Thursday 12 June 2014

காசு ;பணம் ;துட்டு = செய்தி செய்தி...!




டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிட்டமைக்காக 854 வழக்குகளைத் தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 41 வழக்குகள் .ரூ.100 லஞ்சம் வாங்கிய கடைநிலை ஊழியன் வேண்டுமானால் சிறைச்சாலைக்குப் போகலாம்; ஆனால் ஊடக முதலாளியோ,ஆசிரியனோ கண்டிப்பாய் ஜெயிலுக்குப் போக மாட்டார்கள்.

தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு ஒன்றும் கிட்டாதது போல்,தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்ப‌ட்ட இந்த புகார்களினாலும் ஒன்றும் நடந்து விடப்போவதில்லை. பணம் கொடுத்துச் செய்தி போட வைக்கும் பெய்ட் நியூஸ் (Paid news ) குறித்தும் அது போன்ற சூழல் தமிழ்நாட்டில் எப்படி நிலவுகிறது என்றும் ஒரு விரிவான பார்வை.

சம்பவம் 1:

முப்பதாண்டுகளுக்கு முன்பு நடந்தது, இது!

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு காரில் கிளம்பத் தயாராகிறார், வி.ஜி.பன்னீர்தாஸ். மெதுவாக நகரத் தொடங்குகிறது. அதைப் பார்த்துவிட்டு வேகமாய் ஓடிவருகிறார், ஒரு நிருபர்.அவர் ஓடிவருவதைப் பார்த்த பன்னீர்தாஸ், தான் அமர்ந்திருக்கும் சீட்டின் பக்கம் உள்ள‌ கண்ணாடியை ஏற்றிவிட்டபடி டிரைவரிடம் ஏதோ சொல்ல.. உடனே அவரும் தன் இடப்பக்கம்  உள்ள‌ கார் கண்ணாடியை ஏற்றிவிடுகிறார். காரை ஓட்டிக்கொண்டே இதைச் செய்ததாலும் பழைய மாடல் என்பதாலும் அவரால் வேகமாக கண்ணாடியை மூடமுடியவில்லை. பாதி கண்ணாடி மூடிக்கொண்டு இருக்கும்போதே ஓடிவந்த நிருபர், தன் கையை காருக்குள் விடுகிறார்.

சும்மாவா? கார் நிறுத்தப்ப‌டுகிறது.” என்ன அண்ணாச்சி சொல்லாமக்கொள்ளாமக் கிளம்பிட்டீங்க” என கெக்கெக்க சிரிப்புடன் நிருபர், பன்னீர்தாஸுக்குத் தெரியாதா, அந்த சிரிப்பின் ஆயிரம் அர்த்தங்கள்? பாக்கெட்டில் இருந்து ஒரு ஐம்பது ரூபாய் எடுத்துக் கொடுத்து, ஹிஹிஹியை முடித்த பிறகு, அங்கிருந்து நகர்கிறார். 

போகும்போது, கார் டிரைவருக்கு என்னென்ன வார்த்தைகளில் திட்டு விழுந்திருக்கும் என்பது அவர்கள் இருவ‌ரைத் தவிர பரம மண்டலத்தில் இருக்கும் பிதாவும் அறியாதது. 

சம்பவம் 2:

இது நடந்து இருபதாண்டுகள் கடந்துவிட்டன. 

சென்னை கடற்கரையில் மிலாடி நபியை ஒட்டி தொழுகை.

அதில் காங்கிர‌ஸ் பிரமுகர் ஜே.எம்.ஆருண் கலந்து கொள்கிறார்.நிகழ்ச்சி முடிந்ததும் அவரது சார்பில் அவரது உதவியாளர் (நவாஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள்) அங்கு குழுமியிருக்கும் பிச்சைக் காரர்களை வரச் சொல்கிறார்.அவர்கள் கும்பலாக வருகின்றனர்.உடனடியாக அவர் சத்தம் போடவும் அவர்கள் ஒன்ற‌ன்பின் ஒன்றாக வரிசையாக நிற்கின்றான்ர்.வரிசையில் இருக்கும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 கொடுக்கிறார்.அனைவரும் வாங்கிக் கொண்டு அமைதியாய் கலைந்து செல்லத் தொடங்குகின்றனர்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து அங்கு காத்திருக்கும் பத்திரிகையாளர்களை வரச் சொல்கிறார்.வழக்கம் போல் கும்பலாக அவரைச் சுற்றி வளைக்கின்றனர்.ஒரு நிருபருக்கு ரூ.100 அளிக்கிறார். ஆனால் ஒரே சமயத்தில் ஆளாளுக்கு கையை நீட்டி அவரை சுற்றி வளைத்து விடுகின்றனர்.அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.பிளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க எல்லோருக்கும் தரேன் என அவர் எவ்வளவோ சொல்லியும் கூட்டம் அவரை மொய்ப்பதை விடவில்லை. அவரால் எதுவும் செய்ய முடிஅய்வில்லை.
இந்த நிலையில் அப்பொழுது தான் கலைந்து சென்ற பிச்சைக்காரர்கள் கூட்டம் திரும்ப ஓடி வந்து இந்த கூட்டத்தில் ஐக்கியமாகிறது.பத்திரிகையாளர்களை திட்ட முடியாத கடுப்பில் இருந்த நவாஸ் அவர்களைப் பார்த்ததும் உங்களுக்குத் தான் அழுதுட்டன்ல, இன்னும் எதுக்குடா வர்றீங்க போங்கடா என எரிந்து விழுகிறார்.

