Wednesday 20 August 2014

பெண் செய்தி வாசிப்பாளர்களை இழிவு படுத்தும் மஞ்சள் நக்கீரன்..!



நக்கீரன் இப்பொழுது புதுப்பொலிவுடன் வெளிவருகிறதாம். ஊரெங்கும் சுவரொட்டி ஒட்டி விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.விலையோ.ரூ.15.

புதுப்பொலிவு என்று சொல்லிக் கொண்டாலும் பழைய சரக்குத் தான்.
வழக்கம் போலத்தான். புதிய பகுதிகள் என்று 4 பகுதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.கோபிநாத் எழுதும் தொடர் தவிர்த்து மீதமுள்ள மூன்று தொடர்களும் கிசுகிசுக்கள் மற்றும் பாலியல் தொடர்புடையவை தான். நக்கீரனின் குணமும் மணமும் மாறி விடுமா என்ன..?

அதில் வந்த செய்தி;விசாரித்த உண்மை என்ற ஒரு பகுதி.

இதன் தலைப்பும் செய்தி உள்ளடக்கமும் இதற்கு முன்பு மஞ்சள் பத்திரிகைகளிலும்,சில சினிமா பத்திரிகைகளிலும்,நாலாந்தர பத்திரிகைகள் ஒரு சிலவற்றிலும் வந்தவை தான்.அதை இப்பொழுது நக்கீரனும் பின்பற்றுகிறது.

இந்தப் பகுதி மூன்று இதழ்கள் இதுவரை வந்துள்ளது.இதில் இருந்து இரண்டு பதிவுகளை எடுத்துக் காட்டுகிறோம்.

ஆகஸ்டு 09-12 ஆம் தேதியிட்ட இதழில் வந்த பதிவு இது. ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூவில் இருந்து நள்ளிரவு ஒரு பெண்மணி நிர்வாணத்துடன் ஓடியதாக பதிவு.




இந்தச் செய்தியில் உள்ள  உண்மைத்தன்மையை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறோம்.

அடுத்து  2014 ஆகஸ்டு 16-19 தேதியிட்ட கடந்த இதழில் வந்த ஒரு பதிவு.



இதிலிருந்து நக்கீரன் உண்மை என்று ஒப்புக்கொள்வது என்னவென்றால் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் மூவர் பாலியல் தொழில் செய்யும் பொழுது சிக்கி விட்டார்கள். அவர்களை காவல்துறை கோ-ஆபரேட் செய்ய வேண்டும் என்று சொல்லியது. இன்னொன்று இதில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பிற செய்தி வாசிப்பாளர்களை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதுடன் அவர்களையும் கோ-ஆபரேட் செய்யச் சொல்ல வேண்டும் என்பது.( பாலியல் தொழில் செய்து பிடிபடும் பெண்களிடம் காவல்துறை விரும்பும் 'கோ-ஆபரேட்' என்பதற்கு என்ன அர்த்தம் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.)

மஞ்சள் பத்திரிகையை நகல் எடுத்தது போல் எழுதியுள்ளது நக்கீரன்.இதற்கு மேல் கேவலமாகவும் இழிவாகவும் எழுதுவதற்கு ஒன்றுமில்லை.

தமிழ்நாட்டில் அதிகபட்சம் 10 செய்தி சேனல்கள் இருக்கிறது.மொத்தம் 50 நபர்கள் செய்தி வாசிக்கலாம். இதில் பெண்கள் 30 பேர் இருக்கலாம். நக்கீரன் 3 பேர் பிடிபட்டார்கள் என்கிறது.இன்னும் இதில் சம்பந்தப்பட்டவர்களை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டதாய் எழுதுகிறது.

''வந்த செய்தி- விசாரித்த உண்மை'' என்று நக்கீரன் இரு பகுதியாக எழுதுகிறது.

