Friday 11 January 2013

விருது வாங்கலியோ விருது...விகடன் விருது...!



வாசன் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் ஆனந்த விகடன் இதழ் இந்த வாரம் விகடன் விருதுகள் 2012 அறிவித்துள்ளது.

திரைப்படம்,சின்னத்திரை,பண்பலை வானொலி,நூல்,இலக்கியம்,சிற்றிதழ்,வானொலி,மோட்டார் துறை என பல்துறைகளில் ஆடித்தள்ளுபடி போல் 50 விருதுகளை  வழங்கிக் குவித்துள்ளது.

ஆனால் மொத்த விருதுகளில் திரைப்படத் துறைக்கு 29 விருதுகள்,சின்னத்திரைக்கு 5 விருதுகள்,பண்பலை வானொலிக்கு 3 விருதுகள் என்பதை என்னும் பொழுது எந்தத் துறையை நம்பி ஆனந்த விகடன் இருக்கிறது,எதனை விற்று தனது வருவாயைப் பெருக்குகிறது என்பது விளங்கும்.



மொத்த 50 விருதுகளில்  கல்வி தொடர்பானவை ஒன்று கூட இல்லை என்பது கசப்பான நிஜம்.

அதே சமயம்  சிறந்த மோட்டார் பைக்,சிறந்த கார் என மோட்டார் துறை தொடர்பில் 2 விருதுகள் என்று நீங்கள் வாயைப் பிளக்காதீர்கள்.விகடன் நிறுவனம் மோட்டார் விகடன் என்னும் இதழை நடத்துகிறது.
இந்த விருதுகள் எப்படித் தேர்வு செய்யப்படுகின்றன,இதற்கென குழு எதுவும் அனைத்துத் துறை ஆளுமைகள் பங்களிப்புடன்  பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இருக்கிறதா என்று நமக்குத் தெரியவில்லை.அப்படியெல்லாம் எதுவும் நல்லபடியாய் நடக்காது என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.

 (சென்ற ஆண்டு சு.வெங்கடேசனின் 1000 பக்க காவல் கோட்டம் நாவல் அச்சாகி வெளிவந்த  4 நாட்களிலேயே விக‌டன் சார்பில் சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.என்னா ஸ்பீடு.)




விஜய்க்கு சிறந்த நடிகர் விருது வழங்கியது அபத்தம் என்றால் விகடன் நிறுவனம் தனக்குத் தானே விருது வழங்கிக் கொண்டது உச்சக்கட்ட அபத்தம் மற்றும் மோசடி.

விகடன் 2012 ஆம் ஆண்டு  விருதுகளின் பட்டியலைப் பார்த்துக் கொண்டு வந்தால் சின்னத்திரையின் சிறந்த தொடருக்கான 2012 ஆம் ஆண்டிற்கான விருது 'அழகி' என்னும் நெடுந்தொடருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும்,அவர்களின் நேரத்தை வீணடிக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு சிறந்த தொலைக்காட்சித் தொடர் என்ற தலைப்பில் விருது கொடுக்கப் பட வேண்டுமா என்று யாரேனும் வினவலாம்.
ஆனால் எத்தலைப்பின் கீழ் விருது வழங்க வேண்டும் என்று முடிவெடுப்பது  விகடன் நிறுவனத்தின் உரிமை என்று கருதி அதனை நாம் இங்கு விவாதிக்க விரும்பவில்லை.


ஆனால் தேர்வு சரியா என்று பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது.
ஆகவே 'அழகி' கடந்த ஆண்டின் 2012 இன் சிறந்த தொலைக்காட்சித் தொடரா என்று பார்ப்போம்.

மொத்தத்தில் தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் அபத்தம் என்ற வகையில் நாம் இதுவரை எந்த தொடரையும் பார்த்ததில்லை.அதைப் போல அழகி தொடரையும் பார்த்ததில்லை.ஆகவே இந்தத் தொடருக்கு சிறந்த நெடுந்தொடர் என்னும் விருது கொடுத்தன் தேர்வு குறித்து   நாம் எந்தக் கருத்தையும் தெரிவிக்க இயலவில்லை.

ஆனால் இது தார்மீக ரீதியாக சரியா தவறா என்பது இங்கு விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
ஏனென்றால் அழகி தொடரைத் தயாரிப்பது விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம்.இது வாசன் பப்ளிகேஷன்ஸின் சகோதர நிறுவனம்.(இரண்டு நிறுவனங்களின் பங்குகளும் நிர்வாகமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் தான் உள்து.)

தனது நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ஒரு தொலைக்காட்சித் தொடருக்குத் தானே விருது வழங்குவது சரியா..?

தேர்வுக்குழு முன்முடிவுடன் செயல்பட்டிருக்கிறது என்று யாரும் நம்பலாமில்லையா..?
இந்த வருடத்தில் வேறு எந்த நிறுவனமும் இதைப்போல தரமான தொடர்களைத் தயாரிக்கவில்லையா..?என்று கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன.

