Sunday, 26 August 2012

சிதறும் குமுதம் டீம்..! ஏழு பேர் ராஜினாமா...!


                                              
குமுதம் ஆசிரியர் குழுவில் நடைபெறும் வெட்டுக் குத்து தொடர்கிறது

லேட்டஸ்ட் பலி குமுதம் ரிப்போர்ட்டரின் இணையாசிரியரான வெங்கட்ராஜினாமா செய்துவிட்டு புதிய தலைமுறையில் சேர்ந்துவிட்டார். 

இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் வரதராஜன் பொறுக்கி எடுத்த ஆட்களில் இந்த வெங்கட்டும் ஒருவர்இவர் முதலில் குமுதத்தில் வேலைப் பார்த்துவிட்டு விகடன் பக்கம் ஒதுங்கியவர்அங்கே நாணயம் விகடனில் நிம்மதியாய் இருந்தவரை கோசல் ச்சார் மூலம் ரிப்போர்ட்டர் டீமுக்கு அழைத்தார் .போவரதுஇதற்காக ரகசிய சந்திப்புகள் நடந்தன


வெங்கட்


விகடனைவிட இரட்டிப்பு சம்பளம் வழங்குவதாக வாக்களித்தார் .போ. வரது. இதற்கு ஆசைப்பட்ட வெங்கட்டும் சம்மதித்தார். வந்தார். அவருக்கு இணையாசிரியர் பதவி கொடுக்கப்பட்டது.

அவரை அழைத்து வந்ததும்தான் கோசல் ச்சாருக்கு தான் செய்த முட்டாள்த்னம் புரிந்தது. அழைத்து வந்த கோசல் ச்ச்சாரைவிட நீண்ட கால நண்பர் க.பஞ்சா. செய்தி ஆசிரியர் ஜான் வில்கின்ஸிடம்தான் விசுவாசமாய் இருந்தார் வெங்கட். இது கோசல் ச்ச்சாருக்கு பிடிக்கவில்லை

சிறிது சிறிதாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தார். இதழ் தாமதமாக அச்சுக்குப் போகிறது என்று வெங்கட்டுக்கு மெமோ கொடுத்தார். வெங்கட்டுக்கு நெருக்கமாக இருக்கும் ஆட்களை ஓரங்கட்டத் தொடங்கினார். இதெல்லாம் வெங்கட்டுக்கு டென்ஷனை ஏற்படுத்தின.

.போ.வரது குட்டியை சந்திக்கலாம் என்றால் அவர் நேரம் கொடுக்க மறுத்தார். பொறுத்தது போதும் பொங்கியெழலாம் என்று நினைத்து வேலைக்கு சேர்ந்த ஏழே மாதங்களில் ராஜினாமா கடிதம் கொடுத்து விலகிவிட்டார்.

ப்ரியா தம்பி, மலை மோகன் போன்ற உதவியாசிரியர்கள் குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து வெளியேற காரணமாயிருந்தவர் வெங்கட் என்பது குறிப்பிடத்தக்கது

முற்பகல் செய்யின்.....

வெங்கட் வெளியேறியதும் குமுதம் குழும பிரச்சனை சூடு பிடித்திருக்கிறது.

வெங்கட்டைத் தொடர்ந்து லேஅவுட் பொறுப்பாளராக இருந்த ஜேக்கப் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார். அவரைத் தொடர்ந்து உதவி ஆசிரியர் தளவாய் சுந்தரமும் நிருபர் ஆனந்த் செல்லையாவும் ராஜினாமா கடிதங்களை கொடுத்திருக்கிறார்கள்

ஜேக்கப் 


தளவாய் சுந்தரம்

ஆனந்த் செல்லையா


இவர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர் குழு உதவியாளர் சுரேஷ்ஷும் ராஜினாமா செய்து விட்டார். இவர்தான் குமுதம் கட்டுரைகளுக்கு சன்மானம் அனுப்புபவர். குமுதம் கட்டுரைகளுக்கு ரெம்யுனரேஷன் சரிவர செல்லவில்லை என்ற நீண்டகால புலம்பலை சரி செய்தவர் இவர்தான்.

இனி பழைய மாதிரிதான் சன்மானம் வரும் ஆனால் வராது.

டாக்டர் வசந்த் செந்தில்

குமுதம் ஹெல்த் இதழுக்கு பொறுப்பாசிரியாராக இருந்த டாக்டர் வசந்த் செந்திலும் ராஜினாமா செய்துவிட்டார். இவர்களைத் தவிர .டி துறை எஞ்சினியர் தாமஸ் ராஜினாமா செய்திருக்கிறார்

ஆக இந்த ஆகஸ்ட் மாத ராஜினாமாக்கள் மட்டும் ஏழு.

அடுத்ததாக‌  முக்கிய பதவியில் இருக்கும் இருவர் ராஜினாமா செய்யப் போகிறார்கள் என்றும் அவர்களைத் தொடர்ந்து பலர் எகிறிக் குதித்து ஓடத் தயாராய் இருக்கிறார்கள் என்றும் செய்திகள் கசிந்துக் கொண்டிருக்கிறது.

இப்படித் தொடர்ந்து ஆட்கள் விலகிக் கொண்டிருக்க அது குறித்து கண்டுகொள்ளாமலும் அலுவலகம் வராமலும் வரது இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன காரணமாய் இருக்கும்..?
                                        

Wednesday, 22 August 2012

நின்னு போன என் விகடன்…!



விகடன் குழுமத்தில் இருந்து ஜூலை மாதம் முதம் வாரம்தோறும் ரூ.5 ரூபாயில் குமுதம் சைஸூக்கு என் விகடன் வெளிவருகிறது என்று ஏற்கனவே எழுதியிருந்தோம்.இதற்காக ஒரு குழுவினர் அல்லும் பகலும் விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

தற்பொழுது இந்த திட்டம் விகடன் நிறுவனத்தினால் நிறுத்தப்பட்டு விட்டது.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக இப்பொழுது ஆ,வி,விற்பனை குறைந்து விட்டது என்பது.

இரண்டாவது என் விகடன் சந்தையில் விற்பனைக்கு வந்தால் அது ஏற்கனவே குறைந்து கொண்டிருக்கும் ஆ.விகடன் விற்பனையை இன்னும் காலி செய்து விடும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டதாம்.

ரூ.17 கொடுத்து ஆ.வி.வாங்குவதற்குப் பதிலாக ரூ.5 க்கு என் விகடனை வாங்குனாப் போதும் என்று முடிவெடுத்து விட்டால் கல்லா நிறையாது என்னும் லாஜிக்.

ஆகவே என் விகடன் வேண்டாம்,இப்பொழுதைக்கு இருப்பதை உருப்படியாய் நடத்துவோம் என்று முடிவெடுத்து விட்டார்களாம்.

ஆகவே என் விகடன் நின்னு போச்சு.

டான் டான் டான்,ஆனந்த விகடன்.

நின்னுட் டான் விகடன்.

அவன் என் விகடன்.





Tuesday, 21 August 2012

தினமலர்-பொய்மையின் உரைகல்...!


கருணாநிதி ஆட்சியில் இருக்கும் பொழுது  தினமலர் வாரிசுகள் காட்டும் அதீத பணிவு இது.இப்பொழுதோ ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதாவிடமும் அதே பணிவு.
இது தான் இவர்களின் உண்மையின் உரைகல்.


தங்களுக்கு அனுகூலமான நபர்கள் என்றால் ஒரு நிறுவனம் எப்படிச் செய்தி வெளியிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி அதே செய்தியைத் அப்படியேதங்களுக்கு வேண்டாத நபர் சம்பந்தப்பட்டது என்றால் எப்படி வெளியிடப்படும் என்பதை சுட்டிக்காட்டுவது தான் செய்தியும் கோணமும் பகுதியின் நோக்கம்.

செய்தியும் கோணமும்  என்ற பகுதியில்  இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது, கடந்த வாரம் சென்னையில் பத்ம சேஷாத்திரி பள்ளி நீச்சல்குளத்தில் பரிதாபமாய் இறந்து போன சம்பவம் குறித்து, தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டதைப் பார்ப்போம். இந்த சம்பவம் தினமலரின் சாதிக்காரரான ஒய்.ஜி.பி.க்குச் சொந்தமான பள்ளியில் நடக்காமல் இதர பிரிவைச் சேர்ந்தவர்கள் நடத்திய பள்ளியில் நடைபெற்றிருந்தால் இதனை தினமலர் எப்படிச் செய்தியாக வெளியிட்டிருக்கும் என்பது தான் இன்று நாம் பார்ப்பது.

