Wednesday, 21 May 2014

திமுக கட்டுச்சோற்றில் நக்கீரன் பெருச்சாளி...!நக்கீரன் கோபால்

டந்த 2011 தமிழ்நாடு சட்டமன்ற‌த் தேர்தல் வாக்குகள் எண்ணும் நாளன்று காலை.தபால் வாக்குகள் எண்ணி முடித்த நேரம்.

திமுக தலைவரும் அப்பொழுதைய முதல்வருமான மு.கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் மிக அருகாமையில்  உள்ள டி.யூ.சி.எஸ்.கூட்டுறவு பண்டகசாலை வாசலில் அரசு வழங்கிய கலைஞர் வண்ணத் தொலைக்காட்சியை வைத்து தேர்தல் செய்தியை அங்கிருந்த ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.மு.கருணாநிதியின் பாதுகாப்புக்கு இருந்த போலீஸ் காரர்களில் ஒரு சிலரும்,சில பத்திரிகையாளர்களும் அங்கு குழுமியிருந்தனர்.

தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சன் டிவியின் விவாதம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.நக்கீரன் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கோபால் அதில் கலந்து கொண்ட ஒரு விருந்தினர்.

வழக்கம் போல் கோபால் சவடாலாக பேசிக் கொண்டிருக்கிறார்.திமுக தான் ஜெயிக்கும்,இதில் எந்த சந்தேகமும் இல்லை,கலைஞர் அரசின் சாதனை அப்படி என்று வரிசையாக தம் கட்டிப் பேசுகிறார்.

சிறிது நேரத்தில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வெளிவருகிறது.

பெரும்பாலான இடங்களில் திமுக பின் தங்கி இருப்பதாக தகவல் வருகிற‌து. நக்கீரன் கோபாலின் சவடால் பேச்சு டிவியில் ஓடிக்கொண்டிருக்க,திரையின் கீழே அதிமுக முன்னணி என செய்தி ஓடிக் கொண்டிருந்தது. நேரம ஆக ஆக திமுக தோல்வி உறுதிப்படுத்தப்படுகிறது.திமுக தொண்டர்கள் ஒரு சிலர் அந்த இடத்தில் குழும தொடங்கியிருந்தனர்.அப்பொழுது ,அங்கு இருந்த ஒரு அப்பாவி திமுக தொண்டர்  இதைப்பார்த்து சத்தம் போட ஆரம்பித்தார்..

"என் தலைவனை எல்லோரும் சேர்ந்து தோற்க‌டிச்சுட்டாங்க.இந்த கோபால் மாதிரி ஆட்களும் இதுக்கு ஒரு காரணம்". உண்மையை எப்பவும் எழுதுறதுல்ல,திமுக தான் ஜெயிக்கும்,ஆட்சி அமைக்கும் அப்படின்னு எழுதி வித்துட்டு போயிட்டானுங்க,ஆனா இன்னைக்கு என் தலைவன் தோத்துட்டான்,ஆனால் இன்னும் பாரு கூச்சம் இல் லாம பொய் பேசிக்கிட்டிருக்கானுங்க என்று பேசினார்.அவர் பேச்சைக் கேட்ட யாரும் எதுவும் பேசவில்லை. அப்படியே ஒரு ஓரத்தில் நின்று புலம்பிக்கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரத்தில் தேர்தல் முடிவு அறிந்த கோபாலும் தொலைககட்சி விவாதத்தை விட்டு பாதியில் கிளம்பி விட்டார்.

அன்று உரத்துக் குரல் கொடுத்த அப்பாவி திமுக தொண்டனுக்குத் தெரியாது.பத்திரிகைகள் உண்மையை எழுதி என்றும் ஆட்சியாளர்களின்  கவனத்துக்கு கொண்டு செல்லும் பணியைச் செய்யாது என்றும்,அப்ப‌டி ஒருவேளை உண்மையை எழுதினால், ஆட்சியாளர்கள் அருகில் இருந்து கொண்டு அவர்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவதோ,அவர்கள் மூலம் தங்களுக்கு வேண்டிய காரியத்தைச் சாதிப்பதோ முடியாத காரியம் என்று தெரியாது. ஆகவே பொய்யை உற்பத்தி செய்து தங்களின் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது.

அதைப்போல இன்னொன்றும் தெரியவும் வாய்ப்பில்லை. நக்கீரன் கோபாலுக்கு நக்கீரனில் வெளிவரும் செய்திகள் குறித்த பெரிய அளவிலான அக்கறையோ,ஆர்வமோ,தொடர்போ கிடையாது என்பதும் அது அதன் இணை ஆசிரியர் காமராஜால் அவரது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இயக்கப்ப‌டுகிற‌து என்னும் உண்மையும்.

இனி செய்திக்கு வருவோம்.

நக்கீரன் வெளியிட்ட 2011 சட்டமன்ற‌த் தேர்தல் கணிப்பு  மோசடி குறித்தும் அதற்காய் அது சிரம் தாழ்ந்து வெளியிட்ட மன்னிப்பு குறித்தும் ஒரு பதிவு வெளியிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சி தான் இப்பொழுது நடந்திருக்கிற‌து.பழைய மோசடியை மீண்டும் ஒரு முறை நக்கீரன் செய்திருக்கிறது.வழக்கம் போல் இந்த முறையும் அதன் வாசகர்களின் பெருவாரியானவர்களான திமுகவினர் தான் பாதிக்கப்ப‌ட்டிருக்கின்றனர்.

2014 நாடாளுமன்ற‌த் தேர்தலில்  திமுக அணி 22 தொகுதிகளையும்,அதிமுக அணி 15 இடங்களையும் பாஜக அணி 2 இடங்களையும் பிடிக்கும் எனவும் நக்கீரன்  'கணிப்பு' வெளியிட்டிருந்தது.ஒரு இடத்தில் சரிசமமான போட்டி எனவும் 'துல்லிய' கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தது.
(திமுக-திருச்சி,கிருஷ்ணகிரி,வேலூர்,திருவண்ணாமலை,கடலூர்,நாகை,விருதுநகர்,ராமநாதபுரம்,விழுப்புரம்,ஸ்ரீபெரும்புதூர்,அரக்கோணம்,தஞ்சாவூர்,திண்டுக்கல்,மதுரை,நெல்லை,பெரம்பலூர்,மத்திய சென்னை,காஞ்சிபுரம்,நீலகிரி,விடுதலைச்சிறுத்தைகள்-சிதம்பரம்,புதிய தமிழகம்-தென்காசி ஆகிய தொகுதிகள் )

ஆனால் தேர்தல் முடிவுகளோ 'வழக்கம் போல்' முற்றிலும் எதிரான‌தாக வந்திருக்கிறது.

22 இடங்களைப்பிடிக்கும் என நக்கீரன் கணித்த திமுக அணி ஒரு இடத்தையும் பிடிக்க வில்லை.அதற்கு மாறாக 15 இடங்கள் தான் என நக்கீரன் கணித்த அதிமுக 37 இடங்களைப் பிடித்திருக்கிற‌து.வாக்குகள் வித்தியாசமும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. நக்கீரன் இதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது மீண்டும் ஒரு பொய்யை விதைப்பதாகத் தான் இருக்கும்.ன்று திமுக என்னும் கட்சிக்கும் அதற்கு ஆதரவாகவும் எத்தனையோ காட்சி ஊடகங்களும் நாளிதழ்களும் இருக்கலாம்.ஆனால் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பேயே இவ்வளவு வீச்சு இல்லாத காலத்தில் 'நக்கீரன்' திமுக தொண்டன் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தது.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவின் 1991 ஆம் ஆண்டின் மக்கள் விரோத ஆட்சியை எதிர்த்து நக்கீரன் செயல்பட ஆரம்பித்த பொழுது தான் அது மிகப்பெரிய வீச்சுடன் இயங்கியது. அத்துடன் சிறுபான்மையினர் ஆதரவு,ஈழத்தமிழர் ஆதரவு, திராவிட இயக்க சார்பு,தமிழ் தேசிய ஆதரவு,ஆங்காங்கு உள்ள மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை வெளிக்கொணருவது என தனக்கென தனித்தளத்தையும் உருவாக்கிக் கொண்டது.

இந்த அளவுக்கு அதிக அளவிலான ஊடகங்களும் தொலைத் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் இல்லாத நிலையில் இதனை சாத்தியப்படுத்தியதால் அதற்கு நல்ல அடித்தளம் கிடைத்தது. போட்டி இதழ்களான ஜூனியர் விகடன்,தராசு ஆகியவை பின்னுக்குத் தள்ளப்ப‌ட்டன. இன்னொரு பக்கத்தில் அதிமுக கட்சிக்கு எதிர்நிலையில் இருந்த‌ திமுக தொண்டன் முரசொலியைப் போல நக்கீரனையும் தனது பத்திரிகையாக கொண்டாட ஆரம்பித்தான்.

ஆனால் நாளடைவில் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிர்ப்பு என்பது திசைமாறி, அதிமுக எதிர்ப்பு என்ற அளவிலும்,அதற்குப் பின் திமுக ஆதரவு என்ற அளவிலும் சுருங்கி விட்டது. திமுக ஆதரவு நிலைக்காக‌ எந்த சமரசத்தையும் செய்வதற்கும் தயாரான‌து. பொதுவான வாசகர்கள் அதனை விட்டு விலகத் தொடங்கி விட்ட நிலையிலும் அது குறித்து எந்தவிதக் கவலையும் கொள்ளவில்லை.

அப்படி வெளிவந்தது தான் 2011 சட்டமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு. அது பொய் என அம்பலப்பட்ட பிறகு, திமுக தொண்டனே நக்கீரனை நம்பவில்லை. இதற்குப்பிறகு விற்பனை இன்னும் கணிசமாக பாதிக்கப்பட்டது.

இன்றோ திமுகவிற்குள்ளும் தனக்கு பிடிப்பவர்கள்,பிடிக்காதவர்கள் என உருவாக்கி அதற்குள்ளும் கோஷ்டி அரசியல் செய்யும் நிலைக்கு நக்கீரன் வந்து விட்டது. இப்பொழுது அனைத்துத் தரப்பிலும் நிலையான வாசகர் வட்டத்தை இழந்த நிலையில் இருக்கிறது. இன்றைய நக்கீரனின் விற்பனை 50 ஆயிரத்திற்கும் குறைவு என்பது தான் உண்மை. ஆனால் அதற்காய் நக்கீரன் நிர்வாகம் வருத்தப்ப‌டப் போவதில்லை.

ஒரு காலத்தில் காட்டாற்று வெள்ளத்திலும் எதிர்நீச்சல் போட்ட நக்கீரன் இன்று குட்டை நீரில் சுற்றும் கொசு நிலையில் இருக்கிற‌து.தேர்தல் கருத்துக் கணிப்பின் பொழுது கூட நக்கீரனின் விற்பனை வழக்கம் போல் 45000 பிரதிகளைத் தாண்டவில்லை என்பது சந்தை நிலவரம். இதிலிருந்து தேர்தல் திருவிழாவின் பொழுது கூட‌ நக்கீரனை திமுக தொண்டனே வாங்கவில்லை என்பதையும் அறியலாம். இதே நிலையில் சென்றால் அடுத்து இதழ் எங்கே போய் முடியும் என்பது சொல்லித் தெரிவதில்லை.

ஜூனியர் விகடன் போன்ற இதழ்களுக்கு மாற்றாக கோலோச்சிய நக்கீரனின் இன்றைய‌ வீழ்ச்சி உண்மையிலேயே வருத்தத்திற்குரியது.

ஆனால் இந்த நிலைக்கு,பாதை மாறிப்பயணம் தொடரும் நக்கீரன் ஆசிரியர் கோபாலையும் துணை ஆசிரியர் அ.காமராஜையும் தாண்டி வேறு யாரும் காரணமல்ல என்பது சொல்லித் தெரிவதில்லை.No comments: