Thursday, 23 May 2013

G tv -ல் பத்திரிகையாளர்களின் 3 நாள் போராட்டத்துக்கு வெற்றி...!

மடிப்பாக்கம் வேலாயுதம்...

இவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.

கட்டப்பஞ்சாயத்து,கள்ள‌ச்சாராயம்,ரியல் எஸ்டேட் பேர்வழிகள்,அரசியல் தரகர்கள் ஆகியோர் 1990 கால கட்டங்களில் கல்வித்தந்தைகள் ஆனார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

அவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் செல்வாக்கைத் தொடர்ந்து வளர்க்கவும் அரசியலில் தக்கவைக்கவும் இப்பொழுது ஊடக அதிபர்களாக வலம் வரத் திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள். இதில் ரியல் எஸ்டேட் துறையில் இருந்து வெற்றியை நோக்கிப் பயணிப்பவர் தான் மடிப்பாக்கம் வேலாயுதம்.

ரியல் எஸ்டேட் புள்ளியான‌ இவர், எத்தனை நாளைக்குத் தான் அடுத்தவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பது, நாமே ஒரு அதிகார மையமாக உருவானால் என்ன என்று சிந்தித்து புதிய தலைமுறையின் வழியில் உதித்தது தான் ஜி டிவி எஸ்பிவி சேனல்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது விழுப்புரம் தொகுதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேடபாளராய் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக எழுந்த மோசடிக் குற்றச் சாட்டுகள் காரணமாய் மாற்றப்பட்டார். 

ரியல் எஸ்டேட் துறையில் இவர் மோசடி செய்தார் என்று நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் பின்பு அந்த வழக்குகள் பேசித் தீர்க்கப்பட்டதும்  நாடறிந்த உண்மை.

பொதுவாக,  ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து நபர்கள், 'கல்வித் தந்தைகள்' போன்றவர்கள் தங்களின் துறையில் ஒரு கொடூர முகம் கொண்டிருந்தாலும் ஊடக உலகில் 'புத்தரின் கருணை'யைப் போன்ற முகம் காட்டுவார்கள். ஆனால் இதிலும் விதிவிலக்கு தான் மடிப்பாக்கம் வேலாயுதம்.

ஆம். இதிலும் நேர்வழியைக் கடைப்பிடிக்கவில்லை. ஆம். இவரது தொலைக்காட்சி குறித்து பலசெய்திகள் பகிர்வதற்கு இருந்தாலும் அவரது தொழிலாளர் விரோதப் போக்கை மட்டும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
**

இவர் ஜி டிவி ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை தொழிலாளர்களுக்கு ஒழுங்காக‌ குறித்த காலத்தில் சம்பளம் ் அளித்ததே இல்லை. தீபாவளி,பொங்கல் உட்பட எதற்கும் போனஸ் கொடுத்ததும் இல்லை. எல்லா நிறுவனங்களிலும் தீபாவளிக்கு முன்பு போனஸைத்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால்,  தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்புதான் இங்கு சம்பளமே தருவார்கள்.அதைப்போல அனைவருக்கும் ஊழியர் அடையாள அட்டை தரப்படுவதும் இல்லை.குறிப்பிட்ட ஒரு சிலருக்குத் தான் தருவார்கள்.

ஆரம்பத்தில் இருந்து, சம்பள தாமதம் தொடர்ந்து இருக்கிறது.ஆனால் அது சமீபத்தில் உச்சத்திற்குச் சென்று விட்டது. கடந்த மூன்று மாதங்களாக முறைப்படி யாருக்கும் சம்பளம் தரவில்லை.கடைசியாக ஜ‌னவரியில்தான் அங்குள்ள ஊழியர்கள் சம்பளம் வாங்கினார்கள். அதற்குப் பிறகு, 2 மாதம், 3மாதம், 4 மாதம்.. சம்பள பாக்கி எனும் நிலை உருவானது.

அவர்கள் சம்பளம் கேட்டு நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அது செவி மடுக்கவில்லை. ஒவ்வொரு நிர்வாகத்திலும் ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஒருவர் இருப்பாரே அதைப் போல ஜிடிவியிலும் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் எஸ்.கே மதிவாணன். இவர் அங்கு மேனேஜிங் எடிட்டராம். (நல்லா பண்றாரு மேனேஜ்...)
***

தமிழ் தொலைக்காட்சிகளில் பல மதிவாணன்கள் இருப்பதால், இவரை உதார் மதிவாணன் என்றே அடையாளம் சொல்கிறார்கள். அது என்ன, உதார்?

மதிவாணன்


வேலை செய்வதைவிட வாய் உதாரிலேயே எல்லாரையும் சமாளித்துவிடுவாராம். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் செய்த மொத்த உழைப்பாலும் ரேட்டிங்கில் முன்னணி இடத்துக்கு சேனல் வந்ததும், அது தன்னால்தான் என்று வாய்கூசாமல் பீற்றிக்கொண்டார்.

'தினமணி' சந்தானகிருஷ்ணன், 'தினமலர்' நூருல்லா, 'ஃபெலிக்ஸ்' ஜெரால்டு, மோசஸ் ராபின்சன், ஏழுமலை வெங்கடேசன் என பல ஊடகக்காரர்கள் கட்டி வளர்த்த  ஜிடிவியில், அவர்களால் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் வெளியேறிவிட்டனர்.

காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, சேனல் ஓரளவுக்கு முன்னணியில் போகத் தொடங்கிய போது, இவர் வேலைக்கு வந்தார் ஆனாலும், என்ன? மதிவாணன் தான் எல்லாம் என வேலாயுதம் நம்பியதால், யாரும் இவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

 வேலாயுதம் 

அப்படி மதிவாணன் சாதித்தது என்ன என பட்டியல் போட்டால், மற்ற பல செய்தியாளர்க‌ளின் சாதனைகளைக் கிட்ட நெருங்கமுடியாது. இவர் முதன்முதலில் வேலை பார்த்தது விஜய் செய்திகளில். அதன் பிறகு சன் நியூஸில், பிறகு கொஞ்ச நாள் ஆளைக் காணவில்லை. மக்கள் தொலைக்காட்சி உட்பட பல இடங்களில் முயற்சிசெய்தும் இவரின் திறமையைக் கண்டு, அவர்கள் தெறித்துப்போனார்கள்.

........................ஒருவழியாக, நீண்ட இடைவெளிக்குப் பின் ஜிடிவி யில் மேனேஜிங் எடிட்டர் பதவியில் ஒட்டிக்கொண்டார்.
ஜிடிவியில் வந்ததில் இருந்தே இவர் செய்துவந்த காரியம், மற்றவர்கள் சரியில்லை எனச் சொல்லிச் சொல்லியே, மேலிடத்தில் செல்வாக்கு பெற்று, அதிலேயே வண்டியை ஓட்டிவருகிறார்.

ஜிடிவியில் இவரின் திறமைகளைப் பற்றிச் சொன்னால், பல சுவாரஸ்யமான கதைகளைச் சொல்கிறார்கள், செய்திப் பிரிவில் உள்ளவர்கள்.

ஒரு செய்தியை மட்டும் பார்ப்போம்.

சில மாதங்களுக்கு முன்பு 'தங்கம் கிராம் விலை ரூ. 3 ஆயிரத்தைத் தொட்டது'. சரியாக எழுதப்பட்ட அந்தச் செய்தியைத் திருத்துவதாக நினைத்துக்கொண்டு, குறுக்கிட்ட உதார் மதிவாணன், செய்திப்பிரிவுக்குள் வழக்கமாக‌ சத்தம் போட்ட படியே சென்றவர், பெரிய தவறைக் க‌ண்டுபிடித்தது போல, 'சவரன் விலை 3 ஆயிரம் ஆனது' என்று திருத்திக் கொடுத்தார்.

இதைக் கண்டு தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக செய்திப்பிரிவு ஆசிரியர்கள் சவரனுக்கும் கிராமுக்கும் வித்தியாசம் தெரியாதது மட்டுமல்ல, நம்மையும் தப்புன்னு சொல்றான். இதை எங்க போய் முட்டுவது என்று புலம்பினர். இது தான் உதாரின் செய்தி அறிவு.

அந்த உதார் தான் மேனேஜிங் எடிட்டர் என்பதால் அவரிடம் கடந்த திங்கட்கிழமை அன்று 17 உதவி ஆசிரியர்கள் தங்களுக்கு 3 மாதமாய்ச் சம்பளம் வராததை முறையிட்டனர்.

இங்கு எல்லாவற்றுக்கும் நான் தான் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் அவர் இதில் மட்டும் கல்லுளி மங்கன் என்று சொல்வார்களே, அதைப்போல, அந்த விசயத்துக்கு சம்மந்தம் இல்லாதவரைப் போல அமைதியாகவே இருந்தவர், ஒரு கட்டத்தில் பொறுக்காமல், அடிஉள்ளத்தில் இருந்தபடி, நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் பேசினார்.

இதனால் ஆவேசமான ஊழியர்கள் சிலர், '' பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள்,  என்ன சார்,நிர்வாகத்தின் கைக்கூலியைப் போல் நடந்து கொள்கின்றீர்களே..?' என்று கேள்வி கேட்டதும், ' ஆம் நான் கைக்கூலி தான்' என்று கூச்சமே இல்லாமல்  ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

மேற்கொண்டும் அங்கு வாதத்தை வளர்க்க விரும்பாத பாதிக்கப்பட்ட ஊழியர்கள், கறாராக, மூன்று மாத சம்பளத்தை மூன்று நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். அதனை வலியுறுத்தி   20-05-2012 முதல் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தம். அப்பொழுதும் கொடுக்காவிட்டால் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிப்போம் என்றும் அங்கேயே அறிவித்த‌னர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உதார், அப்படியெல்லாம் செய்துடாதீங்க..தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று  தடாலடியாக அதீத பணிவைக்காட்டினார்.

முதலாளிக்கு இவ்வளவு பணிவைக் காட்டும் உதாருக்கு, ஊழியர்களுக்கு ஊதியம் தராததில் அவருக்கு எவ்வித உறுத்தலும் குற்ற உணர்வும் இல்லை.

****
இன்றுடன் (23-05-2012)மூன்று நாள் கெடு முடிவடைய இருந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சொரணையுள்ள‌ ஊழியர்கள் மெரினா கடற்கரையில்  கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஊழியர்களின் போராட்டத்திற்கு அஞ்சிய நிர்வாகம் சென்னை ஊழியர்களுக்கு ஒரு மாத நிலுவை ஊதியத்தையும்,இதர மாவட்ட ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியத்தையும் இன்று மாலை அளித்துள்ள‌து.

சென்னை அல்லாத பிற மாவட்ட ஊழியர்களுக்கு மட்டும் எப்படி இரண்டு மாத ஊதியம்...? சூடுசொரணை கொண்ட அவர்கள் ஒட்டுமொத்தமாய்ப் பேசி, மாவட்டச் செய்திகளை அனுப்பாமல் செய்திச் சேனலை ஸ்தம்பிக்க வைத்தனர்.

3 நாட்களும் ஓடியது என்ன செய்தி..?

வேறென்ன பழைய செய்தி தான்..!

சில நூறு கோடிகளைச் செலவழித்து தங்களின் கறைபடிந்த முகத்தினை மாற்றி அதற்குப்பின் 'ஒளிவட்டம்' கட்ட விரும்புபவர்கள், உழைக்கும் ஊழியர்களுக்கு சில ஆயிரங்களைக் கூட கொடுக்க மனமில்லாமல் அவர்களை மாதக் கணக்கில் அலைக்கழிக்கிறார்கள்,இழிவாய் நடத்துகிறார்கள் என்பது தான் கொடுமையான உண்மை.

ஆனாலும் அதனையும் மீறிப் போராடி முதல் கட்ட வெற்றியை ஈட்டிய ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள். 

உழைப்பும் இந்த போராட்ட உணர்வும்தான் என்றும் நிற்கும். 

3 comments:

krishna said...

very nice

tamilar said...

vazhthukal

Mathi said...

GTV Goes blank.... Again salary problem