Thursday 9 January 2014

தினகரன்-புத்தாண்டில் புது ஆசிரியர்...!
பீட்டர் மாமா காலை நாளிதழை விரித்த படியே கடையில் அமர்ந்தார்.

சேட்டா ஒரு டீ குடிக்கிற மாதிரி போடு.நீ விலையை ஏத்துறியே தவிர வாயில வைக்க முடியல...இன்னைக்காவது நல்லா போடு என்று சொன்ன பீட்டர் மாமா செய்தித்தாளை விரித்தார்.

இன்னைக்கு நாட்டு நடப்பு பேசுற‌துக்கு முன்னாடி பத்திரிகை நடப்பு பேசுவோமா..

என்ன விசயம் சொல்லுங்க...

கச்சேரி சாலை தினகரன் நாளிதழில் இருந்து ஆசிரியர் கதிர்வேல் விலகிட்டாராம்.தினகரனில் ஆசிரியர் ஆர்.எம்.ஆர் பேரு தான் வரும்.ஆனா அதனை பொறுப்பெடுத்து செய்தவர் கதிர்வேல் தான்.

ஏனாம்..கடைசி வரைக்கும் அங்கேயே இருந்து ரிடையர் ஆவாருன்னு சொன்னாங்களே....

அவரால அங்க தொடர்ந்து இருக்க முடியலையாம்.

ஏனாம்..?

ஒன்னுமில்ல....அங்க சீப் ரிப்போர்ட்டரா இருக்குற சுரேஷும் எம்.டி.யா இருக்குற ஆர்.எம்.ஆரும் சேர்ந்து அவருக்கு தொடர்ந்து இம்சையைக் கொடுத்தாங்களாம்.இதுக்கு மேல வேணாம்னு தான் விலகிட்டாராம்.

அப்படியா...என்ன பிரச்சனை...

அங்க எம்.டி.யா இருக்குற ஆர்.எம்.ஆர்.பத்தி சொல்லவே வேண்டியது இல்ல.எடிட்டோரியலில் இருப்பவங்க முதற்கொண்டு அங்க இருப்பவங்க எல்லோரையும் ஒருமையில தான் பேசுவாரு.அவனே,இவனே,அந்தப்பயலே,இந்தப்பயலே அப்படின்னு தான் அழைப்பாரு.

தினகரன் நிர்வாகம் கைமாறின பின்னாடி முதல் தடவை அவர் ஆபிசுக்கு வந்தப்ப,ஆபிசுல ஒருத்தர் தன்னோட ஈமெயிலைப் பார்த்தாரு அப்படிங்குறதுக்காக அவரை எல்லோர் முன்னாடியும் கேவலமா திட்டுனப்ப அவரைப் பத்தி எல்லோரும் புரிஞ்சுக்கிட்டாஙக...இன்னைக்கு வரைக்கும் அவர் தன்னுடைய அடாவடியை மாத்திக்கவே இல்லை.அவர்கிட்ட இருக்குற அடாவடிப் புத்தி போகவே இல்லை.யாரும் எதிர்த்துப் பெசினா அடிக்குற‌து,நிர்வாகத்துக்கு வேண்டிய சில்லறை வேலைகளைப் பார்க்குற‌துன்னு அவர் வேலை எப்பவும் தங்கு தடையில்லாம தொடர்ந்துகிட்டிருக்கு.

கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி பாலியல்  புகாருல்ல போலீஸ் ஸ்டேஷன்ல காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் உட்கார வச்சாங்க‌.அப்ப நிறையப்பேரு கையைப் பிடிச்சு காலில் விழுந்து தப்பிச்சிட்டாரு அப்படிங்குறது கொஞ்சப் பேருக்கு மட்டுமே தெரிந்த சங்கதி.ஆனா ஆபிசுல இவர் காட்டுற தெனாவட்டு தாங்க முடியாத அளவுக்கு இருக்குமாம்.

இந்த ஆர்.எம்.ஆர்.தான் சுரேஷ் கூடக் கூட்டுச் சேர்ந்துக்கிட்டு ஆசிரியருக்கு டார்ச்சராம்..

சுரேஷ் எப்படி....

இவர் சீப் ரிப்போர்ட்டரா இல்ல சீப்பான ரிப்போர்ட்டரான்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியான ஆளு.

இவர் எந்த நிர்வாகத்தில் இருந்தாலும் அந்த நிர்வாகத்துக்கு ஆதரவான செயல்பாட்டில் கை தேர்ந்தவரு...

இந்த ரெண்டு பேர் கூட்டணி வச்சு டார்ச்சர் கொடுத்தாஙக்ளாம்.

எப்படி..?

நிருபர்,போட்டோ கிராபர் வேலைக்கு ஆள் எடுத்தாலும் சரி,நியூஸ் எடிட்டர் வேலைக்கு ஆள் எடுத்தாலும் சரி...ஆசிரியர் பொறுப்பு வகிக்கிற கதிர்வேல் கிட்ட ஒரு வார்த்தையும் சொல்றதுல்லயாம்.ஆசிரியருக்கு உண்டான மதிப்பையோ,அங்கீகாரத்தையோ கொடுக்கலியாம்.

இது ஒரு சாம்பிள் தான்.சொல்ல பக்கம் போதாது.விரைவில் விரிவாச் சொல்றேன்.

ஆகையால் ஆசிரியர் பதவி வேணாமுன்னு போன வாரக் கடைசியில இருந்து விலகிட்டாராம்.

இனி அடுத்த ஆசிரியர் யாருன்னு கொஞ்ச நாளில் தெரியும்.

Monday 6 January 2014

தமிழ் ஹிந்து வில் மனுஷ்யபுத்திரன்-சிற்றிலக்கியவாதிகளின் சில்லறைத்தனம்...!புதிய கலாச்சாரம்,ஆனந்த விகடன்,உயிமை,காலச்சுவடு,சுந்தர ராமசாமி


ரம்பித்து நூறு நாட்களான பின்னும் இன்னும் தினசரி செய்தித்தாளின் வரையறைக்குள் இடம்பிடிக்க இயலாத 'தமிழ் தி ஹிந்து' நாளிதழில் ஒவ்வொரு நாளும் நாம் விமர்சிக்க எத்தனையோ தவறுகள் இருக்கின்றன.நேரமின்மையாலும் ஒருவித சலிப்பாலும் எழுதவில்லை.

இது மனுஷ்யபுத்திரன் குறித்த சனவரி1,2014 தேதியிட்ட இந்த வார‌ ஆனந்த விகடன் விமர்சனத்தின் ஒரு பகுதி.

//மனுஷ்ய புத்திரன் தான் 2013 கருத்து கந்தசாமி.அண்ணன் பல்லு விளக்கும்போதே கார் ஹாரன் அடிக்கும். "பேக் டிராப் வெள்ளை ..நீங்க ஊதா கலர் டி ஷர்ட் ல வந்துடுங்க " என யார் போன் அடித்தாலும் போக ஆரம்பித்தார் கவிஞர். 

தலைவா பிரச்சினைல என்ன சொல்றீங்க? "பூனைக் கண் புவனேஸ்வரி இப்ப என்ன பண்றாங்க? " என யார் கேட்டாலும் முக்கால் மணி நேரத்துக்கு மெடீரியல் ரெடி பண்ணி பொளந்த மனுஷைப் பார்த்து மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் மிரண்டார்கள்.சித்த வைத்தியசாலை சிவராஜ், ஆண்மை டாக்டர் அகமது ஆசீர்வாதக் கூட்டம் எல்லாவற்றையும் லெஃப்டில் அடித்து , ஃபுல் ஃபார்மிலேயே இருந்தார் புத்திரன். 

ஹிப் ஹாப் தலையோடு மீடியம் மேக்கப்பில் மனுஷ தோன்றினாலே , சுட்டி டிவிக்கு ஓடினார்கள் மக்கள். 

இலக்கிய உலகின் பவர் ஸ்டார் இந்த கண்ணாடி அங்கிள் தான்.//

 மனுஷ்யபுத்திரன் மீதான விமர்சனங்கள் அனைத்தும் சற்றுக் கடினமான வார்த்தைகளால் அணுகப்பட்டுள்ளது.சில முக்கியமான விஷயங்களில் அவரின் பங்களிப்பு குறித்து ஆக்கபூர்வ‌மான விமர்சனத்தை ஒரு பத்தியாவது எழுதியிருக்கலாம்.குறிப்பாக விஸ்வரூபம் படப் பிரச்சனையில் பிறப்பால் ஒரு இஸ்லாமியராய் இருந்தாலும் அச்சமூகத்தின் பொது மனநிலைக்கு எதிராய் வினையாற்றினார்.(ஒரு பாட்டு எழுத வாய்ப்பளித்த கமல்ஹாசனுக்கு ஆதர‌வான நிலைப்பாடு அது என்று மட்டும் இதைச் சுருக்கி விட முடியாது.அவர் நினைத்திருந்தால் அமைதியாய் இருந்து அத‌னைக் கடந்து சென்றிருக்கலாம். ) இதைப்போல இன்னும் பல விஷயங்களைச் சொல்ல முடியும்.அதே சமயம் அவரது தி.மு.க. சார்பும் அதற்கான 'எதிர்பார்ப்பும்'  கண்டிப்பாய் விமர்சிக்கப்பட வேண்டியது தான்.

