்கும்./

 -இவையெல்லாம் 17 ஜூலை 2013 இதழில் விகடன் மூத்த நிருபர் அருள் எழிலன் என்பவர் சுழற்றிய சாட்டை.

 இது மட்டுமல்லாது, சாதி வெறியை கடுமையாய் விமர்சித்து, “சாதி உங்களுக்கு என்ன செய்தது?“ என்னும் கட்டுரையை அதன் உதவிப் பொறுப்பாசிரியர்  எழுதி வெளியிட்டுள்ளது. ‘குமுதம்‘ போன்ற இதழ்களில் இதை நாம் எதிர்பார்க்க முடியாது.  ஆகவேதான் நாம் விகடனிடம் வினா எழுப்புகிறோம்.

நீங்கள் எழுதிய கருத்துக்கு நீங்கள் உண்மையாக இருங்கள்.

 இந்த ‘நாயர்‘ என்போர் யார்?

நாயர் என்பது ஒடுக்கப்பட்ட சாதியோ, காலமெல்லாம் இழிவை ஏந்தி வந்த சாதியோ அல்ல. மிகவும் பிற்படுத்தப்பட்ட ஈழவர், புலையர்,சாணார் ஆகியோருக்கு  அது  ஓர் ஆதிக்க சாதி.

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நம்பூதிரிகளுக்கு வேட்டை நாய்களாக  விளங்கிய சாதி. நம்பூதிரிகள்-நாயர் பிணைப்புக்கு என்ன காரணம் என்னும் 'களங்க‌' வரலாற்றை நாம் விளக்கிச் சொல்ல விரும்பவில்லை.நீங்களே தேடிக் கன்டுபிடியுங்கள். இணையத்தில் கூடக் கிடைக்கிறது.

ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் நம்பூதிரிகளுக்கு நாயர் குடும்பங்களின் மீது அதிக ‘செல்வாக்கு‘ உண்டு.

அந்தச் ‘செல்வாக்கு‘ பெற்றெடுத்த கள்ளக்குழந்தைகளே இந்த நாயர் வகையறாக்கள். கேரளத்தின் ஈழவர்கள்,புலையர்களுக்கு எதிராய் இவர்கள் நிகழ்த்திய கொடூரங்களை யாராலும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைக்க முடியாது. குறிப்பாக புலையர் பிரிவு மக்களுக்கு தங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதையும்,கல்வி நிலையங்களில் கல்வி அளிப்பதையும் இவர்கள் அடியோடு எதிர்த்தனர். சாதி எதிர்ப்புப் போராளி அய்யன்காளி மற்றும் நாராயண குருவின் போராட்டங்கள் இவர்களுக்கு எதிரானதே.

 மலையாள சினிமாவின் தந்தையான‌ டேனியல் தனது முதல் படத்தில் ‘சரோஜினி‘ என்ற நாயர் பெண்ணாக ஒரு புலையர் சாதியைச் சேர்ந்த பெண்ணை நடிக்க வைக்கிறார்.

 “தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர் உயர் சாதிக்காரியாக வேடம் கட்டுவதைக் கூட‌ச் சகித்துக்கொள்ள முடியாது'' என்று நாயர் சமூகம் சீறுகிறது. திரைப்படக் காட்சியை நிறுத்தியதோடு ரோசியாக மாறிய ரோசம்மாவைக் கொல்லவும் அந்த நாயர் கும்பல் விரட்டுகிறது. கடைசி வரை அவர் தன் முகத்தை திரையில் பார்க்கவே இல்லை.

 வைக்கத்தில் தீண்டாமையை அமல்படுத்தியது, பெரியாரின் போராட்டத்திற்கு எதிர்வினையாற்றியது இந்த நாய்ப் படை. கேரளம் மட்டுமல்ல. நம் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிராகவும் தன் சாதிய வெறியை,ஆதிக்கத்தை நிலை நிறுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடைக்கோடி மாவட்டமான குமரி மாவட்டத்தில் நடந்த தோள்சீலைப்போராட்டம் குறித்து சிலருக்குத் தெரிந்திருக்கும்.பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.இன்னும் சிலரோ மறந்திருக்கலாம். அப்பொழுது குமரி மாவட்டம் சென்னை மாகாணத்தில் இல்லை.திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது.



 குமரி மாவட்டத்தில் வாழும் நாடார்கள்(சாணார்கள்),புலையர்,ஈழவர் உள்ளிட்ட‌ இன்னும் சில ஜாதியினர் நாயர்கள்,நம்பூதிரிகளைக் காண நேர்ந்தால் பதினெட்டு எட்டுக்களுக்கு அப்பால் தள்ளி நிற்க வேண்டும். இதைவிடக்கொடுமை என்னவென்றால் பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும்....எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயாராக, பாட்டியாக, இருந்தாலும் "மார்பகத்தை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்.மேலாடை அணியக் கூடாது"

 மார்பகம் அளவுக்கு ஏற்ற மாதிரி வரி; பெரிய மார்பகமென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப் பட்டன.  நாயர் சாதி வெறி பிடித்த ராணி பார்வதிபாய் , நாடார் பெண்டிருக்கு தோள் சீலை அணிவதற்கு எந்தவித உரிமையும் இல்லை என்று மனு நீதி வழங்கினார். கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில்  இந்த மனுநீதி கொடுரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. புதுக்கடை, நட்டாலம்,களியக்காவிளை பகுதிகளில் இதன் பாதிப்பு அதிகளவில் இருந்தது. இந்தக் கொடுமையை எதிர்த்து அம்மக்கள் பல காலம் போராட வேண்டியிருந்தது. தோள் சீலைப் போராட்டம் என்று கொடும் நிகழ்வாய் வரலாற்றில்  பதிந்துள்ள இந்தக் கொடுமைக்கு எதிராய் அம்மக்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்திய பின்தான் அவர்களுக்கு விடிவு கிடைத்தது. உலகில் எங்கும் இத்தகைய கொடுமைகளை நாம் கண்டிருக்க முடியாது.

நாகர்கோவிலுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கொட்டாரம் என்ற ஊரைத் தாண்டினால் இடைப்படும் தாலியறுத்தான் சந்தை என்ற பகுதி இன்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நாயர்கள் நடத்திய  கொடூரங்களுக்கு நினைவுச் சின்னம்.

இத்தகைய கொடுமையைச் செய்தது திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள். அந்த‌ மன்னர் குடும்பத்தில்  திருமண உறவு கொண்டவர்கள் தான் இந்த தம்பி வகையறா நாயர்கள். அங்கு தாய் வழி உறவு நடைபெறுவதால் இவர்களால் ஆட்சி அதிகாரத்துக்கு வர இயலவில்லை. ஆனால் இவர்கள் மன்னரின் ஆட்சி பரிபாலனம் நடக்கும் இடம் மட்டுமல்ல  எங்கும் சுதந்திரமாகச் சென்று வர முடியும்.

 திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பிரியா தம்பி,ஆனந்த விகடனில் தமிழ்ப் பெண்களின் பாலியல் சுதந்திர‌ம் குறித்து அங்கலாய்க்கிறார். எந்த உடை பெண்களின் சுதந்திரம் என்று அறிவுரை சொல்கிறார். அவர்களுக்கு விருப்பமான உணவினைச் சாப்பிட முடியவில்லை என்று  ஏக்கம் கொள்கிறார். மணம் முடித்த கணவனுடன் பிடித்த மாதிரி உறவு கொள்ள இயலவில்லை என்று இந்தச் சமூகத்தைச் சபிக்கிறார். பிடித்த ஆணுடன் எல்லோரும் அங்கீகரிக்கும் வண்ணம் வாழ இயலவில்லையே என ஏக்கம் கொள்கிறார்.

உங்கள் வரையில்  இவை எல்லாம் சரி.

நமது கேள்வி... இத்தகைய பெண் போராளி சில காலங்களுக்கு முன் வரை, திருவாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த சில குறிப்பிட்ட சாதி மக்கள் மார்பில் துணி இருப்பதைக்கூட பொறுக்காமல் நம்பூதிரி கட்டளையிட்டதை சிரமேற்கொண்டு  முலை வரி விதித்த அந்த நாயர் சாதியை,வரி கொடுக்க இயலாத பெண்களின் மார்பை அறுத்தெறிந்த நாயர் சாதியை, நாஞ்சில் நாடு- வேணாடு பகுதிகளில் ஆதிக்க சாதி வெறி பிடித்தலைந்த அந்தச் சாதியை,கேரளத்தின் புலையர் பெண்க‌ள் கழுத்தில் தங்க நகை அணியும் உரிமையை மறுத்து அவர்களைக் கல் மாலை அணியக் கட்டாயப்படுத்திய நாயர் சாதியை  தன் பெயருக்குப் பின் எவ்வித உறுத்தலுமின்றி பெருமிதத்துடன் ஏந்தி இருப்பது எப்படி?

 சாதியைப் பெயரின் பின்னால் சுமந்து திரிவதை பெருமிதமாகக் கருதும் ஒரு நபர்அந்தச் சாதி இழைத்த வன்முறைகளுக்கு மறைமுகமாக அல்ல, நேரடியான ஓர்அங்கீகாரத்தையே வழங்குகிறார் என்பதுதான் உண்மை .

உழைக்கும் தமிழர்கள் 42  பேரை வெண்மணியில் எரித்தவனின் ஊரிலிருந்து வரும் ஒருவன் தன்னை ஒரு ‘நாயுடு‘ என இன்றும் நம்மிடம் நெஞ்சை நிமிர்த்துவானென்றால்....  பொதுவெளியில் அதனைப் பெருமையாகவும் பெருமிதமாகவும் பீற்றித் திரிவானென்றால்
அவன் எவ்வளவுதான் முற்போக்கு பேசினாலும்.... பொறம்போக்குதான்.

அப்படியானால்....

பிரியா நாயரை எந்தக் கணக்கில் சேர்க்கலாம்?

விகடன்தான் பதில் சொல்லவேண்டும்.

கல்வி-கலவி,உடை-உணவு என அனைத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என அங்கலாய்க்கும் பிரியா ஏந்தியிருக்கும் ‘தம்பி‘ ஜாதி பெண்களுக்கு எதிராக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சொல்லொண்ணாக் கொடுமையை இழைத்திருக்கையில் ..... அதைப் பெருமிதமாக, தனது அடையாளமாக கொள்ளும் இந்தப் பெண் போராளியின் பெண்ணியம் தொடர்பான எழுத்தில் துளியளவு நேர்மையாவது இருக்க வாய்ப்பிருக்கிறதா..?

( நாம் பிரியா நாயரின் சாதி பெருமிதத்தை அம்பலப்படுத்தியதனால்,இனி வரும் காலங்களில் தோள் சீலைப்போராட்டம் குறித்தும்,புலையர்,ஈழவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உணர்ச்சிகரமாய் எழுதி தன் சுய சாதி எதிர்ப்பை அவர் பதிவு செய்யவும் வாய்ப்பு இருக்கிற‌து.)


இப்படிப் பாருங்கள்.

நாயர் சாதிக்கு முலை வரி செலுத்திய,செலுத்த மறுத்துப் போராடிய வம்சத்தில் வந்த ஒரு பெண்மணி ஆனந்த விகடன் வாங்குகிறார். அதில் பிரியா தம்பி(நாயர்) யின் பெயர் பார்த்தவுடன் அவரையும் அறியாத ஆச்சரியம் பிளஸ் சந்தேகம் பிளஸ் எச்சரிக்கையுடன் உடனே அந்தக் கட்டுரையைப் படிக்கிறார்.

அதில் பிரியா நாயர் பெண்களின் பாலியல் சமத்துவம் குறித்த ஆவேசமான எழுத்துக்களைப் படித்தார் என்றால்  அவர் விமர்சனம் எப்படி இருக்கும்..? அவரது வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வருமா என்ன..?


 பிரியா தம்பி தொடர் படிக்கும் குமரி மக்களும்,வரலாறு அறிந்தவர்களும் ஆனந்த விகடன் பத்திரிகையின் நேர்மையைப் பற்றி என்ன நினைப்பார்கள் ? அதன் ஆசிரியர் குழுவின் வரலாற்று அறிவு குறித்து எப்ப‌டி மதிப்பிடுவார்கள் ?

 வன்னிய,தேவர்,நாடார்,கவுண்டர் சாதி வெறியை விமர்சிக்கும் ஒரு முற்போக்கு எழுத்தாளர் தன் பெயருக்குப் பின் ஐயர் என்றோ,ஐயங்கார் என்றோ சேர்த்துக் கொண்டால் அந்த எழுத்தில் நம்பகத்தன்மையும் நேர்மையும்  எதும் துளியாவது இருக்குமா என்ன..?

இறுதியாக.... சில கேள்விகள். பிரியாவுக்கு அல்ல....அவருக்கு மாலை மரியாதையுடன் மேடை போட்டு, மைக்செட் கட்டிக் கொடுத்திருக்கும் ஆனந்த விகடன்  இதழுக்கு.

  1) பிரியா தம்பி தனது நாயர் சாதிப்பெயரைச் சேர்த்துக் கொள்ள அனுமதிப்பது போல......   பறையர்,படையாச்சி,பிள்ளை,ஐயர்,நாடார்,தேவர்,கவுண்டர் என‌ மற்றவர்களும் தனது பெயருடன் சாதியைச் சேர்த்துத் தொடர் எழுத  நீங்கள்  அனுமதிப்பீர்களா..?

 2) சாதிப்பெயரை நீக்குவது என்பது சில நேரங்களில் பத்திரிகை நிர்வாகத்தால் முடியாத ஒன்றாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக நம்பூதிரிபாடோ,ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தோ, மூப்பனாரோ  தனது பெயருக்குப் பின் சாதிப்பெயரை வைத்திருக்கிறார்கள் என்பதற்காய் அவர்கள் நேர்காணலையோ,கட்டுரையையோ விகடனால் நிராகரிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் நாடறிந்த தலைவர்களாய் இருந்தவர்கள். அந்தப் பெயரில்தான் நாட்டின் அனைத்து ஊடகங்களும் அவர்கள் கருத்தை வெளியிடுகின்றன. இந்த விஷயத்தில் விகடன் தன்னிச்சையாக ஒன்றும் செய்ய முடியாது. 

அப்படிச் செய்ய முடிந்தால் அங்கு பேட்டி கிடைக்காது.ஆனால் பிரியா தம்பி நாடறிந்த( அல்லது ஊரறிந்த) எழுத்தாளரோ, தலைவியோ அல்ல. எனவே ரிட்டன் காப்பி அதிகரித்துவிடும் என்ற கவலை விகடனுக்குத் தேவையில்லை. சொல்லப்போனால் இதுபோன்ற அறிவுக்கொழுந்துகளின் படைப்புகள் குறைந்தால்  விற்பனை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

****

சாதி உங்களுக்கு என்ன செய்தது?

விகடன் உதவிப் பொறுப்பாசிரியர் பாரதி தம்பி என்பவர் எழுதிய சிறப்பான கட்டுரை இது.

 இதில் வன்னிய,தேவர்,ரெட்டியார்,நாடார் உட்பட அனைத்து சாதி வெறியையும்  அவர் கடுமையாய் விமர்சித்திருப்பார்.

 //சுபா என்ற 13 வயது அருந்ததியர் சிறுமி ஊர் வழியே சைக்கிள் ஓட்டிக்கொண்டுப் போனார். ‘சக்கிலிச்சி எங்க முன்னாடி சைக்கிள் ஓட்டுறியா?’ என்று சைக்கிளை எட்டி உதைத்தனர். அலங்கோலமாக ஆடை கலைந்து கீழே விழுந்தாள் அந்தச் சிறுமி. அழுது எழுந்து ஓடியவள் அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு செத்துப்போனாள். //

 //இரண்டு வாரங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள தெற்கு மணக்கரை கிராமத்தில், கோயில் திருவிழாவில் எழுந்த ஒரு சிறு பிரச்னையைச் சாக்காக வைத்து தலித்துகளின் குடியிருப்பைத் துவம்சம் செய்தது தேவர் தரப்பு. 20-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. //

//மதுராந்தகம் அருகே உள்ளது நுகும்பல் கிராமம். இதற்கு முன்பு பெரிய பிரச்னை எதுவும் இல்லாத ஊர். இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘வன்னியர் மண்ணில் அந்நியருக்கு இடம் இல்லை’ என்று ஒரு ஃப்ளெக்ஸ் போர்டு வைக்க… பிரச்சனை வெடித்தது. இறுதியில் 22 தலித் மக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.//

 அவர் எழுதியது பெரும்பாலும் தமிழ்நாட்டில் உள்ள இடைநிலை ஆதிக்க சாதி வன்மத்துக்கு எடுத்துக்காட்டு. மேற்கண்ட சம்பவத்தைப் பொறுத்தவரை கல்வி அறிவு இல்லாத மக்கள் எப்போதும் தங்கள் சாதி வெறியை வெளிப்படையாய் காட்டி விடுகின்றனர்.அவர்களால் அதனை மறைக்க முடியாது.அவர்கள் அறிவின் லட்சணம் அவ்வளவுதான்.

ஆனால் கற்றறிந்த ஒருவனின் அல்லது ஒருத்தியின் சாதி வெறி வேறுமாதிரி வெளிப்படும்...... பிரியா நாயரின் தம்பிப் பெருமிதம் போல்.

வன்னிய, தேவர்,நாடார்,கவுண்டர் சாதிக்கு எதிராய் முரசு கொட்டும் விகடன், தொலைதூரத்தில் இருக்கும் அகர்வால்,சோப்ரா,கபூர் சாதி நடிகைகளை சாதிப்பெயரை நீக்கச் சொல்லி அறைகூவல் விடுக்கும் விகடன் அதை விடப் பல மடங்கு கொடுமையானதும்,நம் மாநிலத்தின் வரலாற்றில் தன் நச்சுக் கரங்களை அழுத்தமாய் பதித்துள்ள நாயர் சாதி வெறிக்கு அறிவுத் தள‌த்தில்
 ரத்தினக் கம்பளம் விதிப்பது எந்த விதத்தில் சரி..?

விகடன் ஆத்மசோதனை செய்துகொள்ளட்டும்.

(தொடரில் எழுதப்படும் விஷயங்கள் குறித்து வாய்ப்பிருப்பின் பிறகொரு முறை விவாதிப்போம்.).

 நாம் ஆனந்த விகடனுக்கு விடுக்கும் வேண்டுகோள் இது தான்.

 தமிழ்நாட்டின் சாதி விஷயங்களே இன்னும் நிறையப்பேருக்குத் தெரியாத பொழுது மலையாள நாயர் சாதி குறித்தும் அதன் ஆதிக்கம் குறித்தும் பெரும்பாலோனோரைப்போல் உங்களுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.

தம்பி என்பது நாயர் சாதி என்பதும், வரலாறு நெடுக அது கேரளத்தின் ஒடுக்கப்ப‌ட்ட மக்களையும்,தமிழ்நாட்டின் பெண்களையும் அள‌வுக்கு இழிவாகவும் கொடுமையுடனும் நடத்தியிருக்கிற‌து என்பது குறித்தும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை தான்.

ஆனால் தெரிந்த பின்பும் அனுமதிப்பது மிகத்தவறான ஒன்று.

ஆகவே,தங்களது இதழில் வெளியாகும் ‘பேசாத பேச்செல்லாம்‘ தொடரை,பிரியா என்ற பெயரில், நாயர் சாதிப்பெயரை நீக்கி  இனி வரும் வாரங்களில் வெளியிடுவதுதான் நேர்மையானது.

உங்கள் வலியுறுத்தலையும் மீறி “சாதிப்பெயர்தான் எனக்கு முக்கியம்“ என்று நாயர் சேச்சி வலியுறுத்தி நின்றால் .....

 “சாதிப்பெருமிதமா ? விகடன் மூலம் பிரபல்யமா ?“ என்று நீங்கள் மீசை முறுக்கினால்... கண்டிப்பாக அந்த நிமிடமே ‘தம்பி‘ காணாமல் போய்விடுவார்.
சந்தேகமிருந்தால்  விகடன் இதைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.

ஒடுக்குமுறைக்கு எதிராய் நிற்கப்போகிறீர்களா..? ஆதிக்க சாதிவெறிக்கு சாமரம் வீசப் போகின்றீர்களா..?

நல்லவற்றை பாராட்டுவதும், அல்லாதவற்றை விமர்சிப்பதும் தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல கலகக்குரலும் செய்யும் செயல்தான்.

உங்கள் முடிவு என்ன..? காத்திருக்கிறோம்.

தொடர்ச்சி.http://kalakakkural.blogspot.in/2014/10/blog-post.html


தொடர்புடைய இணைப்புக்கள்

http://www.thamizhman.in/ayyan-kali/

http://www.nairmatrimony.com/matrimonials/Thampi-Matrimonials/

http://www.religion-online.org/showarticle.asp?title=1119



http://bala-bharathi.blogspot.in/2012/09/blog-post_15.html

http://en.wikipedia.org/wiki/Thampi_and_Thankachi

http://bharathithambi.com/?p=435

பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட 'பண்பாட்டு வேர்களைத் தேடி' நூல்