Sunday 18 March 2012

"பராக்கிரம" செய்தி ஆசிரியர்-வெறும் குடமும் தளும்பாது...!



இப்பொழுது நாட்டில் எந்த நிகழ்வானாலும் நாம் பார்க்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது சூரியத் தொலைக்காட்சியின் செய்தி.அதில் செய்தியாளர்களை ஆட்டிப் படைப்பவர் ராசா.இவர்  அந்நிறுவனத்தின் துணைத்தலைவரும் கூட.

வர் இப்பொழுது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் அவரது ஆரம்ப காலம் மிகவும் அரைவேக்காட்டுத்தனமானது.நாட்டு நடப்போ அரசியல் அறிவோ எல்லாம் அவருக்கு கொஞ்சம் சுட்டுப் போட்டால் தான் வரும்.ஆனால் தனக்கு எல்லாம் தெரியும் என்னும் கோதாவில் ஒருவித தெனாவட்டாக வலம் வருவார்.பார்ப்பவர்கள் இவர் மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்து ஒதுங்கிப் போய்விடுவார்கள்.ஆனால் நெருங்கியவர்களுக்குத் தான் தெரியும்.அய்யா ஒரு ”ஞானசூனியம்” என்று.(இப்ப மட்டும் எப்படியாம்?இப்பவும் அப்படித்தான் என்று சூரியத் தொலைக்காட்சி நிருபர்கள் கடுப்புடன் சொல்வது நம் காதில் விழுகிறது)

சாம்பிளுக்கு ஒன்று மட்டும் ..

அப்பொழுது தினகரன் நாளிதழ் உண்மையான முதலாளியிடமிருந்து கைப்பற்றப்பட்ட நேரம்.புது முதலாளியின் எடுபிடிகள் நிறையப்பேர் தினகரன் அலுவலகத்தை மதப்புடனும் திமிருடனும் புதுப்பணக்காரன் தோரணையுடனும் வந்த சமயம் அது.அப்பொழுது நடைபெற்ற சம்பவம் ஒன்று செவிவழிச் செய்தியாகி நம் காதுக்குள் வந்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ஒரு செய்தியைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறார்.

குமரியில் நில நடுக்கம்

இது என்ன செய்தி? குறைகுடம் கேட்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மலையைப்பிளக்க வெடி வைத்ததில் அதிக அளவு வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டது.இதனால் வெடிச்சத்த அளவு அதிகமாகியதால் லேசாக நிலத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது.ஆனால் அதை மக்கள் நில நடுக்கம் என்று தவறாக நினைத்து விட்டார்கள்.அது குறித்த செய்தி தான் இது என்று பதில் சொல்லியிருக்கிறார்.
அடுத்து குறைகுடம் கேட்ட கேள்வி இதுதான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை இருக்கிறதா?

இதைக்கேட்டு செய்தியாளர் திகைத்துப் போக அருகில் குறைகுடத்திற்கு அலுவலகத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்த துணை ஆசிரியர்களில் ஒருவர், ”கன்னியாகுமரியில் ஆரல்வாய்மொழி மலை இருக்குல்ல அதச் சொல்லியிருக்காங்க சார்” என்று சொல்லி குறைகுடத்தைக் காப்பாற்றி கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாய் அடுத்த பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றார்.

(ஆனால் தினகரன் துணை ஆசிரியர் அப்பொழுது மனதுக்குள்ளும் மறுநாள் குடிபோதையில் அனைவரிடமும் திட்டினார் என்பதும் செய்திக்குத் தொடர்பில்ல்லாத விஷயம்..)

இங்கு தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை இருக்கிறதா என்பது கூடத் தெரியாமல் ஆச்சரியப்பட்டவர் எல்லாம் இன்று நாடே பார்க்கும் தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் நடைபெறும் சம்பவங்களையும் அரசியலையும் சொல்லும் பிரிவுக்கு ஆசிரியர்....

என்னத்தச் சொல்றது...! நாடு வெளங்குனாப்ல தான்....!
-------------------- 



இதுவும் இப்பொழுது சூரியத் தொலைக்காட்சியில் கோலோச்சும் வெறுங்குடம் ராசா பற்றிய செய்தி தான். 


அப்பொழுது குறைகுடம் முரசொலியில் பிழை திருத்துநராக வேலையில் இருந்தார்.இவரது ஆரம்ப கட்டத்திற்கு அடுத்த கட்டம் தான் இந்த வேலை.அடுத்த கட்டம் இப்படியென்றால் முதல் கட்டத்தில் என்ன வேலை செய்தார் என்று அதிகப்பிரசங்கித்தனமாகக் கேட்கப்பிடாது.

அப்பொழுது முரசொலிமாறன் தமிழன் என்றொரு வாரப் பத்திரிகையை ஆரம்பிக்க முடிவு செய்து அதற்கான வேலையை முழுமூச்சாகச் செய்ய ஒரு குழுவை இறக்கி விட்டிருந்தார்.முரசொலி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக அலுவலகத்தில் இந்தப் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருந்தன.அதற்குப் பொறுப்பாசிரியர் கேசவன் என்பவர்.இவர் யாரென்றால் பழைய தினகரனின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.கொஞ்சம் நல்ல மனுஷரும் கூட.

ஆனால் இவருக்கு கொஞ்சூண்டு வெளியே தெரியாத பந்தா குணமும் உண்டு.தமிழன் இதழ் அலுவலகத்தில் இவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டுக் கொஞ்சம் செல்வாக்குடன் இருந்தார்.பத்திரிகை விரைவில் வெளிவர இருந்த சமயம் அது.

கேசவன் தன்னுடன் பணியாற்றிய நிறையப்பேரைத் தொலைபேசியில் அழைத்து முரசொலி அலுவலகத்திற்கு வாங்க!.பாத்து ரொம்ப நாளாச்சு.பேசுவோம் என்று அழைப்பு அனுப்பினார்.நிறையப்பேர் அவர் அழைப்பிற்கு இணங்க சந்திக்க வந்தாலும் சிலர் மட்டும் என்னத்த...இதுக்கு இவர் தினகரனில் வேலை பார்த்திருக்கலாம்.இந்த வளாகத்தில் இருந்து வர்ற தமிழன் எப்படி உருப்பட முடியும் என்று புலம்பியது தனிக்கதை.(கடைசி வரை தமிழன் உருப்படவில்லை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை)

அந்த சமயத்தில் ஒருநாள் வந்தவர் தான் சண்முகசுந்தரம் என்பவர்.இவர் தினகரனில் வேலை செய்து கொண்டிருந்தவர்.அவருடன் கேசவன் நாட்டு நடப்பு,தினகரன் நடப்பு என்று பேசிக் கொண்டிருந்தார்.அப்பொழுது திடீரென்று தூரத்தில் இருந்த ஒருவரை நோக்கிக் கடுமையாகச் சத்தம் போட ஆரம்பித்தார்.

ஏய்..இங்க வா..நான் உன்னைய என்ன சொன்னேன்?ஆனா நீ அங்க என்ன பண்ணிக்கிட்ருக்க.. இந்த மேட்டர் முழுவதும் தப்புத்தப்பா இருக்கு.அத ஒழுங்காப் பாருன்னா,நீ என்னடான்னா வண்ணத்திரையில நடுப்பக்கத்தை விரிச்சு நடிகையைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்ருக்க.இதுக்கா உனக்கு இங்க சம்பளம் தர்றாங்க...இது சரிப்படாது.இப்படி இருந்தா இந்த பீல்டுல குப்ப கொட்ட முடியாது பாத்துக்க..போய் ஒழுங்கா வேலையப் பாரு.இல்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்க என்று எச்சரித்து அனுப்பினார்.

வண்ணத்திரையின் நடுப்பக்கம் பார்த்த மவராசனும் தலையைக் குனிந்து கொண்டு இடத்தைக் காலி செய்தார்.

இப்படி இருந்தா இந்த பீல்டுல குப்பை கொட்ட முடியாது என்று அன்று எச்சரிக்கப் பட்ட மவராஜா யாரு தெரியுமா?

சூரியத் தொலைக்காட்சியில் செய்தியாளர்களை ஆட்டிப் படைக்கும் மவராசன் தான் அவர்.
அன்று அலுவல் நேரத்தில் ஒழுங்காய் வேலை செய்யாமல் திட்டு வாங்கியவர் இன்று நிறுவனத்தின் துணைத்தலைவர் என்ற கோதாவில் அலுவலகத்தில் தனக்குக் கீழ் பணியாற்றும் அத்தனை பேரையும் தரக்குறைவாகப் பேசுவதே இவரின் தகுதியாகி விட்டது.

இவருக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் இவரை விட இத்துறையில் தகுதியானவர்களாக இருந்தாலும் என்ன செய்வது?
இவர் பரம சிவன் கழுத்துப் பாம்பாக இருக்கிறார்.அதனால் கருடன்களை எல்லாம் நாவில் வந்தபடி பேசித் திரிகிறார்."உள் நோக்கத்துடன்" சில பெண் ஊழியர்களையும் கேவலமாய்த் திட்டிக் கொண்டிருக்கிறார்.கொஞ்ச நாளில் ஊழியர்களை வேலையை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.

என்னத்தச் சொல்றது?நாடு வெளங்குனாப்ல தான்....

No comments: