Sunday, 14 October 2012

விகடன்,நக்கீரன்,ரிப்போர்ட்டர்-’போங்கடா நீங்களும் உங்க ஜர்னலிசமும்’..!புலனாய்வு இதழ்களை உரசிப்பார்க்கும் கடைசி பெஞ்சு பகுதியில் இந்த வாரம் இடம் பெற்றுள்ள குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன்,ஜூனியர் விகடன் ஆகிய மூன்று இதழ்களும் வியாழக் கிழமை(11-10-2012)இரவுக்குள் முடிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.அதைப்பற்றிய விமர்சனங்கள் இங்கே..!

குமுதம் ரிப்போர்ட்டர்
இந்த வாரமும் துரை தயாநிதி தான் அட்டைப்படம்.இதுவரை எழுதிய செய்திகளைக் கலவையாக்கி ஹாங்காங் தப்பி ஓடியிருப்பாரோ என்ற ஒற்றை வரியை சேர்த்து அதைப் பூதாகரப்படுத்தி அட்டைப்படக் கட்டுரையாக மாற்றிவிட்டார்கள்.

அதைப்போல ஒரு வாரத்திற்கு முன் சென்னையில் நடைபெற்ற தீம்பார்க் விபத்து தொடர்புடைய செய்திப்பதிவை மிக மிகத் தாமதமாக செய்திருக்கிறார்கள்.

திமுக கறுப்புச்சட்டை அணிந்து துண்டுப்பிரசுரம் விநியோஜம் செய்ததில் ஈரோடு,சேலம் வேலூரில் நடைபெற்ற கோஷ்டி மோதல்களை ’அக்கறையாகப்’ பதிவு செய்துள்ளனர்.

திருச்சியில் நேருவை நேர்காணல் செய்த நிருபர் தான் சந்தித்த அனுபவத்தை எழுதியிருக்கிறார்.நேருவின் பழைய புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

வம்பானந்தா பகுதியில் சபாநாயகர் தனபால் பதவியேற்பு நிக்ழ்ச்சி தொடர்புடையதும் திமுக இளைஞரணி தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

அதைப்போல அதிமுக வினர் அதிரடி என்ற தலைப்பில் சாதனை பிரசுரங்கள் விநியோகம் செய்ததை ஆதரித்துப் பதிவு செய்துள்ளனர்.

ராபர்ட் வதேரா முறைகேடு குறித்த செய்திகளை சென்னையிலிருந்து நிருபர் ரஜினிகாந்த் எழுதியிருக்கிறார்.தமிழ் நாளிதழ்களில் இதுவரை வெளிவந்த செய்திகளைத் தொகுத்து பக்கங்களை நிரப்பியிருக்கிறார்.புதிய தகவல்கள் ஒரு வரியும் அதில் இல்லை.

சென்னையில் இருந்து கொண்டு புதுடெல்லி செய்திகளை எதற்கு எழுதுகிறார்கள், டெல்லி நிருபர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
கன்னியாகுமரி மீனவர்கள் கத்தார் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட பதிவு வந்துள்ளது.பிற இதழ்களில் வரவில்லை.ஹரியானாவில் 16 வயது தலித் மாணவி கற்பழிக்கப்பட்டது தொடர்பான பதிவும் பிற இதழ்களில் வரவில்லை.

தமிழக துணை சபாநாயகர் பதவிக்கு வர இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்தோ,சென்னை மாணவன் கடத்தப்பட்டு மீட்கப்பட்டது குறித்தோ,அது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தோ,மாயாவதியின் பல்டி,சல்மான் குர்ஷித் மீதான ஊழல் புகார் குறித்தோபதிவு இல்லை.

வழக்கம் போல் தான் குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளது.வாய்ப்பே இல்லை.
 நக்கீரன்
நாட்டில் 1008 பிரச்சனைகள் இருக்க வழக்கம் போல் விற்பனையைப் பெருக்கும் மலிவான புத்தியுடன் இளைஞர்களிடம் விளையாடிய இளம்பெண் என்று அட்டையில் வைத்திருக்கிறார்கள்.உள்ளே செய்திக்கு சம்பந்தம் இல்லாமல் சகானா வாலிபர் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் வேறு.

மீண்டும் சிக்கலில் நித்தி என்று நித்தி பேரம் பேசும் வீடியோ அம்பலமானது குறித்த செய்தியும் அட்டையில் இடம்பெற்றுள்ளது.

ராங்கால் பகுதியில் தயாநிதி தலைமறைவு,சட்டசபையில் சபாநாயகர் பதவியேற்பு,நாஞ்சில் சம்பத் வைகோ விரிசல் என எழுதியுள்ளனர்.

காவிரி பிரச்சனை தொடர்பாய் எதிர்க்குரல் பகுதியில் மனுஷ்யபுத்திரனும்,அடாவடி கன்னடர்கள் என்ற பதிவை லெனின்,பகத்சிங்கும் எழுதியுள்ளனர்.

உள்ளூர் பிரச்சனைகள் தொடர்பான செய்திகள் அதிகம் பதிவாகி உள்ளது.
லோக்கல் சேனல் முறைகேடு,திருச்சி சிதார் வெசல்ஸ் நிறுவன பிரச்சனை ஆகியவை பிற இதழ்களில் பதிவாகவில்லை.தமிழ் கடவுளுக்கு ரயில் இல்லை என்று பழனி கோவில் செய்தியும் பதிவாகி உள்ளது.

சென்னை மாணவன் கடத்தப்பட்டு மீட்கப்பட்டது குறித்தோ,அது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தோ,மாயாவதியின் பல்டி,சல்மான் குர்ஷித் மீதான ஊழல் புகார் குறித்தோ கத்தார் நாட்டிற்கு சென்ற மீனவர்கள் கடத்தப்பட்டது குறித்தோ பதிவு இல்லை.

பெரிய அளவில் மாற்றம் இல்லை.
ஜூனியர் விகடன்
கழுகார் பகுதியில் புதுச்சேரி,தமிழ்நாடு திமுக பஞ்சாயத்தும்,பொள்ளாச்சி ஜெயராமன் பற்றிய குறிப்புகள்,நிறைந்திருக்கிறது.

சென்ற முறை நாஞ்சில் சம்பத் விலகப் போகிறார் என்று அவர்கள் வெளியிட்ட செய்திக்கு இம்முறை அவர்களே விலக மாட்டார்,தொடர்ந்து நீடிப்பார் என்று மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

கழுகார் பதில்களில் ஆ.ராசாவை கொஞ்ச நாளைக்குப் பிறகு மீண்டும் பதம் பார்த்திருக்கிறார்கள்.கேடி பிரதர்சை சந்தோஷப்படுத்த அவர்கள் எழுதுவது நடுநிலை ஜர்னலிசத்தில் கணக்கு சேர்கிறது.

ஜெயக்குமார் கிடுகிடு தனபால் என்று புதிய சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

சாவேஸ் வெனிசுலா அதிபராக மீண்டும் பதவியேற்றது குறித்து மக்களின் நண்பன் அமெரிக்காவின் எதிரி என்று ப.திருமாவேலன் ஒரு பதிவு எழுதியுள்ளார்.ஜூ.வி.வாசகர்களுக்கு ஏற்ற சிறப்பான பதிவு.எனது இந்தியா,சி.மோகன் கட்டுரைகள் புத்தக மதிப்புரையும் வழக்கம் போல் இடம பெற்றுள்ளது.

நம்பி நாராயணனிடம் மன்னிப்பு,மைசூர் பொன்னியைத் தடை செய்,சிவகாசியில் கறுப்புத் தீபாவளி,சென்னை அமெரிக்க தூதரகத்தில் நடந்த சமரசம்,குமரி காங்கிரஸ் பஞ்சாயத்து என இதில் வெளிவந்த சில பதிவுகள் பிற இதழ்களில் வெளிவரவில்லை.

அதே சமயம் காவிரி பிரச்சனைக்காக தா.பாண்டியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்,சல்மான் குர்ஷித் முறைகேடு சென்னை மாணவன் கடத்தப்பட்டு மீட்கப்பட்டதுஆகியவை பதிவாகவில்லை.

வழக்கம் போல் இந்த வாரமும் தி.மு.க.தான் அட்டைப்படக் கவர்ஸ்டோரி.தயாளு அம்மாள் மகன் அழகிரியிடம் சொன்னதை மிகவும் ரகசியமாக ஒட்டுக்கேட்டு புலனாய்வு செய்து எழுதியிருக்கிறார்கள்.

//அழகிரி, தயாளு அம்மாளைத் தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். 'பேசாம நான் உன்னோடயே வந்துடுறேன்ப்பா’ என்று தயாளு கலங்க... 'வாம்மா... என்கிட்டேயே தங்கிடும்மா’ என்று அழகிரி அழைக்க... ஒரே பாசப்போராட்டமாக இருந்துள்ளது. 'எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் நீதானம்மா’ என்று அழகிரியும் சொல்லி இருக்கிறார்!''//

இப்படி எழுதியிருக்கிறார்கள்.


தலைமறைவாக இருக்கும்  தயாநிதியை கைது செய்ய முடியாமல் கைபிசைந்து கொண்டிருக்கும் காவல்துறை பேசாமல் ஜூ.வி.பத்திரிகையைத் தொடர்பு கொண்டால் வேலை சுளுவாக முடிந்து விடும் என்று நினைக்கிறோம்.

அழகிரி தனது அம்மாவுடன் பேசுவதை புலனாய்வு செய்து ஊருக்குச் சொல்லும் ஜூ.வி.யால்,அழகிரி தனது மகனுடன் பேசுவதை கண்டுபிடிக்க முடியாதா என்ன..?

கண்டிப்பாய் முடியும்.அதை விடுத்து தயாநிதியின் தொடர்பில் உள்ளவர்களை சம்மன் அனுப்பி விசாரித்து நேரத்தைப் போக்குவானேன்.

வியாபாரத்துக்காக எப்படியெல்லாம் எழுதுறாங்கப்பா..!

ஜூ.வி.புலனாய்வை படித்தால் புல்லரிக்கவில்லை.உடம்பெல்லாம் அரிக்கிறது.அனைத்து இதழ்களையும் படித்து பின் ஒன்று மட்டும் பொதுவாகத் தோன்றுகிறது.

போங்கடா நீங்களும் உங்க ஜர்னலிசமும்...!


No comments: