Wednesday, 29 February 2012

மோசடி ஆவணங்கள் மூலம் ரூ.6 கோடி பெற்றுக் கொண்டேன் -திரிசக்தி சுந்தர்ராமன் ஒப்புதல் வாக்குமூலம்!


 


தமிழக அரசியல் வாரமிருமுறை இதழின் பதிப்பாளர் திரிசக்தி சுந்தர்ராமன் மோசடியாக ஆவணங்களை உருவாக்கி சில கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக தனியார் வங்கியின் புகாரின் பேரில் சென்னை மாநகரக் காவல்துறையின் வங்கி மோசடிகளை விசாரிக்கும் மத்தியக் குற்றப்புலனாய்வு டீம் 12 விசாரித்து அவர் மீது 10-11-2011 அன்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 406,419,420,465,468,471 r/w,மற்றும் 120 (B)ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை பதிவுசெய்து கைது செய்தது.இது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளோம்.தமிழக அரசியல் இதழ் இது தொடர்பாக அப்பொழுது ஒரு விளக்கம் வெளியிட்டிருந்தது. 
ஆனால் உண்மை வேறு.திரிசக்தி சுந்தர்ராமன் காவல்துறையிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் தான் செய்தவற்றை விளக்கமாக அளித்துள்ளார்.

அது இது தான்.

2011 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி மாலை சுமார் 17.30 மணிக்கு சென்னை-14,ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை ஹேமமாலினி கல்யாண மண்டபம் முன்பாக வைத்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு குற்ற எண் 499/2011 சட்டப்பிரிவு 406,419,465,468,471 மற்றும் IPC 120(B)இந்திய தண்டனைச் சட்டம் வழக்கினது எதிரி சுந்தர்ராமன் வயது 54,த/பெ,சங்கரன்,நெம்பர்,7/4,4 ஆவது மெயின் ரோடு,இந்திரா நகர்,சென்னை-20,என்பவரை 

சென்னை மத்தியக் குற்றப்பிரிவு 12 ஆவது டீம் ஆய்வாளர் ஆகிய நான் கைது செய்து சாட்சிகள் ஆகிய 1)திரு,N.பாபுகுமார்,வயது 38,த/பெ,நடராஜன்,மற்றும் 2)திரு,Bசதிஷ்குமார்,வயது 42,த/பெ,திரு S.பாலகிருஷ்ணன் என்பவர்கள் முன்னிலையில்

 விசாரணை செய்ய,மேற்படி எதிரி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்ததாக ஒத்துக் கொண்டு,எந்தவிதமான அச்சுறுத்தலோ,ஆசை வார்த்தையோ,துன்புறுத்தலோ எதுவுமின்றி சுயநினைவுடன் 17.40 மணி முதல் சொன்ன ஒப்புதல் வாக்குமூலம்.

என் பெயர் சுந்தர்ராமன்.எனக்கு தற்சமயம் 54 வயதாகிறது.எனது த்ந்தை பெயர் சங்கரன்.எனது தாயார் பெயர் முத்துலட்சுமி.எனது தந்தை பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து ரிட்டயர் ஆகி விட்டார்.எனது தாயார் இல்லத்தரசி.

என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரிகள்.முதல் சகோதரி பெயர் கிரிஜா.இவர் தனது கணவருடன் கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.எனது தங்கையின் கணவர் அசோக் லேலண்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.எனது அடுத்த தங்கை ஜலஜா.இவர் கணவர் பெயர் பாபு.இவர் சிம்சன் குரூப்பில் வேலை செய்து வருகிறார்.

அடுத்த தங்கை பெயர் மைதிலி.இவர் கணவர் பெயர் சந்திரசேகர்.இவர் அசோக் லேலண்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.அடுத்த தங்கையின் பெயர் விஜி.இவர் AGS ஆபிசில் வேலை செய்து வருகிறார்.தனது கணவர் ரவியுடன் கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்எனது கடைசி தங்கையின் பெயர் ஹேமா.இவரது கணவர் பெயர் குரு.தஞ்சாவூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நான் பி.காம். வரை படித்துள்ளேன்.நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.நான் படித்து முடித்து விட்டு இந்தியன் வங்கியில் ஆபிசர் ஆக 1977 முதல் 1992 வரை வேலை செய்து வந்தேன்.அதன் பின்னர் படித்து வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தோனேசியாவில் யூமி என்ற ஷிப்பிங்  நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.அதன் பின்னர் இந்தோனேஷியாவில் நிலக்கரி,இரும்பு,இவைகளை வியாபாரம் செய்து வந்தேன்.

