ஈழத்தில் சிங்கள இனவாதத்தால் காலங்காலமாக மறுக்கப்பட்ட தங்கள் உரிமைகளுக்காகவும் இழந்த உடைமைகளை மீட்கவும் போராடிய தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.இதன் உச்சகட்டமாக முள்ளிவாய்க்காலில் தமிழ் இனப்படுகொலை 2009 ஆம் ஆண்டு மே மாதம் அரங்கேறியது.லட்சக்கணக்கில் தமிழர்கள் அழித்தொழிக்கப் பட்டனர்.சர்வதேச வல்லாதிக்கங்களின் துணையுடன் இலங்கை அரசு இந்தக் கோரத்தையும் கொடூரத்தையும் நடத்தியது.ஆனால் இனப்படுகொலை மட்டுமல்ல,தமிழர்களின் மரண ஓலமும் ஒப்பாரியும் கூட இங்குள்ள ஊடகங்களால் உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை.
இனப்படுகொலை முடிந்து 3 ஆண்டுகளாகியும் சொந்த நாட்டிலேயே தமிழர்கள் முள்வேலிக் கம்பிகளுக்குள் இன்னமும் அகதிகளாய் இருக்கின்றனர். அடுத்த வேளை சோற்றுக்குக் கூடத் தங்களை அழித்தவர்களிடம் கையேந்தி கொண்டிருக்கும் அவலம் தொடர்ந்து கொண்டுள்ளது.அதே வேளை இனப்படுகொலைக்குக் காரணமான ராஜபக்ஷேவோ இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல குற்றவாளிக் கூண்டில் கூட ஏற்றப்படவில்லை. அவரை போர்க்குற்றவாளி என அறிவிக்கக் கோரியும்,சிங்கள இனவாதத்திற்கு எதிராகவும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அதே சமயம் இலங்கை அரசு கலை நிகழ்ச்சிகள் மற்றும் வர்த்தக கண்காட்சிகளை நடத்தியும், அந்நிய நாட்டு வர்த்தக நிறுவனங்களை அழைத்து வந்து புதிய தொழில் தொடங்கியும் தனது கொடூர முகத்தை மறைக்கவும் கொலைக் கரங்களைப் பரிசுத்தமாக்கவும் திட்டமிட்டு முயல்கிறது.புத்தம் புதிய அனைவரும் விரும்பும் அமைதியான இலங்கை என்னும் பிம்பத்தை உலகமெங்கும் நிறுவ இதன் மூலம் முயல்கிறது.
ஆனால் உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் எதிர்ப்பின் மூலம் இதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். தமிழர்களின் உணர்வுகளை மதித்து திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன்,பாடகர் ஹரிகரன் உள்ளிட்டோர் தங்கள் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்.இந்திய விவசாய நிலங்களை மலடாக்கிய சுவாமிநாதன் கூட தமிழர்களின் எதிர்ப்பால் அங்கு மேற்கொள்ள இருந்த தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டார்.
ஆனால் இப்பொழுது தமிழர்களின் எதிர்ப்பை மயிருக்கும் மதிக்காமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அங்கு பல்கலைக்கழகம் ஒன்றினை கொழும்பு நகரில் நிறுவியுள்ளது. எஸ்.ஆர்.எம்.லங்கா பல்கலைக் கழகம் என்னும் பெயரில் தன் கல்வி வர்த்தகத்தை கோலாகோலமாக தொடங்கியுள்ளது.
|
முதல்மந்திரி ரிஷாத்தை வரவேற்கும் பொன்னவைக்கோ,துணைவேந்தர், SRM,பல்கலைக்கழகம் |
|
நாடாளுமன்ற உறுப்பினர் ரங்காவை வரவேற்கும் துணைவேந்தர் பொன்னவைக்கோ |
|
குத்துவிளக்கு ஏற்றும் ரங்கா,நாடாளுமன்ற உறுப்பினர் |
|
குத்துவிளக்கு ஏற்றும் சிவராஜன் சின்னராஜா,சேர்மன் SRM லங்கா, |
|
துவக்க விழா கும்மாளத்தின் பொழுது |
|
குத்துவிளக்கு ஏற்றும் பொன்னவைக்கோ,SRM,பல்கலைக்கழக துணைவேந்தர்,சென்னை. |
|
கொழும்பு பிரஸ் மீட்டில் |
|
இந்திய-இலங்கை SRM பல்கலைக்கழக கும்பல்களின் குரூப் போட்டோ |
இந்த எஸ்.ஆர்.எம்.லங்கா நிறுவனத்தின் பின்னணி என்ன..?
தனக்கு கிடைக்காத கல்வி தனது பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்பதற்காகத்,தன் தாலியை அடகு வைத்தும்,கந்து வட்டிக்குக் கடன் வாங்கியும்,நிலத்தை விற்றும்,கால் வயிற்றுக் கஞ்சியுடன் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான அப்பனும் ஆத்தாள்களும் அனுப்பிய காசில் பிரமாண்டமாய் தமிழ்நாடு முழுவதும் விண்ணை முட்டும் கட்டிடங்களாகவும்,நூற்றுக்கணக்கான கோடிகள் கையிருப்பாகவும்,கல்விச்சாலைகளாகவும் உருவானது தான் தமிழ்நாட்டின் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிறுவனம்.கடந்த 20 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாதது.அதில் தரமான கல்வி என்று சொல்லிக்கொண்டு தமிழர்களிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தமும்,வியர்வையும் இரண்டறக் கலந்துள்ளது.
|
சென்னை SRM,பல்கலைக்கழகம், |
இவ்வாறு தமிழனின் ரத்தத்தையும் வியர்வையும் தமிழ்நாட்டில் உறிஞ்சிய காசில் விண்ணை முட்டும் அளவில் இங்கு தமிழ்நாட்டில் உருவான நிறுவனம் இன்று,இந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கு எதிராய் உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்திய இலங்கை சிங்கள அதிகாரவர்க்கத்தின் ஆசியுடன் கொழும்பு நகரில் புதிதாய் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
சிங்கள இனவாதத்திற்கு எதிராய் அனைவரும் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்க,அதே கொலைகாரர்களுடன் கைகுலுக்குபவர்கள் எவ்வளவு கேடுகெட்ட அயோக்கியர்களாய் இருக்க வேண்டும்..?எவ்வளவு பணவெறியும் அதிகார வெறியும் இருக்க வெண்டும்..?(சில மாதங்களுக்கு முன் தமிழர்களின் எதிர்ப்பால் அப்படி ஒரு திட்டமே இல்லை என்று மறுத்த நிறுவனம் இன்று அதனைப் பொய்யாக்கி பிரம்மாண்டமாய் உருவாக்கியுள்ளது)
இதுதான் எஸ்.ஆர்.எம்.லங்கா நிறுவனம் உருவான பின்னணி.
இனி இந்த நிறுவனத்தின் இன்னொரு நிறுவனமான புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமம் தோன்றிய கதையைப் பார்ப்போம்.
கள்ளச் சாராயம் காய்ச்சியவனெல்லாம் தனது கெட்ட பெயரை மறைக்க கல்வித் தந்தை ஆனது போல, கட்டப்பஞ்சாயத்து செய்தவனெல்லாம் இன்று அரசியல்வாதியானது போல,முறையற்ற வழிகளில் சம்பாதித்தவர்கள் தங்கள் சொத்துக்களைத் தக்க வைக்கவும்,அரசியல்வாதிகளின் மிரட்டலில் இருந்து காக்கவும்,ஊடகங்களில் முதலீடு செய்வதும் அதனைப் புதிதாய் ஆரம்பிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.இதன் முலம் தங்களுக்கு உரிய பாதுகாப்பினை அதிக செலவில்லாமல் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
எஸ்.ஆர்.எம்.நிறுவனம் கல்வியில் அடித்த கொள்ளையினைப் பாதுகாக்கவும் அரசியல்வாதிகளிடமிருந்து தப்பிக்கவும் உருவாக்கியது முகமூடிகளில் ஒன்று தான் தான் புதிய தலைமுறை தொலைக்காட்சி.மற்றும் புதிய தலைமுறை வார பத்திரிகை.
