Wednesday, 16 April 2014

ஜெயலலிதாவை எதிர்க்கும் 'குமுதம் ரிப்போர்ட்டர்' வரதராஜன்..!



ஜூனியர் விகடன் இதழைத் தொடர்ந்து வரதராஜனின் 'குமுதம் ரிப்போர்ட்டர்' வாரமிருமுறை இதழும் தனது கருத்துக் கணிப்பு சர்வேக்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது.

நாம் பலமுறை சொல்லியிருந்தாலும்,மீண்டும் மீண்டும் பதிவு செய்யத் தான் வேண்டியிருக்கிறது.குமுதம் செட்டியாரின் வாரிசுக்கு மட்டும் சொந்தமான‌ சொத்துக்களை தன்வசம் ஆக்கிக்கொண்ட வரதராஜன், கருத்துக்கணிப்பை மட்டும் சும்மா விட்டு வைத்திருப்பாரா..?

இதற்கு மேல் எழுத ஒருவரும் இல்லை என்னும் அளவுக்கு ஆட்களை வைத்து எழுதியிருக்கிறார்.நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக எதுவும் இல்லை. ஆனால் அதற்காக நமக்கு வேலை வைக்காமலும் இல்லை.

யாருக்கு ஓட்டுப் போடுவார்கள்? என்று தான் வழக்கமாய் கருத்துக் கணிப்புகள் இருக்கும்.ஆனாலும் இங்கோ நேர் எதிர்.யார் மீது தமிழ் நாட்டு மக்கள் படுகோபமாய் இருக்கிறார்கள், யாருக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்று கருத்துக் கணிப்பாம்.

இதன் மூலம் யாருக்கு வெற்றி ? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாம். எதையும் குறுக்காகச் சிந்திப்பது தானே வ.ரா.கும்பலின் இயல்பு!

அதற்காக, தேர்தல் நேரத்தில் அவர்கள் என்ன அருளியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்காமல் இருக்கமுடியுமா? வேறு வழியில்லாமல் படித்துத் தொலைந்தோம்.




கருத்துக் கணிப்பின் அடிநாதம் இது தான்.

தமிழ்நாட்டின் 39 பாராளுமன்ற‌ தொகுதிகளில் 66100 நபர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்களாம்.

கருத்துக்கணிப்பின் அடிப்படையையே ஆட்டம் காணும் சில கேள்விகள் இதில் எழுகின்றன.

இவர்கள் கணக்குப் படி தொகுதிக்கு 1695 நபர்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறார்கள்.அதிலும் போகிற போக்கில் வருபவர் போகிறவர் என்று கேட்கப்பட்டவை அல்ல.

ஆண்கள்,பெண்கள்,முதல்முறை வாக்காளர்கள்,
மாண‌வர்கள்,சுயதொழில் செய்பவர்கள்,பள்ளிக்கல்வி படித்தவர்கள்,பள்ளிக் கல்வி முடிக்காதவர்கள்,பட்டதாரிகள்,தனியார் நிறுவன ஊழியர்கள்,அரசு ஊழியர்கள்,விவசாயிகள்,மாணவர்கள் என பலதரப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவு,எதிர்ப்பு என தனித்தனியாகத் தொகுத்திருக்கிறார்கள்.




ஒரு பாராளுமன்றத் தொகுதிக்குத் தோராயமாக 15 லட்சம் வாக்காளர்கள் இருப்பார்கள்.இவர்களின் வரையறையைப் பார்த்தால் ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு 1695 நபர்களை  மேற்கண்ட பல்வேறு பிரிவுகளில் சல்லடை போட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதிலும் மேற்சொன்ன ஒவ்வொரு பிரிவு நபர்களிலும் மிகச்சரியாக கண்டுபிடிப்பதும்,தேர்ந்தெடுப்பதும் மிக மிகச் சவாலான பணி.மிக நீண்ட காலம் பிடிக்கும் பணி. அதிலும் அறிவு சார் பணி.இதையெல்லாம் தாண்டி இதற்கு நிறைய மனித‌ உழைப்புத் தேவைப்படும்.

ஆனால் மேற்கண்டவற்றைச் செய்திருப்பதாக குமுதம் ரிப்போர்ட்டர் சொல்லியிருக்கிற‌து.

குமுதம் ரிப்போர்ட்டரில் சீனியர் நிருபர்கள்,நிருபர்கள் உட்பட மொத்தம் 10 பேர் மட்டும் பணியாற்றுகின்றார்கள்.இன்னும் தற்காலிக,நிரந்தரப்படுத்தப்படாத 5 நிருபர்கள் இருப்பதாய் வைத்துக் கொண்டாலும் மொத்தம் 15 பேர் தான்.வெறும் 15 பேர் இவ்வளவு பெரிய பணியை எப்படிச் செய்தார்கள்..? (அதுவும் தஙகளது பிற தேர்தல் ரிப்போர்ட்டிங் பணிகளுக்கு இடையில் )

விகடன் குழுமத்திற்கு இருப்பது போல 'மாணவ நிருபர்' என்னும் பெயரிலான புத்திசாலி அடிமைகளும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு இல்லை.

ஆக குமுதம் ரிப்போர்ட்டர் இப்படி ஒரு கருத்துக் கணிப்பை உண்மையாய் நடத்த வாய்ப்பே இல்லை என்னும் முடிவுக்கு வர வேண்டியிருக்கிற‌து..

நரேந்திர மோடிக்கு ஆதரவுக் கருத்துக் கணிப்பு என்பதால் பாரதிய ஜனதாக் கட்சியின் அலுவலகத்தில் உள்ள‌ சேவகர்களிடம் கொடுத்து எழுதி வாங்கி விட்டார்களா..? இல்லை குமுத‌ம் ரிப்போர்ட்டர்அலுவலகத்தில் அமர்ந்து,பொய் சொல்வது தான் சொல்கிறோம், மொத்தமாய் குத்து மதிப்பாய்,பிரம்மாண்டமாய்  66100 நபர்கள் என்று புளுகித் தள்ளி விட்டார்களா...?

நாம் என்ன முடிவுக்கு வர முடிகிறது என்றால், கடைசிக் காரண‌த்திற்குத் தான் வாய்ப்பு இருக்கிறது. இந்த அபத்தம் நம்மைக் கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள் என்ற மிதப்பில் மட்டும் வருவதல்ல இது.அரைகுறை முட்டாள் தனத்திலும் வருவது தான் இது.

இதே கால கட்டத்தில் கடந்த வாரம் இது போன்ற‌ ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்ட ஜூனியர் விகடன் மொத்தம் தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 11700 பேரிடம் (இன்னொரு சர்வேயில் 5500 நபர்களிடம் எடுத்ததாகச் சொல்லியது ஜூவி.)கருத்துக் கேட்டதாக எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாம் ஆரம்பத்தில் இருந்து சொல்லிவருவது தான். கருத்துக்கணிப்பை இட்டுக்கட்டி எழுதுவதில் மற்றவர்களை விடத் 'தெளிவும்' லாவகமும் 'பாரம்பரியமும்' மிக்க விகடன் ஆட்கள்தான் கை தேர்ந்தவர்கள்.

வரதராஜனைப் போலவே, திடீர் அதிர்ஷ்டத்தால் பத்திரிகையாளர்களாக ஆன வ.ரா. கும்பலுக்கு சுட்டுப் போட்டாலும் அந்த கூறு வராது.
**
ருத்துக் கணிப்பின் அடிப்படையே ஆட்டம் கண்ட நிலையில் அதில் வெளியிட்ட முடிவுகளின் உண்மைத் தன்மையைப் பார்ப்போம்.

இவர்களின் கருத்துக்கணிபின்படி, தமிழ்நாட்டு மக்கள் காங்கிரஸ் மீது அதிக கோபமாக இருக்கிறார்கள்.



நடப்பது இந்திய நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல்.ஆகவே கடந்த 10 ஆண்டுகளாய் மத்தியில் ஆட்சி பொறுப்பை  ஏற்று நிர்வாகம் செய்தவர்கள் மீது தான் மக்களின் கோபம் இருக்கும்.ஆக இது சரிதான்.

அதே போல திமுக மீதும் அதே அளவுக்கு கோபத்தில் இருப்பதாய் கருத்துக் கணிப்பு சொல்கிறது. ஒரு விழுக்காடு கூட மாற்றம் இல்லை.அவ்வளவு துல்லியம்.

தி.மு.க. கடைசி வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அனைத்தையும் ருசித்து அனுபவித்து விட்டு கடைசி சில மாதங்கள் விலகி இருப்பதாய் பாவ்லா காட்டினாலும்,பல நாடகங்களை நடத்தினாலும் மக்கள் மிகவும் விழிப்பாய்த் தான் இருக்கிறார்கள்,ஆக்வே அவர்கள் மீதும் மக்களின் கோபம் சரி சமமாய் இருக்கிறது என்று சொல்வதிலும் தர்க்க ரீதியாய் எதுவும் பிழை இல்லை தான்.

அடுத்ததாக மக்கள் நேற்று முளைத்த‌ 'ஆம் ஆத்மி' மீது படு கோபமாய் இருக்கிறார்களாம்.காங்கிரஸ்,தி.மு.க. வை விடக் கொஞ்சம் குறைந்த அளவில் அதாவது 15.5 விழுக்காடு மக்கள் கோபமாய் இருக்கிறார்களாம்.

கேட்பதற்கு படு காமெடியாய் இருந்தாலும் முட்டாள்தனமாகவும், அபத்தமாகவும் இருக்கிறது.

பெரு நகரங்களில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களைத்தவிர, இங்குள்ள பெரும்பான்மையோருக்கு இன்னும் ஆம் ஆத்மி என்னும் கட்சி இருப்பதே தெரியவில்லை. தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் நாள் முழுவதும் திட்டமிட்டு பரப்பப்படும் வெளிச்சத்திலும் இன்னும் மோடியே நம்மூர்க் கிராமங்களில் போய்ச்சேராத நிலையில், ஆம் ஆத்மியின் பிரபலம் அவ்வளவு சீக்கிரத்தில் நிகழ்ந்துவிடுமா? அதுவும் அதை எதிர் விமர்சனங்களோடு மக்கள் பார்க்கும்நிலை உருவாகிவிட்டதா? என்றெல்லாம் யாரும் யோசிக்கமாட்டார்கள் என இந்த முட்டாள் கும்பல் நினைத்துக் கொள்கிறதா? அல்லது நினைக்கக்கூடாது என பத்திரிகை அதிகாரத்தால் திணிக்கமுயல்கிறதா?

ஆம் ஆத்மி கட்சியின் மீது தமிழ்நாட்டு மக்கள் படுகோபமாய் இருக்கிறார்கள் என்பது எந்த அடிப்படையில்..?

காங்கிர‌சின் நகலாய் இந்திய நாட்டை மூன்று முறை ஆட்சி செய்த பாரதிய ஜனதா மீது, தமிழ்நாட்டை இப்பொழுது ஆட்சி செய்யும் அதிமுகவைவிட மக்கள் அதிக  கோபமாக ஆம் ஆத்மி கட்சியின் மீது இருக்கிறார்கள் எனறு எழுதுகிறார்கள், இந்த 'அதிமேதாவிகள்'!

டெல்லியில்தான் 43 நாட்கள் ஆட்சியில் இருந்திருக்கிறது ஆம் ஆத்மி .டெல்லி மக்கள் ஆம் ஆத்மி மீது கோபமாய் இருக்கிறார்கள் என்று சொல்வதிலாவது ஒரு அர்த்தம் இருக்கிறது.கருத்துக் கணிப்பு எடுத்தது டெல்லியிலா..?தமிழ்நாட்டிலா..?

ஒருவேளை டெல்லியைப்போல காங்கிர‌சுக்கு மாற்றாய் ஆம் ஆத்மிக்கு ஓட்டுப் போட்டு விடுவார்களோ என்னும் அதீதப்பதற்றத்திலும், வரதராஜனின் உள்ளம் கவர் நாயகன் நரேந்திர மோடி மட்டுமே பிரதமராய் வர வேண்டும் என்னும் உள்ளக் கிடக்கையிலும் எழுதப்பட்டது தான் இது.அதனால் தான் பூத் ஏஜெண்டுக்கு கூட ஆள் இல்லாத ஆம் ஆத்மியை இங்கு மிகப்பெரிய எதிரியாய்ச் சித்தரிக்கிறார்கள்.

கவலைப்பாடாதீர்கள் வ.ரா.!

நீங்கள் அதீதமாகப் பதற்றப்படுவது போல ஒருக்காலும், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்துவிடாது. நம்புங்கள்!

அப்படி ஒருவேளை வந்தாலும்,செட்டியாருக்கு எதிராக உங்களைத் தக்க வைக்க கட்சிக்கு ஒரு அதிகாரத்தரகர் உங்கள் கைவசம் இருப்பது போல,அதிலும் ஒரு ஆளைப்பிடித்து விடலாம்.
**


இனி இறுதிப்பகுதி

//வேலூரில் இஸ்லாமியர் ஒருவர் மோடி மீது எனக்குஅபிப்ராய பேதம் உண்டு. ஆனால் அவர் தான் பிரதமராய் வர வேண்டும் என்று சொன்னாராம்.//

மேலே பல பிரிவுகளில் கருத்துக் கேட்டதாக பல வரைபடங்களை வெளியிட்டுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் அல்லது சிறுபான்மையினரிடம் கருத்துக் கேட்டதாக எங்கும் பதிவு செய்யவில்லை.ஆக இதுவும் பொய்.

இதைத்த‌விர ஒட்டுமொத்த கருத்துக்கணிப்பின் நோக்கம் எது என்பதை இவ்வாறு எழுதப்பட்டுள்ளதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அதே போல அது மோசடி என்பதையும் நமது யதார்த்த வாழ்வில்,நாம் அறிந்துள்ள‌ இஸ்லாமியர்கள் மூலம் புரிந்து கொள்ள‌லாம். அதற்கு எங்கும் செல்ல வேண்டியதில்லை,குமுதம் அலுவலகத்தில் கருத்துக் கேட்டாலே போதுமான‌து.




தற்கு மேல் இந்தக் கருத்துக்கணிப்பு குறித்து எழுத என்ன இருக்கிற‌து.?

நான்காவது தூண் எப்படி செல்லரித்துப் போய்க்கிடக்கிறது என்பதற்கு 'குமுதம் ரிப்போர்ட்டர்' ஒரு உரைகல்.

கொசுறு: 

இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் ஆளுங்கட்சியின் கோபத்தை வரதராஜன் சம்பாதித்துள்ளார் என்றும் கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஜெயலலிதா, பிரதமர் ஆகத்தான் தமிழ்நாட்டில் அதிக செல்வாக்கு இருக்கிறது,அவர்தான் அடுத்த பிரதமர் என்று அக்கட்சியினர் தீவிரப் பிரச்சாரம் செய்து சொல்லும் நிலையில், நரேந்திரமோடிக்கே அதிக செல்வாக்கு,ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு இல்லை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் சொல்லியிருப்பதும்,அவரது படத்தைக் கூட செய்தியில் பிரசுரிக்காததும் ஆட்சியாளர்களிடம் உச்சகட்டக் கோபத்தை உண்டாக்கியுள்ளதாம். தேர்தல் முடிந்ததும் உக்கிரப்பார்வை  உறுதி என்கிறார்கள்.

இதனால் வெலவெலத்துப் போன வரதுவும் அவரது கோஷ்டியினரும் அதைச் சரிக்கட்டும் விதம் அடுத்து என்ன செய்ய‌லாம்   தீவிரமாய் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறார்களாம்.

1 comment:

Unknown said...

நுனலும் தன் வாயால் கெடும்.