அவர்களில் ஒருவர், என்ன சார் எங்களுக்கு பத்து ரூபா கொடுத்தீங்க,இவங்களுக்கு ஆளுக்கு நூறு ரூபா கொடுக்கீங்க..ஏன் இப்படி பண்றீங்க ? என்று கேட்கிறார்.

அவங்க எல்லாம் ஜர்னலிஸ்ட் அவங்களுக்கு நூறு ரூபா தான் உங்களுக்கு பத்து ரூபா தான் என சொல்கிறார். அவரது பதிலில் திருப்தியடையாத பிச்சைக்காரர் அவங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் என அடுத்து ஒரு கேள்வியைப் போடுகிறார்.

அதற்கு பதில் சொல்ல முடியாத நவாஸ், யோவ்  உனக்குப் புரியாதா..?அவங்க ஜர்னலிஸ்ட் நீ பிச்சைக்காரன்.அவங்களுக்கு  அது தான் உனக்கு இது தான் போய்யா என்று எரிந்து விழுகிறார்.அதன் பின்பு பிச்சைக்காரர்கள் கூட்டம் கொஞ்சம் பொருமலுடன் இடத்தைக் காலி செய்கிறது.பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் கூட்டம் மறுபடியும் நவாசை மொய்க்கிறது.

சம்பவம் 3:

இது சமீபத்தில் நடந்தது.

சென்னை பிரஸ் கிளப்பில் நடந்த ஒரு பிரஸ் மீட்.

மறுநாள் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் நடைபெற இருக்கும் புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம் குறித்து தான் பிரஸ் மீட்.

புரட்சி பாரதம் கட்சி சார்பில் அதன் தலைவர் கலந்து கொள்கிறார்.அரங்கில் சுமார் நாற்பது,ஐம்பது பேர் இருக்கின்றனர்.இதில் உண்மையான நிருபர்களும்,அப்படிச் சொல்லி எப்பொழுதும் பிரஸ் கிளப்பைச் சுற்றிக்கொண்டு திரியும் கும்பலும் அடக்கம்.

பிரஸ் மீட் முடிந்ததும் பெரும்பாலோனோருக்கு கவர் கொடுக்கப்ப‌டுகிற‌து. கூட்டம் இனிதே கலைகிறது.

ஐம்பது நிருபர்களுக்கு கவர் கொடுத்த நிலையில் மறுநாள் எந்த செய்தித்தாளிலும் ஒரு வரிச் செய்தியும் வரவில்லை என்பது இங்கு முக்கியமானது. 

அன்று காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கம் எதிரில் புரட்சி பாரதம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற‌து. நிருபர்கள் வழக்கம் போல் ஐம்பது பேர் கூடியிருக்கின்றனர்.கூட்டத்தில் ஒவ்வொருவராகப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.திடீரென்று ஒருவர் மைக்கைப் பிடிக்கிறார்.

பேச்சு உச்சகட்ட சூட்டுக்குப் போனது.. 

” இங்கே நிறைய பத்திரிகைக்காரங்க கூடியிருக்கீங்க..நேற்றும் இப்படித்தான் வந்தீங்க..எல்லோருக்கும் கவர் கொடுத்தோம்.ஆனா இன்னைக்கு ஒரு பேப்பரிலும் ஒரு செய்தியும் வரல்லை.காசு வாங்கிட்டும் யாரும் போடல்லை.அதனால இன்னைக்கு யாருக்கும் கவர் கிடையாது,எந்த நாயும் அதுக்காக நிக்க வேணாம் எனச் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுகிறது.சிலர் எதிர்த்துப் பேசுகின்றனர்,சிலர் ஒரு மாதிரியாய் நெளிகின்றனர்.சிலர் அவரிடன் நியாயம் கேட்கின்றனர்.இதெல்லாம் சில நிமிடங்கள்தான்.அதன்பின் ஒவ்வொருவராகக் கலைந்து செல்கின்றன்ர்.

அவர்களில் சிலர், சற்று நேரத்தில் அருகிலுள்ள பிரஸ் கிளப்பில் இருந்து சிலரை அழைத்து வருகின்றனர். லெட்டர் பேடு பத்திரிகையாளர் சங்கம் நடத்தும் சகாயராஜ் தான் முன்னின்று வந்து பேசுகிறார். மைக்கை வாங்கிக் கொண்டு பேச ஆரம்பிக்கிறார்.

” சற்று நேரத்திற்கு முன் இங்கு பத்திரிகையாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ள‌னர்.உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கலாம்,ஆனால் நான்காவது தூணான எங்களை நாய்கள் என்று கடுமையாக பேசியது எங்களைக் காயப்படுத்தியுள்ளது.ஆகவே தாங்கள் தயவு செய்து அவ்வாறு குறிப்பிட்டமைக்கு மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவித்தால் அது சரியானதாக இருக்கும். இக்கூட்டத்தின் தலைவர் தயவுசெய்து இப்பிரச்னைக்கு நல்ல தீர்வை அளிக்க வேண்டும்” என ஒரு பக்கம் காலில் விழுந்து கொண்டு இன்னொரு பக்கம் சுயமரியாதைக்குரல் எழுப்புகிறார். 

'லெட்டர் பேடு' பேசியதற்குப்பின்னர் ஏற்கனவே பத்திரிகையாளர்களைத் திட்டிய நபர் மைக்கைப் பிடித்து பின்பு மீண்டும் பேசுகிறார். 

“ நான் பத்திரிகையாளர்களைப் பற்றிப் பேசியது அவர்களைக் காயப்படுத்தியது என்று அதன் தலைவர் சொல்கிறார்.நான் நாய் என்று திட்டியது தவறாய் இருக்கலாம்,அதே சமயம் அவர்கள் செய்ததும் தவறு தான்.இரண்டு தரப்பிலும் தவறு இருக்கிறது. அத‌னால் நான் மன்னிப்புக் கேட்க முடியாது.அதே சமயம் இன்னொன்றையும் மீண்டும் சொல்கிறோம்.இன்றைக்கு யாருக்கும் கண்டிப்பாய் கவர் கிடையாது.அதற்காக யாரும் காத்திருக்க வேண்டாம். இத்துடன் இப்பிரச்சனை முடிந்தது. இனி அடுத்த பேச்சளார் பேசுவார்” என அறிவித்து விட்டு இன்னொருவரிடம் மைக்கைக் கொடுக்கிறார்.

பத்திரிகையாளர் என்போரும் அவர்களின் லெட்டர் பேடு உம், வெற்றி எனக் கலைந்துபோவதா?அல்லது முன்பை விட  அதிகமாய் அசிங்கப்பட்டு விட்டோம் என போர்க்கொடி தூக்குவதா ? என யோசித்துக்கொண்டு நின்று இருந்தனர்.ஆனால் அங்கிருந்த கூட்டமோ இவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்க‌வில்லை. அவர்களை, இவர்களால் என்ன செய்துவிட முடியும்? வேறுவழியின்றி கர்மசிரத்தையோடு கலைந்துசென்றார்கள்.



       
- வெவ்வேறு காலகட்டங்களில் நடந்திருந்தாலும், இந்த சம்பவங்களில் பொதுவான அம்சத்தைப் பார்க்கமுடியும். செய்தியைச் சேகரிக்கவரும் நிருபர்களில் அல்லது இல்லாத பத்திரிகைக்கு எழுதாத ரிப்போர்ட்டர் எனச் சொல்வார்களே, அதைப்போல நிருபர் என சொல்லிக்கொண்டு திரியும் ஆட்கள், ” செய்தி சேகரிக்க வந்திருக்கிறோம்; அதற்கு கையூட்டாக நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஏதாவது கொடுங்கள்” எனக் கேட்பதுதான். ஏன் இவர்கள் இப்படி பிச்சை எடுப்பதைவிடக் கேவலமாக நடந்துகொள்கிறார்கள் எனக் கேட்கத் தோன்றும். பெரும்பாலும் இந்த கவுரவ/ அதிகாரப் பிச்சைக்காரர்கள் சொல்வது, எங்களுக்கு போதுமான சம்பளம் கொடுப்பதில்லை; அதனால்தான் இப்படி செய்திக்கு வரும் இடங்களில் வாங்கிக்கொள்கிறோம் என நியாயப்படுத்துகிறார்கள். 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இது ஓரளவுக்கு உண்மையாக இருந்தாலும், இப்போது வாழ்க்கைத் தேவைக்கான அளவைவிட எத்தனை மடங்கு அதிகம் கொடுத்தாலும், கவர் பணம் வாங்கும் பழக்கம் இவர்களைவிட்டுப் போகாது. 

தே அயோக்கியத்தனம் தான், இவர்களை கைநீட்டி பிச்சையெடுக்க வைக்கும் பத்திரிகை முதலாளிகளிடமும் வேர்கொண்டு, விழுதுகளைப் பரப்பிக்கொண்டு இருக்கிறது; இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவர்களின் ‘நிலை’க்கு ஏற்றதுபோல!

ஆட்சி நிர்வாகம், காவல்துறை போன்ற அதிகார மையங்களிலும் பெரு முதலாளிகளிடமும், தனிப்பட்ட, நிறுவனத்துக்கான, வேண்டப்பட்டவர்களுக்கான சலுகைகளைப் பெற்றுவந்த பத்திரிகை முதலாளிகள், அதற்குப் பதிலாக சம்பந்தப்பட்டவர்களுக்கு சாதகமான/ பாராட்டு கிடைக்கும்வகையில் செய்திகளைப் பிரசுரித்தார்கள். அல்லது பிரசுரிக்காமல் அமைதி காத்தார்கள்;அதைப்போலவே பத்திரிகையின் பொறுப்பில் உள்ளவர்களும் செய்துவருவதும் நடக்கிறது.






ந்தச் சீர்கேட்டில் வர்க்கம்,மதம்,சாதி,நட்பு என பல பிரிவுகள் உள்அடங்கியிருக்கிறன‌.. விரல்விட்டு எண்ணும் சில நிகழ்வுகளை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

தியாகராய நகரில் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களில் நடக்கும் பாலியல் சுரண்டல்கள்,வன்முறைகள் ,மரணங்கள் போன்ற சம்பவங்களில், மிகக்குறைந்த அளவு கூட செய்தித்தாள்களிலும்,ஊடகங்களிலும்  பதிவாவதில்லை.அதற்குக் காரணம் அந்த நிறுவனங்கள் கொடுக்கும் தொடர்ச்சியான விளம்பரங்கள் மூலம் ஊடகங்களுக்குக் கிட்டும் வருமானம் தான்.

விகடன் குழுமத்தில் கேடி மாறன் சகோதரர்களுக்கு எதிரான துரும்பளவுச் செய்தியும் பதிவாகாமல் இருப்பதற்கு காரணம் மாறன் குடும்பத்துடனான விகடன் குழுமத்தின் வர்த்தக உறவு என்பதை நாம் அறிவோம்.

ஆனால் அனைத்து நேரங்களிலும் வருவாய்க்காக மட்டுமே நிறுவனங்கள் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது. சமயம் பார்த்து ஊடகங்கள் தன் 'நேர்மையை'  நிரூபிக்கும்.

எடுத்துக்காட்டாக சரவண பவன் ஓட்டல் நிர்வாகம் தன்  விளம்பரங்களை எப்பொழுதும் தினமலர்,தினமணி போன்ற நாளிதழ்களில் தான் கொடுக்கும். மேற்கண்ட பத்திரிகைகளின் வாசகர்கள்தான் தனது இலக்கு வாடிக்கையாளர்கள் என்று கருதியதாலோ அல்லது தினத்தந்தி தனது லெவலுக்கு ஏற்ற பத்திரிகை அல்ல எனக் கருதியதாலோ தினத்தந்தியில் விளம்பரம் கொடுத்ததில்லை.





ஆனால் ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவண‌பவன் முதலாளி ராஜகோபால் கைது செய்யப்பட்ட பொழுது,    அதுவரை ஆண்டுக்கு பல லட்சங்கள் விளம்பர வருவாய் பார்த்த தினமலரும் தினமணியும் போட்டி போட்டு அந்த வழக்கு குறித்த செய்திகளையும் பின்னணிக் கதைகளையும் வரிந்து கட்டி எழுதின.ஆனால் அதே சமயம் இதுவரை சரவண பவனால் எந்த விளம்பர ஆதாயமும் அடையாத தின‌த்தந்தியோ வழக்கு குறித்த செய்தியைத் தவிர்த்தது.முடிந்த மட்டும் அடக்கி வாசித்தது.

அங்கு தினத்தந்தியிடம் வர்த்தக நலனை விட ஜாதிப்பாசமே முன்னின்றது."என்ன தான் இருந்தாலும் அவன் நம்மாளு " என்பதே அதில் பொதிந்து இருந்தது.

தனது முக்கிய விளம்பரதாரர் என்றாலும தவறைத் தட்டிக்கேட்டு நடுநிலையுடன் 'தினமலர்' செய்தி போட்டது  என்று நாம் மேலோட்டமாகக் கருத முடியாது.காசையும் வாங்கிக்கிட்டு காட்டியும் கொடுத்தது தினமலர் என்று வேண்டுமானால் கருத முடியும்.ஏனென்றால் அதன் லட்சணம் அப்படித்தான்.

இந்துத்துவத்தின் பிரச்சார பீரங்கியாக விளங்கும் 'தினமலர்' பிரேமானந்தா,சதுர்வேதி போன்றவர்கள் வல்லுறவு,கொலைக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் பொழுது அவர்களை இந்துச்சாமியார்கள் என்றும் கருதாமல்அவர்களின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியது. ஆனால் காஞ்சி ஜெயேந்திரன்அதே குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்ட‌ பொழுது ஜெகத்குரு,சங்கராச்சாரி என்றும் அவர்கள் குற்ற‌ம் செய்யாத உத்தமர்கள் என்றும் லோகத்தில் உள்ள‌ அனைவரிடமும் கருத்தை வாங்கிப் போட்டது. வாழை இலையில் மலம் கழிக்க வாய்ப்பளித்தாலும் கைதில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என சி.பி.எம்.மின் சீதாராம எச்சூரியின் கருத்தை வாங்கி பிரதானமாய் வெளியிட்டது.

இதுதான் தினமலர்.

சரவண‌ பவன் ராஜகோபால் 'அவாளாக‌ப்' பிறந்திருந்தால் இதே தினமல்ர் ஜீவஜோதி குறித்த நெகடிவ் செய்திகளை வெளியிட்டு பக்க‌ங்களை நிரப்பியிருக்கும் !

***
இது ஒருவிதம்,இது போல இன்னும் பலவிதம் இருக்கிறது.

அரசியல் அரங்கில் காணாமல் போன கட்சிகளை திரும்பவும் சீனுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவாக கட்சித்தலைவர் அல்லது அடிப்பொடிகளின் பேட்டி,  தகுதி இல்லை என்றாலும் தனக்குப் பிடித்த கவிஞரின் கவிதையை அடிக்கடி வெளியிடுவது,அரசியல் அரங்கில் இன்னொருவர் செய்த போராட்டத்தின் மூலம் கிட்டிய வெற்றியை தனக்குப் பிடித்த தலைவருக்குச் சொந்தமாக்க‌ ஒரு செய்தி, இன்னாருக்கு மந்திரி பதவி அல்லது இன்ன பதவி கிடைக்க ஒரு செய்தி, இன்னாரின் மந்திரி பதவியைப் பறிக்க அதற்கு எதிரான லாபிக்கு ஆதரவாய் ஒரு செய்தி,தனக்கு எப்பொழுதும் செய்தியைக் கசிய விடும் அதிகார மட்டத்தை மகிழ்ச்சிப்ப‌டுத்தி அவர்களுக்குப் பதிலுதவியாய் ஒரு செய்தி,சில நேரங்களில் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப துரும்பைத் தூணாக பூதாகரப்ப‌டுத்துதல் என மலை போல்  திட்டமிட்டு வெளியாகும் அல்லது வெளியாகாத செய்திகள் குறித்தான‌ எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே செல்லலாம்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை ஏதாவது நிகழ்ச்சிக்கு ஒருமுறை அழைத்து மேடையில் இடம் கொடுத்து நான்கு வார்த்தை பேச சொல்லி விட்டால் போதும். அதன் பின் தன்னை அழைத்தவர்கள் நடத்தும் நூல் வெளியீடு மட்டுமல்ல எந்த நிகழ்ச்சி தொடர்பாகவும் தான் வேலை பார்க்கும் பத்திரிகையில் செய்தியோ கட்டுரையோ வரவைத்து விடுவார்கள்.


இது சுயவிளம்பரத்துக்கு மாரடிக்கும் வகை.

பெரும் பத்திரிகைகளில் மட்டுமல்ல;சிறு பத்திரிகைகள் வரை,பக்கங்களை விற்பனைக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தேவேந்திர பூபதி மாதிரியான மொக்கை கவிஞரின் கவிதையெல்லாம் தொடர்ந்து இதழில் வருகிறது என்றால் வணிகவரித்துறை ஆணையரின் 'செல்வாக்கு' அந்தப் பத்திரிகைக்கு தவறாக ஏதோ ஒரு வழியில் கிடைக்கிறது என்று அர்த்தம்.




மேற்கண்டவை எல்லாம் முறையற்ற பல வகைகளில் ஊடகத்தைப் பயன்படுத்துவது குறித்தானது. அது மெல்ல மெல்ல வளர்ந்து, இன்று நேரடியாக, ” இவ்வளவு, இப்படியாக செய்தி போடுகிறேன்; அளவுக்கு ஏற்ப பணம் கொடுங்கள். உங்களின் தேர்தல் பிரச்சாரத்தை செய்தி வடிவிலேயே விளம்பரம்போல மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறோம்” என பத்திரிகை முதலாளிகளே, மோசடியில் இறங்கும் அளவுக்கு நடந்து வருகிறது.

இதைத்தான், பணம்கொடுத்து போடப்பட்ட செய்தி (Paid News) என்று தனியான 'பெருமைகொண்ட' ஒரு வார்த்தையாகவே குறிப்பிடுகிறார்கள். ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் பெருமை பீற்றப்படும் பத்திரிகையில், இப்படி பெருமைக்கே உலைவைக்கும் கேவலம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பணம் வாங்கிச் செய்தி போடுவதும் அதில் ஒன்று.







'ணத்துக்குச் செய்தி போடுவது' என்பது கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் பட்டவர்த்தனமாக வெளியில் தெரிந்துள்ளது.ஆனாலும் யாரும் இது குறித்து அஞ்சுவதோ,அதற்காக தங்களை மாற்றிக்கொள்ளவோ இல்லை.அதன் விளைவு தான் இந்த தேர்தலில் அதிக அளவிலான இத்தகைய வழக்குகள்.

இது குறித்து நாம் இன்னொரு தனிப் பதிவில் பார்ப்போம். 

தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலில் தினமல்ர்,தினமணி,தினகரன்,தந்தி டிவி,புதிய தலைமுறை,சன் குழுமம்,குமுதம் ஆகிய பெரும்பாலான ஊடகங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் ஆதரவான தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாய் வெளிப்படுத்தின.இதற்கான பேரங்களும் பின்னணியும் என்னென்னவோ !

ஆனால் வெளிப்படையாவை அல்லாமல் தமிழ் ஊடகங்களில் நடந்தேறியுள்ள பணத்திற்குச் செய்தி குறித்தும், தமிழ் ஊடக‌ச்சூழலில் இது எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்று பேச வேண்டிய தருணம்.காலை நாளிதழ்களில் இது இலை மறை காயாக இருந்தாலும் மாலை நாளிதழ்களில் இது பட்டவர்த்தனமாய் நடந்திருக்கிறது என்று சொல்ல முடியும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தமிழ்நாட்டில் இது அதிகமாய் மாலை நாளிதழ்களில் தான் நடந்த‌து.

எடுத்துக்காட்டாய் மாலை நாளிதழ்களில் சன் குழுமத்துக்குச் சொந்தமான‌  'தமிழ் முரசு' வைப்பார்த்தோமானால் இந்த மெகா பிளான் நடைபெற்றிருக்க அதிக சாத்தியங்கள் இருக்கிறது.

எப்படி என்றால் 20 நாட்கள் பேக்கேஜ் என்று ஒன்று இருக்கிறது.இந்த பேக்கேஜில் இணையும் வேட்பாளர் குறித்தும் அவரது பிரச்சாரம் குறித்தும்  தினசரி மூன்று பத்தி செய்தி.அத்துடன் ஒரு புகைப்படம். மொத்த‌ம் 20 நாட்கள்  வெளியிடப்படும்.மொத்தக் கட்டணம் ரூ.ஒன்றரை லட்சம். மேற்கண்ட தொகை  சம்பந்தப்பட்ட பத்திரிகை நிர்வாகத்திற்குச் சென்று விடும்.

இந்த முறைகேட்டை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களும் இதனை அதிக ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். ஏனென்றால் விளம்பரக் கட்டணத்தை விட இது மிக குறைவு என்பது ஒரு காரணம். விளம்பரத்தை விட இதற்கு வீச்சு அதிகம் என்பதும் இன்னொரு காரணம்.

பத்திரிகை நிர்வாகமும்,தங்களது திட்டமிடப்பட்ட வழக்கமான வருவாயை விட,குறுக்கு வழியில் வந்தாலும்  இது எதிர்பாராத கூடுதல் வருவாய் என்பதால் இதனைத் திட்டமிட்டு ஊக்குவிக்கிறது.

பத்திரிகை மேனேஜர்கள் தான் இதனை நிர்வகிக்கிறார்கள். எந்தவிதக் கணக்கு வழக்குமற்ற இந்தத்தொகை முழுக்க முழுக்க நிர்வாகத்திற்குச் செல்கிறதா அல்லது மேனேஜர் ஒரு பகுதியைச் சுட்டு விடுவாரா என்பதெல்லாம் யாராலும் அறிய முடியாதது. இந்தப் பணியை பெரும்பாலும் நிருபர்கள் தான் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களைத் தொடர்பு கொண்டு செய்கிறார்கள். அவ்வாறு வேட்பாளர்களிடம் இருந்து தொகை பெற்றுக்கொடுக்கும் நிருபருக்கு வழக்கமாய் விளம்பரம் பெற்றுக்கொடுத்தால் கொடுக்கப்படும் 15 விழுக்காடு கமிஷ‌ன் இதிலும் கொடுக்கப்படும். இதற்கு ரசீதோ எந்த ஒரு ஒப்புகையோ இல்லாததால் சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நிருபர்கள் தங்கள் சாமர்த்தியததைக் காட்டவும் வாய்ப்புண்டு.வேட்பாளர்களிடம் கூடுதலாய் வாங்கித் தாங்கள் பதுககுவதும் நடக்கிறது.ஏனென்றால் தேர்தல் பரபரப்பில் எந்த வேட்பாளரும் இந்தப்பணத்தை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. சம்பந்தப்பட்ட நிருபரை வைத்து விசாரிப்பது போன்றவை அதனால் சாத்தியமில்லாத விஷயம்.





'தமிழ் முரசு' சென்னைப் பதிப்பை மட்டும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

சென்னை,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ஆகிய நகரங்க‌ளுக்கு இப்பதிப்பு அச்சாகி செல்கிறது.இந்தப் பகுதியில் தென்சென்னை,வடசென்னை,மத்திய சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர்,அரக்கோணம் ஆகிய ஏழு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன.

தமிழ் முரசுவைப்பொருத்த வரை அதன் பல்வேறு பக்கங்களில் இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல் செய்திகள்,தமிழ்நாடு தேர்தல் செய்திகள் என ஒதுக்கப்ப‌ட்டாலும் சென்னை அதன் சுற்றுப்புற தொகுதிகள் குறித்த செய்திகள் இடம்பெறுவது அதன் ஆறாவது பக்கத்தில் தான்.

மேலும் கடந்த தேர்தலைப் பொருத்த வரை அது ஜெயலலிதா எதிர்ப்புக்கு அதிக முக்கியத்துவமும், காங்கிரஸ்,திமுக,பாரதிய ஜனதா ஆதரவுச் செய்திகளை அதிக அளவிலும் வெளியிட்டது. சென்னை நகரத்தைப் பொருத்த வரை, மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பத்திரிகை முதலாளிகளில் ஒருவர் தயாநிதி மாறன் குறித்த செய்திகள் மட்டும் தொடர்ந்து வெளியிடப்பட்டன.

திமுகவின் வடசென்னை,தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் பிரச்சாரம் அரிதாகத்தான் தான் வெளியிடப்பட்டது. மாநிலம் தழுவிய,இந்தியா முழுமைக்கும் பொதுவான செய்திகள் தான் அதிகம் வெளியிடப்பட்டன.

தேர்தலுக்கு கடைசி பத்து நாட்கள் மட்டும் சென்னையில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் குறித்த செய்திகள் ஓரளவுக்கு வெளியிடப்பட்டன.

ஆனால் இதற்கு மாறாக தேர்தல் அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்த காலத்தில் இருந்து  தேர்தல் முடியும் வரைக்கு மூன்று வேட்பாளர்கள் குறித்து ஒரு நாள் இடைவெளி கூட விடாமல் தொடர்ச்சியாக செய்தி வந்திருக்கிறது என்றால் அது என்ன கணக்கு.?

அவர்கள் திமுக,அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களும் கிடையாது. ஆனாலும் செய்தி வருகிறது என்றால் அவர்கள் மிக முக்கியமானவர்கள் தானே..?

அந்த முக்கியத்துவம் பெற‌ அவர்கள் என்ன கொடுத்தார்கள் என்னும் கேள்வி எழுகிறது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வட சென்னையில் போட்டியிட்ட அதன் வேட்பாளர் திரு.நிஜாம் முகைதீன், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தமிழ் மாநிலக் கட்சி என்ற பெயரில் ஆரம்பித்து வடசென்னையில் போட்டியிட்ட திரு.பால் கனகராஜ், தென்சென்னையில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட திரு.இல.கணேசன் ஆகியோர் தான் இவர்கள்.

சொல்லப்போனால் தமிழ் முரசில் ஒரு நாள் தயாநிதி மாறன் பிரச்சார செய்தி கூட வெளிவராமல் இருந்திருக்கிறது. ஆனால் மக்கள் 'பலம்' பொருந்திய மேற்கண்ட வேட்பாளர்களின் செய்திகள் வராத நாள் இல்லை.

இனி உங்கள் பார்வைக்கு.நாம் 20 நாட்களின் பிரதிகளைக் கொடுத்திருக்கிறோம்.


3-04-2014

04-04-2014

05-05-2014

06-04-2014



07-04-2014



08-04-2014

09-04-2014



10-04-2014


11-04-2014


12-04-2014



13-04-2014



14-04-2014

15-04-2014


16-04-2014



17-4-2014

18-04-2014



19-04-2014



22-04-2014


23-04-2014
( இதில் இரண்டு நாள் பிரதி விடுபட்டுள்ளது.தவறவிட்ட அதனை விரைவில் பதிவேற்றுகிறோம்.)

 மேற்கண்ட வடசென்னை,தென்சென்னை ஆகிய‌ தொகுதிகளில் தயாநிதி மாறன் சார்ந்துள்ள திமுக போட்டியிடுகிறது.ஆனால் அந்தக் அக்க‌ட்சி வேட்பாளர் குறித்த செய்தியைத் தேட வேண்டியிருக்கிறது. 

வடசென்னையில் எத்தனையோ வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.அவர்களுக்கு இல்லாத‌ முக்கியத்துவம் நிஜாம் முகைதீனுக்கும்,பால் கனகராஜூக்கும் ஏன்..?

இவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து தொடர்ச்சியாய் 20 நாட்கள் மூன்று பத்தியும் ஒரு புகைப்படமும் தமிழ் முரசுவில் வெளியிட்டும் வடசென்னையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வேட்பாளர் வாங்கிய ஓட்டுகள்- 694,பால் கனகராஜ் வாங்கிய ஓட்டுகள் 60.  

இந்த வேட்பாளர்களின் செல்வாக்கு இவ்வளவு தான்.இவர்களுக்குத் தான் இத்தனை செய்திகள்.இதை விட வடசென்னையில் 'தமிழ் முரசு' சில நூறு காப்பி விற்பனை ஆகும் என்பது சந்தேகமில்லை.

அதைப்போல தென்சென்னையில் திமுக வேட்பாளர் உட்பட எத்தனையோ வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் அவர்களுக்கு கூட இல்லாத முக்கியத்துவம் தோல்வியடைந்த இல.கணேசனுக்கு தொடர்ச்சியாக அளிக்கப்பட்டுள்ள‌து.

மாறன்களின் ராஜ்ஜியத்தில் கருணாநிதிக்கு கூட‌ பிரதிபலன் இல்லாமல் குண்டூசி கூட கிடைக்காது என்பது நாம் அறியாததா..?

அப்படி இருக்கையில் தினமும் மூன்று பத்தி செய்தியும் ஒரு புகைப்படமும் சும்மாவா வெளிவரும்..?

தமிழ் முரசுவில் நடைபெற்றிருப்பது ( Paid news ) என்னும் முடிவுக்குத் தான் வர வேண்டியிருக்கிறது.





மிழ் முரசுவில் மட்டும் இது போன்ற இதழியல் சீர்கேடுகள் ஒரே நாளில் நடக்க வாய்ப்பில்லை என்பதை அறிவோம். மற்ற மாலை நாளிதழ்கள், எல்லாவற்றிலும் கூடுதல் அனுபவம் கொண்டிருக்கும் பொழுது இதில் மட்டும் பின் தங்கி விடுமா? ஆனால் அவை சென்னையில் போட்டியிட்ட‌ பதிவு செய்யப்பட்ட,செய்யபெறாத,முக்கியமான சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் பரவலாக வாய்ப்பளித்து அவர்களின் செய்திகளை வெளியிட்டிருக்கின்றனர். 

லட்சக்கணக்கில் வாக்கு வாங்கும் வேட்பாளர்களில் இருந்து சில நூறு வாக்குகள் வாங்கும் வேட்பாளர் வரைக்கும் பிற‌ நாளிதழ்களில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.ஆகவே அவற்றின் முறைகேட்டைக் கையும் களவுமாய் பிடிக்க முடியவில்லை.அவர்களின் 'தொழில் நேர்த்தியும்' ஒரு காரணம்.

இங்கு தமிழ் முரசு வின் சென்னைப்பதிப்பில் நம் கண்ணுக்குத் தெரிந்த ஒரு முறைகேட்டை மட்டுமே வெளிக் கொணர்ந்திருக்கிறோம். தமிழ் முரசு பல இடங்களில் பதிப்பிக்கப்ப‌டுகிறது. தமிழ்நாட்டில் இதைப்போல இன்னும் பல ஊடகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கெல்லாம் எத்தனை எத்தனை பணத்துக்குச் செய்திகளோ யாருக்குத் தெரியும்.


சுருக்கமாய்ச் சொன்னால் நாம் காசுக்குச் செய்தி வெளியிடுவதில் சிறு முனையைத் தான் கண்டுபிடித்திருக்கிறோம்.இன்னும் நம் கண்ணில் தட்டுப்படாத எத்தனையோ பெரும் பனிப்பாறைகள் இருக்கின்றன.

பத்திரிகைகள் உண்மையை மட்டுமே எழுதும் என்ற நம்பிக்கையில் அதனைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகனை மடையர்களாகக் கருதி, தங்களின் வருவாயைப் பெருக்க எந்த இழிநிலைக்கும் செல்லத் துணிந்துள்ள இந்த கபடதாரிகளை என்ன செய்யலாம்..?




5 comments:

நெல்லைத் தமிழன் said...

'நீங்கள் கில்லாடிதான். Well Done. உங்களைப் பாராட்டுகிறேன்.

Anonymous said...

Excellent article....

AAR said...

Great analysis and article.
Kudos!!

Bava said...

Super..

Bava said...

Super investigation.