Sunday 18 October 2015

ஒரு ஊடகம் சோரம் போகிறது?





த்திரிகையாளர் கோசல்ராம் முதலாளியாக மாறி ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. கோசல்ராம் நமது கலகக்குரல் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் தான்.

ஒவ்வொரு கண‌மும் முகநூல்,டிவிட்டர்,வாட்ஸ் அப் என தினசரி இப்பொழுது செய்திகள் வந்து குவியும் காலம் .  ஜூனியர் விகடன், நக்கீரன், தமிழக அரசியல், குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற வாரமிருமுறை வெளிவரும் 'துப்பறியும்' இதழ்களே எத்தனையோ செய்திகளைத் தவற விடுகின்ற அளவுக்குச் செய்திகள் இருக்கின்றன. அதுவும் இப்பொழுது தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் தமிழக அரசியல் களம் வேறு சூடு பிடித்துள்ளது.  பத்திரிகையாளர்கள் எல்லாம் படு பிசியாக இருக்கின்றனர்.

வார இதழ்களுக்கோ பல நெருக்கடி இருக்கும். தாமதமான செய்தி என்று எதையும் தவற‌ விட்டு விட முடியாது, புத்தம் புது விஷயங்களை அப்டேட் செய்து  தன்னை வேறுபடுத்திக் காட்டி வாரமிருமுறை இதழ்களுடனும் போட்டி போட வேண்டும்.

அதிலும் 'நம்ம அடையாளமோ' புதிதாக ஆரம்பிக்கப்ப‌ட்ட பத்திரிகை. இன்னும் சரியான விநியோக கட்டமைப்பு இல்லை. இவர்களின் போட்டியாளர்களோ மிகப்பெரிய ஜாம்பவான்கள். ஆகவே தன்னை விற்பனையிலும், பொருளாதார ரீதியிலும் நிலை நிறுத்த ரொம்ப மெனக்கெட வேண்டும். 'நம்ம அடையாளமா'னது ஆரம்பத்தில் ஓரிரு இதழ் சில விஷயங்கள் பாராட்டும் படியாகத்தான் இருந்தது. ஆனால் தரமும் விற்பனையும் எக்கேடு கெட்டால் என்ன கல்லாவை மட்டும் முடிந்த மட்டும் நிரப்பினால் போதும் என  திருவிழாக் கடைக்கார முதலாளி போல் அடையாளம் முதலாளியும் முடிவெடுத்தது போல் தெரிகிறது. (சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணக் கூடாதா ? )

நாம்  சன் குழுமத்தின் தமிழ் முரசு  'துட்டுக்குச் செய்தி' வெளியிட்டது நினைவிருக்கலாம். அதைப்போல 'நம்ம அடையாளமும்' களமிறங்கி விட்டதோ என எண்ணுகிறோம்.

சமீபத்திய அதன் செயல்பாட்டை வைத்து சிறிய சந்தேகத்தை மட்டும் உங்கள் முன் வைக்கிறோம். நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

டந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி  'நம்ம அடையாளம்' தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் குறித்து கவர் ஸ்டோரி வெளியிட்ட‌து.  அதன் பின் (செப்டம்பர் 10 ஆம் தேதியிட்ட‌ இதழ் தவிர ) வெளியான அனைத்து இதழ்களும் 6 இதழ்கள் அக்டோபர் 18 அன்று நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்க‌த் தேர்தல் தான் கவர் ஸ்டோரி.








நாட்டில் கோகுல்ராஜ் கொலை வழக்கு, யுவராஜ், அன்புமணி வழக்கு, விஷ்ணுபிரியா மரணம், மாட்டுக்கறி, அட்டாக் பாண்டி, அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்ற‌ம், நடிகர் விஜயின் புலி பட பஞ்சாயத்து என எவ்வளவோ செய்திகள் குவிந்திருக்கின்றன. அவைகளுக்கு கவர் ஸ்டோரியில் இடமில்லையா?

இவர்களது சக போட்டியாளர்கள் எத்தனையோ செய்திகளை விதம்விதமாய் அளித்தும், அவர்களாக‌ உருவாக்கியும் ,கண்டுபிடித்தும்  தங்கள் சந்தையைத் தக்க வைக்கிறார்கள், புதிய வாசகர்களை வாங்கத் தூண்டுகிறார்கள். தென்னிந்திய‌ நடிகர் சஙக்த் தேர்தலுக்கு மற்ற இதழ்கள் ஓரிரு பக்கங்களையும், சில நேரங்களில் செகண்ட் கவர் ஸ்டோரி வைத்தும் நிரப்புவதோடு சரி. இவர்களோ ஒரே செய்தியை ஆறு இதழ்களாக கவர் ஸ்டோரியாக வைத்து விதம் விதமாக ஓட்டுகிறார்கள். நாம் மேற்குறிப்பிட்ட செய்திகளை உள்ளேயே போதிய முக்கியத்துவம் இல்லாமல் நிரப்புகிறார்கள்.

நமது கேள்விகள்

இப்படித் தொடர்ச்சியாக 6 இதழ்கள் கவர் ஸ்டோரி வெளியிடும் அவசியம் என்ன இருக்கிறது.? எல்லாக் கவர் ஸ்டோரிகளிலும் நடிகர் விஷால் அணிக்கு ஆதரவு நிலைப்பாடு.

நடிகர் விஷால் அணியினர் வைக்கும் குற்றச்சாட்டுகள் சரியானது என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் 6 கவர் ஸ்டோரிகள் வைத்து முதன்மைப்படுத்தும் அளவுக்கு 'நம்ம அடையாள'த்துக்கு இதில் என்ன சிறப்பு அக்கறை ?

அதிலும் சில இதழ்களில் வலிந்து ஆதரவு நிலைப்பாட்டுச் செய்திகள்.

ஒரு இதழின் மொத்த பக்கங்கள் விளம்பரங்கள் போக 37. ஆனால் ஒரு இதழில் விஷால் அணி ஆதரவுச் செய்திகள் அதில் 16 பக்கங்கள். அதற்கு என்ன தேவை.?

நடிகர் சங்கத் தேர்தல் குறித்த செய்திப் பக்கங்களின் வடிவமைப்பை பார்த்தால் அதிக சிரத்தை எடுத்துள்ள‌தையும் யாரும் அந்த பக்கங்களைத் தவறவிடக்கூடாது என்னும் நோக்கத்தில் வடிவமைத்துள்ளதையும் அறிய முடியும்.

நம்ம அடையாளம் ஆரம்பித்து இது வரை மொத்தம் 22 இதழ்கள் வந்துள்ளது. அதில் 6 இதழ்கள் நடிகர் சஙக்த் தேர்தல் தொடர்பானவை. மொத்த இதழ்களில் 3 இல் ஒரு பகுதி இதழ்கள் நடிகர் சஙக்ப் பஞ்சாயத்து.

அப்படி என்னய்யா இருக்கிறது அதில் ? நடிகர் சங்க இடம் கைமாறியதில் சில கோடிகள் முறைகேடாய் பரிமாறியுள்ளது என்று விஷால் அணியினர் சொல்வது போல இந்த ஸ்டோரிகளின் பின்னே 'நம்ம அடையாள'த்துக்கு எதும் கைமாறியுள்ளதா என்ன‌?

பிற விஷயங்களைப் புறக்கணித்து இதை மட்டும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு வணிகரீதியிலும் இதற்கு அளப்ப‌ரிய வரவேற்பு இல்லை என்பதை உணர முடியும். ஏனென்றால் வரவேற்பு இருந்தால் ஜூ.வி, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர்  போன்றவை இந்நேரம் விட்டு வைத்திருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

(ஓட்டுப்பதிவு நாளான இன்று முழுவதும் நடிகர், நடிகைகளை திரையில் காட்டி  அனைத்துக் காட்சி ஊடகங்களும் ரேட்டிங்குக்காக‌ செய்யும் கொடுமையையும், தேர்தல் நாளுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டுச் செய்ததையும் ஒப்பிட முடியாது.ஆறு வாரங்கள் அனைத்து காட்சி ஊடகங்களும் தலைப்புச் செய்தி வெளியிட்டால் எப்படி இருந்திருக்கும் யோசித்துப் பாருங்கள்.)

இப்படி நீட்டித்துக்கொண்டே சொல்லலாம்.



ம்ம அடையாளம் இதழுக்கு முதன்மை ஆசிரியராய் இருப்பவர் திரு.கதிர்வேல். நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் தொடங்கி நம்முர் 'தினத்த‌ந்தி'யின் சாணக்கியன் சொல் வரைக்கும் படித்து அதனை விமர்சிப்ப‌வர், அலசி ஆராய்பவர். The Hindu எடிட்டோரியல் குழுவில் நடக்கும் அரசியல் வரைக்கும் கூர்ந்து கவனிப்பவர்.

அவர் இந்த விஷயத்தில்  நம்ம அடையாளத்தை எவ்வாறு நியாயப்படுத்துகிறார்?  அரசியல் வார இதழ் வரலாற்றில்,கடந்த 35 ஆண்டு காலங்களில் வேறு எதும் இதழ்கள் இப்படி வெளியிட்டிருக்கின்றனவா? அதன் பின்னணி என்ன என்பது குறித்து அவர் அறியத் தந்தால் ஆவலாய் இருக்கிறோம்.  நமக்குத் தெரிந்து தமிழ்நாட்டின் பிற வார இதழ்களோ, வாரமிருமுறை இதழ்களோ தொடர்ச்சியாய் 6 கவர் ஸ்டோரிகள் வெளியிட்டதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில்  நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கு இணையான முக்கியத்துவம் இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் திரு.கதிர்வேல் அவர்கள் வலியுறுத்தும் ஊடக அறமா..?

எது எப்படி இருந்தாலும் இந்த கவர் ஸ்டோரிகளுக்கு பின் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

சரத்குமாரும் கோசல்ராமும் சமூக ரீதியாக‌ ஒரே தரப்பினராய் இருந்ததால் நீண்ட காலமாய் நல்ல நெருக்கம் உண்டு. குமுதத்தில் குழும எடிட்டராய் கோலோச்சும் பொழுது கோசல்ராம் செய்த சில காரியங்களுக்கு பிரதியுபகாரமாய்ச் செய்வதாய்ச் சொன்னதை சரத்குமார் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதிலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் தூத்துக்குடி தொகுதி சரத்துக்கு கிடைக்கும் என வலிந்து தொடர்ந்து எழுதியவர் கோசல். இப்படிச் செய்த பல‌ உதவிகளுக்கு பெரிய அளவிலான சனமானம் இல்லையாம் அதனால் இந்தப்பழி வாங்கல் என்று சொல்லப்படுகிறது.

இன்னொரு தரப்போ, இதனை அடியோடு மறுத்து வேறு விஷயம் சொல்கிறது.

நடிகர் சங்க‌த் தேர்தல் தொடர்பாக ஆதரவுச் செய்தி வெளியிட சரத்துடன் 'டீல்' பேசியதாகவும், அவரோ குமுதத்தில் கோசல் இருந்த பொழுது கொடுத்த வெயிட்டான ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லையென்றும், 'நம்ம அடையாளம்' மிகச் சிறிய அளவிலான பத்திரிகை என்பதாலும், தந்தி, சன் குழும மீடியாக்கள் தன் பக்கம் இருப்பதால் ரொம்பவும் சாதாரண‌மாக பேசி வெறுங்கையுடன் அனுப்பி விட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால் கடுப்புடன்  எதிரணியான விஷால் கோஷ்டியிடம்  'டீல்' பேசி விஷாலுக்கு ஆதரவு என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவருவதாகவும் சொல்கிறார்கள்.

எது உண்மை என்று தெரியவில்லை. ஆதாரத்துடன் உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனால் ஊடகத்தின் நடுநிலைமை புரண்டு அறம் தெருவில் நிற்கிறது என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆதாயம் இல்லாமல் தெருவில் புரள கோசல் அண்ணாச்சி அடி முட்டாளா என்ன?

Friday 9 October 2015

'ஊடக அறம்' பேசும் யோக்ய சிகாமணிகளே...!



ஓமலூர் இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் என்பவர் காவல்துறையின் கைகளில் பிடிபடாமல் கடந்த நூறு நாட்களாகத் தலைமறைவாக இருக்கிறார். அவரைப்பிடிக்க காவல்துறை 3 தனிப்படைகளை அமைத்துள்ளது. இந்நிலையில் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சிக்கு குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் நேர்காணல் அளித்திருக்கிறார். அதில் முழுக்க முழுக்க தன் தரப்பு வாதத்தை அளித்திருக்கிறார்.

ஒரு ஊடகம் குற்றம் சாட்டப்பட்டவரின்  நேர்காணலை எடுத்து வெளியிடுவதைத் தவறு என்று சொல்ல முடியாது.  ஆனால் அது அதற்குரிய பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறதா என்பது முக்கியம்.

குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் ஒப்பிக்கும்  கருத்தை அப்படியே வெளியிடுவது ஊடகத்தின் பணி அல்ல. கோகுல்ராஜ் மரணத்தில் புதைந்துள்ள பல்வேறு மர்மங்க‌ளை வினாக்களாகத் தொடுத்திருக்கலாம். ஆனால் அங்கு எதையும் கேள்வி கேட்காமல் யுவராஜ் சொன்ன செய்தியை அப்படியே வெளியிடுவது பணம் வாங்கிப் பணியாற்றும் பி.ஆர்.ஓ.க்களின் வேலை. இங்கு புதிய தலைமுறை செய்துள்ள அப்படிப்பட்ட பணியைத் தான். (நக்கீரன் கோபாலாவது ஒப்புக்காகவும், எதிராகவும் சந்தன வீரப்பனிடம் சில கேள்விகளாவது கேட்டார்.)

தேடப்பட்டு வரும் குற்றவாளி குறித்த தகவல் தெரிந்த குப்பனோ ,சுப்பனோ காவல்துறையிடம் தெரிவிக்க‌வில்லை என்றாலோ, மறைத்தாலோ அது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் சொல்கிறது. அவனிடம் இருந்து உண்மையை வரவழைக்க காவல்துறை சம்பந்தப்பட்ட நபரைத் தூக்கிச் சென்று என்னவிதமான சித்திரவதையையும் செய்து உண்மையை வரவழைக்கவும் தயங்காது. ஆனால் செய்தியாளர்கள் தங்களது தொழில் நிமித்தம் காரணமாக மேற்கண்டவற்றில் இருந்து விலக்கும் பாதுகாப்பும் பெறுகிறார்கள். பல உச்ச நீதிமன்றத்தீர்ப்புகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. அந்த நியதியின் படி இங்கும் புதிய தலைமுறை அப்படியான விலக்கு கோரலாம். ஆனால் மேற்கண்ட சம்பவத்தில் ஊடகத்துக்குரிய பொறுப்புடன் புதிய தலைமுறையும் அதன் நிருபரும் நடந்து கொள்ளவில்லை. யுவராஜின் சம்பளம் வாங்கும் பி.ஆர்.ஓ.க்கள் போல‌த் தான் செயல்பட்டுள்ளார்கள்.

ஆக இவர்களுக்கு எதற்கு விதிவிலக்கு?

(சட்டப்படி இவர்களுக்குப் பாதுகாப்பு இருந்தாலும்) இந்த நேர்காணலில் சம்பந்தப்பட்டவர்களை, புதிய தலைமுறையின் ஆசிரியர் குழுவினரைக் காவல்துறை விசாரித்து தேவையான உண்மைகளைப் பெறுவதே சரியாக இருக்கும் என்று தார்மீக ரீதியில் மாற்றுக்குரல் எழுப்பப் பட்டால் அதனை முழுக்கத் தவறென்று கூற முடியாது.

ந்த நேர்காணலினால் ஏற்பட்ட அசிங்கத்தை மறைக்க ஊடக அறம் குறித்த விவாதம் வேறு. படித்த மேதாவிகளாக நீங்கள் இருக்கலாம். ஊடக அறம் போன்ற மேட்டிமைத்தனங்கள் கோகுல்ராஜ் பெற்றோருக்கு புரியுமா? விஷ்ணுபிரியா பெற்றோருக்கு புரியாமா?



அதிலும் நெறியாள்கையின் பொழுது கடந்த தேர்தலில் நடுநிலையாக நடந்து கொண்டதாக தங்களுக்குத் தாங்களே நற்சான்றிதழ் வேறு. (52.06 நிமிடம் ) இவர்கள் வாங்கிய ஒரு சீட்டுக்கும், அடையப் போகும் அனுகூலத்துக்கும் கூலிக்கு மாரடித்த கதையை நாம் தேர்தலின் பொழுதே அம்பலப்படுத்தினோம்.கூச்சமில்லாமல் அதை வேறு சொல்லிக் கொள்கிறார்கள்.வெட்கம் கெட்டவர்கள். இந்த லட்சணத்தில் ஊடக அறம் குறித்த விவாதத்தை "அவுக பாராட்டுறாக, இவுக பாராட்டுறாக" என சுய தம்பட்டம் சகிக்கவில்லை.

நாம் சொல்வது இது தான்.

கவர் வாங்கிச் செய்தி போடுபவனுக்கும், தங்கள் தொலைக்காட்சியை முன்னணியில் நிறுத்திக்கொள்ள எவ்வித அறமும் இன்றி பொறுப்பின்றிச் செய்தி வெளியிடும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

அது தனி மனித தவறு. இது ஒட்டுமொத்த நிறுவனமும் விலை போன நிகழ்வு. தலை குனியுங்கள், அதை விடுத்து இதைப் பெருமை பேசித் திரியாதீர்கள்.

Sunday 30 August 2015

தமிழ்நாட்டில் கால் பதிக்கும் அமெரிக்க அரசின் ஊடகம்..!





சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே உள்ள ஆவின் பாலகம்.
ஊடகவியாலாளர்கள் பெஞ்சமின், ரவிக்குமார், பார்த்தசாரதி சந்திப்பு.

”ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ தொடங்கும் நாளிதழ் வேலை ரொம்ப மும்முரமா நடக்குதாமே ?” என்றபடியே பெஞ்சமின் உரையாடலைத் தொடங்கினார்.

”ஆமாம். தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகள் சங்கத் தலைவர், புருஷோத்தமனுக்குச் சொந்தமான, எழும்பூரில் அமைந்துள்ள (EMPEE TOWERS) எம்பி டவரில் மேல் மாடியில் தான் அலுவலகம் வைத்திருக்கிறார்கள். 


'தின செய்தி’  அப்படின்னு பேரு. செப்டம்பர் 15 இல் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று வெளியிடுவதாகத் திட்டம். எத்தனையோ ஜாம்பவான்கள் முயற்சித்து கைவிட்டது தான் நாளிதழ் நடத்துவது. வைகோ இப்பொழுது புதிதாய்த் தொடங்குகிறார். வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. இமையம் தொலைக்காட்சி உரிமையாளர் தான் இதன் வெளியீட்டாளராம். இமையம் பப்ளிகேஷன் வெளியீடாக‌ வருதாம். 


டி.எம்.நாயர்,திருமாவேலன்,தின செய்தி,ராஜா திருவேங்கடம்,



ஆனால் உண்மையான எஜமானர் யாரென்பது வைகோவுக்குத் தான் தெரியும்.” ரவிக்குமார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டே போனார்.

”வைகோவுக்கு எதுக்கு ’தினத்தந்தி’ அதிக முக்கியத்துவம் தருதுன்னே தெரியலையே? ஒரே ஒரு மதுபானக் கடையை எதிர்த்து வைகோ நடத்திய போராட்டத்தை அதிக முக்கியத்துவம் கொடுத்து  தலைப்புச் செய்தி அளித்து வெளியிடுது. வைகோ வெளியிடும் எந்த அறிக்கை ஆனாலும் அதே வடிவத்தில் சங்கொலி போல் வெளியிடுகிறது. அதே நேரம் சிகரெட்டுக்கு ஆதரவாக வைகோ கொந்தளித்த கருத்தை வெளியிட மறுக்கிறது.  எல்லாச் செய்தியையும் வெளியிடுவது தானே ஊடகத்துக்கு அழகு. இவர்கள் இடையே என்ன ’நெருக்கம்’ என்று தெரியலை.” பார்த்தசாரதி பொருமினார்.

empee distilleries

பெஞ்சமின் ”இதில் என்ன பெரிய சூத்திரம். பத்திரிகை முதலாளிகளின் குரலை ஒலிப்பதற்கும் அவர்களின் திரைமறைவு வேலைகளை முடிப்பதற்கும் பல அரசியல் வாதிகளை எப்பவும் தங்கள் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். அதில் ஒருவர் தான் வைகோ. 

ஒரு எடுத்துக்காட்டு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கைப்பிடியில் வைத்திருக்கும் ’இந்தியா சிமெண்ட்ஸ்’ நிறுவனத்துக்கும் ’தந்தி’ குழுமத்துக்கும் வணிக உறவு இருக்குது. அந்த அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பனின் மேட்ச் பிக்சிங்குக்கு எதிராக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டாலும் 'தந்தி குழுமம்' இருட்டடிப்புச் செய்யும். அதே நேரம், தடையை நீக்க வேண்டும் என்ற நோக்கில் முழுமூச்சில் செய்தி வெளியிடும்.

இப்பொழுதோ லலித் மோடி ’சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்பட்டார் என  அந்த அணியைக் காக்கும் நோக்கில் ’தந்தி டிவி’ சமீபத்தில் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. மறுநாள் வைகோ அந்த அணியின்மீதான தடையை நீக்க வலியுறுத்தி அறிக்கை கொடுக்குறார். இப்ப நாட்டில் இருக்குற பிரச்னைக்குநடுவில் எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா?

காலால் இட்ட கட்டளையை கையால் நிறைவேற்றும் அரசியல் தலைவரை ஊடக முதலாளிகளுக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? 

இந்த மாதிரி விசுவாசத்துக்குத் தான் தினமலரில் இருந்து பச்சமுத்து வரைக்கும் சாதி, இன பேதமற்று எல்லா பத்திரிகை முதலாளிகளுக்கும் வைகோவை பிடிக்கும். போன தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் 2% வாக்குகள் வாங்கினாலும் கருணாநிதிக்கு நிகராக எல்லா ஊடகங்களும் அவரை பிரதானப்படுத்துவது இதனால் தான். ”

ரவிக்குமார் டாபிக்கை மாற்றினார். ”வைகோ பற்றிப் பேசியதால் விகடன் ஞாபகம் வருது.



’ஜூனியர் விகடனில்’ பொறுப்பாசிரியராய் இருக்கும் ராஜா திருவேங்கடத்தைச் சுற்றி சர்ச்சைகள் வலம் வருதே?”

”ஆமாம். ஒரு பெண் ஊடகவியலாளர் அவர் மீது அளித்த புகாரின் பேரில் முதலில் தற்காலிக நீக்கம் செய்த நிறுவனம் இப்பொழுது நிரந்தரமாக நீக்கியிருக்கிறது.”

ம். உண்மையில் நடந்தது என்ன..?

தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் நாம் எப்பொழுதும் தலையிடுவதோ, ஆர்வம் காட்டுவதோ கிடையாது. அதைப் பற்றிப் பேசுறதுக்கு முன்னாடி பழைய விஷயம் சொல்றேன். இதே ராஜா திருவேங்கடம், எழுத்தாளர் தியாகு வாழ்க்கைப் பிரச்சனையில் ஒரு சார்பான நிலைப்பாடுஎடுத்து ஜூவியில் பதிவு செய்தார். நாம் சுட்டிக்காட்டிய பின்னும் வீம்புக்காகவேனும் அடுத்தடுத்து அதனை ஆர்வமாய் மேற்கொண்டார். அவரது தனிப்பட்ட விருப்பா? அல்லது யாரின் கட்டளையா என்பது நமக்குத் தெரியாது. இன்றோ அவரது வாழ்வில் அதே போல சிக்கல் முளைத்திருக்கிறது. அடுத்தவர் வாழ்க்கை முரண்களை ஒருதலைப்பட்சமாய் பதிவு செய்ய இனியாவது யோசிப்பார் எனவும் எதிர்பார்க்கிறோம். ” பார்த்தசாரதி

இதே விஷயத்தில், என் கருத்தைச் சொல்லி விடுகிறேன் என்ற பீடிகையுடன் பெஞ்சமின் ஆரம்பித்தார்.



”ராஜா திருவேங்கடம் திருமணமானவர் என்று நன்கு அறிந்திருந்தும், அவருடன் விருப்பப்பட்டுச் சுற்றி விட்டு, இப்பொழுது அவர் என்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார் என்று ஊரைக்கூட்டி புலம்புவது மிகத்தவறு. அடிப்படையிலேயே இது முறையற்ற உறவு. சட்டப்படியோ, தார்மீகப்படியோ இதனை ஏற்க முடியாது. தவறு இரண்டு பக்கமும் இருக்கிறது, இதில் கண்டிப்பாய் யாரையும் ஆதரிப்பது சரியானதல்ல.”

”உங்கள் கருத்து சரிதான். ஆனால் இந்த உண்மையை நாம் உரத்துப் பேசினால் பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு சிலரால் முணுமுணுக்கப்படும் என்பதையும் சொல்லி விடுகிறேன்.” என்று சொல்லியபடி ரவிக்குமார் முடித்து வைத்தார்.

”விகடன்காரங்க அக்கப்போரு இணையத்தில் தாங்கலையே..?”

”ஏன் என்னாச்சு?”




”ஆமாம். இதுக்கு முன்னாடி ஒவ்வொரு நடிகையின் படத்தைப்போட்டு மார்க் போடச் சொன்னாங்க. இப்ப மோசமான படங்களைப் போட்டு அதில் தரக்குறைவான கருத்துக்களை விருப்பத்துடன் அனுமதிக்கிறாங்க. உதிரித்தனமான லும்பன் வாசகர் வட்டாரத்தை மிகப்பெரிய அளவில் விருப்பப்பட்டு உருவாக்குறாங்க. தங்கள் நிறுவனப்புகழ் எல்லா இடத்திலும் கொடிகட்டணும் என எதிர்பார்க்கிறார்கள். எதிர் விமர்சனம் வருவது எதைப்பற்றியும் கவலைப்படுவது கிடையாது. இவர்கள் தான் விகடன், ஜூ.வி நடத்தி நமக்கு வாராவாரம் வகுப்பெடுக்குறாங்க.”

”நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இன்னொரு பக்கம், அதே நிறுவனத்தின் ’டைம்பாஸ்’ பத்திரிகையின் உதவி ஆசிரியர் கே.கணேஷ்குமார் கருத்துச் சுதந்திரத்துக்காய் ரொம்பக் கவலைப்படுறார்.” பார்த்தசாரதி கிண்டலாய்ச் சொன்னார்.

கே.கணேஷ்குமார்

”ஆம். நானும் பார்த்தேன். டைம்பாஸிலும், விகடன் குழுமத்திலும் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையையும் அவர்களின் சுதந்திரத்தையும் மதிக்காமல் அதனை வக்கிரமாய் விற்றுக் காசாக்கும் பத்திரிகையில் அமர்ந்து கொண்டு, அதே சமயம் இழிவாய் எழுதிய சாம்ராஜை, எப்படி மிகத்தரக்குறைவாய் விமர்சிக்கலாம் எனக் கொந்தளிக்கிறார். அதற்கு முன் தங்கள் இதழினாலும், இணையப்பக்கத்திலும் பாதிக்கப்படும் நபர்களுக்காய் அவர் ’டைம்பாஸ்’ எடிட்டோரியலிலும், எம்.டி.சீனிவாசனிடமும் முதலில்  குரல் எழுப்ப வேண்டும். அதற்குப்பின் சாம்ராஜின் அருவருப்புக்கு ஆதரவுக் குரல் கொடுக்கலாம். செய்வாரா?” ரவிக்குமார் கேள்வியுடன் முடித்தார்.



எனக்கென்னமோ இந்தக் கையெழுத்துக்குப் பின்னாடி ’தமிழ்நாட்டு அருந்ததிராய்’ இருக்காருன்னு நினைக்கிறேன். 


நக்கீரன் காமராஜ்
அதை விடுங்க. தாமதமான கேள்வி தான். ’நக்கீரன்’ இணை ஆசிரியர் காமராஜ் நீக்கம் பத்தி என்ன செய்தி?” பார்த்தசாரதி பழைய வில்லங்கத்தை எடுத்து வைத்தார்.

”நீண்ட நாளா முதலாளி கோபாலுக்கும் காமராஜூக்கும் புகைஞ்சுக்கிட்டிருந்த விஷயம் வெடித்து இப்ப வெளியேற்றப்பட்டிருக்கார். முதல்வர் உடல்நிலை தொடர்பா வந்த செய்தி தான் உச்சத்துக்கு காரணம். நிறுவனத்தை வைத்து தன்னை அளவுக்கு அதிகமாக பல வழிகளிலும் வளர்த்துக் கொண்டார் என்பது தான் கோபாலின் நீண்ட நாள் ஆதங்கம், வெறுப்பு,கோபம்.”

”அதனால் தான், காமராஜ் வெளியேற்றத்துக்குப் பின்னால் ஆ.ராசா வீட்டில் நடைபெற்ற ரெய்டு பத்தி  ’திகிலடித்த ராசா’ என்று அட்டையில் தங்கள் கோபத்தை வெளிக்காட்டியிருந்தது நக்கீரன். 




இப்ப பொறுப்பாசிரியரா கோவி.லெனின் பதவியேற்றிருக்கார். இவர் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பற்றி 'அண்ணா பெருங்கடலிலிருந்து சில துளிகள்என்று ஒரு ஆவணப்படம் தொகுத்திருந்தார். நக்கீரன் அதை வெளியிட்டிருந்தாலும், அப்பொழுது பெரம்பலூர் திமுக என்ற பெயரில் ஆ.ராசா  பின்னின்று அந்த உதவியைச் செய்திருந்தார். ஆனால் இன்றோ கால சக்கரத்தில் ஆ.ராசாவுக்கு எதிர்ச் செய்தி இவர் பொறுப்பாசிரியரா இருக்கும் இதழில் வருது.”

”முதலாளி கோபால் சொன்ன படிதானே இவர் செய்ய முடியும். ஆனால் இவர் பொறுப்பேற்றதற்குப் பின்பு இதழில் செய்த சின்னச் சின்ன மாற்றங்கள் நன்றாக இரு இருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும். ”

”நானும் படித்தேன். நக்கீரன் முன்னாள் இணை ஆசிரியர் காமராஜ் இப்ப என்ன செய்யுறார்?”

”இருக்குற சொத்துக்களை நிர்வாகம் செய்துக்கிட்டிருக்கார். விரைவில் தனது நண்பர்கள் ஆ.ராசா போன்றோர் தொடர்பில் ஒரு வாரப்பத்திரிகை ஆரம்பிக்கப் போறாருன்னும் சொல்றாங்க. ஆனால் செய்தியை உறுதிப்படுத்த முடியலை.”

”’இப்போது’ என்ற பெயரில் ஒரு இணையதளம் வருது பார்த்தீர்களா? “



 ”அப்படிச் சொல்றாங்க. ஆனால் அமெரிக்க அரசு பின்னின்று நடத்துவது போல் தெரியுது. அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழிலேயே அது தெளிவாக் குறிப்பிடப்பட்டிருக்குது. துவக்க விழாவில் தர்மபுரி குணசேகரன் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். அமெரிக்க அரசின் உதவியுடன் நடத்தப்படும் இணைய தளத்தின் நோக்கம் என்ன? செயல்பாடு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறிதான். பிற துறைகளில் அன்னிய முதலீட்டை வலிய ஆதரிக்கும் பத்திரிகை நிறுவனங்கள் தங்கள் துறைகளில் நுழைவதை எதிர்க்கின்றனர். ஆனால் இங்கு சத்தமில்லாமல் அமெரிக்க அரசு நுழைந்திருக்கிறது. 





பீர் முகம்மது

”இப்பொழுது இன்னொரு செய்தியும் ஞாபகம் வருது. ஓரிரு வருடத்துக்கு முன்பு சில ஊடகவியலாளர்கள் இங்கிருந்து அமெரிக்க சுற்றுப்பயணம் போனாங்க, அதில் பீர் முகம்மதுவும் ஒருவர். அந்தப்பயணம் மூலம் இந்த ஊடகம் சாத்தியமாச்சா..? இல்லை இதன் உருவாக்கத்தின் பின்னணி வேறு நெட்வொர்க்கா என்பதும் தெரியலை.”

”பீர் முகம்மது எப்படி இத்துறையில் மிக விரைவில் எப்படி முன்னுக்கு வந்தார் என்பதையும் சொல்றேன். இஸ்லாமிய மக்களுக்காக நடத்தப்படும் ’சமநிலைச் சமுதாயம்’ பத்திரிகையில் அப்ப பீர் முகம்மது வேலை பார்த்துக்கிட்டிருந்தார். அதில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக அப்பொழுது ’இந்தியா டுடே’ ஆசிரியர் பொறுப்பில் இருந்த வாசந்தியை முயற்சியெடுத்து அழைத்து வருகிறார். அந்த நேரத்தில் இந்தியா டுடே மீதும்,  வாசந்தி மீதும் சிறுபான்மையினர், கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் எல்லாரும் கடும் வெறுப்பில் இருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், நமக்கு அவசியமான நிகழ்ச்சி என்று கருதிய வாசந்தியும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறார்.

அந்தக் கூட்டத்தில் வாசந்தி, இஸ்லாமியர்கள் பத்திரிகைத்துறையில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அதன் பின் ஓரிரு வாரங்களில் பீர் முகம்மதுவுக்கு ’இந்தியா டுடே’ வில் வேலை கிடைக்கிறது. அன்றிலிருந்து பீர் முகம்மதுக்கு ஏறுமுகம் தான். இன்று பீர் முகம்மது அமெரிக்க அரசின் (உதவியுடன்) இணையத்தை நடத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ”

தமிழில் ஊடகத்துறையின் எதிர்காலம் குறித்து அவர்கள் கூடச் சேர்ந்து கவலைப்படுறார். கொடுமையாத் தான் இருக்குது.

 


ஜூ.விகடனில் ஆசிரியர் ப.திருமாவேலன் எழுதுற தொடர், பெரியோர்களே… தாய்மார்களே! தொடர் படிக்கிறீங்களா?” அது பத்தி திராவிட இயக்க ஆதரவாளர்கள் விமர்சனம் செய்திருக்காங்களே..? பார்த்தசாரதி புது சப்ஜெக்டுக்குத் தாவினார்.

 ரவிக்குமார் விரிவாகப் பேசத் தொடங்கினார்., ”ம். ( அத்தியாயம் 14) படிச்சேன். அரசியலில் இருக்கும் பெண்களை தனிப்பட்டமுறையில் பேசி அவமானப்படுத்துவது குறித்து இந்த அத்தியாயம் பேசுகிறது. அன்னிபெசன்ட்டை இழிவாகப் பேசியது குறித்து எழுதப்பட்டுள்ள இந்தப் பதிவில் தகவல்கள் முழுமையா இல்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்கு மிகவும்  சந்தேகத்திற்குரியதாக இருந்தது என்பதையும், அவர் ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்தவர் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.

அதைத் தவிர இன்னொரு முக்கிய விஷயம் நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான டி.எம்.நாயரின் ஆபாசப் பேச்சு குறித்து மேற்கோள் காட்டியிருக்கிறார். 



எப்படி அவரைக் குற்றம் சொல்லலாம் என்றுதான் திராவிட இயக்க ஆதரவாளர்கள் கொதிக்கிறார்கள். அதில் ஆசிரியர் திருமாவேலன் மேற்கோள் காட்டி இருப்பதை விட மிகமிக ஆபாசமாகப் பேசியவர் தான் டி.எம்.நாயர்.

’ஆன்ட்டி செப்டிக்’ இதழில் அன்னிபெசண்ட் குறித்து டி.எம்.நாயர் எழுதியதில்  இதுவும் உண்டு.

“Woman of deep penetration, quick conception, and easy delivery” ”ஆழமான ஊடுருவலும், விரைவான கருத்தாக்கமும், எளிதான டெலிவரியும் கொண்ட பெண்மணி”  

இளங்கோவனின் பேச்சுக்கு ஒப்பானதாக இதைத்தான் குறிப்பிடலாம்.

இன்னும் சொல்லப்போனால் வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகங்களின் ஆபாசப் பேச்சுக்கு அடிகோலியவரும், சவால் விடக் கூடியவரும் டி.எம்.நாயர் என்பது தான் உண்மை. இந்த மேற்கோளை முரசொலி மாறனும் தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் பேசியதை முழுமையாய் வெளியிட்டிருந்தால் டி.எம்.நாயர் இன்னும் அசிங்கப்பட்டிருப்பார், திருமாவேலன் டி.எம்.நாயரை முடிந்தமட்டும் காப்பாற்றித்தான் இருக்கிறார். ஆகவே அவர்களின் விமர்சனம் சரியானதல்ல. அதே சமயம் ஆணாதிக்கத்துடன் வைகோ பேசியதை பெயர் சொல்லாமல் விமர்சித்து பாசம் காட்டியிருக்கிறார் திருமாவேலன். என்று சொல்லி அந்த உரையாடலை பார்த்தசாரதி முடித்து வைத்தார்.


” ம். ’புதிய வாழ்வியல்’ பத்திரிகை ரியல் எஸ்டேட் முதலாளி ஒருவரால் நடத்தப்படுதுன்னு ஏற்கனவே பேசியிருக்கிறோம். 20000 காப்பி அச்சடித்த அந்த இதழ் 2000 இதழ் கூட இப்ப அச்சடிக்குறதில்லையாம். ஒரு தளம் முழுக்க ஆட்களைக் கொண்டு டாபீகமாக நடத்துன ஆபிசையும் இப்ப ரெண்டு கேபின்ல முடக்கிட்டாங்களாம்.

”வேறென்ன செய்தி..? கிளம்புற நேரம் வந்துடுச்சு.”

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை விமர்சகர், சமூக ஆர்வலர், கவிஞர் என்று பொதுவான பெயரிட்டு அழைப்பதை ஒழுங்குபடுத்தினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். பானு கோம்ஸ் என்று ஒருவர் நடுநிலையாளர் போலக் கலந்து கொள்கிறார், இவர் நடுநிலையாகப் பேசுவார் எனக்கருதி பொதுவான அடையாளத்துடன் விவாத நிகழ்ச்சிக்கு அழைக்கின்றனர். ஆனால் அவர் எப்பொழுதும் பிஜேபி சார்பாகத் தான் பேசுகிறார். அதற்குப் பதிலா பிஜேபியை சேர்ந்த யாரையாவது அழைக்கலாம். அல்லது பிஜேபி ஆதரவு நபர் என்று பெயரிட்டு பானு கோம்ஸை அறிமுகப்படுத்தலாம். விவாதத்தைப் பார்ப்பவர்களுக்கு புரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

தி.மு.க.வில் இணையும் மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன் என்பவரை கவிஞர், அரசியல் விமர்சகர் என்று அழைத்து அனைத்து தொலைக்காட்சிகளும் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போட்டி போட்டு வாய்ப்பளித்தனர். அவரும் மூன்றாண்டுகளாக நடுநிலை வேடத்தில் தி.மு.க., ஆதரவுக் கருத்துக்களை பேசினார். இன்று ஊடக விவாதம் மூலம் கிடைத்த புகழை அறுவடை செய்து திமுகவில் முதல் வரிசையில் போய் அமர்ந்து விட்டார். இவருக்கு ஏதாவது ராஜ்யசபா எம்.பி. அல்லது கட்சியில் நல்ல பொறுப்புக் கிடைக்கலாம். இதுவரை அவர் நடுநிலையாகப் பேசினார் என நம்பியவர்கள் தான் பாவம் ஏமாளிகள். இவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில் தவறில்லை. ஆனால் இவர்கள் பங்கேற்கும் ஓரிரு நிகழ்ச்சியிலேயே, அதுவரை பேசியதை வைத்து முடிவு செய்து திமுக, அதிமுக, பிஜேபி ஆதரவு நபர்கள் என்று  சொல்லி விட வேண்டும், நடுநிலையாகப்பேசினால் விமர்சகர் என அடைமொழி கொடுப்பதில் தவறில்லை. ரங்கராஜ் பாண்டே ஒரு முறை மனுஷ்யபுத்திரனை திமுக ஆதரவு விமர்சகர் என அழைத்தார் என நினைக்கிறேன். 

இதன் மூலம் ஒரே நேரத்தில் வெவ்வேறு அடைமொழியுடன் ஒன்றுக்கு மேற்பட்டோர், ஒரே கட்சியின் சார்பில் பங்கேற்பது தவிர்க்கப்பட்டு, விவாத சமநிலை ஏற்படுத்த முடியும். இது நடைபெறாத பட்சத்தில் விவாத நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் முட்டாள்கள் ஆவதையும், நிகழ்ச்சியில் நடுநிலை வேடம் தரிப்பவர்கள் நல்ல விலைக்குத் தங்களை விற்பதையும் தவிர்க்க முடியாது.”

பெஞ்சமினின் கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொண்ட படி விடைபெற்றனர். 

Tuesday 21 July 2015

சன் நெட்வொர்க் மாறன்களின் ஊளைச் சத்தம்..!




ன் குழுமத்தினை முடக்க சதி என்ற கூக்குரல் இப்பொழுது சன் குழுமத்தால் எழுப்பப் படுகிறது.

புதிதாய் பண்பலைகளுக்கு விடப்படும் ஏலத்தில் தங்கள் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி மறுத்ததில் தொடங்கிய பிரச்னையை முதலில் பொதுவெளிக்கு கொணர்ந்து அனைவரின் ஆதரவையும் திரட்டிய சன் குழுமம், இப்பொழுது சன் குழுமத்தின் நிர்வாகிகள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளைக் காரணம் காட்டி உள்துறை அமைச்சகம் அதன் உரிமம் புதுப்பிக்கும் விண்ணப்பத்துக்கு முட்டுக்கட்டை போடுவதை முடிச்சுப்போட்டு ஒட்டுமொத்தமாய், தங்கள் நிறுவனத்தை மத்திய அரசு முடக்க முயற்சி என கூக்குரல் எழுப்புகிறது.





மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடையும் வலைப்பின்னல் கொண்டுள்ள சன் குழுமம், தங்கள் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கும் வண்ணம் ஆதரவாய் நாள்தோறும் பல தரப்பட்டவர்களின் செய்தி அறிக்கை,பேட்டி,தலையங்கம்,கருத்து எனத் தினமும் வெளியிட்டு வருகிறது. தனது ஊடகங்கள் மூலம் இவர்களின் எசப்பாட்டுக்கு நல்ல வாய்ப்பையும் விளம்பரத்தையும் தருகிறது.

ப‌த்திரிகையாளர் நலன்,மோடி எதிர்ப்பு, எதேச்சதிகார அரச எதிர்ப்பு,தொழில் நடத்தும் உரிமை,பாரபட்சம்,அனைவருக்கும் சமநீதி எனப் பலவித காரணங்களைக் காட்டித், தனி நபர் அரசியல் இயக்கம் வைத்திருப்பவர்,எட்டாவது தெரு-ஏழாவது சந்து  நலச்சங்க செயலாளர்  தொடங்கி நூற்றாண்டு நெருங்கும் அரசியல் கட்சிகள் வரையிலும், டுபாக்கூர் பத்திரிகையாளர்,கட்டப் பஞ்சாயத்து பத்திரிகையாளர் சங்கங்கள் தொடங்கி பாரம்பரிய தொழிற்சங்கங்கள் வரைக்கும் சன் குழுமத்துக்குத் தங்கள் ஆதரவை வெவ்வேறு குரலில் பதிவு செய்து வருகின்றனர். அமெரிக்க தூதரகத்தில் கொளுத்தும் வெயிலிலும் கால்கடுக்க காத்திருப்பவர்களைப் போல் மேற்கண்டவர்கள் ஆதரவு அறிக்கை அளிக்க முண்டியடிக்கிறார்கள். சன் குழுமத்தின் அனுசரனையாளர்கள் பட்டியலில் எப்பொழுதும் இடம் பிடித்து விட முடியாதா என அவர்களின் ஏக்கம் பெருமூச்சாக வெளிப்ப‌டுவது பகிரங்கமாகத் தெரிகிறது. இன்னும் இவர்கள் அண்ணா சாலையை மறிக்காததும் கவிஞர்கள் கூட்டறிக்கை வெளியிடாததும்  தான் பாக்கி.



ன் குழுமத்தை முடக்க முயற்சி நடக்கிறது என்னும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா ?

அது சாத்தியமா ?

உலகம் முழுவதும் இருக்கும் தொழில் நிறுவனங்கள் அனைத்துக்கும் இந்தியாவைத் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் நிலையில்,அவர்களுக்குத் தோதாய் சட்டங்கள்,விதிமுறைகள் எல்லாம் திருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்காய் நான்கு தூண்களும் சகல விதத்திலும் வளைந்து நெளியக் காத்திருக்கும் நிலையில், இங்கிருக்கும் அனைத்து மட்டங்களிலும் சகல‌விதமான தொடர்புகளையும் கொண்டு ஆக்டோபசாய் கால் பதித்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த சன் குழுமத்தை முற்றுமுழுதாய் முடக்கும் முயற்சி சாத்தியப்படுமா என்று பார்த்தால் துளியும் சாத்தியமில்லை.

சன் குழுமம் சத்தியத்திலும் உண்மையிலும் உண்மையிலும் தோய்த்தெடுத்த புடம் போட்ட நிறுவனம் அல்ல. நிறுவனத்தையும் அதன் முதலாளிகளையும் சுற்றி பல்வேறு வழக்குகள் கழுத்துப்பிடியாய் நெருக்குகின்றன. அதனால்
சன் குழுமத்துக்கு மத்தியில் அரச அதிகாரத்தில் இருப்பவர்களால் தொந்தரவுகள் அளிக்க முடியும், ஏகபோகத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியும், அனைத்து பெருநிறுவனஙளைப் போல் கட்டற்று சுரண்டுவதைத்  தடுக்க முடியும், இவர்களின் முறைகேட்டுக்கு முட்டுக்கட்டை போட முடியும், புதிய உரிமங்களை கிடப்பில் போட முடியும்.  ஏற்கனவே இருக்கும் வழக்குகளை விரைவுபடுத்தி இவர்களைத் தண்டனைக்கு உட்படுத்த முடியும்.

இதைத் தாண்டி மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களால் எதுவும் செய்ய முடியாது. இதற்கு மேல் வரைமுறையற்றுத் தலையிட்டால் அதைத்  தடுக்கவும் தலையிடவும் உரிய நீதிமன்றங்கள் இருக்கின்றன. அதனை மீறி எதுவும் செய்ய முடியாது. கண்டிப்பாய் சன் குழுமம் போன்ற பெருதொழில் நிறுவனங்களுக்குத்தான்  நீதிமன்ற‌ங்களில் இறுதிவெற்றி கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அனைத்து நிறுவனங்களும் அதிகாரத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்லத் தயாராய் இருக்கின்றன. முடியாத பட்சத்தில் மேற்கண்ட வழிமுறைகளைப்பின்பற்றித் தங்க‌ளைக் காத்துக் கொள்கின்றன. ஒட்டுமொத்த நிறுவனத்தையும் இப்பொழுதைய காலகட்டத்தில் முடக்குவது ஒரு போதும் சாத்தியமில்லை. 



இப்பொழுது சன் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை அது உரிய முறையில் குறித்த கால அவகாசத்தில் தீர்க்க முடியும். ஆனால் அதற்குத் தயங்குகிறது. தன் மீதான விசாரணையையும் அதன் விளைவையும் சந்திக்க அச்சப்ப‌டுகிறது. ஆகையால் தன்னிடமிருக்கும் ராட்சச ஊடக பலத்தால் வீதிக்கு கொண்டு வந்துள்ளது, ஓங்கி ஒலித்து ஒப்பாரி வைக்கிற‌து.

ஆரம்பத்தில் ஓரிரு வருடங்கள் தவிர ஆட்சியில் இருப்ப‌வர்களின் துணையுடன் தான் தன்னை சன் குழுமம் வள‌ர்த்து வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களை அது எப்பொழுதும் அனுச‌ரணையாகத் தான் நடந்துள்ளது. மத்தியில் அதற்கு அனுசரணையான, கோலோச்சிய‌ ஆட்சி 14 வருடங்கள் தொடர்ந்து இருந்துள்ளது. மாநிலத்தில் அதன் ஆட்சி 10 வருடத்தில் இருந்துள்ள‌து. இப்பொழுது தான் மத்தியிலும் மாநிலத்திலும் அதற்கு ஆதரவான,அனுசரனையான எந்த ஆ(க)ட்சியும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முற்று முழுவதும் எதிரான ஆட்சி இருக்கிறது. அவர்களுடன் இண‌க்கமாகப் போக இவர்கள் எடுத்த எல்லா முயற்சியும் அனைத்து வகைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இது அந்த நிறுவனம் இதுவரை சந்தித்திராத‌ புதிய சூழல்.

இதுவரை அவர்களுக்கு சகல வகைகளிலும் வளைந்து கொடுத்த, இவர்கள் கண்ண‌சைவில் செயல்பட்ட அதிகார வர்க்கம் இப்பொழுது அவர்களுக்கு முற்றுமுழுதாய் எதிராய் இருக்கிறது. அதிகார துஷ்பிரயோகம்,முறைகேடு,போட்டி தொழில் நிறுவனங்களை ஒடுக்கியது போன்றவற்றின் மூலம் தங்கள் சாம்ராஜ்யத்தை வானுயர எழுப்பியவர்கள் இப்பொழுது அது இல்லாமல் தக்க‌வைக்கச் சிரமப்படுகிறார்கள். இவர்கள் இதுவரை மற்ற‌வர்களுக்கு உருவாக்கிய முட்டுக்கட்டைகள் இவர்களுக்கு ஏற்படுத்தப்ப‌டுகிறது. இதுவரை ராஜபாட்டையில் நடந்து வந்தவர்கள் இப்பொழுது வெறுந்தரையில் நடக்க வேண்டியுள்ளது. இதனை அவர்களால் துளியும் எதிர்கொள்ளத் திராணியில்லை.

பிரதம அமைச்சகம்,உள்துறை,தொலைதொடர்பு என அனைத்து உயர் பீடங்களிலும் விரல் சொடுக்கில் காரியம் சாதித்தவர்கள் இன்றோ கடந்த கால முறைகேட்டின் ஒரு அடிச்செங்கலை உருவியவுடன் துடிக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் சீட்டுக்கட்டைப்போல் மாட மாளிகை சரிந்து விடும் என நினைக்கிறார்கள். மோசடியை தனது மூலதனமாக்கிக் கொண்ட, அதே சமயம் ஆளுந்தரப்பினை பகைத்துக் கொண்ட எல்லா நிறுவனங்களுக்கும்,தனி நபர்களுக்கும் ஏற்படுவது தான் இது.

அவர்கள் சந்திக்கும் வழக்குகளும் அவர்களை இறுக்கும் கடுமையான பிடிகளும் ,சந்தையில் சன் குழுமத்தின் மதிப்பு வீழ்ச்சியும், எதிர்நிலையில் இருக்கும் பலமான எதிரியும் சன் குழுமத்தின் மாறன்களிடம் அளவில்லாத பதற்ற‌த்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான் தங்கள் இக்கட்டுகளை,பின்னடைவுகளை பொதுப்பிரச்னையாக மாற்றுகிறார்கள்.அதன் மூலமாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள‌ முடியுமா என அங்கலாய்க்கிறார்கள். குறைந்த பட்சம் இருக்கும் பிரச்னைகள் தலைக்கு மேல் செல்லாமல் இருந்தால் போதும் என எதிர்பார்க்கிறார்கள். அதனால் இதுவரை தாங்கள் துச்சமென யாரை மதித்தார்களோ அவர்களைத் தேடித் தேடி ஓடுகிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல் அனைவரும் இவர்களுக்கு எசப்பாட்டு பாடுவது தான் இதில் குறிப்பிடத்தக்க அம்சம்.






தற்கு முன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த மாறன் வகையறாக்கள் மற்ற‌வர்களுக்குச் செய்த கொடுமைகள் சொல்லி மாளாது. பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. சில விஷயங்களை மட்டும் தொகுத்திருக்கிறோம்.

தமிழகத்தில் "ஹாத்வே" கேபிள் டிவி நிறுவனத்தை அழித்தது

ஜெ.ஜெ. டிவி, பாரதி டிவி, நிலா டிவி, உட்பட  இன்னும் பல தொலைக்காட்சிகளை முடக்கியது.

"ராஜ்" டிவியை முடக்கும் நோக்கத்தில் அதன் உரிமையாளர்களைக் கைது செய்தது

தமிழகத்தில் ஜி டிவி குழுமம் தொலைக்காட்சி தொடங்குவதற்கு பல ஆண்டுகள் மறைமுகமாக தடை உருவாக்கியது.

"ஜி தமிழ்" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிகொண்டிருந்த செய்திகளை தடுத்து முடக்கியது.

"விஜய்" தொலைக்காட்சி NDTV வுடன் இணைந்து வழங்கிகொண்டிருந்த தமிழ் செய்திகளை தடுத்து நிறுத்தியது.

தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் கேபிள் ஆப்ரேட்டர்களின் வாழ்க்கையை அழித்தது.

"சன்" டிடிஎச் விவகாரத்தில் "ரத்தன்" டாடா -வை மிரட்டியது.

"ஜெயா" தொலைக்காட்சி குழுமத்தில் "ஜெயா ப்ளஸ்" தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனுமதிதராமல் இழுத்தடிப்பு செய்தது.

கே.பி.கே., நிறுவிய தினகரனை குமரனிடம் இருந்து நயவஞ்சகமாய் பறித்தது.

தினமலரின் கே.எல்., சேட்டிலைட் ரேடியோ அறிமுகமான நேரத்தில் சூரியன் பண்பலை மூலம் எண்ணற்ற சேட்டிலைட் ரேடியோக்களை இடம் தெரியாமல் அழித்தது.

திரைத்துறையில் வெளியான திரைப்படங்களை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கியது.

764 அதிவேக தொலைபேசி இணைப்புகளை (36 மாதங்கள்) முறைகேடாக பயன்படுத்தி தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிலிருந்து அண்ணா அறிவாலயம் வரை திருட்டுத்தனமாக பூமிக்குள் புதைத்து எடுத்தது.

மேற்கண்ட  இவை எதற்கும் எந்த அரசியல் கட்சியும் இந்த அள‌வுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை. எந்த பத்திரிகையாளர் அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்க வில்லை. ஆனால் அயோக்கியன் என்றாலும் பணக்காரன் வீட்டு எழவு என்பதால் துக்கம் கேட்க,அவன் துயரத்துக்கு நீதி கேட்க, சவுண்டு விட, வராத கண்ணீரைத் துடைத்த படி வரிசையில் வேகாத வெயிலில் காத்திருக்கிறார்கள்.

(எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களில் ஓரிரு விதிவிலக்குகள்  இருக்கலாம்.)



தொழிலாள‌ர் நலன் போச்சு என்று பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் அனைத்தும் 'கண்ணீர்' வடிக்கின்றனர். தனது சுயநலனுக்காய் போட்டி நிறுவனங்களை நசுக்கவும், தன்னை வளர்த்து விட்ட தாத்தாவைக் காட்டிக் கொடுக்கவும்,தேவைபட்டால் வீழ்த்தவும் துளியும் தயங்காத மாறன்கள் எப்படித் தொழிலாளர் தோழன்களாகி விடுவார்கள்? கொஞ்சம் விட்டால் கலாநிதி மாற‌ன் எங்களுடன் எச்சில் கிளாசில் டீ குடிப்பார் என அவிழ்த்து விட்டாலும் விடுவார்கள் போல.

இது உண்மையா?

முதலாளிகள் தங்களுக்கு சிக்கல் ஏற்படும் பொழுதெல்லாம் தங்களைக் காத்துக்கொள்ள எடுக்கும் பல ஆயுதங்களில் முக்கியமானது தொழிலாளர் நலன். இங்கும் அட்சரம் பிசகாமல் பத்திரிகையாளர் சங்கங்கள் ச‌ன் குழுமத்துக்கு ஆதரவாய் எடுத்துள்ளன.

சன் குழுமத்திற்கு அரசின் தொந்தரவு காரண‌மாய்  ஒருவேளை இக்கட்டான நிலை வந்தால் அது இருந்த இடத்தில் இன்னும் புதிது புதிதாய் எத்தனையோ ஊடக நிறுவனங்கள் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. சொல்லப்போனால் ஆக்டோபஸ் சன் குழுமம் முடங்கிய பின்பு அதிக வேலை வாய்ப்புக்கள் உருவாகும் சாத்தியக் கூறுகள் தான் உண்டு.

தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின்பு தான் புதிது புதிதாய் தனியார் தொலைக்காட்சிகள் உருவானது,வேலைகள் பல்கிப்பெருகியது என்பது அப்பட்டமான நிஜம்.

இந்த மடம் இல்லையென்றால் இன்னொரு மடம். திறமை உள்ளவனுக்கு இடமா இல்லாமலா போய்விடும்? என்னமோ ஊரில் இருந்து கிளம்பும் பொழுது மாறன் பிள்ளை வேலை கொடுப்பான்,வயிற்றைக் கழுவலாம் என்ற எண்ண‌த்துடனா எல்லோரும் ரயில் ஏறினார்கள். முழுக்க அபத்தமான வாதமாய் இருக்கிறது. இன்னொன்று 'சத்யம்' நிறுவனம் பூட்டும் நிலை வந்தபொழுது நீதிமன்ற‌ம் தலையிட்டு இன்னொரு நிறுவனம் அதனை ஏற்று நடத்த உத்தரவிட்டது. அது போல நடக்க‌வும் வாய்ப்பு உண்டு.

இன்னொரு விதத்தில் பார்ப்போம்.

இதுவரை சன் நெட்வொர்க் நிறுவனம் தொழிலாளர் விரோதப்போக்கை கையாண்டதில்லையா..? சில ஆயிரங்கள் சம்பளத்தில் வேலை பார்த்த பழைய தினகரனின் திறமையான நூற்றுக்கணக்கான ஊழியர்களை எதேச்சதிகாரமாய் வேலையை விட்டு நிறுத்த வில்லையா..?  இப்பொழுது அறிக்கை விடுபவர்கள் எல்லாம் அப்பொழுது எங்கு போனார்கள்..?

மாறன்களின் தொழிலாளர் நலனுக்கு சிறு எடுத்துக்காட்டுச் சொல்கிறோம்.

தினகரன் நிறுவனத்தால் பாதிக்கப்ப‌ட்ட கோவிந்தராஜ் என்னும் ஊழியர் தினகரன் நிறுவனத்தின் மீது தொழிலாளர் நல நீதிமன்ற‌த்தில் வழக்குத் தொடுத்து வருடம் ஒன்று ஆகிறது. இன்றுவரை பதில் மனு கூடத் தாக்கல் செய்யவில்லை தினகரன் நிர்வாகம். வேலையும் இழந்து வேலூரில் இருந்து நிர்க்கதியாய் அலைந்து கொண்டிருக்கிறார் கோவிந்தராஜ்.  பதில் மனு தாக்கல் செய்து வழக்கு வருடக்கண‌க்கில் நடந்து உரிய தீர்வு கோவிந்தராஜூக்கு எப்பொழுது கிடைக்கும்? அதற்குப்பின் தான் இன்னொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர முடியும். இது போல இன்னும் பல‌ தொழிலாளர்கள் வாழ்க்கை நிர்க்கதியாய் இருக்கிறது. இதுதான் சன் குழுமத்தின் தொழிலாளர் நலன். இவர்களின் அறிக்கையைப் பார்த்து மாறன்கள் கண்டிப்பாய் வாயால் சிரிக்க மாட்டார்கள்.

சன் நெட்வொர்க்கில் வேலை பார்க்கும் ஊடக நண்பர்களுக்கு ஒன்று சொல்கிறோம். எச்ச‌ரிக்கையாய் இருங்கள். கொஞ்சம் அசந்தால் உங்கள் மீது மண்ணென்னெய் ஊற்றித் தீவைத்து விட்டு, சன் குழுமத்துக்கு ஆதரவாக பத்திரிகையாளர் தீக்குளிப்பு என எட்டு கால நியூசும், எட்டுத்திக்கமும் செய்தியும் போட்டு விடுவார்கள். ஜாக்கிரதை.

ஆட்சி அதிகாரத்தின்,முறைகேட்டின் மூலமும்,பிறரை ஒடுக்கியதன் மூலமும் தனது ஏகபோகத்தை நிலைநிறுத்திய நிறுவனம் இன்று தனது பழைய முறைகேடுகளின் மூலம் எழுந்த பல சிக்கல்களிலிருந்தும், அத்துடன் அதனைத் தன் விருப்பு வெறுப்புக்காய் துரிதப்படுத்தும் அதிகார மையத்திடமிருந்தும் எதிர்கொள்ள முடியாமல் ஊளையிடுகிறது. ஊளைச் சத்தத்திற்கு நாம் செவிமடுத்தால், தன்னைத் தற்காத்துக்கொண்டு நாளை நம்மைத்தான் அது தாக்கும் என்பது உறுதி.

ஆகவே சன் குழுமத்துக்கு, ஆதரவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், உரிய அமைப்புக்களில் முறையிட்டு அதனைத் தீர்த்துக்கொள்வது தான் சரி.

நாம் என்ன தான் வளைத்து வளைத்து எழுதினாலும், ஒரு நிறுவனத்தை அரசு தவறான முறையில் முடக்க,முட்டுக்கட்டை போடுவது தவறு தானே, அதற்கு கண்டனம் தெரிவிப்பதும், சன் குழுமத்துக்கு தார்மீக ஆதரவு தெரிவிப்பதும் தானே சரி என யாராவது நண்பர்கள் வாதிடலாம்.

ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி இருக்கிறது.

"வெளக்கமாறை எடுத்து பெருச்சாளியை அடி"

வீட்டில் இருக்கும் பெருச்சாளியை நம்மால் அடிக்க முடியாது. அதனை எதைக்கொண்டு செய்தால் என்ன?

அடித்ததற்காய் வெளக்கமாத்துக்கு கண்டனமோ,பாராட்டோ தெரிவிக்க முடியாது. அதே போல அடிவாங்கிய பெருச்சாளிக்காய் வருத்தப்படவோ,தடவிக்கொடுக்கவோ முடியாது.

இதே நிலை தான் இங்கும் பொருந்தும்.

 அறிவிப்பு 

சன் குழுமத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஒரு வாக்கெடுப்பு நடத்துகிறோம். இந்தப் பக்கத்தின் வலது பக்கத்தில் நடக்கும் இந்த வாக்கெடுப்பில் உங்கள் வாக்குகளைப்பதிவு செய்ய வேண்டுகிறோம்.


தொடர்புடைய இணைப்புக்கள்

https://www.savukkuonline.com/11763/

http://kalakakkural.blogspot.in/2015/05/blog-post_4.html

http://kalakakkural.blogspot.in/2015/04/blog-post_16.html

http://kalakakkural.blogspot.in/2014/10/200.html

http://www.scroll.in/article/742394/as-marans-sun-tv-takes-on-home-ministry-other-tamil-channels-take-on-sun-tv