Tuesday, 8 November 2011

குமுதம் வங்கிக் கணக்கை கோதை ஆச்சி மட்டுமே நிர்வகிக்க வேண்டும்.நீதிமன்றம் உத்தரவு



26-9-2011 அன்று குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் உண்மையான இயக்குனர்கள் கூட்டம் நடைபெற்றது.அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்,குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் வங்கிக் கணக்கைத் தான் மட்டும் நிர்வகிக்கவும்,தன்னைத் தவிர வேறு யாரும் நிர்வகிக்க உறுத்துக்கட்டளை கோரியும், குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் மேலாண் இயக்குனர் திருமதி,கோதை ஆச்சி அவர்கள் சென்னை 17 ஆவது சிட்டி சிவில் கோர்ட்டில் 29-09-2011 அன்று அசல் மனு (O.S.No.7554 Of 2011)தாக்கல் செய்தார்

















அசல் மனுவின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவம்.


வாதி-திருமதி,கோதை ஆச்சி அவர்கள்,

மேலாண் இயக்குனர்,குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

பிரதிவாதி-இணை மேலாளர்,இந்தியன் வங்கி,புரசைவாக்கம் கிளை,சென்னை.


குமுதம் வார இதழ்,1947 ஆம் ஆண்டு  திரு.எஸ்..பி.அண்ணாமலை அவர்களால் தொடங்கப்பட்டது.திரு.எஸ்..பி.அண்ணாமலை கோதை ஆச்சியின் கணவர் ஆவார்.இவர்களது ஒரே மகன் டாக்டர் ஜவர் பழனியப்பன்.

பி.வி.பார்த்தசாரதி என்பவர் திரு.எஸ்..பி.அண்ணாமலை அவர்களின் கல்லூரி கால நண்பர் ஆவார்.குமுதத்தில் சம்பளம் வாங்கும் ஓர் ஊழியராக பி.வி.பார்த்தசாரதி வேலைக்குச் சேர்ந்தார்.

1971 இல் குமுதம் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றியமைக்கப்பட்டது.நிறுவன எண்(u.22110-tn.1971.பிடிசி006095)பதிவு எண்.6095.

திரு.எஸ்..பி.அண்ணாமலையும் திருமதி கோதை ஆச்சி அவர்களும் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர்களாக செயல்புரிந்தனர்.நிறுவனத்தின் 66சதவிகிதப் பங்குகள்(பெரும்பான்மைப் பங்குகள்) அவர்களிடமே இருந்தன.

1990 இல் பி.வி.பார்த்தசாரதியின் மகன் பா.வரதராஜன் என்பவர் குமுதம் நிறுவனத்தின் இயக்குனராக நல்லெண்ண அடிப்படையில் நியமிக்கப்பட்டார்.

1994 இல் திரு. திரு.எஸ்..பி.அண்ணாமலை மறைந்து போனார்.அவரது ஒரே மகன் என்ற அடிப்படையில் அவரது பங்குகள் முழுவதும் டாக்டர் ஜவகர் பழனியப்பன் அவர்களுக்குச் சொந்தமாயின.

அமெரிக்காவில் கார்டியாலஜிஸ்ட்டாக சுறுசுறுப்பாகவும்,வெற்றிகரமாகவும் பணிபுரிந்து வந்த டாக்டர் ஜவகர் பழனியப்பனுக்கு குமுதத்தை சரிவர நிர்வகிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை.

இதனால் குமுதத்தின் அன்றன்றுள்ள(day to day) செயல்பாட்டை நிர்வகிக்கும் நிர்வாகப்பொறுப்பை பா.வரதராஜன் என்று மேலே சொல்லப்பட்ட நபரிடம் அவர் நம்பி ஒப்படைத்தார்.

நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தன்னிடம் தரப்பட்ட இந்தப் பொறுப்பை வரதராஜன் தான்தோன்றித்தனமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

நிறுவனத்தின் அசோசியேஷன் விதிமுறைகளை வரதராஜன் தன் இஷ்டத்துக்குத் திருத்தினார்.நிறுவனத்தின் ஆயுட்கால இயக்குனராகத் தன்னை அறிவித்துக் கொண்டார்.
இயக்குனர்கள் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம்,வாக்களிக்கும் உரிமை,மினிட் பதிவு செய்வது போன்ற பலவற்றை தனது சொந்த வசதிக்காகத் தானே மாற்றி எடுத்துக் கொண்டார்.

தனக்காக அளவில்லாத சம்பளம் மற்றும் நிறுவன நிகர லாபத்தில் 11 சதவிகிதம் ரெமுனரேஷன் போன்றவற்றையும் வரதராஜன் தன்னிச்சையாகத் தானே நிர்ணயித்து எடுத்துக் கொண்டு நிறுவனத்தை அழியும் நிலைக்கு கொண்டு வந்தார்.

இயக்குனர்களின் கூட்டத்தில் ஒப்புதல் எதுவும் பெறாமல் வரதராஜன் இப்படி விதிமுறைகளை மாற்றி அமைத்தார்.நிதி தொடர்பாக அவர் செய்த முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின.குமுதம் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களைத் துரத்தி விட்டு குமுதம் நிறுவனத்தை கைக்கொள்ளூம் முயற்சியையும் வரதராஜன் ஆரம்பித்தார்.

இந்நிலையில் வரதராஜன் மீது டாக்டர் ஜவகர் பழனியப்பன அவர்கள்,சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ய,அதன் அடிப்படையில் வரதராஜன் கைதானார்.பின்பு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதன் பிறகு இந்து என்.ராம் அவர்களை நடுவராகக் கொண்டு 15-8-2010 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்பொழுதும் நடைமுறையில் உள்ளது.ஆனால் அந்த ஒப்பந்தப்படி தன் பங்குக்கு நிறைவேற்றப்பட வேண்டிய சில வேலைகளை வரதராஜன் சரிவரச் செய்யவில்லை.

புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி விட்டதே என்ற எண்ணத்தில் வரதராஜன் மீது டாக்டர் திரு.ஜவகர் பழனியப்பன் மேற்கொண்டு எந்த நடவடிகையும் எடுக்காமல் விட்டுவிட்டார்.


இந்த நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்காமல் அதைப் புறந்தள்ளும் நோக்கத்தில் டாக்டர் ஜவகர் பழனியப்பனின் பங்குகள் தொடர்பாக அமலாக்கப்பிரிவில் வரதராஜன் ஒரு புகார் செய்தார்.அது தொடர்பான விசாரணை தற்பொழுது முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதால் அதுபற்றி இங்கே விளக்குவது சரியாக இருக்காது.

இதற்கிடையே வரதராஜனும் அவரது சகோதரர் பா.சீனிவாசனும் 20-09-2011 அன்று போர்டு மீட்டிங் என்ற பெயரில் சட்டத்துகுப் புறம்பாக ஒரு கூட்டத்தைக் கூட்டி அதில் தீர்மானம் என்ற பெயரில் சிலவற்றை நிறைவேற்றினர்.

இதையறிந்த திருமதி.கோதை ஆச்சி அவர்கள் சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்து 26-09-2011 அன்று அவசர போர்டு மீட்டிங் ஒன்றைக் கூட்டினார்கள். டாக்டர் ஜவகர் பழனியப்பன அவர்களது தலைமையில் நடந்த அந்தக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

பா.வரதராஜனை குமுதம் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்குவது,வரதராஜ்னுக்கு அளவற்ற அதிகாரம் தரும் விகிதத்தில் அவரால் திருத்தியமைக்கப்பட்ட நிறுவன அசோஷியேஷன் விதிகளை ரத்து செய்வது,திருமதி கோதை ஆச்சி அவர்களை குமுதம் நிறுவனத்தின் நிர்வாக மேலாளராக நியமிப்பது,நிறுவனத்தின் போர்டு ஆப் டைரக்டர்ஸ்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை திருமதி கோதை ஆச்சிக்கு அளிப்பது போன்றவை அந்த முடிவுகளில் சில.

குமுதம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கை இனி திருமதி திருமதி.கோதை ஆச்சி அவர்களே நிர்வகிக்க வேண்டும் என்பதும் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவு.

திருமதி.கோதை ஆச்சி அவர்கள் 31-03-2010 அன்று இந்தியன் வங்கிக்கு ஒரு கடிதம் எழுதினார்.குமுதம் அலுவலகத்தில் நிலவும் சூழ்நிலை பற்றி அதில் தெள்ளத் தெளிவாக அவர் விளக்கியிருந்தார்.

இதற்கு 06-04-2010 அன்று பதில் அனுப்பிய இந்தியன் வங்கி நிர்வாகம் தாங்கள் முந்தைய 17-12-2007 தீர்மானத்தின் படி நடந்து கொள்வதாகவும்,நிறுவன போர்டு ஆப் டைரக்டர்ஸ் புதிதாக ஏதாவது தீர்மானம் நிறைவேற்றினால் இனிமேல் அதன்படி வங்கி நடந்து கொள்ளும் எனவும்ம் கூறியிருந்தது.

26-09-2011 அன்று போர்டு மீட்டிங் நடத்தப்பட்டு புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தகவலை திருமதி. திருமதி.கோதை ஆச்சி இந்தியன் வங்கிக்குத் தெரியப்படுத்தினார்.ஆனால் அதற்கு இந்தியன் வங்கியிடம் இருந்து சரியான பதில் எதுவும் வரவில்லை.

தற்பொழுது வரதராஜன் ஒருவரே குமுதம் வங்கிக் கணக்கு தொடர்பாக கையெழுத்திட்டு ஒப்புதல் தெரிவிக்கும் ஒரே நபராக இருக்கிறார்.இதை மாற்றி இந்தியன் வங்கி குமுதத்தின் நிறுவனர்கள் மற்றும் உரிமையாளர்களை அங்கீகரிக்க வேண்டும்.

தமிழ் கூறும் நல்லுலகத்தில் குமுதம் வார இதழை வளர்த்து ஆளாக்கி அதை மக்கள் மனதில் இடம் பெறச் செய்தவர்கள் குமுதத்தின் நிறுவனர்கள் மற்றும் அதன் உண்மை உரிமையாளர்களே..அதை மனதில் கொண்டு இந்தியன் வங்கி நிர்வாகம் செயல்பட வேண்டும்.

வரதராஜன் செய்த தகிடுதத்தங்களால் குமுதத்தின் உண்மை உரிமையாளர்கள் பெரும் நிதியிழப்புக்கும் மனச் சோர்வுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.வரதராஜன் அந்த அளவுக்கு நம்பிக்கை மோசடி செய்திருக்கிறார்.

இந்த நிலையில் குமுதம் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக மேலாளரான திருமதி.கோதை ஆச்சி அவர்கள் மட்டுமே இனி குமுதம் நிறுவனத்திற்கான இந்தியன் வங்கிக் கணக்கை நிர்வகிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கோதை ஆச்சி அசல் மனுவில் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் வங்கிக் கணக்கை வேறு யாரும் நிர்வகிக்க இடைக்கால உத்தரவு விதிக்கக் கோரி ஒரு மனுவினையும் (I.A.16197 Of 2011)தாக்கல் செய்தார்.

மனுத் தாக்கலுக்குப் பிறகு மாண்புமிகு சென்னை 17 ஆவது சிட்டி சிவில் கோர்ட் திருமதி கோதை ஆச்சி அவர்கள் தவிர வேறு யாரும் குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் வங்கிக் கணக்கை நிர்வகிக்க இடைக்காலத் தடை உத்தரவினை 30-09-2011 அன்று விதித்தது.


No comments: