Saturday 30 May 2015

முன்பகை + கற்பனை = தமிழக அரசியல் ’புலனாய்வு’ செய்தி..!


ரத்குமார்- தற்பொழுதைய நிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்.

அ.தி.மு.க., தி.மு.க., அ.தி.மு.க., தனிக்கட்சி, என பல பரிணாமத்திற்குப் பிறகு தற்பொழுது அ.தி.மு.க., சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர். தமிழக அரசியலில் இவரது செல்வாக்கு,   அதிமுக உறுப்பினர் அத்துடன் இரண்டாம் நிலை நடிகர் என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. இதைத் தவிர்த்து நடிகர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். ஒரு அதிமுக உறுப்பினரின் செல்வாக்கு அவர்களது கட்சித் தலைமை முன்பு எந்த நிலையில் இருக்கிறது என்பது உலகுக்குத் தெரியும். அப்படி ஒரு எண்ணம் சரத்குமாரின் கனவில் வந்தாலே அதற்கான 'விலை' என்ன என்பது ’புலனாய்வு’ பத்திரிகையில் வேலை பார்க்கும் காவலாளிக்கும் மிக மிக நன்கு தெரியும். 

ஆனால் சரத்குமார் தமிழக முதல்வராக (!) முயற்சிக்கிறார் என்று இரண்டு கவர் ஸ்டோரிகளைத் ’தமிழக அரசியல்’ வாரமிருமுறை இதழ் ஓரிரு வாரங்களுக்கு முன் வெளியிட்டது.

’அடுத்த முதல்வர் நான்தான்’ என்று முதல் அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்ட சற்று இடைவெளியில் கடந்த வார (16.05.2015) வியாழன் அன்று வெளியான இதழில், 

’முதல்வர் பதவி…அம்பலமான சரத்தின் நாடகம்’ என அட்டையில் இடம்பெற்ற ஸ்டோரி. 

4 பக்க மேட்டர்.






வெளியான கட்டுரை முழுக்கவும் எவ்விதத் தொடர்புமற்று நடிகர் சங்கம், பதவி இழந்து திரும்பப் பெற்ற அமைச்சர் என சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எங்கெங்கோ பயணிக்கிறது. அந்தக் கட்டுரை இது தான். தமிழ்நாட்டு அரசியல் நிலவரத்தை ஓரளவு அறிந்த எவரும் இதில் வெளியானவை நடக்கும் என கனவில் கூட நம்ப மாட்டார்கள் என்பது தான் உண்மை.

இதைப்படித்தவுடன் நமக்குத் தோன்றியது இதுதான்.

துளியும் நம்ப முடியாத செய்திகளை  எல்லாம் எந்தவிதக் கோர்வையும் இல்லாமல் நான்கு பக்கங்கள்  எழுதி அதனை இரண்டாம் முறையாக கவர் ஸ்டோரியாக வெளியிடுகிறது என்றால், சரத்குமாருக்கும் ’தமிழக அரசியல்’ நிறுவனத்துக்கும் ஏதோ பெரிய அளவிலான முன்பகை இருக்கிறது. அது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா அல்லது ’தமிழக அரசியல்’ முதலாளி சுந்தரராமன்  திரைத்துறையிலும் இருப்பதால் அது தொடர்பிலான பிரச்னையா, இல்லை வெளியில் சொல்ல முடியாத வேறு எதுவுமா ? என நம்மால் முடிவுக்கு வர இயலவில்லை. நண்பர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் பொய் எழுதிய மை காய்வதற்குள் அம்பலமாகி விட்டது. கிரிகுஜா நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் ’தமிழக அரசியல்’ பத்திரிகையின் வெளியீட்டாளர் எஸ். சுந்தர்ராமனுக்கும் இடையே திரைப்படம் தயாரிப்பது தொடர்பில் உருவான  கொடுக்கல் வாங்கல் பிரச்னையை செய்தித்தாள்கள் எல்லாம் வெளியிட்டு விட்டன.




ஆக சரத்குமார் ‘தமிழக அரசியல்’ நிறுவனத்துக்கு திரைப்படம் தயாரித்துத் தருவதாகச் சொல்லி பணம் வாங்கி  ஏமாற்றி வரும் நிலையில் அவர் மீதான ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்காககோ, அல்லது இப்படி ஒரு ’செய்தி’ வெளியிட்டால் சரத்குமார் தன்னிடம் செட்டில்மெண்டுக்கு வருவார் என்று நினைத்தோ இது போன்ற ’செய்திகளை’ உற்பத்தி செய்கிறது. ’நாக்ராஜ்’ என்ற பெயரில் அனேகமாக எஸ்.சுந்தரராமனே எழுதியிருக்கலாம் என நினைக்கிறோம். 

இதுதான் புதியதோர் உலகு உருவாக்கும் லட்சணமா ?

சரத்குமார் தனது அரசியலைக் காட்டி ஏமாற்ற முயற்சிக்கிறார். தமிழக அரசியல் முதலாளி  தனது பத்திரிகையைக் காட்டி வேறு வகையில் மிரட்டுகிறார். 

மோசடி நிருபர்களுக்கு ’கவர்’ வாங்க பயன்படும் பத்திரிகை, ’முதலாளி’களுக்கோ இப்படியான தங்களின் தனிப்பட்ட திரைமறைவு மிரட்டல்களுக்குப் பயன்படுகிறது. இதில் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகன் தான் ஏமாளி.

’கார்க்கோடன்’ என்ற புனைப் பெயரில் பல்வேறு பிரச்னைகள் குறித்த சிந்தனைக் கட்டுரைகளை ஒவ்வொரு இதழிலும் எழுதும்   எஸ்.சுந்தர்ராமன் அவர்களே நீங்கள் ஏன் அடுத்த இதழில் புலனாய்வு பத்திரிகைச் செய்திகளின் பின்னணி, உள்நோக்கம் குறித்து ஒரு கட்டுரை எழுதக் கூடாது? 

உங்களின் கூட்டாளிகளுக்கு உபயோகமாக இருக்குமல்லவா ?


தொடர்புடைய இணைப்புக்கள்

http://m.dinakaran.com/detail.asp?Nid=146362


Thursday 28 May 2015

மோசடிப்புகாரில் சிறைக்குச் சென்ற தின இதழ் முதலாளி…!



தின இதழ்’ நாளிதழ் ஆரம்பிக்கப்படும் பொழுது அதன் பின்னணி, நோக்கம் குறித்து எழுதியிருந்தோம். குறுக்கு வழியில் மோசடியாக பலநூறு கோடிகளைச் சம்பாதித்து அதனைப் பாதுகாக்கவும் பலவாறாகப் பெருக்கும் நோக்கத்திலும் தான் 'தின இதழ்' நாளிதழை ஆரம்பித்துள்ளனர் என்றும் சொல்லியிருந்தோம். 

இந்த நிலையில் தனது மருத்துவக் கல்லூரிக்கு சி.எம்.டி.ஏ. சான்றிதழை மோசடியாக தயாரித்த குற்றத்திற்காக ’தின இதழ்’ நாளிதழ் முதலாளியும், மருத்துவக் கல்லூரித் தலைவருமான ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்தச் செய்தியை’தின இதழ்’ முதன்மை ஆசிரியர் குமார் இன்றைய நாளிதழில் ஏனோ (!) வெளியிடவில்லை.

29-05-2015


30-05-2015


மத்திய, மாநில அரசுகளுக்கு வரன்முறையில்லாமல் ஜால்ரா அடித்தும், தான் செய்த குற்றத்திலிருந்து ’உரிய’ வழிமுறைகளில் தப்ப முடியாமல், ஏதோ ஒரு காரணத்தினால் சிறைச்சாலைக்குச் சென்றிருக்கிறார்.
கலாநிதிமாறன், பச்சமுத்து, வைகுண்டராஜன் போன்ற பங்காளிகளிடம் கொஞ்ச நாள் டியூஷன் போயிட்டு வாங்க சார்..!
கைதாகாமல் தப்பிப்பது எப்படி?

ஆனால் தொழில் ரகசியத்தை அவர்கள் சொல்வது சந்தேகம் தான். எதற்கும் முயற்சியுங்கள்.


தொடர்புடைய இணைப்புகள்


பாலியல் புகாரில் தினகரன் நியூஸ் எடிட்டர் ; ராஜினாமா நாடக ஒத்திகை..!



தினகரன்; வேலூர் பதிப்பு  நியூஸ் எடிட்டர் பெருமாள் குறித்து நாம் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். வேலூர் பதிப்புக்கு இவர் தான் இன்சார்ஜ். தனது கீழ் பணிபுரிந்த ஊழியரின் பணத்தை ஏ.டி.எம்.மில் திருடி அதன்பின் திருடிய தொகையை பல தவணைகளில் கொடுக்க ஒப்புக்கொண்டதையும் எழுதியிருந்தோம்.

இப்பொழுது மீண்டும் பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறார். இந்த முறை தனது கீழ் பணிபுரியும் உதவி ஆசிரியர் பெண்மணியிடன் தரக்குறைவாக நடந்து கொண்டிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.

’தினகரன்’ வேலூர் பதிப்பில் ஆரணி பகுதியைச் சேர்ந்த கோகிலமான ஒரு பெண் கடந்த ஓரிரு வருடங்களாக உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் தொடர்ச்சியாக நியூஸ் எடிட்டர் பெருமாள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்லாமல் இவரது செல்போனுக்குத் தொடர்ச்சியாய் ஆபாசமான குறுஞ்செய்திகளை நேரம்காலம் பார்க்காமல் அனுப்பி வந்துள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாய் வேலைக்கு வந்த உதவி ஆசிரியரால் இதனை எதிர்கொள்ள முடியவில்லை. ஒருகட்டத்துக்கு மேல் பெருமாளின் தொல்லைகள் பொறுக்க முடியாமல் அதனை வேலூர் மேனேஜரிடம் தெரிவித்துள்ளார். மேனேஜரும் நியூஸ் எடிட்டரும் பல விஷயங்களில் கூட்டாளிகள் என்பதால் அவர் இதனைக் கண்டு கொள்ளவில்லை என்பதோடு பெருமாள் க்கு வக்காலத்தும் வாங்கியிருக்கிறார். வேறு வழியின்றி உதவி ஆசிரியப் பெண்மணி ’தினகரன்’ சென்னை அலுவலகத்தில் எச்.ஆர்.சாந்தியிடம், நியூஸ் எடிட்டர் பெருமாள் தனக்கு அளித்த பாலியல் தொந்தரவுகளை அதற்கான ஆதாரங்களுடன் இணைத்து புகாரை அளித்துள்ளார்.

அதற்குப்பின் எச்.ஆர்.சாந்தியின் அறிவுரையின் படி, பிரச்னை கைமீறிச் சென்றுவிடாமல் இருப்பதற்காக, நியூஸ் எடிட்டர் பெருமாளின் ராஜினாமாவை ’தினகரன்’ வேலூர் பதிப்பு மேனேஜர் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பெருமாள் அலுவலகத்தில் இன்னும் கோலோச்சிக் கொண்டு தான் இருக்கிறார்.பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை விசாரிப்பதற்காக உருவாக்க வேண்டிய விசாகா கமிட்டி ’தினகரனில்’ இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமாள்


தினகரன்’ எடிட்டர் கம் மேனேஜிங் டைரக்டர் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆர்.எம்.ஆர். தற்பொழுது தமிழ்நாட்டில் நிலவும் வெயில் காரணமாக, வெளிநாட்டுக்கு உல்லாச சுற்றுப்பயணம் சென்றிருக்கிறாராம். அவர் வந்தவுடன் தான் என்ன முடிவெடுக்கப்படும் என்பது தெரியும். கோவிந்தராஜ் என்னும் ஒரு திறமையாளரை புறக்கணித்து விட்டு தனக்குத் தோதான இவரை, மேனேஜரின் விருப்பத்தின் பேரில் நியமித்தவர் தான் ஆர்.எம்.ஆர். தான் பதவி கொடுத்து அழகு பார்த்தவர்களை அவ்வளவு எளிதில் கைவிட மாட்டார் என பங்காளிகள் நம்புகிறார்கள்.

பாலியல் தொந்தரவு செய்த நியூஸ் எடிட்டர் பெருமாளை வீட்டுக்கு அனுப்பி குறைந்த பட்ச நடவடிக்கையையாவது நிர்வாகம் எடுக்குமா..?

ஆனால், குற்றவாளிகள் பதவியில், பாதிக்கப்பட்டவர்கள் வீதியில்  என்பதுதான் ’சன் நெட்வொர்க்’கின் கடந்தகால வரலாறு.

Tuesday 19 May 2015

தினமணி- நிமிர்ந்த நன்னடையா ? சாஷ்டாங்கமான வணக்கமா?







ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விடுவித்ததை அடுத்து ’தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் ஒரு தலையங்கம் எழுதியுள்ளார்.படிக்கப் படிக்க பரவசம். தினமணி தலையங்கமா ? இல்லை சித்ரகுப்தன் எழுதிய வாழ்த்துப்பாவா என மனம் ஒருகணம் குழம்பி விட்டது. நீங்களும் படித்து விடுங்கள்.

அதில் சில பகுதிகளை எடுத்து விமர்சனம் செய்துள்ளோம்.

 //நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையிலான சிறப்பு இருக்கை தீர்ப்பளித்திருக்கிறது//

தீர்ப்பு அளித்தவர் சி.ஆர்.குமாரசாமி மட்டுமே. அவருக்கு கீழே வேறு நீதிபதிகள் கிடையாது. ஆனால் சி.ஆர்.குமாரசாமி தலைமையிலான சிறப்பு இருக்கை தீர்ப்பளித்திருக்கிறது என்று வைத்தி எழுதியுள்ளார்.

//கடந்த 3 மாதங்கள், யாரையும் சந்திக்காமல் தனித்திருந்து பிரச்னையை எதிர்கொண்டு வெற்றிபெற்ற ஜெயலலிதாவின் மன உறுதிக்கும்//

மத்திய சட்ட அமைச்சர் அருண்ஜெட்லியை ஜெயலலிதா சந்தித்தாரே? இந்த சந்திப்பு இப்பொழுது வரைக்கும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளதே? அந்த சந்திப்பு குறித்த செய்தி கூட ’தினமணி’யில் வெளிவந்துள்ளதே? ஜெயலலிதாவின் ’மனஉறுதி’யைப் பாராட்டுவதற்கு வசதிவாய்ப்பாக அதனை வைத்தி மறந்து விட்டாரா?

//பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சரவைக்கு இருந்த எதிர்பார்ப்பெல்லாம் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவந்து, ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க வேண்டும் என்பது தான்//

பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார் வைத்தி. இது அவர்களின் எதிர்பார்ப்பு மட்டுமா ? வைத்தியின் எதிர்பார்ப்புமா?

//அதனால் பல நல்வாழ்வுத் திட்டங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாததை தவறு காண முடியாது//

மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய அரசு, அவர்களின் நல் வாழ்வுக்காக செயல்பட வேண்டிய அரசு, அதன்பொருட்டு உறுதிமொழி ஏற்றுப் பதவி ஏற்ற அமைச்சரவை, செய்யத் தவறினால் அதனைச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்ய வேண்டிய பத்திரிகையாளர்,கவனம் செலுத்த முடியவில்லை என்பதில் தவறு காண முடியாது என்று வக்காலத்து வாங்குகிறார். விந்தை தான்.

//சட்டத்தின் பார்வையில் அரசியல் லாபங்களுக்காக வழக்குத் தொடுப்பதை ஊக்குவிக்க கூடாது. என்கிற நீதிபதியின் கருத்து வருங்காலத்தில் அரசியல் காரணங்களுக்காகத் தொடுக்கப்படும் இதுபோன்ற வழக்குகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.//

இந்தக் கருத்தினை தயாநிதி மாறன் தொடர்புடைய ஏர்செல் மேக்சிஸ், தனியார் தொலைபேசி இணைப்பு மோசடி வழக்குகளிலும் சொல்வீர்களா வைத்தி?

//பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்த ஒவ்வோர் அம்சத்தையும் , உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது 919  பக்கத் தீர்ப்பில் மிகத் தெளிவாக மறுஆய்வு செய்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்திருக்கிறார்.//

நிதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பு கர்நாடக உயர்நீதிமன்ற இணையத்தில் 11 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வெளியிடப்பட்டது. ’தினமணி’ தலையங்கம் அதிகபட்சம் இரவு 10 மணிக்குள் எழுதி முடிக்கப்பட்டு அச்சுக்குப் போயிருக்கும். இந்த இடைப்பட்ட 6 மணி நேரத்துக்குள்ளாக 919 பக்கங்களையும் டவுன்லோடு செய்து வரிக்கு வரி படித்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பு ’மிகத் தெளிவான மறு ஆய்வு’ என்று வைத்தி எப்படி முடிவு செய்தார்?

இந்த வழக்கின் ஒவ்வொரு அம்சத்துடனும் சில ஆண்டுகள் செலவிட்ட கர்நாடக அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூட மறுநாள் காலையில் தானே கருத்துச் சொன்னார்?

அவரை விட மிகப்பெரிய சட்ட மேதையா வைத்தியநாதன்? பேசாமல் படிக்காத வழக்கறிஞர் ஆகி விடுங்களேன். ’தினமணி’ வாசகர்களாவது பிழைத்துப் போகட்டும்.

 //நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு ஏனோதானோ என்று எழுதப்பட்ட தீர்ப்பு அல்ல. விரிவாக அலசப்பட்ட விவரங்களுடன் கூடிய தீர்ப்பு.//

//வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு மொத்த வருமானத்தில் வெறும் 8.12 % தான். இதன் அடிப்படையில் தான் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்திருக்கிறது.//

நீதிபதியின் கணக்கிடுதலில் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு வெறும் 8.12% அல்ல 76.76 % என்று இப்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளதே? ஆனால் வைத்தி மட்டும் எப்படி விரிவாக அலசப்பட்ட,  விவரங்களுடன் கூடிய தீர்ப்பு என்று சான்றிதழ் வழங்குகிறார்.

சான்றிதழ் தீர்ப்பை பார்த்து கொடுத்ததா? இல்லை சாதியைப் பார்த்துக் கொடுத்ததா?

சரி அவசரத்தில் உணர்ச்சிவசப்பட்டு தலையங்கம் எழுதிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். மறுநாள் மதியத்தில் இருந்து கணக்கீட்டில் உள்ள குளறுபடி குறித்து தகவல்கள் வந்தனவே? அனைத்துக்கட்சிகளும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டனரே? எல்லா நாளிதழ்களிலும், இணையத்திலும் செய்திகளும் விமர்சனங்களும் வெளிவருகின்றனவே? அது வைத்தியின் கண்களையும்  காதுகளையும் எட்டவில்லையா?

நீதிபதி சி.ஆர்.குமாரசாமி எழுதிய தீர்ப்பை மாற்றுவது தான் கடினம். வைத்தி எழுதிய  தலையங்கத்தை மாற்றுவதுமா கடினம்? வருமானக் கணக்கீட்டுக் குளறுபடி குறித்தும், நீதித்துறை மீது எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்தும் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானதைக் கண்டித்தும் ஒரு தலையங்கம் எழுதுவதில் என்ன சிக்கல்? அவசர அவசரமாய் வரவேற்று தலையங்கம் எழுதிய தினமணி, நிதானமாக சிந்தித்து எழுத, விமர்சனம் எழுத 8 நாட்கள் கடந்த நிலையிலும் தயங்குவது என்?

வைத்தியை எது தடுக்கிறது?

இதைப்போன்ற புகழுரைகளைத் தாண்டி அத் தலையங்கத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி வேறு எதுவும் இல்லை.

தீர்ப்பு வெளியானவுடன் அதிக உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் பரவசத்திலும் காணப்பட்ட ஒரு அதிமுக தொண்டனின் மனநிலையை இத் தலையங்கத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் காண முடிகிறது. ஒரு மூத்த பத்திரிகையாளனின் எழுத்தை எந்த இடத்திலும் காண முடியவில்லை. 

தினமணியின் முகப்பு வாசகமான 'நிமிர்ந்த நன்னடை'க்குப் பதில் கூனிக்குறுகிய சாஷ்டாங்கமான வணக்கத்தைத் தான் வைத்தி செலுத்தியிருக்கிறார்.




ங்கோ கல்கத்தாவில் இருந்து சென்னைக்கு பிழைக்க வந்து, வெளிநாட்டுத் துணி வணிகம் செய்த நிறுவனத்துக்கு விசுவாசமாய் துபாஷி வேலை பார்த்துக்கொண்டிருந்த அதேசமயம், தமிழ்நாட்டு சதானந்திடமிருந்த ’The Indian Express’ பத்திரிகையை தனதாக்கி அதையே துருப்புச் சீட்டாய் வைத்துக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடியாய் உள் நுழைந்து அப்பொழுதிருந்த பழம்தின்று கொட்டை போட்ட பார்ப்பனர்களை எல்லாம் தாண்டி தேர்தலில் போட்டியிட சீட்டும் வாங்கி முக்கிய அரசியல் ஆளுமை ஆனவர், உங்கள் முதலாளி செத்துப்போன ராம்நாத் கோயங்கா. அதற்குப்பின் அவரது அரசியல், பத்திரிகை, பொருளாதார வளர்ச்சி அமோகமாய் ஆனது.

அவரது லாவகமும் குயுக்தியும் லாபியும் உங்களிடமும் இருக்கிறது, கூடுதலாக கூழைக்கும்பிடு போடும் குணமும் இருக்கிறது. நீங்கள் ஏன் அதிமுகவில் சேரக்கூடாது ? 

உங்களுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.


Monday 4 May 2015

ஊழியரிட‌ம் மண்டியிட்ட தினகரன் எம்.டி. ஆர்.எம்.ஆர்..!



தித்தால் உதைப்பதும் மிதித்தால் தலையைக் குனிந்த படி பொதி சுமப்பதும் கழுதைகளின் குணம் மட்டுமல்ல; பத்திரிகை முதலாளிகள் மற்றும் அவர்களது கங்காணிகளின் குணமும் தான்.

கங்காணி பற்றிப் பார்ப்பதற்கு முன் முதலாளியின் அராஜகத்தை அசை போடுவோம்.

ஏறக்குறைய 22 வருடங்களுக்கு முன்பு அதாவது 1992 வாக்கில் நடந்தது   'நக்கீரன்' ஆரம்பித்து 4 வருடங்கள் தான் இருக்கும்.  'தராசு' தான் முன்னணியில் இருக்கும் இதழ். ஜெயலலிதாவின் அராஜகத்தையும் ஆணவத்தையும் எதிர்த்து மிகத் தீவிரமாக எழுதுகிறது நக்கீரன். இன்னொருபுறம் 'நக்கீரன்' முதலாளி கோபால் அராஜகத்தில் இறங்குகிறார்.


நக்கீரன் கோபால்


ஊருக்குத் தானே உபதேசம். ?

'தராசு' பத்திரிகையில்  லே அவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்து தனியாக நக்கீரன் என்னும் பத்திரிகையை புதிதாக‌ ஆரம்பித்து புது பணக்கார முதலாளியாக கோபால் அப்பொழுது தான் பரிணமித்து வருகிறார்.

இனி தமிழ் பத்திரிகை சாம்ராஜ்யத்தின் முடிசூடா அதிபர் நாம் தான் என மனதுக்குள் ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்த சமயம். இந்த நிலையில் அவரது ரெக்கையை பிடுங்கும் வண்ணம் சம்பவம் நிகழ்கிறது.

இவர் எப்படித் 'தராசு' வில் இருந்து துரை தலைமையில் ஒரு டீமை அழைத்து வந்து நக்கீரன் என்ற பெயரில் தனிப்பத்திரிகை விரித்தாரோ அதைப்போல், நக்கீரனில் இருந்து முத்துராமலிங்கம்,ஜி.கே.ராஜ்,சுந்தரமூர்த்தி,கவிதா பாரதி ஜான் ராஜையா ஆகியோர் தனி அணியாகப் பிரிந்து 'சத்ரியன்' என்ற பெயரில் தனிக்கடை போடுகின்றனர். இது கோபாலுக்கு கடும் சினத்தை ஏற்படுத்துகிறது. அவரது மூளை மழுங்குகிறது.

முத்துராமலிங்கம்

கவிதா பாரதி


விரலசைவில் பத்திரிகை உலகம் இயங்கும் என எதிர்பார்த்தவருக்கு, ஆரம்பத்திலேயே தீய்ந்த வாசனை வருகிறது. நேற்று வரை தானும்  இன்னொருவரிடம் குப்பை கொட்டிக்கொண்டிருந்ததை மறந்து விடுகிறார்.

தண்ணீரின் நடுவில் துரை


ஒரு அடியாள் படையைத் திரட்டி அனுப்புகிறார். அதில் 'நக்கீரன்' அப்பொழுதைய ஆசிரியர் துரை, அச்சக இன்சார்ஜ் சுந்தர் இவர்களுடன் இன்னும் நாலைந்து அடிப்பொடிகள் கீழ்ப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து 'சத்ரியன்' அண்ணா நகர் அலுவலகம் செல்கின்றனர். குடிபோதையில் இருக்கும் அடியாள் படை கீழ்த்தரமாக பேசுகிறது. அதனை கடுமையாக‌ ஜி.கே.ராஜ் எதிர்த்துப் பேச,மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுந்தர், ஜி.கே.ராஜை வெட்ட முயற்சிக்கிறார். முடிந்தமட்டில் தடுத்தாலும் ஜி.கே.ராஜ் கையில் ஆழமான வெட்டு விழுந்து விடுகிறது. அதைத்தொடர்ந்து அலுவலகத்தில் இருக்கும் அனைவரும் சூழ்ந்துவிட, தப்பித்தால் போதும் என கோபால் அனுப்பி வைத்த கும்பல் ஓடி விடுகின்றது.

காவல்துறை வழக்குப் பதிவு செய்த நிலையில் நடப்பது ஜெ.ஆட்சி என கோபாலுக்கு புத்தியில் உறைக்கிறது. கோபால் உட்பட எல்லோரும் தலைமறைவாகி முன் ஜாமீன் எடுக்கின்றனர். அதன்பின் காலில் விழுந்ததனாலும் இன்னும் சில காரணங்களாலும்  காலப்போக்கில் வழக்கு நீர்த்துப்போகிறது. தம்பி தம்பி என உருகுவதில், கோபால் பாசத்தில் வானத்தைப்போல விஜயகாந்த என அங்கு பணி செய்த அனைவரும் சொல்வதுண்டு. ஆனால் தம்பிகளை வெட்ட ஆட்களையும்  கோபால் அனுப்புவார்.

கோபாலின் மீசை வழக்கம் போல் வெளியில் யாருக்கும் தெரியாமல் அப்போது மடங்கியது .

இனி இந்த பதிவுக்கு வருவோம்.



தினகரனின் அடியாள் ஆர்.எம்.ஆர். குறித்து நாம் சில பதிவுகள் எழுதியுள்ளோம். சமீபத்தில் இவர், ஊதிய உயர்வு கோரிக்கைக்காக போராட்டம் நடத்திய மகேஷ் என்னும் ஊழியரை தாக்கியது குறித்து பதிவு எழுதியிருந்தோம். அதைத்தொடர்ந்து மகேஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் சூழ்நிலை உருவானது.

ஆர்.எம்.ஆர். குறித்து நிறைய செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில் கலாநிதிமாறன் அவரை அழைத்து கடுமையாக திட்டியதாகத் தெரிகிறது. "சக்சேனா. ராஜா,பிரவீண் என எல்லோரும் புழல் போயிட்டு வந்துட்டாங்க.மிச்சமிருப்பது நீ ஒருத்தன் தான். உனக்கும் போக ஆசை வந்துடுச்சு போல,என்ன செய்வியோ தெரியாது,அவன் கை,காலில் விழுந்தாவது இந்த பிரச்சனையை முடிச்சுடு,முடியலைன்னா அப்படியே போயிடு" என எச்சரித்ததாகவும் சொல்கிறார்கள்.

அதன்பின் ஓரிரு நாளில்  சீப் ரிப்போர்ட்டர் சுரேஷ்,மகேஷை  போனில் அழைத்தாராம். மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் பேசிய அவர், "தம்பி நடந்ததை மறந்துடு, இனி உனக்கு நல்ல காலம் தான். எம்.டி. சார் உன்னை வரச்சொன்னார்" எனச் சொன்னாராம்.

மறு நாள் சன் நெட்வொர்க் அலுவலகத்தில் ஆர்.எம்.ஆரைச் சந்திக்க மகேஷ் சென்றுள்ளார்.

தனது சேரை விட்டு எழுந்து மகேஷை வரவேற்ற ரமேஷ், நீ உட்காருப்பா முதலில் என சொல்லி விட்டு மகேஷ் சேரில் அமர்ந்த பின்பு தான் தனது சேரில் அமர்ந்தாராம்.

நடந்ததை மறந்துடு,அன்னைக்கு ஏதோ கோபத்துல ரொம்ப ஹார்ஷா நடந்துட்டேன்,எதையும் மனசுல வச்சிக்காதம்மா,உன்னோட பிரதரா என்னை நினைச்சுக்கோ.  வெரி சாரி. 10 டேஸ் ஊருக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வந்தாப் போதும்,இந்த மாச சம்பளத்தையும்,இன்கிரிமெண்டையும் அதிகமா கொடுக்கச் சொல்றேன்,ஒன்னாந்தேதியில் இருந்து நீ வேலைக்கு வந்தாப்போதும்.எனக் கையைப்பிடித்த‌ படியே சொன்னாராம்.

சொன்னபடி கடந்த மே 1 ஆம் தேதி மகேஷ் லே அவுட் ஆர்ட்டிஸ்டாக  'தினகரனில்' திரும்பவும் வேலைக்குச் சேர்ந்து விட்டார். ஆபிசில் இருப்பவர்கள் அனைவரும் மிரட்சியாய் பார்த்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் நமட்டுச் சிரிப்பு படியே இருக்கிறார்கள்.

வெறி பிடித்து கடித்து குதறிய அல்சேஷன் நாய் மகேசின் முன் வாலாட்டிக்கொண்டு நிற்கிறது.


Sunday 3 May 2015

நக்கீரனும் வைரமுத்துவும்- வேலிக்கு ஓணான் சாட்சி….!


ழுத்தாளர் மறைந்த ஜெயகாந்தனின் கடிதத்தை மோசடியாகத் தயாரித்து வார்த்தை வியாபாரி வைரமுத்து அம்பலப்பட்டு நாறிப்போன நிலையில் அவரைக் காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறது துருப்பிடித்த போர்வாள் நக்கீரன்.

இந்த இதழில் இரண்டு பக்க மேட்டர். இதுதான்.




இதைப்படித்தால் சில சந்தேகங்கள் எழுகின்றன.

நாம் தீபலட்சுமியிடம் நடந்தவைகளைக் கேட்டோம் என்று ஆரம்பித்து அவர் கருத்தை வெளியிட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்டவை முழுக்க முழுக்க ஏற்கனவே அவர் முகநூலில் சொல்லியவை தான். புதிதாய் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. ஆனால் அவரிடம், இவர்கள் தனியாக கருத்துக் கேட்டது போல எழுதியிருக்கிறார்கள். இது மட்டுமல்ல காட்டமாக சொன்னார் என பக்கத்தில் அமர்ந்து கேட்டு எழுதியது போலவோ,தொலைபேசியில் பேசியது போலவோ காரம் தடவியிருக்கிறார்கள்.

தன்னிடமோ தனது குடும்பத்தினரிடமோ எவ்விதக் கருத்தும் கேட்கவில்லை என இதழ் வந்த அன்று மதியமே ஜெயகாந்தனின் மகள் நக்கீரனுக்கு முகநூலில் சூடு வைத்திருக்கிறார். 



அதானே பொய்க்கு அலங்காரப்பூச்சு செய்வதற்கு நக்கீரனுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும் ? கைவந்த கலை தானே அவர்களுக்கு.

அடுத்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவின் பேட்டியை வெளியிட்டிருக்கிறார்கள். கவிஞர் ’உருக்கமாக’ பேசினாராம்,நக்கீரன் சென்டிமென்ட் தூவுகிறது. படிப்பவர்கள் மத்தியில் தவறு வைரமுத்துவிடம் இல்லை என உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது இதன் நோக்கம்.

வைரமுத்து தன் தரப்பு சாட்சியாக U.S.S.R. நடராஜன் என்பவரை முன்னிறுத்தி தப்பிக்கிறார். (யார்றா அது?) U.S.S.R.நடராஜன் என்பவரோ ஜெயகாந்தனின் பாராட்டுக் கடிதம் உண்மை என்று சூடம் அடித்துச் சத்தியம் செய்கிறார்,அது மட்டுமல்ல கடிதம் கிடைத்த உடன் தொலைபேசி மூலம் ஜெயகாந்தனுக்கு வைரமுத்து நன்றி சொன்னார் எனவும் சொல்கிறார்.
(ஆனால் கவிஞரின் கூட்டுக் களவாணியான ’குமுதம்’ இதழோ கடிதம் கிடைத்தவுடன் வைரமுத்து வீடு தேடிச்சென்று நன்றி சொன்னார் என ஏற்கெனவே எழுதியுள்ளது. எந்தக் கூட்டாளி சொல்வது உண்மை..?)

அத்துடன் இல்லாமல், U.S.S.R. நடராஜன், ஜெயகாந்தனின் இரண்டாம் மனைவி கவுசல்யாவுக்கு எல்லாம் தெரியும் என ஜெயகாந்தனின் வீட்டிலிருக்கும் முக்கிய உறவினை தனது தரப்பு ஆதாரமாய் முன் நிறுத்துகிறார். இது மிக முக்கியமான செய்தி.

றைந்த ஜெயகாந்தன் பாராட்டுக் கடிதத்தை மோசடியாக வைரமுத்து தயாரித்தார் என்னும் குற்றச்சாட்டை எழுப்பியவர் அவரது மகள் தீபலட்சுமி.

குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவோ தனது தரப்பு சாட்சியாக U.S.S.R.நடராஜன் என்பவரைக் கைகாட்டி தப்பிக்கிறார். U.S.S.R.நடராஜனோ, ஜெயகாந்தனின் இரண்டாம் மனைவி திருமதி கவுசல்யா அம்மையாருக்கு எல்லாம் தெரியும் எனச் சொல்வதோடு மட்டுமல்லாமல் குற்றச்சாட்டைக் கூறிய அவரது மகள் தீபலட்சுமி மாடியில் வசிப்பதால் அவருக்கு எதுவும் தெரியாது எனவும் பதில் குற்றம் சாட்டுகிறார்.

இந்நிலையில் ஒட்டுமொத்த பிரச்சினையும் ஜெயகாந்தன் மனைவி திருமதி.கவுசல்யா அவர்களின் பதிலில் தான் இருக்கிறது. அவர் பதில் தான் மோசடிக்கடிதமா என்னும் வினாவுக்கு உரிய விடையைத் தரும்.

அல்லது செத்துப்போன ஜெயகாந்தனின் கடிதத்தை மோசடியாகத் தயாரித்தது போல் உயிருடன் வீட்டில் அமைதியாய் இருக்கும் ஜெயகாந்தனின் மனைவியின் பெயரை வைத்து அடுத்த சுற்று ஏமாற்றுக்கு வைரமுத்து கோஷ்டி தயாராகி விட்டதா என்பது தெரியவரும்.ஆனால் நக்கீரனோ திருமதி.ஜெயகாந்தனின் கருத்து எதையும் வாங்கிப்பதிவு செய்யவில்லை. வைரமுத்துவுக்கு ஆதரவான கருத்துடன் மேட்டருக்கு  சுபம் போட்டு  விட்டது.

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில், வழக்கிற்கு தொடர்பற்ற மூன்றாம் தரப்பான க. அன்பழகன் கருத்தை கேட்டுத்தான் நீதிபதி தீர்ப்பு சொல்ல வேண்டும் என பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் நக்கீரன் இங்கோ, வழக்குத் தொடர்ந்த, பாதிக்கப்பட்ட தரப்பு கருத்தையே கேட்காமல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தையே  தீர்ப்பாகச் சொல்லி விட்டது. 

இது பித்தலாட்டமன்றி வேறென்ன..? மாடியில் வசிக்கும் மகள் தீபலட்சுமியின் கருத்தை வாங்கியதாய்ச் சொல்லும் நக்கீரன் கீழ் வீட்டில் வசிக்கும் ஜெயகாந்தனின் மனைவி கருத்தை வாங்கத் துப்பில்லையா..? ஒருவேளை வாங்கினால் வைரமுத்துவின் அடுத்த மோசடிச்சுற்றும் அம்பலமாகி விடும் என்னும் பயமா தெரியவில்லை. இதுவே தனக்குப் பிடிக்காத நபர்கள் தொடர்புடைய விஷயமாய் இருந்தால் அதில் நக்கீரன் என்னவெல்லாம் செய்திருக்கும் ? சம்பந்தப்பட்ட நபர் கருத்து சொல்லாவிட்டாலும் தன் தரப்பை கிசுகிசு பாணியில் எழுதி விட்டு அவரது ’நட்பு’ வட்டாரங்கள் சொல்கின்றன என்றோ ’நம்பத்தகுந்த’ வட்டாரங்களில் இருந்து தகவல் எனவோ கூச்சமில்லாமல் எழுதுவது தானே நக்கீரன் பாணி.? இங்கோ உண்மையை கோணிப்பையில் போட்டு மூட முயற்சிக்கிறது.

மேலும் இதில் ’நமது நிருபர்’ என பைலைன் வேறு. உயிருக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய மிக முக்கியமான செய்திப்பதிவை எழுதியிருந்தாலோ அல்லது தரக்குறைவான செய்தியாக இருந்தாலோ ’நமது நிருபர்’ என்று பைலைன் போடுவது சரி. ஆனால் ஊரறிந்த பிரச்சனையில் கருத்துச் சொன்னவர்கள் எல்லாரும் முகம் காட்டியிருக்க நக்கீரனோ பதிவை எழுதியவருக்கு ’நமது நிருபர்’ என்று முக்காடு போட்டுள்ளது.

மோசடி செய்து அம்பலப்பட்ட வைரமுத்து,அவர் தரப்பு சாட்சி ஆகியோருடன் கைகோர்த்து அவர்கள் சொன்னதை எல்லாம் எந்த வரைமுறையும் இன்றி வெளியிட்டு ஜெயகாந்தன் குடும்பத்தினர் மீதே சந்தேகத்தை நக்கீரன் எற்படுத்தியுள்ளது. தங்களது திமுக குடும்பத்தின் மூத்த வணிக உடன்பிறப்பு வைரமுத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டு இனி நீர்த்துப்போகும் என்பது நக்கீரனின் மூட நம்பிக்கை போலும். 

வைரமுத்துவின் மோசடிக் கடிதம் அதனால் எழுந்த சர்ச்சை என எதையும் பேசாமல் ஒட்டுமொத்த பிரச்சனையையும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் இப்படி மொக்கையாக முடிக்கிறது நக்கீரன்.

  //இறந்த பிறகும் அச்சு வாகனத்தின் நாயகனாகவே இருக்கிறார் ஜெயகாந்தன்//

ஆனால் படித்துப் பார்த்தால்

எப்பொழுதும் பொய்மையின் புகலிடமாகவே இருக்கிறது நக்கீரன்

இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

(இந்த இதழுக்குப் பின்  3 நக்கீரன் இதழ்கள் வெளிவந்த நிலையிலும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகளது மறுப்போ, திருமதி ஜெயகாந்தனின் பேட்டியோ இடம்பெறாத நிலையில் இந்த பதிவு வெளியிடப்படுகிறது.)