Sunday, 20 April 2014

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்கும்...!ஜூனியர் விகடன் தனது அடுத்த‌ கருத்துக் க‌ணிப்பு என்று ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுவரை பல கட்டங்களில் கருத்துக் கணிப்பை நடத்தி பல கட்டமாக வெளியிட்டு வாசகனின் பாக்கெட்டில் இருந்து பணத்தை பிடுங்கியது போதாது என்று இறுதியாக அனைத்தையும் தொகுத்தும்,புதிய மற்றும் இறுதி கணிப்பை வெளியிட்டுள்ளது.

ஜூனியர் விகடனின் மோடி பாசம் இதில் வெறியாக வெளிப்பட்டுள்ள‌து.மோடி பிரதமர் பதவியைப்பிடிப்பதற்கு எப்ப‌டி எதற்கும் தயாராய் இருக்கிறாரோ, அதைப்போல அவருக்கு காவடி தூக்கும் ஜூனியர் விகடனும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய‌ பொய்யை உரைத்து விற்பனையை அதிகரிப்பதற்கும், தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் இதுவரை வெளியிட்ட சர்வேக்கள் போதாது என்று இப்பொழுது இறுதி சர்வே வெளியிட்டுள்ளது..இதன் படி பார்த்தால்  தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிஅதிக வாக்குகளை பெறும்.அதற்கடுத்த இடங்களை முறையே அதிமுக மற்றும் திமுக பெறும் என்றும்,நரேந்திர மோடி பிரதம்ராக மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என சொல்கிறது.

ஜூனியர் விகடன் சர்வே சரி தானா என‌ அம்பலப்படுத்த மக்கள் தீர்ப்பு மே 16 இல் வெளிவரும்.

அப்பொழுது இது குறித்து எழுதுவோம்.
**

ஆனால் இதை வெளியிட்டு  ஜூனியர் விகடன் ஒரு பெருமைமிகு புராணமும் பாடியிருக்கிறது.

//நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போது மக்கள் மனதைப் படம் பிடிக்கும் கருத்துக் கணிப்புகளை 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து வாசகர்களுக்கு வெளியிட்டு வருகிறோம். இவை மக்கள் மனதைப் படம் பிடிப்பதாக, வெற்றி, தோல்விகளுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் இந்தத் தேர்தலை முன்னிட்டும் கருத்துக் கணிப்புகளை எடுக்கத் தொடங்கினோம். //

ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்புகள் உண்மையில் மக்கள் மனத்தைப் பிரதிபலிப்பவையாக இருந்துள்ளனவா ?

அதன் கருத்துக்கணிப்புகள் இதுவரை பொய்த்ததே இல்லையா..?

இந்த வாக்கியத்தின் உண்மைத்தன்மையை உணர‌ அதிகம் மெனக்கெட வேண்டியது இல்லை.2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜூவி வெளியிட்ட‌ கருத்துக்கணிப்பு ஒன்றே போதும்அந்தக் கருத்துக் கணிப்பிலும் பாருங்கள்.ஜெயலலிதாவுக்கு முதல் பாதகமானது என்று எதைச் சொல்லுகிறது என்றால்,ஜெயலலிதா திருந்தவில்லை என வைகோ சொன்னாராம்.அது தான் ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய பாதகமாம்.கடந்த தேர்தலில் நிற்கவே வக்கற்று காணாமல் போன வைகோ சொன்னதை நம்பி மக்கள் ஜெயலலிதாவுக்கு பாதகமாய் இருக்கிறார்கள் என்று சொன்னது மிகப்பெரிய காமெடி. 

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு 141 இடங்களும் திமுகவுக்கு 92 இடங்களும் மற்றவர்களுக்கு 1 இடமும் கிடைக்கும் எனக் கூறியது ஜூனியர் விகடன். ஆனால் முடிவு என்ன ஆனது என்பது நமக்குத் தெரியும்.
திமுக கூட்டணிக்கு  வெறும் 31 தொகுதிகள் தான் கிடைத்தன.

இது தான் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பின் யோக்கியதை.92 தொகுதிகள் எங்கே..? 31 தொகுதிகள் எங்கே..?
சரி தேர்தல் முடிவுகள் ஜூ.வி. வெளியிட்டதற்கு மாறாய் வந்தவுடன்,தனது கருத்துக்கணிப்புகள் பொய்த்துப் போனதற்காய் அல்லது சிறு சறுக்கல் என்றாவது காரணம் சொல்லி  குறைந்த பட்சம் ஒரு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டுமா இல்லையா..அதுவும் இல்லை.


தேர்தல் முடிவுக்குப் பின் வந்த ஜூவியில் என்ன எழுதினார்கள் தெரியுமா..கழுகார் என்ற பெயரில்,

அடடா... உம் கருத்துக் கணிப்புக்காக, ஜூ.வி. நிருபர் படைக்கு தனியாக ஒரு பூங்கொத்தை நான் கொண்டுவந்திருக்க வேண்டும்!'' என்ற கழுகாரைப் பேசவே விடாமல், எஸ்.எம்.எஸ்-கள் வந்து குவிந்துகொண்டு இருந்தன. 

(2011 மே 18 தேதியிட்ட இதழ் கழுகாரில் )

மிகப்பெரிய தவறைப் பற்றி கூச்சம் எதுவும் படாமல் தான் மிகச்சரியாக கருத்துக் கணிப்பை வெளியிட்டது போலத் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டது கழுகார் என்ற பெயரில்.

து தான் ஜூ.வி.அப்பொழுதைய பரபரப்பிற்காக எதையாவது எழுதி விற்றுவிட்டு,தான் எழுதியதற்கு மாறாய் எந்த முடிவுகள் வந்தாலும் அது குறித்து துளியும் கவலைப்படாமல்,தான் சொன்னது மட்டும் நடந்தது மாதிரியான தோற்றத்தை உருவாக்குவதில் அதனை மிஞ்ச யாரும் இல்லை.வாசகனை மடையனாக கருதுவதில் அதற்கு நிகர் அது தான்.

இவ்வாறு 3 வருடங்களுக்கு முன்னர் திமுக 92 இடங்கள் ஜெயிக்கும் என்று சொல்லி அம்பலப்பட்ட ஜூனியர் விகடன் தான் இப்பொழுது மோடிக்கு 50.68 சதவீகித வாக்குகள் தமிழ்நட்டில் கிடைக்கும் என்று சொல்கிறது.

அத்துடன் இல்லாமல் எங்கள் கருத்துக் கணிப்புகள் எப்பொழுதும் மக்கள் மனதைப் படம் பிடிப்பதாக,வெற்றி தோல்விகளுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ள‌ன என்று நெஞ்சை நிமிர்த்திச் சவடால் வேறு.

உண்மையை ஒரு கணம் கூட மறந்தும் பேசக் கூடாது என்று அலுவலகம் நுழையும் பொழுது சபதம் எடுப்பார்களோ..?

'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது' என்று ஒரு பழமொழி உண்டு.அது மட்டும் உண்மையாக இருந்தால், ஜூனியர் விகடனில் யாருக்கும் ஒருவேளைச் சோறு கூடக் கிடைக்காது.

No comments: