குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் நிர்வாக இயக்குனர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் பி.வரதராசன் என்பவர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகக் கூறி குமுதம் ரிப்போர்ட்டரில் ஆசிரியராக வேலை பார்க்கும் இளங்கோவன் சென்னை செக்ரேட்டரியேட் காலனி காவல் நிலையத்தில் (G5) புகார் மனு அளித்துள்ளார்.புகார் அளித்ததற்கு உரிய ரசீதும் பெற்றுள்ளார்.அதன் நகல்கள் மற்றும் புகாரின் தமிழா க்கம் இங்கு தரப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24,2010 அன்று கைது செய்யப்பட்டு சென்னை காவல்துறை குற்றப்பிரிவு விசாரணைக்கு வரதராசன் அழைத்து வரப்பட்ட பொழுது எடுக்கப் பட்ட புகைப்படம்.
அனுப்புனர்.
எஸ்.இளங்கோவன்,
த.பெ.ஆர்.செங்கோடன்,
எஸ்.எஸ்.கிருஷ்ணா பிளாட்ஸ்,
எண்.12,ராமகிருஷ்ணாபுரம் இரண்டாவது தெரு,
ஆதம்பாக்கம்,சென்னை-88.
பெறுநர்,
காவல்துறை ஆய்வாளர்,
ஜி.5,செக்ரட்டேரியட் காலனி காவல் நிலையம்,
செக்ரட்டேரியட் காலனி,
சென்னை.
பெருமதிப்புக்குரிய அய்யா,
நான் தற்பொழுது குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.நான் கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குமுதம் அலுவலகத்தில் இணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.பின்னர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியராகப் பணியில் சேர்க்கப் பட்டேன்.எனது நீண்ட நெடிய பணிக்காலத்தில் எனது பணியை நான் சிறப்பாகவும்,நேர்மையாகவும் உளப்பூர்வமாகவும் செய்து வந்திருக்கிறேன்.எனது பணியில் இதுவரை நான் எந்தத் தவறும் செய்தது இல்லை.என் மீது சிறிதளவேனும் குற்றச்சாட்டும் இல்லை.
குமுதம் வார இதழ் திரு.எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களால் நிறுவப்பட்டது.தற்பொழுது குமுதம் குழுமத்தின் தலைவராகவும்,உரிமையாளராகவும் உள்ள டாக்டர் ஜவஹர் பழனியப்பன்,திரு.எஸ்.ஏ.பி. அவர்களின் புதல்வர் ஆவார்.
குமுதம் குழுமத்தின் பெருவாரியான பங்குகள் தற்பொழுது டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்களது குடும்பத்தினரின் வசமே உள்ளன.அதில் சில பங்குகள் பி.வரதராஜன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டன.
தற்பொழுது சென்னை-4,மைலாப்பூர்,லஸ் அவென்யூ,3 ஆம் எண்ணில் வசிப்பவரான திரு.பி.வரதராஜனுக்கு குமுதம் குழுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு டாக்டர் ஜவஹர் பழனியப்பன் குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு திரு.பி.வரதராஜன் குமுதம் குழுமத்துக்குச் சொந்தமான ஏறத்தாழ ரூ.25 கோடியை மோசடி செய்து விட்டதாக டாக்டர் ஜவஹர் பழனியப்பன் சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.கிரைம் எண்.196/2010.யு/எஸ் 406,420 ஐ.பி.சி.பிரிவுகளில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் திரு.பி.வரதராஜன் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் திரு.பி.வரதராஜனின் சட்டமீறலான சில நடவடிக்கைகள் குறித்த தகவல்களை நானும் என் போன்ற சில குமுதம் ஊழியர்களும் டாக்டர் ஜவஹர் பழனியப்பனுக்கு அனுப்புவதாக திரு.பி.வரதராஜனுக்கு தவறான என்ணம் ஏற்பட்டது.
இதனால் என் மீதும் இன்னும் சிலர் மீதும் திரு.பி.வரதராஜன் பகைமை பாராட்ட ஆரம்பித்தார்.எங்களைப் பழி தீர்க்கும் விதத்தில் சக அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் எங்களை மட்டம் தட்ட ஆரம்பித்தார்.எங்களுக்கு இருந்த அதிகாரங்கள் அவரால் குறைக்கப் பட்டன.இருப்பினும் எங்கள் கடமைகளை நாங்கள் வழக்கம் போல செம்மையாகவும் சிறப்பாகவும் செய்து வந்தோம்.
இந்தநிலையில் 27-09-2011 காலை 9.30.மணியளவில் நான் அலுவலகம் சென்ற பொழுது அலுவலக நுழைவாசலில் திரு.பி.வரதராஜனால் பணியமர்த்தப்பட்ட சில ரவுடிகள் போன்ற சிலர் என்னை வழிமறித்தார்கள்.என்னை அவர்கள் பலவந்தமாக திரு.பி.வரதராஜன் அறைக்கு கொண்டு சென்றார்கள்.
அங்கே குண்டர்கள் போலிருந்த பத்து பேர் என்னைச் சூழ்ந்து கொண்டு திரு.பி.வரதராஜன் வரும் வரை என்னை அங்கே உட்கார்ந்திருக்கும் படி கட்டாயப் படுத்தினார்கள்.
நண்பகல் 12 மணியளவில் திரு.பி.வரதராஜன் அங்கே வந்தார்.என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்த அவர்,தன் மீதான கிரிமினல் வழக்கில் அவருக்கு எதிராக நான் ஏதேனும் ஆதாரம் அளித்தால் என்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடப் போவதாக மிரட்டினார்.என் வாழ்க்கையைச் சீரழித்து விடப் போவதாகவும் அவர் அச்சுறுத்தினார்.அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயார் என்று என்னை அவர் பயமுறுத்தினார்.
அந்த அறையிலேயே என் கதை முடிந்து போய்விடுமோ என்று நான் பயந்து போனேன்.அப்போது இனம்புரியாத நபர்கள் அங்கு வந்து வெற்றுத் தாள்களில் கையெழுத்திடுமாறு என்னை மிரட்டினார்கள்.கையெழுத்து போடாவிட்டால் அந்த அறையை விட்டுப் போக முடியாது என்று அவர்கள் பயமுறுத்தினார்கள்.என்னை அந்த அறைக்குள் பலவந்தமாக அடைத்து வைத்து போக விடாமல் தடுத்தனர்.
நான் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்ந்தேன்.வேறு வழியில்லாத நிலையில்,அந்த ரவுடிகளின் விருப்பப்படி வெற்றுக் காகிதங்களில் கையெழுத்திட்டுத் தந்தேன்.
என் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டதும் அவர்கள் எனக்கு தற்காலிக வேலை நீக்க உத்தரவைத் தந்து என்னை அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டி அனுப்பினார்கள்.
தற்பொழுது குமுதம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ள டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்கள்,ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி,திரு.பி.வரதராஜனை குமுதம் குழுமத்தின் நிர்வாக மேலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளார்.தற்பொழுது டாக்டர்.ஜவஹர் பழனியப்பன் அவர்களே குமுதத்தின் நிர்வாக மேலாளராக உள்ளார்.இந்தநிலையில் எனக்கு வழங்கப்பட்ட தற்காலிக வேலை நீக்க உத்தரவையும் தற்போதைய நிர்வாக மேலாளர் என்ற அடிப்படையில் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்கள் ரத்து செய்து விட்டார்.
இதன் அடிப்படையில் நான் குமுதம் அலுவலகத்தில் என் பணியைத் தொடர,கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி காலை 9.45 மணி அளவில் சென்றேன்.அப்போது சில ரவுடிகள்,அலுவலக வாயிலில் என்னை வழிமறித்து உள்ளே செல்ல விடாமல் தடுத்து விட்டனர்.உள்ளே நுழைய முயன்றால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று அவர்கள் என்னை மிரட்டினார்கள்.
இந்தநிலையில் தங்களது மேலான காவல்துறை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்குமாரும் தங்களைக்கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
தங்களின் உண்மையுள்ள,
எஸ்.இளங்கோவன்
இவரது புகாரின் பேரில் பி.வரதராஜனை காவல்துறை விரைவில் விசாரணைக்கு அழைக்கும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment