Sunday 30 September 2012

'புலனாய்வு' இதழ்கள்-மக்களை ஏமாற்றுவதில் விஞ்சி நிற்பது யார்..?




இந்த வாரம் நாம் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளும் ஜூனியர் விகடன்,நக்கீரன்,குமுதம் ரிப்போர்ட்டர் மூன்று இதழ்களும் 27-09-2012  மாலை முடிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.இதில் உள்ள நிறைகுறைகளை நாம் அலசி அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கியுள்ளோம்.

குமுதம் ரிப்போர்ட்டர்




தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக இந்த வாரமும் டெல்லி அரசியலை முன்னிறுத்தி அட்டைப் படக் கட்டுரையுடன் கூடிய கவர் ஸ்டோரி வெளிவந்துள்ளது.

வழக்கம் போல சென்னையில் இருந்து கொண்டு அதன் நிருபர் செல்வராஜ் எழுதியிருப்பார் என்று தெரிகிறது.ஆனால் டெல்லியில் இருந்து நிருபர் பட்டாளம் எழுதியயதைப் போல பில்ட் அப் காட்டுகிறது.பலமுறை சொல்லப்பட்ட விஷயங்கள்,கிசுகிசுக்கள்,பல இதழ்களில் வெளிவந்த செய்திகள் என அனைத்தையும்  கலந்து அரைகுறையாக தோன்றியதை வைத்து எழுதப்பட்ட கட்டுரை என்பதைத் தவிர கவர்ஸ்டோரிக்கான தகுதி எதையும் இந்தப் பதிவு கொண்டிருக்கவில்லை.பக்கங்கள் நிரப்பியது தான் மிச்சம்.

'சுவாமி வம்பானந்தா' பகுதியில் தா.பாண்டியன் விட்டுக்கு முதல்வர் சென்றது,.தி.முக.வில் பிளவு,மின் தட்டுப்பாடு,பா...பிரச்சாரம்,என நிரம்பியிருக்கிறது.காவல்துறை கிசுகிசு ஒன்றையும் வெளியிட்டு ஒப்பெத்தியிருக்கிறார்கள்.

இரண்டு இதழ்களாக தமீம் அன்சாரி தீவிரவாதி என்று பிரச்சாரம் செய்த ரிப்போர்ட்டர் இந்த இதழில் அதைக் கொஞ்சம் மாற்றி நல்லவரா.?தீவிரவாதியா என்று ரெண்டுங்கெட்டான் நிலை எடுத்துள்ளது.உள்ளே செய்தியும் அதைப் போலத்தான்.வழக்கமாக அனைத்து இதழ்களும் செய்வது தான்.முடிந்தவரை எதிர்மறையாக எழுதுவது,அது பொதுப்புத்தியில் பதிந்தவுடன் பாதிக்கப்பட்டவர் தரப்பை எழுதுவது போல் நடிப்பது.(ஆனால் படிப்பவர்கள் நம்பும் வாய்ப்பு எதுவும் இருப்பதில்லை)

புத்திரபாசத்தில் அழகிரி,நெகிழும் தச்சுத் தொழிலாளி,திமுக மதுரை பஞ்சாயத்து,தா.பா.விழாவில் வைகோ,பாரதிராஜா உரசல்,நேரு மீதான் அபகரிப்பு புகார்,சினிமா செய்திகள் என கலந்து கட்டி உருவாகியுள்ளது.

கடந்த வியாழன் அன்று மதியம் 12 மணிக்குத் தான்  ..எஸ்.அதிகாரிகள் மெகா டிரான்ஸ்பர் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது.அதைப் பற்றி ஒருவரிச் செய்தி இல்லை.

அதைப்போல காவிரி பிரச்சனை தமிழ்நாடு,கர்நாடகம்,டெல்லி என கொழுந்து விட்டெறிந்து கொண்டிருக்க அது குறித்த ஒரு வரிச் செய்தி இல்லை.

ஆனால் நிகழ்காலத்தின் குரல் என்று தலைப்பு வேற அட்டையில்.

புதிய மாற்றங்களோ,முயற்சிகளோ எதுவும் இல்லை.






நக்கீரன்





நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்க நக்கீரனுக்கோ காவல்துறை கிசுகிசு அட்டைப் படக் கட்டுரையாக ஆகி விட்டிருக்கிறது.

நக்கீரனின் மக்கள் நலப் பணிக்கு இதைவிட வேறு என்ன சான்று இருக்க முடியும்?

அதைப்போல தனது பேரன் தயாநிதியைக் காப்பாற்ற கருணாநிதி திமுக செயற்குழுவைக் கூட்டினால் அதை காங்கிரசுக்கு எதிரான யுத்தபிரகடனம் செய்யும் கூட்டமாக ஊதிப் பெருக்குகிறது நக்கீரன்.அதைப்போல மந்திரி பதவியில் இடம் வேண்டாம் என்று கலைஞர் மறுத்து விட்டதாகவும் செய்தியை அள்ளித் தெரித்து கருணாநிதிக்கு போராளி அரிதாரத்தைப் பூசியுள்ளது.

..எஸ்.அதிகாரிகள் மாற்றத்தில் ராதாகிருஷ்ணன் நியமனம் குறித்த ஒரு பத்தி செய்தியை கடைசிகட்டமாக இணைத்து அப்டேட் செய்துள்ளது

ரகசிய காமரா,சிக்கிய காமக் கொடூரன் என்ற பதிவில் வழக்கம் போல் காமக்கொடூரனை அம்பலப்படுத்துகிறேன் என்ற போர்வையில் வாசகனுக்கு வக்கிரத்தையும் ஆபாசத்தையும் விலாவாரியாகப் பந்தி வைத்துள்ளது.
வழக்கம் போல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுடன் 2 பக்க அரசியல் கிசுகிசு.

அதைப்போல எதிர்க்குரல் என்னும் பெயரில் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறார்.
இந்த இதழில் காங்கிரசைக் காப்பாற்றுபவர்கள் யார்? என்ற தலைப்பில் 3 பக்கங்கள் கொண்ட பதிவினை எழுதியுள்ளார்.காங்கிரசை விமர்சனம் செய்து அதைத் தாங்கிப் பிடிப்பவர்கள் குறித்து எழுதபப்ட்ட  அந்தப் பதிவில் காங்கிரசின் மிகப்பெரிய,நீண்டநாள்  கூட்டணிக் கட்சியான,அதிக காலமாக திமுக.வைத் தாங்கிப் பிடிக்கும்  தி.மு.க. வைப் பற்றி எழுதியதே மொத்தம் 3 வரிகள் தான்.அதுவும் இப்படித்தான்.

காங்கிரஸ் பலவீனமடைந்திருக்கும் இந்தச் சூழலிலாவது தனது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று திமுக நினைப்பது இயல்பு தான்.அதே சமயம் காங்கிரசுடனான இணக்கத்தை முற்றாக முறித்துக் கொள்ளும் சூழலில் திமுக இல்லை.எனவே அரை மனதோடு பந்த்தில் திமுக பங்கேற்றது.

இது தான் அந்த வரிகள்.இதைத் தாண்டி விமர்சனம் எதுவுமில்லை.வாங்குன லைப்ரரி ஆர்டருக்கு விசுவாசமா.?என்று தெரியவில்லை.

இது எதிர்க் குரல் அல்ல.ஜால்ரா குரல்.

அதிமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் பிளான் என்று 3 பக்க பக்கங்களை நிரப்பியுள்ளனர்.

அடுத்த குறி என்னும் தலைப்பில் திமுக மந்திரிகளைப் பழி வாங்க திட்டமிடுகின்றனர் என்று செய்திப்பதிவு.திமுக வாசகத் தொண்டர்களுக்காக எழுதப்பட்டுள்ளது.அதில் ஹிந்து ராமுக்கும் சேர்த்து வக்காலத்து.
தாண்டவம் தகராறு-அமீர் ராஜினாமா பேக்ரவுண்ட் என்னும் தலைப்பில் தாண்டவம் திரைப்பட கதை தகராறு-பஞ்சாயத்து குறித்து நிருபர் எஸ்.பி.சேகர் எழுதியுள்ளார்.நிருபர் யூ டிவி நிறுவனத்தின் மீது  சாப்ட் கார்னர் உள்ளவர் போலும்.

அவர் எழுதியது இது.

பிரச்சனை பெரிதானதால் மூலக்கதை-பொன்னுசாமி என் டைட்டிலில் போடுவதுடன் ஒரு தொகையும் தருவதாக யு டீவி சமரசம் பெசியது.இதில் உடன்படாத பொன்னுசாமி பிரச்சனையை இயக்குனர்கள் சங்கத்திற்கு கொண்டு போனார்"
என்று எழுதியுள்ளார்.

மூலக்கதை-பொன்னுசாமி என்று டைட்டிலில் போட வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கை.அதை வலியுறுத்தி தான் அவர் போராடிக் கொன்டிருக்கிறார்.இதற்கு மேல் படம் முழுவதும் தயாரிக்கப்பட்டு விட்ட இந்த நேரத்தில் எந்தக் கோரிக்கையையும் வைக்க முடியாது என்பது அவருக்கும் தெரியும்.ஆனால் டைட்டிலில் பெயரைப் போட முற்றுமுழுதாக யூ டிவி மறுத்து விட்டது.இது அனைவருக்கும் தெரியும்.ஆனால் நிருபரோ யூ டிவி பெயர் போடத் தயாராய் இருந்தும் பொன்னுசாமி பிரச்சனையை வளர்ப்பதாக அர்த்தம் தொனிக்கும் விதத்தில் எழுதியுள்ளார்.

யூ டிவி விருந்தில் பங்கேற்ற விசுவாசம் வெளிப்படாமல் இருக்குமா என்ன..?

மொத்தத்தில் நக்கீரன் வழக்கம் போலத் தான்.எந்த மாற்றமும் இல்லை.
இப்படியே போனால் இப்ப விக்கிற  40000 காப்பியும் விக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.



ஜூனியர் விகடன்




இந்த வாரம் அட்டைப் படக் கட்டுரை ஒன்றும் தேறவில்லை என்பதால் 
ஏற்கனவே பல செய்திப்பதிவுகளில் சொல்லப்பட்ட பல செய்திகளை சின்னச் சின்ன பாக்ஸ் மேட்டர்களாக மாற்றிப் புதிய தலைப்பு வைத்து நன்கு லே அவுட் செய்து கவர் ஸ்டோரியாக மாற்றி அட்டையில் வைத்து விற்பனையும் செய்து விட்டார்கள்.

யார் யார் தலைமறைவாய் இருக்கிறார்கள் என்று தலைப்பிட்டு ஸ்டோரி.பெரும்பாலும் திமுகவினர்.அதில் ஒன்றிரண்டு இதர துரைகளைச் சேர்ந்தவர்களையும் சேர்த்திருக்கிறார்கள்.

மக்களை நாசூக்காக ஏமாற்றுவதில் ஜூ.வி.யா கொக்கா..? 

மிஸ்டர் கழுகு பகுதியில் தா.பா.பிறந்த நாள் செய்தி,சைதை துரைசாமிக்கு ஆதரவான ஒரு செய்தி(நடுநிலை போல் தோற்றமளிக்கிறது),பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு பாலோ அப்,அடுத்த தலைமைச் செயலாளர் யார் ..? ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் ஒரு சிறு பிட் என கலந்து கட்டி எழுதியுள்ளார்கள்.

தாண்டவம் பிரச்சனை,பன்னீர் செல்வம் வீட்டில் நடந்த பஞ்சாயத்து,ஆந்திர மேட்டர்,.சிதம்பரம் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இடிப்பு ஆகியன பதிவாகி உள்ளது.

எனது இந்தியா,கழுகார் பதில்கள்,மயக்கம் என்ன ஆகிய தொடர்கள் வழக்கம் போல வெளிவந்துள்ளது.(அவரவர் மனநிலைக்கு ஏற்ப,விருப்பத்திற்கு ஏற்பஇதை எடுத்துக் கொள்லலாம்)

இதற்கு முன்பு காசு வாங்கிக் கொண்டு நிறுவனங்களின் விளம்பரத்தை செய்தியைப் போல் வெளியிட்ட ஜூ.வி.இப்பொழுது தனது சுட்டி விகடன் விளம்பரத்தைச் செய்தியைப் போல் 2 பக்கங்கள் ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டு வருகிறது.காசு கொடுத்து வாங்குபவன் இதையெல்லாம் கேள்வி கேட்கவா போகிறான் என்னும் நினைப்பில்.

அப்புறம் அவ்வளவு தானா..?

ஆசிரியர் குழு  பெயர் கூட இல்லாமல்  இதழ் வெளிவரும்.ஆனால் வைகோ புகழாரச் செய்தியோ அவருக்கு சொறிந்து விடும் செய்தியோ இல்லாமல் இதழ் வெளிவருமா என்ன..?

வழக்கம் போல் வைகோவுக்கு 2 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.தா.பா.இதழில் வைகோ பாய்ந்ததை வெளியிட்டுள்ளனர்.

ஜூவி.சராசரிக்கும் கீழ் இருக்கிறது.


மொத்தத்தில் அனைத்து இதழ்களும் அமைச்சர்கள் மாற்றம் என்று தான் பலமுறை கிசுகிசுக்களை வெளியிட்டு வந்தனர்,ஆனால் அது நடக்கவில்லை.எதிர்பாராவிதமாக   ஐஏஎஸ் அதிகாரிகள் பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளனர்.இது  குறித்து இதற்கு முன் யாரும் கோடிட்டுக் காட்டவில்லை.அப்புறம் என்ன புலனாய்வு..?

ஆனால் இனிமேல் இதற்குப் பின்னணி என்று அவரவர்க்குத் தோன்றிய கதைகளையும் விருப்பங்களையும் எழுத்தில் போட்டி போட்டுப் பதிவு செய்வர்.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் அனைத்து இதழ்களும் சொல்லி வைத்தாற் போல்,நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள காவிரி பிரச்சனையை மருந்துக்கும் பதிவு செய்யவில்லை.இதழ்கள் நம் மக்கள் மீது காட்டும் அக்கறை இது தான்.

மக்களை ஏமாற்றுவதில் விஞ்சி நிற்பது யார் என்ற போட்டியில் ஒவ்வொரு வாரமும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வாசகர்கள் எப்பொழுதும் ஏமாறுவது என்னவோ உண்மை...!