Saturday, 6 October 2012

நக்கீரன்,ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர் - எரியற கொள்ளியில் எது நல்ல கொள்ளி..?



புலனாய்வு இதழ்களை உரசிப்பார்க்கும் கடைசி பெஞ்சு பகுதியில் இந்த வாரம் இடம் பெற்றுள்ள குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன்,ஜூனியர் விகடன் ஆகிய மூன்று இதழ்களும் வியாழக் கிழமை(04-10-2012)இரவுக்குள் முடிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.அதைப்பற்றிய விமர்சனங்கள் இங்கே..! 


குமுதம் ரிப்போர்ட்டர்


வழக்கம் போல் திமுக எதிர்ப்புச் செய்திகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. ரிப்போர்ட்டரின் ஸ்டாலின் ஆதரவு தனி டிராக்.ஆட்சியில் இருப்பது அதிமுக என்பது தெரிந்தாலும் தங்கள் மீதான் வழக்குகள் உறக்கத்திலும் பயமுறுத்துவதால் அடக்கி வாசிக்கிறார்கள்.

அழகிரி மருமகனிடம்  மதுரை காவல்துறையினர் விசாரணையின் பொழுது என்னென்ன கேள்விகளைக் கேட்டனர் என்று தங்களுக்குத் தெரிந்ததை எழுதியிருக்கின்றனர்.அதே நேரத்தில் ஜு.வி.அவர்கள் பங்குக்கு சில்வற்றை எழுதியிருக்கின்றனர்.(இரண்டுக்கும் துளியும் தொடர்பில்லை.காசு கொடுத்துப் படிக்கும் வாசகன் நிலை தான் இதில் பரிதாபம்.)திருமாவளவனும் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் கலந்து கொண்ட நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சபாநாயகர் தனபால் குறித்த பதிவு,தி.மு.க.,வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாய் சர்ச்சை என பதிவாகி உள்ளன.சென்னை திருவல்லிக்கேணி வீடு இடிந்த விபத்தும் 3 பக்கங்கள் பதிவாகி உள்ளன.பிற இதழ்களில் இது பதிவாகவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.

இதைத் தவிர்த்து அமைச்சர்கள் இலாகா பறிப்பு,மாற்றம் குறித்து இதற்கு முந்தைய இதழ்களில் முன்கூட்டியே எதனையும் பதிவு செய்யாத ரிப்போர்ட்டர் மாற்றத்திற்குப் பின் தனக்குத் தோன்றியதைப் பதிவு செய்துள்ளது.

இதுக்குப் பேரு புலனாய்வா..?

அதைப்போல சென்ற வாரத்தில் நடந்த பல்வேறு விஷயங்கள் இதழில் பதிவு செய்யப்படவில்லை.

சென்னை அருகே நடந்த அதிமுக கவுன்சிலர் படுகொலை, பன்ருட்டி நகர அதிமுக செயலாளர் படுகொலை, ஆ.ராசா,சுரேஷ் கல்மாடிக்கு கிடைத்துள்ள நிலைக்குழு உறுப்பினர் பதவி,கருணாநிதி கறுப்புச் சட்டை அணிந்த புகைப்படம் இடம்பெறாமை,மத்திய அமைச்சர் ஜெய்ஸ்வால் பெண்கள் தொடர்பாய் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து, விமான பணிப்பெண் ராட்டினம் விழுந்து சென்னை அருகே பலி,புதுச்சேரி கோர்ட்டில் சங்கராச்சாரி ஆஜர்,இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முடிவுகள் என பல செய்திகள் பதிவாகவில்லை.

தனக்குத் தோன்றியதை மட்டும் அல்லது அறிந்ததை மட்டும் விரும்பிய விதத்தில் இதழில் அரைகுறையாகப் பதிவு செய்துள்ளனர்.இதழில் நிருபர்களுக்கும் ஆசிரியர் இலாகாவிற்கும் ஒருங்கிணைப்பு இருக்கிறதா இல்லையா என சந்தேகமாய் உள்ளது.

மொத்தத்தில்  8 ரூபாய் வேஸ்ட்.



நக்கீரன்.






அமைச்சர்கள் இலாகா பறிப்பு,அதிமுக நிர்வாகிகள் மாற்றம் குறித்து தொடர்புடைய காரணங்கள் எதனையும் பிற இதழ்களைப்போல் நக்கீரனும் முன்கூட்டியே பதிவு செய்யவில்லை.ஆனால் இப்பொழுது மாற்றத்திற்குப் பின் தான் அறிந்த காரணங்களைப் பதிவு செய்துள்ளது. நக்கீரனுக்குச் சொல்லியா தர வேண்டும்.காரணங்களை விதம்விதமாய் அடுக்கியுள்ளது.சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்கள் மாற்றம் குறித்தும் அப்படியே.

எதிர்பாராவிதமாக பேஸ்புக் செய்தியாளர்கள் பக்கத்தில் திமுக விற்கு எதிரான நிலைச்செய்தி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.எப்படி இந்த அதிசயம் நடந்தது என்று தெரியவில்லை.

சென்னை அருகே தீம்பார்க்கில் நடைபெற்ற இளம்பெண்ணின் மரணத்தையும்,பன்ருட்டி நகர அதிமுக செயலாளர் மரணத்தையும் நக்கீரன் விரிவாகப் பதிவு செய்துள்ளது. அதிலும் பன்ருட்டி நகர அதிமுக செயலாளர் மரணம் பிற இதழ்களில் பதிவாகவில்லை.

தீம் பார்க்கின் உரிமையாளர் முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம். இதே நக்கீரன் தான் பெரம்பலூர் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மீதான பாலியல் குற்றச்சாட்டினை உண்மைக்குப் புறம்பாக ஒருதலைப் பட்சமாகப் பதிவு செய்தது என்பதை இங்கு நினைவுகூற வேண்டியதிருக்கிறது.

வாச்சாத்தியிலிருந்து கூடங்குளம் வரைக்கும் மக்கள் மீது காவல்துறையாலும் அரச இயந்திரத்தாலும் தொடுக்கப்பட்ட வன்முறை குறித்து எதிர்க்குரல் பத்தியில் சரியாகப் பதிவு செய்துள்ளார் மனுஷ்யபுத்திரன்.

ஆனால் அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் நெல்லையில் ஊர்வலம் சென்று  தாமிரபரணி ஆற்றங்கரையில் கொல்லப்பட்ட 18 பேர் மரணத்தையும்,கூலி உயர்வுக்காய் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சித்திரவதைப் படுத்தப்பட்டதையும் ,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கொடுமையாகத் தாக்கப்பட்டதையும் பதிவு செய்யாதது ஏன் என்று தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் அது காரியவாதமான மவுனம் தான்.

கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ நாடக கூட்டமும் பதிவாகி உள்ளது. நக்கீரனில் சொன்னபடி வியாழக்கிழமை மாலை ஜெயகவுரியை சென்னை டிசியா நியமிக்கும் ஆர்டர் ரெடியாகி விட்டதுன்னு சங்கர்லாலில் சொல்லியிருக்காங்க.

வாசகனை முட்டாளாக்குகிறது இது போன்ற செய்தி.வியாழன் காலை தினத்தந்தியிலேயே மாற்றல் உத்தரவு வந்துவிட்டது.ஆனால் பைல் ரெடியாகி கொண்டிருக்கிறதுன்னு சொல்வதன் மூலமா நக்கீரனுக்கு காவல்துறை வட்டாரத்தில் நடக்கும் ஒவ்வொரு செய்தியும் தெரியும் அப்படிங்குற மாதிரி வெட்டி பில்ட் அப் கொடுக்கப்பட்டிருக்கு.

இரண்டாவதாக நக்கீரன் சொன்னபடி ஜெயகவுரியை சி.சி.பி. க்கு மாற்றம் செய்யவில்லை.சைபர் கிரைம் க்குத் தான் மாற்றியுள்ளனர்.

காங்கிரஸ் அவுட் தேமுதிக இன் என்று திமுக தொண்டனின் விருப்பத்தை நக்கீரன் பதிவு செய்து அட்டைப்படமாக்கியுள்ளது.

அதைப்போல திரைப்பட நடிகர் கருணாஸுக்கு ஆதரவாய் ஒரு செய்தி.சென்ற வாரத்தில் அவர் அளித்த கடைசிப்பக்க விளம்பரத்திற்கு நன்றிக்கடனாக இருக்கலாம்.

ஆ.ராசா,சுரேஷ் கல்மாடிக்கு கிடைத்துள்ள நிலைக்குழு உறுப்பினர் பதவி,மத்திய அமைச்சர் ஜெய்ஸ்வால் பெண்கள் தொடர்பாய் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து, புதுச்சேரி கோர்ட்டில் சங்கராச்சாரி ஆஜர், இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முடிவுகள்,திருமாவும் நாராயணசாமியும் கலந்து கொண்ட புதுச்சேரி நிகழ்ச்சி, சென்னை திருவல்லிக்கேணி வீடு இடிந்த விபத்து என பல செய்திகள் பதிவாகவில்லை.

அதே சமயம் கொரட்டூர் தனியார் பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவியின் மரணம் பதிவாகி உள்ளது.பிற இதழ்களில் பதிவாகவில்லை.


வழக்கம் போல.10 ரூபாய் வீண்...



ஜூனியர் விகடன்




சபாநாயகர் தன்பால் குறித்த அறிமுகம்,அதிமுக கவுன்சிலர் படுகொலை,தீம்பார்க்கில் விபத்தில் இளம்பெண் மரணம்,ஆகியன பதிவாகி உள்ளன.ஆறு பேர் ராமநாதபுரத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட செய்தி அனைத்துப் பதிப்பிலும் இடம்பெற்றிருக்க வேண்டும்.இடம்பெறவில்லை.

யுவராஜா,சுவாமி நேர்காணல் ஆகியன எந்த இதழிலும் இடம்பெறவில்லை.என்னமோ காங்கிரசில் அத்தனை பேரும் அப்பழுக்கற்ற உத்தமர் மாதிரியும் இளைஞர் காங்கிரசுக்கு நடைபெற்ற தேர்தலில் பணம் புகுந்து விளையாடியது தொடர்பான  முறைகேட்டைக் கண்ட ராகுல் கொதித்துப் போனது போலவும் ஒரு செய்தி.தாங்க முடியலை..!

அதிமுக வில் நடைபெற்ற அமைச்சர்கள்,நிர்வாகிகள் மாற்றம் குறித்து முன்கூட்டியே சொல்லாமல் பிற இதழ்களைப்போல் ஜு.வி.யும் தனக்குத் தோன்றியதை எழுதியுள்ளது.இது புலனாய்வு இல்ல பாஸூ.

கழுகார் பதில்கள்,புத்தக விமர்சனம் ஆகிய பகுதிகள் சிறப்பாக இருக்கின்றன.

விஜயகுமார் ஐபிஎஸ் ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு ஜால்ரா தட்டும் ஒரு செய்தி வந்துள்ளது.சிறப்புச் செய்தியாளர் பாலகிஷன் கைவண்ணம் என்று அறியமுடிகிறது.

பிஜேபி சார்பிலான பிரதமர் வேட்பாளர் யார் என்று டெல்லி செய்திகள் இரண்டு பக்கம் இடம்பெற்றுள்ளது.

அழகிரி மருமகன் மீதான விசாரணையில் மாறுபட்ட தகவல்கள்,முதல்வர் செயலாளரின் மீதான புகார் கிசுகிசுக்கள்,திமுக,செய்திகள்,முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்பான புகார் புரணி என கலந்து கட்டி கழுகார் பகுதியில் செய்திகள் வந்துள்ளன.

பன்ருட்டி அதிமுக நகரச் செயலாளர் படுகொலை, ஆ.ராசா,சுரேஷ் கல்மாடிக்கு கிடைத்துள்ள நிலைக்குழு உறுப்பினர் பதவி, மத்திய அமைச்சர் ஜெய்ஸ்வால் பெண்கள் தொடர்பாய் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து, புதுச்சேரி கோர்ட்டில் சங்கராச்சாரி ஆஜர், சென்னை திருவல்லிக்கேணி வீடு இடிந்த விபத்து என பல செய்திகள் பதிவாகவில்லை.

சராசரிக்கும் மிக குறைவாக இருக்கிறது...


 தலைப்பை மறுபடியும் படியுங்கள்...!



No comments: