Tuesday 21 July 2015

சன் நெட்வொர்க் மாறன்களின் ஊளைச் சத்தம்..!
ன் குழுமத்தினை முடக்க சதி என்ற கூக்குரல் இப்பொழுது சன் குழுமத்தால் எழுப்பப் படுகிறது.

புதிதாய் பண்பலைகளுக்கு விடப்படும் ஏலத்தில் தங்கள் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி மறுத்ததில் தொடங்கிய பிரச்னையை முதலில் பொதுவெளிக்கு கொணர்ந்து அனைவரின் ஆதரவையும் திரட்டிய சன் குழுமம், இப்பொழுது சன் குழுமத்தின் நிர்வாகிகள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளைக் காரணம் காட்டி உள்துறை அமைச்சகம் அதன் உரிமம் புதுப்பிக்கும் விண்ணப்பத்துக்கு முட்டுக்கட்டை போடுவதை முடிச்சுப்போட்டு ஒட்டுமொத்தமாய், தங்கள் நிறுவனத்தை மத்திய அரசு முடக்க முயற்சி என கூக்குரல் எழுப்புகிறது.

மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடையும் வலைப்பின்னல் கொண்டுள்ள சன் குழுமம், தங்கள் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கும் வண்ணம் ஆதரவாய் நாள்தோறும் பல தரப்பட்டவர்களின் செய்தி அறிக்கை,பேட்டி,தலையங்கம்,கருத்து எனத் தினமும் வெளியிட்டு வருகிறது. தனது ஊடகங்கள் மூலம் இவர்களின் எசப்பாட்டுக்கு நல்ல வாய்ப்பையும் விளம்பரத்தையும் தருகிறது.

ப‌த்திரிகையாளர் நலன்,மோடி எதிர்ப்பு, எதேச்சதிகார அரச எதிர்ப்பு,தொழில் நடத்தும் உரிமை,பாரபட்சம்,அனைவருக்கும் சமநீதி எனப் பலவித காரணங்களைக் காட்டித், தனி நபர் அரசியல் இயக்கம் வைத்திருப்பவர்,எட்டாவது தெரு-ஏழாவது சந்து  நலச்சங்க செயலாளர்  தொடங்கி நூற்றாண்டு நெருங்கும் அரசியல் கட்சிகள் வரையிலும், டுபாக்கூர் பத்திரிகையாளர்,கட்டப் பஞ்சாயத்து பத்திரிகையாளர் சங்கங்கள் தொடங்கி பாரம்பரிய தொழிற்சங்கங்கள் வரைக்கும் சன் குழுமத்துக்குத் தங்கள் ஆதரவை வெவ்வேறு குரலில் பதிவு செய்து வருகின்றனர். அமெரிக்க தூதரகத்தில் கொளுத்தும் வெயிலிலும் கால்கடுக்க காத்திருப்பவர்களைப் போல் மேற்கண்டவர்கள் ஆதரவு அறிக்கை அளிக்க முண்டியடிக்கிறார்கள். சன் குழுமத்தின் அனுசரனையாளர்கள் பட்டியலில் எப்பொழுதும் இடம் பிடித்து விட முடியாதா என அவர்களின் ஏக்கம் பெருமூச்சாக வெளிப்ப‌டுவது பகிரங்கமாகத் தெரிகிறது. இன்னும் இவர்கள் அண்ணா சாலையை மறிக்காததும் கவிஞர்கள் கூட்டறிக்கை வெளியிடாததும்  தான் பாக்கி.ன் குழுமத்தை முடக்க முயற்சி நடக்கிறது என்னும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா ?

அது சாத்தியமா ?

உலகம் முழுவதும் இருக்கும் தொழில் நிறுவனங்கள் அனைத்துக்கும் இந்தியாவைத் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் நிலையில்,அவர்களுக்குத் தோதாய் சட்டங்கள்,விதிமுறைகள் எல்லாம் திருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்காய் நான்கு தூண்களும் சகல விதத்திலும் வளைந்து நெளியக் காத்திருக்கும் நிலையில், இங்கிருக்கும் அனைத்து மட்டங்களிலும் சகல‌விதமான தொடர்புகளையும் கொண்டு ஆக்டோபசாய் கால் பதித்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த சன் குழுமத்தை முற்றுமுழுதாய் முடக்கும் முயற்சி சாத்தியப்படுமா என்று பார்த்தால் துளியும் சாத்தியமில்லை.

சன் குழுமம் சத்தியத்திலும் உண்மையிலும் உண்மையிலும் தோய்த்தெடுத்த புடம் போட்ட நிறுவனம் அல்ல. நிறுவனத்தையும் அதன் முதலாளிகளையும் சுற்றி பல்வேறு வழக்குகள் கழுத்துப்பிடியாய் நெருக்குகின்றன. அதனால்
சன் குழுமத்துக்கு மத்தியில் அரச அதிகாரத்தில் இருப்பவர்களால் தொந்தரவுகள் அளிக்க முடியும், ஏகபோகத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியும், அனைத்து பெருநிறுவனஙளைப் போல் கட்டற்று சுரண்டுவதைத்  தடுக்க முடியும், இவர்களின் முறைகேட்டுக்கு முட்டுக்கட்டை போட முடியும், புதிய உரிமங்களை கிடப்பில் போட முடியும்.  ஏற்கனவே இருக்கும் வழக்குகளை விரைவுபடுத்தி இவர்களைத் தண்டனைக்கு உட்படுத்த முடியும்.

இதைத் தாண்டி மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களால் எதுவும் செய்ய முடியாது. இதற்கு மேல் வரைமுறையற்றுத் தலையிட்டால் அதைத்  தடுக்கவும் தலையிடவும் உரிய நீதிமன்றங்கள் இருக்கின்றன. அதனை மீறி எதுவும் செய்ய முடியாது. கண்டிப்பாய் சன் குழுமம் போன்ற பெருதொழில் நிறுவனங்களுக்குத்தான்  நீதிமன்ற‌ங்களில் இறுதிவெற்றி கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அனைத்து நிறுவனங்களும் அதிகாரத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்லத் தயாராய் இருக்கின்றன. முடியாத பட்சத்தில் மேற்கண்ட வழிமுறைகளைப்பின்பற்றித் தங்க‌ளைக் காத்துக் கொள்கின்றன. ஒட்டுமொத்த நிறுவனத்தையும் இப்பொழுதைய காலகட்டத்தில் முடக்குவது ஒரு போதும் சாத்தியமில்லை. இப்பொழுது சன் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை அது உரிய முறையில் குறித்த கால அவகாசத்தில் தீர்க்க முடியும். ஆனால் அதற்குத் தயங்குகிறது. தன் மீதான விசாரணையையும் அதன் விளைவையும் சந்திக்க அச்சப்ப‌டுகிறது. ஆகையால் தன்னிடமிருக்கும் ராட்சச ஊடக பலத்தால் வீதிக்கு கொண்டு வந்துள்ளது, ஓங்கி ஒலித்து ஒப்பாரி வைக்கிற‌து.

ஆரம்பத்தில் ஓரிரு வருடங்கள் தவிர ஆட்சியில் இருப்ப‌வர்களின் துணையுடன் தான் தன்னை சன் குழுமம் வள‌ர்த்து வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களை அது எப்பொழுதும் அனுச‌ரணையாகத் தான் நடந்துள்ளது. மத்தியில் அதற்கு அனுசரணையான, கோலோச்சிய‌ ஆட்சி 14 வருடங்கள் தொடர்ந்து இருந்துள்ளது. மாநிலத்தில் அதன் ஆட்சி 10 வருடத்தில் இருந்துள்ள‌து. இப்பொழுது தான் மத்தியிலும் மாநிலத்திலும் அதற்கு ஆதரவான,அனுசரனையான எந்த ஆ(க)ட்சியும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முற்று முழுவதும் எதிரான ஆட்சி இருக்கிறது. அவர்களுடன் இண‌க்கமாகப் போக இவர்கள் எடுத்த எல்லா முயற்சியும் அனைத்து வகைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இது அந்த நிறுவனம் இதுவரை சந்தித்திராத‌ புதிய சூழல்.

இதுவரை அவர்களுக்கு சகல வகைகளிலும் வளைந்து கொடுத்த, இவர்கள் கண்ண‌சைவில் செயல்பட்ட அதிகார வர்க்கம் இப்பொழுது அவர்களுக்கு முற்றுமுழுதாய் எதிராய் இருக்கிறது. அதிகார துஷ்பிரயோகம்,முறைகேடு,போட்டி தொழில் நிறுவனங்களை ஒடுக்கியது போன்றவற்றின் மூலம் தங்கள் சாம்ராஜ்யத்தை வானுயர எழுப்பியவர்கள் இப்பொழுது அது இல்லாமல் தக்க‌வைக்கச் சிரமப்படுகிறார்கள். இவர்கள் இதுவரை மற்ற‌வர்களுக்கு உருவாக்கிய முட்டுக்கட்டைகள் இவர்களுக்கு ஏற்படுத்தப்ப‌டுகிறது. இதுவரை ராஜபாட்டையில் நடந்து வந்தவர்கள் இப்பொழுது வெறுந்தரையில் நடக்க வேண்டியுள்ளது. இதனை அவர்களால் துளியும் எதிர்கொள்ளத் திராணியில்லை.

பிரதம அமைச்சகம்,உள்துறை,தொலைதொடர்பு என அனைத்து உயர் பீடங்களிலும் விரல் சொடுக்கில் காரியம் சாதித்தவர்கள் இன்றோ கடந்த கால முறைகேட்டின் ஒரு அடிச்செங்கலை உருவியவுடன் துடிக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் சீட்டுக்கட்டைப்போல் மாட மாளிகை சரிந்து விடும் என நினைக்கிறார்கள். மோசடியை தனது மூலதனமாக்கிக் கொண்ட, அதே சமயம் ஆளுந்தரப்பினை பகைத்துக் கொண்ட எல்லா நிறுவனங்களுக்கும்,தனி நபர்களுக்கும் ஏற்படுவது தான் இது.

அவர்கள் சந்திக்கும் வழக்குகளும் அவர்களை இறுக்கும் கடுமையான பிடிகளும் ,சந்தையில் சன் குழுமத்தின் மதிப்பு வீழ்ச்சியும், எதிர்நிலையில் இருக்கும் பலமான எதிரியும் சன் குழுமத்தின் மாறன்களிடம் அளவில்லாத பதற்ற‌த்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான் தங்கள் இக்கட்டுகளை,பின்னடைவுகளை பொதுப்பிரச்னையாக மாற்றுகிறார்கள்.அதன் மூலமாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள‌ முடியுமா என அங்கலாய்க்கிறார்கள். குறைந்த பட்சம் இருக்கும் பிரச்னைகள் தலைக்கு மேல் செல்லாமல் இருந்தால் போதும் என எதிர்பார்க்கிறார்கள். அதனால் இதுவரை தாங்கள் துச்சமென யாரை மதித்தார்களோ அவர்களைத் தேடித் தேடி ஓடுகிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல் அனைவரும் இவர்களுக்கு எசப்பாட்டு பாடுவது தான் இதில் குறிப்பிடத்தக்க அம்சம்.


தற்கு முன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த மாறன் வகையறாக்கள் மற்ற‌வர்களுக்குச் செய்த கொடுமைகள் சொல்லி மாளாது. பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. சில விஷயங்களை மட்டும் தொகுத்திருக்கிறோம்.