*****************

வ்வொரு நிறுவனத்திற்கும் தனது வர்த்தக நலன்களை ஒட்டிய ஒரு அஜெண்டா இருப்பது போல தினமலருக்கும் ஒரு அஜெண்டா இருக்கிறது.மற்ற நிறுவனங்களைப் போல தினமலரும்தனது வணிக நலன்களைப் பேணிக் கொண்டாலும் அத்துடன் அது நிறுத்துவதில்லை.எப்பொழுதும் அது பச்சையான பார்ப்பனவாததுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது..அதுவும் பளிச்சென்று அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. 

பிற நிறுவனங்களில் சாதி இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்.ஆம் இருக்கிறது.அனைத்து நிறுவனங்களிலும் இருக்கிறது.

எடுத்துக்காட்டாய் தினத்தந்தியிடமும் சாதி இருக்கிறது.ஆனால் இரண்டிலும் இருக்கும்  வித்தியாசத்தை நீங்கள் உணர வேண்டும்.தினத்தந்தி தனது சாதிக்காரர் என்பதால் சுங்க வருவாய் ஆணையர் ராஜன் லஞ்சம் வாங்கும் பொழுது கைது செய்யப்பட்ட செய்தியைப் போடவில்லை.இது என்ன யோக்கியதை என்று கேட்கலாம்.இது கண்டிக்கத்தக்கது தான்.

ஆனால் தினத்தந்தி தனது சாதிக்காரனைக் காப்பாற்றுவதுடன் நின்று விடுகிறது.இதர பிரிவினர் கைது செய்யப்பட்டால் செய்தியைச் செய்தியுடன் நிறுத்தி விடுகிறது,அவர்களுக்கு எதிராக பாய்ந்து வன்மத்துடன் பிராண்டுவதில்லை. அதைப்போல தன் கொள்கை முடிவுக்கு எதிரான செய்தி என்றால் அதனை வெளீயிடாமல் இருட்டடிப்பு செய்யும்.அதைத் தாண்டி தனிப்பட்ட அவதூறு எதையும் பரப்புவதில்லை.

ஆனால் தினமலர் நாளிதழில் இதைப் பார்க்க முடியாது.தனது சாதிக்காரர் தொடர்புடைய செய்தி என்றால் கோழி குஞ்சைக் காப்பது போல எதையாவது எழுதிக் காப்பவர்கள்,பிற பிரிவினர்கள் சம்பந்தப்பட்ட செய்தி என்றால் நட்ட நடுநிலை என்ற பெயரில் கடித்துக் குதறுகிறார்கள்.அதுவும் கிறிஸ்தவ,இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்புடையது என்றால் கேட்கவே வேண்டாம்.கடுமையான வார்த்தைகளில் தலைப்புச் செய்தி,விதம்விதமான பாக்ஸ்,பகீர் பின்னணி,தோண்டத் தோண்ட வெளிப்படும் தகவல்கள் பல வண்ண லே அவுட் என்று வேட்டைக்கு அலையும் நாய் போல கடித்துச் சுவைக்கிறது.

குறிப்பாய் கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம்.அணு உலைக்கு ஆதரவாய் கருத்தியல் ரீதியாகச் செய்தி வெளியிட தினமலருக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது.ஆனால் அதற்கு எதிராகப் போராடுபவர்கள் குறித்து அவதூறு வெளியிடுவது,அவர்களின் செல்போன் நம்பரை வெளியிட்டு உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள் என்று சொல்வது போன்றவை எல்லாம் தன் கையில் ஊடகம் இருக்கிறது என்னும் வன்மத்தின் உச்சகட்டம்.அதை எப்பொழுதும் தினமலர் செய்து கொண்டு தான் இருக்கிறது.

இது தான் மற்ற நாளிதழ்களுக்கும் தினமலருக்கும் உள்ள வித்தியாசம்.

                   _____________________________________




இப்பொழுது கூடப் பாருங்கள்.சென்னை தாம்பரம் சீயோன் பள்ளிப் பேருந்தில் பயணம் செய்த மாணவி பலியாகும் பொழுதும்,கல்லூரியில் கட்டிடம் கட்டும் பணியின் பொழுது 10 தொழிலாளர்கள் இறந்ததற்காய் ஜேப்பியார் கைது செய்யப்பட்ட பொழுதும் நட்ட நடுநிலை என்ற பெயரில் பாய்ந்து குதறிய தினமலர் நாளிதழ்,பத்மா சேஷாத்ரி பள்ளி நீச்சல்குளத்தில்  மாணவன் ரஞ்சன் மரணமடைந்த செய்தியை எப்படி பள்ளி நிர்வாகத்தைச் சொறிந்து கொண்டு வாலாட்டிக் குழைந்து வெளியிட்டிருக்கிறது என்று.



__________________________
 இனி செய்தியும் கோணமும் பகுதிக்கு வருவோம்.

பள்ளி மாணவன் மரணடமடைந்த செய்தியை தினமலர் வெளியிட்டதில் நாம் ஒவ்வொன்றாய் ஆராய்வோம்.ஒய்.ஜி.பி.பார்ப்பனர் அல்லாத இதர பிரிவினர் என்றால் தினமலர் இந்தச் செய்தியை எப்படி வெளியிட்டிருக்கும் என்னும் கற்பனையில் வெளிவருவது தான் இன்றைய அலசல்.

மாணவன் ரஞ்சன் மரணமடைந்த செய்தி இப்பொழுது தினமலரில் கறுப்பு வெள்ளையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆனால் (ஒய்.ஜி.பி.பார்ப்பனர் அல்லாதவராக இருந்திருந்தால்) செய்தி வண்ணத்தில் வெளியிடப்பட்டிருக்கும்.

தலைப்பைப் பாருங்கள்.




இதே சம்பவம்( (ஒய்.ஜி.பி.பார்ப்பனர் அல்லாதவராக இருந்திருந்தால்)  

நீச்சல் குளத்தில் பள்ளி மாணவன் பலியான கொடூரம்- சிக்கினார் ஒய்.ஜி.பி..!

(இது தலைப்பாக வந்திருக்கும்.ஒய்.ஜி.பியின் அட்டகாசமான புகைப்படம் கண்டிப்பாக இணைக்கப் பட்டிருக்கும் )

சர்ச்சைக்குரிய முதல்பத்தி- 






(ஒய்.ஜி.பி.பார்ப்பனர் அல்லாதவராக இருந்திருந்தால்)  

சென்னை கேகே.நகரில் அமைந்துள்ள பிரபல பள்ளி பத்ம சேஷாத்ரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளி. இது சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் கிளை பரப்பியுள்ளது.இதன் நிர்வாகியாக இருப்பவர் திருமதி ஒய்.ஜி.பி.இந்தப் பள்ளியில் தரமான கல்வி கிடைக்கும் என்று நம்பி அனைவரும் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர்.ஆனால் முறையான அனுமதியின்றி,உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி மாணவர்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் கட்டப்பட்ட நீச்சல்குளத்தில் பயிற்சி அளிக்கும் பொழுது ஒரு மாணவன் நேற்று மரணம் அடைந்தான்.இது சென்னை நகரமெங்கும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.மாணவர்களும் பெற்றோர்களும் பீதியில் உறைந்துள்ளனர்.
(என்று வெளிவந்திருக்கும்)


இதைப்போல இதில் வெளிவந்த பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவான செய்தியை ஒவ்வொன்றாக எப்படி மாற்றி எழுதியிருப்பார்கள் என்று பார்ப்போம்.




நீச்சல் பயிற்சி.(ஒய்.ஜி.பி.பார்ப்பனர் அல்லாதவராக இருந்திருந்தால்)

பல ஆயிரங்கள் செலவழித்து தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்பும் பெற்றோர்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட பள்ளி நிர்வாகம் அதனைப் பயன்படுத்திப் பல்வேறு வழிகளில் பணம் பறிக்கும் பணிகளைச் செய்துள்ளது.அதில் ஒன்று தான் நீச்சல் பயிற்சி.பொதுவாக இது போன்ற பயிற்சிகளில் சேர்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.ஆனால் பணம் பறிக்கும் நோகத்துடன் பள்ளி நிர்வாகம் இந்தப்பயிற்சியையில் சேரும்படி நிர்ப்பந்தித்துள்ளது.மாணவர்களும் வேறுவழியின்றி சேர்ந்துள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் அங்கு நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் ரஞ்சனும் இணைந்துள்ளான்.பொதுவாக ரஞ்சனுக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லையாம்.ஆனால் ஆசிரியரின் நிர்ப்பந்தத்தின் பேரில் பயிற்சியில் சேர்ந்துள்ளான்.நேற்று பயிற்சி நடைபெறும் பொழுது அதிக அளவில் மாணவர்கள் கலந்துள்ளனர்.ஆனால் உரிய பயிற்சியாளர்கள் இல்லை.ஆகையால் சிறுவர்கள் அவர்களாகவே நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர்.இந்த நிலையில் பயிற்சி வகுப்பு முடிந்த பொழுது பார்த்தால் ரஞ்சனைக் காணவில்லை என்று சக நண்பர்கள் பயிற்சியாளர்களிடம் தெரிவித்தனர்.அதற்குள் வெகு நேரம் கடந்து விட்டது.அதைத் தொடர்ந்து தேடும் பணி தொடங்கியது.சற்று நேரத்தில் ரஞ்சனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற பொழுது அவன் மரணம் அடைந்து விட்டதாகச் சொல்லப்பட்டது.

ரஞ்சனின் மரணத்திற்கு பல காரணங்கள் மாணவர்கள் தரப்பிலும் பெற்றோர்கள் தரப்பிலும் சொல்லப்படுகிறது.

நீச்சல் பயிற்சிக்கு என நட்சத்திர ஓட்டலில் வாங்கும் அளவுக்கு கட்டணத்தை நிர்வாகம் வாங்கியுள்ளது. ஆனால் வாங்கிய கட்டணத்திற்கு உரிய வசதிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக 10 மாணவர்கள் பயிற்சி பெறும் இடத்தில் 25 க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. அதிலும் தகுதியானவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்காமல் காமாசோமா ஆட்களை பள்ளி நிர்வாகம் அமர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதைப்போல பயிற்சிக்கு அதிக் கட்டணத்தை வசூல் செய்த நிர்வாகம் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் நீரை மாற்றி வருகிறதாம். அதைப்போல நீச்சல் பயிற்சிக்கும் கல்வி இயக்குனரகத்தில் உரிய அனுமதி பெறவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

மாணவர் மரணத்திற்குக் காரணம் என்ன..?

உரிய தகுதியான பயிற்சியாளர்கள் சரியான எண்ணிக்கையில் இல்லாததும்,பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததும் தான் முக்கிய காரணம் ஆகும்.அது மட்டுமல்ல.நீச்சல்குளம் 7 மீட்டர் அகலமும் 20 மீட்டர் நீளமும் உடையதாக இருக்கிறது.இதில் ஒரே சமயம் 10 மாணவர்கள் தான் பயிற்சி பெற முடியுமாம்.ஆனால் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி எடுக்க அனுமதித்தது கண்டிக்கத்தக்கது.இதில் ஒரு பக்கம் குதித்து மறுபக்கம் எதிர்த்திசையில் மாணவர்கள் செல்லுமாறு இருக்கிறது.ஆனால் அந்தப்பக்கம் மாணவர்கள் ஏற வசதியாக ஒரு கைப்பிடி மட்டும் தான் உள்ளது.அந்த ஒரு கைப்பிடியும் துருப்பிடித்துக் காணப்படுகிறது.அதைச் சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட நிர்வாகத்திடம் இல்லை.இப்படியாக பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே விபத்துக்கு காரணமாக கருதப்படுகிறது.

மருத்துவமனையில் சேர்ப்பதில் தாமதம்.

ரஞ்சன் காணவில்லை என்றதும் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.அதன் பின் சிறிது நேரம் கழித்துத் தான் உடலைத் தேடுவதில் கவனம் செலுத்தியிருக்கிறது.அதைப்போல ரஞ்சன் மயக்கமடைந்த உடல் கிடைத்ததும் மருத்துவமனையில் சேர்ப்பதிலும் நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என்று கூறப்படுகிறது..பள்ளியில் நிறைய வாகனங்கள் இருந்தும் அதில் ஒன்றில் ஏற்றிச்செல்ல பள்ளி முதல்வர் மறுத்து விட்டாராம்.அருகிலுள்ள மருத்துவமனைக்கு போன் செய்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் வந்து தான் ரஞ்சனை ஏற்றிச்சென்றிருக்கின்றனர்.இதற்கு காலதாமதம் ஆகியிருக்கிறது.அதற்குள் மாணவர் இறந்து விட்டாராம்.லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கும் பள்ளி நிர்வாகம் தனது வாகனத்தில் உயிருக்குப் போராடும் மாணவனை ஏற்றிச் செல்ல மறுத்ததும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

பள்ளி தாளாளர் கைது செய்யப்படுவாரா?

மாணவன் சாவுக்குக் காரணமான பள்ளிநிர்வாகத்தின் மீது பெற்றோர்களும்,அப்பகுதி மக்களும் கடும் கோபம் அடைந்துள்ளனர்.மாணவன் சாவுக்குக் காரணமான பள்ளி தாளாளர்,மற்றும் முதல்வர்,ஆகியோரைக் கைது செய்து கடும் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பள்ளி முன் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

(என்று வெளிவந்திருக்கும்)

இத்துடன் நிறுத்தாது தினமலர்.பல பாக்ஸ் மேட்டர்களையும் வெளியிட்டிருக்கும்.

பாக்ஸ் மேட்டர்.1

இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர் ராஜசேகர், நீச்சல் குள பொறுப்பாளர் ரெங்கா ரெட்டி, உதவியாளர் அருண்குமார், விளையாட்டு ஆசிரியர் ரவிச்சந்திரன், துப்புரவு பணியாளர் ரவி ஆகிய 5 பேர் மீது கவனக்குறைவாக இருத்தல் (304 ஏ) என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ஆனால் பள்ளி நிர்வாகியான திருமதி ஒய்ஜிபி மீதோ முதல்வர் இந்திரா மீதோ மற்றவர்கள் மீதோ இதுவரை வழக்கு எதுவும் பதிவாகவில்லை.




இதற்கு முன் தாம்பரம் சேலையூரில் சீயோன் பள்ளி மாணவி பேருந்திலிருந்து விழுந்து மரணம் அடைந்ததில் அதன் தாளாளர் கைது செய்யப்பட்டார்.அதைப் போல ஜேப்பியார் விபத்தில் 10 பேர் மரணம் அடைந்த சம்பவத்தில் அதன் தாளாளர் கைது செய்யப்பட்டார்.ஆனால் இங்கோ தாளாளர் கைது செய்யப்படவில்லை.இதன் பின்னணி குறித்து அனைவரும் பல்வேறுவிதமாகப் பேசிக் கொள்கின்றனர்.

தவமிருந்து பெற்ற பிள்ளை.-பாக்ஸ் மேட்டர்.2

நீச்சல் பயிற்சியின் பொழுது மரணம் அடைந்த மாணவன் ரஞ்சன் அவனது பெற்றோருக்கு ஒரே பையன். திருமணமாகி நீண்ட நாளாகியும் ஆண் குழந்தை இல்லாததால் அவனது பெற்றோர் கோயில் கோயிலாக ஏறி பிரார்த்தனை செய்ததன் மூலம் ரஞ்சன் பிறந்தானாம்.அதனால் அவனுக்கு வீட்டில் செல்லமாம்.படிப்பிலும் படு சுட்டியாம்.அது மட்டுமல்ல,அவனுக்கு அடுத்த வாரம் தான் பிறந்த நாளாம்.இரண்டு நாளைக்கு முன் தான் அதனை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தானாம்.இந்த நிலையில் ரஞ்சன் இறந்தது குடும்பத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.அவனது பெற்றோர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதது துயரமாக இருந்தது.

பள்ளியின் வரலாறு.பாக்ஸ் மேட்டர்.3

குறுகிய காலத்தில் கிடுகிடு வளர்ச்சி அடைந்துள்ளது இந்தப்பள்ளி.முப்பது வருடங்களுக்கு முன் மிக சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்தப்பள்ளி.இன்றோ சென்னையில் பல இடங்களில் ஆல் போல் கிளை பரப்பியுள்ளது.இதில் மாணவர்களுக்கு கட்டணமாக யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு லட்சக்கணக்கில் வாங்கப்படுகிறது.ஆனால் கல்வித்தரமோ அதலபாதாளத்தில் உள்ளது.முறையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் எங்கு இல்லை.தகுதியான ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள்.இதன் வளர்ச்சிக்குப் பின் வெளிநாட்டுப் பணம் இருக்கும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.பள்ளியில் சேர்ப்பதற்காய் விற்கப்படும் அட்மிஷன் பாரங்கள் மூலமே கோடிக்கணக்கில் வசூல் ஆகுமாம்.

அதைப்போல பள்ளியில் காலை வேளையில் அனைவரும் குறிப்பிட்ட மதக்கடவுளைப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கபப்டுகிறார்களாம்.இந்து மாணவர்கள் தங்கள் கடவுளை வழிபட அனுமதி மறுக்கப்படுகிறதாம்.


இவ்வாறு எழுதிக் கொண்டே சென்றிருக்கும் தினமலர்.ஆனால் ஒய்.ஜி.பி.தனது சாதியைச் சேர்ந்தவர் என்பதால் சொறிந்து விடுகிறது.இதுதான் தினமலர்.

இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் 

தினமலர்-பொய்மையின் உரைகல்.

Tuesday, 14 August 2012

தினமணி-மெய்யாலுமா சார்..?



தினமணியில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மெய்யாலுமா என்னும் பகுதி வருகிறது.அரசியல்கட்சிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்புடைய திரைமறைவு செய்திகள் கிசுகிசுக்களாக இதில் பரிமாறப்படுகிறது.

மற்ற கிசுகிசுக்களைப் போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதாக இது இருக்காது.



எழுதுபவர் இலக்கியப் புலமை,பழந்தமிழ் மன்னர்கள் பற்றிய ஞானம், மற்றும் ஆன்மீகத்தில்  ஈடுபாடு உடையவர் என்பதால் ஒவ்வொரு தகவலும்,மேற்கண்டவை தொடர்புடைய குறிப்புகளின் ஊடாகப் பரிமாறப்படும்.

இந்தப் பகுதிக்குச் செய்திகளை நாடு முழுவதுமிலிருந்து அளிப்பவர்கள் அதன் நிருபர்கள்.

அதனை கிசுகிசுவாக மாற்றி எழுதுபவர் அதன் ஆசிரியர் என்று சொல்கிறார்கள்.




அந்தப் பகுதியின் இணைப்பு இது.



நிறைய வாசகர்கள் கொண்ட பகுதி இது.நிற்க..

இனி மேலே சொன்னவற்றிற்கு தொடர்பற்ற நம் செய்திப் பதிவுக்கு வருவோம்.

நிமிர்ந்த நடையுடன் யார்க்கும் அஞ்சாத பார்வையுடன் தினசரி ஒலிக்கும் இதழைப் பற்றிய செய்தி இது.அதன் ஆசிரியராய்  சீர்காழி அருகே எழுந்தருளியிருக்கும் வைத்தீஸ்வரர் ஆலயத்தின் மூலவர் பெயர் கொண்டவர் இருக்கிறாராம்.இவர் நடுநிலை பிறழாதவரைப் போல் காட்டிக் கொள்வதில் வல்லவராம்.ஆனால் நிஜத்திலோ..?

எடுத்துக் காட்டாய் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறார்கள்.

அந்த நாளிதழில் வாரம்வாரம் அரசியல் புரணி பகுதி ஒன்று வெளிவருகிறதாம்.அதற்கு அதன் நிருபர்கள் கஷ்டப்பட்டு அனுப்பும் செய்தியை இவர் கொஞ்சம் உருமாற்றி எழுதுகிறாராம்.

இந்தப் பகுதிக்கு அலுவலகத்தில் வாரம் 10 ஆயிரம் ரூபாய் கணக்கெழுதி வாங்கப்படுகிறதாம்.ஆனால் அது செய்தி கொடுத்த சம்பந்தப்பட்ட நிருபர்களுக்கு கொடுக்காமல் இடையில் வேறொருவருக்கு மடை மாற்றப்படுகிறதாம்.

சம்பந்தப்பட்ட நிருபர்களுக்கு ”புளியோதரை” மட்டும் தான் கொடுக்கப்படுகிறதாம்.

ஊரெல்லாம் துப்பு துலக்கி அம்பலப்படுத்தும் பகுதியிலேயே ஊழலா என்று அங்குள்ளவர்கள் முனங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

மெய்யாலுமா..? 

எல்லாம் அந்த வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதனுக்கே வெளிச்சம்...!