Showing posts with label புலனாய்வு. Show all posts
Showing posts with label புலனாய்வு. Show all posts

Wednesday, 30 April 2014

அறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. !



ஜூனியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரித்துள்ள' நக்கீரன் அமைதி காக்குமா என்ன..?

நக்கீரன் இப்பொழுது வெளியிட்ட கருத்துக் கணிப்பைப் பார்ப்பதற்கு முன்பு, 2011 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக‌ அதன் பழைய கருத்துக் கணிப்பையும் அது தொடர்பாய் வெளியிட்ட மன்னிப்பையும் பார்ப்போம்.


தேர்தலில் திமுக கூட்டணி 31 இடங்களைப் பிடித்தது.

தேர்தலில் தனது ஜோசியம் பலிக்காததால் அதன் ஆசிரியர் அதற்கு வருத்தம் தெரிவித்தார்.

இது தொடர்பான நக்கீரன் ஆசிரியரின் மன்னிப்பு.

சென்ற தேர்தல்களில் நக்கீரன் கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததை வாசகர்களும், அரசியல் பிரமுகர்களும், மக்களும் மறக்கவில்லை. ஆனால் இந்த முறை தவறி விட்டது.
கருத்து கணிப்புகளை மேற்கொள்வதற்கு என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதே விஞ்ஞான முறையையே கையாண்டோம். முடிவுகளை பாரபட்சமின்றி வெளியிட்டோம்..
தற்போது ஏன் சர்வே தோற்றது என்பதை ஆராய்ந்தோம். சாம்பிள்களில் தவறா, எடுக்கப்பட்ட முறை தவறா, சர்வே முடிவை தொகுதிகளாக மாறுவதில் தவறா என வல்லுனர்களிடம் கேட்டோம். இதெல்லாம் சரியாகவே இருப்பதாக அவர்கள் கூறினர்.
பிறகு ஏன தோல்வி ஏற்பட்டது என ஆராய்ந்தோம். நாம் தனியார் நிறுவனங்களை நம்பாமல் நேரடியாக சர்வே செய்தோம். சர்வே படிவத்தின் தலைப்பில் நக்கீரன் என்ற பெயர் இருந்தது. எனவே மக்கள் உண்மையான முடிவை சொல்லாமல், ஜெயலலிதாவுக்கு நக்கீரன் எதிரி என கருதி, மாற்றி சொல்லி இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.. இதனால்தான் கணிப்பு தவறி விட்டது.
என்ன காரணம் சொன்னாலும் தவறு தவறுதான். இதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு நக்கீரன் தன் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறது.”

-ஆசிரியர்

இப்படிப்பட்ட நக்கீரன் தான் இந்த முறை 2014 இல் நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ள‌து. (கருத்துக் கணிப்பில் பலமுறை அம்பலப்பட்டும் பிராடுத்தனத்தை ஒப்புக் கொள்ளாத ஜு.வி. க்கு நக்கீரனை இந்த விஷயத்தில் பாராட்டலாம்.)

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கருத்துக் கணிப்பினை வெளியிட்டதனால், வாங்கிய அடியின் வலி இன்னும் நக்கீரனுக்கு மறக்காத நிலையில் தொகுதிக்கு இத்தனை பேரிடம் கருத்துக் கேட்டோம் என்று வெளிப்படையாய்ச் சொல்லி இப்பொழுது கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. சில இடங்களில் இரண்டு வேட்பாளர்கள் சரி நிகர் சரியாக போட்டியில் இருக்கிறார்கள் என்று 'துல்லியக்' கணக்கும் காட்டியுள்ளது.  ஸ்ஸ்ஸ் முடியல.




5  கோடிக்கும் மேற்பட்ட  வாக்காளர்களைக்  கொண்ட தமிழ்நாட்டில், மக்களின் மனநிலையை வெறும் இருபத்து நான்காயிரம் நபர்களிடம் கருத்துக 'கேட்டதாகச்' சொல்லி வெளியிடும் யூகம் துல்லியமாக இருக்க முடியாது.தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள‌த்தான் உதவும்.

அனைவரும் நினைப்பது போல திமுக தான் முன்னணியில் இருக்கிறது என்று யாரும் சொல்லாத,சொல்லத் துணியாத செய்தியைச் சொல்லியுள்ளது.இந்த விசுவாசம் பாராட்டுக்குரியது.

நக்கீரனின் கருத்துக்கணிப்பின் படி திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் 22 இடங்களில் வெற்றி பெறும்.

இந்த முறை நக்கீரனின் கணிப்பு பலிக்குமா அல்லது இன்னொரு மன்னிப்பா?அல்லது ஜூனியர் விகடன் மாதிரியான சமாளிப்பா என்று மே 16 இல் தெரியவரும்.
***

நாம் நக்கீரன் வெளியிடும் செய்திகளின் 'நம்பகத்தன்மை'யை வேறோரு கோண‌த்தில் பரிசீலிப்போம்.

1992-93 கால கட்டங்களில் முதலில் தராசு விற்பனையை முந்திய நக்கீரன் அதன்பின் ஜூனியர் விகடனின் விற்பனையை முந்தியது. இவ்வாறு ஒரு காலத்தில் ஜூனியர் விகடனுக்கு போட்டியாக கோலோச்சிய 'நக்கீரன்' இன்று ஜூ.வி. விற்பனையில் கால்வாசியை நெருங்கவே முடியாத நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டாலே சந்தையில் அதன் நம்பகத்தன்மையும் நடுநிலைமையும் எந்த அளவு அடிபட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நக்கீரன் இதழானது முரசொலியின் வாரமிருமுறைப் பதிப்பு போலத் தான் வெளிவருகிறது.அதன் வாசகர்களும் பெரும்பாலும் திமுகவினர் தான்.அதனால் நக்கீரனில் வெளியான திமுக தொடர்பான செய்திகள் உண்மை என்று நம்புகின்றனர்.அதனால் நக்கீரனின் இந்தச் சேவை திமுக கட்சிக்காரனின் நல்லதுக்கா ? கெட்டதுக்கா ? எனத் தெரியவில்லை.

இந்த  கருத்துக் கணிப்பின் மூலம் திமுக மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருப்பதாய் நாம் உணர முடியும். பாமர மக்கள் மட்டுமல்ல,திமுக கட்சிக்காரர்கள் கூட நக்கீரன் அப்படித்தான் எழுதுவான் என்று சொல்லும் நம்ப முடியாத சூழலே இருக்கிறது.

இவ்வாறு திமுகவிற்கு வரிந்து கட்டி ஆதரவாய் வெளியிடும் நக்கீரனில்,உண்மையிலேயே திமுக தொட‌ர்பாக எழுதுவதிலேயே உண்மை இருப்பதில்லை.திமுக தரப்புச் செய்திகளையே சரியாக நக்கீரன் கணிக்க முடிவதில்லை.(டெஸ்க்கில் அமர்ந்து உருவாக்கினால் இப்படித்தான் இருக்கும் என்கிறீர்களா அதுவும் சரிதான்.)

திமுகவின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் என்று இரண்டு இதழ்களில் ஒரு யூகப் பட்டியலை  மார்ச் மாதத்தில் வெளியிட்டது.கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளின் பெயர் தவிர 35 தொகுதிகளின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் 15 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயரைத் தவறாக நக்கீரன் வெளியிட்டது.

தான் எந்தக் கட்சிக்கு ஆதரவாய்,எக்கட்சியின் பிரச்சார பீரங்கி போல் நடந்து கொள்கிறதோ,அந்தக் கட்சி யாரை வேட்பாளராய் நிறுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்பதனை தேர்தல் நெருக்கத்தில் கூட நக்கீரனின் 'துப்பறியும்' இலாகாவால் கணிக்க முடியவில்லை.இத்தனைக்கும் அதிமுக போல் திமுக இல்லை என்றும் இது வெளிப்படைத் தனமையுடன் இயங்கும் ஜனநாயக இயக்கம் என்றும் அடிக்கடி சொல்லியிருக்கிறது நக்கீரன்.

நாம் நக்கீரன் தவறாய் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் அதற்கு எழுதிய குறிப்பை மட்டும் வெளியிடுகிறோம். யாருக்கு கிடைக்கும் என்பதற்கு நக்கீரன் எழுதிய குறிப்புகள் மிகவும் சுவராஸ்யமாய் இருக்கும்.



இனி தப்பும் தவறாய்  வெளியிட்ட நக்கீரன் பட்டியல் விபரம்.

முதல் பட்டியல்: 25.02.2014 - தேதியிட்ட‌ இதழில் வெளியானது.

வடசென்னை-டி.கே.எஸ்.இளங்கோவன் (தவறு)

தென்சென்னை-ஆலந்தூர் பாரதி-மா.சுப்ரமணியம் (தவறு)

கிருஷ்ணகிரி-சுகவனம் (தவறு)

கடலூர்- (தவறு)

தி.மு.க தரப்பில் முன் னாள் மத்திய-மாநில அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனை களமிறக் கும் எண்ணம் உள்ளது. கடந்த முறையே அவர் கடலூர் தொகுதியில் போட்டியிட நினைத் தார். காங்கிரசுக்கு ஒதுக் கப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு இல்லை. இந்த முறை அவருக்குத் தருவதற்கு கனிமொழி சிபாரிசு செய்கிறார். மா.செ. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வ மும் செஞ்சி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இருக்கிறாராம்.

சேலம்-(தவறு)

தி.மு.கவில் சீட் கேட்டிருப்பவர்களில் வீர பாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவியின் மகன் பிரபுவும் ஒருவர். சமீபத்தில் ஸ்டாலினை அவரது வீட்டில் பிரபு சந்தித்தபோது, அவரிடம் ஸ்டாலின் பாசமாகப் பேசியதுடன், "நான் வெளி யிலே புறப்படுறேன்.. நீ அண்ணியை பார்த்து விட்டுப்போ' என்று சொல்லியிருக்கிறார். தன் உதவியாளரையும் கூப்பிட்டு, "பிரபு வந்திருக்கும் செய்தியை துர்காகிட்டே சொல்லி, பார்க்கச் சொல்லுங்க' என்று சொல்லியிருக்கிறார். இந்தளவுக்கு ஸ்டாலினின் மனதில் பிரபுவுக்கு இடமிருப்பதால் சேலம் சீட்டும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பிரபு தரப்பில் உள்ளது.

அடுத்த இதழில் (4.03.2014) வெளிவந்த தொடர்ச்சி இது:

அரக்கோணம் (தவறு)

 தி.மு.க.வில் சிட்டிங் எம்.பி. ஜெகத்ரட்சகனின் கவ னம் ஸ்ரீபெரும் புதூர் பக்கம் சென்றுவிட்டதால், துரை முருகன் தனது மகன் கதிர் ஆனந்தை இங்கே களமிறக்க விரும்புகிறார். அவரது மகன் விருப்பமனு அளிப்பதற்கு முன் அது பற்றி தன்னிடம் எதுவும் தெரி விக்கவில்லை என்பதில் கலைஞருக்கு வருத்தம். தினமும் தன்னை சந் திக்கிறவர் இதைச் சொல்ல வில்லையே என்று மறுநாள் துரைமுருகனை கலைஞர் பார்க்கவேயில்லை. வாரிசுகளுக்கு சீட் இல்லை என்கிற கலைஞரின் வார்த்தைகளால் துரைமுருகன் பதற்றமாகி யிருக்கிறார். இருப்பினும் எப்படியும் கலைஞரின் மனதைக் கவர்ந்து தன் மகனுக்கு சீட் வாங்கிவிட லாம் என்ற முயற்சியைத் தொடர்கிறார். திருத்தணி நகராட்சி முன்னாள் சேர்மன்களான சந்திரன், கண்ணையன் ஆகியோரும் சீட் எதிர்பார்ப்பில் உள்ளனர். டாக்டர் சரவணன், பூபாலன் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.


ஈரோடு (தவறு)

தி.மு.கவில் சீனியரான சுப்பு லட்சுமி ஜெகதீசன் தேர்தல் அரசியல் களத்திலிருந்து கடந்த தேர்தலின் போதே ஒதுங்கி விட்டதால், முத்துசாமியை நிறுத்த ஏற்பாடாகிறது. மாநில அரசியலில்தான் முத்துசாமிக்கு ஆர்வம் அதிகம். எனினும் தலைமை வலியுறுத்தினால் அதனை எப்படித் தட்டிக்கழிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் முத்துசாமி. அவர் களமிறங்காவிட்டால் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மாநில நெசவாளர் அணி எஸ்.எல்.டி.சச்சிதானந்தம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படும்.

திருப்பூர் (தவறு)

 தி.மு.க தரப்பிலும் பெண் வேட்பாளராக கீதாநடராஜன் களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. 2006 சட்டமன்றத் தேர்தலின்போது பவானிசாகர் தொகுதிக்கு இவரது பெயர் முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டு, ஜீவா ஓ.சுப்ரமணியம் களமிறக்கப்பட்டு ஜெயித்தார். பறிபோன எம்.எல்.ஏ.சீட்டுக்குப் பதிலாக எம்.பி சீட்டை எதிர்பார்த்திருக்கிறார் கீதா நடராஜன்.

பொள்ளாச்சி (தவறு)

தி.மு.கவில் மா.செ.  பொங்கலூர் பழனிச்சாமி யின் மகன் பைந்தமிழ்ப்பாரி நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பு, கட்சி நிர்வாகிகளுக்கு ஓட்டல் அறையில் வகுப்பெடுத்திருக்கிறார் மா.செ. "எல்லோரும் பாரி பேரையே சொன்னீங்கன்னா, வாங்க கிளிப்பிள்ளைகளான்னு தலைவர் கிண்டலடிப்பாரு. அதனால ஒரு சிலர் வேறு பெயர்களைச் சொல்லுங்க' என்று சொன்னதுடன், நிர்வாகிகளுக்கு விருந்தும் கொடுத்திருக்கிறார். ஆனால் நேர்காணலில், வாரிசுகளுக்கு சீட் இல்லை என ஓப்பனாகவே கலைஞர் சொல்லிவிட, மா.செ.வுக்கு அதிர்ச்சி. அவருடன் சென்ற நிர்வாகிகளோ, கலைஞரின் மனதை சட்டெனப் புரிந்துகொண்டு, உங்க விருப்பம் தலைவரே என்று சொல்லி விட்டார்கள். இந்தத் தொகுதிக்கு சீட் கேட்டிருந்த முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் மகன் மு.க.முத்துவும் நம்பிக்கை இழந்துவிட்டார். கடந்த 2009-ல் போட்டியிட்டுத் தோற்ற சண்முகசுந்தரம் அல்லது சஃபாரி கார்த்திகேயன் இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் எனத் தெரிகிறது. எனினும், கலைஞரின் முடிவு மாறினால் பைந்தமிழ்ப்பாரி வேட்பாளராகலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறது பொங்கலூர் பழனிச்சாமி தரப்பு.

கோவை (தவறு)

தி.மு.க தரப்பில் கடந்த முறை காங்கிரஸ்  நின்ற தொகுதி என்பதால், இப்போதும் கூட்டணிக்குக் காங்கிரஸ் வந்தால் கோவையைத் தள்ளிவிட்டுவிடும் சூழல் இருக்கிறது. தி.மு.க களமிறங்கினால், ஸ்டாலின் ஆதரவாளரான மாநகரச் செயலாளர் வீரகோபால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் சீட் கேட்டுப்  பணம் கட்டவில்லை என்பதால் இளைஞரணியைச் சேர்ந்த சன் ராஜேந்திரன் என்பவர் மு.க.ஸ்டாலினின் சாய்ஸாக இருக்கிறார்.

மதுரை (தவறு)

தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் அல்லது முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன் இருவரில் ஒருவருக்கு சீட் எனப் பேச்சு அடிபடுகிறது. அம்பலத்தார் என்ற முறையில் ராமச்சந்திரனுக்கு புறநகர் மா.செ. மூர்த்தி ஆதரவாக உள்ளார். மாநகர மா.செ. தளபதி, முன்னாள் மா.செ. வேலுச்சாமி உள்ளிட்டோர் பொன்.முத்துவுக்கு ஆதரவு. மதுரை இல்லாவிட்டால் தேனி என்ற எண்ணத்தில் உள்ளார் பொன்.முத்து.

சிவகங்கை-(தவறு)

  தி.மு.க தரப்பில் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு இத்தொகுதி மீது ஒரு கண் இருக்கிறது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான உடையார் சமுதாயத் தைச் சேர்ந்த சிறுபான்மை கிறிஸ்தவ மதத்தினரான ஜோன்ஸ் ரூசோவும் பரிசீலனையில் உள்ளார். பெண் வேட்பாளராக ஜோன்ஸ் ரூசோவைக் களமிறக்கினால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
ராமநாதபுரம்-(தவறு)

சிட்டிங் எம்.பி. ரித்தீஷ் வெளிப்படையான அழகிரி ஆதரவாளராகி விட்ட தால் அவர் இந்த முறை களமிறங்க முடியாது.

தமிழச்சி தங்கபாண்டியனிடம் சீட்டுக்கு பணம் கட்டும்படி ஸ்டாலின் சொன்னபோது, ""இல்லீங்கன்னா, என்னால ஒரு கோடி செலவு பண்ணுறதே கஷ்டம். எம்.எல்.ஏ. சீட் தந்தால் போதும்'' எனச் சொல்லிவிட்டா ராம் தமிழச்சி.

மா.செ. சுப.தங்கவேலன் மகன் சுப.த.சம்பத் சீட் எதிர்பார்த்திருந்தார். வாரிசுகளுக்கு சீட் இல்லை என்ற கலைஞரின் முடிவில் மாற்றம் ஏற்பட்டால், அவருக்கான வாய்ப்பு அதிகரிக்கும். சீட் கேட்டு பணம் கட்டியிருப்பவர்களில் பெருநாழி போஸ் முக்கியமானவர். இஸ்லாமியரான ரகுமான்கானை நிறுத்தலாம் என்ற பேச்சும் தலைமையிடம் எழுந்துள்ளது.

விருதுநகர்-(தவறு)

தி.மு.க மா.செ கே.கே. எஸ்.எஸ்.ஆரின் மெயின் டார்கெட் வைகோவைத் தோற்கடிப்பதுதானாம். வைகோவின் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அண்ணாச்சிக்கு வேண்டியவர்தான் என்றாலும், வைகோவுக்கு டஃப் தருவாரா என்ற கேள்வி உள்ளது. மதுரை மாநகர் மா.செ தளபதி தனது மாவட்டத்திற்குட்பட்ட திரு மங்கலம் தொகுதி விருதுநர் எம்.பி. தொகுதிக்குள் வருவதால் அவரும் சீட் எதிர்பார்க்கிறார்.

நேர்காணலில் பங்கேற்று தன்னுடைய எதிர்பார்ப்பையும் வெற்றிவாய்ப்பையும் தலை மையிடம் தெரிவித்திருக்கிறார் தளபதி. எனினும், கே.கே. எஸ்.எஸ்.ஆர் தனது சாய்ஸாக வெயிட்டான கட்சிக்காரரைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

வைகோவையும் அ.தி.மு.க. வையும் எதிர்த்து ஜெயிக்கும் வலிமையுடனான வேட்பாளர் வேண்டும் என்பதுதான் அண்ணாச்சியின் தேடல் என்கிறார்கள் தி.மு.கவினர்.

கன்னியாகுமரி (தவறு)

தி.மு.க தரப்பில் சிட்டிங் எம்.பி. ஹெலன் டேவிட்சனுக்கே சீட் தரும் எண்ணத்தில் தலைமை உள்ளது. எனினும், மா.செ. சுரேஷ்ராஜன் வேறு வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்துகொண்டி ருக்கிறார்.

இதில் அரக்கோணம் தொகுதி வேட்பாளர் பற்றிய செய்தி மட்டும் ஜூவி,ரிப்போர்ட்டர்  இதழைப் போல நக்கீரனிலும் பட்டியல் வெளிவருவதற்கு மாறுதல் செய்தி வந்தது.

ஆக மொத்தம் 15 வேட்பாளர் பெயர் தவறு. அதிலும் பாருங்கள்.வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபுவை வீட்டில் அண்ணியைப் பார்த்து விட்டுப் போ என்று சொன்னாராம்.ஆகவே அவருக்கு சீட் என்று எழுதியிருக்கிற‌து.நல்லாத் தான் சீட் கொடுக்குறாங்க நக்கீரனில்..

தேர்தலில் போட்டியிட  யாருக்கு சீட் கிடைக்கும் என்பது கடைசி வரைக்கும் தெரியாமல் இருக்கும் வாய்ப்பு அதிமுக வைப்போல திமுகவில் இல்லை என்பது உண்மை தான். முன்கூட்டியே மாவட்டச் செயலாளர்களுக்குத் தெரிந்து விடும்.அவர்களும் அதற்குத் தோதாக வேலையை ஆரம்பித்து விடுவார்கள்.அந்த வழியிலும் நக்கீரனால் வேட்பாளர்கள் பட்டியலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொகுதிக்கு இரண்டு முதல் மூன்று பெயரை வலியுறுத்தினாலும் அந்தப்பட்டியலில் உள்ளவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.பாதிக்குப் பாதி புதிய முகங்கள் நிறுத்தப்பட்டுள்ள‌னர்.

மேலும் இந்த முறை திமுக வேட்பாளர் பட்டியலை 'தளபதி' என்று நக்கீரனால் புகழ் சூட்டப்ப‌டும் மு.க.ஸ்டாலின் தான் தேர்வு செய்துள்ளார்.அவர் மனதில் என்ன இருக்கிறது,யாரை நிறுத்தப் போகிறார் என்பதனைக் கூட துப்பறிய முடியாத நிலையில் தான் இருக்கிறது நக்கீரன்.

கடந்த 15 ஆண்டுகளாய் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை ருசி கண்ட திமுக வேட்பாளர் பட்டியல் கண்டிப்பாக கடைசி நாளில் முடிவு செய்யப்பட்டிருக்காது.

ஆக நக்கீரனின் 'துப்பறியும்' திறமை அறிவாலயத்தில் நீண்ட காலமாய் பொரி விற்கும் வயதான பெரியவருக்குத் தெரிந்த அள‌வுக்கு கூட இல்லை என்பது தான் உண்மை.

இது தான் நக்கீரனின் உண்மையான நிலை.தான் எந்தக் கட்சிக்கு காவடி எடுக்கிறதோ ? அந்தக் கட்சியில் என்ன நடக்கிற‌து..?அந்தக் கட்சியின் தலைவர் அல்ல‌து வருங்கால தலைவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று கூட ஊகித்து செய்தி போட முடியாமல் பாதிக்குப் பாதி தப்பும் தவறுமாய் வெளியிடும் நிலையில் தான் நக்கீரன் 'திறமை' இருக்கிறது.

இந்த நக்கீரன் வெளியிடும் கருத்துக் 'கணிப்புகள்' எப்படிக் களத்தில் சென்று உண்மையாய் எடுக்கப்பட்டிருக்கும்..? திமுக தலைமையையும் அதன் தொண்டனையும் மகிழ்ச்சிப்படுத்தவும் எழுதப்பட்டதேயன்றி வேறொன்றுமில்லை.உண்மையை எழுதாமல் இவ்வாறு எழுதுவது உண்மையில் அக்கட்சிக்கு எந்தப் பலனையும் தராது.கெடுதலைத் தான் தரும்.வெற்றிக்கு உழைக்க எண்ணியுள்ள அக்கட்சியின் தொண்டனை முடக்கவே உதவும்.

இப்படியே எழுதிக்கொண்டிருந்தால் இப்பொழுது வாங்கும் கொஞ்சம் திமுக காரன் கூட வாங்க மாட்டான்.அதற்குப்பிறகு ஆசிரியர் குழுவுக்கு வேலை இருக்காது.

நக்கீரன் பாலஜோதிடம்,நக்கீரன் சினிமா,நக்கீரன் ஓம்,நக்கீரன் சினிக்கூத்து போன்ற இதழ்களில் தான் நக்கீரன் ஆசிரியர் குழு கவனம் செலுத்தி துப்பறிய வேண்டியிருக்கும்.

நக்கீரன் வெளியிட்டுள்ள 'கணிப்புகள்' ஒருவேளை பலித்தால் அது 'காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை'யாகத் தான் இருக்கும்.

Sunday, 2 March 2014

புலனாய்வு புரோக்கர்கள்...!



தரகு மணியன் சில வாரங்களுக்கு முன்பு மாட்டுத்தரகர் போல நடந்து கொள்கிறார் என்று விஜயகாந்தை குற்றம் சாட்டினார். அவர் தவறாக உருவகம் செய்து விட்டார் என்பது தான் நம் கருத்து. 

ஏனென்றால் மாட்டின் சொந்தக்காரர் விஜயகாந்த்.அவர் தரகராக முடியாது.அந்த மாட்டைத் தனது பா.ஜ.க.முதலாளிக்காய் விலைக்கு வாங்கும் தரகர்கள் நிறைய நபர்கள் தமிழ்நாட்டில் உண்டு.

ஒருவர் தமிழருவி மணியன். இதழ் வடிவில் ஜூனியர் விகடன்,தினமலர், தினமணி,குமுதம் ரிப்போர்ட்டர்,தொலைக்காட்சி வடிவில் தந்தி டிவி,புதிய தலைமுறை,பாலிமர் ஆகியன இதர தரகர்கள்.

இதில் ஜூனியர் விகடனின் வசீகரம் முதன்மையானது,தொழில் நேர்த்தியானது என்பது ந்ம் கருத்து.

தரகு மணியன் கடந்த சில நாட்களாய் ஒதுங்கியிருக்க, த‌னது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாய் தொடர்ந்து விஜயகாந்தை பா.ஜ.க.அணிக்கு கொண்டு வரும் தரகு வேலையில் இதர தரகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தப் பதிவில் நாம் புலனாய்வு என்று சொல்லிக் கொண்டு தரகு வேலை பார்க்கும் நக்கீரன்,ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர் ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம். 

ஜூனியர் விகடன் சனிக்கிழமையன்று வெளிவந்த இதழில் அது வெளியிட்ட செய்தி தான் இது.



ஒரு முறை படித்து விடுங்கள்.




பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கான பேச்சுவார்த்தை இறுதிக்​கட்​டத்​தை எட்டுவதற்கான சூழ்நிலை ஏற்​பட்​டுள்ளது''- என்ற பீடிகையுடன் உள்ளே வந்தார் கழுகார்.

 ''அப்படி முடிந்தால் பி.ஜே.பி-க்கு அது பெரிய சாதனைதான்!'' என்றோம். தலையாட்டியபடியே ஆரம்பித்தார் கழுகார்.

''டிசம்பர் 2-ம் தேதி பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகளை பி.ஜே.பி. தொடங்கியது. இப்போதுதான் அது லேசாக கனிய ஆரம்பித்​துள்ளது என்கிறார்கள். சிங்கப்பூர் செல்லும் முன், பி.ஜே.பி. பிரமுகர்கள் விஜயகாந்த்தைச் சந்திக்க முயற்சித்துள்ளார்கள். அப்போது, 'அனைத்தையும் சுதீஷிடம் சொல்லியிருக்கிறேன். அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிச் சென்றாராம் விஜயகாந்த். 'அகில இந்தியத் தலைமை விரைவில் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 

தமிழகத்தில் போட்டியிடும் பி.ஜே.பி. வேட்பாளர்களில் ஒரு சிலர் பெயராவது அதில் இடம்பெற வேண்டும். நீங்கள் உறுதியாகச் சொன்னால்தான், அதன் அடிப்படையில் எங்களால் முடிவு செய்ய முடியும்’ என்று பி.ஜே.பி. பிரமுகர் சொல்லியிருக்கிறார். 'நிச்சயமாக இரண்டு, மூன்று நாட்களில் உங்களுக்கு நல்ல முடிவு சொல்வோம்’ என்று சொல்லிச் சென்றுள்ளார் விஜயகாந்த். இதைத் தொடர்ந்து பி.ஜே.பி. பிரமுகர்கள் சுதீஷைச் சந்தித்தார்கள்!''

''என்ன பேசப்பட்டதாம்?''

நேரடியாக விஷயத்துக்கு வந்தாராம் சுதீஷ். 'எத்தனை சீட் தருவீர்கள்?’ என்பதுதான் அவரது கேள்வி. 'எங்களால் 12 சீட் கொடுக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்கள் இவர்கள். 'இந்த எண்ணிக்கை மிகக் குறைவு’ என்றாராம் சுதீஷ். 'ம.தி.மு.க., பா.ம.க., ஆகிய கட்சிகளுக்கு சீட் ஒதுக்க வேண்டும். பி.ஜே.பி-யும் கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும். இவை போக கொங்கு கட்சி, பச்சமுத்து ஆகியோருக்கும் இடம் ஒதுக்க வேண்டும். எனவே 12-க்கு மேல் ஒதுக்க இயலாது’ என்று சொல்லியிருக்கிறார்கள் இவர்கள். 'இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும்போது நாங்கள் 19 சீட் கேட்டோம். ஆனால், இத்தனை கட்சி இந்தக் கூட்டணிக்கு வருவதால் நாங்கள் இறங்கி வந்து 16 இடங்கள் கேட்கிறோம். 16 இடங்கள் தருவதாக இப்போது சொன்னால் உடனே, கூட்டணி உறுதியானது என்று டி.வி-யில் ஸ்குரோல் விடுவதற்கு நாங்கள் தயார்’ என்றாராம். 'சிறு கட்சிகள் சில நம் கூட்டணிக்கு வர இருக்கின்றன. 



அவர்களுக்கு ஐந்து இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீதம் இருப்பது 35 இடங்கள்தான். அதனைத்தான் பி.ஜே.பி., தே.மு.தி.க., ம.தி.மு.க, பா.ம.க. ஆகிய நான்கு கட்சிகளும் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்று இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 'யார் யார் இந்தக் கூட்டணிக்கு வருகிறார்கள் என்பதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு 16 இடங்கள் வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் சுதீஷ். 'எங்களால் 12 இடங்கள்தான் தர முடியும், ஒருவேளை பா.ம.க. வராவிட்டால் 14 இடங்களைத் தரலாம்’ என்று சொல்லியிருக்கிறது பி.ஜே.பி. தரப்பு!''

''ஏன்... பா.ம.க-வுக்கு என்ன?''

தே.மு.தி.க-வும் பா.ம.க-வும் ஒரே கூட்டணியில் இருப்பது குறித்து சிக்கல் இருப்பதை நான் ஏற்கெனவே உமக்குச் சொல்லி​யிருக்கிறேன். 'விஜயகாந்த் வேண்டாம்’ என்று ராமதாஸ் சொல்லிவருவதாக நீரே அட்டையில் போட்டு இருந்தீர் அல்லவா? அதில் ராமதாஸ் பிடிவாதமாக இருந்தார். ஆனால், அன்புமணிதான், 'பரவாயில்லை, பி.ஜே.பி. கூட்டணியில் சேருவோம்’ என்று சொல்லிவந்தார். உடன்பாடு இல்லாவிட்டாலும் அன்புமணி சொல்கிறாரே என்பதற்காக சம்மதித்தார். 'ஆனால் நம்முடைய மரியாதை குறையக் கூடாது, ஏற்கெனவே நாம் அறிவித்த தொகுதிகளை அப்படியே கொடுத்துவிட வேண்டும். மேலும் நம்முடைய சமூக ஜனநாயகக் கூட்டணியையும் இந்தக் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கட்சிகளுக்கு நான்கு இடங்கள் தர வேண்டும்’ என்று சொல்லிவந்தார். சமூக ஜனநாயக் கூட்டணியில் உள்ள கட்சிகளை பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ப்பது குறித்து இப்போது பேச வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே கழற்றிவிட்டுவிட்டது பி.ஜே.பி. 

அந்தக் கட்சிகளுக்கு உண்மையிலேயே செல்வாக்கு இருந்தால்கூட அவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு இடங்கள் இல்லை என்று பி.ஜே.பி. சொன்னது. இந்த அடிப்படையில் பா.ம.க-வுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. 'நாங்கள் அறிவித்த 10 தொகுதிகளை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். கூடுதலாக அன்புமணிக்கு தருமபுரியைத் தாருங்கள். மொத்தம் 11 தொகுதிகள் வேண்டும்’ என்று பா.ம.க. சொன்னது. 'அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட 10 தொகுதிகள்தான் வேண்டும் என்று சொல்வது சரியானது அல்ல. நீங்கள் அறிவித்ததில் சேலம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மூன்று தொகுதிகள் எங்களுக்கே வேண்டும்’ என்று பி.ஜே.பி. சொன்னது. தே.மு.தி.க. கொடுத்த பட்டியலில் பா.ம.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஆரணி, கடலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஐந்து தொகுதிகள் இடம் பெற்றுள்ளனவாம். புதுச்சேரியில் பா.ம.க. வேட்பாளரை நியமித்துள்ளது. ஆனால், அங்கு என்.ஆர். காங்கிரஸுடன் பி.ஜே.பி-யினர் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்கள். அந்தத் தொகுதியை என்.ஆர். காங்கிரஸுக்குத் தர வேண்டும் என்று பி.ஜே.பி. நினைக்கிறது. 

இந்த அடிப்படையில் பார்த்தால், பா.ம.க-வுக்கு தருமபுரி ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதியுமே சிக்கலாக இருந்தது. இதற்கு மத்தியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராமதாஸ், 'ஒரு வேட்பாளரைக்கூட வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை’ என்று சொன்னார். அது பி.ஜே.பி-யை பின்வாங்க வைத்தது. அவரிடம் பேச்சுவார்த்தையை அப்படியே நிறுத்திவைத்திருந்தார்கள். விஜயகாந்த் தன்னுடைய முடிவைச் சொன்ன பிறகு அடுத்த ஸ்டெப்பை பா.ம.க-வை நோக்கி வைக்கலாம் என்று அமைதியாக இருந்தார்கள் பி.ஜே.பி-யினர்!''



''அடுத்து என்ன நடந்தது?''

''இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் அன்புமணியை பி.ஜே.பி. தரப்பில் தொடர்பு கொண்டு பேசினார்கள். 'நீங்கள் எவ்வளவு தருவதாக இருக்கிறீர்கள்?’ என்று அன்புமணி கேட்டுள்ளார். 'எட்டு தொகுதிகளை பா.ம.க-வுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்று சொல்லியிருக்கிறது இந்தத் தரப்பு. 'சிங்கிள் டிஜிட்தான் தருவீர்கள் என்றால் பேசிப் பயனில்லை. டபுள் டிஜிட் தருவதாகச் சொன்னால்தான், பேச்சுவார்த்தையைத் தொடரலாம்’ என்று அன்புமணி சொல்லியிருக்கிறார். 'எங்களுக்கு எட்டு சீட் என்றால் மற்றவர்களுக்கு எத்தனை தரப்போகிறீர்கள்?’ என்று அன்புமணி கேட்க, 'இதை நீங்கள் ஒப்புக் கொண்டால்தான் மற்றவர்களிடம் பேச முடியும்’ என்று சொல்லியது பி.ஜே.பி. தரப்பு. 'கறாராக ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன், பா.ம.க-வுக்கு 10 தொகுதிகள், எங்கள் கூட்டணியில் இப்போது இருக்கும் பி.டி.அரசகுமாருக்கு ஒரு தொகுதி, கொங்கு  நாகராஜனுக்கு ஒரு தொகுதி. ஆக மொத்தம் 12 தொகுதிகளைக் கொடுத்துவிடுங்கள்’ என்று அன்புமணி தனது பக்கத்தைத் தெளிவு படுத்தினாராம். 'அரசகுமார், நாகராஜனுக்கு தொகுதிகள் ஒதுக்க இயலாது’ என்று பி.ஜே.பி. சொல்லிவிட்டது. அதற்கு இரண்டு காரணங்களைச் சொன்னார்களாம். 'அரச​குமார் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது, நாகராஜனை சேர்ப்பதற்கு எங்களது கூட்டணியில் இருக்கும் கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். எங்களுக்கு ஈஸ்வரன் முக்கியம்’ என்று இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 'அரசகுமார் மீது வழக்கு இருக்கிறது என்றால், யார் மீதுதான் வழக்கு இல்லை? அத்வானி மீதும்தான் வழக்கு இருக்கிறது’ என்று பா.ம.க. தரப்பு கேட்டதாகவும், அதுவே பி.ஜே.பி-யை வருத்தப்பட வைத்ததாகவும் சொல்கிறார்கள். 'அத்வானி மீது இருப்பது அரசியல் வழக்கு, அரசகுமார் மீது இருப்பது சீட்டிங் வழக்கு, இரண்டும் ஒன்றா?’ என்று கேட்கிறது பி.ஜே.பி. தொகுதி பிரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இப்படி ஹீட் விவாதங்களாக மாறியது!''

''அப்புறம்?''

''அப்புறம் என்ன? முறிவுதான்! பொன்.ராதாகிருஷ்ணனும் அன்புமணியும் நேரடியாகச் சந்தித்துப் பேசுவது என்று முடிவானது. ஆனால், அதற்கு அன்புமணி உடன்படவில்லை. 'பி.ஜே.பி-யுடன் கூட்டணி வேண்டாம் என்று காடுவெட்டி குரு சொல்கிறார். குரு சொல்வதை மீறி ராமதாஸ் செய்ய மாட்டார். ஆனால் அன்புமணியோ, பி.ஜே.பி. கூட்டணி வேண்டும் என்கிறார். அன்புமணியின் ஆசைக்காக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கிறதே தவிர, மற்றபடி உங்களோடு அணி சேர மாட்டார்கள்’ என்ற தகவல் பி.ஜே.பி. தரப்புக்குப் போனது. 'அவர்கள் எதற்காக வேண்டுமானாலும் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தட்டும்,. எங்களைப் பொறுத்தவரையில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளும் எங்கள் அணியில் இருக்க வேண்டும், இருந்தால், அது பலமான அணியாக அமையும் என்று நினைக்கிறோம். அதற்காகத்தான் இந்த ஃபார்முலாவைப் போட்டு டெல்லித் தலைமையிடம் ஒப்புதல் வாங்கினோம். பா.ம.க.-வுக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ அங்குள்ள அனைத்துத் தொகுதிகளையும் கேட்கிறார்கள். அதனால், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு என்ன பயன்? ஏதாவது ஒன்றிரண்டு தொகுதிகளையாவது மற்ற கட்சிகளுக்கு தர அவர்கள் தயாராக இருந்தால்தானே நல்லது’ என்று பி.ஜே.பி. சொல்லி வந்தது. இறுதியாக கடந்த செவ்வாய்கிழமை இரவு மீண்டும் அன்புமணியை பி.ஜே.பி. பிரமுகர் ஒருவர் சந்தித்தார். 'எங்களது இறுதி முடிவு’ என்று சில விஷயங்களைச் சொல்லிவிட்டார்!''

''அது என்ன?''

''எட்டு தொகுதிகள்தான் பா.ம.க-வுக்கு. சேலத்தையும் கிருஷ்ணகிரியையும் பி.ஜே.பி-க்குத் தர வேண்டும். இந்த இரண்டு தொகுதிகளைத் தராவிட்டால், இதில் ஏதாவது ஒன்றைத் தாருங்கள். நீங்கள் அறிவித்துள்ள தொகுதிகளில் திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தே.மு.தி.க-வுக்குத் தாருங்கள். புதுச்சேரியை என்.ஆர். காங்கிரஸுக்குத் தாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். 'ஒரு தொகுதிகூட வாபஸ் வாங்க முடியாது. நாங்கள் சுவற்றில் எழுதிவிட்டோம். பிரசாரம் தொடங்கிவிட்டோம் அதனால் சாத்தியம் இல்லை’ என்று அன்புமணி சொன்னார். 'தொகுதியையும் வேட்பாளரையும் அறிவித்துவிட்டு, கூட்டணி பேசும் முறையே சரியில்லையே’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள் பி.ஜே.பி. ஆட்கள்.''

''முறிந்ததா... தொடர்கிறதா?''

''இந்தப் பேச்சுவார்த்தைக் காட்சிகளை காங்கிரஸ் உன்னிப்பாக கவனித்துவந்தது. குலாம்நபி ஆசாத்தும் அகமது படேலும் அன்புமணிக்கு எப்போதும் நண்பர்கள். அதனால், ஆசாத் அந்த நேரத்துக்காகத்தான் காத்திருந்தார். அன்புமணியிடம் பேசலாமா என்று கேட்டுள்ளார். அன்புமணி, தனது மாமனாரும் ஆரணி தொகுதி எம்.பி-யும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமியுடன் டெல்லி பறந்துவிட்டார். அநேகமாக அகமது படேலைப் பார்த்து பேசுவதற்காகப் போனதாகச் சொல்லப்படுகிறது. 'நண்பர் ஒருவரது வீட்டுத் திருமணத்துக்குத்தான் போய் வந்தோம்’ என்று அன்புமணி சொல்லி வருகிறாராம்!''

''இறுதியாக தே.மு.தி.க-வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?''



''13, 14, 15 ஆகிய மூன்றுக்கு இடையில் தான் இழுபறி இருக்கிறது. ஆனால், பி.ஜே.பி. ஒரு கணக்கைப் போட்டு வைத்துள்ளது. தே.மு.தி.க-வுக்கு 12 இடங்கள், பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள், இதனைக் கூட்டினால் 36 தொகுதிகள் ஓவர். மீதமுள்ள நான்கு தொகுதிகளை ஈஸ்வரன், பச்சமுத்து, புதுவை என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுக்கு ஒதுக்கத் திட்டம். ஒரு தொகுதி தலித் கட்சி ஒன்றுக்கு வழங்கத் திட்டம். இந்தக் கணக்கை எடுத்துக் கொண்டு டெல்லிக்கு பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகியோர் சென்றுவிட்டனர். டெல்லியில் நடக்கும் பி.ஜே.பி-யின் பார்லிமென்ட் போர்டு மீட்டிங்கில் எடுக்கப்படும் முடிவின்படி வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம். தமிழக மூவர் குழு ராஜ்நாத் சிங்கை சந்தித்து இந்தப் பட்டியலைத் தர இருக்கிறார்கள்.

 இரண்டு மூன்று நாட்களுக்குள் தே.மு.தி.க., பா.ம.க. ஆகியவை முடிவைச் சொல்லாவிட்டால் பி.ஜே.பி-யும் ம.தி.மு.க-வும் மற்ற கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கான தொகுதிகளை மட்டும் அறிவித்துவிட்டு, தேர்தல் பணிகளில்  இறங்கத் திட்டமிட்டுள்ளார்களாம். இப்படி இவர்கள் கிளம்புகிறார்கள் என்று தெரிந்ததும் பதற்றமான சுதீஷ§ம் அன்புமணியும் பி.ஜே.பி. குழுவிடம் வலியப் பேசியிருக்கிறார்களாம்!''

''ஆனால், 'எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை’ என்று தே.மு.தி.க-வின் கொள்கை​பரப்புச் செயலாளர் சந்திரகுமார் அறிவித்துள்ளாரே?''

''ஓஹோ! அப்படியா? அது உண்மையானால், பி.ஜே.பி-யினரின் ஃபேஸ்புக்கில், '272 இடங்களில் நாங்கள் ஜெயிப்போம்’ என்ற செய்திக்கு அவர் எதற்காக லைக் கொடுத்தாராம். இன்னொன்றையும் சந்திரகுமார் சொல்லியிருக்கிறார். 'தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான், கூட்டணியை முடிவு செய்வோம்’ என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் ஒரு லாஜிக் வைத்துள்ளார்கள். 'நாம் இப்போதே கூட்டணியை அறிவித்துவிட்டால், நம்மை அவமானப்படுத்த நினைக்கும் ஜெயலலிதா இதனைப் பயன்படுத்திக்கொள்வார். உடனடியாக தே.மு.தி.க-வின் எம்.எல்.ஏ-க்களை உடைக்கப் பார்ப்பார். எனவே, தேர்தல் தேதியை அறிவித்த பிறகு கூட்டணியை அறிவித்துக்கொள்ளலாம்’ என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அதனால்தான், அவர் முடிவுகளை அறிவிக்காமல் இழுக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அவர் சொல்வது சரி என்று நினைப்பது மாதிரியே தே.மு.தி.க. வேட்பாளர் அருண் சுப்பிரமணியன் 27-ம் தேதி அன்று மதியம் முதல்வரைச் சென்று சந்தித்துள்ளார். அருண் சுப்பிரமணியன் மீது வழக்குப் போட்டு ஓட ஓட விரட்டினதும் தமிழக போலீஸ்தான். ஆனால், அரசியல்!''//
***

( //''டிசம்பர் 2-ம் தேதி பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகளை பி.ஜே.பி. தொடங்கியது. இப்போதுதான் அது லேசாக கனிய ஆரம்பித்துள்ளது என்கிறார்கள். //
இது ஆரம்ப பத்தியில் வந்துள்ள‌து..இப்பொழுது தான் லேசாக கனிய ஆரம்பித்துள்ள‌து என்றால் கடந்த மூன்று மாதமாய் எழுதிய‌தெல்லாம் இட்டுக்கட்டப்பட்டதுன்னு நீங்களே ஒப்புக் கொள்கின்றீர்களா..? லேசாக கனிவதற்காய் இதுவரை மலைபோல் எழுதிய செய்திகள் எங்கள் காசிலா..?) 


இந்த இதழில் இடம்பெற்ற பா.ஜ.க.,தே.மு.தி.க.,பா.ம.க.,என அனைத்துத் தகவலையும் பார்த்தீர்களானால் பா.ஜ.க.அலுவலக வட்டாரத்துத் தகவலாகத் தான் இருக்கும்.பொன்னாரின் செய்தி தொடர்பாளரோ இல்லை ஒரு அல்லக்கையோ ஜூ.வி.நிருபரிடம் வாந்தி எடுத்ததை அப்படியே ஜூவி இதழில் நமக்குப் பரிமாறி இருக்கிறார்கள்.அங்கங்கே மானே,தேனே கூடப் போடவில்லை.தே.மு.தி.க.,கொறடா சந்திரகுமார் முகநூலில் லைக் போட்டது( ! ) மட்டும் தான் ஜூவி புலனாய்வு செய்ததில் புதிய செய்தி.

இந்த வாந்தி செய்திகள் தினந்தோறும் தினமலர்,தினத்தந்தி,மாலைமலர்  தேர்தல் களத்திலும் அப்படியே வெளிவருகிறது.கூட்டணி விரைவில் இறுதியாகும்.அறிவிப்பு வெளியாகும் என தினசரி இதழ்களில் வெளியிட்டு வருகிறார்கள்..

இதைத்தான் ஜூனியர் விகடனும் வெளியிட்டு வருகிற‌து.

இதற்கு எதற்கு ஜூனியர் விகடனைப் படிக்க வேண்டும்.? 

ஆனால் பா.ம.க.வுக்கு 8,தே.மு.தி.க.வுக்கு 12 என கறார் காட்டிய கமலாலய வட்டாரம் சொன்னதை நமக்குச் சொன்ன ஆசிரியர்,  வைகோவுக்கு 6 தொகுதிகள் தான் எனச் சொல்லியதை நம் ஜூனியர் விகடன் ஆசிரியர் மறைத்து விட்டார்.

சரி கிடக்கட்டும்.

இப்படியாக ஜூனியர் விகடனின் தரகு வேலை கொஞ்சம் சிரமத்துடன் தொடர்கிறது.




ஜூனியர் விகடன் பா.ஜ.க.கூட்டணியில் தே.மு.தி.க.,கட்சியைச் சேர்க்க தரகு வேலை பார்க்கிறது என்றால் நக்கீரனோ தனது  தி.மு.க.கூட்டணியில் காங்கிரசைச் சேர்க்கத் தொட‌ர்ந்து தரகுப் பணியைச் செய்கிறது.

அது நடப்பு இதழில் வெளியிட்ட செய்தி தான் இது.

// தி.மு.க.தரப்பில் என்ன நடக்குதுன்னு சொல்லுப்பா..?

கூட்டணிக்குள் மறுபடியும் நுழைஞ்சிடணும்னு கனிமொழி, தயாநிதி இவங்க மூலமா தி.மு.க கதவைத் தட்டிய காங்கிரசுக்கு கலைஞர்கிட்டேயிருந்து சரியான ரிப்ளை வராததால, சாட்சிக்காரங்க காலிலே விழுறதைவிட சண்டைக்காரர் காலிலேயே விழுந்திடலாம்னு நினைச்சி, கூட்டணிக்குத் தடை போடும் மு.க.ஸ்டாலின்கிட்டேயே பேச காங்கிரஸ் மேலிடம் முயற்சி செய்வதா போன முறை பேசிக்கிட்டோமே.. யார் மூலமா பேசினாங்களாம்?''

""டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரிச்சேங்க தலைவரே.. சோனியா, அகமது பட்டேல் இவங்களெல்லாம் ஆலோசிச்சி, நீலகிரி தொகுதி முன்னாள் எம்.பி. பிரபுவை பேச வச்சிருக்காங்க. ராஜீவ்காந்தியோட நண்பரான பிரபு, சோனியாகாந்திக்கு நம்பகமானவரு. அவர்கிட்டே போனில் பேசக்கூடிய ஒரு சில காங்கிரஸ் பிரமுகர்களில் பிரபுவும் ஒருத்தர். அவர்கிட்டே காங்கிரஸ் மேலிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைச்சப்ப, ஸ்டாலின் எனக்கு நல்ல நண்பர்தான். அவங்க கட்சிக்காரங்களுக்கு எங்க காலேஜில் சீட் கொடுக்கச் சொல்லி சிபாரிசு செய்தாருன்னா உடனே ஓ.கே. பண்ணிடுவேன். அதையும் தாண்டி எங்களுக்குள் நல்ல நட்புறவு உண்டு. நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிப் பேசிடுறேன்னு பிரபு சொல்லியிருக்காரு. சொன்ன மாதிரியே, ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு ஸ்டாலினை வீட்டில் சந்திச்சி பிரபு பேசியிருக்காரு. ஸ்டாலின் மருமகன் சபரீசனும் இருந்திருக்காரு.''

""கூட்டணி முடிவாயிடிச்சா?''

""காங்கிரஸ் மேலிடத்தோட ஆசையையெல்லாம் ஸ்டாலின்கிட்டே சொன்ன பிரபு, தமிழ்நாட்டில் தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கூட்டணி அமைஞ்சா அதுதான் வெற்றிக்கூட்டணியா இருக்கும். எனக்கு தனிப்பட்ட முறையில் ஜெ.வின் அரசியல் பிடிக்காது. அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி இருந்தப்பவே தேர்தல் பிரச்சாரத்தில் அவரோடு எனக்கு மோதல்தான். நானும், எங்க தலைமையும் தி.மு.க கூட்டணியைத்தான் விரும்புறோம்னும் சொல்லியிருக்காரு. எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட ஸ்டாலின், 2ஜி விவகாரத்துல தி.மு.கவை காங்கிரஸ் களங்கப்படுத்திடிச்சி. 

இலங்கைப்பிரச்சினையில் நீங்க செஞ்ச தவறுகளெல்லாம் தி.மு.க மேலே பழியா விழுந்து எங்களுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்குது. இப்படிப்பட்ட நிலையில, மறுபடியும் கூட்டணி அமைஞ்சா அதை மக்கள்கிட்டே எடுபடும்னு எனக்குத் தோணலைன்னு சொல்லியிருக்காரு.''

""சரியான பாயிண்ட்டுதான்… அதுக்கு பிரபுகிட்டே ஏதாவது பதில் இருந்துச்சா?''

""இதெல்லாம் மேலிடத்துப் பிரச்சினையாச்சே.. அதனால, சோனியாவுக்கே போன் போட்டு, ஸ்டாலினோட கேள்விகளைப் பற்றி சொல்லிட்டு, ஸ்டாலின்கிட்டேயே போனைக் கொடுத்துட்டாரு பிரபு. கலைஞரோட உடல்நலத்தையும் ஸ்டாலினோட உடல்நலத்தையும் விசாரிச்ச சோனியா, கட்சிக்காக ஸ்டாலின் ஒவ்வொரு ஊரா சளைக்காம டூர் போறது பற்றிக் கேள்விப்பட்டதா சொல்லி பாராட்டியிருக்காரு. 

பிரபுகிட்டே ஸ்டாலின் வச்ச கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், சில விஷயங்கள் எனக்கே தெரியாம நடந்திருக்கலாம். அதுக்காக வருத்தம் தெரிவிச்சிக்கிறேன். நேரில் விளக்குறதுக்கு ராகுலை அனுப்பி வைக்கிறேன். சரி பண்ணிடலாம். நம்ம கூட்டணிக்குள்ளே மற்ற கட்சிகளும் வரும். ஸ்ட்ராங்கான கூட்டணி யை அமைச்சிடலாம்னு சோனியா சொல்லியிருக்கிறார். எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட ஸ்டாலின், நான் அப்பாகிட்டே பேசிட்டு சொல்றேன்னு மட்டும் சொல்லியிருக்காரு. சோனியா பேசியதில் ஸ்டாலினுக்கு ரொம்ப சந்தோஷமாம்.''

""எமர்ஜென்சி காலத்துக்குப்பிறகு தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி அமைச்சப்ப, கடற்கரைப் பொதுக்கூட்டத்திலேயே இந்திராகாந்தி ஓப்பனா வருத்தம் தெரிவிச்சாரு. அதுபோல, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மறுபடி அமைஞ்சா சோனியாவும் ஓப்பனா வருத்தம் தெரிவிப்பாரா?''

""அதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்ங்க தலைவரே.. .. .. காங்கிரஸ், தி.மு.க. பக்கம் தே.மு.தி.க.வை இழுக்கும் முயற்சி டெல்லி வரைக்கும் சீரியஸா நடந்தாலும் இன்னும் ரிசல்ட் கிடைச்சபாடில்லை. அதே நேரத்தில், தே.மு.தி.க- பா.ஜ.க கூட்டணி உறுதியாகிட்டதா, பா.ஜ.க தரப்பிலிருந்து மீடியாக்களுக்கு செய்தி வருது. ஆனா, தே.மு.தி.கவோட கொ.ப.செ. சந்திரகுமா ரோ இதுக்குப் பதில் சொல்லும்போது, இதுவரை அதிகாரப்பூர்வமா யார்கிட்டேயும் தே.மு.தி.க சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தலைன் னும், சிங்கப்பூரிலிருந்து 3-ந் தேதி விஜயகாந்த் வந்தபிறகுதான் கூட்டணி பற்றி தெரியவரும்னும் சொல்றாரு. 

என்னதான் நடக்குதுன்னு விசாரிச் சேன். தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு கூட்டணியை அமைச்சிடணும்னு முதல்முறையா தீவிரமா களமிறங்குன பா.ஜ.க தரப்புக்கு மூச்சு முட்டுது. கூட்டணி முயற்சியில் ஈடுபட்ட சில பேர், ஒரு நாலு நாள் லீவு எடுத்துக்குறோம்னு கேட்கக்கூடிய அளவுக்கு நிலைமை இருந்திருக்குது. ம.தி.மு.க., ஐ.ஜே.கே. போன்ற கட்சிகள்தவிர மற்ற கட்சிகளை இழுக்கும் முயற்சியில் பா.ஜ.க நினைச்ச அளவுக்கு எதுவும் நடக்கலை.''

""பா.ம.கவுடனான கூட்டணி என்ன நிலையில் இருக்குது?''

""ராமதாஸ் ஆரம்பத்திலிருந்தே சரியா பிடி கொடுக்கலை. அன்புமணிதான் பா.ஜ.க கூட்டணி யில் ஆர்வமா இருந்தாரு. ராமதாஸ் குடும்பத் தாரும், மத்தியில் அடுத்தது பா.ஜ.க ஆட்சிதான். அன்புமணி மினிஸ்டராகுற சான்ஸை ஏன் தடுக்கணும்னு கொக்கிப்போட, அதற்கப்புறம்தான் ராமதாசும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சரி சொன்னாரு. ஆனா, பா.ஜ.க தரப்பிலோ பா.ம.க தன்னோட வேட்பாளரை அறிவிச்ச சேலம் தொகுதியைக் கேட்டாங்க. ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதால சேலத்துல அனுதாப அலை வீசும்ங்கிறது பா.ஜ.க கணக்கு. அடுத்ததா, மயிலாடுதுறை தொகுதியையும் பா.ஜ.க கேட்டது. அங்கே தி.மு.க கூட்டணியில ம.ம.க போட்டியிடும்ங் கிறதால அதை எதிர்த்து பா.ஜ.க நிற்பதுதான் சரியா இருக்கும்னும், 2001 சட்டமன்றத் தேர்தலிலேயே மயிலாடுதுறையில் பா.ஜ.க ஜெயிச்சிருக்குன்னும் காரணங்கள் சொல்லப்பட்டிருக்குது. அதுபோல கிருஷ்ணகிரியையும் பா.ஜ.க கேட்டிருக்குது. பக்கத்திலே கர்நாடகா இருப்பதால, அங்கேயிருந்து பா.ஜ.கவுக்கு ஆதரவான காற்று கிருஷ்ண கிரி வரைக்கும் வீசும்ங்கிறது அவங்க எதிர்பார்ப்பு.''

""பா.ம.க தரப்பில் புயல்காற்றே வீசியிருக்குமே!''

""இருக்கிற தொகுதி களில் 3 தொகுதிகளை பா.ஜ.கவுக்குக் கொடுக்க பா.ம.க தயாரா இல்லை. அதுமட்டுமில்லீங்க தலை வரே.. பா.ஜ.க தரப்பு தே.மு.தி.ககிட்ட பேசுனப்ப அவங்க கொடுத்த லிஸ்ட்டில் பா.ம.க போட்டியிடுற 10 தொகுதிகளில் சிதம்பரம், புதுச்சேரி, திருவண்ணாமலை இந்த மூன்றைத் தவிர மற்ற 7 தொகுதிகளும் இருந்திருக்குது. இது ராமதாசுக்குத் தெரிஞ்சதும் செம டென்ஷனாயிட்டாரு. அன்புமணி யும் டென்ஷனானதோடு டெல்லிக்குப் போயிட்டாரு. அவர் காங்கிரஸ் கூட்டணிக்காக அகமது பட்டேலை சந்திக்கப் போறாருன்னு தகவல்பரவ ஆரம்பிச்சிடிச்சி. அன்புமணியோ ஆல் இந்தியா மெடிக்கல் கவுன்சில் உறுப்பினர் வீட்டு விசேஷத்துக்குப் போனதா சொன்னாரு. பா.ம.க. உருவாக்கிய அணியில் இருக்கும் கொங்கு மண்டல நாகராஜுக்காக கோவை தொகுதியை பா.ஜ.க.கிட்டே கேட்கிறாராம் ராமதாஸ். கோவையை பா.ஜ.க. தன்னோட நம்பிக்கைக்குரிய தொகுதியா நினைக்குது. அதைத் தரத் தயாரா இல்லை. இப்படி பா.ம.க.வோடு ஏகப் பட்ட உரசல்கள் இருப்பதால அதைக் கழட்டிவிட்டுட லாம்ங்கிற யோசனையும் பா.ஜ.க.விடம் இருக்குதாம். அதாவது கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளே... பா.ம.க. வெளியே... அப்படின்னு ப்ளான் பண்ணப்பட்டி ருக்காம்.''

""தே.மு.தி.க.வை வச்சி ஏகப்பட்ட நியூஸ் வந்துக் கிட்டிருக்குது. உண்மையில் என்னதான் நடக்குதாம்?''

""அவங்க ஏரியாவில் பேசிப் பார்த்தேன். எடுத்த எடுப்பிலேயே, பேசுவதற்கும் பேச்சுவார்த்தைக்கும் வித்தியாசம் இருக்குதுன்னு சொன்னாங்க. என்ன வித்தியாசம்னு கேட்டேன். கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்போறது நாங்க யாரும் கிடையாது. சுதீஷ் சாரும் எடுக்க முடியாது. பிரேமலதா அண்ணியும் எடுக்க மாட்டாங்க. கேப்டன் மட்டும்தான் முடிவு எடுப்பாரு. அவரோடு பேசினாத்தான் அது கூட்டணிப் பேச்சுவார்த்தை. மற்றவங்ககிட்டே பேசுறதெல்லாம் வெறும் பேச்சுதான்னு விளக்கம் சொன்னாங்க. அதோடு, இதுவரைக்கும் பா.ஜ.க தரப்பிலிருந்து விஜயகாந்த்கிட்டே பேசுனது பொன்.ராதாகிருஷ்ணனும் இல.கணேசனும்தான்னு சொன்னவங்க, அதெல்லாம் நடந்து இரண்டு மாசத்துக்கு மேலே ஆயிடிச்சி. அப்பவே அவங்க கிட்டே எந்த உறுதிமொழியும் கொடுக்காம, தே.மு.தி.க பொதுக்குழுவுக்குப் பிறகு முடிவைச் சொல்றேன்னு எங்க கேப்டன் அனுப்பி வச்சிட்டாரு. அதற்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் பா.ஜ.ககிட்டே எந்தப் பேச்சு வார்த்தையும் கேப்டன் நடத்தலைன்னு க்ளியரா சொல்றாங்க.''

""சரி, சாதா பேச்சு யார் யார்கூட நடந்துக்கிட்டிருக்குதாம்.. கேட்டியா?''

""சுதீஷ்கிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு இவங்களெல்லாம் சில முறை நேரிலும், பல முறை போனிலும் பேசியிருக்காங் களாம். அவங்க சொல்றதைக் கேட்டுக்கொள்ளும் சுதீஷும், இதையெல்லாம் நான் கேப்டன்கிட்டே சொல்லிடு றேன்னு மட்டும்தான் சொல்றாராம். இதில்கூட, பா.ஜ.க தரப்பு தே.மு.தி.க அலுவலகத்துக்கு வந்து பேசி யிருக்குதே தவிர, தே.மு.தி.கவிலிருந்து யாரும் பா.ஜ.க அலுவலகத்துக்குப் போகலைங்கிறதையும் சுட்டிக் காட்டுறாங்க. பா.ஜ.க போலவே தி.மு.க தரப்பிலிருந்தும் சாதா பேச்சுகள் நடந்துக்கிட்டுத்தான் இருக்குதாம். எஸ்றா சற்குணத்தில் ஆரம்பிச்சி, ஆற்காடு வீராசாமி ஆட்கள், ம.ம.க நிர்வாகிகள், திருமாவளவன், ஃபார்வர்டு ப்ளாக் சந்தானம் இவங்களெல்லாம் விஜயகாந்த்தை நேரிலேயே சந்திச்சி, கூட்டணி பற்றி வலியுறுத்தியிருக்காங்கன்னு சொல்லும் தே.மு.தி.க. உயர்மட்டம், தி.மு.க தரப்பிலிருந்து வந்து பேசுறவங்க வெளியே போய் பேட்டி கொடுக் குறப்ப, கூட்டணிக்கு அழைச் சிருக்கோம்னுதான் சொல்றாங்க. ஆனா, பா.ஜ.க தரப்பிலிருந்து, கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டிடிச்சின்னு பரப்பி விட்டுடு றாங்கன்னு சொல்லுது.''

""விஜயகாந்த் ஒரு முடிவை எடுத்து அறிவிச்சிட்டா, எதையும் பரப்ப முடியாதே?''

""இரண்டு நாளைக்கு முன்னாடி சுதீஷ்கிட்டே பொன்.ராதா பேசுறப்ப, நீங்க எதிர்பார்க்கிற எல்லாத்தையும் நிறைவேத்துறோம். கூட்டணியை அறிவிச்சிடுங்கன்னு சொல்லியிருக்காரு. அதோடு, நீங்க வருவது உறுதின்னா பா.ம.க நமக்கு வேணாம்னும் சொன்னாராம். அப்பவும் சுதீஷ், எல்லாத்தையும் கேப்டன் கிட்டே சொல்றேன்னுதான் சொல்லியிருக்காரு. விஜய காந்த்தோ, ம.தி.மு.கவை தவிர வேறெந்த அரசியல் கட்சியும் பா.ஜ.கவோடு கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமா அறி விக்கலைங்கிறதையும், மற்ற மாநிலங்களிலும் பா.ஜ.கவோடு கூட்டணி சேர கட்சிகள் தயங்குறதையும் கவனிச்சிக்கிட்டுத்தான் இருக்காராம். இதுபற்றி சிங்கப்பூரிலிருந்து அடிக்கடி சுதீஷ்கிட்டே பேசுறாராம்.''//

 ***
நக்கீரன் தான் சார்ந்திருக்கும் கட்சியில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொண்டு விட்டாலும் சில நேரம் அந்த முடிவில் கொஞ்சம் அலைபாயும்.கனிமொழி ஆதரவுச் செய்தி என்று அப்பொழுதுக்கு அப்பொழுது கொஞ்சம் அந்தக் கோஷ்டியிலும் துண்டு போட்டு வைக்கும்.   ஸ்டாலின் தனது உட்கட்சி தலைமைப் போட்டியாளர்களை ஒழிக்க காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று மறுத்தால் கனிமொழி,தயாநிதி மாறன்,பாலு ஆகியோர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் கூட்டணியை நாடுவது போல நக்கீரனும் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிற‌து.

நக்கீரனுக்கு அல்லது அதன் நெருக்கமான வட்டாரங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்ன பங்கோ,என்ன பிரச்சனையோ..?எதற்கு காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறதோ ? யாருக்குத் தெரியும்? 

அதனால் தான் கடந்த சில இதழ்களாக ஒவ்வொரு இதழிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை காங்கிரஸ் காரனை விட அதிகம் எதிர்நோக்குகிறது.செய்தியை உருவாக்குகிறது.அதன் உச்சகட்டமாக ஸ்டாலினிடம் சோனியா வருத்தம் என்று யாரும் சொல்லாத கற்பனையை எழுதுகிறது. ஆனால் ஸ்டாலினோ ரெண்டு நாளைக்கு ஒருமுறை இதனை மறுக்கிறார்.இந்த இதழ் வெளிவந்த பின்பும் மறுத்துள்ளார்.



அதே நேரம் ஜூனியர் விகடன் நக்கீரன் இரண்டு இதழ்களும் வெளியிடும் கற்பனைச் செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாய் இருக்கும். தே.மு.தி.க.-பா.ம.க.குறித்து வெளியிடும் ஜூனியர் விகடன் செய்திக்கு மாற்றுச்செய்தியையும் நக்கீரன் வெளியிடும்.






சுதீஷ் இடம் எல்லாம் சொல்லி விட்டேன்,அவரிடம் பேசி விடுங்கள்  என்று விஜயகாந்த் சொன்னதாக ஜூனியர் விகடன் எழுதினால், எனக்கு அதிகாரம் இல்லை என சுதீஷ் சொன்னதாக நக்கீரன் செய்தி வெளியிடும்.


எதிர்க் கூட்டணி உருப்பட்டு விடக்கூடாது என்பதில் இரண்டு இதழ்களுக்கும் 'நல்ல' எண்ணம்.



இந்த இரண்டு இதழ்களைப் போல அல்லாமல் இன்னொரு புலனாய்வுவு இதழான குமுதம் ரிப்போர்ட்டரின் பிரச்சனையோ வேறு மாதிரியானது.

நரேந்திர மோடி,ஜெயலலிதா இருவரும் பிரதமராக வேண்டும் என்று ஒரே நேரத்தில் எழுதிக் காட்ட  வேண்டிய விசுவாசத்திலும் நிர்ப்பந்தத்திலும் அது இருக்கிறது. சோவுக்கு ஏற்பட்ட நிலை தான் குமுதம் ரிப்போர்ட்டருக்கும்.

அதனால் அந்த இக்கட்டில்,இரண்டு கட்சிகளையும் விமர்சிக்காமல் மீதமுள்ள அனைத்துக் கட்சிகளையும் விமர்சித்து  எதையாவது பொய்யையும் புரட்டையும் எழுதி  விற்றுப்பிழைக்க வேண்டிய நிலையில் இருக்கிற‌து.ஆகவே விஜயகாந்தும் கருணாநிதியும் தான் அந்த இதழுக்கு இலக்கு.

எப்படியாவது செட்டியார் சொத்தை நிரந்தரமாக அபகரிக்க வேண்டியதனால் இந்த நிலை.


நாம் இந்த இதழ்களின் நிலையைப் புரிந்து கொள்கிறோம்.

தரகு வேலை என்பது அவ்வளவு சுலபமல்ல.ஒரு வீட்டை வாடகைதாரருக்கும் உரிமையாளருக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்படுத்தி வாடகைக்கு விடுவதிலேயே எவ்வளவு சிரமப்பட வேண்டி இருக்கிற‌து. அதிலேயே அந்த நிலை என்றால் நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்த முக்கியப் பங்காற்றும் இந்தக் கூட்டணி விவகாரத்தில் ஊடகங்களின் தரகு நிலை கஷ்டமானது தான் .


கடந்த 4 மாதங்களாய் கஷ்டப்பட்டுத் தஙக்ளின் விருப்பமான கூட்டணியை புகழ்ந்து, அலை வீசுது,புழுதி பறக்குது என வானவில் வாக்கியங்களை உருவாக்கி, மேலும் அதில் சரிப்பட்டு வராத‌ கட்சியை ஒருவாரம் மிரட்டி, அடுத்த வாரம் விமர்சித்த கட்சியை மீண்டும் புகழ்ந்து,சில நேரம்  இட்டுக்கட்டிய செய்திகளை வெளியிட்டு எதிர்க் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கி,அடுத்த வாரம் அதனைத் திசை திருப்ப இன்னொரு ஆதரவுச் செய்தியை வெளியிட்டு என சகல வித்தைகளையும் காட்டி எழுதி தாங்கள் உருவாக்க நினைத்துள்ள கூட்டணியை வெற்றிகரமாய் உருவாக்க வேண்டும்.அதன்பின் விருப்பமான அளவில் அவர்களுக்குள் தொகுதிகளைப் பிரிக்க வேண்டும்.

அதன் பின் அவர்களை வெற்றிபெறச் செய்ய நிறைய உழைக்க வேண்டும்.இது எல்லாம் கைகூடினால் அப்பொழுது மகிழ்ச்சியும் ஆதாயமும் கிட்டும்.தாஙக்ள் வரிந்து கட்டி எழுதும் கட்சிகளுக்கிடையே 
கூட்டணி உருவாகவில்லையென்றாலோ அல்லது உருவாக்கிய கூட்டணி வெற்றி பெறவில்லையென்றாலோ  அப்பொழுது தோல்வி மட்டுமல்ல ஆதாயமும் நிறுவனங்களுக்கு கிட்டாது.

வாடகைக்கு வீடு பிடிக்கும் தரகனுக்காவது ஒரு வீடு இல்லாவிட்டால் இன்னொரு வீடு.ஆனால் இவர்களைப் போன்ர ஊடக முதலாளிகளுக்கோ அடுத்த தேர்தலுக்கு ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஆகவே பதட்டத்திலும் பயத்திலும் இருக்கிறார்கள். இவர்களை நம்பி 
காசு கொடுத்து வாங்கும் வாசகன் நிலை தான் பரிதாபமாய் இருக்கிற‌து. 


 

Sunday, 30 September 2012

'புலனாய்வு' இதழ்கள்-மக்களை ஏமாற்றுவதில் விஞ்சி நிற்பது யார்..?




இந்த வாரம் நாம் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளும் ஜூனியர் விகடன்,நக்கீரன்,குமுதம் ரிப்போர்ட்டர் மூன்று இதழ்களும் 27-09-2012  மாலை முடிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.இதில் உள்ள நிறைகுறைகளை நாம் அலசி அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கியுள்ளோம்.

குமுதம் ரிப்போர்ட்டர்




தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக இந்த வாரமும் டெல்லி அரசியலை முன்னிறுத்தி அட்டைப் படக் கட்டுரையுடன் கூடிய கவர் ஸ்டோரி வெளிவந்துள்ளது.

வழக்கம் போல சென்னையில் இருந்து கொண்டு அதன் நிருபர் செல்வராஜ் எழுதியிருப்பார் என்று தெரிகிறது.ஆனால் டெல்லியில் இருந்து நிருபர் பட்டாளம் எழுதியயதைப் போல பில்ட் அப் காட்டுகிறது.பலமுறை சொல்லப்பட்ட விஷயங்கள்,கிசுகிசுக்கள்,பல இதழ்களில் வெளிவந்த செய்திகள் என அனைத்தையும்  கலந்து அரைகுறையாக தோன்றியதை வைத்து எழுதப்பட்ட கட்டுரை என்பதைத் தவிர கவர்ஸ்டோரிக்கான தகுதி எதையும் இந்தப் பதிவு கொண்டிருக்கவில்லை.பக்கங்கள் நிரப்பியது தான் மிச்சம்.

'சுவாமி வம்பானந்தா' பகுதியில் தா.பாண்டியன் விட்டுக்கு முதல்வர் சென்றது,ம.தி.முக.வில் பிளவு,மின் தட்டுப்பாடு,பா.ஜ.க.பிரச்சாரம்,என நிரம்பியிருக்கிறது.காவல்துறை கிசுகிசு ஒன்றையும் வெளியிட்டு ஒப்பெத்தியிருக்கிறார்கள்.

இரண்டு இதழ்களாக தமீம் அன்சாரி தீவிரவாதி என்று பிரச்சாரம் செய்த ரிப்போர்ட்டர் இந்த இதழில் அதைக் கொஞ்சம் மாற்றி நல்லவரா.?தீவிரவாதியா என்று ரெண்டுங்கெட்டான் நிலை எடுத்துள்ளது.உள்ளே செய்தியும் அதைப் போலத்தான்.வழக்கமாக அனைத்து இதழ்களும் செய்வது தான்.முடிந்தவரை எதிர்மறையாக எழுதுவது,அது பொதுப்புத்தியில் பதிந்தவுடன் பாதிக்கப்பட்டவர் தரப்பை எழுதுவது போல் நடிப்பது.(ஆனால் படிப்பவர்கள் நம்பும் வாய்ப்பு எதுவும் இருப்பதில்லை)

புத்திரபாசத்தில் அழகிரி,நெகிழும் தச்சுத் தொழிலாளி,திமுக மதுரை பஞ்சாயத்து,தா.பா.விழாவில் வைகோ,பாரதிராஜா உரசல்,நேரு மீதான் அபகரிப்பு புகார்,சினிமா செய்திகள் என கலந்து கட்டி உருவாகியுள்ள‌து.

கடந்த வியாழன் அன்று மதியம் 12 மணிக்குத் தான்  ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மெகா டிரான்ஸ்பர் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது.அதைப் பற்றி ஒருவரிச் செய்தி இல்லை.

அதைப்போல காவிரி பிரச்சனை தமிழ்நாடு,கர்நாடகம்,டெல்லி என கொழுந்து விட்டெறிந்து கொண்டிருக்க அது குறித்த ஒரு வரிச் செய்தி இல்லை.

ஆனால் நிகழ்காலத்தின் குரல் என்று தலைப்பு வேற அட்டையில்.

புதிய மாற்றங்களோ,முயற்சிகளோ எதுவும் இல்லை.






நக்கீரன்





நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்க நக்கீரனுக்கோ காவல்துறை கிசுகிசு அட்டைப் படக் கட்டுரையாக ஆகி விட்டிருக்கிறது.

நக்கீரனின் மக்கள் நலப் பணிக்கு இதைவிட வேறு என்ன சான்று இருக்க முடியும்?

அதைப்போல தனது பேரன் தயாநிதியைக் காப்பாற்ற கருணாநிதி திமுக செயற்குழுவைக் கூட்டினால் அதை காங்கிரசுக்கு எதிரான யுத்தபிரகடனம் செய்யும் கூட்டமாக ஊதிப் பெருக்குகிறது நக்கீரன்.அதைப்போல மந்திரி பதவியில் இடம் வேண்டாம் என்று கலைஞர் மறுத்து விட்டதாகவும் செய்தியை அள்ளித் தெரித்து கருணாநிதிக்கு போராளி அரிதார‌த்தைப் பூசியுள்ள‌து.

ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றத்தில் ராதாகிருஷ்ணன் நியமனம் குறித்த ஒரு பத்தி செய்தியை கடைசிகட்டமாக இணைத்து அப்டேட் செய்துள்ள‌து. 

ரகசிய காமரா,சிக்கிய காமக் கொடூரன் என்ற பதிவில் வழக்கம் போல் காமக்கொடூரனை அம்பலப்படுத்துகிறேன் என்ற போர்வையில் வாசகனுக்கு வக்கிரத்தையும் ஆபாசத்தையும் விலாவாரியாகப் பந்தி வைத்துள்ள‌து.
வழக்கம் போல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுடன் 2 பக்க அரசியல் கிசுகிசு.

அதைப்போல எதிர்க்குரல் என்னும் பெயரில் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறார்.
இந்த இதழில் காங்கிரசைக் காப்பாற்றுபவர்கள் யார்? என்ற தலைப்பில் 3 பக்கங்கள் கொண்ட பதிவினை எழுதியுள்ளார்.காங்கிரசை விமர்சனம் செய்து அதைத் தாங்கிப் பிடிப்பவர்கள் குறித்து எழுதபப்ட்ட  அந்தப் பதிவில் காங்கிரசின் மிகப்பெரிய,நீண்டநாள்  கூட்டணிக் கட்சியான,அதிக காலமாக திமுக.வைத் தாங்கிப் பிடிக்கும்  தி.மு.க. வைப் பற்றி எழுதியதே மொத்தம் 3 வரிகள் தான்.அதுவும் இப்படித்தான்.

காங்கிரஸ் பலவீனமடைந்திருக்கும் இந்தச் சூழலிலாவது தனது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று திமுக நினைப்பது இயல்பு தான்.அதே சமயம் காங்கிரசுடனான இணக்கத்தை முற்றாக முறித்துக் கொள்ளும் சூழலில் திமுக இல்லை.எனவே அரை மனதோடு பந்த்தில் திமுக பங்கேற்றது.

இது தான் அந்த வரிகள்.இதைத் தாண்டி விமர்சனம் எதுவுமில்லை.வாங்குன லைப்ரரி ஆர்டருக்கு விசுவாசமா.?என்று தெரியவில்லை.

இது எதிர்க் குரல் அல்ல.ஜால்ரா குரல்.

அதிமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் பிளான் என்று 3 பக்க பக்கங்களை நிரப்பியுள்ள‌னர்.

அடுத்த குறி என்னும் தலைப்பில் திமுக மந்திரிகளைப் பழி வாங்க திட்டமிடுகின்றனர் என்று செய்திப்பதிவு.திமுக வாசகத் தொண்டர்களுக்காக எழுதப்பட்டுள்ள‌து.அதில் ஹிந்து ராமுக்கும் சேர்த்து வக்காலத்து.
தாண்டவம் தகராறு-அமீர் ராஜினாமா பேக்ரவுண்ட் என்னும் தலைப்பில் தாண்டவம் திரைப்பட கதை தகராறு-பஞ்சாயத்து குறித்து நிருபர் எஸ்.பி.சேகர் எழுதியுள்ளார்.நிருபர் யூ டிவி நிறுவனத்தின் மீது  சாப்ட் கார்னர் உள்ளவர் போலும்.

அவர் எழுதியது இது.

”பிரச்சனை பெரிதானதால் மூலக்கதை-பொன்னுசாமி என் டைட்டிலில் போடுவதுடன் ஒரு தொகையும் தருவதாக யு டீவி சமரசம் பெசியது.இதில் உடன்படாத பொன்னுசாமி பிரச்சனையை இயக்குனர்கள் சங்கத்திற்கு கொண்டு போனார்"
என்று எழுதியுள்ளார்.

மூலக்கதை-பொன்னுசாமி என்று டைட்டிலில் போட வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கை.அதை வலியுறுத்தி தான் அவர் போராடிக் கொன்டிருக்கிறார்.இதற்கு மேல் படம் முழுவதும் தயாரிக்கப்பட்டு விட்ட இந்த நேரத்தில் எந்தக் கோரிக்கையையும் வைக்க முடியாது என்பது அவருக்கும் தெரியும்.ஆனால் டைட்டிலில் பெயரைப் போட முற்றுமுழுதாக யூ டிவி மறுத்து விட்டது.இது அனைவருக்கும் தெரியும்.ஆனால் நிருபரோ யூ டிவி பெயர் போடத் தயாராய் இருந்தும் பொன்னுசாமி பிரச்சனையை வளர்ப்பதாக அர்த்தம் தொனிக்கும் விதத்தில் எழுதியுள்ளார்.

யூ டிவி விருந்தில் பங்கேற்ற விசுவாசம் வெளிப்படாமல் இருக்குமா என்ன..?

மொத்தத்தில் நக்கீரன் வழக்கம் போலத் தான்.எந்த மாற்ற‌மும் இல்லை.
இப்படியே போனால் இப்ப விக்கிற  40000 காப்பியும் விக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.



ஜூனியர் விகடன்




இந்த வாரம் அட்டைப் படக் கட்டுரை ஒன்றும் தேறவில்லை என்பதால் 
ஏற்கனவே பல செய்திப்பதிவுகளில் சொல்லப்பட்ட பல செய்திகளை சின்னச் சின்ன பாக்ஸ் மேட்டர்களாக மாற்றிப் புதிய தலைப்பு வைத்து நன்கு லே அவுட் செய்து கவர் ஸ்டோரியாக மாற்றி அட்டையில் வைத்து விற்பனையும் செய்து விட்டார்கள்.

யார் யார் தலைமறைவாய் இருக்கிறார்கள் என்று தலைப்பிட்டு ஸ்டோரி.பெரும்பாலும் திமுகவினர்.அதில் ஒன்றிரண்டு இதர துரைகளைச் சேர்ந்தவர்களையும் சேர்த்திருக்கிறார்கள்.

மக்களை நாசூக்காக ஏமாற்றுவதில் ஜூ.வி.யா கொக்கா..? 

மிஸ்டர் கழுகு பகுதியில் தா.பா.பிறந்த நாள் செய்தி,சைதை துரைசாமிக்கு ஆதரவான ஒரு செய்தி(நடுநிலை போல் தோற்றமளிக்கிற‌து),பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு பாலோ அப்,அடுத்த தலைமைச் செயலாளர் யார் ..? ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்ற‌த்தில் ஒரு சிறு பிட் என கலந்து கட்டி எழுதியுள்ளார்கள்.

தாண்டவம் பிரச்சனை,பன்னீர் செல்வம் வீட்டில் நடந்த பஞ்சாயத்து,ஆந்திர மேட்டர்,ப.சிதம்பரம் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இடிப்பு ஆகியன பதிவாகி உள்ள‌து.

எனது இந்தியா,கழுகார் பதில்கள்,மயக்கம் என்ன ஆகிய தொடர்கள் வழக்கம் போல வெளிவந்துள்ளது.(அவரவர் மனநிலைக்கு ஏற்ப,விருப்பத்திற்கு ஏற்ப‌ இதை எடுத்துக் கொள்லலாம்)

இதற்கு முன்பு காசு வாங்கிக் கொண்டு நிறுவனங்களின் விளம்பரத்தை செய்தியைப் போல் வெளியிட்ட ஜூ.வி.இப்பொழுது தனது சுட்டி விகடன் விளம்பரத்தைச் செய்தியைப் போல் 2 பக்கங்கள் ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டு வருகிற‌து.காசு கொடுத்து வாங்குபவன் இதையெல்லாம் கேள்வி கேட்கவா போகிறான் என்னும் நினைப்பில்.

அப்புறம் அவ்வளவு தானா..?

ஆசிரியர் குழு  பெயர் கூட இல்லாமல்  இதழ் வெளிவரும்.ஆனால் வைகோ புகழாரச் செய்தியோ அவருக்கு சொறிந்து விடும் செய்தியோ இல்லாமல் இதழ் வெளிவருமா என்ன..?

வழக்கம் போல் வைகோவுக்கு 2 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ள‌து.தா.பா.இதழில் வைகோ பாய்ந்ததை வெளியிட்டுள்ளனர்.

ஜூவி.சராசரிக்கும் கீழ் இருக்கிறது.


மொத்தத்தில் அனைத்து இதழ்களும் அமைச்சர்கள் மாற்ற‌ம் என்று தான் பலமுறை கிசுகிசுக்களை வெளியிட்டு வந்தனர்,ஆனால் அது நடக்கவில்லை.எதிர்பாராவிதமாக   ஐஏஎஸ் அதிகாரிகள் பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளனர்.இது  குறித்து இதற்கு முன் யாரும் கோடிட்டுக் காட்டவில்லை.அப்புறம் என்ன புலனாய்வு..?

ஆனால் இனிமேல் இதற்குப் பின்னணி என்று அவரவர்க்குத் தோன்றிய கதைகளையும் விருப்பங்களையும் எழுத்தில் போட்டி போட்டுப் பதிவு செய்வர்.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் அனைத்து இதழ்களும் சொல்லி வைத்தாற் போல்,நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள காவிரி பிரச்சனையை மருந்துக்கும் பதிவு செய்யவில்லை.இதழ்கள் நம் மக்கள் மீது காட்டும் அக்கறை இது தான்.

மக்களை ஏமாற்றுவதில் விஞ்சி நிற்பது யார் என்ற போட்டியில் ஒவ்வொரு வாரமும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வாசகர்கள் எப்பொழுதும் ஏமாறுவது என்னவோ உண்மை...!