Friday 29 August 2014

போராடும் விகடன் தொழிலாளர்கள் ; புலம்பும் தினகரன் பத்திரிகையாளர்கள்...!


சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலை. அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கு எதிரே உள்ள 'சபாரி அசைவ உணவகம்.' குளிர் பதனம் செய்யப்பட்ட முதல் மாடி.
ஊடகவியலாளர்கள் பார்த்தசாரதி,பெஞ்சமின்,அன்பரசு மூவரும் சந்திப்பு.
இங்கே என்ன நல்லா இருக்கும்..? பார்த்தசாரதி முதலில் பேச்சினை ஆரம்பித்தார்.

 பெஞ்சமின்,ம். பிரியாணி வித்தியாசமான சுவையில் இருக்கும்.விலை தான் இப்ப கொஞ்சம் அதிகரிச்சுட்டாங்க.ஆனா அதையே சாப்பிடலாம். எனக்கு மொகல் பிரியாணி. உங்களுக்கு..? என பதில் சொன்னார்.

எனக்கு மீன் பிரியாணி.-இது அன்பரசு

எனக்கு ஹைதராபாத் மட்டன் பிரியாணி என ஆளுக்கொரு உணவை ஆர்டர் செய்து விட்டு அரட்டையை ஆரம்பித்தனர்.




முதலில் அன்பரசு  தான் கச்சேரியைத் தொடங்கினார். "பிரியாணி விக்கிறவன் விலையை கூட்ட யார் கிட்டயும் கேட்க வேண்டியது இல்லை. சுடு தண்ணிய டீ ன்னு சொல்லி விக்குற நாயர் அவன் நினைச்ச விலைக்கு விக்கலாம். விளம்பரம் பாதி,கிசுகிசு கொஞ்சம்,செய்தி மிச்சம்,காசுக்கு கொஞ்சம் செய்தி அப்படின்னு பக்கத்தை நிரப்பி விக்குற பத்திரிகை முதலாளி தான் நினைச்ச விலையை நிர்ணயிக்கலாம். ஆனா இந்த பாழாய்ப்போன பத்திரிகை காரனுக்கு சம்பளம் எவன் கூட்டிக் கொடுக்குறான்..? நம்பளுக்கும் போராடத் துப்பில்ல. இதைத் தெரிஞ்சுக்கிட்ட முதலாளி ஏறி மிதிக்கிறான்.மஜித்தியா கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பா எதும் முன்னேற்றம் இருக்கா பாஸ்..? நம்ம ஆபிஸூல அதைப்பத்தி ஒரு பயலும் மூச்சுக் கூட விட மாட்டிக்கிறான்."

 சிரித்த படியே பதில் சொல்லத் தொடங்கினார் பெஞ்சமின்."எங்க ஆபிசுல ரெண்டுங்கெட்டானா இருக்கு.சில நிறுவனங்கள் கண் துடைப்புக்காகவும்,சிலர் உண்மையாகவும்,இதனை அறிமுகப்ப‌டுத்தி இருக்காங்க.'தினமலர்' நிர்வாக‌த்துல  3 புகைப்படக் காரர்கள் உட்பட 6 பேருக்கு இந்தக் கமிட்டி நிர்ணயித்த சம்பளம் கொடுக்க வாய்ப்பில்லை அப்படின்னு சொல்லி  வேலையை விட்டு  நீக்கியிருக்காங்க.ஆனால் இது எதைப் பத்தியும் கவலைப்படாமல் அந்த கமிட்டி அறிக்கையை பொருட்டாகவே மதிக்காத நிறுவனம் ஒன்னு உண்டுன்னா அது 'தினகரன்' நாளிதழ்  மட்டும் தான்.

majithiya committee


பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து எந்த எண்ணமும் நிர்வாகத்துக்கு இல்லை.அது மட்டுமல்ல வழக்கமா இந்த கால கட்டத்தில் உயர்த்த வேண்டிய சம்பளத்தையும் உயர்த்தலை. அதே நிர்வாகம் நடத்துற சன் குழுமத்தில் கண் துடைப்பா இதை அறிமுகப்ப‌டுத்தி இருக்காங்க. அதனால் அங்க ஊழியர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு. ஆனால் யாரும் பகிரங்கமாக வெளிப்படுத்தலை.தினகரனிலோ இதைக் குறித்து ஒரு சத்தத்தையும் காணோம். நாட்டில் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முதலாளிக்கு, அங்கு வேலை பார்க்குற பத்திரிகையாளர்களுக்கு இந்தச் சம்பளத்தைக் கொடுக்க துளியும் மனமில்லை.
எல்லா ஊழியர்களும் அவரை எதிரே இருக்குற டீக்கடையில் பேசும் பொழுது திட்டிக்கிட்டிருக்காங்க. அதைத்தாண்டி ஒரு சத்தம் இல்லை."

பார்த்தசாரதி குறுக்கிட்டார். "நீங்க சொல்ற‌தைப் பார்த்தால் கேடி சகோதரர்கள் ஒருவேளை கைது செய்யப்ப‌ட்டால் தினகரனில் வேலை செய்யும் ஊழியர்கள் தான் அதிகம் மகிழ்ச்சியடைவாங்கன்னு சொல்லு."

"ஆமாம் கண்டிப்பா " என்றனர் மற்ற இருவரும்.

பார்த்தசாரதி-"இந்த தடவையாவது கேடி க்கள் கைது ஆவாஙகளா இல்லையா..? தினமும் தினமணிக்காரனும்,டெக்கான் காரனும்,மாலை முரசுக்காரனும்  தான் தொடர்ச்சியா செய்தி போட்டுக்கிட்டிருக்கானுங்க".






பெஞ்சமின்-" கைது பண்ணி ஜெயிலுக்குப் போனால் தான் உறுதி.பார்ப்போம்.மாறனுக்கு எதிரா செய்தி போடுற 'டெக்கான்' காரனுக்கு என்னமோ யோக்கியன் அப்படின்னு நினைப்பு போல..? "

"ஏன்.?அந்தாளு மேல எதும் பஞ்சாயத்து இருக்கா..? " பார்த்தசாரதி படபடத்தார்.
பின்னே..? டெக்கான் எடிட்டர் ஆர்.மோகன் சில வருடங்களுக்கு முன்னாடி இங்கிலீஷ் ஹிந்துல வேலை பார்த்தார்.அப்ப அவர் தான் விளையாட்டு நிருபர். கிரிக்கெட்டில் எல்லா ஜாம்பவான்களும் இவருக்குத் தெரியும். திடீரென்று பார்த்தால் இவருக்கு மேட்ச் பிக்சிங்கில் தொடர்பு இருக்குன்னு செய்தி அடிபட்டுச்சு.(இணைப்பு) எப்படியோ லாபி பண்ணி கையைப் பிடிச்சு,காலைப்பிடிச்சு தப்பிச்சுட்டார். அது வரைக்குக் இது எதும் தெரியாத மாதிரி இருந்த ஹிந்து நிர்வாகம்,தன் செய்தியாளர்கள் பிடிபட்ட உடனே பண்ணுற வேலையை பண்ணுச்சு."

"என்ன பண்ணுச்சு..?" பார்த்தசாரதி ஆர்வம் குறையாமல் குறுக்கே கேள்வியைப் போட்டார்.

பெஞ்சமின்  "வேறென்ன..? பணி நீக்கம் தான்.ஊரெல்லாம் எவன் என்ன‌ பண்ணுறான்னு செய்திபோடுற நிர்வாகத்துக்கு இவர் மேட்ச் பிக்சிங் பண்ணுறது அப்பத்தான் தெரியுமா என்ன..?


அவர் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் அன்பரசு ."அதுக்குப் பிறகு தான் ஆர்.மோகன் டெக்கான் ல ஜாயின் பண்ணி இப்ப எடிட்டர் ஆயிருக்காரா..?"
பதில் சொல்ல ஆரம்பித்தார் பெஞ்சமின் ."ஆமாம்.டெக்கான் காரன் அப்ப சொந்தமா ஒரு கிரிக்கெட் டீம் வைத்திருந்தான்.(இணைப்பு)அவனும் இப்படி ஒரு  'யோக்கிய சிகாமணி' தான் தனக்குத் தேவைன்னு இவரை வேலைக்குச் சேர்த்தான். பத்திரிகை வேலை வாங்குன மாதிரியும் ஆச்சு. கிரிக்கெட் டீம் ஜெயிக்குறதுக்கு உள்ளடி வேலை பார்த்த மாதிரியும் ஆச்சுது அப்படின்னு நினைச்சு வேலைக்குச் சேர்த்தான். ஆனால் கொஞ்ச நாள் ல அந்த டீமை கேடி பிரதர்ஸூக்கு வித்தது தனிக்கதை ஆனால் இவர் என்னவோ நேர்மையாளர் மாதிரி கேடி பிரதர்ஸூக்கு எதிரா செய்தி போடுறார்."

"எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்."பார்த்தசாரதி சொல்லி முடிக்கும் முன் அனைவரும் ஆர்டர் செய்த பிரியாணி வந்து சேர்ந்தது.சாப்பிட ஆரம்பித்த படியே அடுத்த செய்திக்குத் தாவினர்.

அப்படியே பேச்சு  தினகரன் முதலாளிக்கு வேண்டப்பட்ட‌ நிறுவனமான விகடன் குழுமத்துக்குத் திரும்பியது.


"விகடனில் என்ன நடக்குதுப்பா.? ''-பெஞ்சமின்

 அன்பரசு "ம்ம்.அங்க செய்திக்கா பஞ்சம்.? அங்கேயும் தினகரன் கூத்து தான்.விகடன் முதலாளி சீனிவாசன் இதுக்கு முன்னாடி,தேர்தலின் பொழுது மோடிக்கு ஆதரவா தமிழ்நாடு முழுவதும் அலை இருப்பது போல தனது பத்திரிகையில் செயற்கையான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வாசகர்க‌ளை ஏமாத்தினாரு.

ஆனா அவங்க ஜு.வீ. படிச்சதோட சரி. இவங்க சொன்னதை நம்பலை அப்படின்னு நாடாளுமன்றத் தேர்தல் முடிவு காட்டிடுச்சு. அப்ப வாசகர்களுக்கு நாமம் சாத்தின முதலாளி இப்ப  தன் கிட்ட வேலை பார்த்த எல்லாருக்கும்  ஊதிய உயர்வில் நாமம் சாத்திட்டார்."

"அவரு அய்யரு,அவர் எப்படி நாமம் சாத்துவார்..? " என சிரித்துக் கொண்டே கேள்வி எழுப்பினார் பார்த்தசாரதி.

அவருக்குப் பதில் சொன்ன கண்ணபிரான், "யோவ் நான் சொல்ற நாமம் வேறய்யா..? நீ வேற இடையில..உங்க பங்காளிச் சண்டையை இங்க காட்டிக்கிட்டு இருக்கிற" என்றார் சிரித்த படி.

" சரி.சரி. விஷயத்தைச் சொல்லுங்க." -பார்த்தசாரதி.

" மஜீத்தியா போர்டு ஊதிய உயர்வு பரிந்துரைகளை நம்ம நிர்வாகம் அமுல்படுத்தும் னு என்று விகடன் பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்துக்கிட்டிருந்தாங்க. நிர்வாகமும் அவங்க எதிர்பார்ப்பை அதிகப்ப‌டுத்துற மாதிரி எல்லாருடைய வங்கிக் கண‌க்கிலும் ரூபாய் 10 ஆயிரம் முன் பணம் போட்டுச்சு. இதைப் பார்த்த பத்திரிகையாளர்கள் இன்னும் நம்பிக்கை ஆனாங்க. ஊதிய உயர்வு அரியர்ஸ் கிடைச்சா,அத வச்சு இருக்குற கொஞ்ச நஞ்ச கடனை அடைச்சிடலாமுன்னு மனக்கோட்டை கட்டி வச்சுருந்தாங்க.விரைவில் எதிர்பாருங்கன்னு சொல்ற மாதிரி தொடர்ச்சியா இரண்டு மின்னஞ்சல் வேற நிர்வாகம் தரப்பில் இருந்து ஊழியர்களுக்கு வந்துசுச்சு."

"கடைசியில என்னாச்சுப்பா..? நிர்வாகம் மாதிரி நீங்களும் சஸ்பென்ஸ் வைக்காதீங்க."பெஞ்சமின் எரிச்சல் பட்டார்.

" ஊதிய உயர்வு பரிந்துரைகளை அமல் படுத்தியதாச் சொன்ன நிர்வாகம் எல்லாருடைய ஆசையிலும்  மண் அள்ளிப் போட்டுச்சு.
அதாவது இதுவரை அவங்க பெர்பார்மன்ஸ் கணக்குல வாங்குன தொகையை இப்ப ஊதிய உயர்வா கணக்கு காட்டிடுச்சு.அதாவது சம்பளம் ஏறத்தாழ அதே தான்.இதுவரை ஸ்டேட்மென்ட்ல பெர்மார்மன்ஸ் அப்படிங்குற வகையில  வந்த தொகை இப்ப‌ ஊதிய உயர்வா  மாறிடுச்சு.சில ஆயிரம் ஊதிய உயர்வை எதிர்பார்த்த பத்திரிகையாளர்களுக்கு இப்ப வெறும் நூறோ இருநூறோ தான் அதிகம் கிடைச்சிருக்கு.

இதுல்ல இன்னொரு கொடுமையும் இருக்கு.உலகத்துலேயே சம்பளத்தை விட அதிகமா பெர்மார்மன்ஸ் கொடுக்குற மாதிரி கொடுமையைச் செய்த நிர்வாகம் இனி அதைக் கொடுக்காது."

"என்னய்யா கொடுமை இது..?" பார்த்தசாரதி ஆவேசப்பட்டார்.

"ஊதிய உயர்வு ங்கிற‌ என்ற பெயரில் இந்த கண் துடைப்பினால்,இதுவரைக்கும் அடிமாட்டு சம்பளம் வாங்கின, புதுசா வேலைக்குச் சேர்ந்த ஒன்றிரண்டு பேருக்கு மட்டும் தான் பலன்."அன்பரசு ஆதங்கத்துடன் முடித்தார்.

அமைதியாய் இருந்த பெஞ்சமின் இப்பொழுது குறுக்கிட்டார்.

" ரா.கண்ணன் ,திருமாவேலன் கிட்டச் சொல்லியிருந்தா ஏதாவது நடந்திருக்கலாம் இல்லையா..?அவங்களுக்குத் தெரியாமலா இருக்கும்.? "

"என்ன கொடுமைனா அவங்களுக்கும் சம்பளம் கூட்டலையாம்.அவங்களுக்கும் இதே கதி தான்.அவங்க தனக்கு கீழே வேலை பார்க்குற பத்திரிகையாளர்கள் முகத்தைப் பார்க்க, இவங்க அவங்க முகத்தைப் பார்க்க அப்படின்னு தான் இருக்காங்களே தவிர, யாரும் முனங்கக் கூட மாட்டிக்கிறாங்க. இதுவரை ஒன்னும் நடக்கலை.இனியும் நடக்காது ."

பார்த்தசாரதி எரிச்சலுடன் அடுத்த கேள்வியைக் கேட்டார்."ஊர் உலகத்தில் நடக்கும் அநியாயத்தை எதிர்த்து ஓங்கி ஓங்கி குரல் கொடுக்கும் விகடன் பத்திரிகையாளர்களுக்கே இந்த நிலையா..? "

அன்பரசு- " பத்திரிகையாளர்கள் வேண்டுமானால் முதலாளி தங்களுக்கு இழைத்த அநீதிக்கு அடங்கிப் போகலாம். ஆனால்  அங்கே போராட்ட குணம் உள்ளவங்க இல்லைன்னு யார் சொன்னது..? "

விகடன் அலுவலக வாசலில் ஒட்டப்பட்டு,நிர்வாக ஆட்களால் கிழிக்கப்பட்ட சுவரொட்டி

 அங்கே பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் ஊதிய உயர்வு அவங்களோட பிரஸ் ஊழியர்கள் போராடியதால தான் எல்லோருக்கும் எப்பவும் கிடைக்கும். வழக்கம் போல இப்பவும் அவங்க போராடிக்கிட்டிருக்காங்க.ஊரெங்கும் சுவரொட்டி அடித்தும்,கூட்டம் நடத்தியும் பலவகையில் போராட்டம் நடத்துறாங்க. ஆனால் செவிடன் காதுல ஊதுற சங்கா நிர்வாகம்அ தைக் கண்டுக்காத நிர்வாகம்,ஊருல உள்ளவனெல்லாம் சரியில்லைன்னு ஊருக்கு உபதேசம் செய்யுது.

 உலகத்துல இதழியல் தொடர்பா நடக்குற‌ கருத்தரங்கு,விவாதம் எல்லாவற்றிலும் கிளம்பிப் போய் முதல் ஆளா கலந்துக்குற சீனிவாசன் இந்த அயோக்கியத்தனத்தை அங்க தான் கத்துக்கிட்டு வந்திருப்பாரோ..?" என பார்த்தசாரதி கடுப்புடன் பேசினார்.

"இதுக்கு கத்துக்கிட்டு வேற வரணுமாக்கும். முதலாளிகள் ரத்தத்துல ஊறிப்போனது தானே இது..? "என பெஞ்சமின் முடித்து வைத்தார்.

 "விகடன் செய்தி வேற ஒன்னும் இல்லையா..?  "அடுத்த கேள்வியைத் தொடுத்தார் பார்த்தசாரதி.

"விகடன் டைம்பாஸ் பெயரை மாத்திட்டாங்க தெரியுமா..?"  - அன்பரசு.

"அப்படியா ..? "-பெஞ்சமின் ஆச்சரியம் காட்டினார்.

ஆமாம்.இதுக்கு முன்னாடி 'விகடன் டைம்பாஸ்' அப்படின்னு இருந்தது.இப்ப வெறும் 'டைம்பாஸ்' ன்னு மாத்திட்டாங்க.!

விகடன் டைம்பாஸ்

"ஏனாம்..? ஊர்ல உள்ள சின்னப் பசங்க‌ உட்பட எல்லோரையும் வாசகனாக்கி மிகப்பெரிய சீரழிவை உண்டாக்கியாச்சு.இதுல பேரை மாத்துனா என்ன? மாத்தாம போனா என்ன..? "ஹைதராபாத் மட்டன் பிரியாணியைச் சப்புக் கொட்டிய படியே கடுப்பு காட்டினார் பார்த்தசாரதி .


விகடன் டைம்பாஸ்

 டைம்பாஸ்


 "அது ஒன்னுமில்ல. விகடன் டைம்பாஸ் பத்திரிகையால  80 வருடத்திற்கும் மேலான விகடன் பாரம்பரியம் கெட்டுப் போகுதாம்.அதனால விகடன் பெயரை எடுத்துட்டு டைம்பாஸூன்னு மட்டும் வச்சுட்டாங்களாம்.இப்ப பாரம்பரியம் கெட்டுப் போகாமல் காப்பாத்திட்டோமுன்னு நிர்வாகம் ரொம்ப ஹேப்பி " சிரிப்பை அடக்க முடியாமல் பதில் சொன்னார் அன்பரசு.

'விகடன்' பெயர் நீக்கப்பட்ட டைம்பாஸ்

பார்த்தசாரதி இந்த பதிலைக் கேட்டதும் டென்ஷன் ஆகி விட்டார்."விக்குற காசு விகடன் முதலாளியோட வீட்டுக்குத் தானே போகுது..? இல்ல வேற யார் வீட்டுக்கும்  போகுதா..? வண்ணத்திரை,சினிக்கூத்து,அப்படின்னு எத்தனையோ ஆபாசப் பத்திரிகை டைப்ல பத்திரிகைகள் வந்தாலும் அதனால செய்ய முடியாத சீரழிவையும் விற்பனையையும் டைம்பாஸ் செய்து கொண்டிருக்குது. ஒவ்வொரு இதழும் 2 லட்சம் தாண்டி விக்குது. பள்ளிக்கூடப் பசங்களைச் சீரழிப்பதில் டைம்பாஸுக்கு முக்கிய பங்கு இருக்குது.

 மஞ்சள் பத்திரிகை வித்துச் சம்பாதித்தாலும் குடும்பப் பெயர் கெடக்கூடாதுன்னு நினைக்கிறாங்க..என்ன பாரம்பரியமோ..? " - சொல்லிக் கொண்டே பார்த்தசாரதி எச்சிலை ஆஷ்டிரேயில்  காறித் துப்பினார்.


டுத்து டாபிக் நக்கீரன் பற்றித் திரும்பியது. நக்கீரன் என்றவுடன் பெஞ்சமின் ஆர்வத்துடன் பேச்சை ஆரம்பித்தார்.

நக்கீரன் ல‌ எல்லாம் மாத்தியிருக்காங்க பார்த்தியா..?

" ஆமாப்பா அட்டை முதல் அட்டை வரை வண்ணம் மட்டுமல்ல..உயர் ராக தாளிலும் அச்சிட்டிருக்காங்க.எல்லாம் சரி.விலையையும் ரூ.15 ஆக்கிட்டாங்களே ? "அன்பரசு ஆதங்கத்துடன் சொன்னார்.

"இதுக்கு வரவேற்பு எப்படி இருக்காம்.?" - பெஞ்சமின்.

 "நகரங்களில் இந்த மாற்றத்தால் பெரிய பாதிப்பு இல்லைன்னாலும்,கிராமத்தில் விலை ஏற்றம் கடுமையா பாதிச்சிருக்காம்.ஏற்கனவே இருந்த விற்பனை அளவை விட கடுமையா குறைஞ்சிருக்காம்.ஆனால் கண்டிப்பா டெவலப் ஆகுமுன்னு எதிர்பார்க்கிறாங்களாம். தாளை மாத்தி என்ன பிரயோஜனம்.? நாம் எதிர்பார்ப்பது காணாமல் போன நடுநிலைமையும் உண்மையையும் தான்."-பார்த்தசாரதி

விடாமல் தொடர்ந்தார். "இதைப் பார்த்துட்டு இனி மத்த பத்திரிகைகளும் போட்டி போட்டு விலையை 15 ரூபாய் ஆக்குவாங்க.எப்பவும் போல வாசகன் தான் இளிச்சவாயன்."என எரிச்சலைக் கொட்டினார்.


" 'புதிய தலைமுறை'யில் புதுப்புது அர்த்தங்கள்  1000  நிகழ்ச்சி கடந்துடுச்சு பார்த்திங்களா..? "- அன்பரசு
"ஆமாப்பா.உண்மையிலேயே அந்த நிகழ்ச்சியை நடத்துற ஜென்ராம் பாராட்டுக்குரியவர் தான். தனக்குன்னு தனிப்பட்ட‌ கொள்கை வைத்திருந்தாலும் முடிந்த மட்டும் எந்த பக்க சார்பும் இல்லாமல், அனைவருக்கும் வாய்ப்புக் கொடுத்து அதே சமயத்தில் தரமாகவும் திற‌மையுடனும் தொடர்ச்சியாய் நிகழ்ச்சியை நடத்தியதற்கு அவருக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கலாம் தான்.கண்டிப்பா..வேறென்ன..?"  மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தார் பார்த்தசாரதி.

இவர்  பொதுத்துறை முன்னாள் ஊழியர் தானே..? அன்பரசு கேள்வி எழுப்பினார்.

பாராட்டுக்கள் ஜென்ராம்

பெஞ்சமின் உடனே அதனை ஆமோதித்தார்."ஆமாம். மேலும் இவர் ஏற்கனவே குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழிலும் 'எரிதழல்' என்ற பெயரில் பத்தி எழுதியிருக்கார்."

பாராட்டுக்கள் ஜென்ராம்.

"தமிழ் இந்து' செய்தி எதுவும் உண்டா..? சேல்ஸ் எப்படிப்பா இருக்கு..? "
 பார்த்தசாரதியை நோக்கி கேள்வி எழுப்பினார் பெஞ்சமின்.

"பதில் சொல்றதுக்கு முன்னாடி,நெத்திலி கருவாடு பிரை ஒரு பிளேட் சொல்லிக்கறேன் "(இணைப்பு) என சொல்லி விட்டு பார்த்தசாரதி ஆர்டரும் சொன்னார்.

."பேப்பர் வழக்கம் போலத்தான் இருக்குது .விற்பனையும் ஒன்றும் சொல்லிக்கிற மாதிரி இல்ல."

"தினமலருக்கு போட்டியாவாது வந்துச்சா..? "- அன்பரசு எதிர்பார்ப்புடன் கேட்டார்.

"அப்படியெல்லாம் இல்லை. 'தினத்தந்தி','தினகரன்','தினமலர்' இதுக்கு அடுத்த நிலையில் 'தினமணி' இருக்குது.'தி இந்து' 'தினமணி' கூடத்தான் விற்பனையில் போட்டி போட்டுக்கிட்டிருக்குது. "-பார்த்தா.

"நிறைய அறிவுஜீவிகள் வேலை பார்த்துமா இந்த நிலை..?" ஆச்சரியமா,நக்கலா எனத் தெரியாத முகபாவனையில் அன்பரசு கேள்வி எழுப்பினார்.

" ம்ம்ம்ம்.அப்படியா..? அவங்களை அறிவுஜீவின்னு சொல்ற நீயே ஆபிசுல கிடைக்குற ஓசி பேப்பரையும் இணையத்துலயும்  தான் படிக்குற...? அப்புறம்  எப்பத்தான் முதலிடம் வர்ற‌து..? " -பெஞ்சமின்.

" 'தினமணி' நாளிதழில் எப்பவாவது தலையங்கம் பக்கத்துல,அத‌ன் துணை ஆசிரியர்களில் ஒருவர் ஒரு கட்டுரை எழுதுவார். அது போக பல்வேறு துறை  தொடர்பா அத்துறையின் நிபுணர்கள் அல்லது அதில் பரிச்சயம் உள்ளவங்க கட்டுரை எழுதுவாங்க.அது வெளியாகும்.அதில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் படிப்பதை தவிர்க்க முடியாது.


ஆனா 'தி இந்து'வில அப்படியா நடக்குது.?

அங்க இருக்குற எல்லா ரிப்போர்ட்டருக்கும் தெரியுதோ இல்லையோ அரைப்பக்கத்துக்கு குறைந்தது எதுவும் எழுதுறது இல்ல.இந்த நிலையில் எப்படி தினகரன்,தினத்தந்தி கூட போட்டி போட முடியுமுன்னு சொல்லுங்க..? "என்று சொல்லி விட்டுச் சிரித்தார் பார்த்தசாரதி .

"அங்க மஜீத்தியா போர்டு படி சம்பள உயர்வு கொடுத்துட்டாஙகளா..?" - ஆர்வத்துடன் கேட்டார் பெஞ்சமின்.

பிற தமிழ் நாளிதழ்களைக்காட்டிலும் அங்கு எல்லோருக்கும் சம்பளம் கொஞ்சம் அதிகம் தானே..?என அன்பரசு பதிலைச் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் பார்த்தசாரதி,"எல்லோருக்கும் நல்ல சம்பளம் அப்படின்னு யாரு சொன்னா..?சிலருக்குத் தான் அப்படி.களந்தை பீர் முகம்மது அப்படின்னு ஒருத்தர் வேலை பார்க்கிறார்.திருநெல்வேலி காரர். இலக்கியவாதியாக அறியப்பட்டவர். சிற்றிதழான காலச்சுவடு ஆலோசனைக் குழுவிலும் இருந்துருக்கார். இவரோட நேர்காணல் ஒன்னுகூட The Hindu   கூட வந்துருக்கு

சில நூல்களும் எழுதியிருக்கார்.அவர் எழுதிய கட்டுரை தி இந்து நாளிதழிலும் இப்பொழுது வந்திருக்கு.ஆனா அப்படிப்பட்டவருக்கு இங்க புரூப் ரீடர் வேலை கொடுத்துருக்காங்க.சம்பளமும் 18 ஆயிரத்துக்கும் குறைவு தான்.

தகுதியற்ற சிலருக்கு லட்சக்கணக்கில் சம்பளமும், நல்ல வேலையும் கிடைக்குது. ஆனா இவருக்கு சில ஆயிரம் சம்பளமும் புரூப் ரீடர் வேலையும் தான்.இதை எங்க போய்ச் சொல்ல..? "பார்த்தசாரதி ஆதங்கப்ப‌ட்டார்.

அன்பரசு ஆவேசப்பட்டார்."நம்ம சமஸ் அண்னன் கிட்டச் சொல்லு,அவர் தான் தமிழ் ஆட்டோக்காரன் ஏமாத்துறான்,தமிழ் ஓட்டல் காரன் பிராடுத்தனம் பண்றான்,தமிழ் அரசியல்வாதி மட்டும் ஊழல் பண்ணி நம்மளை அசிங்கப்படுத்துறான்னு சொல்லிக் கட்டுரை எழுதினார். 'மற்றவங்க' நிலையையும் களந்தை பீர் முகம்மது நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லு.

தமிழ் ஹிந்து என்ன விலை,The Hindu என்ன விலை..? பக்கங்கள் எத்தனை ? ரெண்டையும் ஒப்பிட்டு பார்க்கச் சொல்லு.'தி இந்து' தரம் என்ன..? தமிழ் இந்து' விலையை என்.ராம் கிட்டச் சொல்லிக் குறைக்கச் சொல்லு."

பார்த்தசாரதி மீண்டும் ஆரம்பித்தார்.

"இப்பக்கூட பாருங்க, நம்ம மன்னார்குடி சமஸ் அண்னன் 'வண‌க்கம் வைகுண்டராஜன்' அப்படின்னு ஒரு கட்டுரை எழுதியிருக்கார். அதுக்கு முகநூலில் ஒரே புகழாரம். உடனே சமஸ் தன்னோட முகநூலில் தனக்கு தாக்குதல்கள் வருது,அவதூறு வருது அப்படி இப்படின்னு கொந்தளிச்சிருந்தார்.சரி வைகுண்டராஜனை அம்பலப்படுத்தி படு பயங்கரமா எழுதியிருக்காருன்னு நாமளும் தேடிப்போய் படிச்சுப் பார்த்தால் அந்தக் கட்டுரையில் அப்படி அவர் என்ன புதுசா எழுதியிருக்காருன்னு தெரியலை.?என்றார் பார்த்தா.

" தி இந்து'  குழுமத்தில் இருந்து சிறுவருக்கான‌  ஒரு தனி பத்திரிகை விரைவில் வெளிவரப்போகுது ன்னு சொல்றாங்க.."-என்றார்அன்பரசு.

'தினமணியில் சம்பள வாரியம் பரிந்துரையை அமல்படுத்திட்டாங்களா..? "இது அன்பரசு.

"கொஞ்ச நாளைக்கு முன்னாடி 'தமிழ் இந்து' ஆரம்பிக்குறப்ப இங்கிருந்து அங்க யாரும் போகாமல் தடுக்குறதுக்காக எல்லோருக்கும் சம்பளம் கூடப் போட்டாங்க.இப்ப மஜீதியா குழு பரிந்துரைப் படி ஏற்படும் ஊதிய உயர்வை அதில் அட்ஜஸ்ட் பண்ணிட்டாங்க"என்றார்  பார்த்தசாரதி.


news 7 tamil
'பூவுலகின் நண்பர்கள்' என்.ஜி.ஓ.அமைப்பைச் சேர்ந்த  சுந்தர்ராஜன் என்பவர் வைகுண்டராஜனின் தொலைக்காட்சி அலுவலகத்தில்

 " வைகுண்டராஜன் தொடங்குற டிவி எப்ப ஆரம்பிக்கப்போறாங்க..? "பார்த்தசாரதி கேட்டார்.

"விரைவில் ஆரம்பிக்கப் போறாங்கன்னு சொல்றாங்க.அங்க அதிகம் சம்பளம் கொடுக்குறாங்கன்னு நிறையப்பேரு அங்க போய்க்கிட்டிருக்காங்க. அசிப் ங்கிற பையன் கூட புதிய தலைமுறையில் இருந்து போய்ட்டாரு."

" ஓ.கேள்விப்பட்டேன்.திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் நாகநாதன் பையன் மருத்துவர் எழிலன்,அப்புற‌ம் இலங்கையைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.,பூவுலகின் நண்பர்கள் என்.ஜி.ஓ.அமைப்பில் இருந்து ஒருத்தர் என  நிறையப்பேரு அங்க உள்ள செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தியிருக்காங்க. வேலைகள் ஜரூரா போயிட்டு இருக்கு."அன்பரசு தான் கேள்விப்பட்ட தகவலைச் சொல்லி முடித்தார் அன்பரசு.

"ராஜேஷ் சுந்தரம் என்பவர் தான் இப்ப தலைமைப் பீடத்தில் இருக்கார்.இதுக்கு முன்னாடி இவர் 'ஹெட்லைன்ஸ் டுடே' நியூஸ் சேனலில் வேலை பார்த்தவரு.கொஞ்சம் ஈழத்தமிழர்  விஷயத்தில் அக்கறை உள்ள‌வரு." சொல்லி விட்டு பார்த்தசாரதி சையைக் கழுவப் போனார்.

" ம்ம்.புதிய தலைமுறைக்கும் சன் நியூஸூக்கும்  ஒரு போட்டி காத்துக்கிட்டிருக்குன்னு சொல்லு."

"என்னத்த.ஒருத்தர் ஏரியை ஆக்கிரமித்து கல்வி வித்துக்கிட்டிருக்கார்.(இணைப்பு) இன்னொருத்தர் கடல் மண்ணைத் திருடி ஏற்றுமதி பண்னிக்கிட்டிருக்கார். (இணைப்பு)இன்னொருத்தர் பதவியை முறைகேடாப் பயன்படுத்தி சம்பாதிச்ச காசுல டிவி சாம்ராஜ்யம் நடத்திக்கிட்டிருக்கார். இவனுங்க தங்களைக் காப்பாத்திக்க சேனல் ஆரம்பிக்குறானுங்க. இதுல எவன் டிவி ஜெயிச்சா என்ன..? முழு உண்மை யார் பேசப்போறா சொல்லுங்க..? இவனுங்க கிட்ட இருந்து உண்மையோட குரல் வளை நெரியாம நாம தான் பார்த்துக்கணும்."

சொல்லி விட்டு மற்ற இருவரும் கை கழுவச் சென்றனர்.

"பாய் மூணு டீ கொடுங்க."பார்த்தசாரதி ஆர்டர் செய்தார்.

"குமுதம் நிறைய மாத்தியிருக்காங்களாம்.பார்த்தியா..?" -அன்பரசு




பெஞ்சமின், "நான் போன இஷ்யூ படிச்சேன்.ஆனந்த விகடனில் தொடர் எழுதுற பிரியா தம்பி அதுல ஜோதிகா ரீ என்ட்ரி பத்தி எழுதியிருக்காங்க.

"ம்ம்.வேறென்ன ?" சுவாரசியம் காட்டாமல்  அடுத்த கேள்வி கேட்டார் பார்த்தசாரதி.

"குமுதம் குழும‌ஆசிரியர்  கோசல்ராமிடம் இருந்து,குமுதம் அதிகாரம் முழுக்க இப்ப அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராம‌னிடம் திரும்பவும் போயிடுச்சாம்."மற்ற இருவரும் அரசல் புரசலாய்  அறிந்த தகவலை சொன்னார்அன்பரசு.


பிரியா கல்யாணராமன்


"அப்படின்னா குழும ஆசிரியர் என்று சொல்லப்ப‌ட்ட கோசல்ராம் இப்ப என்ன பண்ணுறார்..?" ஆச்சரியத்துடன் கேட்டார் பார்த்தசாரதி .

" ம்.இப்பொழுதைக்கு குமுதம் ரிப்போர்ட்டர் பார்த்துக்கிட்டிருக்கார்.அவரும் குபேந்திரனும் மட்டும் வெளிய டீக்கடைக்குப் போறாங்க.ஆனால் அதுவும் எத்தனை நாளைக்குன்னு தெரியலை.எப்பவும் எதுவும் நடக்குதுன்னு தான் சொல்றாங்க.கோசலிடம் இருந்த பழைய தொலைபேசி எண்ணையும் நிர்வாக‌ம் பிடுங்கிடுச்சுன்னு சொல்றாங்க.

" அவருக்கும் வரதராஜ‌னுக்கும் என்ன தான் பிரச்சனை ..? "

சரியாத் தெரியலை.ஆனால் காதுக்கு வர்ற விஷயங்கள் 'வேற மாதிரி' இருக்குது. உறுதிப்படுத்தியதும் சொல்ற தகுதியில் இருந்தா சொல்றேன்.

பிரகாஷ் என்ற பிரியா கல்யாணராமன் செய்யுற மாற்றத்தினால குமுதம்  விற்பனை எதுவும் அதிகரிக்குமா என்ன..?

குமுதத்தின் புதிய பகுதிகளும் செய்யப்பட்ட சில மாற்றங்களிலும் வாசகர்களை இழுக்கும் முயற்சி தெரியுது.இதனால ரீடர்ஸ் அதிகமாகலாம்.ஆனந்த விகடன் விற்பனையை கிட்டத்தட்ட நெருக்கி குமுதம் கொஞ்ச நாளா வந்துக்கிட்டிருக்கு.

.குமுதத்தில் இப்ப ஆரம்பிச்சிருக்கிற சிவ கார்த்திகேயன் தொடர் அதிக வரவேற்பை பெறலாம்.மேலும் ஆனந்த  விகடனில் புதுசா வந்துக்கிட்டிருக்குற இரண்டு தொடர்களுக்கும் மிகக் குறுகிய வட்டத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இருந்தாலும்,பரவலாக பொதுவான வாசகர்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்பது தான் மார்க்கெட்டிங் துறையின் கணிப்பு. அதனால் இந்த இடைவெளியில் குமுதம்  விற்பனை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.என சொல்லியபடி பெஞ்சமின் பில்லுக்கு பணம் செலுத்தினார்.

ங்கிருந்து கிளம்பும் பொழுது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர்,நான் ஒரு தகவல் சொல்றேன்.கேட்டுக்கோங்க என்றவுடன் ஆச்சரியத்துடன் அதிர்ந்தனர்.

அவர் சிரித்த படியே சொல்ல ஆரம்பித்தார்."விகடன் தன்னோட ஊழியர்கள் வீட்டில் இருந்து, அலுவலகம் வரும் பொழுது,சாலையில் ஒட்டப்பட்டிருக்கும் விகடன் இதழ்கள் தொடர்பான‌ சுவரொட்டி சரியாக ஒட்டப்பட்டுள்ள‌தா..? எந்தெந்த பகுதியில் ஒட்ட வில்லை..? ஒட்டியது கிழிந்து விட்டதா..? மாடு தின்று விட்டதா..? மழையில் கிழிந்து விட்டதா..? என்பன போன்ற விபரங்களை எல்லாம் பார்த்து, குறிப்பெடுத்தும்,செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டும் வரச் சொல்லுகிற‌தாம்.

இதுவெல்லாமா நம்முடைய வேலை ? என அவங்க டென்ஷன் ஆகிக் கிட்டிருக்காங்க.."

இந்தச் செய்தியைச் சொல்லி முடித்ததும் அவரை மூவரும் ஒரு மாதிரியாகப் பார்க்க அவர் அமைதியாய் மீண்டும் சாப்பிடத் தொடங்கினர்.சபை கலைந்தது.

Saturday 23 August 2014

இன்று நக்கீரன் காமராஜ் ; நாளை ரிப்போர்ட்டர் வரதராஜன்..!

அன்று காவல்துறையின் பிடியில் வரதராஜன்;ஆறுதல் கூறும் கோசல் ராம்.
(அன்று வரதராஜனுக்கு ஆறுதல் கூறிய கோசல்ராம், இன்று வரதராஜனால் பிறர் அவருக்கு யாராவது ஆறுதல் கூற வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்.)

டந்த 17 நாட்களுக்கு முன் வெளியான ஜூனியர் விகடனில் கவர் ஸ்டோரி ஒன்று வெளியிட்டிருந்தார்கள்.அது இது தான்.

 ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்ப‌ட்டு மரண‌மடைந்த சாதிக் பாட்சா மனைவி எழுதிய கடிதம் தொடர்பானது. சாதிக் பாட்சாவுக்குப் பிறகு அவர் மனைவி கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராகப் பொறுப்பு வகிக்கிறார் என்றும், நிறுவனத்திலிருந்து மட்டுமல்ல,தொடர்புடைய அனைத்தில் இருந்தும் விலகுவதற்கு குறிப்பிட்ட தொகையை கேட்டு கோரிக்கை வைத்ததாகவும்,அதனை ஏற்றுக் கொண்ட ஆ.ராசா மற்றும் அவர் தொடர்புடையவர்கள் இப்பொழுது வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதாக‌வும் அதனால் கோபமான மனைவி ரேகா பானு இப்பொழுது கம்பெனிகள் சட்ட வாரியம், மற்றும் இதர இயக்குனர்கள் அனைவருக்கும்  கடிதம் எழுதியிருப்பதாகவும் விரைவில் இப்பிரச்சனை பூதாகரமாய் வெடிப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் பல சிக்கல்கள் வெடிக்கும் எனவும் கழுகார் பகுதியில் எழுதப்பட்டிருந்தது.


 ஜு.வி. வாரமிருமுறை இதழ் வெளியான 17 நாட்களுக்குப் பிறகு நேற்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டரில் அந்தக் கட்டுரையை அப்படியே தழுவி,சுருக்கியும் திருத்தியும் காப்பியடித்து ஒரு செய்திப் பதிவு இன்று வெளியாகியிருக்கிறது.

அது இது தான்.


ஜூனியர் விகடனை காப்பி அடித்து தான் துப்பறிந்து கண்டுபிடித்து எழுதியது போல 'குமுதம் ரிப்போர்ட்டர்' எழுதுவது குறித்து நாம் விமர்சிக்க ஒன்றும் இல்லை.ஆனால் 'குமுதம் ரிப்போர்ட்டர்' வாரமிருமுறை இதழ்  புதிதாய் எழுதிய விஷயங்கள் குறித்து நாம் பேச‌ செய்தி இருக்கிறது.






ஆ.ராசாவும்,நக்கீரன் இணையாசிரியர் ஆர்.காமராஜூம் பஞ்சாயத்து நடத்தியதாகவும் அதில் ஒப்புக் கொண்ட படி பணம் ரூ.50 கோடியைக் கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தான் குமுதம் ரிப்போர்ட்டரின் புதிய குற்றச்சாட்டு.

மேலும் இந்த பஞ்சாயத்தில் அந்த நிறுவனத்தின் இயக்குனரான ஆ.ராசா,.காமராஜ்,இதர அனைத்து இயக்குனர்கள்,மற்றும் சதீஷ்,ரமேஷ்,சுரேஷ்,ராம்கணேஷ் ஆகியோர் ஈடுபட்டதாகவும் எழுதியிருக்கிறது.இதனை முன்னிலைப்படுத்தித் தான் இந்த செய்திப்பதிவே வெளியிடப்பட்டுள்ள‌து.அதனையே தலைப்பாக வைத்து இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

மறைந்த சாதிக் பாட்சா மனைவி இவர்கள் இருவர் மீதும் பகிரங்கமாய் குமுதம் ரிப்போர்ட்டரில் எந்தக் குற்றச்சாட்டும் தெரிவிக்க‌வில்லை.இது தொடர்பாய் எந்த அமைப்பிலும் புகார் தெரிவிக்கவும் இல்லை.முதல் முதலாய் 'குமுதம் ரிப்போர்ட்டர்' தான் இந்தப் பிரச்சனையில் இந்த இருவர் மீதும் பகிரங்கமாய் குற்றம் சாட்டி அவர்களை தலைப்பு வைத்து அவர்களின் படங்களை வெளியிட்டுச் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்திப்பதிவில் நமக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

1) ரூ.50 கோடி தருவதாக ஆ.ராசாவும்,காமராஜூம் நடத்திய பஞ்சாயத்து எங்கு,எந்த நாளில்  நடைபெற்றது..? இவர்களுடன் கலந்து கொண்டவர்கள் என்று சிலரை எழுதும் குமுதம் ரிப்போர்ட்டர் இதை ஏன் எழுதவில்லை..?ரூ.50 கோடி என்று எழுதுவ‌தற்கு என்ன ஆதாரம்..?

2)ஆ.ராசாவும் காமராஜும் பஞ்சாயத்து பேசினார்கள் என்பது தான் ரிப்போர்ட்டரின் குற்ற‌ச்சாட்டு,அதனை முன் வைத்துத் தான் இந்த கவர் ஸ்டோரியே வெளியிடபப்ட்டிருக்கிறது. இது தொடர்பாய்,இருவருக்கும் இதில் இருக்கும் பங்கு குறித்து எந்த வலிமையான ஆவணங்களும் ரிப்போர்ட்டாரால் முன் வைக்கப்ப‌டவில்லை.ஆக இது கற்பனை என்றும் இட்டுக்கட்டப்பட்டது என்றும் வாசகன் கருத இடம் இருக்கிறது.

அப்படி இருக்கையில் குறைந்த பட்சம் கீழ்க்கண்ட விஷயங்களையாவது செய்திருக்க வேண்டும்.

குற்ற‌ம் சாட்டப்ப‌ட்டவர்களுக்கு அவர்கள் தரப்பை வெளியிடக் குறைந்த பட்ச வாய்ப்பையாவது அளித்திருக்கலாம்.அது தான் குறைந்த பட்ச தொழில் தர்மம்.அதை இவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு தான்.

இதில் தொடர்புடைய ஆ.ராசா,காமராஜ் மற்றும் ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாள்,இதர இயக்குனர்கள்,இதில் தொடர்புடைய இதர 4 பேர்கள் ஆகிய அனைவரும் உயிருடன் தான் இருக்கிறார்கள்.அவர்கள்  யாரிடமாவது தொடர்பு கொண்டு அவர்கள் தரப்புக் கருத்தை வாங்கி வெளியிட்டிருக்கலாம்.

3) குறைந்த பட்சம் இதில் முக்கிய தரப்பான சாதிக் பாட்சாவின் மனைவி ரேகா பானுவிடமாவது ஒரு நேர்காணலை வாங்கிப் போட்டிருக்கலாம்.
புகைப்படம் வைப்பதிலும்,தலைப்பு வைப்பதிலும் காட்டிய வன்மத்தை அவர்கள் கருத்தை வாங்கிப் போடுவதில் சிறிய அக்கறையைச் செலுத்தியிருக்கலாமே..?

4) அதிலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆ.ராசா முன்னாள் மத்திய அமைச்சர். வழக்குரைஞர். நாடே திரும்பிப் பார்த்த ஸ்பெக்ட்ரம் வழக்கின் முதன்மைக் குற்றவாளி. தன் தரப்பில் நியாயம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்.தனது செயல்கள் அனைத்திலும் முன்னாள் பிரதமர்,முன்னாள் நிதி அமைச்சர் உட்பட அனைவரின் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி வருபவர்.அவரிடம் கருத்து வாங்கிப் போட்டிருக்க வேண்டுமல்லவா..?

அதைப்போல இதில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு முக்கியப் புள்ளியான  காமராஜ் ,ரிப்போர்ட்டரைப் போல இன்னொரு பத்திரிகையான நக்கீரனின் இணை ஆசிரியர்.அவரிடம் இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கூறி அவர் தரப்பு விளக்கத்தை வாங்கி வெளியிட்டிருக்க வேண்டுமா இல்லையா..?

அல்லது மேற்கண்ட இருவரையும் தொடர்பு கொண்டு அவர்கள் கருத்துச் சொல்ல மறுத்திருந்தால் அதனைப் பதிவு செய்திருந்திருக்கலாம். இவர்கள் அனைவரும் உயிரோடு தான் இருக்கிரார்கள்.இவர்களைத் தொடர்பு கொள்வதோ,அல்லது தொலைபேசியில் பேசுவதோ பெரிய சிரமம் இல்லை.
அல்லது குறைந்த பட்சம் கிரீன் வேல்யூ புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடமாவதோ தொடர்பு கொண்டு அவர்கள் கருத்தை வாங்கி வெளியிட்டிருக்கலாம். சாதிக் பாட்சா மனைவி எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தின் நகலும் கூட இல்லை.


இவர்களாகவே ஒரு குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.குற்றச்சாட்டை நிருபிக்க துரும்பளவு ஆவணம் கூட இல்லை, குற்றம் நடந்திருக்கிறது என்பதற்கான முகாந்திரத்தை இவர்கள் எழுத்திலிருந்து நம்மால் நம்ப முடியவில்லை.குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பிலான விளக்கமும் பெற முயற்சிக்கவில்லை.

இத்தனைக்கும் இதன் ஆசிரியர் கோசல்ராம் சில காலம் முன் வரை கிரைம் பீட் பார்த்தவர்.ஆனால் அடிப்படை ஆதாரமற்ற செய்தி குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவ‌ந்திருக்கிறது.

அலுவலகத்தில் அமர்ந்து எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் உள்நோக்கத்துடன்,வன்மத்துடன் எழுதி பக்கங்களை நிரப்புகிறார்கள்.பிளாக் மெயில் இதழியலுக்கு இது எந்த விதத்தில் குறைந்தது..?

இந்த செய்திக்கு இதன் வெளியீட்டாளர் வரதராஜனும் குழும ஆசிரியர் கோசல்ராமும்,நிருபர் ச.செல்வராஜூம்  தான் பொறுப்பு.( கோசல் அண்ணாச்சி நீங்க வரது மேல இப்ப ரொம்பக் கோவமா இருப்பீங்கன்னு எங்களுக்குத் தெரியும். கடைசி வரைக்கும் இருந்து போராடுங்க.)

அதிலும் கோசல்ராமோ,செல்வராஜோ மட்டும் நினைத்திருந்தால் இந்த செய்தி வர துளியும் வாய்ப்பு இல்லை.முழுக்க முழுக்க வரதராஜன் மன விருப்பபடி தான் வந்துள்ளது. அதிகார வர்க்கத்தின் துணையுடன் ரியல் எஸ்டேட் பார்ப்பவர்கள் எல்லாம் குறுக்கு வழியில் பத்திரிகை வெளியீட்டாளரானால் இது தான் நடக்கும். 

 பெரும்பாலும் எந்தவொரு ஊடகத்திலும், சக ஊடகம் தொடர்புடையவர்கள் மீது வலுவான,ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டு கூறப்பட்டாலும், இவ்வள‌வு ஏன் குற்றமே நிரூபிக்கப்பட்டாலும் அது வெளிவராது.தவிர்த்து விடுவார்கள்.ஏனென்றால் நாளை நமது களவாணித்தனத்தை அவன் வெளிப்படுத்தி நாறடிப்பான் என்ற அச்சம் தான்.இது கூட்டுக் களவாணித்தனத்துக்கு எடுத்துக்காட்டு .

ஆனால் காமராஜ் தொடர்புடைய இந்தச் செய்தியோ, குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்றாலும்,சக ஊடகம் தொடர்புடையவர் என்றாலும் அவர்கள் மீதான காழ்ப்புணர்வால் வன்மத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையே வேறு எதுவும் பகை உண்டா என்று நமக்குத் தெரியவில்லை.இன்றைய நிலையில் நாம் வலிமையாக இருக்கிறோம்,குமுதம் சாம்ராஜ்யம் இருக்கிறது இதுவே காலம் காலமாய் தொடரும் என்ற திமிரில் இதனை  வரதராஜன் செய்துள்ளார்.


வரதராஜனின் வன்மத்துக்கு பலியான காமராஜ் ஒன்றும் நேர்மையான பத்திரிகையாள‌ர் இல்லை தான்.

தான் பணியாற்றும்  ஊடகத்தில் எத்தனை எத்தனை பேருக்கோ எதிராக உள்நோக்கத்துடன்,ஆதாரமில்லாமல் பரபரப்புக்காகவும்,சுயநலனுக்காகவும் செய்தி வெளியிட்டவர் தான்.அவருக்கு இன்று ஏற்பட்ட அசிங்கமும் வலியும் இதற்கு முன் அவரால் நிறைய நபர்களுக்கு ஏற்பட்டுள்ள‌து.


 இத்துடன் இந்த அத்தியாயம் நிறைவு பெறலாம்.இதில் வரதராஜன் காமராஜை அசிங்கப்படுத்தியதாக குதூகலமடையலாம்.ஆனால் தொடர் முற்றுப்பெறாது.
அடுத்த அத்தியாயம் ஒன்று ஆரம்பிக்கும்.

வரதராஜன் இப்பொழுது விடாப்பிடியாய் ஆக்கிரமித்து அமர்ந்திருக்கும் குமுதம் சாம்ராஜ்யத்தில் ஆயிரம் பஞ்சாயத்து இருக்கிறது. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். வரதராஜன் பொதுவெளியில் அம்பலப்பட,அசிங்கப்பட‌ அவர் தொடர்புடைய பல விஷயங்கள் இருக்கின்றன.தூணளவு ஆதாரங்கள் அப்பொழுது தேவையில்லை.துரும்பளவு கிட்டினாலே போதும்.காமராஜ் அதனை தூணாக்குவார்.இப்பொழுது ஒரு வாரமிரு பத்திரிகையின் இணையாசிரியர் என்று வரதராஜனால் சொல்லப்படும் காமராஜ் அப்பொழுது பழி தீர்ப்பார்.

நக்கீரன் அட்டை மற்றும் ஊரெங்கும் ஒட்டும் சுவரொட்டிகளை வரதராஜன் குனிந்த தலையுடன் அலங்கரிப்பார்.காமராஜ் அன்று நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்.

இவர்கள் என்றும் திருந்தப்போவதில்லை

ஆனால் இது போன்ற பேர்வழிகளால் பாதிக்கப்ப‌டுவது என்னவோ இத்துறையும்,உண்மையாய் பணியாற்றும் ஊடகவியலாளர்களும் ,இவர்கள் எழுதுவதெல்லாம் உண்மை என்று நம்பி, காசு கொடுத்து வாங்கிப்படிக்கும் அப்பாவி வாசகனும்  தான்.

தொடர்புடைய இணைப்புகள்

http://kalakakkural.blogspot.in/2011/11/blog-post_28.html

http://kalakakkural.blogspot.in/2014/03/blog-post_26.html

http://kalakakkural.blogspot.in/2011/11/blog-post_08.html

http://kalakakkural.blogspot.in/2012_03_01_archive.html

http://kalakakkural.blogspot.in/2012/01/110.html 

http://kalakakkural.blogspot.in/2014/08/blog-post_20.html

Wednesday 20 August 2014

பெண் செய்தி வாசிப்பாளர்களை இழிவு படுத்தும் மஞ்சள் நக்கீரன்..!



நக்கீரன் இப்பொழுது புதுப்பொலிவுடன் வெளிவருகிறதாம். ஊரெங்கும் சுவரொட்டி ஒட்டி விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.விலையோ.ரூ.15.

புதுப்பொலிவு என்று சொல்லிக் கொண்டாலும் பழைய சரக்குத் தான்.
வழக்கம் போலத்தான். புதிய பகுதிகள் என்று 4 பகுதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.கோபிநாத் எழுதும் தொடர் தவிர்த்து மீதமுள்ள மூன்று தொடர்களும் கிசுகிசுக்கள் மற்றும் பாலியல் தொடர்புடையவை தான். நக்கீரனின் குணமும் மணமும் மாறி விடுமா என்ன..?

அதில் வந்த செய்தி;விசாரித்த உண்மை என்ற ஒரு பகுதி.

இதன் தலைப்பும் செய்தி உள்ளடக்கமும் இதற்கு முன்பு மஞ்சள் பத்திரிகைகளிலும்,சில சினிமா பத்திரிகைகளிலும்,நாலாந்தர பத்திரிகைகள் ஒரு சிலவற்றிலும் வந்தவை தான்.அதை இப்பொழுது நக்கீரனும் பின்பற்றுகிறது.

இந்தப் பகுதி மூன்று இதழ்கள் இதுவரை வந்துள்ளது.இதில் இருந்து இரண்டு பதிவுகளை எடுத்துக் காட்டுகிறோம்.

ஆகஸ்டு 09-12 ஆம் தேதியிட்ட இதழில் வந்த பதிவு இது. ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூவில் இருந்து நள்ளிரவு ஒரு பெண்மணி நிர்வாணத்துடன் ஓடியதாக பதிவு.




இந்தச் செய்தியில் உள்ள  உண்மைத்தன்மையை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறோம்.

அடுத்து  2014 ஆகஸ்டு 16-19 தேதியிட்ட கடந்த இதழில் வந்த ஒரு பதிவு.



இதிலிருந்து நக்கீரன் உண்மை என்று ஒப்புக்கொள்வது என்னவென்றால் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் மூவர் பாலியல் தொழில் செய்யும் பொழுது சிக்கி விட்டார்கள். அவர்களை காவல்துறை கோ-ஆபரேட் செய்ய வேண்டும் என்று சொல்லியது. இன்னொன்று இதில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பிற செய்தி வாசிப்பாளர்களை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதுடன் அவர்களையும் கோ-ஆபரேட் செய்யச் சொல்ல வேண்டும் என்பது.( பாலியல் தொழில் செய்து பிடிபடும் பெண்களிடம் காவல்துறை விரும்பும் 'கோ-ஆபரேட்' என்பதற்கு என்ன அர்த்தம் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.)

மஞ்சள் பத்திரிகையை நகல் எடுத்தது போல் எழுதியுள்ளது நக்கீரன்.இதற்கு மேல் கேவலமாகவும் இழிவாகவும் எழுதுவதற்கு ஒன்றுமில்லை.

தமிழ்நாட்டில் அதிகபட்சம் 10 செய்தி சேனல்கள் இருக்கிறது.மொத்தம் 50 நபர்கள் செய்தி வாசிக்கலாம். இதில் பெண்கள் 30 பேர் இருக்கலாம். நக்கீரன் 3 பேர் பிடிபட்டார்கள் என்கிறது.இன்னும் இதில் சம்பந்தப்பட்டவர்களை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டதாய் எழுதுகிறது.

''வந்த செய்தி- விசாரித்த உண்மை'' என்று நக்கீரன் இரு பகுதியாக எழுதுகிறது.

வந்த செய்தி- விசாரித்த உண்மை என நக்கீரனின் இரண்டு பகுதிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ? இரண்டுமே ஒன்று போல அடிப்படை ஆதாரமற்றதாகதாகவும் கட்டுக்கதையாகவும் தானே இருக்கிறது.

 பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என்பது விசாரித்த உண்மை என்றால்அதை நிருபிக்க என்ன தரவுகளை நக்கீரன் வைத்துள்ளது..? எந்த நாளில்,எங்கு பிடிபட்டார்கள்..? எந்த டீம் பிடித்தது..? அவர்கள் பெயர் என்ன..?அந்த பெண்கள் எந்த தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார்கள்..? எந்த ஆதாரத்தை நக்கிப் பிழைக்கும் நக்கீரன் வைத்துக்கொண்டு இதனை உண்மை என்று சான்றிதழ் அளிக்கிறது..?

எங்கோ ஒரு நகராட்சியில் ஏதோ ஒரு கவுன்சிலர் லஞ்சத்தில் மஞ்சம் குளிக்கிறார் என்பன போன்ற கிசுகிசு அல்ல இது .இதை போகிற போக்கில் படித்து விட்டு அலட்சியப்படுத்தி விட்டுச் செல்ல முடியாது. தன் துறையில் உள்ள பெண்களை மிக மிகக் கேவலமாக இழிவு படுத்தும் செய்தி இது. இதை அறிய நெற்றிக்கண் தேவை இல்லை.

தனது துறை பணியாளர்கள் குறித்தே இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற,மிக கேவலமான செய்தியை 'துணிந்து' வெளியிடும் நக்கீரனிடம் நாம் அதன் பிற‌ செய்திகளில் உண்மையும் நேர்மையும் இருக்க முடியும் என்பதை நம்ப முடியுமா என்ன..?

****

ஒப்பீட்டளவில் இதைப் போன்ற செய்தியை ( நடிகைகள் விபச்சாரம் செய்கிறார்கள்,அவர்களின் விலை என்ன..?) முன்பு கேவலமாய் செய்தி வெளியிட்டமைக்காக  நடிக,நடிகைகள் போராடினார்கள். அதைத் தொடர்ந்து தினமலர் சென்னைப் பதிப்பின் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டார். நடிக,நடிகைகளிடம் இந்த விஷயத்திலாவது இருக்கும் ஒற்றுமையை நாம் ஊடகவியலாளர்களிடம் எதிர்பார்க்க முடியாதது தான்.தினமலர் நாளிதழ் அதன் பிறகு வருத்தம் தெரிவித்தது.



பெண் எழுத்தாளர்கள் ஊடக பலத்தில் தான் தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்று ஜெயமோகன் சொன்னமைக்காய் மும்பையில் வாழும் எழுத்தாளர் சி.எஸ்.லட்சுமியில் இருந்து முகநூலில் ஒரு நிலைத்தகவல் போட்டவர்கள் வரை எத்தனையோ பெண்கள் போராளியாய் அவதாரம் எடுத்து எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ராஜா,செய்தி வாசிப்பாளர் அகிலாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்பும், ராஜாவைக் கண்டித்தால் தங்களின் 'கருத்தாளர்,மற்றும் சமூக ஆர்வலர் அடைமொழிக்குப் பங்கம் வந்துவிடும் என்று இணையத்தில்,தொலைக்காட்சியில் தினமும் கருத்துச் சொல்ல அவதரிக்கும் போராளிகள் முதல் தொழில் பத்திரிகையாளர்கள்,சங்கங்கள் வரை எல்லோரும் கள்ள மவுனம் காத்தார்கள்.

கடைசிவரை பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை.பெண் பத்திரிகையாளர்கள் சங்கமான NWMI என்ற பெயரில் கண்டன அறிக்கை வெளியான‌து. அந்த அமைப்புக்கு தமிழ்நாட்டில் பிரதிநிதிகளோ அமைப்போ இல்லை என்பது குறிப்பிட‌த்தக்கது. அத்துடன் அது முற்றுப் பெற்றது யாரும் அது குறித்து அதன்பிறகு பேசவில்லை.

அது தான் இப்பொழுதும் நடக்கும் என்பது நமக்குத் தெரியும்.

இந்தச் செய்தி வெளியாகி ஐந்து நாட்களாகியும் எந்த எதிர்வினையும் இல்லை. குறைந்த பட்சக் கண்டனம் தெரிவிக்க கூட ஆட்கள் இல்லை.

இதுவரை மட்டுமல்ல,இன்னும் எத்தனை மாமாங்கம் ஆனாலும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பாலியல் ரெய்டில் சிக்கினார்கள் என்ற நக்கீரனின் இழிவான செய்திக்கு,  பத்திரிகையாளர்கள்,மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள்,பெண் பத்திரிகையாளர்கள், அக்மார்க் பெண் போராளிகள், இணையத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் செயல்படும் மனித உரிமை ஆர்வலர்கள்,கருத்துப் போராளிகள்,நக்கீரனில் 'எதிர்க்குரல்' என்ற பெயரில் வருடக்கணக்கில் பத்தி எழுதிய‌தோடு மட்டுமல்லாமல்,இன்று தினமும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் பல பிரச்சனைகளில் தனது கருத்தைச் சொல்லும் மனுஷ்யபுத்திரன் வரை யாரும் எந்த எதிர்வினையும் காத்திரமாகவும் உண்மையாகவும் ஆற்ற மாட்டார்கள் என்பது நமக்கு நன்கு தெரியும்.

சன் குழுமத்தை விட‌ நக்கீரன் வலிமை குறைந்த ஊடகம் என்பதால் குறைந்த பட்ச எதிர்ப்பு முணுமுணுப்பு இருக்கலாம்.

ஆனால் நாம் நமது எதிர்வினையை ஆற்றாமல் இருக்க முடியாது.

வந்த செய்தி-நக்கீரன் மஞ்சள் பத்திரிகை என்பது தொடர்ந்து நிருபணமாகிக் கொண்டே இருக்கிற‌தாமே..? உண்மையா..?

விசாரித்த உண்மை-ஆம்.நக்கீரன் மஞ்சள் பத்திரிகை என்பதில் இருந்து எப்பொழுதும் பின்வாங்குவது இல்லை.அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு கடந்த இதழில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் குறித்து எழுதிய அவதூறு தான். நக்கீரன் தனது தொழிலை தொடர்ந்து செய்யும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வாழ்க பத்திரிகை 'ஜனநாயகம்'.


Friday 8 August 2014

பொய்மையின் புகலிடம் தினமலர்...!



பொதுமக்கள் எதிர்பார்ப்பு,கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்,நம்பகமான வட்டாரங்கள் கூறின,விரைவில் நடவடிக்கை உறுதி, பின்னணி காரணம்,கிசுகிசுத்தனர்,புலனாய்வில் கிடைத்த தகவல் என்பன போன்றவைகள் எல்லாம் எப்பொழுதும்  பொய்யையும் புரட்டையும் வெளியிட்டு தான்தோன்றித்தனமாய் எவ்விதப் பொறுப்புமற்றும் உள்நோக்கத்துடனும்,ஆர்வத்துடனும் வெளியிடும் பக்கங்களை நிரப்பும் பழக்கம் 'புலனாய்வு' இதழ்கள் செய்பவை. இவர்கள் குறிப்பிட்ட விஷயங்கள் அத்தி பூத்தாற் போல் நடந்தால் அதற்காய் தங்களுக்குத் தாங்களே தற்பெருமை கொள்ளும் இவர்கள் சொன்னது நடக்க வில்லை என்றால் எவ்வித மறுப்போ வருத்தமோ தெரிவிக்காமல் கடந்து செல்வார்கள்.

'புலனாய்வு' என்று சொல்லிக் கொள்ளும் இதழ்களின் இந்தக் கேடுகெட்ட குணாம்சம் தினசரி இதழிலும் உண்டு.

அதிலும் மற்ற‌ நாளிதழ்களை விட டி.வி.ராமசுப்பையரின் மகன்களும் பேரன்களும் நடத்தும் தினமலரில் ம‌லிந்து காணப்ப‌டும். தங்களின் சொத்துப்பிரச்சனையில் ஐந்து முதலாளிகளும் பத்துப் பதிப்புகள தொடர்பாக ஒற்றுமை இல்லாமல்  நீதிமன்றப் படியேறி தீர்வை  நோக்கிக் காத்திருந்தாலும்  இந்த விஷயத்தில் மட்டும் இவர்களின் அனைத்துப் பதிப்புகளிலும் ஒற்றுமை உண்டு.

தினமலரின் 'புலனாய்வு' தரத்திற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான் இந்தப் பதிவு.

இது 06-08-2014 அன்று தினமலர் சென்னைப் பதிப்பில் வந்த செய்தி.



 .திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் பெ.வீ.கல்யாணசுந்தரம் ராஜினாமாவுக்கு அவருக்கும்,அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமாருக்கும் ஏற்பட்ட‌ பிரச்சனை தான் காரணம் என கட்சி வட்டாரங்கள் சொன்னதாய் அதன் நிருபர் வார்த்தைகளை வளைத்து வளைத்து எழுதியிருக்கிறார்.

ஆனால் மறுநாள்  (07-08-2014) அன்று காலை 'டெக்கான் கிரானிக்கல்' ஆங்கில நாளிதழில் பெ.வீ.கல்யாணசுந்தரம் என்ன காரண‌த்துக்காய் ராஜினாமா என்று அனைத்துக் காரணங்களையும் எழுதியிருந்தனர்.



அதே நாள் மதியம் பெ.வீ.கல்யாணசுந்தரம் எழுதிய கடிதமே அனைத்து  ஊடகக்காரர்களிடமும் கிடைத்தது.அதில் தனது ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்று எழுதியிருக்கிறார்.அதில் ஒரு வரி கூட தினமலர் புலனாய்வு நிருபர் சொன்ன படி அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமார் குறித்து எழுதவில்லை.



ஆக முதலில் தினமல்ர் எழுதிய 'செய்தி' வழக்கமான கட்டுக்க‌தை என்று தெரிகிறது. 30-07-2014 தேதியிட்ட ராஜினாமா குறித்து ஐந்து நாட்கள் கழித்த பின்னும் ஒழுங்காய் துப்பறியத் தெரியாத துப்புக் கெட்ட தினமலர் மறுநாள் ஆங்கில இதழில் காரணங்களை எழுதிய  பின்பு, ராஜினாமாவின்  நகல் அனைவருக்கும் கிடைத்த பின் கல்யாணசுந்தரத்தின் பேட்டி என்ற ஒன்றை வாங்கி வெளியிடுகிறது. ஆனால் தவறான செய்திக்கு ஒரு மறுப்பும் இல்லை.

இது 06-08-2014 அன்று தினமலர் சென்னைப் பதிப்பில் வந்த செய்தி.



தான் தவறாய் வெளியிட்ட செய்தியை மறைக்க கல்யாணசுந்தரத்தின் பேட்டியை வெளியிட்டு மறைக்கப் பார்க்கிறது என எண்ணலாம்.ஆனாலும் கற்பனைக் கதை எழுதும் புத்தியை அவ்வளவு எளிதில் விட முடியுமா..?



கல்யாணசுந்தரத்தின் பேட்டிக்கு இடப்புறமே இன்னொரு செய்தியில் கல்யாணசுந்தரத்தின் ராஜினாமாவுக்கு அவருக்கும் ஜெயக்குமாருக்கும் நடந்த பிரச்சனை தான் காரனம் என்று திரும்பவும் பழைய கட்டுக்கதையை எழுதி வெளியிட்டுள்ளது. ஒருவேளை அதுவும் ஒரு காரணம் என்று தினமலர் கருதும் பட்சத்தில் அது குறித்து ஒரு கேள்வியை கேட்டு கல்யாணசுந்தரத்திடம் இருந்து பதிலை வாங்கிப் போட வேண்டியது தானே..?

இதிலிருந்து ஒரு உண்மை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

இப்படி எழுதும் நிருபர்க‌ள் யாரும் எங்கும் களத்தில் இறங்கி செய்தி சேகரிப்பதும் கிடையாது. உண்மையை மட்டுமே வெளியிட வேண்டுமென்று எண்ணுவதும் கிடையாது.அதனை அறிய மெனக்கெடுவதும் கிடையாது. பக்க‌த்தை நிரப்ப அமர்ந்த இடத்தில் இருந்த படி எதையாவது எழுதி வெளியிடுவது தான் இவ‌ர்கள் நிறமும் குணமும்.

இதில் உண்மையின் உரைகல் எனத் தலைப்பு வேறு.தினமலர் பொய்மையின் புகலிடம் என்பது தான் சரி.