Saturday, 16 June 2012

மாறன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ”ஜூனியர் விகடன்”(துப்பறியும் இதழ்)
செய்தியும் கோணமும்-புதிய பகுதி


பத்திரிகைகள் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது இன்றல்ல என்றோ கேலிக் கூத்தாகி விட்டது.அச்சிட்ட காகிதமாக இருப்பதாலேயே  அதில் எழுதியது எல்லாம் உண்மை என்று இன்றும் சிலர் நம்புகின்றனர்.ஆனால் ஒவ்வொரு ஊடகமும் தனக்கென ஒரு அஜெண்டா வைத்திருக்கிறது.தன் வர்த்தக நலன்களுக்கும் தான் வகுத்துக் கொண்ட கொள்கைகளுக்கும் எதிரான எதையும் அது மறந்தும் வெளியிடுவதில்லை.சில நேரங்களில் வேண்டுமானால் காலச் சூழலுக்கு ஏற்பச் சற்று வளைந்து கொடுக்கின்றனர்.

நித்தியானந்தா மீது பாய்ந்து பிடுங்கும் தினமலர் காஞ்சி சங்கராச்சாரியைப் பாதுகாக்கும்.இப்பொழுது ஜெயலலிதாவின் அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிடும் தினத்தந்தி ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவியாக இருக்கும் பொழுது அவர் வெளியிட்ட அறிக்கையைச் சில நாள் வெளியிடாமலேயே இருந்திருக்கிறது. 

ஜெயலலிதாவின் ஆட்சியில் எதிர்க்கட்சியாய் செயல்படும் நக்கீரன் தி.மு.க.ஆட்சியில் முரசொலியின் வாரமிருமுறை இதழாகச் செயல்படும்.இவ்வாறு அனைத்து பத்திரிகைகள் குறித்தும் அடுக்கிக்கொண்டே போகலாம்.ஒவ்வொன்றின் பின்னும் நிறுவனத்தின் நலன்கள் ஒளிந்திருக்கிறது.
எழுதும் செய்தியில் வார்த்தைக்கு வார்த்தையில் இருந்து படங்களுக்கு புட்நோட் எழுதுவது வரை அனைத்திலும் தங்கள் எண்ணத்தைச் செயல்படுத்துவர்.

அங்கு வேலைக்குச் சேரும் நிருபர்கள்,ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் கருத்தையே நிறுவனத்தின் நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள்.அது இயல்பாகவே நடந்தேறி விடுகிறது.மாற்றிக் கொள்ள முடியாதவர்கள் இடத்தை மாற்றிக் கொள்ள வெண்டும்.
(இது தவிர ஆசிரியர்,நிருபர் போன்றோரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செய்தி வெளியிடுவதும் புறக்கணிக்கப்படுவதும் தனி.ஆனால் இவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் தங்கள் ஆவர்த்தனத்தை நடத்தி விட முடியாது.ஏதாவது ஒரு பக்கத்தில் இருந்து முட்டுக்கட்டை விழுந்து விடும்.)
----
தங்களுக்கு வேண்டாத நபர்கள் என்றால் ஒரு நிறுவனம் எப்படிச் செய்தி வெளியிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி அதே செய்தியைத் அப்படியே தங்களுக்கு அனுகூலமான நபர் சம்பந்தப்பட்டது என்றால் எப்படி வெளியிடப்படும் என்பதை சுட்டிக்காட்டுவது தான் செய்தியும் கோணமும் பகுதியின் நோக்கம்.

இந்தப் பதிவில் நாம் எடுத்துக் கொண்டது 17-06-2012 தேதியிட்ட ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழில் வெளியான ஆ.ராசா பற்றிய செய்தி.ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தபின்பு தமிழ்நாட்டிற்கு முதல்முறையாய் வந்தபொழுது ஒரு செய்திப்பதிவை ஜூனியர் விகடன் பதிவு செய்துள்ளது.அது இதுதான்.

வழக்கம் போல் மாறன் சகோதரர்களின் நிழலில் இருந்து கொண்டு ஆ.ராசாவை இதிலும் ஜூ.வி.காய்ச்சி எடுத்துள்ளது.தலைப்பில் இருந்து ஒவ்வொரு வார்த்தையிலும் இதனைக் காணலாம்.
இதே சம்பவம் அப்படியே தயாநிதி மாறனுக்கு நடந்திருந்தால் ஜூ.வி.எப்படிச் செய்தி வெளியிட்டிருக்கும் என்னும் உண்மையைக் கற்பனையாகப் பார்ப்போம்.(கற்பனை-லூஸூப்பையன் அல்ல..)
அதாவது தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டு(நமது ஆசை நிறைவேறும் நாள் எந்நாளோ...) நீண்ட காலம் கழித்து ஜாமீனில் சென்னைக்கு முதன்முதலாய் வருகிறார் என வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது ராசா வந்த பொழுது நடைபெற்ற சம்பவங்கள் அப்படியே அப்பொழுதும் நடக்கிறது என வைத்துக் கொள்வோம்.அப்பொழுது ராசாவுக்கு எதிராகச் செய்தி எழுதிய ஜூ.வி.இதனையே எப்படி வேறு வகையாகத் துரும்பைத் தூணாக மாற்றி மாறன் சகோதரர்களுக்கு ஏற்ற மாதிரி செய்தி வெளியிட்டிருக்கும் என்பதைப் பார்ப்போம்.

சம்பவம் ஒன்று காட்சிகள் இரண்டு.
இனி எதிராக வெளியிடப்பட்ட ஒவ்வொரு செய்தியாகப் பார்ப்போம்.

தயாநிதி என்றால்
தடைகளைத் தகர்த்த கழகமே, மனசாட்சியின் மகனே,கலைஞரின் நிதியே என்ற பேனர்கள் ஏர்போர்ட்டைச் சுற்றிலும் இருக்க காதைப் பிளக்கும் மேள தாளங்களுடன் வரவேற்பு அமர்க்களப்பட்டது. 
வரவேற்பதற்கு கருணாநிதி உட்பட அனைவரும் தயாரானதாகவும் ஆனால் முக்கிய தலைகள் யாரும் வந்தால் அதைச் சுட்டிக் காட்டி ஜாமீனை ரத்துச் செய்ய சிலர் மனு போடத் திட்டமிட்டிருந்ததாகவும் அதனை தயாநிதியே கருணாநிதியிடம் தொலைபேசியில் பேசியதாகச் சொல்லப்பட்டது.அதனால் தான் எல்லோரும் ஆப்செண்ட் என கிசுகிசுக்கப்பட்டது.

அதையும் மீறி முன்னாள் அமைச்சர்கள் திருச்சி செல்வராஜ்,தா.மோ.அன்பரசன் ஆகியோரும் துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர்.அன்பரசனைப் பார்த்த தயாநிதி அவர் அப்பா இறந்ததற்கு துக்கம் விசாரித்தார்.அதைப் போல சற்குண பாண்டியனின் வயதான நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் காத்திருந்ததை அவரிடம் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்.
அவர் உடல் நலத்தையும் தயாநிதி விசாரித்தார்.அதைப்போல சிறையில் இருக்கும் பொழுதே தங்கள் மேற்படிப்புக்கு உதவிய தங்கள் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனைப் பார்க்க 2 கல்லூரி மாணவிகள் வந்திருந்தனர்.ஆனால் பார்க்க முடியாமல் கூட்டத்தில் தத்தளித்தனர்.இதனைக் கண்டுகொண்ட தயாநிதி அவர்களை அத்தனை கூட்டத்திலும் அழைத்து படிப்பு குறித்து விசாரித்தார்.அவர்கள் முகத்தில் அத்தனை பரவசம்.

நகர் முழுவதும் வரவேற்பு பலகைகள் இருக்கும் என ஒளிபரப்பும் நோக்கத்துடன் ஆர்வமாக வந்திருந்த ஆங்கில ஊடகங்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதைப் பார்க்க முடிந்தது.
******

ஏர்போர்ட்டில் கொடுக்க இயலாத வரவேற்பை அறிவாலயத்தில் கொடுக்க முடிவு செய்யப் பட்டதாம். தயாநிதியை வரவேற்க பேராசிரியர் அன்பழகனே போர்டிகோவில் முதல் ஆளாக வந்து காத்திருந்தார்.கனிமொழி சிறையில் இருந்து வந்த பொழுது வராத பேராசிரியர் அன்று காத்திருந்ததைப் பார்த்து அறிவாலயத்தில் இருந்தவர்களே ஆச்சரியப்பட்டார்களாம்.
*******

 

தயாநிதியின் கார் இரவு 7.25 மணிக்கு அறிவாலயத்துக்குள் அவுட்கேட் வழியாக நுழைந்தது.கருணாநிதியின் காரே இதுவரை அந்த வழியில் வராத நிலையில் தயாநிதிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் யாருக்கோ எதையோ உணர்த்தியதற்காய்ச் செய்யப்பட்டது என்று சொல்லப்பட்டது.

தயாநிதியின் கார் வருவதற்கு முன்பாகவே அறிவாலயத்தில் பெருந்திரளாக கூட்டம் திரண்டிருந்தது. தென்சென்னை மாவட்டச் செயலாளர் அன்பழகனுக்கு இதற்காக ஸ்பெஷல் உத்தரவே போடப்பட்டதாம். இதனால் அறிவாலயமே திமிலோகப்பட்டது.தயாநிதியின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இருந்து நிறையப் பேர் குவிந்திருந்தனர். 
*******

 

சந்தித்ததும் தன் காலில் விழப்போனவரை கருணாநிதி பாதியில் தடுத்து சால்வையை வாங்கிக் கொண்டார்.இதனை ஸ்டாலின் புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.பதிலுக்கு தயாநிதிக்கு காஸ்ட்லியான சால்வையை கருணாநிதி அணிவித்தார்.
******

பிரஸ் மீட் முடிந்ததும் கருணாநிதி சி.ஐ.டி.காலனிக்குக் கிளம்பினார்.அந்தக் காரில் தயாநிதியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார்.கூடவே காரில் ஏறப்போன துரைமுருகனும்,டி.ஆர்.பாலுவும் தலைவரின் குறிப்பறிந்து  தத்தமது காரில் ஏறிக் கொண்டனர். 

சி.ஐ.டி.காலனி வீட்டில் யாரும் எதிர்பாரா வண்ணம் கனிமொழி வாசலில் நின்று தயாநிதியை வரவேற்றாராம்.அதன்பின் தயாநிதிக்கு சிறப்பான விருந்து அளிக்கப்பட்டதாம்.வழக்கமாக இரவில் ஒரு இட்லி மற்றும் கேழ்வரகு கஞ்சி சாப்பிடும் கருணாநிதி அன்று ஸ்பெஷலாக வீட்டில் செய்யப்பட்ட லட்டு ஒன்றைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாராம்.ராஜாத்தி அம்மாள் தடுத்தும் கேட்கவில்லையாம்.அதன் பின் மாறன் சகோதரர்கள் மற்றும் சி.ஐ.டி.காலனி குடும்பத்தினருடன் தனி ஆலோசனை நடத்தப்பட்டதாம்.செல்வியும் இதில் கலந்து கொண்டாராம்.அந்தச் சந்திப்பில் சில பரிவர்த்தனைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் சில வருத்தங்கள் களையப்பட்டதாகவும் விவரமறிந்த சிலர் சொல்கிறார்கள்.சந்திப்பின் முடிவில் அனைவரின் முகமும் பிரகாசமாக இருந்தது.
*****

 தயாநிதி என்றால் இதற்கு புட் நோட்-தடைகளைத் தகர்த்த கழகமே...! என்று இருக்கும்.
*****

அதன்பின் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் சென்ற தயாநிதிக்கு வரவேற்பு பிரம்மாண்ணமாக இருந்தது.தன் முகத்தைக் காட்ட தயாநிதி வண்டியில் ஏறிய பொழுது அவருடன் போஸ் கொடுக்க பலரும் போட்டி போட்டனர்.எதற்கு வம்பு என்று அவர் மட்டும் தனியாக ஏறி நின்று விட்டாராம்.அதனால் மற்ற பிரபலங்கள் ஏகத்துக்கும் அப்செட்.
*****


ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறக்கூடாது என்ற எச்சரிக்கையையும் காண முடிந்தது.
 
இனி இறுதிப்பகுதி...


அறிவாலயம்,தொகுதி என சென்ற இடமெல்லாம் திரண்டிருந்த கூட்டம் தயாநிதி  ஆதரவாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்திருக்கிறது.கருணாநிதியும் அன்பழகனும் நடந்து கொண்ட விதமும் ஸ்டாலினின் புன்முறுவலும் விரைவில் கட்சியிலும் மத்தியிலும் புதிய அங்கீகாரம் தயாநிதிக்கு கிடைக்கும் என்பதையும் உணர்த்தியது.
என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்..!

அவ்வளவு தான்.இது தான் ஜூ.வி.

இந்தச் செய்திப் பதிவை எழுதியவர்கள் எம்.பரக்கத் அலி,ஷக்தி,ஜோ.ஸ்டாலின் போன்றோர்.இவர்களைக் குற்றம் சொல்ல எதுவும் இல்லை.நிறுவனத்தின் அஜெண்டாவிற்கு எதிராய் இவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம்..

மாறன் சகோதரர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஜுனியர் விகடன் வாரமிருமுறை இதழ் செய்திகளை வாசகனுக்குத் தருகிறது.ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொலை தொடர்பு மந்திரியாக ஆ.ராசா மீது மட்டுமல்ல,தயாநிதிமாறன் மீதும் தான் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.ஆனால் தயாநிதிமாறனைப் பாதுகாத்து விட்டு ஆ.ராசாவை மட்டும் ஒவ்வொரு இதழிலும் வன்மத்துடன் விமர்சிக்கிறது.

வி.பி.சிங் மறைந்து விட்டாலும் அவர் மீதான வன்மத்தை எப்படித் துக்ளக் இதழ் அடிக்கடி கேள்வி-பதில் பகுதியின் மூலம் தீர்த்துக் கொள்கிறதோ அதைப் போல ஜூ.வி.கழுகாரும் அவ்வப்பொழுது செட்டப் கேள்விகளை வெளியிட்டு,தனது பதில்களில் ராசா மீதான வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறார்.
இது மாறன் சகோதரர்களால் பேணப்படும் வர்த்தக நலன்களுக்கு செய்நன்றி அல்லாமல் வேறென்ன…!செய்தியும் கோணமும் பதிவு முடிந்தது.
 ****
இல்லை ஜூ.வி.யின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது,அது நடுநிலையுடன் செயல்படுகிறது என்று இன்னும் யாராவது ஒரு ஏமாளி வாசகர் சொன்னால் அவருக்கு மட்டும் கீழ்க்கண்ட பகுதி.
***********
கடந்த செப்டம்பர் 11,2011 ஞாயிறு அன்று மறைந்த இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற தேவேந்திர குல வேளாளர்கள் 7 பேர் காவல்துறையுடன் நடைபெற்ற மோதல் சம்பவத்தில் தமிழகக் காவல்துறையால் பரமக்குடியில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.தமிழகத்தையே பரபரக்கச் செய்த சம்பவம் இது.

சம்பவம் நடந்தது செப்டம்பர் 11,2011 ஞாயிறு நண்பகலில்.
இதழ் முடிக்கப்பட்டதோ மறுநாள் செப்டம்பர் 12,2011 திங்கள் கிழமை இரவு 8 மணிக்கு.
 நாடு முழுவதையும் கொந்தளிக்க வைத்த சம்பவம்,மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்ட சம்பவம்,7 உயிர்களைக் காவு வாங்கிய சம்பவம் ஜூ.வி.யின் கவர் ஸ்டோரிக்கும்,அட்டைப்படத்திற்கும்  தேர்வு செய்யப்படவில்லை. போனால் போகிறது என்று அட்டையில் ஓரத்தில் ஒரு சிறு செய்தியாக மட்டும் பதியப்படுகிறது. 
இதற்கு மாறாக அட்டைப்படத்திற்கும் கவர் ஸ்டோரிக்கும் எது தேர்வு செய்யப்படுகிறது தெரியுமா..?
மாறன் சகோதரர்களுக்கு சினிமா வாங்கிக் கொடுக்கும் புரோக்கரும் மேனேஜரும் கோடிக்கணக்கான ரூபாய் மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொழுது காவல்துறை நடத்தியதாகச் சொல்லப்படும் ஒரு சித்திரவதைச் சம்பவம். 

என்கவுண்டர் எச்சரிக்கைக்கு கவர் ஸ்டோரி.
7 பேர் செத்ததுக்கு அட்டையில் ஒரு ஓரத்தில் இடம்.
எதற்கு ஜூ.வி.முக்கியத்துவம் கொடுக்கிறது பாருங்கள்...!

பரமக்குடியில் 7 பேர் காவல்துறையால் குண்டடி பட்டுச் செத்துப் போனது ஜூ.வி.க்கு வலிக்கவில்லை.அதைச் சீந்துவாரில்லை.
ஆனால்  பல கோடி மோசடிக்குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்ற இரண்டு சினிமா புரோக்கர்கள் காவல்துறையிடம் 4 அடி வாங்கியதாகச் சொல்லப்பட்டது ஜூ.விக்கு வலிக்கிறது.அட்டையில் கவர் ஸ்டோரியாக வருகிறது.
ஏன் என்றால் அவர்களின் மாறன்களின் வேலையாட்கள்..!அதனால் அவர்களின் ரத்தத்திற்கு அவ்வளவு வலிமை..!”அம்புட்டு உசத்தி..”

இப்பொழுது புரிகிறதா..மாறன்களுடனான தங்கள் வர்த்தகத்திற்காகவும் அதில் கிடைக்கும் பொருளாதார நலன்களுக்காகவும் எதையும் செய்யும் ஜூ.வி.நிறுவனம் என்று.

 நடுநிலை இதழ் என்று காசு கொடுத்து வாங்கும் வாசகனுக்குச் செய்யும் துரோகம் இது. 
காசு வாசகர்களிடம்,விசுவாசம் மாறன் தரப்பிடமா..?ஜூ.வி.தனது விசுவாசத்தை நமது காசில் காட்டக்கூடாது.அதற்கு வேறு வழிமுறைகள் இருக்கின்றன.

அல்லது தனது இதழின் முகப்பில் தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்பதற்குப் பதிலாக மாறன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவருகிறது என்று வைத்து விடுங்கள்.

நாங்களும் நேர்மையை உங்களிடம் எதிர்பார்க்க மாட்டோம்.உங்களையும் குற்றம் சொல்ல மாட்டோம்.

செய்யுமா ஜூ.வி.?


4 comments:

Anonymous said...

ஜூனியர் விகடன்-மாறன்களின் உறவுக்காக எந்த நிலைக்கும் செல்லும் என்பதை இதைவிட எளிமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் யாராலும் சொல்லிட முடியாது.நன்றி

Anonymous said...

இரவில் ஒரு இட்லி மற்றும் கேழ்வரகு கஞ்சி சாப்பிடும் கருணாநிதி அன்று ஸ்பெஷலாக வீட்டில் செய்யப்பட்ட லட்டு ஒன்றைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாராம்.ராஜாத்தி அம்மாள் தடுத்தும் கேட்கவில்லையாம்./பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு உங்க புலனாய்வு...ஜூ.வி.யைப் போலவே....

Anonymous said...

அபாரம். விகடன் நிஜ முகம் தெரிகிறது.

- ஜெகன்

Anonymous said...

Excellent mock up writing!!