நான் வங்கியில் வேலை பார்த்த பொழுது எனக்குத் திருமணம் நடந்தது.எனது மனைவியின் பெயர் நளினி.எங்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை.எனது மகள் பெயர் மதுமிதா.இவருக்குத் திருமணமாகி விட்ட்து.எனது மருமகன் பெயர் விஜயன்.இவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.எனது மகன் பெயர் மதன் சுந்தர்.இவர் என்னுடன் வியாபாரத்தில் உதவி செய்து வருகிறார்.

நான் இந்தோனேஷியாவில் இருந்து கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியா வந்தேன்.பின்னர் 2008 ஆம் ஆண்டு கிரிஜா ப்ப்ளிகேஷன்ஸ் பி.லிமிடெட் என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தேன்.இதில் நான் எனது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் இயக்குனர்களாக இருக்கிறோம்.இந்த கம்பெனி நெம்பர் 56/21,சாஸ்திரி நகர்,முதல் அவென்யூ,சென்னை-20 என்ற முகவரியில் இயங்கி வருகிறது.இந்த கம்பெனி மூலம் நான் தமிழக அரசியல்,திரிசகதி(பக்திமலர்)திரிசக்தி ஜோதிடம்,தேவதை கொலுசு போன்ற பத்திரிகைகளை வெளியிட்டு வருகிறேன்.

மேலும் GJ மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை நான் 2008 இல் மேற்படி முகவரியில் ஆரம்பித்து அனிமேஷன் ஜாப் வெளியில் இருந்து எடுத்து செய்து வருகிறேன்.இந்த கம்பெனியில் நான்,என் மனைவி,மகள் ஆகியோர் இயக்குனர்களாக இருந்து வருகிறோம்.என் மனைவி 2009 ஆம் வருடம் அக்டோபர் மாத்த்தில் இருந்து மேற்படி முகவரியில் பதிப்பகம் ஆரம்பித்து நடத்தி வருகிறார்.இந்த பதிப்பகம் மூலம் சிறுகதை தொகுப்பு போன்ற புத்தகங்கள் வெளியிட்டு வந்தோம்.

அக்டோபர் 2009 இல் கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்காக யூனியன் பேங்க் ஆப் இந்தியா சேமியர்ஸ் சாலை கிளையில் சுமார் 10 கோடி பிரிண்டிங் மெஷின் வாங்க கடன் வாங்கினேன்.இன்றைய தேதி வரை அதைக் கட்டி வருகிறேன்.

பின்னர் 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் திரிசகதி பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் கம்பெனி ஆரம்பித்து அதனைப் பதிவு செய்தேன்.இதில் ஆரம்பத்தில் நானும் எனது மனைவி மட்டும் இயக்குனர்களாக இருந்து வந்தோம்.அதன் பின்னர் எனது நண்பர் மோசஸ் செல்வநாதன் என்பவரையும் எனது மகன் மதன் சுந்தரையும் பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்களாகச் சேர்த்துக் கொண்டேன்.

எனது பெயரிலும் எனது மனைவி பெயரிலும் ஜாயிண்ட் அக்கவுண்ட் யுனியன் பேங்க் ஆப் இந்தியா சேமியர்ஸ் சாலை கிளையிலும் ICICI வங்கி ராஜா அண்ணாமலைபுரம் கிளையிலும் இதே வங்கியில் கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் கம்பெனி பெயரிலான அக்கவுண்ட்டும் GJ மல்டி மீடியா பெயரிலான அக்கவுண்ட்டும் உள்ளது.   

திரிசகதி பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பெயரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி திருவான்மியூர் கிளையிலும் ICICI வங்கி ராஜா அண்ணாமலைபுரம் கிளையிலும் கணக்கு உள்ளது.
மோசஸ் செல்வநாதன் எனக்கு வியாபார வகையில் பழக்கமான வக்கீல் ரமேஷ் என்பவர் மூலம் பழக்கம்.மோசஸ் செல்வநாதனுக்கு கொட்டிவாக்கத்தில் சுமார் 25 கிரவுண்ட் நிலம் உள்ளது.அதை வாங்க அவரிடம் நான் சுமார் 13 கோடி விலை பேசி 2010 ஆம் ஆண்டு ஆரமபத்தில் அக்ரிமெண்ட் போட்டு அவருக்கு சுமார் 6 கோடி அட்வான்ஸ் கொடுத்திருந்தேன்.இதனை நான் செக்குகளாகவும் கொடுத்துள்ளேன்.

மீத பணம் கொடுக்க அந்த சமயத்தில் என்னிடம் என்னிடம் பணம் இல்ல்லாமல் இருந்தது.அதனால் நான் மோசஸ் செல்வநாதனுக்கு திரிசகதி பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பங்குகள் கொடுத்து ஒரு இயக்குனராகச் சேர்த்துக் கொண்டேன்.

அந்த நேரத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் இயக்குனர்களில் ஒருவரான திரு.ராஜ்குமார் என்னைச் சந்தித்து புதிதாக ஏதாவது புராஜக்ட் ஆரம்பித்தால் எங்கள் வங்கி நிதி உதவி தரத் தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

அதன்படி நான் 2010 ஜூன் மாதம் திரிசகதி பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி திருவான்மியூர் கிளையில் கரண்ட் அக்கவுண்ட் ஆரம்பித்தேன்.கம்பெனியின் டைரக்டர்களாக இருந்த நான் எனது மனைவி,எனது மகன் மதன் சுந்தர்,மற்றும் மோசஸ் செல்வநாதன் ஆகியோர் அப்ளிகேஷன் பார்மில் கையெழுத்து போட்டு அக்கவுண்ட் துவங்கினோம்.அதன்பிறகு நான் கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில்  புத்தகங்கள் அச்சிட புதிதாக யூனிட் ஆரம்பிக்க புரபோசல் கொடுத்தேன்.

அதில் நான் டேர்ம் லோனாக ரூ.15 கோடியும் வொர்க்கிங் கேப்பிடலாக ரூ.3.5 கோடியும் கேட்டேன்.இது தொடர்பாக செம்மஞ்சேரியில் இந்த கம்பெனிக்கு பேக்டரி கட்ட வாங்கவிருக்கும் நிலத்தின் விபரம் மற்றும் வாங்கவிருக்கும் நிலத்தின் விபரம்,விலை அதில் பேகடரி கட்ட ஆகும் செலவு,அதற்குரிய மெஷின்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இதர ஆவணங்களுடன் நான் வங்கியில் புரபோசல் சமர்ப்பித்தேன்.

மேற்படி பேக்டரி கட்ட எனக்குத் தெரிந்த பில்டர் திரு மோசஸ் சம்பத் அவர் நடத்தும் ஆர்பிட் இஞ்ஜினியர்ஸ் நிறுவனத்தின் பேரில் பில்டிங் எஸ்டிமேட் தந்தார்.இதே போல் எனது கிரிகுஜா பப்ளிகேஷன் கம்பெனிக்கு மெஷினரி சப்ளை செய்த சபையர் டிரேடர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.குணசேகரன் அவர்கள் நிறுவன லெட்டர்பேடில் மெஷினரிக்கான கொட்டேஷன் தந்தார்.

ஆர்பிட் இஞ்ஜினியர்ஸ் நிறுவனமும் டிரான்ஸ் பார்மர் மெஷினரி சப்ளை செய்ய கொட்டேஷன் தந்தது.இவைகளை நான் வங்கியில் சமர்ப்பித்தேன்.மேலும் இந்த லோன் படி செக்யூரிட்டியாக செம்மஞ்சேரியில் வாங்கவிருக்கும் நிலம் மற்றும் இயக்குனர் மோசஸ் செல்வநாதன் பெயரிலான OMR சாலை கொட்டிவாக்கத்திலிருக்கும் 25 கிரவுண்ட் நிலம் ஆகியவற்றை வைக்கவிருப்பதாகவும் எனது லோன் புரபோசலில் தெரிவித்தேன்.மோசஸ் செல்வநாதனுக்கு அட்வான்ஸ் கொடுத்த நிலத்தை பேங்க் செக்யூரிட்டியாக கொடுப்பதற்காக நான் மோசஸ் செல்வநாதனிடம் சம்மதம் பெற்றேன்.

இந்த புரபோசலை வைத்து 2011 சனவரியில்  எனக்கு ரூ.1.8 கோடி செம்மஞ்சேரியில் திரிசக்தி கம்பெனிக்கு இடம் வாங்க லோன் சேங்ஷன் செய்தார்கள்.அந்த மாதம் இதற்கான டிடி யை நிலம் விற்ற வெங்கடேச பெருமாள் பெயருக்கு வங்கியில் கொடுத்து விட்டார்கள்.அதன்படி செம்மஞ்சேரியில் உள்ள நிலம் திரிசக்தி பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் பெயரில் பதிவு செய்யப்பட்டு அதன் டாகுமெண்டுகள் வங்கியில் அடமானமாக வைத்துக் கொண்டனர்.

பிப்ரவரி 2011 இல் மெஷினரி வாங்க நான் கொடுத்த சபையர் டிரேடர்ஸ் கொட்டேஷன் பெயரில் ரூ.8,68,50000/வங்கியில் சாங்ஷன் செய்தார்கள்.பிப்ரவரி மாத்த்திலேயே சபையர் டிரேடர்ஸ் பெயரிலான ரு.4,31,40000/க்க்கான டிடி மற்றும் ரு.1,44,15000 க்க்கான டிடி ஆகியவற்றை வங்கியிடம் இருந்து எங்களிடம் கொடுத்தார்கள்.அதை என் மகன் மதன் சுந்தர் இயக்குனர் மோசஸ் செல்வநாதன் ஆகியோர் பெற்று வந்தார்கள்.அப்போது மோசஸ் செல்வநாதனும் வக்கீல் ரமேஷூம் என்னிடம் OMR ரோடு கொட்டிவாக்கத்தில் இருக்கும் நிலத்திற்கான மீத பணத்தைக் கொடுக்க வற்புறுத்தினார்கள்.

நான் என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். மோசஸ் செல்வநாதன் சபையர் டிரேடர்ஸ் பெயரில் வங்கி கொடுத்திருக்கும்  டிடி யைக் குறிப்பிட்டு சபையர் டிரேடர்ஸ் பெயரில் நாமே ஒரு அக்கவுண்ட்டை புதிதாகத் துவங்கி அந்த டிடியை அதில் ரியலைஸ் செய்து தனக்கு பணம் வழங்கும் படி கேட்டார்.நானும் அதனை ஒத்துக் கொண்டு மெஷினரி வாங்க பிறகு பிசினஸ் செய்து பணம் புரட்டிக் கொள்ளலாம் என முடிவு செய்தேன்.

அதன்படி நான் எனது நண்பர் மற்றும் பில்டர் ஆர்பிட் இண்டிரியர்ஸ் உரிமையாளர் திரு.மோசஸ் சம்பத் துக்கு தெரிவித்து அதில் பணம் தருவதாக சொன்னதன் பேரில் அவரும் என் மீது உள்ள நம்பிக்கையில் தன் மனைவி கிரிஸ்டினா மோசஸை வைத்து ICICI வங்கி ராஜா அண்ணாமலை புரம் கிளையில் சபையர் டிரேடர்ஸ் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு ஒப்பன் செய்ய வைத்தார்.

அதில் வக்கீல் ரமேஷ்,மோசஸ் செல்வநாதன் ஆகியோர் சொன்னதன் படி சபையர் டிரேடர்ஸ் பெயரில் வங்கி கொடுத்த இரண்டு டிடி மொத்தம் ரூ.5,75,55000/த்தை நாங்கள் டெபாசிட் செய்து பணமாக்கிய பின் அங்கிருந்து இந்த பணத்தை எனது கம்பெனிகளான GJ மல்டி மீடியா,கிரிகுஜா ப்ப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கும் எனது மனைவி பெயரிலான அக்கவுண்டிற்கும் அவரது வளர்ப்பு மகள் கிரிஜா அக்கவுண்டிற்கும்,மோசஸ் செல்வநாதன் சொன்ன பெயர்களுக்கும் மாற்றினேன்.பிறகு சபையர் டிரேடர்ஸ் இந்த அமவுண்ட்டை ரிசீவ் செய்து விட்டது போல் போலியாக ரசீது தயார் செய்து வங்கிக்கு நாங்கள் கொடுத்து விட்டோம்.

வக்கீல் ரமேஷூக்கு வங்கியில் நல்ல இன்புளுயன்ஸ் இருந்ததாலும்,வங்கியின் இயக்குனர் ராஜ்குமார் நல்ல சப்போர்ட்டாக இருந்ததாலும் மேலும் நான் பத்திரிகை தொழில் செய்து வருவதாலும் என்னை வங்கி ஏதும் செய்ய முடியாது என இருந்து வந்தோம்.பிறகு பிசினஸ் செய்து இதனை சரி செய்து விடலாம் என நினைத்தேன்.

மோசஸ் செல்வநாதன் செக்யூரிட்டியாக அளித்த OMR ரோடு கொட்டிவாக்கம் நில விஷயத்தில் விற்பனை செய்யவோ அடமானம் வைக்கவோ கூடாது என்று நீதிமன்ற உத்தரவு எதும் இருக்கிறதா என்று தாங்கள் கேட்டீர்கள்.அது பத்தி எனக்கு எதுவும் தெரிய வில்லை.மோசஸ் செல்வநாதன் அடமானம் வைக்கும் பொழுது அது குறித்து எனக்குத் தெரிவிக்கவில்லை.

வங்கி முதலில் வழங்கிய ரூ.1.8 கோடி லோன் திரிசக்தி பப்ளிகேஷன்ஸ் க்கு நிலம் வாங்க சரியாகச் சென்றது.பில்டிங் கட்ட வாங்கப்பட்ட லோன் ரூ.82.5 லட்சமும் பிரிண்டிங் மெஷினரி வகையில் கொடுக்கப்பட்ட லோன் ரூ.35.62 லட்சமும் ஆர்பிட் இண்டீரியர்ஸ் அக்கவுண்டில் செலுத்தப்பட்டுள்ளது.

மெஷினரி வகையில் கொடுக்கப்பட்ட லோன் ரூ.5,75,55 000,/லோன் நாங்கள் ஓப்பன் செய்த போலி வங்கி கணக்கு மூலம் எங்களால் பெறப்பட்டது.

ஜுன் 2011 இல் ஏற்கனவே திரிசக்தி ப்ப்ளிகேஷன்ஸ் பெயரில் என் மனைவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பெற்ற லோன் ரூ.1 கோடியை செலுத்தி தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கி லோன் டேக் ஓவர் செய்தது.

நான் பத்திரிகையாளன் என்பதாலும் அரசியலில் எனக்கு செல்வாக்கு உள்ளதாலும் வங்கியில் போலீசில் புகார் செய்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன்.
இன்று 6-12-2011 ஆம் நாள் பகல் சுமார் 17.30 மணிக்கு ராயப்பேட்டை ஹேமமாலினி கல்யாண மண்டபம் முன்பாக வந்த பொழுது போலீசார் ஆகிய தாங்கள் பிடித்துக் கொண்டீர்கள்.

சாட்சிகள் பெயர் மற்றும் விலாசம்.

1)திரு.N.பாபுகுமார்,வயது 38,த/பெ,நடராஜன்,
எண்,41 ஸ்ரீராம் நகர்,சின்ன கொடுங்கையூர்
சென்னை-51

2)திரு B.சதீஷ் குமார்,
த/பெ,பாலகிருஷ்ணன்,நெம்பர் 14,4 ஆவது தெரு PTC காலனி,
திருவான்மியூர்,சென்னை-41.


ஒப்புதல் வாக்குமூல நகல்

இப்பொழுது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.நிற்க.

தமிழக அரசியல் தனது மேலாண் இயக்குனர் திரிசக்தி சுந்தர்ராமனுக்கு ஆதரவான செய்தியை மட்டும் வெளியிட்டு மற்ற மோசடிச் செய்தியை இருட்டடிப்பு செய்தது குறித்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 
ஆனால் அவரது கைது குறித்து ஜூனியர் விகடன் அப்பொழுது  அவரைப் பாதுகாக்கும் விதமாக‌ ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டது.
முழுக்க முழுக்க சுந்தர்ராமனுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட செய்தி இது தான்.
    
இதனை விமர்சித்து அப்பொழுது ஒரு பதிவு வெளியிட்டிருந்தோம்.ஆனால் திரிசக்தி சுந்தர்ராமன் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் மோசடியாக வங்கிக் கணக்கு திறந்தது உட்பட அனைத்தையும் ஒப்புக் கொண்டுவிட்டார்.

இனிமேலாவது விகடன் குழுமம் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை எல்லாம் விட்டு விட்டு எப்பொழுதும் போல் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.


No comments: