ஆனந்த விகடன் இதழ் மூலமாக, முகம் தெரியாத எத்தனையோ மனிதர்களின் வலியைக்,கண்ணீரை, வேதனையை நாம் படித்திருப்போம். அவர்களுக்காகப் பேசியிருப்போம்.குறைந்த பட்சம் ஒரு நொடி வருத்தமாவது பட்டிருப்போம்.
ஆனால் ஆனந்த விகடனில் பணியாற்றிய ஒருவரின் கண்ணீர்க்கதை இது.ஆனால் அவருக்காக எழுதவோ அவரின் துயரத்தைப் பகிரவோ தான் யாரும் இல்லை.
ஆனந்த விகடன் இதழுக்கு பல காலம் தன் உழைப்பை அளித்து அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய ஒருவர் எந்தவிதக் காரணமும் இல்லாமல் வெளியே தூக்கி எறியப்பட்ட நிஜ சம்பவம் இது.
எந்த ஒரு பத்திரிகையின் உருவாக்கத்திலும் வெளியே தெரியாத பலரது உழைப்பு இணைந்திருக்கிறது.ஒரு பிரம்மாண்டமான பளிங்கு மாளிகையின் உருவாக்கத்துக்குப் பின்பு எண்ணற்ற உழைப்பாளிகளின் பங்கு இருப்பது நமக்கு எப்படித் தெரிவதில்லையோ,அது பொதுச் சமூகத்தின் கண்களில் படுவதில்லையோஅது போல டெஸ்க்கில் இருக்கும் உதவி ஆசிரியர் தொடங்கி,பிழை திருத்துநரிலிருந்து லே அவுட் ஆர்ட்டிஸ்ட் வரை பலரது பங்களிப்பில் பத்திரிகைகள் வெளிவருகிறது.ஆனால் அது பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை.இதழில் எழுதும் எழுத்தாளர்கள்,அல்லது ரிப்போர்ட்டர்கள்,இதழின் ஆசிரியர் தான் வெளியில் தெரிகின்றார்கள்.
***
ஒரு இதழில் பிழை திருத்துநர் பணி என்பது மிகப்பெரிய பொறுப்பு.இத்துறை குறித்து அறியாதவர்கள் வேண்டுமானால் அவர்களது பணியை புரூப் ரீடர் என்ற அளவில் சுருக்கி விடலாம்.ஆனால் உண்மையில் அப்படி அல்ல.
இந்த வேலையைச் செய்யும் அனுபவமிக்கவர்கள் எல்லோரையும் வெறுமனே 'புரூப் ரீடர்' என்று வெறுமனே சுருக்கி விட முடியாது.
ஒரு இதழின் அனைத்து பக்கங்களையும் படித்து அதன் உள்ளடக்கத்தில் எதும் தர்க்க ரீதியான தவறுகள் இருக்கிறதா என்று பார்ப்பதில் தொடங்கி எழுத்துப்பிழை,வாக்கிய அமைப்பு,கோர்வை உள்ளிட்ட தவறுகள் எதும் இருக்கிறதா என்பது வரை இதில் மிகப்பெரிய பணி அடங்கி உள்ளது.இதழின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கு இவர்களுக்கு இருக்கிறது.
ஆனால் பொதுவாக இதழ்கள்,நாளிதழ்கள் வாசிக்கும் யாரும் இவர்களைப் பற்றிப் பேசுவதில்லை.தினத்தந்தியில ரிப்போர்ட்டிங் நல்லா இருக்கு, செங்கொடி காதல் தோல்வியால் இறந்தார் என்று தினமலரில் நாரசாரமாய் எழுதியது பீகார் ரங்கராஜ் பாண்டே ,குங்குமத்தில் நீலகண்டன் நல்லாப் பண்றாரு.ஆனந்த விகடனில் ராஜீவ் காந்தி நல்லாப் பண்ணியிருக்கார்.அருள் எழிலன் கட்டுரை,பாரதி தம்பி கட்டுரை நல்லா இருக்கு,லூசுப்பையன் முந்தி மாதிரி இல்ல,குமுதம் ரிப்போர்ட்டர்ல பாலா கார்ட்டூன் நல்லா இருக்கு,ஜூனியர் விகடன் விகேஷ் கையில இருந்து திருமாவேலன் பொறுப்புக்கு வந்ததுக்கு அப்புறம் பரவால்லை.கவின்மலர் என்பவர் எப்பவும் அபத்தமாத் தான் எழுதிக்கிட்டிருக்கார் என்பது போன்ற பாராட்டுக்களுடனோ,விமர்சனங்களுடனோ பத்திரிகையில் எழுதுபவர்களை நாம் கடந்து விடுகிறோம்.
இதில் தொடர்புடைய எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள் ஏதோ ஒரு வகையில் பொது வெளியில் தங்களுக்கான அடையாளத்தைப் பெறுகின்றனர்.
(சிலர் திறமை இருந்தும் இருபது வருடங்கள் ஆனாலும் நிருபர்,மூத்த நிருபர்,தலைமை நிருபர் ஸ்பெஷல் கரஸ்பாண்டண்ட் என்ற இடத்தைத் தாண்டாமலும் சம்பளம் முப்பது ஆயிரத்தைத் தாண்டாமலும் இருக்க,'பிழைக்கத்' தெரிந்த சிலரோ,திறமை இல்லா விட்டாலும் துறைக்கு வந்த மூன்றாண்டுகளில் லாபி செய்து 4 பத்திரிகைகள் மாறி 40 ஆயிரம் சம்பளத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் எல்லாம் தெரிந்த அப்பாடக்கராகத் தங்களைப் பொது வெளியில் கட்டமைத்து ஒரு ஆளுமையாக மாற்றும் முயற்சியிலும் திட்டமிட்டு ஈடுபடுவது வேறு விஷயம். )
ஆனால் இதழின் வெற்றியில் பின்னணியில் இருந்து செயல்படும் லே அவுட் ஆர்ட்டிஸ்ட்,புரூப் ரீடர் போன்றோரின் முக்கியத்துவமும் அவர்களின் பெயரும் பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.இது அனைத்து இதழ்களுக்கும் நடப்பது தான்.
ஆனந்த விகடன் கட்டுரை நல்லா இருக்கு என்று கட்டுரையாளரைத் தொடர்பு கொண்டு பாராட்டுபவர்கள் எத்தனை பேருக்கு அதனை அழகுற வடிவமைத்து வெளிக்கொணரும் வடிவமைப்பாளர் பாண்டியனைத் தெரியும்..?
ஒவ்வொரு கட்டுரையையும் எழுத்தாளருக்கு இருக்கும் அதே அக்கறையுடனும் ஆர்வத்துடனும் பிழை திருத்தி,சரி செய்து வாசகனுக்குத் தரும் மானா பாஸ்கரையும்,சிவசுப்ரமணியத்தையும் எத்தனை பேருக்குத் தெரியும்..?
கட்டுரையாளரைப் போட்டி போட்டுப் பாராட்டிய நாம் என்றாவது ஒருநாள் இதழின் பின்னணியில் இருந்து அதனை வெளிக்கொணர்ந்த இத்தகையோரைப் பாராட்டியிருக்கிறோமா..?
இதழில் ஏற்படும் பிழைகளுக்கு இவர்கள் மீது அலுவலகத்தில் ஏற்படும் விமர்சனங்களில்,இன்னும் சொல்லப் போனால் வசவுகளில் ஒரு சதவீதம் அளவு கூட,இதழின் வெற்றியில் பொது வெளியிலும் சரி,அலுவலகத்திலும் சரி இவர்களுக்கு பங்கு அளிக்கப்படுவதில்லை என்பது கசப்பான நிஜம்.பிறரது ஊதியம் உயரும் விகிதாச்சாரத்தில் இவர்களுக்கான ஊதியமும் உயர்வதில்லை என்பது இன்னொரு நிஜம்.
கச்சேரி சாலை தினகரன் நாளிதழ் கேடி பிரதர்சின் கைக்கு மாறிய சமயம்.
பம்பாயில் குண்டு வெடித்து 4 பேர் பலி என்ற செய்தியை சரியாக புரூப் பார்க்காததால் பம்பாயில் குண்டி வெடித்து 4 பேர் பலி என்று மறுநாள் போஸ்டரில் இடம் பெற்றுவிட்டது.ஊரே சிரிப்பாய்ச் சிரித்தது.இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் புரூப் ரீடர் பணியின் முக்கியத்துவத்தை.
இனி செய்திக்கு வருவோம்.
ஆனந்த விகடனில் 17 வருடங்களாக பணியாற்றியவர் ச.சிவசுப்ரமணியன் என்பவர்.இவர் தற்பொழுது ஆ.வி.உதவி ஆசிரியராக இருக்கிறார்.இவரது இப்பொழுதைய வயது 47.ஏறத்தாழ 30 ஆவது வயதில் விகடனில் பணிக்குச் சேர்ந்தார்.அதிகம் பேச மாட்டார்.எப்பொழுதும் முகத்தில் மெல்லிய சிரிப்பைத் தாண்டி வேறு எதையும் பார்க்க முடியாது.இவருக்குப் பின் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த எத்தனையோ பேர் உயர்ந்த இடத்திற்குச் செல்ல இவரது நிலையில் பெரிய மாற்றம் இல்லை.உதவி ஆசிரியர் தான்.
இவருக்கு அளிக்கப்பட்ட பணி என்னவென்றால் பிழை திருத்துவது மட்டும் தான்.17 வருடங்களாக இந்தப்பணியைத் தான் திறம்பட செய்து வருகிறார்.
ஆனந்த விகடனின் 100 பக்கத்தையும் இவரும் இன்னொருவரும் சேர்ந்து தான் அதன் தலைப்பில் இருந்து வார்த்தை அமைப்புக்கள்,எழுத்துப்பிழை உட்பட அனைத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்து இறுதி செய்வார்கள்.
இதில் ஏதாவது எப்பொழுதாவது அவர்களை அறியாமல் தவறு நேர்ந்தால் அவர்கள் காலி தான்.ஆனால் அப்படி தவறுகள் ஏற்படுவதற்கான சூழல் இதுவரை அதிகம் வந்ததில்லை.
விகடன் குழுமத்தின் வேலை நேரம் குறித்துச் சொல்லியாக வேண்டும்.
விகடன் குழுமத்தில் இப்பொழுது தான் எல்லோரும் கொஞ்சம் சீக்கிரமாக அதாவது இரவு 7 மணிக்குள் அல்லது 8 மணிக்குள் வீட்டிற்குத் திரும்ப முடிகிறது.மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை சாமக் கோடாங்கி தான்.எப்பொழுது வீடு திரும்புவோம் என்பது வேலை செய்கிற யாருக்கும் தெரியாது.கொடுக்கிற சம்பளத்திற்கு பல மடங்கு உழைப்பை உறிஞ்சி விட்டுத் தான் விடுவார்கள்.நேரங்காலம் தெரியாமல் தான் உழைக்க வேண்டும்.
ஆனால் அப்பொழுது மட்டுமல்ல,இப்பொழுதும் எப்பொழுதும் கடுமையாக உழைத்தவர் தான் சிவசுப்ரமணியம்.
அதுவும் இதழ் முடிக்கும் நாள் என்றால் நள்ளிரவு வரை தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைக் கண் உறங்காமல் பார்த்து விட்டு,அலுவலகத்தில் தரையில் செய்தித்தாளை விரித்து படுத்து எத்தனையோ கணக்கற்ற இரவுகளைக் கழித்திருக்கிறார்.
இப்படி ஆனந்த விகடனின் வளர்ச்சியில் கடந்த 17 ஆண்டுகளாகப் பிரிக்க முடியாத பங்கினை வகித்தவர் தான் சிவசுப்ரமணியம்.
ஆனால் இந்த சிவசுப்ரமணியம் தான் கடந்த வாரம் ,வேலையை விட்டு சொடக்குப் போடும் நேரத்தில் நீக்கப்பட்டிருக்கிறார்.
அவர் என்ன தவறு செய்தார் என்கின்றீர்களா..?
அலுவலகப் பணத்தைத் திருடினாரா,,?இல்லை அலுவலக ரகசியத்தை (!)வெளியே கசிய விட்டாரா..? இல்லை இலங்கைத் தூதருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுக்கு மறைமுகமாக வேலை செய்தாரா..?இல்லை தனக்குப் பிடித்த காவல்துறை அதிகாரிகளை புகழச்செய்து கட்டுரை வெளியிட்டாரா..?இல்லை டேபிள் ஒர்க் செய்து பெண் புலிகள் இன்று விபச்சாரம் செய்கிறார்கள் என்று இலங்கை அரசின் கைக்கூலியாய் நேர்காணல் வெளியிட்டாரா..?இல்லை சில நூறுகள் கவர் வாங்கினாரா,,?இல்லை செய்யும் வேலையில் திருத்திக் கொள்ள முடியாத மிகப்பெரிய தவறு செய்தாரா..?
எதுவும் இல்லை.
அப்படியென்றால் என்ன செய்தார் என்கின்றீர்களா..?
'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் தொடங்க உத்தேசித்து இருக்கும் 'காமதேனு' நாளிதழுக்கு வேலைக்காக இன்டர்வியூ சென்று விட்டு வந்தார்.அவ்வளவு தான்.இத்தனைக்கும் அவர் இன்னும் அங்கு வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படக் கூட இல்லை.
இந்த ஒற்றைக்காரணத்திற்காக தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது.?
இனி நடந்தவற்றைத் தருகிறோம்.
காமதேனு நாளிதழுக்கு வேலைக்காக இண்டர்வியூ செல்லும் பொருட்டு இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்திருக்கிறார்.
இரண்டாம் நாள் மாலை ஆனந்த விகடன் ஆசிரியரும் பதிப்பாளருமான ரா.கண்ணனிடம் இருந்து தொலைபேசி வருகிறது.
"என்ன சார் ஆபிஸ் வரலையா"..?
"கொஞ்சம் தலைவலி சார்.அதான் வரலை" என்று பதில் சொல்லியிருக்கிறார்.
"ஹிந்து வுக்கு இண்டர்வியூவுக்குப் போனதுன்னால வந்த தலைவலியா சார்..?" என்று மறுமுனை கேட்டிருக்கிறது.
உடனே பதில் சொல்லி மழுப்பி விட்டு மறுநாள் வேலைக்குச் சென்றிருக்கிறார்.
அலுவலகம் உள்ளே சென்றவுடன் ஆசிரியரிடமிருந்து அழைப்பு.
"என்ன சார் நேற்று ஹிந்து தமிழ் டெய்லிக்கு இண்டர்வியூவுக்கு போனீங்க போல"?.
இதில் பொய் சொல்ல என்ன இருக்கிறது என்று,'ஆமாம் சார் போனேன்' என்று சிவசுப்ரமணியம் பதில் சொல்லியிருக்கிறார்.
உடனே ஆசிரியர்,நீங்க ஒரு ரிசைன் லெட்டர் எழுதிக் கொடுத்திட்டு இங்கிருந்து கிளம்புங்க என்று ஒற்றை வரியில் சொல்லி அவருக்கு விடை கொடுத்து விட்டார்.
கண்ணில் துளிர்த்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்து விட்டு,கொஞ்ச நேரத்தில் ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்து விட்டு 17 வருடங்கள் எந்த ஆனந்த விகடனுக்காக நேரத்துக்கு உறங்காமல்,உண்ணாமல் இரவும் பகலும் வேலை பார்த்தாரோ அந்த வளாகத்தை விட்டு உதவி ஆசிரியர் சிவசுப்ரமணியன் அமைதியாகக் கிளம்பி விட்டார்.
நாம் கேட்பது இது தான்.
ஒரு தொழிலாளி ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கையில் இன்னொரு பத்திரிகை அலுவலகத்திற்கு வேலைக்கு இண்டர்வியூவுக்கு செல்வது கிரிமினல் குற்றமா என்ன..?
இது அவன் உரிமை இல்லையா.?எங்கு வேலை பார்க்க வேண்டும்..?என்ன சம்பளத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை அவனுக்குத் தீர்மானிக்கும் உரிமை கூடவா இல்லை..?
தற்பொழுது பணியாற்றும் நிறுவனத்தின் வேலையை விட்டுச் செல்வதற்கு முன்,உரிய காலக்கெடுவில் முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்தால் போதாதா..?
இங்கு தொழில் துவங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் கூட ஆனந்த விகடனைப் போல் தொழிலாளியை நடத்துவது இல்லையே...!
சிவசுப்ரமணியன் செய்தது கிரிமினல் குற்றம் என்றே ஆனந்த விகடனின் அகராதிப்படி (ஒரு வாதத்திற்கு) வைத்துக் கொள்வோம்.
உங்கள் அலுவலகத்தில் இருந்து எத்தனை செய்தியாளர்கள் 'தி ஹிந்து' தொடங்க இருக்கும் தமிழ் நாளிதழுக்கு வேலைக்காக இண்டர்வியூவுக்கு சென்று வந்துள்ளார்கள் என்ற பட்டியல் எங்களை விட உங்களுக்கு நன்கு தெரியும்.அவர்கள் மீது உங்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா..?முடியாது.
இவ்வளவு ஏன்..உங்கள் ஜூனியர் விகடன் முதன்மைப் பொறுப்பாசிரியர் காமதேனுவில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கூட வாங்கி வந்து விட்டார்.
ஆனாலும் இன்னும் உங்கள் அலுவலகத்தில் தானே நீடிக்கிறார்..?அவரை உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது உங்களைப் போல எங்களுக்கும் தெரியும்.
உங்களின் முன்னாள் மூத்த நிருபர் டி.எல்.சஞ்சீவி குமார் உங்கள் அலுவலகத்தை விட்டு ராஜினாமா கடிதம் கொடுத்து அதன் பின் ஜே.கே.பில்டர்ஸ் என்னும் ரியல் எஸ்டேட்காரர் நடத்தும் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பின் ஒன்றரை மாதம் கழித்துத் தானே நீங்கள் ரிலீவ் லெட்டரே கொடுத்தீர்கள்.இப்பொழுது இவரும் காமதேனுவில் வேலைக்குச் சேர்ந்து விட்டார்.
வேலையை விட்டுப் போகிறேன் என்று சொல்லி விட்டுச் சென்ற சஞ்சீவி குமாரை 45 நாட்கள் இழுத்துப் பிடித்த நீங்கள்,இண்டர்வியூ சென்று வந்த ஒரே காரணத்திற்காய் பேப்பரைக் கசக்கி எறிவது போல சிவசுப்ரமணியனை வேலையை விட்டுத் தூக்கி எறிந்தது ஏன்..?
சிவசுப்ரமணியன் போன்ற உதவி ஆசிரியர்கள் எதுவும் எதிர்த்துப் பேச மாட்டார்கள்,அவரை எப்படியும் தூக்கி எறியலாம் என்னும் எதேச்சதிகாரமான முடிவு தானே..?
உங்களின் இந்த முடிவு அவருக்கு வேறு பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாதா..?
ஒருவேளை காமதேனு இவரை வேலைக்குச் சேர்க்கவில்லை என்றால் இவரும் இவரது குடும்பமும் நடுத்தெருவில் தானே நிற்க வேண்டும்.
இன்னொரு பக்கம்,இவர் ஆ.வி.யில் வேலையில் இல்லை என்று தெரிந்தால் காமதேனு நாளிதழ் இவருக்கு கொடுக்க எண்ணியுள்ள சம்பளத்தில் கையை வைக்கும்,இப்பொழுது வாங்கும் சம்பளத்தை விட அடி மாட்டு ரேட்டுக்கு வேலைக்கு அழைக்கும் என்பது தெரியாதா..?
இல்லை இதெல்லாம் நடக்கட்டும் என்று தெரிந்து தான் வேலையை விட்டு நீக்கினார்களா..?
வேறொரு கோணத்தில் பார்த்தோமானால்,நீங்கள் பொறாமைப்பட்டு,ஆத்திரப்பட்டு வேலையை விட்டு நீக்கும் அளவுக்கு அவர் மிக உயர்ந்த இடத்திற்கும் செல்லப் போவதில்லையே..?
இதுவரை உங்களிடம் சொற்ப சம்பளத்திற்கு அடிமைச் சேவகம் புரிந்த தொழிலாளி,இன்னும் சில ஆயிரங்கள் அதிகச் சம்பளத்தில் ஹிந்து முதலாளிக்கு சேவகம் செய்யப் போகிறார்.தனது உழைப்பைச் சுரண்ட தெரிந்தே அனுமதிக்கப் போகிறார்.
யாருக்கு 'அடிமை'யாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க கூட அவருக்கு உரிமை இல்லையா..?
உங்களின் முடிவுக்கு எதிராக,வலுக்கட்டாயமாக என்னிடம் கடிதம் பெற்றார்கள் என்று ஒரு பத்திரிகையாளர் தொழிற்சங்கத்தை நாடியுள்ள சிவசுப்ரமணியம் நாளை தொழிலாளர் நல நீதிமன்றத்தை நாடினால் என்னவாகும் என்று எதிர்பார்த்தீர்களா..?
அவருக்கு எவ்வளவு இழப்பீடு தர வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன..?
இவ்வளவு ஏன்..?
பணக் கணக்கை,விடுங்கள்.
இது தொடர்பான எத்தனை நூல்களின் விமர்சனங்களை வெளியிட்டிருப்பீர்கள்..?
முதல் பக்கத்தில் தலையங்கம் தீட்டியிருப்பீர்கள்..?
ஏன் நடப்பு (17-ஜூலை-2013)இதழில் கூட சவூதி அரேபியாவில் இருந்து துரத்தப்படும் தொழிலாளிக்காக விகடனில்,'உழைப்பைச் சுரண்டச் சொல்லிக் கெஞ்சாதீர்கள்'
என்ற தலைப்பில் கட்டுரை நெஞ்சுருக வடித்தீர்களே..! நாங்கள் கூட நினைத்தோமே விகடனுக்கு தொழிலாளர் வர்க்கத்தின் மீது என்னே அக்கறை என்று..!
இப்பொழுது தானே தெரிகிறது..
நாங்கள் 'உழைப்பைச் சுரண்டச் சொல்லிக் கெஞ்சாதீர்கள்' கட்டுரையைப் படிப்பதற்காக அச்சுக்கு அனுப்பும் முன்பு அதற்கு புரூப் பார்த்த தொழிலாளியின் சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விட்டீர்கள் என்று.
சிவசுப்ரமணியத்தைத் திரும்ப அழைத்து வலுக்கட்டாயமாக அவரிடம் இருந்து பெறப்பட்ட அவரது ராஜினாமாவைத் திரும்பக் கொடுத்து அவரை மீண்டும் பணியில் சேர்ப்பதும்,அவர் விரும்பும் வரையில் பணியில் தொடரச் செய்வதும் தான் தீர்வு.
இல்லை நாங்கள் கட்டுரையாளர்களை வைத்து முற்போக்காய் எழுதுவோம்.அதனை விற்பனைச் சரக்காக்கி விற்பனை செய்வோம்.ஆனால் அதில் குறைந்த பட்ச நேர்மையுடன் கூட நடக்க மாட்டோம் என்று சொன்னால்,நீங்கள் பாம்பு தன் சட்டையை உரிப்பது போல உங்கள் நேர்மையின்மையை,நிருபித்துக் கொண்டே இருக்கின்றீர்கள் என்று ஊருக்கும் உலகுக்கும் இன்னொரு முறை தெரியப் போகிறது.
தொடர்புடைய இணைப்புக்கள்
http://kalakakkural.blogspot.in/2011/11/blog-post_13.html
9 comments:
அடுத்தவர்களை விமரிசனம் செய்ய இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
ஏற்கனவே விகடம் குழுமத்தில் இருப்பவர்கள் முகநூளில் எந்த ச்டேடசும் போடக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள்.எந்த பத்திரிக்கையிலும் இல்லாத இன்று இது...ஊருக்குதான் உபதேசம் பண்ணுவார்கள்
சர்வாதிகாரத்தை பற்றி கிண்டல் செய்யும் ஒரு சர்வாதிகாரப் பத்திரிக்கைதான் விகடன்
idhai vida periya mosadi yellam sun tv la nadukkunga
ithea nilamai than kacheri road thinakranilum sil aaandukalukku mun nadanthirukku. athai yean eluthalai..asosiate editor kumar..thokkapattaarea..
They should re call him
மகனுக்கும் இதுதானே நடந்தது........
ஆனந்த விகடனின் வெளிவேடம் தெரிந்ததுதான்.. `கருப்பு நிறத்தை மாற்ற கண்ட மருந்துகளைத் தடவி வாழ்க்கையைத் தொலைத்த இளம்பெண்`என்று அவள் விகடனில் கட்டுரை வடிப்பார்கள். அடுத்த பக்கத்திலேயே சிகப்பழகு க்ரீம் விளம்பரம் பல்லை இளிக்கும். பணம் தின்னிப் பிசாசுகள்.
என்ன தான் ஆனந்த விகடன் ஊர் உலகத்தை பற்றி எழுதினாலும், அது ஒரு முதலாளித்துவ நிறுவனம் தான்.
முதலாளிகள் எப்பொழுதும் தங்களுடைய பண்புகளில் இருந்து இறங்குவதில்லை.
Post a Comment