Tuesday 30 July 2013

தின இதழ்-மோசடிப் பணம் உண்மை உரைக்காது...!


மீனாட்சி அம்மன் அறக்கட்டளை குழுமம் சென்னையைத் தலைமையிடமாக கொண்டு மருத்துவம்,பொறியியல்,கலை,பிசியோதெரபி தொழிற்கல்வி உள்ளிட்டு பல்வேறு சுயநிதிக் கல்லூரிகளை நடத்துகிறது.

இது போன்ற சுயநிதிக் கல்லுரிகள் என்றால் கணக்கு வழக்கற்ற வசூலுக்கும்,கருப்புப் பணத்துக்கும் முறைகேட்டுக்கும் பஞ்சமா என்ன..?

இந்நிலையில் மீனாட்சி அம்மன் குழுமம் நடத்தும் கல்லூரிகள் மற்றும் அதனை நிர்வகிக்கும் ஏ.என்.ராதாகிருஷ்ணன் வீடு மற்றும் இந்தக் குழுமம் தொடர்புடைய 30 க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ள‌து தொடர்பில் நேற்று (30-07-2013) வருமான வரிச் சோதனை நடைபெற்றது.


தினமலர்-ஜூலை 31,2013 சென்னைப் பதிப்பு


இந்த நிறுவனம் ஊடகத்துறையில் சமீபத்தில் நுழைந்து உள்ளது.பத்திரிகைத் துறையில் புதிய சகாப்தம் தொடங்கி விட்டது என்று சொல்லிக் கொண்டு தின இதழ் என்னும் பெயரில் ஒரு நாளிதழைத் தொடங்கி நடத்தி வருகிறது.விகேஷ் தான் இதன் ஆசிரியர்.இப்பொழுதைக்கு சென்னை பதிப்பு மட்டும்.விரைவில் பல ஊர்களில் இருந்து வெளியிடத் திட்டம்.
எஸ்.ஆர்.எம்.,பச்சமுத்து இத்துறையில் நுழைந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,அவரது வழியில் பல்வேறு பண முதலைகள் அடியெடுத்து வைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இதில் நுழைந்த‌வர் தான் இதன் அதிபர் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.இவரது கல்விச் சேவையைப் பார்ப்போம்.

1983-Meenakshi ammal polytechnic college.
1985-Arulmigu meenakshi amman college of engineering.
1990-Meenakshi amman dental college.
1993-M.G.R.institute of Hotel management &techmology.
1995-Sri muthukumaran institute of technology.
1998-Meenakshi ammal matriculation Hr.sec.school,meenakshi college of Nursing,Meenakshi college of    
        -physiotheraphy.
2001-Meenakshi college of engineering,Meenakshi ammal Arts and science college,Sri muthukumaran Arts and science college.
2002-Vani Vidhyalaya sr.secondary&junior college.
2003-Meenakshi Medical college hospital&Research institute.
2005-Meenakshi ammal Teacher Training Institute.
2006-Arulmigu Meenakshi college of Education,sri muthukumaran college of education.
2010-Sri muthukumaran Medical college Hospital&Research Institute.
2011-Mangadu Public school.
2012-Arulmigu Meenakshi amman public school,Meenakshi ammal Global school.

இது தான் இவரது வளர்ச்சி விகிதம்.

1983 ஆம் ஆண்டில் சில ஆயிரத்தில் வாடகை கட்டிடத்தில் ஆரம்பித்த கல்வி வியாபாரம் ஒவ்வொரு வருடமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இன்று பல ஆயிரம் கோடிகளை அக்குழுமத்தின் சந்தை மதிப்பாய்த் தொட்டிருக்கிறது.இந்த பணம் முழுவதும் அவரது கல்லூரிகளில் படித்த ஏழை,நடுத்தட்டு,உயர்தட்டு மாணவர்களிடம் இருந்து சுரண்ட‌ப்பட்டது.

இவ்வளவு காலம் கல்வி ஏகபோக வணிகத்தில் சம்பாதித்த பணத்திற்கு உரிய பாதுகாப்புத் தேடியும்,இவரது கல்வி நிறுவனங்களுக்கு அரசு அதிகாரிகள் முதல் அதிகார மையங்கள் வரை அனைவரிடமும் இருந்து சிக்கல்கள் வராமல் தடுக்கவும்,'பார்மாலிட்டிஸ்' இல்லாமல் இனிமேல் காரியம் முடிக்கவும் தொடங்கப்பட்டது தான் இந்த தின இதழ்.

அப்படி நினைக்காமல் இவ்வளவு காலம் கல்வியை கடைச்சரக்காக்கி விற்பனை செய்தவர் திடீர் 'ஞானோதயம்' பெற்று சமூகத் தொண்டாற்ற பத்திரிகை ஆரம்பித்திருக்கிறார் என்றா நினைக்க முடியும்.

இவருக்கு இதில் எஸ்.ஆர்.எம்.அதிபர் பச்சமுத்து முன்னோடி என்றால் மிகையாகாது.


ந்தப் பின்னணியில் ஆரம்பிக்கப்பட்டு ஆயிரம் காப்பி கூட விற்பனை ஆகாத தின இதழ் நாளிதழுக்கு அதை விட அதிக அளவில் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு சென்னை நகர வீதிகள்,அடுத்தவன் வீட்டுச் சுவர்களும் அசிங்கப்படுத்தப்படுகின்றன.இதைத் தவிர நாளிதழைக் கலை நயத்துடன் அச்சிட சில‌ கோடிகளுக்கு அச்சு இயந்திரமும் வாங்கப் பட்டுள்ளன என்றால் இத்துறையில் எவ்வளவு முதலீட்டினை முதலைகள் செய்துள்ளார்கள் என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறோம்.

இவரது கல்லூரி லோகோவில் 'வாய்மையே வெல்லும்' என்று இருக்கிறது.சுயநிதிக் கல்லூரிக்கும் வாய்மைக்கும் என்ன தொடர்பு என்பது ஊரறிந்த வெளிச்சம்.அதனால் தான் வரி ஏய்ப்பு தொடர்பாக 30 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடந்துள்ளது.


இந்நிலையில் பத்திரிகை உலகில் புதிய சகாப்தம் தொடங்கி விட்டது என்றும் உரைக்கும் உண்மைகள் என முகப்பில் லோகோவில் அச்சிட்டும் விளம்பப்படுத்தி நாளிதழ் நடத்துவதாகச் சொல்லிக் கொள்கின்றனர்.

மோசடிப் பணம் உண்மையை உரைக்காது என்பதை உங்களைப் போல் நாமும் நன்கு அறிவோம்....!

தொடர்புடைய இணைப்புக்கள்

http://www.deccanchronicle.com/130731/news-current-affairs/article/income-tax-raids-meenakshi-colleges

http://www.dinamalar.com/news_detail.asp?id=769974&Print=1
http://www.maalaisudar.com/newsindex.php?id=43066%20&%20section=1

http://en.wikipedia.org/wiki/Arulmigu_Meenakshi_Amman_College_of_Engineering


Sunday 21 July 2013

ஆனந்த‌ விகடன் உதவி ஆசிரியருக்கு காமதேனு நாளிதழில் வேலை...!
னந்த விகடனில் இருந்து வலுக்கட்டாயமாய் ராஜினாமா பெறப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட அதன் உதவி ஆசிரியர் ச.சிவசுப்ரமணியன் குறித்து நாம் முந்தைய பதிவில் எழுதியிருந்தோம்.

இந்த நிலையில் ச.சிவசுப்ரமணியனுக்குகு 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் குழுமம் துவங்க உத்தேசித்துள்ள 'காமதேனு' நாளிதழில் கடந்த வார இறுதியில் வேலைக்கான உத்தரவு கிடைத்துள்ள‌து.

ஆ.வி.17 ஆண்டுகள் வேலை பார்த்த அவருக்கு சம்பளமாக சுமார் 25 ஆயிரம் இதுவரை கிடைத்தது.இப்பொழுது காமதேனுவில் (நாளிதழின் பெயர் மாற்றம் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.)இவரது சம்பளம் இப்பொழுதைய ஊதியத்தை விட 80 சதவீதம் அதிகம்.அதே சமயம் தொழிலாளர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய உரிமைகளும் ஆ.விகடனுடன் ஒப்பிடும் பொழுது இங்கு அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இனிமேலாவது விகடன் நிறுவனம் தனது தொழிலாள‌ர்களுக்கு உரிய ஊதியத்தையும் அவர்களுக்கான நியாயமான உரிமைகளையும் கொடுக்க முன் வர வேண்டும்.

ச‌.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

Wednesday 17 July 2013

ஆனந்த விகடன் உதவி ஆசிரியரின் கண்ணீர்க் கதை....!
னந்த விகடன் இதழ் மூலமாக‌, முகம் தெரியாத எத்தனையோ மனிதர்களின் வலியைக்,கண்ணீரை, வேதனையை நாம் படித்திருப்போம். அவர்களுக்காகப் பேசியிருப்போம்.குறைந்த பட்சம் ஒரு நொடி வருத்தமாவது பட்டிருப்போம்.

ஆனால் ஆனந்த விகடனில் பணியாற்றிய‌ ஒருவரின் கண்ணீர்க்கதை இது.ஆனால் அவருக்காக எழுதவோ அவரின் துயரத்தைப் பகிரவோ தான் யாரும் இல்லை.

ஆனந்த விகடன் இதழுக்கு பல காலம் தன் உழைப்பை அளித்து அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய ஒருவர் எந்தவிதக் காரணமும் இல்லாமல் வெளியே தூக்கி எறியப்பட்ட நிஜ சம்பவம் இது.

எந்த ஒரு பத்திரிகையின் உருவாக்கத்திலும் வெளியே தெரியாத பலரது உழைப்பு இணைந்திருக்கிறது.ஒரு பிரம்மாண்டமான பளிங்கு மாளிகையின் உருவாக்கத்துக்குப் பின்பு எண்ணற்ற‌ உழைப்பாளிகளின் பங்கு இருப்பது நமக்கு எப்படித் தெரிவதில்லையோ,அது பொதுச் சமூகத்தின் கண்களில் படுவதில்லையோஅது போல டெஸ்க்கில் இருக்கும் உதவி ஆசிரியர் தொடங்கி,பிழை திருத்துநரிலிருந்து லே அவுட் ஆர்ட்டிஸ்ட் வரை பலரது பங்களிப்பில் பத்திரிகைகள் வெளிவருகிறது.ஆனால் அது பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை.இதழில் எழுதும் எழுத்தாளர்கள்,அல்லது ரிப்போர்ட்டர்கள்,இதழின் ஆசிரியர் தான் வெளியில் தெரிகின்றார்கள்.
***

ரு இதழில் பிழை திருத்துநர் பணி என்பது மிகப்பெரிய பொறுப்பு.இத்துறை குறித்து அறியாதவர்கள் வேண்டுமானால் அவர்களது பணியை  புரூப் ரீடர் என்ற அளவில் சுருக்கி விடலாம்.ஆனால் உண்மையில் அப்படி அல்ல.

இந்த வேலையைச் செய்யும் அனுபவமிக்கவர்கள் எல்லோரையும் வெறுமனே 'புரூப் ரீடர்' என்று வெறுமனே சுருக்கி விட முடியாது.

ஒரு இதழின் அனைத்து பக்கங்களையும் படித்து அதன் உள்ள‌டக்கத்தில் எதும் தர்க்க ரீதியான தவறுகள் இருக்கிறதா என்று பார்ப்பதில் தொடங்கி எழுத்துப்பிழை,வாக்கிய அமைப்பு,கோர்வை உள்ளிட்ட தவறுகள் எதும் இருக்கிறதா என்பது வரை இதில் மிகப்பெரிய பணி அடங்கி உள்ளது.இதழின் வெற்றியில் குறிப்பிடத்தக்க ப‌ங்கு இவர்களுக்கு இருக்கிறது.

ஆனால் பொதுவாக இதழ்கள்,நாளிதழ்கள் வாசிக்கும் யாரும் இவர்களைப் பற்றிப் பேசுவதில்லை.தினத்தந்தியில ரிப்போர்ட்டிங் நல்லா இருக்கு, செங்கொடி காதல் தோல்வியால் இறந்தார் என்று தினமலரில் நாரசாரமாய் எழுதியது பீகார் ரங்கராஜ் பாண்டே ,குங்குமத்தில் நீலகண்டன் நல்லாப் பண்றாரு.ஆனந்த விகடனில் ராஜீவ் காந்தி நல்லாப் பண்ணியிருக்கார்.அருள் எழிலன் கட்டுரை,பாரதி தம்பி கட்டுரை நல்லா இருக்கு,லூசுப்பையன் முந்தி மாதிரி இல்ல,குமுதம் ரிப்போர்ட்டர்ல பாலா கார்ட்டூன் நல்லா இருக்கு,ஜூனியர் விகடன் விகேஷ் கையில இருந்து திருமாவேலன் பொறுப்புக்கு வந்ததுக்கு அப்புறம் பரவால்லை.கவின்மலர் என்பவர் எப்பவும் அபத்தமாத் தான் எழுதிக்கிட்டிருக்கார் என்பது போன்ற பாராட்டுக்களுடனோ,விமர்சனங்களுடனோ பத்திரிகையில் எழுதுபவர்களை நாம் கடந்து விடுகிறோம்.

இதில் தொடர்புடைய எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள் ஏதோ ஒரு வகையில் பொது வெளியில் தங்களுக்கான அடையாளத்தைப் பெறுகின்றனர்.

(சிலர் திறமை இருந்தும் இருபது வருடங்கள் ஆனாலும் நிருபர்,மூத்த நிருபர்,தலைமை நிருபர் ஸ்பெஷல் கரஸ்பாண்டண்ட் என்ற இடத்தைத் தாண்டாமலும் சம்பளம் முப்பது ஆயிரத்தைத் தாண்டாமலும் இருக்க,'பிழைக்கத்' தெரிந்த சிலரோ,திறமை இல்லா விட்டாலும் துறைக்கு வந்த மூன்றாண்டுகளில் லாபி செய்து 4 பத்திரிகைக‌ள் மாறி 40 ஆயிரம் சம்பளத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் எல்லாம் தெரிந்த அப்பாடக்கராகத் தங்களைப் பொது வெளியில் கட்டமைத்து ஒரு ஆளுமையாக மாற்றும் முயற்சியிலும் திட்டமிட்டு ஈடுபடுவது வேறு விஷயம்.  )

ஆனால் இதழின் வெற்றியில் பின்னணியில் இருந்து செயல்படும் லே அவுட் ஆர்ட்டிஸ்ட்,புரூப் ரீடர் போன்றோரின் முக்கியத்துவமும் அவர்களின் பெயரும் பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.இது அனைத்து இதழ்களுக்கும் நடப்பது தான்.

ஆனந்த விகடன் கட்டுரை நல்லா இருக்கு என்று கட்டுரையாளரைத் தொடர்பு கொண்டு பாராட்டுபவர்கள் எத்தனை பேருக்கு அதனை அழகுற வடிவமைத்து வெளிக்கொணரும் வடிவமைப்பாளர் பாண்டியனைத் தெரியும்..?

ஒவ்வொரு கட்டுரையையும் எழுத்தாளருக்கு இருக்கும் அதே அக்கறையுடனும் ஆர்வத்துடனும் பிழை திருத்தி,சரி செய்து வாசகனுக்குத் தரும் மானா பாஸ்கரையும்,சிவசுப்ரமணியத்தையும் எத்தனை பேருக்குத்  தெரியும்..?

கட்டுரையாளரைப் போட்டி போட்டுப் பாராட்டிய நாம் என்றாவது ஒருநாள் இதழின் பின்னணியில் இருந்து அதனை வெளிக்கொணர்ந்த இத்தகையோரைப் பாராட்டியிருக்கிறோமா..?

இதழில் ஏற்படும் பிழைகளுக்கு இவர்கள் மீது அலுவலகத்தில் ஏற்படும் விமர்சனங்களில்,இன்னும் சொல்லப் போனால் வசவுகளில் ஒரு சதவீதம் அளவு கூட,இதழின் வெற்றியில் பொது வெளியிலும் சரி,அலுவலகத்திலும் சரி இவர்களுக்கு பங்கு அளிக்கப்ப‌டுவதில்லை என்பது கசப்பான நிஜம்.பிறரது ஊதியம் உயரும் விகிதாச்சாரத்தில் இவர்களுக்கான ஊதியமும் உயர்வதில்லை என்பது இன்னொரு நிஜம்.

கச்சேரி சாலை தினகரன் நாளிதழ் கேடி பிரதர்சின் கைக்கு மாறிய சமயம்.

பம்பாயில் குண்டு வெடித்து 4 பேர் பலி என்ற செய்தியை சரியாக புரூப் பார்க்காததால் பம்பாயில் குண்டி வெடித்து 4 பேர் பலி என்று மறுநாள் போஸ்டரில் இடம் பெற்றுவிட்டது.ஊரே சிரிப்பாய்ச் சிரித்தது.இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் புரூப் ரீடர் பணியின் முக்கியத்துவத்தை.

இனி செய்திக்கு வருவோம்.
னந்த விகடனில் 17 வருடங்களாக பணியாற்றியவர் ச‌.சிவசுப்ரமணியன் என்பவர்.இவர் தற்பொழுது ஆ.வி.உதவி ஆசிரியராக இருக்கிறார்.இவரது இப்பொழுதைய வயது 47.ஏற‌த்தாழ 30 ஆவது வயதில் விகடனில் பணிக்குச் சேர்ந்தார்.அதிகம் பேச மாட்டார்.எப்பொழுதும் முகத்தில் மெல்லிய சிரிப்பைத் தாண்டி வேறு எதையும் பார்க்க முடியாது.இவருக்குப் பின் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த எத்தனையோ பேர் உயர்ந்த இடத்திற்குச் செல்ல இவரது நிலையில் பெரிய மாற்றம் இல்லை.உதவி ஆசிரியர் தான்.

 இவருக்கு அளிக்கப்பட்ட பணி என்னவென்றால்  பிழை திருத்துவது மட்டும் தான்.17 வருடங்களாக‌ இந்தப்பணியைத் தான் திறம்பட செய்து வருகிறார்.

ஆனந்த விகடனின் 100 பக்கத்தையும் இவரும் இன்னொருவரும் சேர்ந்து தான் அதன் தலைப்பில் இருந்து வார்த்தை அமைப்புக்கள்,எழுத்துப்பிழை உட்பட அனைத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்து இறுதி செய்வார்கள்.
இதில் ஏதாவது எப்பொழுதாவது அவர்களை அறியாமல் தவறு நேர்ந்தால் அவர்கள் காலி தான்.ஆனால் அப்படி தவறுகள் ஏற்படுவதற்கான சூழல் இதுவரை அதிகம் வந்ததில்லை.

விகடன் குழுமத்தின் வேலை நேரம் குறித்துச் சொல்லியாக வேண்டும்.

விகடன் குழுமத்தில் இப்பொழுது தான் எல்லோரும் கொஞ்சம் சீக்கிரமாக அதாவது இரவு 7 மணிக்குள் அல்லது 8 மணிக்குள் வீட்டிற்குத் திரும்ப முடிகிறது.மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை சாமக் கோடாங்கி தான்.எப்பொழுது வீடு திரும்புவோம் என்பது வேலை செய்கிற யாருக்கும் தெரியாது.கொடுக்கிற சம்பளத்திற்கு பல மடங்கு உழைப்பை உறிஞ்சி விட்டுத் தான் விடுவார்கள்.நேரங்காலம் தெரியாமல் தான் உழைக்க வேண்டும்.

ஆனால் அப்பொழுது மட்டுமல்ல,இப்பொழுதும் எப்பொழுதும் கடுமையாக உழைத்தவர் தான் சிவசுப்ரமணியம்.
அதுவும் இதழ் முடிக்கும் நாள் என்றால் நள்ளிரவு வரை தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைக் கண் உறங்காமல் பார்த்து விட்டு,அலுவலகத்தில் தரையில் செய்தித்தாளை விரித்து படுத்து எத்தனையோ கணக்கற்ற இரவுகளைக் கழித்திருக்கிறார்.

இப்படி ஆனந்த விகடனின் வளர்ச்சியில் கடந்த 17 ஆண்டுகளாகப் பிரிக்க முடியாத பங்கினை வகித்தவர் தான் சிவசுப்ரமணியம்.

ஆனால் இந்த சிவசுப்ரமணியம் தான் கடந்த வாரம் ,வேலையை விட்டு சொடக்குப் போடும் நேரத்தில் நீக்கப்பட்டிருக்கிறார்.அவர் என்ன தவறு செய்தார் என்கின்றீர்களா..?

அலுவலகப் பணத்தைத் திருடினாரா,,?இல்லை அலுவலக ரகசியத்தை (!)வெளியே கசிய விட்டாரா..? இல்லை இலங்கைத் தூதருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுக்கு மறைமுகமாக வேலை செய்தாரா..?இல்லை தனக்குப் பிடித்த காவல்துறை அதிகாரிகளை புகழச்செய்து கட்டுரை வெளியிட்டாரா..?இல்லை டேபிள் ஒர்க் செய்து பெண் புலிகள் இன்று விபச்சாரம் செய்கிறார்கள் என்று இலங்கை அரசின் கைக்கூலியாய் நேர்காணல் வெளியிட்டாரா..?இல்லை சில நூறுகள் கவர் வாங்கினாரா,,?இல்லை செய்யும் வேலையில் திருத்திக் கொள்ள‌ முடியாத‌ மிகப்பெரிய தவறு செய்தாரா..?

எதுவும் இல்லை.

அப்படியென்றால் என்ன செய்தார் என்கின்றீர்களா..?

'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் தொடங்க உத்தேசித்து இருக்கும் 'காமதேனு' நாளிதழுக்கு வேலைக்காக இன்டர்வியூ சென்று விட்டு வந்தார்.அவ்வளவு தான்.இத்தனைக்கும் அவர் இன்னும் அங்கு வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படக் கூட இல்லை.

இந்த ஒற்றைக்காரணத்திற்காக தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது.?

இனி நடந்தவற்றைத் தருகிறோம்.

காமதேனு நாளிதழுக்கு வேலைக்காக இண்டர்வியூ செல்லும் பொருட்டு இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்திருக்கிறார்.

இரண்டாம் நாள் மாலை ஆனந்த விகடன் ஆசிரியரும் பதிப்பாளருமான ரா.கண்ணனிடம் இருந்து தொலைபேசி வருகிறது.

"என்ன சார் ஆபிஸ் வரலையா"..?

"கொஞ்சம் தலைவலி சார்.அதான் வரலை" என்று பதில் சொல்லியிருக்கிறார்.

"ஹிந்து வுக்கு இண்டர்வியூவுக்குப் போனதுன்னால வந்த தலைவலியா சார்..?" என்று மறுமுனை கேட்டிருக்கிறது.

உடனே பதில் சொல்லி மழுப்பி விட்டு மறுநாள் வேலைக்குச் சென்றிருக்கிறார்.

அலுவலகம் உள்ளே சென்றவுடன் ஆசிரியரிடமிருந்து அழைப்பு.

"என்ன சார் நேற்று ஹிந்து தமிழ் டெய்லிக்கு இண்டர்வியூவுக்கு போனீங்க போல"?.

இதில் பொய் சொல்ல என்ன இருக்கிறது என்று,'ஆமாம் சார் போனேன்' என்று சிவசுப்ரமணியம் பதில் சொல்லியிருக்கிறார்.

உடனே ஆசிரியர்,நீங்க ஒரு ரிசைன் லெட்டர் எழுதிக் கொடுத்திட்டு இங்கிருந்து கிள‌ம்புங்க என்று ஒற்றை வரியில் சொல்லி அவருக்கு விடை கொடுத்து விட்டார்.

கண்ணில் துளிர்த்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்து விட்டு,கொஞ்ச நேரத்தில் ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்து விட்டு 17 வருடங்கள் எந்த ஆனந்த விகடனுக்காக  நேரத்துக்கு உறங்காமல்,உண்ணாமல் இரவும் பகலும் வேலை பார்த்தாரோ அந்த வளாகத்தை விட்டு உதவி ஆசிரியர் சிவசுப்ரமணியன் அமைதியாகக் கிளம்பி விட்டார்.நாம் கேட்பது இது தான்.

ஒரு தொழிலாளி ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கையில் இன்னொரு பத்திரிகை அலுவலகத்திற்கு வேலைக்கு இண்டர்வியூவுக்கு செல்வது கிரிமினல் குற்றமா என்ன..?

இது அவன் உரிமை இல்லையா.?எங்கு வேலை பார்க்க வேண்டும்..?என்ன சம்பளத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை அவனுக்குத் தீர்மானிக்கும் உரிமை கூடவா இல்லை..?

தற்பொழுது பணியாற்றும் நிறுவனத்தின் வேலையை விட்டுச் செல்வதற்கு முன்,உரிய காலக்கெடுவில் முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்தால் போதாதா..?

இங்கு தொழில் துவங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் கூட‌ ஆனந்த விகடனைப் போல் தொழிலாளியை நடத்துவது இல்லையே...!

சிவசுப்ரமணியன் செய்தது கிரிமினல் குற்றம் என்றே ஆனந்த விகடனின் அகராதிப்படி (ஒரு வாதத்திற்கு) வைத்துக் கொள்வோம்.

உங்கள் அலுவலகத்தில் இருந்து எத்தனை செய்தியாளர்கள் 'தி ஹிந்து' தொடங்க இருக்கும் தமிழ் நாளிதழுக்கு வேலைக்காக இண்டர்வியூவுக்கு சென்று வந்துள்ளார்கள் என்ற பட்டியல் எங்களை விட உங்களுக்கு நன்கு தெரியும்.அவர்கள் மீது உங்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா..?முடியாது.

இவ்வளவு ஏன்..உங்கள் ஜூனியர் விகடன் முதன்மைப் பொறுப்பாசிரியர் காமதேனுவில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கூட வாங்கி வந்து விட்டார்.

ஆனாலும் இன்னும் உங்கள் அலுவலகத்தில் தானே நீடிக்கிறார்..?அவரை உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது உங்களைப் போல எங்களுக்கும் தெரியும்.

உங்களின் முன்னாள் மூத்த நிருபர் டி.எல்.சஞ்சீவி குமார் உங்கள் அலுவலகத்தை விட்டு ராஜினாமா கடிதம் கொடுத்து அதன் பின் ஜே.கே.பில்டர்ஸ் என்னும் ரியல் எஸ்டேட்காரர் நடத்தும் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பின் ஒன்றரை மாதம் கழித்துத் தானே நீங்கள் ரிலீவ் லெட்டரே கொடுத்தீர்கள்.இப்பொழுது இவரும் காமதேனுவில் வேலைக்குச் சேர்ந்து விட்டார்.

வேலையை விட்டுப் போகிறேன் என்று சொல்லி விட்டுச் சென்ற சஞ்சீவி குமாரை 45 நாட்கள் இழுத்துப் பிடித்த‌ நீங்கள்,இண்டர்வியூ சென்று வந்த ஒரே காரணத்திற்காய் பேப்பரைக் கசக்கி எறிவது போல சிவசுப்ரமணியனை வேலையை விட்டுத் தூக்கி எறிந்தது ஏன்..?

சிவசுப்ரமணியன் போன்ற‌ உதவி ஆசிரியர்கள் எதுவும் எதிர்த்துப் பேச மாட்டார்கள்,அவரை எப்படியும் தூக்கி எறியலாம் என்னும் எதேச்சதிகாரமான முடிவு தானே..?

உங்களின் இந்த முடிவு அவருக்கு வேறு பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாதா..?
ஒருவேளை காமதேனு இவரை வேலைக்குச் சேர்க்கவில்லை என்றால் இவரும் இவரது குடும்பமும் நடுத்தெருவில் தானே நிற்க வேண்டும்.

இன்னொரு பக்கம்,இவர் ஆ.வி.யில் வேலையில் இல்லை என்று தெரிந்தால் காமதேனு நாளிதழ் இவருக்கு கொடுக்க எண்ணியுள்ள சம்பளத்தில் கையை வைக்கும்,இப்பொழுது வாங்கும் சம்பளத்தை விட‌ அடி மாட்டு ரேட்டுக்கு வேலைக்கு அழைக்கும் என்பது தெரியாதா..?

இல்லை இதெல்லாம் நடக்கட்டும் என்று தெரிந்து தான் வேலையை விட்டு நீக்கினார்களா..?

வேறொரு கோணத்தில் பார்த்தோமானால்,நீங்கள்  பொறாமைப்பட்டு,ஆத்திரப்பட்டு வேலையை விட்டு நீக்கும் அள‌வுக்கு அவர் மிக உயர்ந்த இடத்திற்கும் செல்லப் போவதில்லையே..?

இதுவரை உங்களிடம் சொற்ப சம்பளத்திற்கு அடிமைச் சேவகம் புரிந்த தொழிலாளி,இன்னும் சில ஆயிரங்கள் அதிகச் சம்பள‌த்தில் ஹிந்து முதலாளிக்கு சேவகம் செய்யப் போகிறார்.தனது உழைப்பைச் சுரண்ட தெரிந்தே அனுமதிக்கப் போகிறார்.

யாருக்கு 'அடிமை'யாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க‌ கூட‌ அவருக்கு உரிமை இல்லையா..?

உங்களின் முடிவுக்கு எதிராக,வலுக்கட்டாயமாக என்னிடம் கடிதம் பெற்றார்கள் என்று ஒரு பத்திரிகையாளர் தொழிற்சங்கத்தை நாடியுள்ள சிவசுப்ரமணியம் நாளை தொழிலாளர் நல நீதிமன்றத்தை நாடினால் என்னவாகும் என்று எதிர்பார்த்தீர்களா..?

அவருக்கு எவ்வளவு இழப்பீடு தர வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன..?

இவ்வளவு ஏன்..?

பணக் கணக்கை,விடுங்கள்.

நீங்கள் தொழிலாளர் உரிமைக்காய்,அவர்கள் மீதான உழைப்புச் சுரண்டலுக்காய் எத்தனை,எத்தனை கட்டுரை வெளியிட்டிருப்பீர்கள்...?

இது தொடர்பான எத்தனை நூல்களின் விமர்சனங்களை வெளியிட்டிருப்பீர்கள்..?

முதல் பக்கத்தில் தலையங்கம் தீட்டியிருப்பீர்கள்..?

ஏன் நடப்பு  (17-ஜூலை-2013)இதழில் கூட சவூதி அரேபியாவில் இருந்து துரத்தப்படும் தொழிலாளிக்காக விகடனில்,'உழைப்பைச் சுரண்டச் சொல்லிக் கெஞ்சாதீர்கள்'
என்ற தலைப்பில் கட்டுரை நெஞ்சுருக வடித்தீர்களே..! நாங்கள் கூட நினைத்தோமே விகடனுக்கு தொழிலாளர் வர்க்கத்தின் மீது என்னே அக்கறை என்று..!

இப்பொழுது தானே தெரிகிறது..

நாங்கள் 'உழைப்பைச் சுரண்டச் சொல்லிக் கெஞ்சாதீர்கள்' கட்டுரையைப் படிப்பதற்காக‌ அச்சுக்கு அனுப்பும் முன்பு அதற்கு புரூப் பார்த்த தொழிலாளியின் சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விட்டீர்கள் என்று.

குறைந்த பட்சமாவது நேர்மையாய் இருங்களேன்...!

சிவசுப்ரமணியத்தைத் திரும்ப‌ அழைத்து வலுக்கட்டாயமாக அவரிடம் இருந்து பெறப்பட்ட‌ அவரது ராஜினாமாவைத் திரும்பக் கொடுத்து அவரை மீண்டும் பணியில் சேர்ப்பதும்,அவர் விரும்பும் வரையில் பணியில் தொடரச் செய்வதும் தான் தீர்வு.

இல்லை நாங்கள் கட்டுரையாள‌ர்களை வைத்து முற்போக்காய் எழுதுவோம்.அதனை விற்பனைச் சரக்காக்கி விற்பனை செய்வோம்.ஆனால் அதில் குறைந்த பட்ச நேர்மையுடன் கூட நடக்க மாட்டோம் என்று சொன்னால்,நீங்கள் பாம்பு தன் சட்டையை உரிப்பது போல உங்கள் நேர்மையின்மையை,நிருபித்துக் கொண்டே இருக்கின்றீர்கள் என்று ஊருக்கும் உலகுக்கும் இன்னொரு முறை தெரியப் போகிறது.

தொடர்புடைய இணைப்புக்கள்

http://kalakakkural.blogspot.in/2011/11/blog-post_13.html


Monday 15 July 2013

விகடனில் இருந்து இரா.சரவணன் ராஜினாமா..!இரா.சரவணன்


வெளியில் கடுமையான வெயில்.இதழ் முடிக்கும் நேரம்.'கழுகார்' வருவாரா மாட்டாரா என்று பதற்ற‌த்துடன் காத்திருந்தோம்.

திடீரென்று ஒரு குறுஞ்செய்தி.

செய்திகள் அனைத்தையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விட்டேன்.எடுத்துக் கொள்ளுங்கள்.முக்கிய செய்தி மட்டும் நேரில் சொல்கிறேன் என்று.

நேரத்தைச் சரியாகப் பின்பற்றுவதில் கழுகாரை மிஞ்ச ஆள் இல்லை என்று பெருமைப்பட்டுக் கொண்டோம்.

சொன்னபடி சிறிது நேரத்தில் ஆஜர் ஆனார்.கழுகார்.அவருக்கு வெயிலுக்கு குளுமையாக மோர் கொடுத்தோம்.நம்மை நன்றியுடன் பார்த்தவர்,அனுப்பிய செய்திகளை எடுத்துக் கொண்டீரா ? என்றார்.

ஆம்.ஏதோ துணுக்குச் செய்தி தருவதாகச் சொன்னீரே...அதுக்காகத் தான் வெய்ட்டிங் என்றோம்.

அதானே..! காரியத்தில் எப்பவும் கண்ணாய் இருப்பீரே என்றார்.

நமது புன் சிரிப்பைப் பார்த்தவர் சொல்லத் தொடங்கினார்.

ஒரு முக்கிய செய்தி விகடன் வட்டாரத்தில் இருந்து சொல்றாங்களே உமக்கு தெரியுமா என்றார்.?என்ன என்றோம் ஆர்வத்தை வெளியே காட்டாமல்.

இரா.சரவணன் விகடன் பப்ளிகேஷன்சில் இருந்து ஆசிரியர் பதவியை ராஜினாமா பண்ணிட்டாராமே..!என்றார்.

உண்மையா ? என்றோம்.

ஆமாம்.

எதுக்கு..?அங்கே ராஜமரியாதையா நல்லாத் தானே இருந்தார் என்றோம்.

முழு விபரமும் சொல்றேன்.ஆனா எதும் குறுக்கே பேசி என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது என்றார்.

சரி என்று உறுதிமொழி அளித்தோம்.

ஏற்கனவே நாம்  சரவணனுக்கு செக் வைப்பதற்காக கலைச் செல்வன் என்பவரை விகடன் பப்ளிகேஷனில் நியமித்திருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தோம்.

அப்பொழுதே இரா.சரவண‌னுக்கு கொஞ்சம் எரிச்சலாம்.ஆனால்அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்திருக்கிறார்.

ந்த நிலையில் விகடனில் இருந்து அசோகன் வெளியேறியதால் அவர் வகித்த பதிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மாற்று நபரை அலுவலகத்தில் நியமித்திருக்கிறார்கள்.அதன்படி ஆனந்த விகடன்,டாக்டர் விகடன், உள்ளிட்ட 6 விகடன் குழும இதழ்களுக்கு இரா.கண்ணன் பதிப்பாளராய் பொறுப்பேற்றிருக்கிறார்.

அப்படின்னா ஜூனியர் விகடனுக்கு என்று குறுக்கிட்டோம்.?

குறுக்கே பேசக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார் கோபத்துடன்.

மன்னிக்கணும் என்றோம்.

ஜூனியர் விகடன் மற்றும் விகடன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பாளரா திருமாவேலனை நியமித்திருக்கிறது நிர்வாகம்.

அப்படின்னா சரவணன்..?

முறைத்தார் கழுகார்.

அமைதி காத்தோம்.

திருமாவேலனின் கீழ் பணியாற்றுவது தனக்கு இயலாத காரியம் என்று நினைத்தாரோ என்னவோ,கடந்த வாரம் இரா.சரவணன் அலுவலகத்தில் ஆ.வி.ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் ரா.கண்ணன் அவர்களைச் சந்தித்து ஒரு கடிதத்தை நீட்டியிருக்கிறார்.

என்ன என்று ரா.கண்ணன் கேட்க,எனது ராஜினாமா கடிதம் என்று சொல்லியிருக்கிறார்.

ரா.கண்ணன் அதிகமாக எதுவும் பேசாமல்,நீங்கள் திருமாவேலனிடம் கொடுத்திடுங்க.அவர் தான் இப்ப பப்ளிகேஷனுக்கு பதிப்பாளர் என்று சொல்லியிருக்கிறார்.தன்னிடம் இது குறித்து ரா.கண்ணன் விரிவாகப் பேசுவார் என்று எதிர்பார்த்தவருக்கு இது பேரதிர்ச்சி.

இதை எதிர்பார்க்காத சரவணன் அடுத்து திருமாவேலன் அவர்களைச் சந்திக்கச் சென்றார்.

சொல்லிய கழுகார் ஒரு இடைவெளிவிட்டு நம்மை ஏறிட்டுப் பார்த்தார்.

முக்கியமான நேரத்தில் சஸ்பென்ஸ் வைப்பதே உமது வேலையாப் போச்சு என்று கோபித்துக் கொண்டோம்.

அதனை மெல்லிய சிரிப்புடன் ரசித்தவர்  தொடர்ந்தார்.

உம் ஆர்வம் புரிகிறது.

திருமாவேலனுக்கும் இரா.சரவணனுக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம்.அவரை இவர் சந்தித்தாரா என்று தானே ஆர்வம் காட்டுகின்றீர் என்றார்.

பதில் சொல்லாமல் நாமும் சிரித்தோம்.

தன்னை சரவணன் சந்திக்க வந்துள்ளார் என்ற‌வுடன்,என்ன விஷயம் என்று பதிப்பாளர் திருமாவேலன் கேட்டுள்ளார்.

சரவண‌ன் நீட்டிய கடிதத்தைப் படித்த திருமாவேலன் மரியாதைக்காய் அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிய பின்,ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு,உடனே இவரைப் பணியில் இருந்து விடுவித்து விடுங்கள்  என்ற குறிப்பை அதில் எழுதி அனுப்பி விட்டார்.

இப்பொழுது நீர் பேசலாம் என்று நமக்கு அனுமதி கொடுத்தார்.

அப்பாடா என்று பெருமூச்சு விட்ட நாம்,திடீரென்று ராஜினாமாவுக்கு என்ன அவசியம் என்றோம்.

இது குறித்து ஊகமாகத் தான் அலுவலகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

திருமாவேலனுக்கு கீழ் தன்னால்,முன்பு போல் சுதந்திரமாக தன் விருப்பப் படி பணியாற்ற முடியாது என்று நினைத்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் என்றும்,இல்லை திரைப்பட இயக்குனர் சசிக்குமாரின் அடுத்த படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ள‌து என்று சிலரும் இல்லை ஹிந்து தமிழ் நாளிதழுக்கு வேலைக்குச் செல்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

இன்னொரு தரப்பு வேறொரு காரணமும் சொல்கிறது.

என்ன என்றோம்.?

ராஜினாமா செய்ய சரவணனுக்கு உண்மையில் விருப்பம் இல்லையாம்.ராஜினாமா கடிதம் கொண்டு சென்ற தன்னை ரா.கண்ணன் சமாதானப் படுத்துவார்,நாம் திரும்பப் பெற்றுவிடலாம் என்று எதிர்பார்த்தாராம்.ஆனால் கண்ணனோ என்ன காரணத்தாலோ இவர் ராஜினாமாவை திரும்பப்பெற வலியுறுத்த வில்லையாம்.

இதனை எதிர்பார்க்காத சரவணன் வேறு வழியின்றி ராஜினாமா செய்தார் என்றும் சொல்கிறார்கள்.

எது உண்மையோ யாருக்குத் தெரியும் அவராகச் சொன்னால் தான் தெரியும்.என்றார்.

கடும் வெயிலில் சூடான செய்தியுடன் உள்ளே வந்த கழுகார் கிளம்பும் நேரத்தில் வெளியே மழை தூறியது.நாம் மழைக்கு இதமாக ஒரு சூடான தேநீர் கொடுத்தோம்.
நம்மை நன்றியுடன் பார்த்தவர்,இந்த தேநீருக்காக உமக்கு இன்னொரு விகடன் செய்தி விரைவில் சொல்றேன் என்றார்.

நாம் சிரித்தபடி அவரை வழியனுப்பினோம். 


Saturday 13 July 2013

தந்தி டிவியில் நித்தியானந்தா அருள்வாக்கு...?

மீப‌காலமாய் அடங்கியிருந்த‌ நித்தியானந்தா ஏதாவது ஒரு சேனலில் தனது நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாக வேண்டும்,அதன் ,மூலம் திரும்பவும் பாப்புலாரிட்டியில் திளைக்க வேண்டும் என்று கையில் கரன்சியை வைத்து அலைந்துகொண்டிருந்தான்.காசினைக் கொட்டிக் கொடுக்கத் தயாராய் இருந்தாலும் இந்துத்துவ பின்னணி கொண்ட லோட்டஸ் டிவி மட்டும் தான் அவன் கையில் கிடைத்தது.

ஆனாலும் அதிகப் பார்வையாளர்களை சென்றடையும் தொலைக்காட்சி கிடைத்தால் நல்லது என்ற எண்ண‌த்தில் வலையை வீசிக் காத்திருந்தான்.
சன்,ஜெயா,கலைஞர் போன்ற சேனல்களில் வாய்ப்பில்லை என பலவாறாக கனக்குப் போட்டு இறுதியாக பு.த.தொலைக்காட்சியை அணுக முடிவு செய்தார். புதிய தலைமுறை பச்சமுத்துவை வெளிநாட்டு ‘கருப்பு முதலைகள்’ வழியாக பிடித்து பேசினார். கேவலமா நாடு சிரிச்ச ஒருத்தனை நமது சேனலில் காட்டுவதா என அந்தக் கருப்பு உள்ளமும் நல்லபடியாகச் சிந்தித்ததோ என்னவோ, ‘சேனலுக்கும் எனக்கும் பொறுப்பில்லைபையன்தான் எல்லாமும் பார்த்துக்கொள்கிறார்’ என தூர நின்றார்.(தப்பிக்க நினைக்கும்,தவிர்க்க நினைக்கும் நேர‌ங்களில் எல்லா முதலாளிகளும் சொல்வது தான்)
உடனே மகன் சத்திய நாராயணனுக்கு அடுத்துள்ள சீனிவாசனை வேறு ஒரு தொடர்பில்
பிடித்து பேசியிருக்கிறார்.‘அந்த வேலை இங்க வேண்டாம். நான் இருக்கும் வரை உங்க நிகழ்ச்சி இங்க ஆகாது’ என கறாராகப் பேசியிருக்கிறார். இதற்காக டெல்லியில் உள்ள ஒரு இந்துத்துவா
கோஷ்டிதான் பேசியிருக்கிறது. இது எல்லாம் கருப்பு பண தொடர்பில் இருக்கும்
கும்பல் என்பது வேறு விஷயம். நாம் நித்தியின் விடா முயற்சிக்கு வருவோம்.
கடைசியாக பெருங்குடியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் தந்தி டி.வி.யிலாவது ஒளிபரப்பலாம். அது குறைவான பார்வையாளர்களை வைத்திருந்தாலும் பரவாயில்லை. அதிகப்படியான விளம்பர பொறுப்பை நாமே ஏற்கலாம் என பலவாறாக யோசித்துப் பதம் பார்க்கஅந்த சேன‌லில் உள்ள ‘இணைந்த கைகளான’ இருவர் குறித்து விசாரித்திருக்கிறார்கள்.

அருள்வாக்கு கூறும் நித்தியானந்தா

ஒருவர் அந்த தொலைக்காட்சியின் ஆல் இன் ஆல் சந்துரு.இன்னொருவர் நிகழ்ச்சித்
தயாரிப்பாளர் ராம்ஜி.ஏற்கனவே நிறையத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்துக்
கொண்டிருப்பவர்.
உடனே இருவரையும் பிடித்தார். வாரம் தோறும் ஒரு நிகழ்ச்சி. அல்லது தினமும் என்றாலும்
பரவாயில்லை என்றதும்....அடுத்து சில நாட்களில் இரண்டு பேரும் பெங்களுரு நித்தி
பீடத்திற்கே போய் சரண்டர் ஆனார்கள். (ஆ)சாமியிடம் பேசினார்கள்...பேசினார்கள்....பேசி முடித்தார்கள். நித்தியை கெட்டியாக பிடித்துக்கொண்டால் தனி சேனலையே தொடங்க சொல்லாம் என்ற தனி கணக்கு போட்டார்கள்.இப்போதைக்கு தந்தி தொலைக்காட்சியில் நித்தியின் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதென்று முடிவெடுத்தார்கள். உறுதி அளித்து முடித்தார்கள்.
எல்லாமும் கணக்கு பார்த்து வாய்நிறைய சிரிப்போடு திரும்பினார்கள். அதன் பிறகு இரண்டு முறை அங்கே சென்றார்கள். இவ்வளவு ஆகும் என்று பட்ஜெட் பட்டியலை நீட்டினார்கள்.
அதெல்லாம் பார்க்ககூடிய ஆளா நித்தி...அது இருக்கட்டும்..நீங்கள் எப்படி செய்கிறீர்களோ
அப்படியே செட்டு போட்டு எடுங்கள் என கூறிவிட்டார். இப்படி எல்லாமும் இறுதியாகி
படப்பிடிப்பு நடக்கும் நாளும் உறுதியாகியிருக்கிறது.
இறுதியில் நித்தியோடு ‘பக்தகேடிகள்‘ கலந்துகொண்டு கேள்விக்கு பதில்
என்னபடியோ, அல்லது சொற்பொழிவில் ஆன்மீகவாதிகளின் கேள்வி என்ற மாதிரியோ
எடுப்பதென‌ உள்ளார்க்ள்.

நித்தியானந்தா,ரஞ்சிதா,பித்த‌லாட்டம்,தந்தி டிவி,லோட்டஸ் டிவி
நித்தியானந்தா

அடுத்த வாரத் தொடக்கத்தில் எடுக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும். கடந்த
வாரத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. செட்டு போடுபவர்கள், கேமரா யூனிட், லைட்
செட்டிங் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து பேசிவிட்டார்கள். அனேகமாக ஆகஸ்டு மாதம்
இறுதியில் ஒளிபரப்பும் முடிவில் உள்ளார்கள். படப்பிடிப்பு பெங்களுரு பிடதி
பீடத்திலேயே..
தொலைக்காட்சி அலுவலகத்தில் 'நித்ய தர்மம்' விவாதம் என்று அறிவிப்பு பலகையில் எழுதிப் போட்டு அது குறித்த விவாதமும் நடக்கிறது.(இந்தப் பதிவு எழுதும் இந்தக்கணம்  பெங்களூரில் நித்தியானந்தா ஆசிரமத்தில் குளுமையான  தட்ப வெப்ப சூழ்நிலையில், தீவிர விவாதத்தில் ராம்ஜி ஈடுபட்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்)
(அலுவலகத்தில் நித்தியானந்தா நிகழ்ச்சி குறித்து முணுமுணுப்பு வந்ததும் நம்ம எம்.டி.அவரோட டிவோட்டி அவர் தான் பண்ணச் சொன்னார்,எங்களுக்கு ஒன்றும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி வாயை மூட வைத்திருக்கிறார்கள்.நிகழ்ச்சி ஒளிபரப்பானால் அது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதும் தந்தி டிவிக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச பார்வையாளர்களையும் ஓட வைத்து விடும் என்பதும் உறுதி. )

சாமியாரோ,போலிச் சாமியாரோ(சாமியார் என்றாலே போலி.இதில் போலிச்சாமியார் என்று
வேறு எழுதணுமா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிற‌து
.)
பக்தர்களிடம் காசு பிடுங்கிக் கொண்டு 'அருள் வாக்கு' கொடுப்பார்கள்.

ஆனால் இங்கோ நித்தியானந்தா சிலருக்கு 'தட்சணை' கொடுத்து, தொலைக்காட்சி பார்க்கும் அப்பாவி பக்தனுக்கு அருள்வாக்கு கொடுக்கிறார்.நித்தியானந்தாவை மடக்கிய இவர்கள் நிச்சயம் அவரை விட விவரமானவர்கள் தான்.பகிரங்கமாய் அம்பலப்பட்ட ஒரு பேர்வழியை வைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்த துணியும் இவர்களின் தில்லு வேறு யாருக்கும் வராது என்பது உறுதி.
இப்படியே போனால் தொலைக்காட்சி ரேட்டிங் ஏறாது.சிலர் வங்கிக் கணக்கு இருப்பு ஏறும் என்பது மட்டும் நிஜம்.

Thursday 11 July 2013

கலாநிதி மாறன் vs பச்சமுத்து ;' கேடி பில்லா கில்லாடி ரங்கா '...!

ன்று காலை(11-07-2013) புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்,நேற்று உச்சநீதிமன்ற‌ம் குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்கத் தடை விதித்தது குறித்தும் அரசியல் கிரிமினல்மயமாவது குறித்தும் சமூக அக்கறையுடன் கூடிய விவாதம்.

திரு.ஜென்ராம் நெறியாளுகை செய்து கொண்டிருந்தார்.(இன்றைய‌ நிகழ்ச்சியை மட்டுமல்ல எப்பொழுதும் சிறப்பாக நெறியாளுகை செய்கின்றீர்கள் சார்..பாராட்டுக்கள்)

ஆனால் நமக்கு வேறு ஒரு கவலை வாட்டிக் கொண்டிருந்தது.

அரசியல் கிரிமினல் மயமாவது குறித்து எப்படி உச்சநீதிமன்றம் கவலை கொண்டிருந்ததோ,அதைப் போல இந்த நாட்டின் தொலைக்காட்சிக‌ள்,செய்தித்தாள்க‌ள்,வானொலிகள் உள்ளிட்ட ஊடக‌ நிறுவனங்கள் கிரிமினல் பின்னணி உடையவர்களால் நடத்தப்படுவது குறித்தும் இத்துறை கிரிமினல்மயமாவது குறித்தும் தான் அந்தக் கவலை.

கருப்புப் பணம்,சுயநிதிக் கொள்ளை,அதிகார துஷ்பிரயோகம்,முறைகேடு,அரசு சொத்து அபகரிப்பு,இன்னும் என்னென்ன முறையற்றம் குறுக்கு வழி உண்டோ அவை அத்தனையையும் கடைப்பிடித்து பணம் ஈட்டியவர்கள் இத்துறைக்குள் புற்றீசலாய் இருப்பது குறித்த கவலை.

இன்று இத்துறையில் ஆக்டோபசாய் தொலைக்காட்சிகள்,வார இதழ்,விரைவில் செய்தித்தாள்,அரசியல் இதழ்,பதிப்பகம் என நுழைந்திருக்கும் எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் மீது நாம் மேற் சொன்ன அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உண்டு.

ஆனாலும் குறுக்கு வழியில் ஈட்டிய பல்லாயிரம் கோடிகளைக் காப்பாற்றுவதற்கும்,அதன் மீதான நாற்றத்தை மறைப்பதற்கும் பொது வெளியில் ஊடகம் மற்றும் அரசியல் என்று அந்த நிறுவனம் திட்டமிட்டுக் களமிற‌ங்கியிருக்கிற‌து.

எப்பொழுதும் எவனை,எப்படி மொட்டை அடிப்பதுன்னு சிந்திச்சுக்கிட்டே இருப்பீங்களா சார்...?


நில ஆக்ரமிப்பு,எஸ்.ஆர்.எம்.பச்சமுத்து


அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஊடகங்களில் ஒன்றான புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தான், அரசியல் கிரிமினல் மயமாவது குறித்த கவலை காலை நேரத்தில்.கடந்த இரண்டு நாட்களாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக் குழுமத்தின் முதன்மை நிறுவனமான‌ எஸ்.ஆர்.எம்.குழுமம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள் அரசு நிலத்தை அபகரித்த செய்திகள் அதிகார மட்டங்களிலும் ஊடகங்களிலும் நாற்றமடித்துக் கொண்டிருக்கின்ற‌ன.(எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கு எதிரான செய்தியை தினகரன் தவிர்த்து யாரும் வெளியிடவில்லை.அனைத்து முதலாளிகளுக்குள்ளும் அப்படி ஒரு ஒற்றுமை.)

10-07-2013 தேதியிட்ட தினகரன் நாளிதழ்

11-07-2013 தேதியிட்ட தினகரன் நாளிதழ்


இந்த நிலத்தின் மதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல.500 கோடி ரூபாய் சந்தை மதிப்பு உள்ள‌து.இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் பச்சமுத்து போன்றவர்களுக்கு சகஜம்.தங்களது இடத்திற்கு அருகில் எவர் இடம் இருந்தாலும் குறிப்பாக அரசு இடம் இருந்தால் அதனைத் தங்கள் இடமாக கருதி அதனை வளைப்பது ரத்தத்தில் ஊறிய ஒன்று.

தனியார் இடத்தை ஆக்ரமித்தால்,வலுவானவன் என்றால் அவர்களுடன் சமரசம் செய்வதும்,எளியவன் என்றால் அவர்களைப் பணிய வைப்பதும்,அரசுக்குச் சொந்தமான இடம் என்றால் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தும் விதிகளைத் தளர்த்தியும் பிரச்சனையை முடித்து விடுவர்.இது போன்று காரியம் முடியாத நேரங்களில் தான் பிரச்சனை அம்பலத்திற்கு வருகிற‌து.

இப்பொழுது எதுவும் ஆகாமல் பிரச்சனை அம்பலத்திற்கு வந்துள்ளது.

நமக்கு இப்பொழுது இருக்கும் இன்னொரு கவலை என்னவென்றால் புதிய தலைமுறை கட்டிடமும் அது அமைந்திருக்கும் இடமுமாவது முறைப்படி வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதா.?இல்லை அதிலும் வில்லங்கம் இருக்கிறதா..?

நாட்டில் நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் செய்தி போடும் புதிய தலைமுறை முதலாளி மீதான  500 கோடி ரூபாய் மோசடிக் குற்றச்சாட்டுக்கு செய்தி போடவில்லை.

அவ்வளவு ஏன் இது போன்ற மோசடிகள் வெளிவரும் பொழுது சம்பந்தப்பட்டவர்கள்,ஒப்புக்குச் சப்பாக எங்களுக்கும் முறைகேட்டிற்கும் தொடர்பு இல்லை என்று ஒரு விளக்கெண்ணெய் விளக்கம் தெரிவிப்பார்களே அதைக் கூடத் தெரிவிக்கவில்லை.நம்மிடம் மிகப்பெரிய ஊடக பலம் இருக்கிரது.நம்மை யார் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணம்.

அதைப் போல பு.த.தொலைக்காட்சி பார்ப்பவர்கள் இது குறித்தெல்லாம் சிந்திக்க மாட்டார்கள் என்று அவர்க‌ளின் விஷய ஞானம்  மீது அவ்வளவு தடித்த நம்பிக்கை....!

ஆனால் அது குறித்த சிறு சலனத்தைக் கூட காட்டாமல் ஊரில் உள்ளவனுக்கு எல்லாம் 24 மணி நேரமும் வீட்டு படுக்கையறை வரை வந்து உபதேசம் செய்து கொண்டிருக்கிறது அதன் ஊடகங்கள்.

என்னத்தச் சொல்ல..

நீ நடத்து பச்சமுத்து .....!

***


புதிய தலைமுறையின் யோக்கியதை இதுவென்றால் புதிய தலைமுறை குழுமம் ஆக்ரமித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் குறித்த செய்தியை அதிக 'அக்கறை'யுடன் பெரு மகிழ்ச்சியுடன் வெளியிட்ட மாறன்களின் சன் குழும நெட்வொர்க்கின் அயோக்கியத்தனத்தைப் (லேட்டஸ்ட்)பார்ப்போம்.

தினகரன் நாளிதழின் நேற்றைய (10-07-2013) தலையங்கம் இது.
நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்பட தவறினால் என்ன ஆகும்? நீதிமன்றத்தை அவமதித்ததாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனை விதிக்கப்படும். இது நீதிமன்ற நடைமுறை. நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என பொதுமக்கள் மனதில் நம்பிக்கை நீடிக்க வேண்டுமானால், நீதிமன்றங்களின் உத்தரவுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் அல்லது நிறைவேற்ற வேண்டும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்த நடைமுறை நீடித்து வருகிறது. அதாவது,  செல்வாக்கு மற்றும் பின்னணி இல்லாத தனிநபர்களை பொருத்தவரையில். 

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகாரிகள், அமைப்பு ரீதியான பின்புலம் கொண்டவர்கள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை என்ற கருத்து பரவுவதாக தோன்றுகிறது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று பார்த்தோம். ஒரு இளம்பெண் மீது ஆசிட் ஊற்றி முகத்தை  சீர்குலைத்த சம்பவத்தை விசாரித்த நீதிபதிகள், அரிசி பருப்பு வாங்குவதுபோல கடையில் ஆசிட் சர்வசாதாரணமாக விற்கப்படுவதற்கு முடிவு கட்டுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர். 
2005ம் ஆண்டில். 

தங்கள் உத்தரவுப்படியே ஆகட்டும் என நீதிமன்றத்தில் உறுதி அளித்த அரசு இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. வரும் 16ம் தேதி வரை கெடு விதித்துள்ள நீதிபதிகள், இந்த கெடுவுக்குள் உரிய நடவடிக்கை களை எடுக்காவிட்டால் நீதிமன்றமே தலையிட்டு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கும் என கடுமையாக எச்சரித்துள்ளனர்.

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசும், முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசும், தமிழகம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை எத்தனை முறை மதித்து நிறைவேற்றியுள்ளன என்பதை எண்ணிப் பார்த்து சொல்ல தேவையில்லை. 
பல வழக்குகளில் தலைமைச் செயலாளரை வரச்சொல், டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் ஆஜராக வேண்டும், உள்துறை செயலாளர் என்ன செய்கிறார் என்றெல்லாம் தார்மீக கோபத்துடன் நீதிமன்றம் வினாக்களை எழுப்பி கண்டிக்கும்போது, சட்டத்தை மதித்து நடக்கும் சாமானிய மக்கள் உடல் சிலிர்த்து மனம் உருகி நீதிதேவதையின் சிலை நிற்கும் திசை நோக்கி கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். 

அதன் பிறகு என்ன நடக்கிறது?  நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கிறது. வேறெதுவும் நடப்பதில்லை. பத்தாண்டுக்கு முன்பு 500க்குள் இருந்த அவமதிப்பு வழக்குகள் இன்று 2,500 ஆக உயர்ந்துள்ளன. அரசாங்கமே நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்பதை பார்க்கும்போது அமைப்பு ரீதியாக வலுவுடன் நடமாடுபவர்களுக்கு அசாத்திய தைரியம் வந்து விடுகிறது. காவல் துறையின் தடையுத்தரவு ஆனாலும் சரி, நீதிமன்ற தடையாணை என்றாலும் சரி, எதற்கும் நாங்கள் கட்டுப்பட முடியாது என்று ஜனநாயகத்துக்கு புது பரிமாணம் சேர்க்க முனைகின்றனர். ‘தடையை மீறி ஆர்ப்பாட்டம்’ என்பதை பகிரங்கமாக அறிவித்துவிட்டே செய்கின்றனர். 

என்.எல்.சி தொழிற்சங்கங்கள் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி வேலை நிறுத்தத்துக்கு தடையை நீக்கக்கோரின. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் சங்க தலைவர்கள் பொருட்படுத்தாமல் தங்கள் ‘ஜனநாயக உரிமையை’ நிலைநாட்டுகின்றனர். மத அமைப்புகளும் ஜாதி அமைப்புகளும் அநேகமாக இந்த வழியைத்தான் பின்பற்றுகின்றன. சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுவது ஆண்மையின் அடையாளம் என பல இளைஞர்கள் நம்புவதை போல, சமூகத்தில் வீரத்தின் வெளிப்பாடாக தங்கள் சட்ட மீறலை சித்தரிக்கும் கட்டாயத்தில் பல தலைவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள். 

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன; அவ்வாறு செய்வது புதிய பிரச்னைகளை தோற்றுவிக்கும்; போதுமான ஊழியர்கள் அல்லது எந்திரங்கள் இல்லை என்று ஏதோ ஒரு சாக்கு சொல்லி உள்ளாட்சி அமைப்புகளும் அரசு துறைகளும் கடமையை தட்டிக் கழிக்கின்றன. அதன் மூலம் சட்டத்தின் ஆட்சிக்கு வேட்டு வைக்கின்றன. 

குப்பைகளை அகற்ற வேண்டும், குடிநீர் ஒழுங்காக வினியோகிக்க வேண்டும், பள்ளிகள் நியாயமான கட்டணம் வசூலிக்க வேண்டும், ஆட்டோவில் மீட்டர் போட வேண்டும், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும், விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை போன்ற இயல்பான  விஷயங்களில்கூட பொதுமக்களுக்கு சாதகமாக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் நிறைவேற்றப்படுவதில்லை.  இதையெல்லாம் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.  

பொதுமக்களின் புலம்பலுக்கெல்லாம் காது கொடுத்துக் கொண்டிருந்தால் வேலையை எப்போது பார்ப்பது என்று அதிகாரிகள் அஞ்சுவதாக தெரிகிறது. அதுதானே அவர்களின் வேலை என்று நீதிமன்றங்களே நினைவுபடுத்தியும் புரிந்துகொள்ளவில்லை என்றால் என்னதான் தீர்வு? நீதிமன்றமே இந்திய மக்களின் இறுதி நம்பிக்கை. அதன் அடித்தளம் பலவீனமாக்கப்பட்டால் இந்த மண்ணில் ஒரு சமூக சுனாமி சுழன்றடிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது.

ரு வணிக நோக்கமுடைய‌ செய்தித்தாளில் மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் அதன் ஆசிரியரால் எழுதப்பட்ட தலையங்கம்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=55006

நீதிமன்ற‌ங்களின் உத்தரவுகளை அதிகாரத்தில் இருப்பவர்கள்,அதிகாரிகள்,செல்வாக்கு உள்ளவர்கள் யாரும் பின்பற்றுவதில்லை என்றும் அதனைத் தட்டிக் கழிக்க முயற்சிக்கிறார்கள் என்றும்,நீதிமன்றங்களே இறுதி நம்பிக்கை,அதைச் சிதைக்க அனுமதிக்க முடியாது என்றும் ஆதங்கத்துடன் எழுதப்பட்டுள்ளது.

னால் தினகரனின் தலையங்கத்தில் கூறியுள்ளது போல அதிகாரத்தில் இருப்பவர்கள்,விசாரணை அதிகாரிகளின் காலதாமதத்தை உச்ச நீதிமன்றமே சுட்டிக் காட்டி நேற்று (10-07-2013) அதனைக் கண்டன‌ம் செய்துள்ளது.

இது நேற்றும் இன்றும் பெரும்பாலான ஊடகங்களில் அதிக கவனம் ஈர்க்கும் செய்தியாக வந்துள்ள‌து.(தமிழ்நாட்டில் தினமலர் மட்டும் இச்செய்தியை வெளியிடவில்லை.பொதுவாக மாறன் சகோதரர்களுக்கு எதிரான செய்தியை அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து மகிழும் தினமலர்,சன் நியூஸ் செய்தி ஆசிரியர் ராஜா மீதான பாலியல் புகார் மற்றும் கைது,நேற்றைய தீர்ப்பு போன்ற‌ இரண்டையும் (திருச்சி தினமலர் தவிர)பிரசுரிக்கவில்லை.களவாணிகளுக்குள் கூட்டு ஏற்பட்டு விட்டது என நினைக்கிறோம்.

அதைப் போல‌ தயாநிதி மாறனுக்கு எதிரான செய்தியை முதல் பக்கத்திலும் ,சிங்கூர் நிலத்தை விவசாயிகளிடம் திருமப ஒப்படைக்க வேண்டும் என்னும் உச்சநீதிமன்ற‌த்தின் உத்தரவை 6 ஆம் பக்கத்திலும் வெளியிட்ட தீக்கதிர்  அரசின் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்த எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் குறித்த செய்தியை எந்தப் பக்கத்திலும் வெளியிடவில்லை.இப்பொழுது மட்டுமல்ல சமீப வருடங்களில் அப்படித்தான்.

இது தற்செயல் நிக‌ழ்வா..?அல்லது எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் லட்சங்கள் பெறுமானமுள்ள விளம்பரத்தை வாங்கும் 'ராஜதந்திரமா'அல்லது புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பிலான பல்வேறு நிகழ்ச்சிகளில் தீக்கதிரின் ஆசிரியர் குமரேசன் கலந்து கொண்டு தனது அரிய கருத்துக்களை எடுத்து வைப்பதற்கு அளிக்கப்படும் வாய்ப்பிற்கான 'கைம்மாறா' என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)


குறிப்பாகச் சொல்லப் போனால் காலையில் தினகரன் எழுதிய தலையங்கத்திற்கு ஏற்ற தொனியில் மதியம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இது உள்ளபடியே தினகரனும் சன் டி.வி.யும் மகிழ வேண்டிய நிகழ்வு.

இதே போன்ற நிகழ்வு ஜுனியர் விகடன்,நக்கீரன்,ரிப்போர்ட்டர் போன்ற‌ புளுகித் திரியும் இதழ்கள் கையில் கிடைத்திருந்தால் நாங்கள் சொன்ன படி தான் உச்சநீதிமன்ற‌ம் தீர்ப்பளித்துள்ளது.நீதியரசர்களுக்கு நன்றி என்று தங்களைத் தாங்களே மெச்சிக் கொண்டு க‌வர் ஸ்டோரி வைத்திருப்பார்கள்.

ஆனால் நேற்றைய உச்சநீதிமன்ற‌த் தீர்ப்பை,தினகரன் ஒரு வரி கூட பிரசுரிக்கவில்லை.எழுதிய தலையங்கத்தின் மை ஈரம் கூடக் காயவில்லை.ஆனால் அதற்கு நேர்மையாய் நடக்க முயற்சிக்கவில்லை.தங்களுக்கு எதிரான செய்தி என்பதால் அப்படி ஒன்று நாட்டில் நடக்காதது போல இருக்கிற‌து.


கலாநிதி மாறன்


ந்த தினகரன் தான் புதிய தலைமுறை குழுமத்தின் 500 கோடி மதிப்புள்ள அரசு இடம் ஆக்கிரமித்த மோசடியை வெளியிடுகிறது.அதைக் கண்டு ஆத்திரமுற்ற புதிய தலைமுறையோ பதிலுக்கு மாறன்களுக்கு எதிரான செய்தியை  முக்கியத்துவம் கொடுத்து அதிக நேரம் ஒளிபரப்பி மகிழ்ச்சி அடைகிறது.

அனைத்து விஷயங்களிலும் மாறன்களுக்கு சற்றும் சளைத்தவரல்ல பச்சமுத்து.இதில் யாரை யார் முந்துவது என்னும் போட்டி தான் இங்கு நடக்கிற‌து.அதன் விளைவு தான் இருவரும் அடுத்தவர் குறித்த செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகிறார்கள்.தினமலருக்கும் மாறன்களுக்கும் இப்பொழுது அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டுள்ள‌தைப் போல இவர்கள் இருவருக்கும் ஏற்பட்டு விட்டால் அதன் பின் இப்பொழுது தப்பித் தவறி வெளிவரும் ஒன்றிரண்டு 'உண்மை'களுக்கும் சமாதி தான்.

ஆனால் இவர்கள் நடத்தும் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித் தாள்களில் நடத்தும் சில விவாதஙகளும் எழுதும் தலையங்கங்களும் உண்மையான மாற்று இதழ்களில் கூடக் காணக் கிடைக்காது.ஆனால் இவர்களின் 'வளர்ச்சி'க்குப் பின்னுள்ள உண்மைகள் முடை நாற்றம் எடுத்துக் கிடக்கின்றன.

ஆனால் பொது சமூகமோ இந்த 'யோக்கியர்கள்' உண்மையைச் சொல்வார்கள் என்று தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாளில் முன் எதிர்பார்த்துக் கிடக்கிற‌து.

ஆனால் மலத்தில் அரிசி பொறுக்குவதை விட கொடுமையானது இவர்களிடம் இருந்து நடுநிலையையும் உண்மையையும் எதிர்பார்ப்பது என்பது ஒரு நாள் தெரிய வரும்.


Monday 8 July 2013

வேந்தர் டிவி ஜூலை 15 இல் ஒளிபரப்பு தொடக்கம்...?

பச்சமுத்து ங்களுக்கு ஏற்றவாறு உண்மைச் செய்திகளை உடனுக்குடன் ஒளிபரப்பி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமத்தில் இருந்து வேந்தர் தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி வெளிவருவது தெரிந்த செய்தி தான்.

பலமுறை திட்டமிட்டுத் தள்ளிப் போன அதன் ஒளிபரப்பு வரும் ஜூலை 15 முதல் ஒளிபரப்பைத் துவங்குவதாகத் தெரிகிறது.இதுவும் உறுதியா என்று தெரியவில்லை.

இதனை நாம் சொல்லவில்லை.

புதிய தலைமுறை அதிபரும்,பல்லாயிரம் கோடிரூபாயைப் பதுக்கி வைத்துக் கொண்டு ஊழலையும் வறுமையையும் அறவே ஒழிக்கப் புறப்பட்டிருக்கும் பச்சமுத்துவின் தொண்டர்கள் தான் சொல்கின்றனர்.

கருப்புப் பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஒப்பிக்கிறாங்க..ஆனா எங்களுக்கும் டிவிக்கும் சம்பந்தம் இல்லைன்னோ, காலேஜூக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை,ஆகவே அரசே ஏற்று நடத்தலாம் என்றோ சொல்ல மாட்டிக்கிறாங்க...

எப்படி இருந்தாலும் வேந்தரின் ஆரம்பமே 'அமர்க்களமாக' இருக்குது.

உங்களிடம் இருந்து கலகக்குரலுக்கு நிறைய எதிர்பாக்கிறோம்.

புதிய வரவுக்கு 'வாழ்த்துக்கள்'.....