வந்த செய்தி- விசாரித்த உண்மை என நக்கீரனின் இரண்டு பகுதிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ? இரண்டுமே ஒன்று போல அடிப்படை ஆதாரமற்றதாகதாகவும் கட்டுக்கதையாகவும் தானே இருக்கிறது.

 பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என்பது விசாரித்த உண்மை என்றால்அதை நிருபிக்க என்ன தரவுகளை நக்கீரன் வைத்துள்ளது..? எந்த நாளில்,எங்கு பிடிபட்டார்கள்..? எந்த டீம் பிடித்தது..? அவர்கள் பெயர் என்ன..?அந்த பெண்கள் எந்த தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார்கள்..? எந்த ஆதாரத்தை நக்கிப் பிழைக்கும் நக்கீரன் வைத்துக்கொண்டு இதனை உண்மை என்று சான்றிதழ் அளிக்கிறது..?

எங்கோ ஒரு நகராட்சியில் ஏதோ ஒரு கவுன்சிலர் லஞ்சத்தில் மஞ்சம் குளிக்கிறார் என்பன போன்ற கிசுகிசு அல்ல இது .இதை போகிற போக்கில் படித்து விட்டு அலட்சியப்படுத்தி விட்டுச் செல்ல முடியாது. தன் துறையில் உள்ள பெண்களை மிக மிகக் கேவலமாக இழிவு படுத்தும் செய்தி இது. இதை அறிய நெற்றிக்கண் தேவை இல்லை.

தனது துறை பணியாளர்கள் குறித்தே இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற,மிக கேவலமான செய்தியை 'துணிந்து' வெளியிடும் நக்கீரனிடம் நாம் அதன் பிற‌ செய்திகளில் உண்மையும் நேர்மையும் இருக்க முடியும் என்பதை நம்ப முடியுமா என்ன..?

****

ஒப்பீட்டளவில் இதைப் போன்ற செய்தியை ( நடிகைகள் விபச்சாரம் செய்கிறார்கள்,அவர்களின் விலை என்ன..?) முன்பு கேவலமாய் செய்தி வெளியிட்டமைக்காக  நடிக,நடிகைகள் போராடினார்கள். அதைத் தொடர்ந்து தினமலர் சென்னைப் பதிப்பின் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டார். நடிக,நடிகைகளிடம் இந்த விஷயத்திலாவது இருக்கும் ஒற்றுமையை நாம் ஊடகவியலாளர்களிடம் எதிர்பார்க்க முடியாதது தான்.தினமலர் நாளிதழ் அதன் பிறகு வருத்தம் தெரிவித்தது.



பெண் எழுத்தாளர்கள் ஊடக பலத்தில் தான் தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்று ஜெயமோகன் சொன்னமைக்காய் மும்பையில் வாழும் எழுத்தாளர் சி.எஸ்.லட்சுமியில் இருந்து முகநூலில் ஒரு நிலைத்தகவல் போட்டவர்கள் வரை எத்தனையோ பெண்கள் போராளியாய் அவதாரம் எடுத்து எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ராஜா,செய்தி வாசிப்பாளர் அகிலாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்பும், ராஜாவைக் கண்டித்தால் தங்களின் 'கருத்தாளர்,மற்றும் சமூக ஆர்வலர் அடைமொழிக்குப் பங்கம் வந்துவிடும் என்று இணையத்தில்,தொலைக்காட்சியில் தினமும் கருத்துச் சொல்ல அவதரிக்கும் போராளிகள் முதல் தொழில் பத்திரிகையாளர்கள்,சங்கங்கள் வரை எல்லோரும் கள்ள மவுனம் காத்தார்கள்.

கடைசிவரை பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை.பெண் பத்திரிகையாளர்கள் சங்கமான NWMI என்ற பெயரில் கண்டன அறிக்கை வெளியான‌து. அந்த அமைப்புக்கு தமிழ்நாட்டில் பிரதிநிதிகளோ அமைப்போ இல்லை என்பது குறிப்பிட‌த்தக்கது. அத்துடன் அது முற்றுப் பெற்றது யாரும் அது குறித்து அதன்பிறகு பேசவில்லை.

அது தான் இப்பொழுதும் நடக்கும் என்பது நமக்குத் தெரியும்.

இந்தச் செய்தி வெளியாகி ஐந்து நாட்களாகியும் எந்த எதிர்வினையும் இல்லை. குறைந்த பட்சக் கண்டனம் தெரிவிக்க கூட ஆட்கள் இல்லை.

இதுவரை மட்டுமல்ல,இன்னும் எத்தனை மாமாங்கம் ஆனாலும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பாலியல் ரெய்டில் சிக்கினார்கள் என்ற நக்கீரனின் இழிவான செய்திக்கு,  பத்திரிகையாளர்கள்,மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள்,பெண் பத்திரிகையாளர்கள், அக்மார்க் பெண் போராளிகள், இணையத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் செயல்படும் மனித உரிமை ஆர்வலர்கள்,கருத்துப் போராளிகள்,நக்கீரனில் 'எதிர்க்குரல்' என்ற பெயரில் வருடக்கணக்கில் பத்தி எழுதிய‌தோடு மட்டுமல்லாமல்,இன்று தினமும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் பல பிரச்சனைகளில் தனது கருத்தைச் சொல்லும் மனுஷ்யபுத்திரன் வரை யாரும் எந்த எதிர்வினையும் காத்திரமாகவும் உண்மையாகவும் ஆற்ற மாட்டார்கள் என்பது நமக்கு நன்கு தெரியும்.

சன் குழுமத்தை விட‌ நக்கீரன் வலிமை குறைந்த ஊடகம் என்பதால் குறைந்த பட்ச எதிர்ப்பு முணுமுணுப்பு இருக்கலாம்.

ஆனால் நாம் நமது எதிர்வினையை ஆற்றாமல் இருக்க முடியாது.

வந்த செய்தி-நக்கீரன் மஞ்சள் பத்திரிகை என்பது தொடர்ந்து நிருபணமாகிக் கொண்டே இருக்கிற‌தாமே..? உண்மையா..?

விசாரித்த உண்மை-ஆம்.நக்கீரன் மஞ்சள் பத்திரிகை என்பதில் இருந்து எப்பொழுதும் பின்வாங்குவது இல்லை.அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு கடந்த இதழில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் குறித்து எழுதிய அவதூறு தான். நக்கீரன் தனது தொழிலை தொடர்ந்து செய்யும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வாழ்க பத்திரிகை 'ஜனநாயகம்'.


2 comments:

Anonymous said...

நீங்கள் சொல்வது நிஜமாவே அதிர்ச்சியானது தான்.தமிழ் மாநிலத்தில் எத்தனை எத்தனை மாதர் சங்கங்கள் இருக்கிறது. இணையத்தில் போராளிகள் குவிந்து கிடக்கின்றனர்.அதுவும் சொல்லவே வேனடாம். பெண் பத்திரிகையாளர்கள் ஒரு நிலைத்தகவல் போட்டாலெ போதும்.இப்பிபிரச்சனை பற்றியெரியும்.ஆனால் என்னவோ எல்லோரும் நமக்கென்ன என இருக்கின்றனர்.

தம் பிரச்சனைக்கு குரல் கொடுக்காதவர்கள் வேறு எதற்கு குரல் கொடுக்கப் போகிறார்கள்..?

கலகக்குரல் said...

கவலைப்படாதீர்கள் முகமறியாத நண்பரே...இங்குள்ள போராளிகளும் பெண் பத்திரிகையாளர்கள் கண்டிப்பாய் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்க மாட்டார்கள்,ஆனால் உலகில் எந்த மூலையிலாவது நடக்கும் பிரச்சனைக்கு பொங்கு பொங்கு என்று பொங்கி போராளி வேஷம் கட்டுவார்கள்.கவலை வேண்டாம்.