Monday, 22 October 2012

நக்கீரனில் மனுஷ்யபுத்திரனின் ஊழல் எதிர்ப்பு -கரம் கோர்க்கும் 'யோக்கிய சிகாமணிகள்'...!
எதிர்க்குரல் என்னும் தலைப்பில் நக்கீரன் வாரமிருமுறை புலனாய்ய்ய்ய்ய்வு இதழில் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து நாட்டு நிகழ்வுகள் குறித்து தனது விமர்சனக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.அவரது எழுத்தில் உள்ள நிறைகுறைகள் குறித்து ஒன்றிரண்டு முறை நமது பதிவுகளில் விமர்சனமும் செய்துள்ளோம்.

இந்த (அக்டோபர் 20-23,2012 தேதியிட்ட) இதழில் எதிர்க்குரலில் ஊழலின் ஓயாத அலைகள் என்னும் தலைப்பில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா,சல்மான் குர்ஷித்,வீரபத்ரசிங் ஆகியோர் ஊழல் குறித்து எழுதியுள்ளார்.

ஒன்றிரண்டு விமர்சனங்கள் அதில் இருந்தாலும் நக்கீரன் வாசகர்களுக்கு ஏற்ற கட்டுரை தான் அது.
--
அதன் கடைசிப் பகுதியை மட்டும் பாருங்கள்.

ஊடகங்களின் நேர்மை குறித்தும் அதன் செயல்பாடு குறித்தும் வெளிப்படையாய் இன்னொரு ஊடகத்தில் விமர்சித்துள்ள மனுஷ்யபுத்திரன் நிச்சயம் பாராட்டுக்கு உரியவரே..
ஆனால் அந்தப் பாராட்டைத் தெரிவிக்கும் முன்,நக்கீரன் மனுஷ்யபுத்திரனின்  விமர்சனத்தை வெளியிடுவதற்குத் தகுதியானது தானா என்பதையும்,அதையும் தாண்டி மனுஷ்யபுத்திரன் அதை எழுதுவதற்குத் தகுதியான நபரா என்பதையும் பார்ப்போம். 
##

முதலில் நக்கீரன்

நக்கீரனின் உரிமையாளரும் ஆசிரியரும் வேண்டுமானால் ஆர்.கோபாலாக இருக்கலாம்.ஆனால் அதில் என்ன செய்திகளை வெளியிடுவது,எதனை கவர் ஸ்டோரி வைப்பது,என்னென்ன மேட்டர் இந்த இதழில் இடம்பெற வேண்டும்,யாரை விமர்சிக்க வேண்டும்,யாரைத் துதி பாட வேண்டும்,திமுகவில் யாருக்குச் செக் வைக்க வேண்டும்,யாருக்கு புகழ் மாலை சூட்ட வேண்டும்,எந்தச் செய்தியைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும், எதனை பூதாகரப் படுத்த வேண்டும் என்று அனைத்தையும், சுருக்கமாகச் சொல்லப் போனால் அதன் ஒட்டுமொத்த இயக்கமும் அதன் இணை ஆசிரியர் அ.காமராஜ் தான்.

கோபாலின் அதிகாரம், தம்பி இந்த இஷ்யூல 2 விளம்பரம் கூட வந்துருக்கு.மேட்டரைக் குறைச்சுக்கலாமா என்று கேட்கிற அளவிற்குத்தான். அதைத் தாண்டி சிறுசிறு வகையில் இதழில் தலையிட முடியும் என்பதுதான் அவர் எல்லை. இந்த எல்லையைத் தாண்ட  அவர் எப்போதும் துணிய மாட்டார்..

ஆக இதழின் உண்மையான ஆசிரியர் அ.காமராஜ்.உரிமையாளர் ஆர்.கோபால்.

நக்கீரனும் அதன் செய்தி ஆசிரியரும் திமுக தலைவர்கருணாநிதியை கருணாநிதி என்று சொல்லவே மறுப்பவர்கள். க்லைஞர் என்று பயபக்தியுடன் அழைப்பவர்கள்.திமுகவின்  கடைக்கோடி தொண்டனுக்கு இருக்கும் அதே உணர்வு இவர்களுக்கும்.

மேலும் கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சிக் காலம் முழுவதும்  திமுக கட்சிப் பத்திரிகையான‌ முரசொலியின்  வாரமிருமுறைபதிப்பாக‌ நக்கீரன் வெளிவந்தது.

இந்த ’சேவைக்கு’ அல்லது ’விசுவாச’த்திற்கு  சிறு அளவிளல்ல, மிகப்பெரும் அளவில் ஸ்பெக்ட்ரம் ஊழலிலேயே பங்குபெரும் அளவிற்கு நக்கீரனின் இணை ஆசிரியர் அ.காமராஜ் கருணாநிதி குடும்பத்தோடு நெருங்கியிருந்தார் என்பதும், அவரது வீடுகளில் சோதனையிடும் அளவிற்கு இது சென்றதென்பதும் ஊரறிந்து நாறிய உண்மை.

சிபிஐ விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் நக்கீரன் இணை ஆசிரியர் அ.காமராஜ்
(ஆதாரம்-இணைப்பு-1)
அந்த நக்கீரன் ஊடகங்களின் ஊழல்பற்றி நீட்டி முழங்குகிறது என்றால் அதற்கு என்ன யோக்யதை இருக்கிறது என்ற கேள்வி எழத்தானே செய்யும்.?சரி.நக்கீரனின் யோக்கியதை இந்த லட்சணம் என்றால் அதில் இவ்வளவு விமர்சனம் எழுதிய மனுஷ்யபுத்திரனின் யோக்கியதையைப் பார்ப்போம்.

##
மனுஷ்யபுத்திரன் என்பவர் பேஸ்புக்கில் அனைவரும் விரும்பும் வண்ணம் தினசரி 4 ஸ்டேட்டஸ் போடுபவர் என்றோ,அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அரசியல்,கலை,இலக்கியம்,சமூகம் என அனைத்து பொருள்களிலும் உரையாடும் வல்லமை படைத்தவர் என்றோ அரசியல் 'ஆய்வாளர்' என்றோகுறுக்கிப் பார்க்க முடியாது.அடிப்படையில் அவர் உயிர்மை என்னும் மாதாந்திர பத்திரிகை மற்றும் பதிப்பகத்தின் உரிமையாளர் மற்றும் ஆசிரியர்.
ஆகவே அவரது நக்கீரனின் விமர்சனத்தை அவரது இதழில் வெளியான அவரது எழுத்துடன் பொருத்திப் பார்த்தால் தான் அவரது ;நேர்மை’யையும் ’நடுநிலையையும்’ நாம் அறிய முடியும்.

அதற்கு நாம் சமகாலத்திய மிகப்பிரமாண்டமான ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும் அதில் மனுஷ்யபுத்திரனின் நண்பரான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பங்கு குறித்தும், மனுஷ்யபுத்திரன்என்ன எழுதியுள்ளார்  என்பதை உரசிப் பார்த்தால் முடிவு செய்யலாம்.

###

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அதிகாரத் தரகர் நீரா ராடியா முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா,நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோருடன் நடத்திய உரையாடல் நவம்பர் 20,2010 இல் ஊடகங்களில் வெளிவந்தது.

அதை மனுஷ்யபுத்திரன் ஆசிரியராய்,முதலாளியாய்இருக்கும் உயிர்மை எப்படிக் கையாண்டது பார்ப்போமா?

உரையாடல் வெளியான பொழுது டிசம்பர் மாத இதழ் தயாரிக்கப்பட்டிருக்கும்.ஆகவே அதை விட்டுவிடுவோம்.
அதன்பின் வெளிவந்த ஜனவரி 2011 இதழில் நீரா ராடியா-கனிமொழி உரையாடல் குறித்த எந்தப் பதிவும் இல்லை.

சனவரி இதழுக்கு அடுத்து பிப்ரவரி 2011 மாத இதழில்,அதாவது உரையாடல் வெளிவந்து 2 மாதங்கள் கழித்து, நீரா ராடியா-டெல்லி அதிகார அரசியலின் தொடர்ச்சி என்னும் தலைப்பில் பாரதி மணி என்பவர் எழுதிய கட்டுரை. வெளிவந்துள்ளது.

நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் குறித்து எழுதப்பட்ட இந்த கட்டுரையைப்போல் ஒரு மகா மொன்னைத்தனமான,அயோக்கியத்தனமான ஒரு கட்டுரையை வேறு எந்த இதழிலும் எழுத முடியாது.

எப்படி என்றால் இந்தக்கட்டுரையில் நீராராடியாவுடன் உரையாடிய கனிமொழி குறித்து ஒருவரி விமர்சனம் கூட இல்லை.இவ்வளவு ஏன்?கனிமொழி என்னும் பெயரே ஒரு இடத்தில் கூட இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அப்படி ஒரு புரட்சிகர கட்டுரை.(ஆதாரம்-இணைப்பு-2)

யாரொருவர் இந்த உரையாடலின் மையப்புள்ளியோ,யாரொருவர் இவ்வளவு பெரிய ஊழல் செய்த அமைச்சருக்கு வக்காலத்து வாங்கி அவருக்கு பதவியைப் பெற்றுத் தர பிரயாசைப்பட்டாரோ அவர் குறித்த விமர்சனமோ,பெயரோ இல்லாத கட்டுரையை உயிர்மை வெளியிடுகிறது.மிகப்பெரிய அரசியல் ஆய்வாளர் மனுஷ்யபுத்திரன் ஆசிரியராக இருந்து வெளிவரும் இதழில் எப்படி இது சாத்தியம்.?ஆனால் வந்திருக்கிறதே..?

ஊடகங்கள் சந்தேகத்திற்கிடமான பல கொடுக்கல் வாங்கல்களில் டுபட்டிருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்ற மனுஷ்யபுத்திரனின் நக்கீரனின் வரிகள்இங்குஇங்கு நினைவுக்கு வருகிரது..

##

அதைப்போல 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி இதழில் மனுஷ்யபுத்திரன் சில எண்ணங்கள் என்னும் தலைப்பில் கடந்து சென்ற 2010 ஆம் வருடம் ஊழல் வருடம் எனக்குறிப்பிட்டு அது குறித்து மொன்னையாக ஒரு தலையங்கம் எழுதுகிறார்.முரசொலி ஆசிரியர் எழுதியது போல் இருக்கிறது.

எந்த அளவுக்கு அது மொன்னையாய் இருக்கிறது என்றால் 2010 ஆம் ஆண்டு ஊழல் ஆண்டு எனக் குறிப்பிட்டு விமர்சிக்கும் அத் தலையங்கத்தில் ஸ்பெக்ட்ரம் என்னும் வார்த்தை மறந்தும் வரவில்லை.அப்படி ஒரு மொன்னை.

எதை எழுதினால் யாருக்கு வலிக்கும்.அது எங்கு இடிக்கும் என்பது அரசியல் ஆய்வாளருக்குத் தெரியாததா என்ன..?

(ஆதாரம்-இணைப்பு-3)

##

கனிமொழி கைது செய்யப்பட்ட பொழுது ஒரு தலையங்கத்தை ஜூன்  2011,உயிர்மை இதழில் எழுதுகிறார் மனுஷ்யபுத்திரன். அதில் சில பகுதிகள்.இந்த தலையங்கத்தையும் ராபர்ட் வதேராவுக்கு நக்கீரனில் எழுதப்பட்டதையும்ஒப்பிட்டுப் பாருங்கள்.
(ஆதாரம்-இணைப்பு-4)

மனுஷ்யபுத்திரனின் நேர்மை பல்லிளிப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

//
//கனிமொழியின் அரசியல் வாழ்வின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஒரு ஐந்தாண்டுக்குள் ஒரு முழுச் சுற்றுக்கு வந்துவிட்டது. இது மிகவும் அவலமானது. திராவிட இயக்க அரசியலில் ஒரு மாற்று அடையாளமாகவும் பெண்களின் நம்பிக்கைக் குரிய பிரதிநிதியாகவும் கருதப்பட்ட அவர் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய அவப்பெயரைத் தேடிக்கொள்வார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.//

ராஜாத்தி அம்மாளை  விட கனிமொழியை அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்து திராவிட இயக்கத்தின் அரசியல் வாரிசு இந்த ஊழலில் சிக்கிக்கொண்டது மிகப்பெரிய அவலம் என்று கண்ணீர் வடிக்கிறார் மனுஷ்யபுத்திரன்.

அத்தோடு அடங்கவில்லை அவரது ஆதங்கம்.

