Sunday 6 April 2014

குமுதம் வேட்பாளர் அரக்கோணத்தில் போட்டி...!



குமுதம் இந்த வார இதழில் தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

அரசியல் என்ற பெயரில் அக்கப்போர்களை வெளியிடும் 'புலனாய்வு' இதழ்களில்தான், வழக்கமாக தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தங்கள் விருப்பங்களை பக்கம்பக்கமாக வெளியிடுவார்கள். பல்சுவை இதழ்கள் என்ற பெயரில் சினிமாவையும் ஆபாசத்தையும் கலந்துகட்டி முதன்மைப் படுத்தி விற்பனை செய்யும் குமுதம், விகடன் போன்றவை இதைச் செய்வது இல்லை. அந்த வாசகர் வட்டம் வேறு என்பது மட்டுமல்ல, இதை வெளியிடுவதற்குத் தான், பொழுதுபோக்கு பத்திரிகை நிறுவனம் ஒவ்வொன்றிலும் தனியாகப் புலனாய்வு இதழ்களை நடத்துகின்றனவே!

ஆனாலும், குமுதம் இதழில் இந்தத் தேர்தலையொட்டி கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தொகுதிவாரியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. செட்டியார் சொத்தை, நிரந்தரமாய்த் தனதாக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராய் இருக்கும் ஒரு கும்பல், ஒரே நேரத்தில் ஜெயலலிதாவுக்கும், மோடிக்கும் சேர்த்து ஜே போட்டுக் காரியம் சாதிக்கத் துடிக்கிறது.

ப்படிப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் எப்படி இருக்கும் என்பதும், யாருக்கு வெற்றி மாலை சூடும் என்பதும் தமிழ்வாணனின் மர்மக் கதை முடிச்சு அல்ல.

அதன்படியே, கருத்துக்கணிப்பில் கட்சிகளின் பெயர்ப்பட்டியலில், அதிமுகவுக்கு அடுத்ததாக தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.க.அணி இடம்பெற‌வில்லை; தொகுதிக்கு நூறு நபர்கள்கூட இல்லாத பா.ஜ.க.தான் இடம்பெற்றிருக்கிறது.



இந்தக் கருத்துக் கணிப்பு விவரங்கள் எல்லாம் பெயரளவுக்குகூட களத்தில் சென்று எடுக்கப்படவில்லை என்பதும் புகைப்படங்கள் மட்டும் தொகுதிக்கு இரண்டு இடங்களில் சென்று எடுத்திருப்பார்கள் என்பதும் நன்றாகவே தெரிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என முன்னோர்கள் சும்மாவா, சொல்லிவிட்டுப் போனார்கள்.

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடுபவர் என்.ஆர்.இளங்கோ என்ற வழக்கறிஞர்.



ஆனால் அரக்கோணம் தொகுதியில் இப்போதைய எம்.பி. ஜெகத்ரட்சகனே மீண்டும் போட்டியிடுவதாக குமுதம் இதழில், ஏதோ ஒரு செய்தியின் மூலையில், கவனக்குறைவாக என்கிறபடி இல்லை; தொகுதிவாரியான கருத்துக்கணிப்பில் அரக்கோணம் தொகுதியைப் பற்றிய செய்தியில், இது நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

பேருக்காவது, தொகுதிப் பக்கம் சென்று உண்மையாய் கருத்துக்கணிப்பு எடுத்திருந்தால், இப்படி ஒன்று நடந்திருக்குமா?  சென்னையில் உட்கார்ந்துகொண்டு, விருப்பப்படி எழுதியதால், சென்ற முறை,2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் பெயரே, எழுதியவரின் மனதில் இருந்ததால் இப்படி ஆகியிருக்கிறது.

ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு முத்திரை வாசகத்தை வைத்துக்கொள்வார்கள். அதற்கும் அவற்றின் எழுத்துகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது வேறு! ஆனாலும், அவர்கள் மறுக்கும்வரை அதை அவர்களின் அடையாளமாகத்தானே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பிரதான போட்டியாளரின் பெயரையே தப்பாய் எழுதுவது தான் சிறந்த கருத்துக் கணிப்பின் லட்சணமா..?

( இத்தனைக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர் குலேந்திரன் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்.அவரிடமாவது எழுதும் முன் கேட்டிருக்கலாம்.)

தன் முத்திரை வாசகத்தில் புதுமையைக் கொண்ட குமுதம் இதழில், இப்படியும் புதுமை காட்டலாம் என முடிவெடுத்து இருக்கிறார்களோ, தெரியவில்லை!

இட்டுக்கட்டி எழுதுவது என்றும் அதனையும் உடல் வலிக்காமல் எழுதுவது என்றும் முடிவெடுத்தாகி விட்டது. அதை தவறில்லாமல் ஒழுங்காய் எழுதக்கூடாதா..? (இந்த மாதிரி விஷயங்களில் விகடன் ஆட்கள் தான் எக்ஸ்பர்ட்.) அதைக் கூட ஒழுங்காய் செய்யத் தெரியாத மக்குகளைத்தான், ஏசிடெக் கல்லூரியில் படித்த வரதராஜன் வேலைக்கு வைத்திருக்கிறாரா?

வரதராஜன் நடத்துற கருமாந்திரத்தை எல்லாம் காசு கொடுத்து வாங்கிப் படிக்கணும் என்பது இந்தச் சமூகத்தின் சாபக்கேடு. 


1 comment:

Unknown said...

அம்புலி மாமா பல மித்ரா, பூந்தளிர் போன்று ஒரு காலத்தில் குமுதம் என்ற ஒன்று இருந்தது.. என்ற காலம் வருமா ? வந்தால் தமிழகத்துக்கு நல்லது.

இது விகடன், இந்து தமிழ் இந்து டைம்ஸ் என பவற்றிக்கும் பொருந்தும்.