Thursday, 23 February 2012

விகடனில் பணியாற்றும் கறுப்பு ஆடு யார்?






தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக  வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து,  நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் ‘திறமையாக’க் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.

அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை  வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம்.  ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால்,  புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.
தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.
இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.



                            அம்சா மனைவியுடன்

இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய் ‘விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறது’ என்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.
தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி  ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.
ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ” எஸ்.ஆர். எம். மாளிகை”. அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டு ‘எஸ்.ஆர்.எம்‘  என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.
எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில்  கொண்டு  வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.
ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.
எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.
நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு  வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும்  ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை  அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.
தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த  பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான்
பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.
இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.





நன்றி-புதிய ஜனநாயகம்-செப்டம்பர் 2009


இந்தக்கட்டுரை இரண்டு வருடங்களுக்கு முந்தைய பழைய கட்டுரையாக இருக்கலாம்.ஆனால் இன்னும் வெளிவராத நடப்புச் செய்தி ஒன்று இருக்கிறது.

இந்தக்கட்டுரையின் படி நமக்கு "தெரியாத"விடை அல்லது "அம்பலத்துக்கு வராத" விடை என்னவென்றால் விகடனில் இப்பொழுதும் பணியாற்றும் பத்திரிகையாளர்  ஒருவர் தான்
  புதிதாக வந்துள்ள இலங்கையின் துணைதூதருக்கும் தரகு வேலை பார்ப்பதாக செய்தி கூறுகின்றதே!

யார் அந்த கறுப்பு ஆடு?தெரிந்தால் நீங்கள் சொல்லுங்களேன்!


No comments: