திரு.ஜென்ராம் நெறியாளுகை செய்து கொண்டிருந்தார்.(இன்றைய நிகழ்ச்சியை மட்டுமல்ல எப்பொழுதும் சிறப்பாக நெறியாளுகை செய்கின்றீர்கள் சார்..பாராட்டுக்கள்)
ஆனால் நமக்கு வேறு ஒரு கவலை வாட்டிக் கொண்டிருந்தது.
அரசியல் கிரிமினல் மயமாவது குறித்து எப்படி உச்சநீதிமன்றம் கவலை கொண்டிருந்ததோ,அதைப் போல இந்த நாட்டின் தொலைக்காட்சிகள்,செய்தித்தாள்கள்,வானொலிகள் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் கிரிமினல் பின்னணி உடையவர்களால் நடத்தப்படுவது குறித்தும் இத்துறை கிரிமினல்மயமாவது குறித்தும் தான் அந்தக் கவலை.
கருப்புப் பணம்,சுயநிதிக் கொள்ளை,அதிகார துஷ்பிரயோகம்,முறைகேடு,அரசு சொத்து அபகரிப்பு,இன்னும் என்னென்ன முறையற்றம் குறுக்கு வழி உண்டோ அவை அத்தனையையும் கடைப்பிடித்து பணம் ஈட்டியவர்கள் இத்துறைக்குள் புற்றீசலாய் இருப்பது குறித்த கவலை.
இன்று இத்துறையில் ஆக்டோபசாய் தொலைக்காட்சிகள்,வார இதழ்,விரைவில் செய்தித்தாள்,அரசியல் இதழ்,பதிப்பகம் என நுழைந்திருக்கும் எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் மீது நாம் மேற் சொன்ன அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உண்டு.
ஆனாலும் குறுக்கு வழியில் ஈட்டிய பல்லாயிரம் கோடிகளைக் காப்பாற்றுவதற்கும்,அதன் மீதான நாற்றத்தை மறைப்பதற்கும் பொது வெளியில் ஊடகம் மற்றும் அரசியல் என்று அந்த நிறுவனம் திட்டமிட்டுக் களமிறங்கியிருக்கிறது.
எப்பொழுதும் எவனை,எப்படி மொட்டை அடிப்பதுன்னு சிந்திச்சுக்கிட்டே இருப்பீங்களா சார்...? |
அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஊடகங்களில் ஒன்றான புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தான், அரசியல் கிரிமினல் மயமாவது குறித்த கவலை காலை நேரத்தில்.
கடந்த இரண்டு நாட்களாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக் குழுமத்தின் முதன்மை நிறுவனமான எஸ்.ஆர்.எம்.குழுமம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள் அரசு நிலத்தை அபகரித்த செய்திகள் அதிகார மட்டங்களிலும் ஊடகங்களிலும் நாற்றமடித்துக் கொண்டிருக்கின்றன.(எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கு எதிரான செய்தியை தினகரன் தவிர்த்து யாரும் வெளியிடவில்லை.அனைத்து முதலாளிகளுக்குள்ளும் அப்படி ஒரு ஒற்றுமை.)
10-07-2013 தேதியிட்ட தினகரன் நாளிதழ் |
11-07-2013 தேதியிட்ட தினகரன் நாளிதழ் |
இந்த நிலத்தின் மதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல.500 கோடி ரூபாய் சந்தை மதிப்பு உள்ளது.இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் பச்சமுத்து போன்றவர்களுக்கு சகஜம்.தங்களது இடத்திற்கு அருகில் எவர் இடம் இருந்தாலும் குறிப்பாக அரசு இடம் இருந்தால் அதனைத் தங்கள் இடமாக கருதி அதனை வளைப்பது ரத்தத்தில் ஊறிய ஒன்று.
தனியார் இடத்தை ஆக்ரமித்தால்,வலுவானவன் என்றால் அவர்களுடன் சமரசம் செய்வதும்,எளியவன் என்றால் அவர்களைப் பணிய வைப்பதும்,அரசுக்குச் சொந்தமான இடம் என்றால் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தும் விதிகளைத் தளர்த்தியும் பிரச்சனையை முடித்து விடுவர்.இது போன்று காரியம் முடியாத நேரங்களில் தான் பிரச்சனை அம்பலத்திற்கு வருகிறது.
இப்பொழுது எதுவும் ஆகாமல் பிரச்சனை அம்பலத்திற்கு வந்துள்ளது.
நமக்கு இப்பொழுது இருக்கும் இன்னொரு கவலை என்னவென்றால் புதிய தலைமுறை கட்டிடமும் அது அமைந்திருக்கும் இடமுமாவது முறைப்படி வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதா.?இல்லை அதிலும் வில்லங்கம் இருக்கிறதா..?
நாட்டில் நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் செய்தி போடும் புதிய தலைமுறை முதலாளி மீதான 500 கோடி ரூபாய் மோசடிக் குற்றச்சாட்டுக்கு செய்தி போடவில்லை.
அவ்வளவு ஏன் இது போன்ற மோசடிகள் வெளிவரும் பொழுது சம்பந்தப்பட்டவர்கள்,ஒப்புக்குச் சப்பாக எங்களுக்கும் முறைகேட்டிற்கும் தொடர்பு இல்லை என்று ஒரு விளக்கெண்ணெய் விளக்கம் தெரிவிப்பார்களே அதைக் கூடத் தெரிவிக்கவில்லை.நம்மிடம் மிகப்பெரிய ஊடக பலம் இருக்கிரது.நம்மை யார் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணம்.
அதைப் போல பு.த.தொலைக்காட்சி பார்ப்பவர்கள் இது குறித்தெல்லாம் சிந்திக்க மாட்டார்கள் என்று அவர்களின் விஷய ஞானம் மீது அவ்வளவு தடித்த நம்பிக்கை....!
ஆனால் அது குறித்த சிறு சலனத்தைக் கூட காட்டாமல் ஊரில் உள்ளவனுக்கு எல்லாம் 24 மணி நேரமும் வீட்டு படுக்கையறை வரை வந்து உபதேசம் செய்து கொண்டிருக்கிறது அதன் ஊடகங்கள்.
என்னத்தச் சொல்ல..
நீ நடத்து பச்சமுத்து .....!
***
புதிய தலைமுறையின் யோக்கியதை இதுவென்றால் புதிய தலைமுறை குழுமம் ஆக்ரமித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் குறித்த செய்தியை அதிக 'அக்கறை'யுடன் பெரு மகிழ்ச்சியுடன் வெளியிட்ட மாறன்களின் சன் குழும நெட்வொர்க்கின் அயோக்கியத்தனத்தைப் (லேட்டஸ்ட்)பார்ப்போம்.
தினகரன் நாளிதழின் நேற்றைய (10-07-2013) தலையங்கம் இது.
நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்பட தவறினால் என்ன ஆகும்? நீதிமன்றத்தை அவமதித்ததாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனை விதிக்கப்படும். இது நீதிமன்ற நடைமுறை. நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என பொதுமக்கள் மனதில் நம்பிக்கை நீடிக்க வேண்டுமானால், நீதிமன்றங்களின் உத்தரவுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் அல்லது நிறைவேற்ற வேண்டும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்த நடைமுறை நீடித்து வருகிறது. அதாவது, செல்வாக்கு மற்றும் பின்னணி இல்லாத தனிநபர்களை பொருத்தவரையில்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகாரிகள், அமைப்பு ரீதியான பின்புலம் கொண்டவர்கள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை என்ற கருத்து பரவுவதாக தோன்றுகிறது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று பார்த்தோம். ஒரு இளம்பெண் மீது ஆசிட் ஊற்றி முகத்தை சீர்குலைத்த சம்பவத்தை விசாரித்த நீதிபதிகள், அரிசி பருப்பு வாங்குவதுபோல கடையில் ஆசிட் சர்வசாதாரணமாக விற்கப்படுவதற்கு முடிவு கட்டுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
2005ம் ஆண்டில்.
தங்கள் உத்தரவுப்படியே ஆகட்டும் என நீதிமன்றத்தில் உறுதி அளித்த அரசு இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. வரும் 16ம் தேதி வரை கெடு விதித்துள்ள நீதிபதிகள், இந்த கெடுவுக்குள் உரிய நடவடிக்கை களை எடுக்காவிட்டால் நீதிமன்றமே தலையிட்டு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கும் என கடுமையாக எச்சரித்துள்ளனர்.
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசும், முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசும், தமிழகம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை எத்தனை முறை மதித்து நிறைவேற்றியுள்ளன என்பதை எண்ணிப் பார்த்து சொல்ல தேவையில்லை.
பல வழக்குகளில் தலைமைச் செயலாளரை வரச்சொல், டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் ஆஜராக வேண்டும், உள்துறை செயலாளர் என்ன செய்கிறார் என்றெல்லாம் தார்மீக கோபத்துடன் நீதிமன்றம் வினாக்களை எழுப்பி கண்டிக்கும்போது, சட்டத்தை மதித்து நடக்கும் சாமானிய மக்கள் உடல் சிலிர்த்து மனம் உருகி நீதிதேவதையின் சிலை நிற்கும் திசை நோக்கி கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்.
அதன் பிறகு என்ன நடக்கிறது? நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கிறது. வேறெதுவும் நடப்பதில்லை. பத்தாண்டுக்கு முன்பு 500க்குள் இருந்த அவமதிப்பு வழக்குகள் இன்று 2,500 ஆக உயர்ந்துள்ளன. அரசாங்கமே நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்பதை பார்க்கும்போது அமைப்பு ரீதியாக வலுவுடன் நடமாடுபவர்களுக்கு அசாத்திய தைரியம் வந்து விடுகிறது. காவல் துறையின் தடையுத்தரவு ஆனாலும் சரி, நீதிமன்ற தடையாணை என்றாலும் சரி, எதற்கும் நாங்கள் கட்டுப்பட முடியாது என்று ஜனநாயகத்துக்கு புது பரிமாணம் சேர்க்க முனைகின்றனர். ‘தடையை மீறி ஆர்ப்பாட்டம்’ என்பதை பகிரங்கமாக அறிவித்துவிட்டே செய்கின்றனர்.
என்.எல்.சி தொழிற்சங்கங்கள் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி வேலை நிறுத்தத்துக்கு தடையை நீக்கக்கோரின. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் சங்க தலைவர்கள் பொருட்படுத்தாமல் தங்கள் ‘ஜனநாயக உரிமையை’ நிலைநாட்டுகின்றனர். மத அமைப்புகளும் ஜாதி அமைப்புகளும் அநேகமாக இந்த வழியைத்தான் பின்பற்றுகின்றன. சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுவது ஆண்மையின் அடையாளம் என பல இளைஞர்கள் நம்புவதை போல, சமூகத்தில் வீரத்தின் வெளிப்பாடாக தங்கள் சட்ட மீறலை சித்தரிக்கும் கட்டாயத்தில் பல தலைவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன; அவ்வாறு செய்வது புதிய பிரச்னைகளை தோற்றுவிக்கும்; போதுமான ஊழியர்கள் அல்லது எந்திரங்கள் இல்லை என்று ஏதோ ஒரு சாக்கு சொல்லி உள்ளாட்சி அமைப்புகளும் அரசு துறைகளும் கடமையை தட்டிக் கழிக்கின்றன. அதன் மூலம் சட்டத்தின் ஆட்சிக்கு வேட்டு வைக்கின்றன.
குப்பைகளை அகற்ற வேண்டும், குடிநீர் ஒழுங்காக வினியோகிக்க வேண்டும், பள்ளிகள் நியாயமான கட்டணம் வசூலிக்க வேண்டும், ஆட்டோவில் மீட்டர் போட வேண்டும், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும், விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை போன்ற இயல்பான விஷயங்களில்கூட பொதுமக்களுக்கு சாதகமாக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் நிறைவேற்றப்படுவதில்லை. இதையெல்லாம் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
பொதுமக்களின் புலம்பலுக்கெல்லாம் காது கொடுத்துக் கொண்டிருந்தால் வேலையை எப்போது பார்ப்பது என்று அதிகாரிகள் அஞ்சுவதாக தெரிகிறது. அதுதானே அவர்களின் வேலை என்று நீதிமன்றங்களே நினைவுபடுத்தியும் புரிந்துகொள்ளவில்லை என்றால் என்னதான் தீர்வு? நீதிமன்றமே இந்திய மக்களின் இறுதி நம்பிக்கை. அதன் அடித்தளம் பலவீனமாக்கப்பட்டால் இந்த மண்ணில் ஒரு சமூக சுனாமி சுழன்றடிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது.
ஒரு வணிக நோக்கமுடைய செய்தித்தாளில் மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் அதன் ஆசிரியரால் எழுதப்பட்ட தலையங்கம்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=55006
நீதிமன்றங்களின் உத்தரவுகளை அதிகாரத்தில் இருப்பவர்கள்,அதிகாரிகள்,செல்வாக்கு உள்ளவர்கள் யாரும் பின்பற்றுவதில்லை என்றும் அதனைத் தட்டிக் கழிக்க முயற்சிக்கிறார்கள் என்றும்,நீதிமன்றங்களே இறுதி நம்பிக்கை,அதைச் சிதைக்க அனுமதிக்க முடியாது என்றும் ஆதங்கத்துடன் எழுதப்பட்டுள்ளது.
ஆனால் தினகரனின் தலையங்கத்தில் கூறியுள்ளது போல அதிகாரத்தில் இருப்பவர்கள்,விசாரணை அதிகாரிகளின் காலதாமதத்தை உச்ச நீதிமன்றமே சுட்டிக் காட்டி நேற்று (10-07-2013) அதனைக் கண்டனம் செய்துள்ளது.
இது நேற்றும் இன்றும் பெரும்பாலான ஊடகங்களில் அதிக கவனம் ஈர்க்கும் செய்தியாக வந்துள்ளது.
(தமிழ்நாட்டில் தினமலர் மட்டும் இச்செய்தியை வெளியிடவில்லை.பொதுவாக மாறன் சகோதரர்களுக்கு எதிரான செய்தியை அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து மகிழும் தினமலர்,சன் நியூஸ் செய்தி ஆசிரியர் ராஜா மீதான பாலியல் புகார் மற்றும் கைது,நேற்றைய தீர்ப்பு போன்ற இரண்டையும் (திருச்சி தினமலர் தவிர)பிரசுரிக்கவில்லை.களவாணிகளுக்குள் கூட்டு ஏற்பட்டு விட்டது என நினைக்கிறோம்.
அதைப் போல தயாநிதி மாறனுக்கு எதிரான செய்தியை முதல் பக்கத்திலும் ,சிங்கூர் நிலத்தை விவசாயிகளிடம் திருமப ஒப்படைக்க வேண்டும் என்னும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை 6 ஆம் பக்கத்திலும் வெளியிட்ட தீக்கதிர் அரசின் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்த எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் குறித்த செய்தியை எந்தப் பக்கத்திலும் வெளியிடவில்லை.இப்பொழுது மட்டுமல்ல சமீப வருடங்களில் அப்படித்தான்.
இது தற்செயல் நிகழ்வா..?அல்லது எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் லட்சங்கள் பெறுமானமுள்ள விளம்பரத்தை வாங்கும் 'ராஜதந்திரமா'அல்லது புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பிலான பல்வேறு நிகழ்ச்சிகளில் தீக்கதிரின் ஆசிரியர் குமரேசன் கலந்து கொண்டு தனது அரிய கருத்துக்களை எடுத்து வைப்பதற்கு அளிக்கப்படும் வாய்ப்பிற்கான 'கைம்மாறா' என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)
குறிப்பாகச் சொல்லப் போனால் காலையில் தினகரன் எழுதிய தலையங்கத்திற்கு ஏற்ற தொனியில் மதியம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இது உள்ளபடியே தினகரனும் சன் டி.வி.யும் மகிழ வேண்டிய நிகழ்வு.
இதே போன்ற நிகழ்வு ஜுனியர் விகடன்,நக்கீரன்,ரிப்போர்ட்டர் போன்ற புளுகித் திரியும் இதழ்கள் கையில் கிடைத்திருந்தால் நாங்கள் சொன்ன படி தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நீதியரசர்களுக்கு நன்றி என்று தங்களைத் தாங்களே மெச்சிக் கொண்டு கவர் ஸ்டோரி வைத்திருப்பார்கள்.
ஆனால் நேற்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பை,தினகரன் ஒரு வரி கூட பிரசுரிக்கவில்லை.எழுதிய தலையங்கத்தின் மை ஈரம் கூடக் காயவில்லை.ஆனால் அதற்கு நேர்மையாய் நடக்க முயற்சிக்கவில்லை.தங்களுக்கு எதிரான செய்தி என்பதால் அப்படி ஒன்று நாட்டில் நடக்காதது போல இருக்கிறது.
கலாநிதி மாறன் |
இந்த தினகரன் தான் புதிய தலைமுறை குழுமத்தின் 500 கோடி மதிப்புள்ள அரசு இடம் ஆக்கிரமித்த மோசடியை வெளியிடுகிறது.அதைக் கண்டு ஆத்திரமுற்ற புதிய தலைமுறையோ பதிலுக்கு மாறன்களுக்கு எதிரான செய்தியை முக்கியத்துவம் கொடுத்து அதிக நேரம் ஒளிபரப்பி மகிழ்ச்சி அடைகிறது.
அனைத்து விஷயங்களிலும் மாறன்களுக்கு சற்றும் சளைத்தவரல்ல பச்சமுத்து.இதில் யாரை யார் முந்துவது என்னும் போட்டி தான் இங்கு நடக்கிறது.அதன் விளைவு தான் இருவரும் அடுத்தவர் குறித்த செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகிறார்கள்.தினமலருக்கும் மாறன்களுக்கும் இப்பொழுது அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டுள்ளதைப் போல இவர்கள் இருவருக்கும் ஏற்பட்டு விட்டால் அதன் பின் இப்பொழுது தப்பித் தவறி வெளிவரும் ஒன்றிரண்டு 'உண்மை'களுக்கும் சமாதி தான்.
ஆனால் இவர்கள் நடத்தும் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித் தாள்களில் நடத்தும் சில விவாதஙகளும் எழுதும் தலையங்கங்களும் உண்மையான மாற்று இதழ்களில் கூடக் காணக் கிடைக்காது.ஆனால் இவர்களின் 'வளர்ச்சி'க்குப் பின்னுள்ள உண்மைகள் முடை நாற்றம் எடுத்துக் கிடக்கின்றன.
ஆனால் பொது சமூகமோ இந்த 'யோக்கியர்கள்' உண்மையைச் சொல்வார்கள் என்று தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாளில் முன் எதிர்பார்த்துக் கிடக்கிறது.
ஆனால் மலத்தில் அரிசி பொறுக்குவதை விட கொடுமையானது இவர்களிடம் இருந்து நடுநிலையையும் உண்மையையும் எதிர்பார்ப்பது என்பது ஒரு நாள் தெரிய வரும்.
5 comments:
அனைவரும் படிக்க வேண்டிய நல்ல கட்டுரை.
நல்ல கட்டுரை....
நல்ல பதிவு.
http://www.niticentral.com/2013/07/12/indian-tv-media-sinking-like-titanic-103106.html - தமிழில் எத்தனை ஊடகங்களில் சம்பளம் பாக்கி? ஊடக முதலாளிகள் போட்டியில் அறச்சீற்றத்துடன் பேசும் ஊடகவாதிக்கு என்ன கிடைக்குது?
ha ha ha
பொறாமையில் விளைந்த எழுத்துகள்.பச்சமுத்து என்ற தனிமனிதரின் வளர்ச்சிகண்டு சங்கடப்பட்டு எழுதப்பட்ட எழுத்துக்கள்.
கல்வி வியாபாரம் என்னும்போது ஏன் அங்கு மட்டும் கூட்டம் கூட்டமாக மக்கள் குமிகிறார்கள்.கட்சி ஆரம்பிக்க ராமதாசுக்கு என்ன உரிமை உண்டோ,விசயகாந்துக்கு என்ன உரிமை உண்டோ அதே போல் எல்லோருக்கும் உளது.உங்களுக்கும் கூட உண்டு நண்பரே.
ஆனால் புதிய தலைமுறை
தொலைகாட்சி சரியில்லை.நடுநிலை வேஷம் போடும் வேடதாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்கள்.உண்மைதான்.அங்கு நடப்பவை அனைத்தும் சமதர்ம கொள்கைக்கு விரோதமானவை.
Post a Comment