Friday, 27 March 2015

கருத்துரிமை சிங்கங்களும் கடந்த கால அசிங்கங்களும்...!


'மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யம்'  என்னும் அமைப்பு வரும் ஞாயிறு அன்று கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கூட்டம் என்னும் தலைப்பில் ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது.

தந்தி டிவி,கருத்துரிமை,ஒடுக்குமுறை,ஆர்ப்பாட்டம்,தினகரன் எரிப்பு,அழகிரி




அது தொடர்பாய் சிறு பதிவு.

அழைப்பிதழில் நிகழ்ச்சி எங்கு நடக்கிறது,யார் யார் கலந்து கொள்கிறார்கள்,எந்த அமைப்புகள் இணைந்து கொள்கிறார்கள் என்று மிகத் தெளிவாக அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால் கருத்து சுதந்திரத்தை காக்க கூட்டம் நடத்தும் அளவுக்கு இப்பொழுது என்ன தாக்குதல்கள் நடைபெற்றன,யார் யார் தாக்குதலுக்கு உள்ளானார்கள்..? யாரைக் கண்டித்து இந்தக் கூட்டம் போன்ற அடிப்படை விபரம் எதுவும் இல்லை.

சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலை வெளிப்படையாய்ச் சொல்ல என்ன தயக்கம்..? டிபன்பாக்ஸில் வெடிபொருளை நிரப்பி வீசி விட்டுச் சென்ற கும்பலே வெளிப்படையாய்ச் செய்கையில் அதைக் கண்டித்துக் கூட்டம் நடத்தும் நீங்கள் ஏன் பூசி மெழுகி பூடக மொழியில் யாருக்கும் புரியாமல் அறைகூவல் விடுக்கிறார்கள்..?

அடுத்ததாய் கலந்து கொள்ளும் கருத்துரிமை சிங்கங்கள் குறித்து..

சிறப்புரை-மூத்த பத்திரிகையாளர் என்.ராம்

என்.ராமின் கருத்துரிமைக்கு நாம் ஒரு சிறு எடுத்துக்காட்டு தருகிறோம்.

மதுரையில் தினகரன் ஊழியர்கள் மூவர் அஞ்சாநெஞ்சனின் கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட பொழுது அதைக் கண்டித்து மறுநாள் மிக கடுமையான வார்த்தைகளில் இந்து நாளிதழில் தலையங்கம் எழுதினார் எடிட்டர் என்.ராம்.
மறுநாள் ரிப்போர்ட்டர் கில்டு வளாகத்தில் மூவர் எரிப்பைக் கண்டித்தும்,இதற்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுவது என்றும் அவசரக் கூட்டம்.

உண்மையான பத்திரிகையாளர்கள் முதற் கொண்டு பிளாக்மெயில் பத்திரிகையாளர்கள் வரைக்கும் லெட்டர் பேடு சங்க பிரதிநிதிகள் தொடங்கி பாரம்பரிய சங்கங்கள் வரைக்கும் அனைவரும் உணர்ச்சிமயத்துடன் குழுமி இருக்கின்றனர். எடிட்டர் என்.ராம்,தினகரன் சென்னை அலுவலகம் தொடங்கி டி.ஜி.பி.அலுவலகம் வரைக்கும் அனைத்து பத்திரிகையாளர்களும் ஊர்வலம் செல்வோம்,டி.ஜி.பி.யைச் சந்தித்து மனு கொடுப்போம்,அணி திரளுவோம் என வீராவேசமாய் உரையாற்றுகிறார். அனைவரும் சம்மதிக்கின்றனர்.

ஆனால் தினகரன் அலுவல‌கம் அருகில் டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் கூட வந்த நிலையில் என்.ராம் வரவில்லை. தொலைபேசி எடுக்கப் ப‌டவில்லை. ஊர்வலமும் நடக்கவில்லை.

முரசொலி போட்டோ கிராபராய் மாறிய 'தி இந்து' எடிட்டர் என்.ராம்.

கடைசியில் ஒரு பத்திரிகையாளர் சொல்கிறார். 'தி இந்து' பாணியில் sources said என வைத்துக் கொள்ளுங்களேன்.

கோபாலபுரத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும்,கரகரத்த குரலில்," ஏன்யா உன் குடும்பத்துல பிரச்சனை வந்தப்ப உனக்கு எவ்வளவு உதவி செய்திருக்கேன்,அதையெல்லாம் மறந்துட்டு என் குடும்பத்தை அசிங்கப்படுத்த ஊர்வலம் போறியா ? போய்ட்டு வந்து என்னை எப்படித் திட்டுனேன்னு வந்து சொல்லுய்யா" என சொல்லிவிட்டு தொலைபேசி வைக்கப்ப‌ட்டதாகவும், என்.ராம்.அதன்பின்  எப்படி எட்டிப் பார்ப்பார் எனவும் மனம் வெதும்பி கச்சேரி சாலை மதிய வெயிலில் பகிர்ந்து கொண்டார்.

அன்று தனது சுயநலத்துக்காய் மூவரின் கொலைக்கு நீதி கேட்கும் ஊர்வலத்துக்கே விடுமுறை விட்ட என்.ராம் இன்று கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் உரையாற்றப் போகிறாராம். உங்கள் நிகழ்ச்சி நடக்கும் பொழுது அவருக்கு எங்கிருந்தும் தொலைபேசி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அழைத்ததைப் பார்த்து என்.ராம் கண்டிப்பாய் வாயால் சிரித்திருக்க மாட்டார்.
*
அடுத்ததாக மு.க.ஸ்டாலின்


எரியும் தினகரன் மதுரை அலுவலகம்


மதுரையில் தினகரனின் மூன்று ஊழியர்கள் கொலையின் சூத்திர‌தாரியான‌ 'அஞ்சாநெஞ்சரின்' உடன்பிறந்த தம்பி தான் மு.க.ஸ்டாலின் அவரது அப்பா மு.கருணாநிதி தான் அப்பொழுதைய முதல்வர்.

மு.க.அழகிரி வழக்கிலிருந்து அழகிரி விடுவிக்கப்பட்டு விட்டாரே என எதிர்வினா எழுப்பலாம். இந்தியாவில் அரசியல் பின்னணி உள்ள வழக்குகள் எப்படி விசாரிக்கப்படுகின்றன..? அதன் குற்றவியல் விசாரணை எப்படி நடைபெறுகிறது..? எப்படி குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள்..?  என்பது மாற்றத்திற்கான ஊடகவியலாளர்களுக்கு தெரியவில்லையா என்ன..?
இது கூடத் தெரியாமல் நீங்களெல்லாம் என்ன பத்திரிகையாளர்கள்..?


மூவரின் உயிரைப் பறித்த கும்பலுக்கு ஆதரவும் பாதுகாப்பும் தந்து தப்பிக்க வைக்க, உங்கள் நிகழ்ச்சியில் கண்டன உரை ஆற்றும் மு.க..ஸ்டாலினின் குடும்பமும் அவரது கட்சியும் பங்காற்றவில்லை என உங்களால் அறிக்கை வெளியிட முடியுமா..? அந்த பங்காளி கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உரையாற்றுகிறார்.

தயவு செய்து அடுத்த கூட்டத்துக்கு அஞ்சாநெஞ்சன் அழகிரியையும் அட்டாக் பாண்டியையும் கூப்பிட்டு விடாதீர்கள்.

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் & ஜி.கே.வாசன்.

கருத்து சுதந்திரத்தை மிக மோசமான முறையில் ஒடுக்கிய தகவல் தொழில் நுட்பச் சட்ப பிரிவு 66 ஏ வை கடந்த காங்கிரஸ் ஆட்சி தான் அமல்படுத்தியது. இதில் எத்தனையோ பேர் பாதிக்கப்ப‌ட்டிருக்கிறார்கள். மேற்கண்ட இருவரும் அங்கம் வகித்த இந்திரா காங்கிரஸ் கட்சி தான் இதைச் செய்தது. மேலும் இந்த சட்ட திருத்தத்தில்  தி.மு.க. அமைச்சர் ஆ.ராசாவின் பங்கு குறித்து அப்பொழுதைய சட்ட அமைச்சர் பரத்வாஜே கருத்த்து தெரிவித்திருக்கிறார்.இவர்கள் கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் உரையாற்றுகிறாராம். நல்லாத்தான் இருக்கு.



பால் தாக்கரே செத்துப்போன நிலையில்,அடுத்த கருத்து சுதந்திர 'பாதுகாப்பு' கூட்டத்துக்கு உத்தவ் தாக்கரேவை அழைங்க பாஸ். கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை விட உங்க 'புரட்சி' வேகமாய் வந்து விடும் .