தமிழகத்தில் "ஹாத்வே" கேபிள் டிவி நிறுவனத்தை அழித்தது

ஜெ.ஜெ. டிவி, பாரதி டிவி, நிலா டிவி, உட்பட  இன்னும் பல தொலைக்காட்சிகளை முடக்கியது.

"ராஜ்" டிவியை முடக்கும் நோக்கத்தில் அதன் உரிமையாளர்களைக் கைது செய்தது

தமிழகத்தில் ஜி டிவி குழுமம் தொலைக்காட்சி தொடங்குவதற்கு பல ஆண்டுகள் மறைமுகமாக தடை உருவாக்கியது.

"ஜி தமிழ்" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிகொண்டிருந்த செய்திகளை தடுத்து முடக்கியது.

"விஜய்" தொலைக்காட்சி NDTV வுடன் இணைந்து வழங்கிகொண்டிருந்த தமிழ் செய்திகளை தடுத்து நிறுத்தியது.

தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் கேபிள் ஆப்ரேட்டர்களின் வாழ்க்கையை அழித்தது.

"சன்" டிடிஎச் விவகாரத்தில் "ரத்தன்" டாடா -வை மிரட்டியது.

"ஜெயா" தொலைக்காட்சி குழுமத்தில் "ஜெயா ப்ளஸ்" தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனுமதிதராமல் இழுத்தடிப்பு செய்தது.

கே.பி.கே., நிறுவிய தினகரனை குமரனிடம் இருந்து நயவஞ்சகமாய் பறித்தது.

தினமலரின் கே.எல்., சேட்டிலைட் ரேடியோ அறிமுகமான நேரத்தில் சூரியன் பண்பலை மூலம் எண்ணற்ற சேட்டிலைட் ரேடியோக்களை இடம் தெரியாமல் அழித்தது.

திரைத்துறையில் வெளியான திரைப்படங்களை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கியது.

764 அதிவேக தொலைபேசி இணைப்புகளை (36 மாதங்கள்) முறைகேடாக பயன்படுத்தி தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிலிருந்து அண்ணா அறிவாலயம் வரை திருட்டுத்தனமாக பூமிக்குள் புதைத்து எடுத்தது.

மேற்கண்ட  இவை எதற்கும் எந்த அரசியல் கட்சியும் இந்த அள‌வுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை. எந்த பத்திரிகையாளர் அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்க வில்லை. ஆனால் அயோக்கியன் என்றாலும் பணக்காரன் வீட்டு எழவு என்பதால் துக்கம் கேட்க,அவன் துயரத்துக்கு நீதி கேட்க, சவுண்டு விட, வராத கண்ணீரைத் துடைத்த படி வரிசையில் வேகாத வெயிலில் காத்திருக்கிறார்கள்.

(எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களில் ஓரிரு விதிவிலக்குகள்  இருக்கலாம்.)தொழிலாள‌ர் நலன் போச்சு என்று பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் அனைத்தும் 'கண்ணீர்' வடிக்கின்றனர். தனது சுயநலனுக்காய் போட்டி நிறுவனங்களை நசுக்கவும், தன்னை வளர்த்து விட்ட தாத்தாவைக் காட்டிக் கொடுக்கவும்,தேவைபட்டால் வீழ்த்தவும் துளியும் தயங்காத மாறன்கள் எப்படித் தொழிலாளர் தோழன்களாகி விடுவார்கள்? கொஞ்சம் விட்டால் கலாநிதி மாற‌ன் எங்களுடன் எச்சில் கிளாசில் டீ குடிப்பார் என அவிழ்த்து விட்டாலும் விடுவார்கள் போல.

இது உண்மையா?

முதலாளிகள் தங்களுக்கு சிக்கல் ஏற்படும் பொழுதெல்லாம் தங்களைக் காத்துக்கொள்ள எடுக்கும் பல ஆயுதங்களில் முக்கியமானது தொழிலாளர் நலன். இங்கும் அட்சரம் பிசகாமல் பத்திரிகையாளர் சங்கங்கள் ச‌ன் குழுமத்துக்கு ஆதரவாய் எடுத்துள்ளன.

சன் குழுமத்திற்கு அரசின் தொந்தரவு காரண‌மாய்  ஒருவேளை இக்கட்டான நிலை வந்தால் அது இருந்த இடத்தில் இன்னும் புதிது புதிதாய் எத்தனையோ ஊடக நிறுவனங்கள் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. சொல்லப்போனால் ஆக்டோபஸ் சன் குழுமம் முடங்கிய பின்பு அதிக வேலை வாய்ப்புக்கள் உருவாகும் சாத்தியக் கூறுகள் தான் உண்டு.

தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின்பு தான் புதிது புதிதாய் தனியார் தொலைக்காட்சிகள் உருவானது,வேலைகள் பல்கிப்பெருகியது என்பது அப்பட்டமான நிஜம்.

இந்த மடம் இல்லையென்றால் இன்னொரு மடம். திறமை உள்ளவனுக்கு இடமா இல்லாமலா போய்விடும்? என்னமோ ஊரில் இருந்து கிளம்பும் பொழுது மாறன் பிள்ளை வேலை கொடுப்பான்,வயிற்றைக் கழுவலாம் என்ற எண்ண‌த்துடனா எல்லோரும் ரயில் ஏறினார்கள். முழுக்க அபத்தமான வாதமாய் இருக்கிறது. இன்னொன்று 'சத்யம்' நிறுவனம் பூட்டும் நிலை வந்தபொழுது நீதிமன்ற‌ம் தலையிட்டு இன்னொரு நிறுவனம் அதனை ஏற்று நடத்த உத்தரவிட்டது. அது போல நடக்க‌வும் வாய்ப்பு உண்டு.

இன்னொரு விதத்தில் பார்ப்போம்.

இதுவரை சன் நெட்வொர்க் நிறுவனம் தொழிலாளர் விரோதப்போக்கை கையாண்டதில்லையா..? சில ஆயிரங்கள் சம்பளத்தில் வேலை பார்த்த பழைய தினகரனின் திறமையான நூற்றுக்கணக்கான ஊழியர்களை எதேச்சதிகாரமாய் வேலையை விட்டு நிறுத்த வில்லையா..?  இப்பொழுது அறிக்கை விடுபவர்கள் எல்லாம் அப்பொழுது எங்கு போனார்கள்..?

மாறன்களின் தொழிலாளர் நலனுக்கு சிறு எடுத்துக்காட்டுச் சொல்கிறோம்.

தினகரன் நிறுவனத்தால் பாதிக்கப்ப‌ட்ட கோவிந்தராஜ் என்னும் ஊழியர் தினகரன் நிறுவனத்தின் மீது தொழிலாளர் நல நீதிமன்ற‌த்தில் வழக்குத் தொடுத்து வருடம் ஒன்று ஆகிறது. இன்றுவரை பதில் மனு கூடத் தாக்கல் செய்யவில்லை தினகரன் நிர்வாகம். வேலையும் இழந்து வேலூரில் இருந்து நிர்க்கதியாய் அலைந்து கொண்டிருக்கிறார் கோவிந்தராஜ்.  பதில் மனு தாக்கல் செய்து வழக்கு வருடக்கண‌க்கில் நடந்து உரிய தீர்வு கோவிந்தராஜூக்கு எப்பொழுது கிடைக்கும்? அதற்குப்பின் தான் இன்னொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர முடியும். இது போல இன்னும் பல‌ தொழிலாளர்கள் வாழ்க்கை நிர்க்கதியாய் இருக்கிறது. இதுதான் சன் குழுமத்தின் தொழிலாளர் நலன். இவர்களின் அறிக்கையைப் பார்த்து மாறன்கள் கண்டிப்பாய் வாயால் சிரிக்க மாட்டார்கள்.

சன் நெட்வொர்க்கில் வேலை பார்க்கும் ஊடக நண்பர்களுக்கு ஒன்று சொல்கிறோம். எச்ச‌ரிக்கையாய் இருங்கள். கொஞ்சம் அசந்தால் உங்கள் மீது மண்ணென்னெய் ஊற்றித் தீவைத்து விட்டு, சன் குழுமத்துக்கு ஆதரவாக பத்திரிகையாளர் தீக்குளிப்பு என எட்டு கால நியூசும், எட்டுத்திக்கமும் செய்தியும் போட்டு விடுவார்கள். ஜாக்கிரதை.

ஆட்சி அதிகாரத்தின்,முறைகேட்டின் மூலமும்,பிறரை ஒடுக்கியதன் மூலமும் தனது ஏகபோகத்தை நிலைநிறுத்திய நிறுவனம் இன்று தனது பழைய முறைகேடுகளின் மூலம் எழுந்த பல சிக்கல்களிலிருந்தும், அத்துடன் அதனைத் தன் விருப்பு வெறுப்புக்காய் துரிதப்படுத்தும் அதிகார மையத்திடமிருந்தும் எதிர்கொள்ள முடியாமல் ஊளையிடுகிறது. ஊளைச் சத்தத்திற்கு நாம் செவிமடுத்தால், தன்னைத் தற்காத்துக்கொண்டு நாளை நம்மைத்தான் அது தாக்கும் என்பது உறுதி.

ஆகவே சன் குழுமத்துக்கு, ஆதரவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், உரிய அமைப்புக்களில் முறையிட்டு அதனைத் தீர்த்துக்கொள்வது தான் சரி.

நாம் என்ன தான் வளைத்து வளைத்து எழுதினாலும், ஒரு நிறுவனத்தை அரசு தவறான முறையில் முடக்க,முட்டுக்கட்டை போடுவது தவறு தானே, அதற்கு கண்டனம் தெரிவிப்பதும், சன் குழுமத்துக்கு தார்மீக ஆதரவு தெரிவிப்பதும் தானே சரி என யாராவது நண்பர்கள் வாதிடலாம்.

ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி இருக்கிறது.

"வெளக்கமாறை எடுத்து பெருச்சாளியை அடி"

வீட்டில் இருக்கும் பெருச்சாளியை நம்மால் அடிக்க முடியாது. அதனை எதைக்கொண்டு செய்தால் என்ன?

அடித்ததற்காய் வெளக்கமாத்துக்கு கண்டனமோ,பாராட்டோ தெரிவிக்க முடியாது. அதே போல அடிவாங்கிய பெருச்சாளிக்காய் வருத்தப்படவோ,தடவிக்கொடுக்கவோ முடியாது.

இதே நிலை தான் இங்கும் பொருந்தும்.

 அறிவிப்பு 

சன் குழுமத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஒரு வாக்கெடுப்பு நடத்துகிறோம். இந்தப் பக்கத்தின் வலது பக்கத்தில் நடக்கும் இந்த வாக்கெடுப்பில் உங்கள் வாக்குகளைப்பதிவு செய்ய வேண்டுகிறோம்.


தொடர்புடைய இணைப்புக்கள்

https://www.savukkuonline.com/11763/

http://kalakakkural.blogspot.in/2015/05/blog-post_4.html

http://kalakakkural.blogspot.in/2015/04/blog-post_16.html

http://kalakakkural.blogspot.in/2014/10/200.html

http://www.scroll.in/article/742394/as-marans-sun-tv-takes-on-home-ministry-other-tamil-channels-take-on-sun-tv

1 comment:

Anonymous said...

வைகோ மாறன்களுக்காகத் தான் மோடியைப் பார்க்கப் போனார் என்ரு செய்தி வருகிறதே உண்மையா சார்?