என்ன தான் உண்மை,நடுநிலைமை,நேர்மை என்று பித்தலாட்டம் செய்தாலும் அது தான் உண்மை.இது அனைவருக்கும் தெரியும்.இப்படிப்பட்ட குழுமத்தின் பின்னணியில் இருந்து தான் எஸ்.ஆர்.எம்.லங்கா பல்கலைக்கழகம் உருவாகியுள்ளது.(ஹிந்து ராமுக்கு அடுத்து இன்னொரு தூதர் தமிழ்நாட்டில் இருந்து உருவாகிறார்..பராக்..பராக்..)
இனி இறுதிப்பகுதிக்கு வருவோம்.
நம்மூர் பத்திரிகையாளர்கள் 200 ரூபாய் கவர் வாங்கினால் அவர்களுக்கு ஆதரவாய் கூடுதலாக 4 வரிச் செய்தி எழுதுவது வழக்கம்.அதைப்போல பத்திரிகை நிறுவனங்களும் தங்களுக்கு விளம்பரம் கொடுத்தாலோ. தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகவோ,பொருள் ஆதாயத்திற்காகவோ தங்களுடன் வர்த்தக நலன்களைப் பேணும் நிறுவனங்கள் என்றாலோ, அவர்களுக்கு எதிராய்ச் செய்தி வெளியிடுவதில்லை.
இதுதான் நம்மூர் நிறுவனங்களின்,பத்திரிகையாளர்களின் லட்சணம்.இப்படி இருக்கையில் புதிய தலைமுறையில் நேர்மை என்பது இனி இருக்குமா..?இனி ஈழத்தமிழர் பிரச்சனையில் நடுநிலையாகச் செயல்படும் என்று எப்படி எதிர்பார்க்க முடியுமா..?
புதிய தலைமுறை தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஈழத் தமிழர்களூக்கு எதிரான ஒரு போக்கைக் கடைப்பிடித்தது.நாமும் ஒரு பதிவில் இதைச் சொல்லியிருக்கிறோம்.பிரேம்சங்கர் மனைவியின் உண்மையைத் தேடி என்னும் டாகுமெண்டரியில் அப்பட்டமான இலங்கை அரசு ஆதரவு குரல் வெளிப்பட்டது.அதன் பின் சமீபகாலமாக ஈழத்தமிழருக்கு ஆதரவான செய்திகளை மிக அதிக அளவில் வெளியிட்டு வருகிறது.
இதனை நாம் இரண்டு விதமாகப் பார்க்கலாம்.தனது பல்கலைக் கழகத்தை கொழும்புவில் துவங்கி அங்கு கொள்ளையடிக்கவும் அதற்கான அனுமதியை பைசாச் செலவின்றி வாங்கவும் தனது ஊடக பலத்தைப் பயன்படுத்தியதா..?அதனை அங்குள்ளவர்களுக்கு உணர்த்துவதற்காக இலங்கை அரசுக்கு எதிர்ப்புச் செய்திகளை அதிக அளவில் த்னது தொலைக்காட்சியில் வெளியிட்டதா..?
இது தவறு என்று நீங்கள் வாதிடலாம்.உண்மையில் நடுநிலையாகத் தான் உள்நோக்கமின்றி செய்திகளை வெளியிட்டது.நீங்கள் அவதூறாகச் சொல்கின்றீர்கள் என்றும் சொல்லலாம்.
அதனை உன்மை என்று வாதத்திற்காய் வைத்துக் கொள்வோம்.
ஆனால் தமிழர் விரோதப்போக்கைக் காட்டும் அருகாமை நாடான கொழும்புவில் பல நூறு கோடிகளைக் கொட்டி உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தையும், இனி தொடர்ச்சியாக அங்கு செய்யத் திட்டமிட்டுள்ள முதலீடுகளைக் காக்கவும் சிங்கள அதிகாரவர்க்கத்திற்கு தலையாட்டும் பொம்மையாக அதன் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் புதிய தலைமுறை செயல்படாது என்று யாரும் நம்ப முடியுமா..?
நம்மூரில் தனியார் தொலைக்காட்சியில் மூன்று தொடர் வெளியிடும் வாய்ப்புக்காக ஒரு பத்திரிகை நிறுவனம் எப்படியெல்லாம்வளைகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
இவ்வளவு ஏன் சென்ற ஆட்சியில் தமிழக அரசின் லைப்ரரி ஆர்டர்(வெறும் 1800 பிரதிகள் தான் ஜெண்டில்மேன்) தனது சிற்றிதழுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காய் ஈழப்படுகொலையில் ஆட்சியாளர்களின் பங்கை எதிர்த்து குரல் எழுப்பாமல் ஈனஸ்வரத்தில் முனங்கியவர்களும் உண்டு.
சொந்த நாட்டிலேயே 5000 பத்திரிகை விற்கும் முதலாளியிலிருந்து 5 லட்சம் விற்கும் முதலாளி வரை அனைவரின் லட்சணம் இதுதான்.
ஆனால் தமிழர்களைக் கொன்று குவித்த இன்னொரு நாட்டில் செயல்படும் நிறுவனம் தங்களது முதலீடுகளைளைக் காப்பாற்றவும் பாதுகாக்கவும் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் இனவாதத்திற்கும் ஆதரவாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செயல்படாது என்று உறுதியாய்ச் சொல்ல முடியுமா..?
இன்று கொலைகாரர்களுடன் தங்கள் வணிகத்திற்காக கைகுலுக்குபவர்கள்,தங்கள் வர்த்தகத்தைக் காப்பதற்காக நாளை அவர்களது கொலைகளை மறைக்க உடன்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..?
அம்புட்டு யோக்கியமானவரா முதலாளி..?
கண்டிப்பாய் நடக்காது.இனி ஈழத் தமிழர் தொடர்புடைய விஷயத்திலும்,தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படும் விஷயத்திலும் இனி வரும் காலங்களில் படிப்படியாக......சிறிது சிறிதாக.....பாலில் துளித்துளியாய் நஞ்சு கலப்பது போல....புதிய தலைமுறைத் தொலைக்காட்சி தனது செயற்பாட்டை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக் கொள்ளும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
அ) புதியதலைமுறை தொலைக்காட்சியில் இனி சிங்கள அரசுக்கு ஆதரவாய் செய்தி,நிகழ்ச்சி வெளியிடப்படலாம்.
ஆ)ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கையிலும்,வெளிநாடுகளிலும் சிங்கள அரசால் நடைபெறும் சம்பவங்களை இருட்டடிப்பு செய்யலாம்..அல்லது செய்தியைத் திசை திருப்பி விடலாம்.
இ)அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்யுமாறு இருக்கலாம்.
ஈ)தமிழ் மீனவர் படுகொலையை இருட்டடிப்பு செய்வது....
இல்லை,அப்படிச் செய்ய மாட்டார்கள் என்பதற்கு யாராவது உத்தரவாதம் தர முடியுமா..?
இவ்வளவுக்குப் பின்னும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடுநிலை என்றும் சிறப்பானது என்றும் எவராவது உங்களிடம் சொன்னால் அது தமிழனின் பிணக்குவியலின் மீது அதனை அடிவாரமாய்க் கட்டப்பட்டது என்று செவுளில் அறைவது போல் சொல்லுங்கள்.
முதலாளித்துவம் தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் தனக்கான சவக்குழியைக் கூடத் தானே தோண்டிக்கொள்ளும் என்று சொல்லியிருக்கிறார் மார்க்ஸ்.
ஆனால் இங்கோ தமிழர்களின் பிணக்குவியலின் மீது பிரம்மாண்டமாய் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சக குழுமம் நிறுவியுள்ளது.
இனி நேர்மை,நடுநிலை,துணிச்சல்,உண்மை ஆகியன கெட்ட வார்த்தைகள்.
போங்கடா நீங்களும்.....