ஜி.ராமகிருஷ்ணன்

தங்கள் கட்சியின் முன்னணி தலைவர் மரணம் குறித்து வினாக்கள் எழுப்பினார்கள் என்னும் ஒரே காரணத்துக்காய் கட்சியின் அடியாள் கும்பலை விட்டு மக்கள் தொலைக்காட்சியில் தாக்குதல் நடத்தியவர்கள் இன்று கருத்துரிமையைக் காக்கப்போகிறார்கள்.

வேஷம் கச்சிதமாத் தான் இருக்குது.
*
மல்லை சத்யா

கொடிய ஒடுக்குமுறைச் சட்டமான பொடாவை மிகத்தீவிரமாய் நாடாளுமன்றத்தில் ஆதரித்த வைகோ வராத நிலையில் அவர் கட்சியின் சார்பில் மல்லை சத்யா வருகை புரிந்திருக்கிறார்.இதுவும் சரியான தேர்வு தான்.
*
விஸ்வரூபம் பிரச்சனையில் கமல்ஹாசனின் 'கருத்து சுதந்திரத்துக்கு' எதிராய் அணிவகுத்து அவர் திரைப்படத்தை வெளியிடாமல் செய்த ஜவாஹிருல்லா,தெஹ்லான் பகவி போன்றோரும் கருத்து சுதந்திர‌த்தைக் காக்க கிளம்பியிருக்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் கருத்துரிமையைக் காக்கப் போகிறார்களாம்.
இந்தக் கூட்டணி அரசியல் கூட்டணியைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது.

இதில் இன்னொரு உள் அரசியலும் இருக்கிறது.

அ.தி.மு.க.,பா.ஜ.க.,பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. அதிமுகவும் பாஜகவும் ஆளுங்கட்சி என்பதால் புறக்கணிப்பது சரியான முடிவு தான். பாட்டாளி மக்கள் கட்சியை ஏன் புறக்கணித்தார்கள் என்று தெரியவில்லை. சாதி ஒழிப்புக்கு எதிரானவர்கள் என்று காரணம் சொல்லலாம்.

வாதத்துக்காய் கேட்கிறோம். மேலே நிகழ்ச்சிக்கு அழைக்கப்ப‌ட்டவர்கள் எல்லாம் சாதியையும் மதவாதத்தையும் உண்மையாய் ஒழிக்கும் நோக்கம் உள்ளவர்களா..?

மல்லை சத்யா சார்ந்துள்ள கட்சித்தலைவர் வைகோ வின் சாதி 'ஒழிப்பின்' லட்சணம் குறித்து கலிங்கப்பட்டி சுற்று வட்டாரத்தில் இருக்கும்  40 ஜில்லா தலித்துகளிடம் கேட்டு விட்டு முடிவுக்கு வாருங்கள்.

ஓரணா கூலி உயர்வு கோரிக்கைக்கு,சவுக்கடியையும் சாணிப்பாலையும், ஈரணா கூலி உயர்வு கோரிக்கைக்கு சவக்குழிக்கு அனுப்பவும் செய்த கபிஸ்தலம் பண்ணையார் மூப்பனாரின் வாரிசு, மேடையில் கருத்துரிமையைக் காக்க கொந்தளிக்கும் பொழுது தைலாபுரம் படையாச்சியும் உங்கள் 'உரிமை'க்காய் முழங்கினால் என்ன தப்பு..?

இதனால்  உங்கள் முற்போக்குச் சாயம் அழிந்து விடவும் நீங்கள் அம்பலப்பட்டுமா விடப்போவீர்கள் .?

இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள். புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான தாக்குதலை ராமதாஸ் கண்டிக்கவில்லையாம்,அதனால் அழைக்கவில்லையாம். அப்படியானால் 'தினத்தந்தி' அலுவலகத்துக்குள் அத்துமீறி செருப்பு வீசிய வைகோ கட்சியை அழைப்பது எப்படிச் சரி..?
****

ன்னும் கேள்விகள் எண்ணற்றவை இருக்கின்றன.

கேட்பதற்கு எங்களிடம் நேரமும் சொல்வதற்கு உங்களிடம் பதிலும் கண்டிப்பாய் இல்லை.

ஆனாலும் தவிர்க்க முடியாமல் சில கேள்விகள்

நாளைய உங்கள் கூட்டத்தில்,இலங்கையில் லசந்தா விக்ரமசிங்கே உட்பட எத்தனையோ பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கும் கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டதற்கும்  காரணமான சிங்கள அரசையும் இனவாதத்தையும் 'இந்து' எடிட்டர் என்.ராம்.பகிரங்கமாய் கண்டிப்பாரா..?

மதுரையில்  தினகரன் மூன்று ஊழியர்கள் கொலை வழக்கில் உண்மைக்குற்றவாளிகள் சட்டத்தின் சந்து பொந்துகளின் மூலம்  தப்பித்து விட்டார்கள்,அவர்களைக் கைது செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மு.க்.ஸ்டாலினை பேச வைக்க உங்களால் முடியுமா..? (இத்தனைக்கும் இப்பொழுது அழகிரிக்கும் இவருக்கும் முரண்பாடு இருக்கிறது.)

முந்தைய காங்கிரஸ் அரசால் தகவல் தொழில்நுட்பச் சட்ட‌த்தில் செய்யப்பட்ட 66 ஏ பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் அதைக்கொண்டு வந்த காங்கிரஸ் அரசையும் தலைவி சோனியாவையும் இளங்கோவன் ஏன் தனிக்கட்சி கண்டிருக்கும் வாசனாவது கண்டிப்பாரா..?

'மக்கள் தொலைக்காட்சி' மீதான தாக்குதலில் ஈடுபட்ட குற்ற‌வாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்ப‌ட வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் பேசுவாரா..?



நேற்று வரை தங்களுக்கு முற்றிலும் எதிராய் இருந்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்து களத்தில் இறங்குவது சீரழிந்த அரசியல்வாதிகள் செய்யும் வேலை.

நேற்றொரு தலைப்புக்கு வக்காலத்து, இன்று ஒரு தலைப்புக்கு வக்காலத்து வாங்கிப்பேசவும் அரங்கில் இருந்த பார்வையாளர்களை வாய்விட்டு சிரிக்க வைக்க எதை வேண்டுமானாலும் பேச‌வும் இது சிரிப்பு பட்டிமன்றம் அல்ல.

இது பத்திரிகையாளர்களின்கருத்துரிமை சார்ந்த போராட்டம். உண்மையை எந்த இடத்திலும் எப்பொழுதும் உரத்துச் சொல்வதற்குத் தயங்கக் கூடாது.அதிலும் நீங்கள் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் என்று வேறு பீற்றிக் கொள்கின்றீர்கள். அப்படியானால் எப்படிச் செயல்பட வேண்டும்..?

நமக்காய் உரத்துக் குரல் ஒலிக்கவும்,நம்முடன் இணைந்து போராடவும் யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை விடவும் யாரைத் தேர்வு செய்யக்கூடாது என்பதில் அதீத எச்சரிக்கையும் தெளிவும்  தேவை.

நேற்று வரை  பத்திரிகையாளர்களை ஒடுக்கியவன்,ஓட ஓட விரட்டியவன்,கொலை செய்தவன்,முதுகில் குத்தியவன்,எதிரியிடம் காட்டிக் கொடுத்த‌வன் போன்றோர்களுடன் இணைந்து உரிமையைக் காக்க முடிவு செய்வது எந்த விதத்தில் சரி..?

அடுத்த அரசாங்கம் வந்தால் யாருடன் இணைந்து உரிமையைக் காப்பீர்கள்..? புதிய தலைமுறை அலுவலகத்தின் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசியவனுடன் இணைந்தா..?

'மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யம்உருவான மிகக் குறுகிய காலத்தில் உங்களின் தன்முனைப்பும் ஆர்வக்கோளாறும் பளிச்செனத் தெரிகிறது.

உங்கள் அமைப்பின் சார்பில் உண்மையான ஒரு பத்திரிகையாளர் கலந்து கொண்டு ஒற்றைக்குரலாய் ஒலித்துத் தோற்றுப் போனாலும் பரவாயில்லை. கவலை கொள்ளவும் தேவையில்லை.இல்லை இல்லை  நாங்கள் மேற்கண்ட 'போராளிகளுடன்' இணைந்து இணைந்து போராடியே தீருவோம் என   நீங்கள் பிடிவாதமாய் நின்றால் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது.

என்.ராம்,ஜி.கே.வாசன்,மற்றும் மு.க.ஸ்டாலின் வகையறாக்கள் வாங்கித் தரும் கருத்துரிமை சுதந்திரத்தை சுவாசிப்பதை விடவும் களத்தில்தோற்றுப் போவதையே உண்மையும் நேர்மையும் கொண்ட பத்திரிகையாளன் விரும்புவான்.

நீங்கள் எப்படிப் பட்ட பத்திரிகையாளர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

பாலோ அப்



                        குற்றவாளிகள் வெளியிடும் தீர்ப்பு 

No comments: