Wednesday 30 April 2014

அறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. !ஜூனியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரித்துள்ள' நக்கீரன் அமைதி காக்குமா என்ன..?

நக்கீரன் இப்பொழுது வெளியிட்ட கருத்துக் கணிப்பைப் பார்ப்பதற்கு முன்பு, 2011 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக‌ அதன் பழைய கருத்துக் கணிப்பையும் அது தொடர்பாய் வெளியிட்ட மன்னிப்பையும் பார்ப்போம்.


தேர்தலில் திமுக கூட்டணி 31 இடங்களைப் பிடித்தது.

தேர்தலில் தனது ஜோசியம் பலிக்காததால் அதன் ஆசிரியர் அதற்கு வருத்தம் தெரிவித்தார்.

இது தொடர்பான நக்கீரன் ஆசிரியரின் மன்னிப்பு.

சென்ற தேர்தல்களில் நக்கீரன் கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததை வாசகர்களும், அரசியல் பிரமுகர்களும், மக்களும் மறக்கவில்லை. ஆனால் இந்த முறை தவறி விட்டது.
கருத்து கணிப்புகளை மேற்கொள்வதற்கு என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதே விஞ்ஞான முறையையே கையாண்டோம். முடிவுகளை பாரபட்சமின்றி வெளியிட்டோம்..
தற்போது ஏன் சர்வே தோற்றது என்பதை ஆராய்ந்தோம். சாம்பிள்களில் தவறா, எடுக்கப்பட்ட முறை தவறா, சர்வே முடிவை தொகுதிகளாக மாறுவதில் தவறா என வல்லுனர்களிடம் கேட்டோம். இதெல்லாம் சரியாகவே இருப்பதாக அவர்கள் கூறினர்.
பிறகு ஏன தோல்வி ஏற்பட்டது என ஆராய்ந்தோம். நாம் தனியார் நிறுவனங்களை நம்பாமல் நேரடியாக சர்வே செய்தோம். சர்வே படிவத்தின் தலைப்பில் நக்கீரன் என்ற பெயர் இருந்தது. எனவே மக்கள் உண்மையான முடிவை சொல்லாமல், ஜெயலலிதாவுக்கு நக்கீரன் எதிரி என கருதி, மாற்றி சொல்லி இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.. இதனால்தான் கணிப்பு தவறி விட்டது.
என்ன காரணம் சொன்னாலும் தவறு தவறுதான். இதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு நக்கீரன் தன் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறது.”

-ஆசிரியர்

இப்படிப்பட்ட நக்கீரன் தான் இந்த முறை 2014 இல் நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ள‌து. (கருத்துக் கணிப்பில் பலமுறை அம்பலப்பட்டும் பிராடுத்தனத்தை ஒப்புக் கொள்ளாத ஜு.வி. க்கு நக்கீரனை இந்த விஷயத்தில் பாராட்டலாம்.)

டந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கருத்துக் கணிப்பினை வெளியிட்டதனால், வாங்கிய அடியின் வலி இன்னும் நக்கீரனுக்கு மறக்காத நிலையில் தொகுதிக்கு இத்தனை பேரிடம் கருத்துக் கேட்டோம் என்று வெளிப்படையாய்ச் சொல்லி இப்பொழுது கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. சில இடங்களில் இரண்டு வேட்பாளர்கள் சரி நிகர் சரியாக போட்டியில் இருக்கிறார்கள் என்று 'துல்லியக்' கணக்கும் காட்டியுள்ளது.  ஸ்ஸ்ஸ் முடியல.
5  கோடிக்கும் மேற்பட்ட  வாக்காளர்களைக்  கொண்ட தமிழ்நாட்டில், மக்களின் மனநிலையை வெறும் இருபத்து நான்காயிரம் நபர்களிடம் கருத்துக 'கேட்டதாகச்' சொல்லி வெளியிடும் யூகம் துல்லியமாக இருக்க முடியாது.தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள‌த்தான் உதவும்.

அனைவரும் நினைப்பது போல திமுக தான் முன்னணியில் இருக்கிறது என்று யாரும் சொல்லாத,சொல்லத் துணியாத செய்தியைச் சொல்லியுள்ளது.இந்த விசுவாசம் பாராட்டுக்குரியது.

நக்கீரனின் கருத்துக்கணிப்பின் படி திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் 22 இடங்களில் வெற்றி பெறும்.

இந்த முறை நக்கீரனின் கணிப்பு பலிக்குமா அல்லது இன்னொரு மன்னிப்பா?அல்லது ஜூனியர் விகடன் மாதிரியான சமாளிப்பா என்று மே 16 இல் தெரியவரும்.
***

நாம் நக்கீரன் வெளியிடும் செய்திகளின் 'நம்பகத்தன்மை'யை வேறோரு கோண‌த்தில் பரிசீலிப்போம்.

1992-93 கால கட்டங்களில் முதலில் தராசு விற்பனையை முந்திய நக்கீரன் அதன்பின் ஜூனியர் விகடனின் விற்பனையை முந்தியது. இவ்வாறு ஒரு காலத்தில் ஜூனியர் விகடனுக்கு போட்டியாக கோலோச்சிய 'நக்கீரன்' இன்று ஜூ.வி. விற்பனையில் கால்வாசியை நெருங்கவே முடியாத நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டாலே சந்தையில் அதன் நம்பகத்தன்மையும் நடுநிலைமையும் எந்த அளவு அடிபட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நக்கீரன் இதழானது முரசொலியின் வாரமிருமுறைப் பதிப்பு போலத் தான் வெளிவருகிறது.அதன் வாசகர்களும் பெரும்பாலும் திமுகவினர் தான்.அதனால் நக்கீரனில் வெளியான திமுக தொடர்பான செய்திகள் உண்மை என்று நம்புகின்றனர்.அதனால் நக்கீரனின் இந்தச் சேவை திமுக கட்சிக்காரனின் நல்லதுக்கா ? கெட்டதுக்கா ? எனத் தெரியவில்லை.

இந்த  கருத்துக் கணிப்பின் மூலம் திமுக மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருப்பதாய் நாம் உணர முடியும். பாமர மக்கள் மட்டுமல்ல,திமுக கட்சிக்காரர்கள் கூட நக்கீரன் அப்படித்தான் எழுதுவான் என்று சொல்லும் நம்ப முடியாத சூழலே இருக்கிறது.

இவ்வாறு திமுகவிற்கு வரிந்து கட்டி ஆதரவாய் வெளியிடும் நக்கீரனில்,உண்மையிலேயே திமுக தொட‌ர்பாக எழுதுவதிலேயே உண்மை இருப்பதில்லை.திமுக தரப்புச் செய்திகளையே சரியாக நக்கீரன் கணிக்க முடிவதில்லை.(டெஸ்க்கில் அமர்ந்து உருவாக்கினால் இப்படித்தான் இருக்கும் என்கிறீர்களா அதுவும் சரிதான்.)

திமுகவின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் என்று இரண்டு இதழ்களில் ஒரு யூகப் பட்டியலை  மார்ச் மாதத்தில் வெளியிட்டது.கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளின் பெயர் தவிர 35 தொகுதிகளின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் 15 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயரைத் தவறாக நக்கீரன் வெளியிட்டது.

தான் எந்தக் கட்சிக்கு ஆதரவாய்,எக்கட்சியின் பிரச்சார பீரங்கி போல் நடந்து கொள்கிறதோ,அந்தக் கட்சி யாரை வேட்பாளராய் நிறுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்பதனை தேர்தல் நெருக்கத்தில் கூட நக்கீரனின் 'துப்பறியும்' இலாகாவால் கணிக்க முடியவில்லை.இத்தனைக்கும் அதிமுக போல் திமுக இல்லை என்றும் இது வெளிப்படைத் தனமையுடன் இயங்கும் ஜனநாயக இயக்கம் என்றும் அடிக்கடி சொல்லியிருக்கிறது நக்கீரன்.

நாம் நக்கீரன் தவறாய் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் அதற்கு எழுதிய குறிப்பை மட்டும் வெளியிடுகிறோம். யாருக்கு கிடைக்கும் என்பதற்கு நக்கீரன் எழுதிய குறிப்புகள் மிகவும் சுவராஸ்யமாய் இருக்கும்.இனி தப்பும் தவறாய்  வெளியிட்ட நக்கீரன் பட்டியல் விபரம்.

முதல் பட்டியல்: 25.02.2014 - தேதியிட்ட‌ இதழில் வெளியானது.

வடசென்னை-டி.கே.எஸ்.இளங்கோவன் (தவறு)

தென்சென்னை-ஆலந்தூர் பாரதி-மா.சுப்ரமணியம் (தவறு)

கிருஷ்ணகிரி-சுகவனம் (தவறு)

கடலூர்- (தவறு)

தி.மு.க தரப்பில் முன் னாள் மத்திய-மாநில அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனை களமிறக் கும் எண்ணம் உள்ளது. கடந்த முறையே அவர் கடலூர் தொகுதியில் போட்டியிட நினைத் தார். காங்கிரசுக்கு ஒதுக் கப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு இல்லை. இந்த முறை அவருக்குத் தருவதற்கு கனிமொழி சிபாரிசு செய்கிறார். மா.செ. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வ மும் செஞ்சி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இருக்கிறாராம்.

சேலம்-(தவறு)

தி.மு.கவில் சீட் கேட்டிருப்பவர்களில் வீர பாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவியின் மகன் பிரபுவும் ஒருவர். சமீபத்தில் ஸ்டாலினை அவரது வீட்டில் பிரபு சந்தித்தபோது, அவரிடம் ஸ்டாலின் பாசமாகப் பேசியதுடன், "நான் வெளி யிலே புறப்படுறேன்.. நீ அண்ணியை பார்த்து விட்டுப்போ' என்று சொல்லியிருக்கிறார். தன் உதவியாளரையும் கூப்பிட்டு, "பிரபு வந்திருக்கும் செய்தியை துர்காகிட்டே சொல்லி, பார்க்கச் சொல்லுங்க' என்று சொல்லியிருக்கிறார். இந்தளவுக்கு ஸ்டாலினின் மனதில் பிரபுவுக்கு இடமிருப்பதால் சேலம் சீட்டும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பிரபு தரப்பில் உள்ளது.

அடுத்த இதழில் (4.03.2014) வெளிவந்த தொடர்ச்சி இது:

அரக்கோணம் (தவறு)

 தி.மு.க.வில் சிட்டிங் எம்.பி. ஜெகத்ரட்சகனின் கவ னம் ஸ்ரீபெரும் புதூர் பக்கம் சென்றுவிட்டதால், துரை முருகன் தனது மகன் கதிர் ஆனந்தை இங்கே களமிறக்க விரும்புகிறார். அவரது மகன் விருப்பமனு அளிப்பதற்கு முன் அது பற்றி தன்னிடம் எதுவும் தெரி விக்கவில்லை என்பதில் கலைஞருக்கு வருத்தம். தினமும் தன்னை சந் திக்கிறவர் இதைச் சொல்ல வில்லையே என்று மறுநாள் துரைமுருகனை கலைஞர் பார்க்கவேயில்லை. வாரிசுகளுக்கு சீட் இல்லை என்கிற கலைஞரின் வார்த்தைகளால் துரைமுருகன் பதற்றமாகி யிருக்கிறார். இருப்பினும் எப்படியும் கலைஞரின் மனதைக் கவர்ந்து தன் மகனுக்கு சீட் வாங்கிவிட லாம் என்ற முயற்சியைத் தொடர்கிறார். திருத்தணி நகராட்சி முன்னாள் சேர்மன்களான சந்திரன், கண்ணையன் ஆகியோரும் சீட் எதிர்பார்ப்பில் உள்ளனர். டாக்டர் சரவணன், பூபாலன் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.


ஈரோடு (தவறு)

தி.மு.கவில் சீனியரான சுப்பு லட்சுமி ஜெகதீசன் தேர்தல் அரசியல் களத்திலிருந்து கடந்த தேர்தலின் போதே ஒதுங்கி விட்டதால், முத்துசாமியை நிறுத்த ஏற்பாடாகிறது. மாநில அரசியலில்தான் முத்துசாமிக்கு ஆர்வம் அதிகம். எனினும் தலைமை வலியுறுத்தினால் அதனை எப்படித் தட்டிக்கழிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் முத்துசாமி. அவர் களமிறங்காவிட்டால் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மாநில நெசவாளர் அணி எஸ்.எல்.டி.சச்சிதானந்தம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படும்.

திருப்பூர் (தவறு)

 தி.மு.க தரப்பிலும் பெண் வேட்பாளராக கீதாநடராஜன் களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. 2006 சட்டமன்றத் தேர்தலின்போது பவானிசாகர் தொகுதிக்கு இவரது பெயர் முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டு, ஜீவா ஓ.சுப்ரமணியம் களமிறக்கப்பட்டு ஜெயித்தார். பறிபோன எம்.எல்.ஏ.சீட்டுக்குப் பதிலாக எம்.பி சீட்டை எதிர்பார்த்திருக்கிறார் கீதா நடராஜன்.

பொள்ளாச்சி (தவறு)

தி.மு.கவில் மா.செ.  பொங்கலூர் பழனிச்சாமி யின் மகன் பைந்தமிழ்ப்பாரி நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பு, கட்சி நிர்வாகிகளுக்கு ஓட்டல் அறையில் வகுப்பெடுத்திருக்கிறார் மா.செ. "எல்லோரும் பாரி பேரையே சொன்னீங்கன்னா, வாங்க கிளிப்பிள்ளைகளான்னு தலைவர் கிண்டலடிப்பாரு. அதனால ஒரு சிலர் வேறு பெயர்களைச் சொல்லுங்க' என்று சொன்னதுடன், நிர்வாகிகளுக்கு விருந்தும் கொடுத்திருக்கிறார். ஆனால் நேர்காணலில், வாரிசுகளுக்கு சீட் இல்லை என ஓப்பனாகவே கலைஞர் சொல்லிவிட, மா.செ.வுக்கு அதிர்ச்சி. அவருடன் சென்ற நிர்வாகிகளோ, கலைஞரின் மனதை சட்டெனப் புரிந்துகொண்டு, உங்க விருப்பம் தலைவரே என்று சொல்லி விட்டார்கள். இந்தத் தொகுதிக்கு சீட் கேட்டிருந்த முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் மகன் மு.க.முத்துவும் நம்பிக்கை இழந்துவிட்டார். கடந்த 2009-ல் போட்டியிட்டுத் தோற்ற சண்முகசுந்தரம் அல்லது சஃபாரி கார்த்திகேயன் இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் எனத் தெரிகிறது. எனினும், கலைஞரின் முடிவு மாறினால் பைந்தமிழ்ப்பாரி வேட்பாளராகலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறது பொங்கலூர் பழனிச்சாமி தரப்பு.

கோவை (தவறு)

தி.மு.க தரப்பில் கடந்த முறை காங்கிரஸ்  நின்ற தொகுதி என்பதால், இப்போதும் கூட்டணிக்குக் காங்கிரஸ் வந்தால் கோவையைத் தள்ளிவிட்டுவிடும் சூழல் இருக்கிறது. தி.மு.க களமிறங்கினால், ஸ்டாலின் ஆதரவாளரான மாநகரச் செயலாளர் வீரகோபால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் சீட் கேட்டுப்  பணம் கட்டவில்லை என்பதால் இளைஞரணியைச் சேர்ந்த சன் ராஜேந்திரன் என்பவர் மு.க.ஸ்டாலினின் சாய்ஸாக இருக்கிறார்.

மதுரை (தவறு)

தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் அல்லது முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன் இருவரில் ஒருவருக்கு சீட் எனப் பேச்சு அடிபடுகிறது. அம்பலத்தார் என்ற முறையில் ராமச்சந்திரனுக்கு புறநகர் மா.செ. மூர்த்தி ஆதரவாக உள்ளார். மாநகர மா.செ. தளபதி, முன்னாள் மா.செ. வேலுச்சாமி உள்ளிட்டோர் பொன்.முத்துவுக்கு ஆதரவு. மதுரை இல்லாவிட்டால் தேனி என்ற எண்ணத்தில் உள்ளார் பொன்.முத்து.

சிவகங்கை-(தவறு)

  தி.மு.க தரப்பில் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு இத்தொகுதி மீது ஒரு கண் இருக்கிறது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான உடையார் சமுதாயத் தைச் சேர்ந்த சிறுபான்மை கிறிஸ்தவ மதத்தினரான ஜோன்ஸ் ரூசோவும் பரிசீலனையில் உள்ளார். பெண் வேட்பாளராக ஜோன்ஸ் ரூசோவைக் களமிறக்கினால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
ராமநாதபுரம்-(தவறு)

சிட்டிங் எம்.பி. ரித்தீஷ் வெளிப்படையான அழகிரி ஆதரவாளராகி விட்ட தால் அவர் இந்த முறை களமிறங்க முடியாது.

தமிழச்சி தங்கபாண்டியனிடம் சீட்டுக்கு பணம் கட்டும்படி ஸ்டாலின் சொன்னபோது, ""இல்லீங்கன்னா, என்னால ஒரு கோடி செலவு பண்ணுறதே கஷ்டம். எம்.எல்.ஏ. சீட் தந்தால் போதும்'' எனச் சொல்லிவிட்டா ராம் தமிழச்சி.

மா.செ. சுப.தங்கவேலன் மகன் சுப.த.சம்பத் சீட் எதிர்பார்த்திருந்தார். வாரிசுகளுக்கு சீட் இல்லை என்ற கலைஞரின் முடிவில் மாற்றம் ஏற்பட்டால், அவருக்கான வாய்ப்பு அதிகரிக்கும். சீட் கேட்டு பணம் கட்டியிருப்பவர்களில் பெருநாழி போஸ் முக்கியமானவர். இஸ்லாமியரான ரகுமான்கானை நிறுத்தலாம் என்ற பேச்சும் தலைமையிடம் எழுந்துள்ளது.

விருதுநகர்-(தவறு)

தி.மு.க மா.செ கே.கே. எஸ்.எஸ்.ஆரின் மெயின் டார்கெட் வைகோவைத் தோற்கடிப்பதுதானாம். வைகோவின் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அண்ணாச்சிக்கு வேண்டியவர்தான் என்றாலும், வைகோவுக்கு டஃப் தருவாரா என்ற கேள்வி உள்ளது. மதுரை மாநகர் மா.செ தளபதி தனது மாவட்டத்திற்குட்பட்ட திரு மங்கலம் தொகுதி விருதுநர் எம்.பி. தொகுதிக்குள் வருவதால் அவரும் சீட் எதிர்பார்க்கிறார்.

நேர்காணலில் பங்கேற்று தன்னுடைய எதிர்பார்ப்பையும் வெற்றிவாய்ப்பையும் தலை மையிடம் தெரிவித்திருக்கிறார் தளபதி. எனினும், கே.கே. எஸ்.எஸ்.ஆர் தனது சாய்ஸாக வெயிட்டான கட்சிக்காரரைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

வைகோவையும் அ.தி.மு.க. வையும் எதிர்த்து ஜெயிக்கும் வலிமையுடனான வேட்பாளர் வேண்டும் என்பதுதான் அண்ணாச்சியின் தேடல் என்கிறார்கள் தி.மு.கவினர்.

கன்னியாகுமரி (தவறு)

தி.மு.க தரப்பில் சிட்டிங் எம்.பி. ஹெலன் டேவிட்சனுக்கே சீட் தரும் எண்ணத்தில் தலைமை உள்ளது. எனினும், மா.செ. சுரேஷ்ராஜன் வேறு வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்துகொண்டி ருக்கிறார்.

இதில் அரக்கோணம் தொகுதி வேட்பாளர் பற்றிய செய்தி மட்டும் ஜூவி,ரிப்போர்ட்டர்  இதழைப் போல நக்கீரனிலும் பட்டியல் வெளிவருவதற்கு மாறுதல் செய்தி வந்தது.

க மொத்தம் 15 வேட்பாளர் பெயர் தவறு. அதிலும் பாருங்கள்.வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபுவை வீட்டில் அண்ணியைப் பார்த்து விட்டுப் போ என்று சொன்னாராம்.ஆகவே அவருக்கு சீட் என்று எழுதியிருக்கிற‌து.நல்லாத் தான் சீட் கொடுக்குறாங்க நக்கீரனில்..

தேர்தலில் போட்டியிட  யாருக்கு சீட் கிடைக்கும் என்பது கடைசி வரைக்கும் தெரியாமல் இருக்கும் வாய்ப்பு அதிமுக வைப்போல திமுகவில் இல்லை என்பது உண்மை தான். முன்கூட்டியே மாவட்டச் செயலாளர்களுக்குத் தெரிந்து விடும்.அவர்களும் அதற்குத் தோதாக வேலையை ஆரம்பித்து விடுவார்கள்.அந்த வழியிலும் நக்கீரனால் வேட்பாளர்கள் பட்டியலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொகுதிக்கு இரண்டு முதல் மூன்று பெயரை வலியுறுத்தினாலும் அந்தப்பட்டியலில் உள்ளவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.பாதிக்குப் பாதி புதிய முகங்கள் நிறுத்தப்பட்டுள்ள‌னர்.

மேலும் இந்த முறை திமுக வேட்பாளர் பட்டியலை 'தளபதி' என்று நக்கீரனால் புகழ் சூட்டப்ப‌டும் மு.க.ஸ்டாலின் தான் தேர்வு செய்துள்ளார்.அவர் மனதில் என்ன இருக்கிறது,யாரை நிறுத்தப் போகிறார் என்பதனைக் கூட துப்பறிய முடியாத நிலையில் தான் இருக்கிறது நக்கீரன்.

கடந்த 15 ஆண்டுகளாய் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை ருசி கண்ட திமுக வேட்பாளர் பட்டியல் கண்டிப்பாக கடைசி நாளில் முடிவு செய்யப்பட்டிருக்காது.

ஆக நக்கீரனின் 'துப்பறியும்' திறமை அறிவாலயத்தில் நீண்ட காலமாய் பொரி விற்கும் வயதான பெரியவருக்குத் தெரிந்த அள‌வுக்கு கூட இல்லை என்பது தான் உண்மை.

இது தான் நக்கீரனின் உண்மையான நிலை.தான் எந்தக் கட்சிக்கு காவடி எடுக்கிறதோ ? அந்தக் கட்சியில் என்ன நடக்கிற‌து..?அந்தக் கட்சியின் தலைவர் அல்ல‌து வருங்கால தலைவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று கூட ஊகித்து செய்தி போட முடியாமல் பாதிக்குப் பாதி தப்பும் தவறுமாய் வெளியிடும் நிலையில் தான் நக்கீரன் 'திறமை' இருக்கிறது.

இந்த நக்கீரன் வெளியிடும் கருத்துக் 'கணிப்புகள்' எப்படிக் களத்தில் சென்று உண்மையாய் எடுக்கப்பட்டிருக்கும்..? திமுக தலைமையையும் அதன் தொண்டனையும் மகிழ்ச்சிப்படுத்தவும் எழுதப்பட்டதேயன்றி வேறொன்றுமில்லை.உண்மையை எழுதாமல் இவ்வாறு எழுதுவது உண்மையில் அக்கட்சிக்கு எந்தப் பலனையும் தராது.கெடுதலைத் தான் தரும்.வெற்றிக்கு உழைக்க எண்ணியுள்ள அக்கட்சியின் தொண்டனை முடக்கவே உதவும்.

இப்படியே எழுதிக்கொண்டிருந்தால் இப்பொழுது வாங்கும் கொஞ்சம் திமுக காரன் கூட வாங்க மாட்டான்.அதற்குப்பிறகு ஆசிரியர் குழுவுக்கு வேலை இருக்காது.

நக்கீரன் பாலஜோதிடம்,நக்கீரன் சினிமா,நக்கீரன் ஓம்,நக்கீரன் சினிக்கூத்து போன்ற இதழ்களில் தான் நக்கீரன் ஆசிரியர் குழு கவனம் செலுத்தி துப்பறிய வேண்டியிருக்கும்.

நக்கீரன் வெளியிட்டுள்ள 'கணிப்புகள்' ஒருவேளை பலித்தால் அது 'காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை'யாகத் தான் இருக்கும்.

2 comments:

Jayadev Das said...

\\தலைப்பில் நக்கீரன் என்ற பெயர் இருந்தது. எனவே மக்கள் உண்மையான முடிவை சொல்லாமல், ஜெயலலிதாவுக்கு நக்கீரன் எதிரி என கருதி, மாற்றி சொல்லி இருக்கிறார்கள்.\\ ஹா.......ஹா.......ஹா.......ஹா.......ஹா.......

அய்யய்யோ ...வயிறு வலிக்குது..........

விழுந்து புரண்டு சிரிச்சுகிட்டு இருக்கேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Jayadev Das said...

\\திமுக தலைமையையும் அதன் தொண்டனையும் மகிழ்ச்சிப்படுத்தவும் எழுதப்பட்டதேயன்றி வேறொன்றுமில்லை.\\ சில சமயம் கருத்து கணிப்புகளால் வாக்காளர் மனம் மாறக்கூடும். திமுகவுக்கு செல்வாக்கு இருப்பது போல போட்டால் வாக்குகள் விழலாம் என்ற தப்புக் கணக்கும் போட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் ஆட்சியில் புரிந்த அட்டூழியங்கள் மக்கள் மனதில் ஆளப் பதிந்துவிட்ட படியால் நிலை தலைகீழாய் போய் விட்டது.