Thursday, 26 January 2012

பச்சைக் கலரு சிங்குச்சா! மஞ்சக்கலரு சிங்குச்சா! விகடன் கல்லாப் பெட்டி நிறைஞ்சுச்சா?          கருணாநிதியிடம் வளைந்தும் வழிந்தும் நிற்கும் விகடன் அதிபர் பா.சீனிவாசன்.

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே !
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே !

என்பது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ விகடன் தாத்தாவுக்கு நன்கு பொருந்தும்.

விகடன் குழுமத்தின் ஜுனியர் விகடனும் ஆனந்த விகடனும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் திமுக தலைவர் கருணாநிதியையும் நடுநிலையுடன் விமர்சித்திருக்கிறது.

அப்பொழுது நாமும் நல்லாத் தான்யா விமர்சிக்கிறார்கள் என்று கூறியும்,மேலும் இருக்கிற பத்திரிகைகளில் இதுதான்  ஓரளவுக்கு நடுநிலை(!) என்றும்,மேலும் மத்ததுக்கு இது பரவாயில்லை என்றும் நம்பினோம்.அதனால் வாரத்துக்கு 3 முறை அவர்களின் இதழ்களைக் காசினைக் கொடுத்து வாங்கினோம்.

இதன் விளைவாய் அவர்களின் சர்க்குலேஷனும் எக்குத்தப்பாக கிட்டத்தட்ட 5 லட்சம் காப்பி அளவுக்கு(சட்டமன்றத் தேர்தலின் பொழுது) உயர்ந்தது.இதன் காரணமாய் சந்தையில் அசைக்க முடியாத அளவுக்கு விகடன் குழும இதழ்கள் இடத்தைப் பிடித்தன.

நாம் விகடன் குழும இதழ்கள் தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று அப்பாவியாய் நம்பிக் கொண்டிருக்க அவர்களோ எங்களுக்கு இது பிழைப்பு மட்டும் என்று தொடர்ந்து சொல்லாமல் சொல்லி வந்துள்ளார்கள்.ஆனால் இந்த முறை கொஞ்சம் பட்டவர்த்தனமாய் பிழைப்புவாதம் என்று அவர்களே அம்பலப்பட்டுள்ளார்கள்.

ஆம் விகடன் பிரசுரத்தின் சார்பில் சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா,திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் குறித்து இரண்டு நூல்களைக் கொண்டு வந்துள்ளார்கள்.இருவரது அபூர்வ புகைப்படத் தொகுப்புகள் என்று வெளிவந்துள்ளது.

மற்ற துறைகளைப் போல் பதிப்பகத்துறையும் பிழைப்பு என்று ஆகிப்போன பின் இது ஒன்றும் தவறில்லை.ஆனால் நான்காம் தூண் என்று சொல்லிக் கொண்டும் நடுநிலைமை என்றும்,தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று சொல்லிக் கொண்டும் யாரை விமர்சிக்கிரோமோ அப்படி விமர்சித்து அதனைக் காசு பார்த்து விட்டு,அதே நேரத்தில் அவர்களையே வியந்தோதி அதனைப் போற்றிக் காசு பார்ப்பது என்பது பிழைப்பு அல்ல.பச்சையான பிழைப்புவாதம்.

இவர்கள் வெளியிட்ட நூலினைப்பார்த்தால் திமுக அதிமுக தொண்டன் கூட கூச்சத்தில் நெளியும் அளவுக்கு புகழ்ச்சிமயமாக உள்ளது.முதலில் நூல்களின் தலைப்பினைப் பார்ப்போம்.

1)டாக்டர் கலைஞர் கருணாநிதி(பளபளக்கும் மஞ்சள் அட்டையில்)

2)புரட்சித்தலைவி ஜெயலலிதா(பளபளக்கும் பச்சை அட்டையில்)

விகடன் குழும இதழ்கள் தன்னுடைய இதழ்களில் எண்ணற்ற முறை,புரட்சித்தலைவி என்ற சொல்லாடலுக்கும்,டாக்டர் கலைஞர் என்ற சொல்லாடலுக்கும்,கடுமையாய் விமர்சித்திருக்கிறது.(நாமும் என்னாமாய் நடுநிலையாய் விமர்சிக்கிறார்கள் என்று ஏமாந்திருக்கிறோம்)

திமுக தலைவர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்ததை எத்தனையோ முறை நையாண்டி செய்துள்ளது!அதிமுக தொண்டர்கள் தங்கள் கட்சித்தலைவிக்குப் பிடித்தது என்று பச்சை மேனியாவுடன் திரிந்த பொழுது எத்தனை கடுமையான விமர்சனங்களைச் செய்திருக்கும்?

ஆனால் இன்று பிழைப்புவாதம் என்று வந்த பிறகு அதிமுக திமுக தொண்டனே கூச்சத்தில் நெளியும் அளவுக்கு அட்டையில் பச்சையையும்,மஞ்சளையும் வைத்து பிரிண்ட் செய்து புரட்சித்தலைவி ,டாக்டர் கலைஞர் என்று வெளியிட்டு லேகியம் விற்பவனைப் போல கூவிக் கூவி விற்கிறது.நேசிக்கும் உள்ளங்கள் அனைத்தும் பூஜிக்க இரண்டு புத்தகங்கள் என்பது விளம்பர வாசகம்!


போதாக்குறைக்கு பிரபல்யங்களை வைத்து அப்பாவித் தொண்டர்களைக் குறிவைத்து ரொம்ப அருமையான புத்தகம் உடனே வாங்கிக்கோங்க,வாங்கலைன்னா ஜென்ம சாபல்யம் அடைய முடியாது என்கிற ரேஞ்சில் எழுத வைக்கிறது.நல்ல வேளை புத்தக அரங்கிற்குள் வருபவர்களுக்கு பச்சைக் கலர்,மஞ்சள் கலர் பெயிண்ட் அடிக்க வில்லை.

இது நேர்மையான பிழைப்பு அல்ல!பிழைப்புவாதம்!

விகடன் இப்படிச் செய்வது இது முதல்முறை அல்ல.இதற்கு முன்பும் இப்படி நடந்திருக்கிறது.4 ஆண்டுகளுக்கு முன் 2007 ஆம் ஆண்டு பிரிட்டானியா கன்சைஸ் என்சைக்ளோபீடியா என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பினை விகடன் அப்பொழுதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியை வைத்து வெளியிட்டது.

வெளியீட்டு விழாவில் மு.கருணாநிதி வழக்கம் போல தன்னைப் புகழ்ந்தவர்களைப் பதிலுக்குப் புகழ்ந்து விட்டு விழா மேடையிலேயே நூலக ஆணைக்குழுவின் விதிமுறைக்கு மாறாக,நூல்களை வாங்குவதற்கு அவர்கள் விலை நிர்ணயிக்கும் விதிக்கு மாறாக விகடன் பிரசுரம் நிர்ணயித்திருந்த மிக அதிகமான விலைக்கே வாங்க உத்தரவிட்டார்.இணைப்பு-http://tamil.oneindia.in/news/2007/04/29/cm.html

சென்னை: தமிழகத்தில் அரசியல் நாகரீகம் சுத்தமாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். 
சென்னையில் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா நிறுவனத்தின் பிரிட்டானியா கன்சைஸ் என்சைக்ளோபீடியா என்ற ஆங்கில தகவல் களஞ்சியத்தை விகடன் குழுமம் தமிழில் மொழி பெயர்ந்து வெளியிட்டுள்ளது.
இதை முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வெளியிட்டார். முதல் பிரதியை சக்தி குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெற்றுக்கொண்டார்.
கருணாநிதி நிகழ்ச்சியில் பேசுகையில்தமிழ்க் குடும்பத்தில் ஒரு தகவல் களஞ்சியத்தை வெளியிடுகிறார்கள் என்றால் நான் ஆச்சரியப்படவில்லை. இவர்கள் வெளியிடாவிட்டால் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன். 
நான் விகடனை தாக்கிப் பேசுவதும்விகடன் என்னைத் தாக்கி எழுதுவதும் சகஜம். நான் அவர்களை விமர்ச்சித்திருக்கிறேன். இதற்கெல்லாம் அடிக்கடி நான் சொல்வதைப் போலஅண்ணா சொன்னதைப் போலமூத்த தலைவர்கள் சொல்வதைப் போல இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு அரசியல் நாகரீகம்பண்பாடு இருக்க வேண்டும். ஆனால் இப்போது அரசியல் நாகரீகம் இல்லை. 
சட்டசபையில் பேசும்போது நான் யார் யாருடன் அரசியல் நடத்தியுள்ளேன் என்று சொன்னேன். இந்திராகாந்திகாமராஜர்பக்தவத்சலம்எம்ஜிஆர் ஆகியோருடன் அரசியல் நடத்தியுள்ளேன். இப்போது என் கதி இப்படியா ஆகும் என கண் கலங்க நான் சொல்லமற்றவர்கள் அத்தனை பேரும் கண் கலங்கினார்கள். என்ன காரணம்அந்த பண்பாட்டை நாம் இழந்துவிட்டோம். 
இந்த விழாவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்ல விரும்புகிறேன். மூன்று புத்தகங்களின் விலை ரூ. ஆயிரம். ஏப்ரல் 30ம் தேதிக்குள் வாங்குபவர்களுக்கு ரூ. ஆயிரம் என்ற அளவில் சலுகை விலையில் வாங்கிக் கொள்ளாம் என்று இதன் பதிப்பாளர் சீனவாசன் தெரிவித்தார். 
இதையடுத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவிடமும்பொன்முடியிடமும் ஏப்ரல் 30 வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே நமக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். எத்தனை புத்தகம் வாங்க வேண்டும் என்று நீங்களே அறிவித்துவிடுங்கள் என்று அவர்கள் கூறினார்கள்.
உயர்கல்வித் துறை சார்பில் கல்லூரி நூலகங்களில் வைப்பதற்காக 500 படிகள்அதாவது 500 காப்பிகள். மூன்று நூல்கள் சேர்ந்தது ஒரு படி. பள்ளிக் கல்விக் துறை சார்பில் பொது நூலகங்களில் வைப்பதற்காக 1000 படிகள் வாங்கப்படும்.
1500 புத்தக படிகள் அதாவது மொத்தம் 4500 புத்தகங்கள் தமிழக அரசு சார்பில் வாங்கப்படும் என்று தெரிவித்து உடனே நடைமுறைக்கு வரும் என்று உறுதி அளிக்கிறேன். இந்த புத்தகங்கள் நாளைக்கே வாங்கப்படும் என்றார் கருணாநிதி.

  •  

மேடையிலேயே  நூலக ஆணைகளும் விதிமுறைகளும் மீறப்பட்டதை விகடன் குறை காணவில்லை.செய்தி வெளியிடவிலை.எங்களுக்காக விதிமுறைகளைத் தளர்த்த வேண்டாம்,நாங்கள் நூலக் விதிமுறைப்படி நடக்கிறோம்.அந்த விலைகே விற்கிறோம். என்று மறுக்கவில்லை.மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது.புகைப்படத்தில் விகடன் அதிபர்  பா.சீனிவாசன் முகத்தினைப் பார்த்தால் இது தெரியும்.

(கருணாநிதியை அடுத்த சில மாதங்களில் ஜுனியர் விகடன் கடுமையாக விமர்சனம் செய்த பொழுது மறைந்த சின்னக் குத்தூசி, இதனைச் சுட்டிக்காட்டினார்.பிழைப்பிற்காக விகடன் சினிவாசன் அய்யர் கருணாநிதியை வைத்து நூலினை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்து விட்டு இன்று காரியம் முடிந்ததும் திட்டுகிறார் என்று முரசொலியில் பெரிய பத்தியாக எழுதி உள்ளார்.)

அப்படிப்பட்ட விகடன் பிரசுரம் இன்று டாக்டர் கலைஞர் கருணாநிதி,புரட்சித்தலைவி ஜெயலலிதா என்று பிழைப்பிற்காக வெளியிடுகிறது.டாக்டர் கலைஞர் கருணாநிதி புத்தகத்தினை திமுக தொண்டன் தலையில் கட்டி விடலாம்.புரட்சித்தலைவி ஜெயலலிதா நூலினை அதிமுக தொண்டன் தலையிலும்,ஆட்சியில் இருப்பதால் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களிலும் விற்றுவிடலாம்.

பிழைப்புவாதத்தில் மூழ்கியுள்ள இவர்களை ஒப்பிடும் பொழுது தன் தலைவனை டாக்டர் கலைஞர் என்றும்,புரட்சித்தலைவி என்றும் அழைக்கும் தொண்டன் கோடி மடங்கு மேலானவன்.

நல்லாத் தான் பிழைக்கிறாங்கய்யா!

3 comments:

bandhu said...

வரிக்கு வரி உண்மை.. இவர்களுக்கெல்லாம் வெக்கமே இல்லை! நன்றாக சொல்லி உள்ளீர்கள்!

Anand said...

நல்ல பதிவு

Rafeek said...

”பிழைப்புவாதத்தில் மூழ்கியுள்ள இவர்களை ஒப்பிடும் பொழுது தன் தலைவனை டாக்டர் கலைஞர் என்றும்,புரட்சித்தலைவி என்றும் அழைக்கும் தொண்டன் கோடி மடங்கு மேலானவன்.” மிகச்சரியான சொல்லாடல்.!! உங்கள் பணி மேலும் அயராது தொடர வாழ்த்துக்கள்.