Monday, 5 March 2012

கொலைகளை வழிமொழியும் விகடன் தலையங்கம்!
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமேஎன்னும் தாயுமானவரின் சொற்றொடரைத் தாங்கி வாரவாரம் வெளிவரும் விகடன் இந்த வாரம் படுகொலைகளை ஆதரித்து கொடூரமாய்த் தலையங்கம் எழுதியிருக்கிறது.

ஆனந்த விகடனின் இந்த வார (07-03-2012) மனித உரிமையும் போலீஸ் சுதந்திரமும் என்ற தலைப்பிலான தலையங்கம் மிகவும் வன்மமும் அனைவராலும் கண்டிக்கத் தக்கதுமான ஒன்று.
இந்தத் தலையங்கம் என்கவுண்டரை ஆதரிப்பதாகவும் போலீஸ்துறைக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்க வலியுறுத்துவதாகவும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு அறிவுரை சொல்வதாகவும் அமைந்து இருக்கின்றது.

மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பவர்களுக்கு எதிராய்ச் சாட்டையைச் சொடுக்கும் இதழ் என்னும் பிம்பத்துடன் இதுவரை வாசகர்களால் அறியப்பட்ட விகடன் இப்பொழுது 5 மனித உயிர்களைத் துப்பாக்கித் தோட்டாக்களுக்குத் தின்னக் கொடுத்த போலீசு துறையின் செயலுக்கு வக்காலத்து வாங்கி தனது முகத்தைக் காட்டியிருக்கிறது.

இந்த தலையங்கத்துக்கு நாம் நமது வார்த்தைகளில் பதில் சொல்வதைக் காட்டிலும் இந்த வார ஜூனியர் விகடன்,ஆனந்த விகடனில் வெளிவந்த எழுத்துக்களில் இருந்தே  பதில் சொல்ல விரும்புகிறோம்.

விகாரமான தலையங்கம்.

“பொதுவாக என்கவுண்டர் சம்பவங்களின் போது மனித உரிமை ஆர்வலர்களின் குரல்கள் உரத்து ஒலிப்பது வழக்கம் தான்.
இந்த முறை கூடுதலாகச் சற்று மாறுதலான ஒரு காட்சியையும் காண முடிந்தது.துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தைப் பார்வையிட்டு தகவல் திரட்டச் சென்ற மனித உரிமைக் குழுவினருக்கு அந்தப்பகுதி மக்கள் ஒத்துழைக்க மறுத்ததோடு அவர்களைத் திருப்பிச் செல்லும் படி வற்புறுத்தியும் இருக்கிறார்கள்.

பதில்-ஜூனியர் விகடன் 04-03-2012 தேதியிட்ட இதழ் பக்கம் 14 இல் விகடன் தலையங்கம் அறிவுரை சொல்கிற மனித உரிமைக் குழுவிற்குத் தலைமை வகித்தவரும் நீண்டகால மனித உரிமைச் செயற்பாட்டாளருமான பேராசிரியர் அ.மார்கஸ் சொன்ன கருத்து பிரசுரம் ஆகியுள்ளது. இது தான் அது.

இதுவே விகடன் தலையங்கத்துக்குப் பதில்.விகாரமான தலையங்கம்.

”போலீசாருக்கு குறுக்கிடற்ற சுதந்திரத்தை அளிக்க வேண்டும்.சூழ்நிலைக்கு ஏற்ற முடிவு எடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும்,அப்பொழுது தான் குற்றவாளிகளுக்கு அச்சம் பிறக்கும்,குற்றங்கள் குறையும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.
இந்தக் குரல்கள் நியாயமானவை தான்.சமூகத்தில் தவறு செய்தால் தண்டிக்கப் படுவோம் என்ற அச்சம் இருந்தால் தான் குற்றங்கள் குறையும்.போலீசாரைக் குற்றவாளிகள் துப்பாக்கிகளால் எதிர்கொள்ளும் பொழுது போலீசார் மட்டும் லத்திகளால் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாது.”

பதில்:

தலையங்கம் வெளிவந்த அதே 07-03-2012 தேதியிட்ட இதழில் பக்கம் 66 இல் வெளிவந்த வாசகர் கேள்வி பதிலில் ஒரு வாசகர் எழுதியுள்ள கேள்வியும் பதிலும் இதற்குப் பொருத்தமான ஒன்று.


மக்கள் உனர்ச்சி வேகத்தில் சொல்வதை எல்லாம் நடைமுறைப்படுத்த முடியாது பாஸூ.

குமுதத்தின் விலை ரூ.10.ஆனால் ஆனந்த விகடன் விலை ரூ.15 இது மிக அதிகம்.அதனை ரூ.10 க்கு விற்க வேண்டும் என்று வாசகர்கள் எல்லாம் ஏகோபித்த குரலில் சொல்கிறார்கள்.அதை உடனே நடைமுறைப்படுத்த முடியுமா என்ன?

இரு வாரத்திற்கு முந்தைய 26 பிப்ரவரி 2012 தேதியிட்ட ஜூனியர் விகடனைக் காசு கொடுத்து வாங்கினால் அந்த இதழில் விகடன் முதலாளி நிறைய்ய்ய காசு வாங்கிக் கொண்டு 48 பக்கத்தில் 14 பக்கங்கள் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.
பெரும்பாலும் விளம்பரம் வந்த இதழினை நம்மிடம் ரூ.10 வாங்கிக் கொண்டு நம் தலையில் கட்டி விட்டார்.34 பக்கங்களின் விலை ரூ.7 என்பது தான் சரி.

ஆனால் 10 ரூ.நம்மிடம் ஏமாற்றி வாங்கி நிர்வாகம் பிக் பாக்கெட் அடித்து விட்டது என்று வாசகர்கள் நினைக்கிறார்கள்.

உடனே ரோஷப்பட்டு பணத்தைத் திரும்பக் கொடுத்து விடுமா நிர்வாகம்?

அறிவார்ந்த வாசகன் தெளிவுடன் நினைப்பதையே நிர்வாகத்தால் செயல்படுத்த முடியாத பொழுது என்கவுண்டர் விஷயத்தில் ஊடகங்கள் கட்டமைக்கும் பொய்யான பிரச்சாரத்தினை நம்பி உணர்ச்சிக் கொந்தளிப்பில் மக்கள் பேசுவதை எல்லாம் நடைமுறைப்படுத்த முடியாது.

மக்களின் சிந்தனைப்போக்கு தவறு என்பதைச் சுட்டிக் காட்டுவது தான் உண்மையான பத்திரிகையின் கடமையாய் இருக்க முடியும்.

விகாரமான தலையங்கம்.

”இந்தத்தருணத்தில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உண்டு.மனித உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்பட அனுமதிப்பது நிச்சயம் ஆபத்து தான்.அதே நேரம் காவல்துறை எதைச் செய்தாலும் முன்முடிவோடு அவர்கள் மீது குற்றஞ்சாட்டுவது காவல்துறையினரை ஒட்டுமொத்தமாக பலவீனப்படுத்திவிடும்.இது அதை விடப்பெரிய ஆபத்து.”

பதில்:04-03-2012 தேதியிட்ட ஜூனியர் விகடனில் எகிற வைக்கும் என்கவுண்டர் சந்தேகங்கள் என்ற தலைப்பில் என்கவுண்டர் சம்பவத்தில் 10 சந்தேகங்களை மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.இதைப் படித்துப் பார்த்தால் மனித உரிமை ஆர்வலர்கள் முன் முடிவுடன் இந்தச்சம்பவத்தைக் குற்றம் சாட்டவில்லை.காரண காரியங்களுடன் தான் குற்றம் சாட்டியிருக்கின்றார்கள் என்பது தெரியும்.

இதற்கு மேல் விகடன் தலையங்கத்துக்குப் பதில் சொல்வது நமது நேரத்தை விரயமாக்கும் செயல்.

ன்கவுண்டர் சம்பவத்தில் தன்னுடைய அடிப்படைப் பொறுப்புணர்வினைத் தூக்கி எறிந்து விட்டு நீதித்துறையின் பொறுப்பு பற்றியெல்லாம் போதிக்கும் விகடன்,மனித உரிமை ஆர்வலர்களுக்கு அறிவுரை சொல்லும் விகடன் போலீசு அராஜகத்துக்கு வக்காலத்து வாங்கும் நிலைக்குத் தரம் தாழ்ந்து விட்டது.

வங்கிக் கொள்ளையில் 5 நபர்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட விஷயத்தில் வார்த்தை ஜாலங்களுடன் ஒரு கொடூரமான சிந்தனையை வாசகர்களின் மனதில் விதைத்திருக்கிறது.

இதழில் எத்தனை செய்திகள் வந்தாலும் தலையங்கம் தான் நிர்வாகத்தின் கருத்தாகப் பார்க்கப்படும்.

என்கவுண்டர் விஷயத்தில் விகடனின் கருத்தினை அறிந்து கொண்டோம்.

இது விகடனாருக்கு ஏற்பட்ட தற்காலிகப் பிசகலா?

அல்லது இதுதான் விகடனாரின் உண்மை முகமா?

2 comments:

சாத்தப்பன் said...

கலிங்கத்துப் போருக்குப் பின் அசோகர் மனம் மாறி அகிம்சைவாதியாய் மாறி மரம் நட்டார் என்று வரலாறு சொல்கிறது.
ஆனால் இங்கோ சிலர் 5 பேர் என்கவுண்டருக்குப் பின்னும் மனம் மாறவில்லை.
என்னத்தச் சொல்றது...

சாத்தப்பன் said...

இந்த வாரம் மார்ச் 21 விகடன் தலையங்கம்.இது.அப்படியே பிளேட்டை மாத்திப் போட்ருக்காங்க சார்.அசோகருக்கு ஞானம் வந்துடுச்சான்னு தெரியலை!

யாதும் ஊரே... யாவரும் கேளிர்' என்று காலங்காலமாக உறவு கொண்டாடியவன் தமிழன். திரை கடலோடித் திரவியம் தேட வெளிநாடுகள் செல்லும்போதும், தேசத்துக்குள்ளேயே வேறு ஒரு மாநிலத்தில் பிழைப்பு தேடிப் போகும்போதும் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானவனும் தமிழனே. ஈழத் தமிழன் என்ற அடையாளம் தாங்கிச் சென்றாலே, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் எத்தகைய வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவிக்க வேண்டி இருக்கிறது என்ற 'அடையாள அநீதி'யைக் கண்டு தினம் தினம் மனம் குமுறிக்கொண்டு இருப்பவர்கள்தானே நாம்?

இப்படி எவ்வளவோ கசப்புமிக்க அனுபவங்களைப் பெற்றிருக்கும் தமிழனை - 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்று உலகுக்கே விருந்தோம்பலைக் கற்றுத்தந்த தமிழனை - வடநாட்டு முகம்கொண்ட மனிதர்களைப் பார்த்தாலே வெறுப்பை உமிழ்ந்து, வன்முறையை யோசிக்கும் மனோபாவத்துக்குள் மெள்ள மெள்ளத் தள்ளிக்கொண்டு இருக்கிறது காவல் துறை!

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்தேறிய கொள்ளைச் சம்பவங்களும் அவற்றில் காவல் துறையால் அடையாளம் காட்டப்பட்ட குற்றவாளிகளும் வேற்று மாநிலத்தவராக அமைந்துவிட, 'வட இந்தியக் கொள்ளையர்' என்று அவர்களுக்கு மொத்தமாக ஓர் அடையாளப் பெயர் சூட்டி, அதன் தொடர்ச்சியாக காவல் துறை எடுத்துவரும் நடவடிக்கைகள்தான் 'வேற்று முகம்கொண்டு இருந்தாலே அச்சப்படு, ஆத்திரப்படு' என்பதாகத் தமிழ் மக்களைத் தூண்டிக் கொண்டு இருக்கிறது!

புதிய சட்டசபைக் கட்டடமாக இருந்தாலும் சரி... பளபளக்கும் தொழில்நுட்பப் பூங்காவானாலும் சரி... கட்டுப்படியாகும் கூலிக்குள் வேலை பார்க்கிறார்கள் என்று பணிக்கு இந்த 'வேற்று முகங்களை’ ஏராளமாகக் கூட்டிவந்தது தமிழர்கள்தான். இவர்களைத் தமிழகம் வாழவைக்கிறது என்பதோடு சேர்ந்து, இவர்களால் தமிழகம் வளர்கிறது என்பதும்தானே உண்மை?

குற்றங்களைத் துப்புத்துலக்குவதிலும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும் உரிய நேரத்தில் உரிய திறமையையும் கடுமையையும் காட்டத் தவறிய காவல் துறை, இப்போது தங்கள் மீது மக்களுக்கு வந்திருக்கும் அதிருப்தியைத் திசை திருப்புவதற்காகவே இப்படி ஒட்டுமொத்தமாக 'சாயம் பூசும்' வேலைகளைத் தொடர்ச்சியாகச் செய்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கப்போனால், கொம்பு திரும்பிக் குத்திவிடும்!//
late but not bad.