Sunday 30 August 2015

தமிழ்நாட்டில் கால் பதிக்கும் அமெரிக்க அரசின் ஊடகம்..!

சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே உள்ள ஆவின் பாலகம்.
ஊடகவியாலாளர்கள் பெஞ்சமின், ரவிக்குமார், பார்த்தசாரதி சந்திப்பு.

”ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ தொடங்கும் நாளிதழ் வேலை ரொம்ப மும்முரமா நடக்குதாமே ?” என்றபடியே பெஞ்சமின் உரையாடலைத் தொடங்கினார்.

”ஆமாம். தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகள் சங்கத் தலைவர், புருஷோத்தமனுக்குச் சொந்தமான, எழும்பூரில் அமைந்துள்ள (EMPEE TOWERS) எம்பி டவரில் மேல் மாடியில் தான் அலுவலகம் வைத்திருக்கிறார்கள். 


'தின செய்தி’  அப்படின்னு பேரு. செப்டம்பர் 15 இல் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று வெளியிடுவதாகத் திட்டம். எத்தனையோ ஜாம்பவான்கள் முயற்சித்து கைவிட்டது தான் நாளிதழ் நடத்துவது. வைகோ இப்பொழுது புதிதாய்த் தொடங்குகிறார். வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. இமையம் தொலைக்காட்சி உரிமையாளர் தான் இதன் வெளியீட்டாளராம். இமையம் பப்ளிகேஷன் வெளியீடாக‌ வருதாம். 


டி.எம்.நாயர்,திருமாவேலன்,தின செய்தி,ராஜா திருவேங்கடம்,ஆனால் உண்மையான எஜமானர் யாரென்பது வைகோவுக்குத் தான் தெரியும்.” ரவிக்குமார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டே போனார்.

”வைகோவுக்கு எதுக்கு ’தினத்தந்தி’ அதிக முக்கியத்துவம் தருதுன்னே தெரியலையே? ஒரே ஒரு மதுபானக் கடையை எதிர்த்து வைகோ நடத்திய போராட்டத்தை அதிக முக்கியத்துவம் கொடுத்து  தலைப்புச் செய்தி அளித்து வெளியிடுது. வைகோ வெளியிடும் எந்த அறிக்கை ஆனாலும் அதே வடிவத்தில் சங்கொலி போல் வெளியிடுகிறது. அதே நேரம் சிகரெட்டுக்கு ஆதரவாக வைகோ கொந்தளித்த கருத்தை வெளியிட மறுக்கிறது.  எல்லாச் செய்தியையும் வெளியிடுவது தானே ஊடகத்துக்கு அழகு. இவர்கள் இடையே என்ன ’நெருக்கம்’ என்று தெரியலை.” பார்த்தசாரதி பொருமினார்.

empee distilleries

பெஞ்சமின் ”இதில் என்ன பெரிய சூத்திரம். பத்திரிகை முதலாளிகளின் குரலை ஒலிப்பதற்கும் அவர்களின் திரைமறைவு வேலைகளை முடிப்பதற்கும் பல அரசியல் வாதிகளை எப்பவும் தங்கள் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். அதில் ஒருவர் தான் வைகோ. 

ஒரு எடுத்துக்காட்டு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கைப்பிடியில் வைத்திருக்கும் ’இந்தியா சிமெண்ட்ஸ்’ நிறுவனத்துக்கும் ’தந்தி’ குழுமத்துக்கும் வணிக உறவு இருக்குது. அந்த அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பனின் மேட்ச் பிக்சிங்குக்கு எதிராக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டாலும் 'தந்தி குழுமம்' இருட்டடிப்புச் செய்யும். அதே நேரம், தடையை நீக்க வேண்டும் என்ற நோக்கில் முழுமூச்சில் செய்தி வெளியிடும்.

இப்பொழுதோ லலித் மோடி ’சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்பட்டார் என  அந்த அணியைக் காக்கும் நோக்கில் ’தந்தி டிவி’ சமீபத்தில் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. மறுநாள் வைகோ அந்த அணியின்மீதான தடையை நீக்க வலியுறுத்தி அறிக்கை கொடுக்குறார். இப்ப நாட்டில் இருக்குற பிரச்னைக்குநடுவில் எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா?

காலால் இட்ட கட்டளையை கையால் நிறைவேற்றும் அரசியல் தலைவரை ஊடக முதலாளிகளுக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? 

இந்த மாதிரி விசுவாசத்துக்குத் தான் தினமலரில் இருந்து பச்சமுத்து வரைக்கும் சாதி, இன பேதமற்று எல்லா பத்திரிகை முதலாளிகளுக்கும் வைகோவை பிடிக்கும். போன தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் 2% வாக்குகள் வாங்கினாலும் கருணாநிதிக்கு நிகராக எல்லா ஊடகங்களும் அவரை பிரதானப்படுத்துவது இதனால் தான். ”

ரவிக்குமார் டாபிக்கை மாற்றினார். ”வைகோ பற்றிப் பேசியதால் விகடன் ஞாபகம் வருது.’ஜூனியர் விகடனில்’ பொறுப்பாசிரியராய் இருக்கும் ராஜா திருவேங்கடத்தைச் சுற்றி சர்ச்சைகள் வலம் வருதே?”

”ஆமாம். ஒரு பெண் ஊடகவியலாளர் அவர் மீது அளித்த புகாரின் பேரில் முதலில் தற்காலிக நீக்கம் செய்த நிறுவனம் இப்பொழுது நிரந்தரமாக நீக்கியிருக்கிறது.”

ம். உண்மையில் நடந்தது என்ன..?

தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் நாம் எப்பொழுதும் தலையிடுவதோ, ஆர்வம் காட்டுவதோ கிடையாது. அதைப் பற்றிப் பேசுறதுக்கு முன்னாடி பழைய விஷயம் சொல்றேன். இதே ராஜா திருவேங்கடம், எழுத்தாளர் தியாகு வாழ்க்கைப் பிரச்சனையில் ஒரு சார்பான நிலைப்பாடுஎடுத்து ஜூவியில் பதிவு செய்தார். நாம் சுட்டிக்காட்டிய பின்னும் வீம்புக்காகவேனும் அடுத்தடுத்து அதனை ஆர்வமாய் மேற்கொண்டார். அவரது தனிப்பட்ட விருப்பா? அல்லது யாரின் கட்டளையா என்பது நமக்குத் தெரியாது. இன்றோ அவரது வாழ்வில் அதே போல சிக்கல் முளைத்திருக்கிறது. அடுத்தவர் வாழ்க்கை முரண்களை ஒருதலைப்பட்சமாய் பதிவு செய்ய இனியாவது யோசிப்பார் எனவும் எதிர்பார்க்கிறோம். ” பார்த்தசாரதி

இதே விஷயத்தில், என் கருத்தைச் சொல்லி விடுகிறேன் என்ற பீடிகையுடன் பெஞ்சமின் ஆரம்பித்தார்.”ராஜா திருவேங்கடம் திருமணமானவர் என்று நன்கு அறிந்திருந்தும், அவருடன் விருப்பப்பட்டுச் சுற்றி விட்டு, இப்பொழுது அவர் என்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார் என்று ஊரைக்கூட்டி புலம்புவது மிகத்தவறு. அடிப்படையிலேயே இது முறையற்ற உறவு. சட்டப்படியோ, தார்மீகப்படியோ இதனை ஏற்க முடியாது. தவறு இரண்டு பக்கமும் இருக்கிறது, இதில் கண்டிப்பாய் யாரையும் ஆதரிப்பது சரியானதல்ல.”

”உங்கள் கருத்து சரிதான். ஆனால் இந்த உண்மையை நாம் உரத்துப் பேசினால் பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு சிலரால் முணுமுணுக்கப்படும் என்பதையும் சொல்லி விடுகிறேன்.” என்று சொல்லியபடி ரவிக்குமார் முடித்து வைத்தார்.

”விகடன்காரங்க அக்கப்போரு இணையத்தில் தாங்கலையே..?”

”ஏன் என்னாச்சு?”
”ஆமாம். இதுக்கு முன்னாடி ஒவ்வொரு நடிகையின் படத்தைப்போட்டு மார்க் போடச் சொன்னாங்க. இப்ப மோசமான படங்களைப் போட்டு அதில் தரக்குறைவான கருத்துக்களை விருப்பத்துடன் அனுமதிக்கிறாங்க. உதிரித்தனமான லும்பன் வாசகர் வட்டாரத்தை மிகப்பெரிய அளவில் விருப்பப்பட்டு உருவாக்குறாங்க. தங்கள் நிறுவனப்புகழ் எல்லா இடத்திலும் கொடிகட்டணும் என எதிர்பார்க்கிறார்கள். எதிர் விமர்சனம் வருவது எதைப்பற்றியும் கவலைப்படுவது கிடையாது. இவர்கள் தான் விகடன், ஜூ.வி நடத்தி நமக்கு வாராவாரம் வகுப்பெடுக்குறாங்க.”

”நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இன்னொரு பக்கம், அதே நிறுவனத்தின் ’டைம்பாஸ்’ பத்திரிகையின் உதவி ஆசிரியர் கே.கணேஷ்குமார் கருத்துச் சுதந்திரத்துக்காய் ரொம்பக் கவலைப்படுறார்.” பார்த்தசாரதி கிண்டலாய்ச் சொன்னார்.

கே.கணேஷ்குமார்

”ஆம். நானும் பார்த்தேன். டைம்பாஸிலும், விகடன் குழுமத்திலும் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையையும் அவர்களின் சுதந்திரத்தையும் மதிக்காமல் அதனை வக்கிரமாய் விற்றுக் காசாக்கும் பத்திரிகையில் அமர்ந்து கொண்டு, அதே சமயம் இழிவாய் எழுதிய சாம்ராஜை, எப்படி மிகத்தரக்குறைவாய் விமர்சிக்கலாம் எனக் கொந்தளிக்கிறார். அதற்கு முன் தங்கள் இதழினாலும், இணையப்பக்கத்திலும் பாதிக்கப்படும் நபர்களுக்காய் அவர் ’டைம்பாஸ்’ எடிட்டோரியலிலும், எம்.டி.சீனிவாசனிடமும் முதலில்  குரல் எழுப்ப வேண்டும். அதற்குப்பின் சாம்ராஜின் அருவருப்புக்கு ஆதரவுக் குரல் கொடுக்கலாம். செய்வாரா?” ரவிக்குமார் கேள்வியுடன் முடித்தார்.எனக்கென்னமோ இந்தக் கையெழுத்துக்குப் பின்னாடி ’தமிழ்நாட்டு அருந்ததிராய்’ இருக்காருன்னு நினைக்கிறேன். 


நக்கீரன் காமராஜ்
அதை விடுங்க. தாமதமான கேள்வி தான். ’நக்கீரன்’ இணை ஆசிரியர் காமராஜ் நீக்கம் பத்தி என்ன செய்தி?” பார்த்தசாரதி பழைய வில்லங்கத்தை எடுத்து வைத்தார்.

”நீண்ட நாளா முதலாளி கோபாலுக்கும் காமராஜூக்கும் புகைஞ்சுக்கிட்டிருந்த விஷயம் வெடித்து இப்ப வெளியேற்றப்பட்டிருக்கார். முதல்வர் உடல்நிலை தொடர்பா வந்த செய்தி தான் உச்சத்துக்கு காரணம். நிறுவனத்தை வைத்து தன்னை அளவுக்கு அதிகமாக பல வழிகளிலும் வளர்த்துக் கொண்டார் என்பது தான் கோபாலின் நீண்ட நாள் ஆதங்கம், வெறுப்பு,கோபம்.”

”அதனால் தான், காமராஜ் வெளியேற்றத்துக்குப் பின்னால் ஆ.ராசா வீட்டில் நடைபெற்ற ரெய்டு பத்தி  ’திகிலடித்த ராசா’ என்று அட்டையில் தங்கள் கோபத்தை வெளிக்காட்டியிருந்தது நக்கீரன். 
இப்ப பொறுப்பாசிரியரா கோவி.லெனின் பதவியேற்றிருக்கார். இவர் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பற்றி 'அண்ணா பெருங்கடலிலிருந்து சில துளிகள்என்று ஒரு ஆவணப்படம் தொகுத்திருந்தார். நக்கீரன் அதை வெளியிட்டிருந்தாலும், அப்பொழுது பெரம்பலூர் திமுக என்ற பெயரில் ஆ.ராசா  பின்னின்று அந்த உதவியைச் செய்திருந்தார். ஆனால் இன்றோ கால சக்கரத்தில் ஆ.ராசாவுக்கு எதிர்ச் செய்தி இவர் பொறுப்பாசிரியரா இருக்கும் இதழில் வருது.”

”முதலாளி கோபால் சொன்ன படிதானே இவர் செய்ய முடியும். ஆனால் இவர் பொறுப்பேற்றதற்குப் பின்பு இதழில் செய்த சின்னச் சின்ன மாற்றங்கள் நன்றாக இரு இருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும். ”

”நானும் படித்தேன். நக்கீரன் முன்னாள் இணை ஆசிரியர் காமராஜ் இப்ப என்ன செய்யுறார்?”

”இருக்குற சொத்துக்களை நிர்வாகம் செய்துக்கிட்டிருக்கார். விரைவில் தனது நண்பர்கள் ஆ.ராசா போன்றோர் தொடர்பில் ஒரு வாரப்பத்திரிகை ஆரம்பிக்கப் போறாருன்னும் சொல்றாங்க. ஆனால் செய்தியை உறுதிப்படுத்த முடியலை.”

”’இப்போது’ என்ற பெயரில் ஒரு இணையதளம் வருது பார்த்தீர்களா? “ ”அப்படிச் சொல்றாங்க. ஆனால் அமெரிக்க அரசு பின்னின்று நடத்துவது போல் தெரியுது. அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழிலேயே அது தெளிவாக் குறிப்பிடப்பட்டிருக்குது. துவக்க விழாவில் தர்மபுரி குணசேகரன் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். அமெரிக்க அரசின் உதவியுடன் நடத்தப்படும் இணைய தளத்தின் நோக்கம் என்ன? செயல்பாடு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறிதான். பிற துறைகளில் அன்னிய முதலீட்டை வலிய ஆதரிக்கும் பத்திரிகை நிறுவனங்கள் தங்கள் துறைகளில் நுழைவதை எதிர்க்கின்றனர். ஆனால் இங்கு சத்தமில்லாமல் அமெரிக்க அரசு நுழைந்திருக்கிறது. 

பீர் முகம்மது

”இப்பொழுது இன்னொரு செய்தியும் ஞாபகம் வருது. ஓரிரு வருடத்துக்கு முன்பு சில ஊடகவியலாளர்கள் இங்கிருந்து அமெரிக்க சுற்றுப்பயணம் போனாங்க, அதில் பீர் முகம்மதுவும் ஒருவர். அந்தப்பயணம் மூலம் இந்த ஊடகம் சாத்தியமாச்சா..? இல்லை இதன் உருவாக்கத்தின் பின்னணி வேறு நெட்வொர்க்கா என்பதும் தெரியலை.”

”பீர் முகம்மது எப்படி இத்துறையில் மிக விரைவில் எப்படி முன்னுக்கு வந்தார் என்பதையும் சொல்றேன். இஸ்லாமிய மக்களுக்காக நடத்தப்படும் ’சமநிலைச் சமுதாயம்’ பத்திரிகையில் அப்ப பீர் முகம்மது வேலை பார்த்துக்கிட்டிருந்தார். அதில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக அப்பொழுது ’இந்தியா டுடே’ ஆசிரியர் பொறுப்பில் இருந்த வாசந்தியை முயற்சியெடுத்து அழைத்து வருகிறார். அந்த நேரத்தில் இந்தியா டுடே மீதும்,  வாசந்தி மீதும் சிறுபான்மையினர், கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் எல்லாரும் கடும் வெறுப்பில் இருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், நமக்கு அவசியமான நிகழ்ச்சி என்று கருதிய வாசந்தியும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறார்.

அந்தக் கூட்டத்தில் வாசந்தி, இஸ்லாமியர்கள் பத்திரிகைத்துறையில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அதன் பின் ஓரிரு வாரங்களில் பீர் முகம்மதுவுக்கு ’இந்தியா டுடே’ வில் வேலை கிடைக்கிறது. அன்றிலிருந்து பீர் முகம்மதுக்கு ஏறுமுகம் தான். இன்று பீர் முகம்மது அமெரிக்க அரசின் (உதவியுடன்) இணையத்தை நடத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ”

தமிழில் ஊடகத்துறையின் எதிர்காலம் குறித்து அவர்கள் கூடச் சேர்ந்து கவலைப்படுறார். கொடுமையாத் தான் இருக்குது.

 


ஜூ.விகடனில் ஆசிரியர் ப.திருமாவேலன் எழுதுற தொடர், பெரியோர்களே… தாய்மார்களே! தொடர் படிக்கிறீங்களா?” அது பத்தி திராவிட இயக்க ஆதரவாளர்கள் விமர்சனம் செய்திருக்காங்களே..? பார்த்தசாரதி புது சப்ஜெக்டுக்குத் தாவினார்.

 ரவிக்குமார் விரிவாகப் பேசத் தொடங்கினார்., ”ம். ( அத்தியாயம் 14) படிச்சேன். அரசியலில் இருக்கும் பெண்களை தனிப்பட்டமுறையில் பேசி அவமானப்படுத்துவது குறித்து இந்த அத்தியாயம் பேசுகிறது. அன்னிபெசன்ட்டை இழிவாகப் பேசியது குறித்து எழுதப்பட்டுள்ள இந்தப் பதிவில் தகவல்கள் முழுமையா இல்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்கு மிகவும்  சந்தேகத்திற்குரியதாக இருந்தது என்பதையும், அவர் ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்தவர் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.

அதைத் தவிர இன்னொரு முக்கிய விஷயம் நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான டி.எம்.நாயரின் ஆபாசப் பேச்சு குறித்து மேற்கோள் காட்டியிருக்கிறார். எப்படி அவரைக் குற்றம் சொல்லலாம் என்றுதான் திராவிட இயக்க ஆதரவாளர்கள் கொதிக்கிறார்கள். அதில் ஆசிரியர் திருமாவேலன் மேற்கோள் காட்டி இருப்பதை விட மிகமிக ஆபாசமாகப் பேசியவர் தான் டி.எம்.நாயர்.

’ஆன்ட்டி செப்டிக்’ இதழில் அன்னிபெசண்ட் குறித்து டி.எம்.நாயர் எழுதியதில்  இதுவும் உண்டு.

“Woman of deep penetration, quick conception, and easy delivery” ”ஆழமான ஊடுருவலும், விரைவான கருத்தாக்கமும், எளிதான டெலிவரியும் கொண்ட பெண்மணி”  

இளங்கோவனின் பேச்சுக்கு ஒப்பானதாக இதைத்தான் குறிப்பிடலாம்.

இன்னும் சொல்லப்போனால் வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகங்களின் ஆபாசப் பேச்சுக்கு அடிகோலியவரும், சவால் விடக் கூடியவரும் டி.எம்.நாயர் என்பது தான் உண்மை. இந்த மேற்கோளை முரசொலி மாறனும் தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் பேசியதை முழுமையாய் வெளியிட்டிருந்தால் டி.எம்.நாயர் இன்னும் அசிங்கப்பட்டிருப்பார், திருமாவேலன் டி.எம்.நாயரை முடிந்தமட்டும் காப்பாற்றித்தான் இருக்கிறார். ஆகவே அவர்களின் விமர்சனம் சரியானதல்ல. அதே சமயம் ஆணாதிக்கத்துடன் வைகோ பேசியதை பெயர் சொல்லாமல் விமர்சித்து பாசம் காட்டியிருக்கிறார் திருமாவேலன். என்று சொல்லி அந்த உரையாடலை பார்த்தசாரதி முடித்து வைத்தார்.


” ம். ’புதிய வாழ்வியல்’ பத்திரிகை ரியல் எஸ்டேட் முதலாளி ஒருவரால் நடத்தப்படுதுன்னு ஏற்கனவே பேசியிருக்கிறோம். 20000 காப்பி அச்சடித்த அந்த இதழ் 2000 இதழ் கூட இப்ப அச்சடிக்குறதில்லையாம். ஒரு தளம் முழுக்க ஆட்களைக் கொண்டு டாபீகமாக நடத்துன ஆபிசையும் இப்ப ரெண்டு கேபின்ல முடக்கிட்டாங்களாம்.

”வேறென்ன செய்தி..? கிளம்புற நேரம் வந்துடுச்சு.”

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை விமர்சகர், சமூக ஆர்வலர், கவிஞர் என்று பொதுவான பெயரிட்டு அழைப்பதை ஒழுங்குபடுத்தினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். பானு கோம்ஸ் என்று ஒருவர் நடுநிலையாளர் போலக் கலந்து கொள்கிறார், இவர் நடுநிலையாகப் பேசுவார் எனக்கருதி பொதுவான அடையாளத்துடன் விவாத நிகழ்ச்சிக்கு அழைக்கின்றனர். ஆனால் அவர் எப்பொழுதும் பிஜேபி சார்பாகத் தான் பேசுகிறார். அதற்குப் பதிலா பிஜேபியை சேர்ந்த யாரையாவது அழைக்கலாம். அல்லது பிஜேபி ஆதரவு நபர் என்று பெயரிட்டு பானு கோம்ஸை அறிமுகப்படுத்தலாம். விவாதத்தைப் பார்ப்பவர்களுக்கு புரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

தி.மு.க.வில் இணையும் மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன் என்பவரை கவிஞர், அரசியல் விமர்சகர் என்று அழைத்து அனைத்து தொலைக்காட்சிகளும் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போட்டி போட்டு வாய்ப்பளித்தனர். அவரும் மூன்றாண்டுகளாக நடுநிலை வேடத்தில் தி.மு.க., ஆதரவுக் கருத்துக்களை பேசினார். இன்று ஊடக விவாதம் மூலம் கிடைத்த புகழை அறுவடை செய்து திமுகவில் முதல் வரிசையில் போய் அமர்ந்து விட்டார். இவருக்கு ஏதாவது ராஜ்யசபா எம்.பி. அல்லது கட்சியில் நல்ல பொறுப்புக் கிடைக்கலாம். இதுவரை அவர் நடுநிலையாகப் பேசினார் என நம்பியவர்கள் தான் பாவம் ஏமாளிகள். இவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில் தவறில்லை. ஆனால் இவர்கள் பங்கேற்கும் ஓரிரு நிகழ்ச்சியிலேயே, அதுவரை பேசியதை வைத்து முடிவு செய்து திமுக, அதிமுக, பிஜேபி ஆதரவு நபர்கள் என்று  சொல்லி விட வேண்டும், நடுநிலையாகப்பேசினால் விமர்சகர் என அடைமொழி கொடுப்பதில் தவறில்லை. ரங்கராஜ் பாண்டே ஒரு முறை மனுஷ்யபுத்திரனை திமுக ஆதரவு விமர்சகர் என அழைத்தார் என நினைக்கிறேன். 

இதன் மூலம் ஒரே நேரத்தில் வெவ்வேறு அடைமொழியுடன் ஒன்றுக்கு மேற்பட்டோர், ஒரே கட்சியின் சார்பில் பங்கேற்பது தவிர்க்கப்பட்டு, விவாத சமநிலை ஏற்படுத்த முடியும். இது நடைபெறாத பட்சத்தில் விவாத நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் முட்டாள்கள் ஆவதையும், நிகழ்ச்சியில் நடுநிலை வேடம் தரிப்பவர்கள் நல்ல விலைக்குத் தங்களை விற்பதையும் தவிர்க்க முடியாது.”

பெஞ்சமினின் கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொண்ட படி விடைபெற்றனர். 

2 comments:

Anonymous said...

//ரங்கராஜ் பாண்டே ஒரு முறை மனுஷ்யபுத்திரனை திமுக ஆதரவு விமர்சகர் என அழைத்தார் என நினைக்கிறேன். //

ரங்கராஜ் பாண்டேவையும் இந்துத்துவா/அதிமுக/பாஜக ஆதரவு பத்திரிகையாளர்னு டைட்டில் போடலாமே? கலகக்குரல் வலியுறுத்துமா?

Anonymous said...

very informative....

thanks....

-tPN