கனிமொழியை டெல்லிக்கு அனுப்பியதன் மூலம் தனது குடும்ப அரசியலில் இன்னொரு கடமையைப் பூர்த்தி செய்வதாகத்தான் கருணாநிதி நினைத்திருப்பார். ஆனால் கனிமொழி தனது தந்தையின் குடும்பங்களுக்கிடையே தனது குடும்பத்தின் இடத்தை மேலே கொண்டு வருவதற்கான கடும் மனச்சிக்கலைக் கொண்டிருந்தார். கருணாநிதியின் மூத்த குடும்பத்தின் அதிகார பலம், மாறன் குடும்பத்தின் பண, ஊடக பலம் இவற்றிற்கு சமமான ஒரு பலத்தை அவர் உடனடியாக அடைய விரும்பினார். தனது தந்தையின் வாழ்நாளுக்குப் பிறகு தான் வெகு சுலபமாக ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்கிற உள்ளுணர்வு அவருக்கு இருந்தது. அரசியலில் தனக்குக் கிடைத்த இந்த முதல் சந்தர்ப்பம்தான் தனக்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பமும் என்று அவருக்குத் தெரியும். //

இதிலிருந்து மனுஷ்யபுத்திரன் கனிமொழிக்கு வக்காலத்து வாங்க எந்த எல்லைக்கும் சென்றிருக்கிறார் என்பது புலனாகும்.

 கனிமொழியின் முறைகேட்டைக் கண்டிப்பதற்குப் பதில் அவர் ஏன் அந்த சூழ்நிலையில் இறங்கினார் என்று காரணம் தேடுகிறார்.என் இதை மனுஷ்யபுத்திரன் ராபர்ட் வதேராவுக்குப் பொருத்திப் பார்க்கவில்லை..?


ராகுல் காந்தியிடம் இருக்கும் கணக்கு வழக்கற்ற செல்வத்தைப் போல் செல்வத்தில் புரள வேண்டும் என்ற எண்ணம் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்து புதுப்பணக்காரனான ராபர்ட் வதேராவிற்கும் ஆசை வந்தது.தனது மாமியார் இருக்கும் வரை தான் தனக்குச் செல்வாக்கு.ஆகவே அதற்குள் தனது எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற மனச்சிக்கலில் சிக்கியிருந்தார் என்று எழுதவில்லை.


//கேபினட் அந்தஸ்திற்குக் குறைவான மந்திரிப் பதவி எதையும் அவர் ஏற்க மறுத்த போதே அழகிரியும் தயாநிதி மாறனுமே அவருடைய எல்லா பிரச்சினைகளுக்கு காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவர் சம பலமற்ற ஒரு போட்டியில் துணிந்து இறங்கினார். ஆ.ராசா காட்டிய ஊழல் புதையல் யாரையும் மனப்பிறழ்வுக்கு ஆளாக்கக் கூடியது. அந்தப் புதையலுக்குப் பின்னே இருக்கும் பூதங்களைப் பற்றி யோசிக்கக் கூட அவகாசம் இல்லாதவராக கனிமொழி தனது சாகசத்தை தொடங்கினார்.//

ஆ.ராசா பேராசை காட்டிய பணப்புதையல் எப்படிப்பட்ட நேர்மையாளனையும் சிக்கவைக்கும் வல்லமை வாய்ந்தது.கனிமொழி அப்படித்தான் விழுந்தார் என்று எழுதுகிறார்.

இதே விஷயத்தை ராபர்ட் வதேராவுக்கு ஏன் மனுஷ்யபுத்திரன் பொருத்திப் பார்க்க வில்லை..?

நாட்டின் முதல் மனுஷியின் மருமகன் என்னும் அந்தஸ்து ஒருவரை எப்படிப்பட்ட செயலையும் செய்யச்சொல்லும்.ஆகவே ராபர்ட் வதேரா பின்னணியை யோசிக்காமல் காரியத்தில் இறங்கினார் என்று ஏன் சொல்லவில்லை..?

ராபர்ட் வதேரா முறைகேட்டில் மனுஷ்யபுத்திரன் வார்த்தைகளைக் கவனியுங்கள்.

எல்லாம் சட்டபூர்வமானதான இந்த விஷயத்திற்குப் பின் என்ன நடந்தது?அனுகூலங்கள் என்ன என்று அரசியல் ஆய்வாளர் மிகச்சரியாக கேள்வி எழுப்புகிறார்..?சட்டப்படி சரியாக இருக்கலாம்.ஆனால் பின்னணி என்ன..?
சட்டபூர்வமான நடைமுறைகொண்ட விஷயத்துக்கே இப்படி விமர்சனம் என்றால்,

கனிமொழியின் அப்பட்டமான ஊழலை மனுஷ்யபுத்திரன் கடுமையாக விமர்சித்திருப்பார் என்று ஆர்வமாகப் படித்தால் அ.ஆய்வாளர் அங்கு பம்மியிருக்கிறார்.
 //இந்தப் புதையலைக் கையாள்வதற்கான எந்தத் திறமையும் அவருக்கு இல்லை. ஊழல் பணத்தை இவ்வளவு வெளிப்படையாக வங்கிக் காசோலையாகப் பெற்றுக்கொண்ட ஒரே நபர் இந்தியாவில் கனிமொழியாகத்தான் இருப்பார்./ /

கனிமொழி 'திறமை' இல்லாததால் முட்டாள் தனமாக மாட்டிக் கொண்டாரே என்று பதைபதைக்கிறார்.சோக கீதம் பாடுகிறார்.படிப்பவர்கள் மனத்தில் கனிமொழி மீது பரிதாபத்தை எதிர்பார்க்கிறார்.ராபர்ட் வதேராவிற்கு எழுப்பியது போல் என்றால் எப்படிக் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்?

காசோலையாகவே 200 கோடி ரூபாயை லஞ்சமாக வாங்கினார் என்றால் திரைமறைவில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாயை வாங்கியிருப்பார்.எவ்வளவு துணிச்சல்..?அவ்வாறு வாங்கிய பணம் எங்கு போய்ச் சேர்ந்தது..?யார் அதைப் பதுக்கியுள்ளார்கள்?என்றல்லவா எழுத வேண்டும்.

ஆனால் எழுதவில்லை.இது போக மேலும் கீழும் இரண்டு வரிகள் ஒப்புக்கு எழுதி தன் நடுநிலையை முடிந்த மட்டும் நிலை நிறுத்தப் பார்க்கிறார்.ஆனால் அரிதாரம் ஒட்டவில்லை.தனியாகப் பளிச்சென்று தெரிகிறது.
உயிர்மை நிகழ்ச்சி ஒன்றில் கனிமொழிவதேராவுக்கு ஒரு நியாயம்..! கனிமொழிக்கு ஒரு நியாயமா..?
என்ன காரணமாக இருக்கும்?

ராபர்ட் வதேரா மனுஷ்யபுத்திரனுக்கு நண்பர் கிடையாது என்பது மட்டும்  காரணம் கிடையாது.அவரால் எந்த அனுகூலமும் கிடையாது என்பது தான் உண்மை.அனுகூலம் லைப்ரரி ஆர்டர் மட்டும் தான் என்று குறுக்கிப் பார்க்கவும் நாம் விரும்பவில்லை.
இதைப்போல இன்னொரு பதிவையும் காண நேரிட்டது.

//ஆ. ராசாவும் கனிமொழியும் இவ்வளவு முட்டாள்தனமாகவா ஊழல் செய்வார்கள் என்ற ஆச்சரியத்திற்கு நடுவில், மாறன் சகோதரர்கள் இவ்வளவு ஆணவத்துடனா ஊழல் செய்வார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.//

விரித்த வலையில் விழுந்த வேடர்கள், உயிர்மை ஜூலை-2011 மாயா என்பவர் எழுதிய கட்டுரை.

(ஆதாரம்-இணைப்பு-5)
##


து தான் மனுஷ்யபுத்திரனின் நேர்மை,நடுநிலை.தனது நண்பரும் தனது வளர்ச்சியில் ’பங்கு’ கொண்டவரும் செய்யும் முறைகேட்டை அறியாமல் செய்து விட்டார் என்கிறார்.முடிந்த மட்டும் நேரடியாகவும்,முடியாவிட்டால் மறைமுகமாகவும் வக்காலத்து வாங்குகிறார்.

5000 காப்பி அச்சடிக்கும் சிற்றிதழுக்கு இப்படியென்றால் கார்பரேட் ஊடகங்கள் என்ன லட்சணத்தில் இருப்பார்கள்.அது தெரியாமல் விமர்சிக்கிறார்.

இலக்கிய சிற்றிதழ்களில் நடக்கும் கேவலமான அரசியல்,பிழைப்புவாதத்தைப் பார்த்தால் கார்பரேட் ஊடகங்கள் இவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.


நக்கீரன் அ..காமராஜின் நிலைக்கு சற்றும் குறையாத நிலையில்  மனுஷ்யபுத்திரன்இருக்கிறார்.
இவர்கள் இருவரும் இணைந்து ஊழல் எதிர்ப்பையும் அதில் ஊடகங்களின் கண்டுகொள்ளாமையும் நட்டநடுநிலையாய் விமர்சிக்கிறார்கள்.முடியல.

சரியான ஜாடிக்கேத்த மூடிகள்.இருவரும் கைகோர்க்கும் ஊழல் எதிர்ப்பு நாடகத்தைக் கண்டு சிந்திக்கும் வாசகர்கள் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்.

ஊழல் என்பது இன்று மாபெரும் கொள்ளை நோய். இந்தக் காலகட்டத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடுவது என்பது ஒருவர் தனக்கு எதிராகப் போராடுவதாகும். தன்னுடைய வெற்றிக்கும் புத்திசாலித்தனத்திற்கும் எதிராகப் போராடுவதாகும்.
-மனுஷ்யபுத்திரன்

(காமன்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற ஊழல் குறித்து மனுஷ்யபுத்திரன் தலையங்கத்தின் ஒரு பகுதி,செப்டம்பர் 2010 இதழில்)
(ஆதாரம்-இணைப்பு-6)

தனை முதலில் நக்கீரன் காமராஜூம், உயிர்மை மனுஷ்யபுத்திரனும்  ஒருமுறைக்கு பலமுறை படிக்க வேண்டும்.படித்தால் மட்டும் போதாது அதன்படி நடக்கவேண்டும். அப்படி நடந்து கொள்வதும் கூட அவர்கள் தனக்கு எதிராகப் போராடுவதுதான். ஆனால் வாசகர்களின் அறியாமையை நம்பிப் பிழைக்கும் இவர்கள் அதற்கு எப்போதும் தயாராய் இருப்பதில்லை.


தொடர்புடைய இணைப்புக்கள்

1) http://www.hindustantimes.com/India-news/Chennai/2g-scam-probe-entangles-karunanidhi-family/Article1-638597.aspx

2) http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4051

3) http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3935

4) http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4491


5) http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4673

6) http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3492


6 comments:

Anonymous said...

இலக்கிய சிற்றிதழ்களில் நடக்கும் கேவலமான அரசியல்,பிழைப்புவாதத்தைப் பார்த்தால் கார்பரேட் ஊடகங்கள் இவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.//காலச்சுவடு தான் இதற்கெல்லாம் முன்னோடி.அங்கு பயின்றவர் தான் மனுஷ்யபுத்திரன்.சில நேரங்களில் குருவை மிஞ்சிய சிஷ்யன் போல இவர் ஆகி விடுகிறார்.ஆனால் எப்பொழுதும் காலச்சுவடு கோஷ்டியை மிஞ்ச முடியாது என்பது தான் உண்மை.

Anonymous said...

காலச்சுவது தான் இதற்கு முதலில் வழி வகுத்தது என்பது அப்பட்டமான உண்மை.கனிமொழி ஒன்ரும் எழுதத் தெரியாத கத்துக்குட்டியாக இருக்கும் பொழுதே தொலைநோக்குப் பார்வையுடன் ஆசிரியர் குழுவில் சேர்த்தது ஆரம்பம்.
அதைப்போல கனிமொழி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை வெளியிட்டு நல்ல பெயர் எடுக்க முயற்சித்தது.ஆனால் எதிர் கோஷ்டி வலுவடைந்தவுடன் காரியம் ஆகவில்லை.இப்பொழுதோ,நாங்கள் விமர்சிக்கும் நோக்கில் அதனை வெளியிட்டோம் என்று பசப்பு வார்த்தைகளில் புளுகுகிறது.
சென்ற 1996-2001 திமுக ஆட்சியில் காலச்சுவடு வாங்கிய லைப்ரரி ஆர்டர் பட்டியலை வாங்கிப் பாருங்கள்.எவ்வளவு சம்பாதித்துள்ளார்கள் என்பது தெரியும்.but well done work this article.

Anonymous said...

good work...

Anonymous said...

90% of Tamil Publishers and Writers are begging to Politicians and VIPs. There is no ethical stand. They have no shame to share stage with these VIPs.

வாகை said...

இக்கட்டுரையின் பார்வை சிறப்பாக இருக்கிறது. ஆனால் இதில் ஒரு எதர்மறையான பலனும் உள்ளது. மபு வின் கட்டுரையின் உண்மையானப் பொருளை கமொ இன்று தான் அறிந்திருப்பார். ஆக மபு க்கு நீங்கள் நல்லதுதான் செய்து விட்டீர்கள்.... வாகை

saravpriya said...

ootavayan said--ippadi vimarsika thunivu vendum.keep it up