Friday, 24 October 2014

'தி இந்து'-முடிந்தது மூடத்தனம்;தொடங்கியது விஷமத்தனம்...!
                                              'உண்மை நின்றிட வேண்டும்'

இது 'தி இந்து' தமிழ் இதழில் நடுப்பக்கம் வெளிவரும் தலையங்க முகப்பு வாசகம்.

இனிமேல் இதனை 'பொய்மை வென்றிட வேண்டும்' என மாற்றி அமைக்கலாம்.ஏனென்றால் அதன் நடுப்பக்கத்தில் வெளியாகும் கட்டுரைகள் அந்த லட்சணத்தில் தான் இருக்கிறது.

அரசியல் சமூக விமர்சகர் க.திருநாவுக்கரசு என்பவர் எழுதிய 'பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா' என்பதை கருத்துப்பேழை என்னும் தலைப்பில் நடுப்பக்க கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

the hindu,tamil the hindu


இந்தக் கட்டுரையின் நோக்கமாக கீழ்க்கண்டவற்றை வகைப்படுத்த‌லாம்.

பெரியாரை சர்வாதிகாரி என நிறுவுவதும்,அதன் தொடர்ச்சியாக அவரது வாரிசு என்று ஜெயலலிதாவை பிரகடனப்படுத்தி இப்பொழுது ஜெயலலிதாவின் கைதுக்குப் பிந்தைய மரணங்கள்,ஆர்ப்பாட்டங்கள்,எதிர்ப்புக்குரல்கள் என்ற பெயரிலான காணச் சகிக்காத கூத்துக்கள் என அனைத்தையும் கண்டிப்பதும்,இவை அனைத்துக்கும் அன்று பெரியார் தொடக்கி வைத்த சர்வாதிகாரம் தான் விதை எனத் தொடர்பு படுத்துவதும் தான்.

பெரியார் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல,ஆனால் அதில் உண்மை இருக்க வேண்டும்.

கட்டுரையானது தனது நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறதா அதற்கான தரவுகளை அளித்திருக்கிறதா என்று பார்ப்போம்.
*
முதல் சில பத்திகள் அதாவது கட்டுரையின் சரிபாதி வரைக்கும் ரஷ்யாவின் ஸ்டாலினை இந்திய குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன் சந்தித்தது,காந்தி மீது விமர்சனம் என நீள்கிறது.

அதன்பின் தான் தமிழகச் சூழலை கட்டுரையாளர் எழுதுகிறார். அதன்பின் பெரியாரின் சர்வாதிகாரம் குறித்து ஒரு உதாரணத்தை கட்டுரையாளர் சொல்கிறார்.

//உதாரணமாக, முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக சௌந்திர பாண்டியனைப் பெரியார் முன்மொழிந்தபோது, ‘‘இனிமேல் வந்து இங்கு அவரை ஒருவர் பிரேரேபிக்கவோ ஆட்சேபிக்கவோ உண்மையாக யாருக்கும் அதிகாரமும் யோக்கியதையும் கிடையாது. பிரேரேபணையோ ஆமோதிப்பதோ ஆதரிப்பதோ கொஞ்சமும் அவசியமே இல்லை’’ என்கிறார்.//

இது தான் சர்வாதிகாரி பெரியார் என்பதை நிறுவ‌ கட்டுரையாளர் தரும் உதாரணம்.இதில் தான் கட்டுரையின் அடித்தளம் இருக்கிறது எனவும் சொல்லலாம்.

70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் பணியாற்றிய பெரியாரை போகிற போக்கில் ஒரு சிறு உதாரணம் மட்டும் சொல்லி அவர் ஜனநாயக மறுப்பாளர் எனச் சொல்கிறார்.அவரது ஒட்டுமொத்த பணியையும் இதனை வைத்து எடை போடுகிறார்.இப்படி எடை போடுவது சரியல்ல என்பதை விடவும் அப்படிக் காட்டப்பட்டதாவது உண்மையா என்று பார்ப்பதும் முக்கியமானது.

 கட்டுரையாளரின் மேற்கொள்  ஒப்பீட்டளவில் நூலிழை ஆதாரம் எனக்கொள்ளலாம். ஆனால் சீர்தூக்கிப் பார்த்தால் அது நூலிழை அல்ல,திரிக்கப்பட்ட வன்மக் கயிறு என்பதை அறியலாம்.

திரு.சவுந்திரபாண்டியனை முன்மொழிந்த பெரியார், கட்டுரையாளர் சொல்லியபடி தனது கட்சியினர் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் அதிகார மமதையுடன் நடந்து கொண்டாரா..? ஜனநாயக மறுப்பாளராய் விளங்கினாரா? என்று பார்ப்போம்.

//இப்பொழுது இந்த மகாநாட்டுக்கு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தன்னை எனது நண்பர் திரு.சவுந்திர‌பாண்டியன் அவர்களைப் பிரேரிக்கும்படியாக நமது வரவேற்பு அக்கிரசனார் அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்.இப்போது அவர்களை உங்கள் சார்பாக பிரேரிக்கப் போகிறேன்.

இப்படிப் பிரேரிப்பதில் ஒரு விஷேஷமிருக்கிறது.என்ன.?திரு.சவுந்திரபாண்டியன் அவர்களை சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பாகவே வரவேற்புக் கமிட்டியாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு,அவர்களின் சம்மதத்தையும் வெகு நிர்ப்பந்தத்தின் பேரில் பெற்று,உங்களுக்கும் எல்லோருக்கும் வெளிப்படுத்தியாய் விட்டது.இனிமேல் இங்கு வந்து அவர் ஒருவர் பிரேரிக்கவோ,ஆட்சேபிக்கவோ உண்மையாக யாருக்கும் அதிகாரமும் யோக்கியதையும் கிடையாது.//

ஆதாரம்- திராவிடன் 19.2.1929

நூல்-செங்கல்பட்டு (தமிழ்) மாகாண சுயமரியாதை மகாநாடு 1929 (பக்கம் 105)இது தான் பெரியார் சொல்லியது.ஏறத்தாழ இந்த மாநாட்டுக்காய் ஒன்றரை மாதங்களுக்கு முன்பே யார் தலைவர் என வரவேற்புக் கமிட்டியால் முடிவு செய்யப்பட்டு அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டு,அனைவரின் ஒப்புதலையும் பெற்று ,சவுந்திரபாண்டியன் சம்மதத்தையும் அவரின் நிர்ப்பந்தப்படுத்திப் பெற்று விட்ட பிறகு அதனை இப்பொழுது யாரும் ஆட்சேபிக்க யாருக்கும் அதிகாரமோ,யோக்கியதையோ கிடையாது என்கிறார் பெரியார்.

இதில் என்ன தவறு இருக்க முடியும்..? இதில் எங்கு ஜனநாயக மறுப்பு இருக்கிறது..? சர்வாதிகார முடிவு இருக்கிறது..? இதனை விட எவரொருவர் ஜனநாயகமாய் இயங்க முடியும்..? எல்லாம் முடிந்த பின்பு இப்பொழுது ஆட்சேபிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்கிறார்.இது சரியானது தானே..?

ஆனால் பெரியார் சொன்னதில் முதலில் ஒரு பத்தியை வெட்டி விட்டு அவர் சொன்னது இதுதான் என்று சொல்வது தான் அரசியல் சமூக விமர்சகனின் நேர்மையா.? கடைந்தெடுத்த அயோக்கியன் கூட இப்படிச் செய்ய மாட்டானே..? இவரிடம் பாடம் படிக்கும் மாணவர்கள் கதியை நினைத்தால் தான் பரிதாபமாய் இருக்கிறது.

அதே சமயம் பெரியாரின் அரசியல் வாரிசு என 'தி இந்து' பிரகடனப்படுத்தும் ஜெயலலிதா தனது கட்சி சார்பில் நடக்கும் மாநாட்டில் இப்படி என்றாவது செய்துள்ளாரா..? யாரையாவது இந்த வழிமுறையைப் பின்பற்றித் தேர்ந்தெடுத்துள்ளாரா..?தி இந்து ஒரு ஆதாரம் காட்டட்டும்.
வழக்கம் போல் திரித்து ஒரு ஆதாரத்தை உருவாக்கி கட்டுரை வெளியிட வேண்டாம்.
*

தில் இன்னொரு முக்கியச் செய்தியும் இருக்கிறது.

முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக திரு.சவுந்திரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்ப‌ட்ட மாநாட்டில் பெரியார் உப தலைவராகப் பணியாற்றி இருக்கிறார்.

ஆதாரம்- திராவிடன் 12.2.1929

நூல்-செங்கல்பட்டு (தமிழ்) மாகாண சுயமரியாதை மகாநாடு 1929 (பக்கம் 14)

ஒரு ஜனநாயக மறுப்பாளர்,சர்வாதிகாரி என 'தி இந்து' வால் விமர்சிக்கப்படும் தன்னால் நியமிக்கபப்ட்ட இன்னொருவருக்கு கீழ் பணியாற்றுவாரா..?

இந்தபண்புஜெயலலிதா,கருணாநிதி,வாசன்,விஜயகாந்த்,ராமதாஸ்,ஸ்டாலின், என தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலில் எங்கும் பார்க்க முடியுமா..?

ஜெயலலிதா நத்தம் விஸ்வநாதன் கீழ் பணியாற்றுவாரா..? இல்லை கருணாநிதி தான்பொன்முடி கீழ் பணியாற்றுவாரா..?

இவ்வளவு ஏன்..?

ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளான என்.ராமும்,என்.ரவியும் ஒருங்கிணைந்தே பணியாற்ற‌ முடியவில்லை.ஆயிரம் பஞ்சாயத்துகள்.

'தி இந்து' ஆசிரியர் அசோகன் வெங்கடேஸ்வரன் கீழ் பணியாற்றுவாரா..?

'தி இந்து' நடுப்பக்க பொறுப்பாளர்,தன்னைக் காந்தியவாதி என அழைப்பதில் பெருமிதம் கொள்ளும் சமஸ் யாராவது தனது சக நிருபரின் கீழ் பணியாற்றத்தான் முடியுமா..?
***

//டைசியாக எனக்கு இக்கவுரவப் பதவியை அளித்த வரவேற்புக்கழக அங்கத்தினர்களுக்கும்,நண்பர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

இது மகாநாட்டுத் தலைவராகப் பணியாற்றிய திரு.சவுந்திர பாண்டியன் பேசிய உரையின் கடைசிப்பகுதி.

ஆதாரம்- திராவிடன் 17.2.1929

நூல்-செங்கல்பட்டு (தமிழ்) மாகாண சுயமரியாதை மகாநாடு 1929 (பக்கம் 77)

தனது நீண்ட உரையில் எங்கும் பெரியாருக்கு நன்றி சொல்லவில்லை.வாய்ப்பளித்த சர்வாதிகாரிக்கு யாரும் நன்றி சொல்லாமல் சேவகம் செய்யாமல் உரையை முடிக்க முடியுமா என்ன..?

ஜெயலலிதாவை வழிபடாமல்,4 வார்த்தைகளில் 2 வார்த்தைகள் தொழாமல் பன்னீர்செல்வம் உரையை முடிக்க முடியுமா என்ன..?

அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கியவுடன் என்.ராமைப் புகழாமல் பாராட்டாமல்,நன்றி சொல்லாமல் அசோகனோ,அசோகனுக்கு நன்றி சொல்லாமல் சமஸோ,வெங்கடேஸ்வரனோ இன்ன பிறரோ இருந்தனரா..என்ன‌..?

திறமைக்கு வேலை கிடைத்துள்ளது.ஏன் நன்றி சொல்ல வேண்டும் என்று இவர்கள் சுயமரியாதையுடன் இருந்தனரா..?

**
‘‘னநாயகம் பித்தலாட்டமான காரியம் மட்டுமல்ல, முட்டாள்தனமானதும்கூட’’ என்று பெரியார் சொன்னது ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்திற்கு மூலமாக இருக்கிறது என்பதை அரசியல் விமர்சகர் கண்டுபிடித்துள்ளார்.  பெரியாரின் வாசகம் என்ன காலத்தில் சொல்லப்பட்டது,அதன் வரலாற்றுப்பின்னணி என்ன என்பதை சொல்லி அதை எழுத வேண்டும் என்னும் குறைந்த பட்ச நேர்மை,எதை எதையும் தொடர்பு படுத்த வேண்டும் என்னும் அறிவும் இல்லை.

இதற்குப்பின் இந்தக் கட்டுரையில் விவாதிக்க ஒன்றும் இல்லை.

அடுத்ததாக ஜெயலலிதாவை பெரியாரின் வாரிசு என பிரகடனப்படுத்தியது குறித்து.

ஜெயலலிதா போனறு அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் செய்யும் சர்வாதிகாரச் செயல்களை, ஒரு சமூகப் போராளியுடன் ஒப்பிடுவது எப்படிச் சரியாகும்..? அப்ப‌டி ஒப்பிடுவதில் என்ன நேர்மை இருக்க முடியும்..?

இந்த விஷயத்தில் மட்டுமல்ல எந்த விஷயத்திலும் பெரியாரின் வாரிசாக ஜெயலலிதா விரும்பியது இல்லை.அப்படி நடந்து கொண்டதும் இல்லை.அவ்வாறு சொல்வதையும் அவர் விரும்பியது இல்லை.அவரே விரும்பாத விஷயத்திற்கு 'தி இந்து' முட்டுக் கொடுக்கிறது.

கருணாநிதியாவது பெரியார்,அண்ணா தொடர்ந்து தன்னை திராவிட இயக்க வாரிசாக காட்டிக்கொள்ள (ஒரு சில நேரங்கள் தவிர்த்து) விரும்புகிறார். அதைப் பெருமையாக கருதுகிறார். அதற்கு உண்மையாக இருக்கிறாரா ?இல்லையா ? என்பது வேறு விஷயம்..?இனிவரும் காலங்களில் அவருக்குப் பின் வருபவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

இப்படி இருக்கையில் அனைத்துக் கொள்கைகளிலும் பெரியாருடன் வெளிப்படையாக முரண்படும் ஜெயலலிதா எப்படி 'ஜனநாயக மறுப்பில்' மட்டும் வாரிசு ஆக முடியும்..?

(ஜனநாயக மறுப்பாளர் என்பது திரிக்கப்பட்டது என்று நாம் மேலே ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறோம்)
**
கொரியர் பாய் சமஸ்


//ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல் பிணையில் விடுவிக்கப்பட்டது வரை தமிழகத்தில் நடந்த கூத்துகளையெல்லாம் என்னவென்று சொல்வது? ‘//

ஜெயலலிதா கைதுக்குப் பின் 193 பேர் மரணம் அடைந்ததாக ஜெ.அவரது அறிக்கை சொல்கிறது.அவர‌து கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,விடுதலைக்கு வேண்டியும் நாடு முழுவதும் யாகம்,மொட்டை அடித்தல்,முளைப்பாரி,பால் காவடி,என இத்தியாதிகள்... 'தி இந்து' அரசியல் விமர்சகர் வார்த்தைகளில் சொல்லப்போனால் தமிழகத்தில் 'கூத்துகள்' நடந்துள்ளன.அதைப்பற்றி ஒரு வார்த்தை விமர்சித்து எழுதவும் வெளியிட  தி இந்துவுக்கும் அரசியல் விமர்சகருக்கும் திராணி இல்லை.

ஜெ.ஊழல் வழக்கில் சிறை சென்றது போல் வேறு யார் இதற்கு முன் சென்றுள்ளார்கள்,இருவருக்குமான ஒற்றுமை என்ன..? ஜெ.ஊழல் செய்தமைக்கு என்ன காரணம்..? ஜெ.கைதை ஒட்டி நடைபெற்றதாக கருதப்படும் இத்தனை பேரின் மரணம் உண்மையானதா..? அப்படியாயின் இதற்கு காரண‌ம் என்ன..? இத்தனை குடும்பங்கள் நிர்க்கதியாய் இருப்பதற்கு யார் காரண‌ம்..? இதற்கு என்ன தீர்வு என்று அலசி ஆராய கட்டுரையாளருக்கு விருப்பமில்லை.அல்லது தைரியம் இல்லை.

என்ன சம்பவத்திற்காக,எதன் எதிரொலியாக இந்தக் கட்டுரை தீட்டப்பட்டதோ,அந்த அரைப்பக்க கட்டுரையில் 'கூத்துக்கள்' என்ற ஒரு வார்த்தையில் அரசியல் விமர்சகர் கடந்து சொல்கிறார். அதற்குப்பின் எந்ததொடர்பும் அற்று பாரதியை மேற்கோள் காட்டி முடிக்கிறார் அரசியல் விமர்சகர்.

இந்தக் கட்டுரைக்கு வலுச்சேர்க்கும் வண்னம் பெரியாரும் ஜெயலலிதாவும் இணைந்து இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்புகைப்படத்தை பார்த்தால் இருவரும் இணைந்து களங்கள் பல கண்டு சிறைகள் பலவற்றிற்கு ஒன்று போல் சென்றிருப்பது போல் ஒரு எண்ணத்தை 'தி இந்து' படிக்கும் வாசகனுக்கு இயல்பாக ஏற்படுத்துகிறது. இந்தப்புகைப்படம் 'சூரியகாந்தி' என்னும் திரைப்படத்தின் வெற்றி விழாவில் எடுக்கப்பட்டது. அதையாவது குறிப்பிட்டிருக்கலாம்.

இழிவான நோக்கம் ஒன்று இருக்கும் பொழுது என்ன வழிமுறையை பின்பற்றவும் விஷமிகள் யோசிக்கவா போகிறார்கள்..?

ஒட்டுமொத்தமாய் இந்தக் கட்டுரை.எதை எழுத வேண்டுமோ அதை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விட்டு,எந்தச் சம்ப‌ந்தமும் இல்லாமல் பெரியாரின் வாரிசு என்று ஜெயலலிதாவை பிரகடனப்படுத்தி,அதிலும் நேர்மையற்று அவர் சொன்னதை மறைத்து அவரை அவதூறு செய்வதில் முடிந்திருக்கிறது.
***

"பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா" இந்த தலைப்பானது கத்துக்குட்டி வாசகன் முதல் விமர்சகர்கள்,எதிர்த்தரப்பினர் என அனைத்து தரப்பினரையும் இந்தக் கட்டுரையைப்படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் வைக்கபப்ட்டுள்ள‌து.ஆனால் அதற்கான எந்தத் தரவுகளும் இல்லை.

ஆபாச தலைப்பு வைத்து,அதனை மலிவான சுவரொட்டி அடித்து ஊர் முழுவதும் ஒட்டி திரை அரங்குக்கு ரசிகர்களை வரவழைப்பது திரைப்பட விநியோகஸ்தர்கள்,திரை அரங்கு உரிமையாளர்களின் ஒரு காலத்திய கேவலமான உத்தி.அவர்களின் அத்தகைய உத்தியைத்தான் தனது கட்டுரையை அனைத்து வாசகனும் படிக்க வேண்டும் என்னும் நோக்கில் கட்டுரையாளர் வைத்துள்ளார்.

ஜெயலலிதாவை விமர்சிப்பதாகவும் கணக்கில் வர  வேண்டும். அதே சமயம் மென்மையாக கூட விமர்சிக்க கூடாது.அதே சமயத்தில் 70 ஆண்டுகளுக்கு முன்பே தனது பரம வைரியும்,தனது கஸ்தூரி அய்யங்கார் நிறுவனத்தை விமர்சித்த  பெரியாரை இழிவு படுத்தவும் வேண்டும். எழுதியவர் ஆய்வாளர் என்ற பெயரையும் பெற வேண்டும் இப்படிப் பல நோக்கில் எழுதப்ப‌ட்டதால் எதிலும் உண்மையை நிறுவ முடியவில்லை.கட்டுரையாளர்,வெளியீட்டாளர் நோக்கமும் நிறைவேறாமல் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு இருக்கிறது.

அதுவும் போக இன்னொன்றும் இருக்கிறது.இது போல தவறான செய்திகளுடன் எதுவும் கட்டுரைகள் பிற பத்திரிகைகளில் வெளியானால், அந்த எழுத்தாளர் படைப்புகள் அதன் பிறகு வெளியிடுவது நிறுத்தி வைக்கப்படும்,(சிறிது காலத்துக்காவது).

ஆனால் இன்னும் ஒரு வாரத்தில் பாருங்கள் க.திருநாவுக்கரசு அடுத்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி அதனை கூச்சமற்று நடுப்பக்கத்தில் 'தி இந்து' வெளியிடும்.இது தான் இவர்கள் நேர்மை.

****


'தி இந்து' வில் வெளியாகும் கட்டுரைகள்,அதன் சிறப்பு நிருபர் தொடங்கி,அவர்களால் கவிஞர்,எழுத்தாளர்,விமர்சகர்,ஆய்வாளர் என ஒளிவட்டம் சூட்டப்படும் யார் எழுதிய கட்டுரையானாலும் சரி, அது யார் எழுதியதென்றாலும் அந்தக்கட்டுரையையும் அதே விஷயத்தை தினகரன்,தினத்தந்தி யில் அதன் முகம் தெரியாத உதவி ஆசிரியர் எழுதியதையும் ஒப்பிடுங்கள்.

முகம் தெரியாத உதவி ஆசிரியர் எழுதியது அனைத்து வகையிலும் சிறப்பாய் இருக்கும் என அறுதியிட்டுச் சொல்லலாம்.ஏனென்றால் அவர் பார்வையில் கட்டுரை சிறப்பாய் வர வேண்டும் என்னும் நோக்கமும்,உண்மையாய் எழுத வேண்டும் என்னும் எண்ணமும் மட்டும் தான் இருக்கும்.

தனது மேதமையைக் காட்ட வேண்டும் என்றோ,தனக்குத் தெரிந்ததை எல்லாம் கொட்டி விட வேண்டும் ,சமூகத்துக்கு ஏதாவது கருத்துச் சொல்லியே தீர வேண்டும் என்ற அரிப்போ,வெற்றுப் பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதோ அவர்களிடம் இருக்காது.

(ஆனால் 'தி இந்து' அப்ப‌டியாகத்தான் இருக்கிறது.இதில் எங்கு போய் தினமலருடனும் தினகரனுடனும்,தினத்தந்தியுடனும் போட்டி போட..? முண்டியடித்து தினமணி இடத்தைப் பிடிக்கலாம்.)

அந்தக் கட்டுரைகளும் இப்பொழுது விஷமத்தனம் செய்ய ஆரம்பித்து விட்டது. ஒரு நடுப்பக்க கட்டுரை எவ்வளவு பொறுப்புடனும்,எவ்வளவு தரவுகளுடனும் எழுதப்ப‌ட்டு வெளியிடப்பட வேண்டும். அதனை ஆசிரியர் குழுவோ,அதன் பொறுப்பாளரோ எத்தனை கவனமுடன் ஒப்பு நோக்கி சொல்லப்பட்ட ஆதாரங்கள்,மேற்கோள்கள் சரியா எனப் பார்க்க வேண்டும்..?

பெரியாரின் மகாநாட்டு உரையைக் கண்டிப்பாய் கட்டுரையாளர் படித்திருப்பார்.ஆனாலும் அதில் ஒரு பத்தியை வெட்டி எடுத்து,மீதம் உள்ளவற்றை வைத்து அவர் ஜனநாயக மறுப்பாளர் எனச் சொல்வது எவ்வளவு விஷமத்தனம்..? இவர்கள் தாங்கள் செய்வதை அறிந்தே செய்கிறார்கள்.என்ன உள்நோக்கம்..?

ஆதாரம் எதுவும் இல்லாமல் வார்த்தைகளை உருவிப் போட்டு விமர்சிப்பது எவ்வளவு நாளைக்கு நிற்கும்..? அது தவறென்று அம்பலப்படுத்த எவ்வளவு நேரம் ஆகும்..?

 உண்மையை மறைத்து பொய்யை உற்பத்தி செய்து எழுதுவதற்கு 'அரசியல் சமூக விமர்சகர்' பட்டம் ஒரு கேடா..? இப்படிப்பட்ட பொய்யர்கள் எழுதுவதை எவ்வித ஒப்புக்கும்,ஆய்வுக்கும் உட்படுத்தாமல் கொரியர் பாய் வேலையைச்செய்யும்,அப்படியே பிரசுரிப்பதற்கு op-editor பதவியும் லட்சத்தைத் தாண்டிய சம்பளமும் தண்டமாய் அழ வேண்டுமா..?

அதைப்போல இப்படிப்பட்ட ஆட்களை வேலைக்கு எடுத்து விட்டு அவர்களை வைத்து வேலை வாங்கத் துப்புக்கெட்ட எடிட்டரோ தினசரிக்கு லாயக்கில்லாத நிலையில் இருக்கிறார்.

போர்க்களத்தில் முதலில் கொல்லப்படுவது அறமும் உண்மையும் தான் என்பது அறியப்பட்ட உண்மை. இனிமேல் போர்க்களத்திற்கு மட்டுமல்ல,'தி இந்து'வில் வெளியாகும் கட்டுரைகளுக்கும் அது பொருந்தும் .

தொடர்புடைய இணைப்புக்கள்

http://kalakakkural.blogspot.in/2014/03/blog-post_10.html

http://kalakakkural.blogspot.in/2014/07/blog-post_14.html

http://www.vinavu.com/2014/10/16/media-brokers-bat-for-corrupt-jaya/

3 comments:

Anonymous said...

சமஸ் போன்றவர்கள் எல்லாம் நாளிதழில் நடுப்பக்க இன்சார்ஜ் என்றால் அதன் லட்சணம் இதுதான்.

Anonymous said...

சமஸ் சார்க்கு கொரியர் பாய் பட்டம் சூப்பரப்பு..

Anonymous said...

அசோகனுக்கு அடுத்த இடத்தில் இருந்த கோலாகல ஸ்ரீனிவாசனை தினகரனில் இருந்து வந்த வெங்கடேஸ்வரன் திட்டம் போட்டுக் காலி செய்ததை விரிவா எழுதுங்க தோழர்..