Tuesday, 19 May 2015

தினமணி- நிமிர்ந்த நன்னடையா ? சாஷ்டாங்கமான வணக்கமா?







ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விடுவித்ததை அடுத்து ’தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் ஒரு தலையங்கம் எழுதியுள்ளார்.படிக்கப் படிக்க பரவசம். தினமணி தலையங்கமா ? இல்லை சித்ரகுப்தன் எழுதிய வாழ்த்துப்பாவா என மனம் ஒருகணம் குழம்பி விட்டது. நீங்களும் படித்து விடுங்கள்.

அதில் சில பகுதிகளை எடுத்து விமர்சனம் செய்துள்ளோம்.

 //நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையிலான சிறப்பு இருக்கை தீர்ப்பளித்திருக்கிறது//

தீர்ப்பு அளித்தவர் சி.ஆர்.குமாரசாமி மட்டுமே. அவருக்கு கீழே வேறு நீதிபதிகள் கிடையாது. ஆனால் சி.ஆர்.குமாரசாமி தலைமையிலான சிறப்பு இருக்கை தீர்ப்பளித்திருக்கிறது என்று வைத்தி எழுதியுள்ளார்.

//கடந்த 3 மாதங்கள், யாரையும் சந்திக்காமல் தனித்திருந்து பிரச்னையை எதிர்கொண்டு வெற்றிபெற்ற ஜெயலலிதாவின் மன உறுதிக்கும்//

மத்திய சட்ட அமைச்சர் அருண்ஜெட்லியை ஜெயலலிதா சந்தித்தாரே? இந்த சந்திப்பு இப்பொழுது வரைக்கும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளதே? அந்த சந்திப்பு குறித்த செய்தி கூட ’தினமணி’யில் வெளிவந்துள்ளதே? ஜெயலலிதாவின் ’மனஉறுதி’யைப் பாராட்டுவதற்கு வசதிவாய்ப்பாக அதனை வைத்தி மறந்து விட்டாரா?

//பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சரவைக்கு இருந்த எதிர்பார்ப்பெல்லாம் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவந்து, ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க வேண்டும் என்பது தான்//

பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார் வைத்தி. இது அவர்களின் எதிர்பார்ப்பு மட்டுமா ? வைத்தியின் எதிர்பார்ப்புமா?

//அதனால் பல நல்வாழ்வுத் திட்டங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாததை தவறு காண முடியாது//

மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய அரசு, அவர்களின் நல் வாழ்வுக்காக செயல்பட வேண்டிய அரசு, அதன்பொருட்டு உறுதிமொழி ஏற்றுப் பதவி ஏற்ற அமைச்சரவை, செய்யத் தவறினால் அதனைச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்ய வேண்டிய பத்திரிகையாளர்,கவனம் செலுத்த முடியவில்லை என்பதில் தவறு காண முடியாது என்று வக்காலத்து வாங்குகிறார். விந்தை தான்.

//சட்டத்தின் பார்வையில் அரசியல் லாபங்களுக்காக வழக்குத் தொடுப்பதை ஊக்குவிக்க கூடாது. என்கிற நீதிபதியின் கருத்து வருங்காலத்தில் அரசியல் காரணங்களுக்காகத் தொடுக்கப்படும் இதுபோன்ற வழக்குகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.//

இந்தக் கருத்தினை தயாநிதி மாறன் தொடர்புடைய ஏர்செல் மேக்சிஸ், தனியார் தொலைபேசி இணைப்பு மோசடி வழக்குகளிலும் சொல்வீர்களா வைத்தி?

//பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்த ஒவ்வோர் அம்சத்தையும் , உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது 919  பக்கத் தீர்ப்பில் மிகத் தெளிவாக மறுஆய்வு செய்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்திருக்கிறார்.//

நிதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பு கர்நாடக உயர்நீதிமன்ற இணையத்தில் 11 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வெளியிடப்பட்டது. ’தினமணி’ தலையங்கம் அதிகபட்சம் இரவு 10 மணிக்குள் எழுதி முடிக்கப்பட்டு அச்சுக்குப் போயிருக்கும். இந்த இடைப்பட்ட 6 மணி நேரத்துக்குள்ளாக 919 பக்கங்களையும் டவுன்லோடு செய்து வரிக்கு வரி படித்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பு ’மிகத் தெளிவான மறு ஆய்வு’ என்று வைத்தி எப்படி முடிவு செய்தார்?

இந்த வழக்கின் ஒவ்வொரு அம்சத்துடனும் சில ஆண்டுகள் செலவிட்ட கர்நாடக அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூட மறுநாள் காலையில் தானே கருத்துச் சொன்னார்?

அவரை விட மிகப்பெரிய சட்ட மேதையா வைத்தியநாதன்? பேசாமல் படிக்காத வழக்கறிஞர் ஆகி விடுங்களேன். ’தினமணி’ வாசகர்களாவது பிழைத்துப் போகட்டும்.

 //நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு ஏனோதானோ என்று எழுதப்பட்ட தீர்ப்பு அல்ல. விரிவாக அலசப்பட்ட விவரங்களுடன் கூடிய தீர்ப்பு.//

//வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு மொத்த வருமானத்தில் வெறும் 8.12 % தான். இதன் அடிப்படையில் தான் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்திருக்கிறது.//

நீதிபதியின் கணக்கிடுதலில் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு வெறும் 8.12% அல்ல 76.76 % என்று இப்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளதே? ஆனால் வைத்தி மட்டும் எப்படி விரிவாக அலசப்பட்ட,  விவரங்களுடன் கூடிய தீர்ப்பு என்று சான்றிதழ் வழங்குகிறார்.

சான்றிதழ் தீர்ப்பை பார்த்து கொடுத்ததா? இல்லை சாதியைப் பார்த்துக் கொடுத்ததா?

சரி அவசரத்தில் உணர்ச்சிவசப்பட்டு தலையங்கம் எழுதிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். மறுநாள் மதியத்தில் இருந்து கணக்கீட்டில் உள்ள குளறுபடி குறித்து தகவல்கள் வந்தனவே? அனைத்துக்கட்சிகளும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டனரே? எல்லா நாளிதழ்களிலும், இணையத்திலும் செய்திகளும் விமர்சனங்களும் வெளிவருகின்றனவே? அது வைத்தியின் கண்களையும்  காதுகளையும் எட்டவில்லையா?

நீதிபதி சி.ஆர்.குமாரசாமி எழுதிய தீர்ப்பை மாற்றுவது தான் கடினம். வைத்தி எழுதிய  தலையங்கத்தை மாற்றுவதுமா கடினம்? வருமானக் கணக்கீட்டுக் குளறுபடி குறித்தும், நீதித்துறை மீது எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்தும் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானதைக் கண்டித்தும் ஒரு தலையங்கம் எழுதுவதில் என்ன சிக்கல்? அவசர அவசரமாய் வரவேற்று தலையங்கம் எழுதிய தினமணி, நிதானமாக சிந்தித்து எழுத, விமர்சனம் எழுத 8 நாட்கள் கடந்த நிலையிலும் தயங்குவது என்?

வைத்தியை எது தடுக்கிறது?

இதைப்போன்ற புகழுரைகளைத் தாண்டி அத் தலையங்கத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி வேறு எதுவும் இல்லை.

தீர்ப்பு வெளியானவுடன் அதிக உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் பரவசத்திலும் காணப்பட்ட ஒரு அதிமுக தொண்டனின் மனநிலையை இத் தலையங்கத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் காண முடிகிறது. ஒரு மூத்த பத்திரிகையாளனின் எழுத்தை எந்த இடத்திலும் காண முடியவில்லை. 

தினமணியின் முகப்பு வாசகமான 'நிமிர்ந்த நன்னடை'க்குப் பதில் கூனிக்குறுகிய சாஷ்டாங்கமான வணக்கத்தைத் தான் வைத்தி செலுத்தியிருக்கிறார்.




ங்கோ கல்கத்தாவில் இருந்து சென்னைக்கு பிழைக்க வந்து, வெளிநாட்டுத் துணி வணிகம் செய்த நிறுவனத்துக்கு விசுவாசமாய் துபாஷி வேலை பார்த்துக்கொண்டிருந்த அதேசமயம், தமிழ்நாட்டு சதானந்திடமிருந்த ’The Indian Express’ பத்திரிகையை தனதாக்கி அதையே துருப்புச் சீட்டாய் வைத்துக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடியாய் உள் நுழைந்து அப்பொழுதிருந்த பழம்தின்று கொட்டை போட்ட பார்ப்பனர்களை எல்லாம் தாண்டி தேர்தலில் போட்டியிட சீட்டும் வாங்கி முக்கிய அரசியல் ஆளுமை ஆனவர், உங்கள் முதலாளி செத்துப்போன ராம்நாத் கோயங்கா. அதற்குப்பின் அவரது அரசியல், பத்திரிகை, பொருளாதார வளர்ச்சி அமோகமாய் ஆனது.

அவரது லாவகமும் குயுக்தியும் லாபியும் உங்களிடமும் இருக்கிறது, கூடுதலாக கூழைக்கும்பிடு போடும் குணமும் இருக்கிறது. நீங்கள் ஏன் அதிமுகவில் சேரக்கூடாது ? 

உங்களுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.


1 comment:

Anonymous said...

100%% true....