Friday 19 October 2012

விகடன் இன்று ஒன்று நன்று-வாசகர் காசில் வைகோ விளம்பரம்...!





இதழ்களில் வரும் நேர்காணல்,திரை விமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊர் பாஷையில் சொல்லப் போனால், அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும் இன்றைய போஸ்ட்மார்ட்டம் பகுதிக்கு நாம் ஆனந்த விகடனில் வெளியாகும் இன்று ஒன்று நன்று என்ற தொலைபேசி நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம்.

ஆனந்த விகடனில் இன்று ஒன்று நன்று என்று ஒரு தொலைபேசி பதிவு நிகழ்ச்சி.ஏறத்தாழ கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.ஆ.வி.தொலைபேசி எண்ணுக்கு காசு செலவு செய்து வாசகர் அழைத்தால் வாரம் ஒரு நபர் ஏதாவது ஒரு கருப்பொருள் குறித்தோ,சுவையான சம்பவங்கள் குறித்தோ,பாதித்த நிகழ்ச்சி குறித்தோ,தன்னம்பிக்கை,வரலாறு,சுற்றுச்சூழல்,விடாமுயற்சி என ஏதாவது ஒன்று குறித்துப் பேசுவார்.

அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் துறைசார்ந்த வல்லுனர்களாகவோ,முக்கியமான ஆளுமைகளாகவோ அல்லது எதுவும் இல்லா விட்டால் ஆனந்த விகடனின் நிருபர்களுக்குத் தெரிந்தவர்களாகவோ இருப்பர்.நிகழ்ச்சியின் நோக்கம் வாசகர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லுவதன் மூலமாக விகடன் குழுமம் தனது நிறுவனப் பெயரை அனைத்து தளத்திலும் நிலை நிறுத்துவது தான்.

இந்த நிகழ்ச்சியில் சாருநிவேதிதா, யுகபாரதி,நா.முத்துக்குமார்.சுதா ரகுநாதன்,ஐஏஎஸ் அதிகாரி சகாயம்,உதயசந்திரன்,பா.விஜய்,தமிழருவி மணியன் என நிறையப்பேர் பங்கேற்றுள்ளனர்.




இதில் ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 ஆவது வாரத்தில் பங்கேற்றுள்ளார்.ஒரு மேடைப்பேச்சாளர் என்ற வகையிலும் தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிடத்தகுந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்ற வகையிலும் அதில் எந்த தவறும் இல்லை.மேலும் ஆனந்த விகடன் பல்வேறுதுறை பிரால்யங்களையும் அழைக்கிற வகையில் அதில் அரசியலைச் சேர்ந்த சம்பத் பேசுவது நிச்சயம் சரிதான்.

சுதா ரகுநாதனே வாசகனுக்கு உபயோகமான ஒரு செய்தியைச் சொல்கிறார் என்ற நோக்கில் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது நாஞ்சில் சம்பத் பல மடங்கு தகுதியானவர் தான்.ஆகவே அதனை வரவேற்கிறோம்.



ஆனால் இன்றைய 24-10-2012 தேதியிட்ட ஆனந்த விகடனைப் பார்த்தால் இன்று... ஒன்று... நன்று... இந்த வார நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் பேசுகிறார் பேசுகிறார் என்று அறிவிப்பு வந்துள்ளது.


இந்த நிகழ்ச்சியில் இதுவரை நமக்குத் தெரிந்த அளவில் இரண்டு முறை பங்கேற்கும் வாய்ப்பு யாருக்கும் வழங்கப்பட்டதில்லை.இவருக்குத் தான் அது வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்த விகடன் போன்ற வணிகப் பத்திரிகையில் இரண்டாம் முறை வருமளவுக்கு இவர் மிகப்பெரிய மாஸ்ஹீரோவோ ஹீரோயினோ கூடக் கிடையாது.

அப்படியானால் இவருக்கு மட்டும் என்ன முக்கியத்துவம்? அப்படி மற்றவர்களை விட இவர் என்ன சிறப்பானவர்..?முன் மாதிரி வாழ்க்கை வாழ்பவர்..?இவர் எந்தத் துறையில் சிறந்த ஆளுமை மிக்கவர் என்பதை அறிவது அவசியம்.

ஆக அதைப் பார்ப்போம்.நாஞ்சில் சம்பத் என்பவர் யார்..?அவர் அரசியல்வாதி என அறியப்பட்டாலும் அதைத் தாண்டி ஒரு முகம் அவருக்கு உண்டு.

அரசியலைத் தாண்டி  நாஞ்சில் சம்பத்தின் தகுதி என்ன..?

பொதுவான ஒரு வாசகனின் அளவுகோலின் படி நாஞ்சில் சம்பத் அரசியலைத் தாண்டி  ஒரு பட்டிமன்ற பேச்சாளர்.அவ்வளவு தான். எந்த தலைப்பின் கீழ் எந்த அணியின் கீழ் அவர் பேசுகிறாரோ அதற்கு வலுவூட்டும் விதம் சிறப்பாகப் பேசுபவர்.இந்த அளவுகோலின் படி பார்த்தால் அவரைப்போல தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் இவரைப்போலும் இவரைவிடச் சிறப்பாகவும் இருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா,பர்வீன் சுல்தானா,பாரதி பாஸ்கர்,மதுக்கூர் ராமலிங்கம்,ராஜா,ஞானசம்பந்தன் என்று அந்த வரிசையை நீட்டிக் கொண்டே செல்லலாம்.இதன்படி பார்த்தால் நாஞ்சில் சம்பத் நாட்டில் எங்கும் காணக்கிடைக்காத ஆளுமை அல்ல.

இவர்கள் நிறையப்பேருக்கு இன்று ஒன்று நன்று என்ற தொலைபேசி நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்முறை கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஆனால் நாஞ்சில் சம்பத்துக்கு இரண்டாவது முறை வாய்ப்பு.இந்த வகையில் இவரது பங்கேற்பு தவறு.


அரசியல் ரீதியில்  நாஞ்சில் சம்பத் யாரென்று பார்த்தால் தமிழ்நாட்டில்  2 சதவீதம் வாக்கு வங்கி உள்ள ம.தி.மு.க. என்னும் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்.

ம.தி.மு.க.  கட்சிக்கு கொள்கை என்ன என்று பார்த்தால் தி.மு.க.வின் கொள்கைகளை அப்படியே நகல் எடுத்தது போல் இருக்கும் ஏட்டளவில். (சில விஷயங்களைத் தாண்டி பிற அனைத்திலும்)

செயற்பாட்டளவில் என்று பார்த்தால் ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக,திமுக என ஏதாவது ஒரு கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று விரல்விட்டு எண்ணக்கூடிய சில சீட்டுகளுக்காகவும் 'இன்னபிற காரணங்களுக்காகவும்' இடம்பெறும்.

அப்படிப்பட்ட ம.தி.மு.க.கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தான் நாஞ்சில் சம்பத்.

ம.தி.மு.க.கட்சிக்கு பொதுமக்களிடம் இருக்கும் செல்வாக்கின் படி பார்த்தால் இதே அளவுகோலின் படி விடுதலைச் சிறுத்தைகளின் ரவிக்குமார்,கவுதம சன்னா,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரதராஜன்,பாட்டாளி மக்கள் கட்சியின் கோ.க.மணி ஆகியோர் வரிசையில் வருவார்.ஆனால் இவர்களில் சிலருக்கு முதல்முறை கூட விகடன் மேடையில் வாய்ப்பு கிட்டவில்லை.

இவர்களுக்கு மட்டுமல்ல ம.தி.மு.க.வை விட மிகப்பெரும் சக்திகளான திமுக அதிமுக கட்சியியைச் சேர்ந்தவர்கள் கூட  இடம்பெறவில்லை.

மேற்கண்ட அளவுகோலின் படி பார்த்தாலும் நாஞ்சில் சம்பத்துக்கு இரண்டாவது முறை பங்கேற்பு தவறு.

மேற்கண்ட திறமையை விடுத்து இதர தகுதிகள் என்ன..?

நாஞ்சில் சம்பத் மிகச் சிறந்த அரசியல் மேடைப்பேச்சாளர் என்ற அடிப்படையில் பங்கேற்றுள்ளார் என வாதத்திற்காய் வைத்துக் கொள்ளலாமா என்று பார்ப்போம்.!

நாஞ்சில் சம்பத்தின் அரசியல் பேச்சு என்பது பட்டிமன்றப் பேச்சினையும் பங்கேற்பையும் ஒத்திருக்கும்.அவர் எந்த அரசியல் அணியில் இடம்பெறுகிறாரோ அதை ஆதரித்தும் எதிர் அணியை இகழ்ந்தும் பேசுவது வழக்கம்.பட்டிமன்றத்தைப்போல் இங்கும் பேசுவதற்கு கொழுத்த ஊதியம் உண்டு.

ஆனால் இரண்டுக்கும் இடையில் சிறு வித்தியாசம் உண்டு.பட்டிமன்றத்தில்,கருத்துக்களை சொல்ல வாய்ஜாலம் காட்டினால் போதும்.ஆனால் அரசியல் மேடையில் எதிர் அணியை கடுமையாக விமர்சிக்க வேண்டும்.அங்கங்கே மானே தேனே போட்டு கொள்கை, கோட்பாடு,தலைவரின் லட்சியம்,தியாகம் நேர்மை என தூவ வேண்டும்.

இந்த அளவுகோலின் படி பார்த்தால் திமுகவில் அந்தக்காலத்து ரகுமான்கானில் இருந்து திருச்சி சிவா உட்பட தமிழச்சி தங்கப்பாண்டியன் வரை எத்தனையோ பேர் தேறுவர்.

அதிமுகவில் பழ.கருப்பையா போன்றோரைக் குறிப்பிடலாம்.மேலும் மதிமுக வை ஒப்பிடும் பொழுது அவர்கள் மிகப்பெரிய கட்சியைச் சேர்ந்தவர்கள்.ஆனால் அவர்கள் யாருக்கும் முதல் முறை கூட வாய்ப்புக் கிட்டவில்லை.திருச்சி சிவா மட்டும் ஜூனியர் விகடன் செய்தியும் சிந்தனையில் ஒருமுறை பேசி உள்ளார்.

அந்த வகையில் பார்த்தாலும் நாஞ்சில் சம்பத் இன்று ஒன்று நன்று இந்த வார நிகழ்ச்சியில்இரண்டாம் முறை பேசுவதற்கு தகுதி அற்றவர்.

மேலும் நாஞ்சில் சம்பத் சிறந்த அரசியல் மேடைப்பேச்சாளர் என்றாலும் பேச்சில் ஆபாசம் அதிகம் இருக்கும்.அவர் எந்த அணியில் இருக்கிறாரோ அதன் எதிர் அணியைச் சேர்ந்தவர்களை ஆபாசமாகவும் அருவருப்பாகவும் திட்டுவதில் வல்லவர்.இவரது நாக்கின் நர்த்தனத்தில் சிக்காதவர்கள் யாரும் கிடையாது.

ஆக,அந்த வகையிலும் தரமான பேச்சாளர் கிடையாது.எப்படிப்பார்த்தாலும் தகுதி இழக்கிறார்.இவரை யாருடன் ஒப்பிடலாம் என்றால் திமுகவில் தீப்பொறி ஆறுமுகத்துடன் ஒப்பிடலாம்.

சிரிக்காதீர்கள்.அதுதான் உண்மை.


தீப்பொறி ஆறுமுகத்தையும் இவரையும் ஒப்பிட்டால் இவரது பிளஸ் என்னவென்றால் தீப்பொறி ஆறுமுகத்துக்கு கரிபால்டி,முசோலினி,இங்கர்சால்,சாக்ரடீஸ்,முதலாம் உலகப்போர் போன்ற இன்னபிற உலக வரலாறு தெரியாது.

(அல்லது அவருக்குத் தெரிந்திருக்கலாம், கூட்டத்துக்கு வந்திருக்கும் தொண்டனை அந்த வரலாறையெல்லாம் சொல்லி இம்சிக்க வேண்டாம் என்று நல்லவிதமாய் நினைத்திருக்கலாம்.அதனால் பேச்சினைத் தவிர்த்திருக்கலாம்.)

தீப்பொறி ஆறுமுகத்துடன் ஒப்பிடும் பொழுது நாஞ்சில் சம்பத்தின் மைனஸ் என்னவென்றால் தி.மு.க.வின் தலைமைக்கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம்.தனது தலைவர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசினால் அனைவர் முன்னிலையிலும் தன் தலைவரைபோகிறபோக்கில் 4 வார்த்தையாவது கேலி,கிண்டலுடன் விமர்சிப்பார்.தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் அதனைக் கேட்பர்.அந்தத் துணிச்சல் தீப்பொறி ஆறுமுகத்துக்கு இருந்தது.

ஆனால் நாஞ்சில் சம்பத் தன் தலைவரை அவர் பங்கேற்கும் கூட்டத்தில் பேசும் பொழுது ஒரு வரி கூட விமர்சித்தது இல்லை.அவரது துணிச்சல் இவ்வளவு தான்.இத்தனைக்கும் நாஞ்சில் சம்பத் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர்.

ஒருவர் சிறிய கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்.இன்னொருவர் பெரிய கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர். ஆக சில மைனஸ்கள் இருந்தாலும் தீப்பொறி ஆறுமுகத்தையும்,நாஞ்சில் சம்பத்தையும் ஒரே தட்டில் வைக்கலாம்.

ஆனால் இதுவரை தீப்பொறி ஆறுமுகம் ஆ.விகடனின் இன்று ஒன்று நன்று நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டவில்லை.ஏனென்றால் அவருக்கு ஆனந்த விகடனில் யாரையும் தெரிந்திருக்காது.ஆனால் நாஞ்சில் சம்பத்துக்கு இரண்டாம் முறை வாய்ப்பு.

இந்த அளவுகோலின் படியும் இன்று ஒன்று நன்று நிகழ்ச்சியில் இரண்டாம் முறை பங்கேற்க தகுதியில்லாதவர் தான்.

மேற்சொன்ன அத்தனை வழிமுறைகளின் படியும் நாஞ்சில் சம்பத் தகுதி இல்லாதவர்.ஆனாலும் இரண்டாம் முறை இடம்பெறுகிறார்.

##

சரி அவர் இரண்டாம் முறை பங்கு பெறுவதற்கு அவர் தகுதி இல்லாதவர் என்றாலும் அவர் பேசும் தலைப்பும் சொல்லும் செய்தியும் முக்கியமானதாக இருக்கிறதா என்று பார்த்தோம்.

அவர் பேசும் பொருள் இந்த சூழ்நிலையில் எல்லோருக்கும் அவசியமான ஒன்றாகவும் மிகச்சிறப்பான ஒரு தலைப்பில் அமைந்ததாகவும்  இருந்தாலோ.அல்லது அனைவரும் விரும்பும் வண்ணம் சுவாரசியமானதாகவும் வணிக நோக்கில் விகடன் நிறுவனத்திற்கு அதிக வரவேற்பு கிட்டுவதாகவும் இருநதால் கூட அவரது இரண்டாம் முறை பங்கேற்பு சரிதான். 

அந்த நோக்கில் என்ன பேசுகிறார் என்று பார்ப்போம்.

இதில் முதல் பத்தி மட்டும் தான் உண்மை.பிற அனைத்தும் பின்னிணைப்பு மட்டும் தான்.ஆக முதல் பத்தியை மட்டும் பார்ப்போம்.





கடந்த 28 ஆம் தேதியில் இருந்து பத்திரிகைகளில் வந்த செய்திகள் என்னைப் பாடாய்ப்படுத்துகின்றன.வைகோவை விட்டுப் பிரிந்து விடுவேனோ என்று எல்லொருக்கும் சந்தேகம்.அந்தச் சந்தேகத்தை தீர்க்க வருகிறேன்.எனக்கும் வைகோவுக்கும் உள்ள உறவை உங்கள் முன்னால் உரக்கச் சொல்ல வருகிறேன்.கேட்கத் தயாரா..?

கடந்த 28 ஆம் தேதியில் இருந்து பத்திரிகைகளில் வந்த செய்திகள் என்னைப் பாடாய்ப்படுத்துகின்றன.//உங்களைப் பாடாய்ப்படுத்தினால் அதுக்கு நாங்க தானா கிடைச்சோம்.?

வைகோவை விட்டுப் பிரிந்து விடுவேனோ என்று எல்லோருக்கும் சந்தேகம். அந்தச் சந்தேகத்தை தீர்க்க வருகிறேன். எனக்கும் வைகோவுக்கும் உள்ள உறவை உங்கள் முன்னால் உரக்கச் சொல்ல வருகிறேன்.கேட்கத் தயாரா..?

//உங்க கட்சிக்காரனுக்கு சந்தேகம் இருக்கும்.எங்களுக்கு என்ன..?நாங்க சங்கொலி படிக்கிறோமா என்ன..?அவனவன் பிழைப்பைப் பார்க்கவே நாயா ஓடிக்கிட்டிருக்கான்.இதுல நீங்க பிரிஞ்சா என்ன இணைஞ்சா எங்களுக்கு என்ன..?
###




ஆக இந்த வழிமுறைப்படி பார்த்தாலும் இவர் பேசும் செய்தி கண்டிப்பாய் விகடனின் பலதரப்பட்ட வாசகர்கள் எல்லோருக்கும் அவசியமானதாகவோ அல்லது நாட்டுக்கு உபயோகமானதாகவோ இல்லை. அனைவருக்கும் பொதுவானதாகவும் இல்லை.

நாட்டில் ஓட்டரசியலில் பல்வேறு சமரசங்களுடன் இருக்கும் எத்தனையோ கட்சிகளில் மதிமுக வும் ஒன்று.அதுவும் தேடிப்பார்க்கும் நிலையில் உள்ள மிகச்சிறிய கட்சி.அதில் அதன் பொதுச்செயலாளருக்கும் அதன் கொள்கைப்பரப்புச் செயலாளருக்கும் ஒரு ஊடல்.அது கண்டிப்பாய் கொள்கை சார்ந்தது இல்லை.பணமோ பதவியோ சார்ந்தது.சில பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு பிரச்சனை சரிசெய்யப்படுகிறது.அல்லது தற்காலிகமாக சமரசமாகி உள்ளது போன்ற தோற்றம் தருகிறது.

அந்தரங்கத்தில் பிணக்கைச் சரிசெய்த பின் தனக்கும் தலைவருக்கும் உள்ள உறவை பெருமையுடன்(!) நாட்டுக்குப் பெருமையுடன் சொல்லுகிறார்.அதற்கு விகடன் நிறுவனம் இன்று ஒன்று நன்று என்ற தலைப்பிட்டு நமது காசில் ஏற்பாடு செய்து தருகிறது.

காசு கொடுத்துப் படிக்கும் விகடன் இளிச்சவாயனா என்ன..?

என்ன கொடுமை இது..?

மேலும் மதிமுக ஒன்றும் புதிதாய் உடையும் கட்சி அல்ல.அந்தக் கட்சி ஏற்கனவே பலமுறை சுக்குநூறாய் உடைந்த கட்சி தான்.அதன் அவைத் தலைவரே சில வருடங்களுக்கு முன் கட்சி மாறி விட்டார்.

இந்த லட்சணத்தில் இவர் தலைவருக்கும் தனக்குமான ஆத்மார்த்த உறவைச் சொல்றாராம்.வேற வேலை இல்லை பாருங்க வாசகனுக்கு.அதை நாம் காசு செலவழிச்சு போன் செய்து கேட்கணுமாம்.விகடனை செலவில்லாத மதிமுக மேடையாக மாற்றும் இந்த அவலம் என்று நிற்கும் என்ரு தெரியவில்லை.

மேலும் வணிக ரீதியிலும் பார்த்தாலும் விகடனுக்கு இது வெற்றியைத் தராது.

இதற்குப் பதில் இன்று ஒன்று நன்று நிகழ்ச்சியில் இந்த வாரம்,நடிகர் பிரபுதேவா தன் வாழ்க்கையில் கடந்து வந்த காதலைச் சொல்லுகிறேன் என்ற அறிவிப்பை வைத்திருந்தாலோ இதைவிட பல மடங்கு சுவராசியமானதாகவும் வணிகரீதியில் வெற்றியையும் பெற்றிருக்கும்.ஏனென்றால் விகடன் வாசகனிடம் நாஞ்சில் சம்பத்துக்கு இருக்கும் வரவேற்பை விட பிரபுதேவாவுக்கு இருக்கும் மதிப்பு அதிகம்.

இல்லை இந்த வாரம் அரசியல் தான் என்று முடிவு செய்திருந்தால் நாட்டில் எத்தனையோ அரசியல் பிரபலங்கள் இருக்கிறார்களே அவர்களிடம் கொடுத்துப் பேச வைத்தியிருக்கலாம்.
அவர்களுக்கு முதல் வாய்ப்பாவது கிட்டியிருக்கும்.வாசகர்களுக்கும் புதியவர்களின் குரலில் புதிய செய்தியோ அல்லது புதுசா ஒருவரிடம் பேசினோம் என்ற நினைப்பாவது கிட்டியிருக்கும்.

அதை விடுத்து ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்,அறிந்தவர் கதையையும் உறவையும் வாண்டடாகச் சொல்லச் சொல்வது,தாங்கள் அறிந்த புரட்சியாளர்களுக்கு வாசகன் செலவில் மைக்செட் போட்டு மேடை அமைத்து த் தருவது போன்றவை கொடுமையாக இருக்கிறது.வாசகனை இழிவு படுத்துவது போல இருக்கிறது.

இல்லைநாங்கள் எங்கள் விருப்பப் படித்தான் செய்வோம்.அது வாசகனின் தலையெழுத்து,நீங்கள் யார் அதைக்கேட்க என்று தெனாவட்டாய் நடந்தீர்கள் என்றால் நீங்கள் தொடர்ந்து இதைவிட இன்னும் விரிவாகவும்,ஆதாரபூர்வத்துடனும் இப்பொழுதை விட காத்திரமான வார்த்தைகளுடனும் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதை எங்களாலும் தவிர்க்க முடியாது.

இப்பொழுதைக்கு இந்த அத்தியாயம் நிறைவு பெறுகிறது.

தொடர்புடைய இணைப்புக்கள்.

http://kalakakkural.blogspot.in/2012/10/blog-post_4.html







           


1 comment:

த. முத்துகிருஷ்ணன் said...

கேனத்தனமாக இருக்கு பதிவு,