மற்றபடி மனுஷ்யபுத்திரன் மீதான விகடன் விமர்சனம் ஓரளவுக்குச் சரிதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மேலும் விகடனின் விமர்சனத்தில் நமக்குத் தெரிந்த வரையில் எந்த உள்நோக்கமும் இருக்கவும் வாய்ப்பில்லை.ஏனென்றால் அதே இதழில் அவரின் காமெடிப் பேட்டியையும் இரண்டு பக்கம் வெளியிட்டுள்ளது.மேலும் எத்தனையோ விஷயங்களில் மனுஷ்யபுத்திரன் கருத்தினை வாங்கிப் பதிவு செய்துள்ளது.

இந்த வகையில் பார்த்தோமானால்,விகடனின் மனுஷ்யபுத்திரன் மீதான விமர்சனத்தில் தவிர்க்கப்பட வேண்டிய சில குறைகள் இருக்கிற‌தே தவிர ஒட்டு மொத்த விமர்சனத்தையும் பார்த்தோமானால் அதில் வன்மமும் உள் நோக்கமும் இல்லை.

விஜயேந்திரன்,எம்.எஸ்.சுவாமிநாதன்


ந்த விமர்சனம் வெளியான ஆ.விகடன் வெளிவந்த அடுத்த நாள் (2712-2013 ) தமிழ் ஹிந்து நாளிதழ் மனுஷ்யபுத்திரனின் நேர்காணலில் உள்ள ஒரு பகுதியினை எடுத்து "சொன்னார்கள்" என்ற தலைப்பில் மறு பிரசுரம் செய்துள்ளது.(அதாவது இதழ் வந்த அன்று  இரவே தனது நாளிதழில் அச்செய்தியை அச்சில் ஏற்றி விட்டது)


"நம்ம மண்டையில ஒண்ணும் இல்லாட்டியும் அதைப் பத்திக் கவலைப்படக்கூடாது.அடுத்தவன் மண்டையிலும் ஒண்னும் இல்லைன்னு ஸ்ட்ராங்கா நம்பணும்"

இதில் நமக்கு சில கேள்விகள் இருக்கின்றன.

சொன்னார்கள் என்னும் பகுதி என்பது பொதுவாக சமூகத்தின் முக்கிய ஆளுமைகள்,அரசியல் தலைவர்கள்,எழுத்தாளர்கள்,நடிகர்கள் போன்றோர்கள் பகிர்ந்து கொண்ட,பேசிய‌ குறிப்பிடத்தக்க,சுவாரசியமான விஷயங்களை எடுத்து பிரசுரம் செய்யும் பகுதி ஆகும்.அறிக்கையிலிருந்து மேடைப்பேச்சு வரை இடம்பெற‌லாம்.இதே போன்றதொரு பகுதி, தினமலரிலும் 'சொல்லிட்டாங்க' என்னும் தலைப்பில் தினகரனிலும்  வருகிறது.

இதில் இடம்பெறுவதற்கு மனுஷ்யபுத்திரனின் 'காமெடி பேட்டி' எந்த விதத்தில் தகுதி பெறுகிறது..?

மனுஷ்யபுத்திரனின் விகடன் பேட்டியைப் படிக்கும் அதனைச் சிரித்துக் கடந்து சென்று விடுவர்.ஆனால் அதனை தமிழ் ஹிந்து மிக சீரியசாக அணுகி முக்கியத்துவம் கொடுத்து உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ள‌து.

இதனை எதற்காக அவர்கள் எழுதிய மையின் ஈரம் காயும் முன்னர் 'ஹிந்து நாளிதழ்' மறுபிரசுரம் செய்ய வேண்டும்.? அதுவும் அல்லாமல் 'தமிழ் ஹிந்து'வை விட அதிகம் விற்பனை ஆகும் விகடனில் இருந்து அப்படி எடுத்தாள வேண்டிய அவசியம் என்ன..?

இதற்கும் மேல் வேறொரு கோணத்தில் பார்த்தோமானால், மறுபிரசுரம் செய்யும் அளவுக்கு மனுஷ்யபுத்திரன் பெரிய அரசியல்வாதியோ அல்லது மக்கள் திரள் செல்வாக்கு கொண்டவரோ அல்ல. ஒரு இலக்கியவாதி அவ்வளவு தான்.(உங்கள் இலக்கிய கோஷ்டியின் பார்வையில் அதற்கும் தகுதி இல்லாதவர்)

அப்படி இருக்க அதனை உடனே மறுபிரசுரம் செய்து 'அல்ப சந்தோஷம்' அடைவது ஏன்..?


எம்.எஸ்.சுவாமிநாதனின் பசுமைப்புரட்சி ஒரு புரட்டு என்று 'மனுஷ்யபுத்திரன் தனது விமர்சனத்தை எழுதினால் 'தமிழ் ஹிந்து' மகிழ்ச்சியுடன் அன்றே மறுபிரசுரம் செய்யுமா..? அதைக் கூட வெளியிட‌ வேண்டாம்.இலக்கிய 'காலச்சுவடில்' கட்டுரை எழுதும் சங்கீதா ஸ்ரீராம் எம்.எஸ்.சுவாமிநாதனின் அயோக்கியத்தனம் குறித்து எழுதியதை மறுபிரசுரம் செய்ய 'தமிழ் ஹிந்து'ஆசிரியர் குழுவிற்குத் துப்பிருக்கிறதா..?


ஹிந்து என்.ராமின் குலசாமி,ஆந்திர எல்லை வரை காரில் சென்று வரவேற்ற‌ விஜயேந்திரன் குறித்து 'புதிய கலாச்சாரம்' எழுதியதை மறுபிரசுரம் செய்வீர்களா..? செய்ய மாட்டீர்கள். நிர்வாகத்திற்கு பிடிக்காத‌ இதையெல்லாம் செய்தால் மறுநாள் அலுவலகத்தில் அமர இருக்கை இருக்காது என்பது தெரியும்.

சரி. அது கூட வேண்டாம்.சுந்தர ராமசாமி குறித்தோ,ஜெயமோகன்,சாரு நிவேதிதா குறித்தோ ஏதாவது பத்திரிகையில் எழுதினால் இப்படி உடனே எந்த யோசனையும் இன்றி வெளியிடுவீர்களா..?

சாரு நிவேதிதாவை அவரது விமர்சகர் வட்டத்தினர் தினசரி அம்பலப்படுத்தி வருகின்றார்களே.!அதெல்லாம் உங்கள் கண்களில் படுவதில்லையா..?

அவ்வாறு வெளியிட்டால் உங்களுக்கு கஸ்தூரி அய்யங்காரின் நிர்வாகத்தால் எந்தப் பிரச்சனையும்  ஏற்படாது.ஆனாலும் வெளியிட மாட்டீர்கள்.அதில் தான் உங்கள் குழு மனப்பான்மையும்  இலக்கிய அரசியலும் இருக்கிறது.

நாம் கூட இதே மனுஷ்யபுத்திரனை கடுமையாய் விமர்சித்து இரண்டு பதிவுகள் எழுதியுள்ளோம். இன்றுவரை அக்கருத்தில் உறுதியாய் இருக்கிறோம். அதற்காய் மனுஷ்யபுத்திரனின் மீதான உங்கள் விமர்சனம் சரியான பார்வை என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

உங்களின் வன்மத்தை அறிய முடிகிறது.

இதே தமிழ் ஹிந்துவில் எழுத்தாளன்,கவிஞன்,சமூக செயற்பாட்டாளன்,புண்ணாக்கு விற்பவன் என்று கழுத்தில் போர்டு மாட்டிக்கொண்டு ஜெயமோகன் தொடங்கி,சாரு நிவேதிதா,பி.ஏ.கிருஷ்ணன் வரை, தமிழ் நாளிதழ் படிக்கும் பொதுச்சமூக வாசகனுக்குப் பரிச்சயமில்லாத,சில நூறு சிற்றிலக்கியவாதிகளால் மட்டுமே அறியப்பட்ட எத்தனையோ பேர் தினசரி நாம் படிக்க முடியாத அளவுக்கு எழுதிக் குவிக்கிறார்கள். அவர்களை வைத்து நீங்களே வெட்டி அக்கப்போருகளை எழுதி சர்ச்சைகளைத் திட்டமிட்டு உருவாக்குகின்றீர்கள்.

ஆனால் இவர்களின் மேற்கண்ட‌ கேட்டகரியில் அடங்குவது மட்டுமல்ல,இதுவரை எத்தனையோ தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றுத் தனது கருத்துக்களை பல்லாயிரம் நபர்களிடம் பகிர்ந்து கொள்ளும் மனுஷ்யபுத்திரன் மட்டும் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளார்.

சரியோ,தவறோ தனது கருத்தினை வெளிப்படுத்துகிறார்.ஆனால் அவருக்கு மட்டும் இடம் இல்லை.ஏன்..? எல்லாரும் கிறுக்கித் தள்ளும் இடத்தில் அவரிடம் மட்டும் என்ன பாரபட்சம்..?

புது பணக்கார அரசியல்வாதி ரவிக்குமார், கழிசடை சாரு நிவேதிதா போன்றோரெல்லாம் தமிழ் ஹிந்துவில் எழுதி உருவாக்கும் 'சமூக மாற்றத்தை' (!)மனுஷ்யபுத்திரன் போன்ற ஒற்றை மனிதன் எழுதிக் கெடுத்து விடப்போவதில்லை.

அல்லது உங்கள் விருப்பத்திற்குரியவர்களை வைத்து திட்டமிட்டு எழுதிக் கெடுக்கும் சமூகம் மனுஷ்யபுத்திரனின் எழுத்தால் திருந்தி விடவும் போவதில்லை.ஆகவே அந்தப் பயமும் வேண்டாம்.

அவரது கருத்தில் அரசியல் சார்பு இருக்கும் என்று ஆசிரியர் குழு முடிவு செய்தால் அரசியல் அல்லாத விஷயங்களில் அவரது கருத்தினை வாங்கி வெளியிட்டிருக்கலாம். இப்பொழுது அங்கு எழுதும் எழுத்தாளர்களை ஒப்பிடும் பொழுது மனுஷ்யபுத்திரன் அங்கு எழுதத் தகுதியானவர் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஏன் தவிர்க்கிறீர்கள்? இலக்கிய கும்பலின் குழு மனப்பான்மை இங்கு குடிபெயர்ந்திருக்கிறதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.அது தான் மனுஷ்யபுத்திரனின் மீதான வன்மமாக‌ வெளிப்படுகிறது என்று எண்ணுகிறோம்..

இதுவும் போக மனுஷ்யபுத்திரன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து விமர்சனம் வெளியிட வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் செய்தியாளர் கொண்டு எழுதுங்கள். அடுத்தவர் முகமூடியில் ஏன் அற்பமாய் ஒளிந்து கொள்கிறீர்கள் ? அவரது பல்வேறு தொலைக்காட்சி பங்கேற்பில் சொல்லப்பட்ட கருத்துக்கள்,நக்கீரனில் எழுதும் எதிர்க்குரல் போன்றவற்றையும்,அதனை வெளியிட்ட செய்தி நிறுவனங்களையும் பகிர‌ங்கமாய் விமர்சியுங்கள்.

உங்களால் முடியுமா..? முடியாது.

நீங்கள், அனைவருக்கும் பொதுவான நாளிதழில்.வேலை பார்க்கின்றீர்கள். இதில் எழுதும் பொழுது பொது வாசகக் கண்ணோட்டத்துடன் எழுதுங்கள் செயல்படுங்கள்.

தமிழ் நாளிதழ்களில் இதற்கு முன் வேலை பார்த்த‌ அனுபவமில்லாத எத்தனையோ பேர் 'தமிழ் ஹிந்து' தலைமைப் பீடத்தில் அமர்ந்து செய்தித்தாளாக இல்லாமல் கருத்துத் தாளாக நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள்.அதுவும் உங்களுக்கு ஏற்றது கொஞ்சம்,நிர்வாகத்தின் விருப்பம் மீதம் என  கருத்துத் திணிப்பு இதழாகத் தான் இருக்கிற‌து.

மேலும் தலைப்பு வைப்பதிலிருந்து,எச்செய்தியை முதன்மைப்படுத்துவது,புட் நோட் எழுதுவது,எப்படிச் செய்தியை வழங்குவது என்பது வரை ஏகப்பட்ட தவறுகள்,அபத்தங்கள் அங்கு நடக்கின்றன.

அதனைக் களைந்து விட்டு அனைவருக்கும் ஏற்ற செய்தித்தாள் நடத்த முயற்சியுங்கள்.நீங்கள் எக்காலத்திலும் தமிழின் பிற முன்னணி இதழ்களுக்குப் போட்டி இதழாக வரப்போவதில்லை.குறைந்தபட்சம் பத்திரிகையாளர்கள் கவனிக்கும் இதழாகவாவது மாற முயற்சியுங்கள்.

அதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு சிற்றிலக்கிய சில்லறைத் தனங்களுடன் செயல்படாதீர்கள்.