முதலில் ஊருக்கெல்லாம் அறம் குறித்து போதிக்கும் விகடன் நிறுவனம் தனது நிறுவனம்,தான் அறிவிக்கும் விருதுகளில் தனது நிறுவனம் தயாரிக்கும் தொடருக்கே விருது வழங்கச் செய்திருக்கக் கூடாது.போட்டியிலிருந்து விலகி பிற நிறுவனங்களின் தொடர்களை மட்டும் பரீசீலனைக்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

எங்கள் நிறுவனம் தயாரிக்கிறது என்பதற்காய்,தரமான தொடர் என்றாலும் விருது வழங்கக் கூடாதா..? அதிக அளவு வர்த்தகப் போட்டியுள்ள தொலைக்காட்சித் தொடர்களில் அறம்,தார்மீகம் போன்றவை பார்த்தால் வெற்றிபெற முடியாது.தரமான தொடர் என்றால் யார் தயாரித்தாலும் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவது தவறில்லை,அது எங்கள் நிறுவனம் என்றாலும் சரி தான்நாங்கள் நடுநிலையுடன் தான் தேர்ந்தெடுத்துள்ளோம்.எங்கள் தேர்வு சரிதான்.

(எனது வாரிசுகள் என்பதற்காய் அவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்கக் கூடாது என்று எதிர்பார்க்கின்றீர்களா..என்று கருணாநிதி சொல்வாரேஅதைப் போல ?)

இப்படி ஒரு பதில் .விகடன் நிறுவனத்தால் அளிக்கப்படலாம்.

ந்தப் பதிலை ஒரு வாதத்துக்காய் ஒத்துக் கொண்டால் ஒருவகையில் போனால் போகிறது விகடன் நிறுவனத்தின் தயாரிப்பு அழகி  நெடுந்தொடருக்கு விருது அளித்தது சரி என்று ஒத்துக் கொள்ளலாம்.

ஆனால் இதற்கு முந்தைய ஆண்டுகளின் விகடன் விருதுகள் தேர்வுப் பட்டியலைப் பாருங்கள்.

2011 ஆம் ஆண்டு-திருமதி செல்வம்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)
2010 ஆம் ஆண்டு-தென்றல்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)
2009 ஆம் ஆண்டு-திருமதி செல்வம்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)
2008 ஆம் ஆண்டு-திருமதி செல்வம்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)
2007 ஆம் ஆண்டு-கோலங்கள்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)

இதற்கு என்ன செய்வது..?

 2011 ஆம் ஆண்டு-திருமதி செல்வம்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)
                                       

 2010 ஆம் ஆண்டு-தென்றல்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)
                                             

2009 ஆம் ஆண்டு-திருமதி செல்வம்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)


2008 ஆம் ஆண்டு-திருமதி செல்வம்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)

2007 ஆம் ஆண்டு-கோலங்கள்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)

இதற்கு என்ன செய்வது..?

ஆனந்த விகடன் கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் விகடன் விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கி வருகிறது.ஆனால் இதுவரை விருது வழங்கப்பட்ட அனைத்து வருடங்களும் சிறந்த தொலைக்காட்சித் தொடர் என்ற பெயரில் வழங்கப்படும் விருதினைத் தனது நிறுவனத்திற்கே வழங்கிக் கொண்டுள்ளது.

அதிலும் 2008,2009,2011 ஆகிய 3 வருடங்கள் திருமதி செல்வம் என்னும் விகடனின் தொடர் சிறந்த தொடராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள‌து.

எத்தனையோ தொலைக்காட்சிகளில் நூற்றுக்கணக்கான தொடர்கள் காலை 10 மணியிலிருந்து நள்ளிரவு வரை இடைவிடாமல் ஒளிபரப்பப் படுகின்றன.ஆனால் அவை எதுவும் தேர்ந்தெடுக்கப்படாமல் தனது நிறுவனம் தயாரிக்கிறது என்பதற்காய் தொடர்ந்து தாங்களே பெற்றுக் கொள்வது எந்த விதத்தில் சரி.?

இது மோசடி இல்லையா..?



ஏதாவது ஒருமுறை என்றால் உண்மையிலேயே சரியான தேர்வு என்று ஒப்புக் கொள்ளலாம்.ஆனால் அனைத்து வருடங்களும் தனது நிறுவனத்திற்கே அளித்துக் கொண்டால் அது மோசடி என்பதைத் தாண்டி அவர்களுக்கே அதில் கூச்சம் இல்லையா ..?



2008 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில்  உளியின் ஓசை படத்தின் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான  விருதை, அப்பொழுதைய தமிழக முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டதற்காக விகடன் குழும இதழ்கள் காமெடி குண்டரிலும்,லூசுப் பையனிலும் எப்படி நக்கலும் நையாண்டியும் செய்தன‌ என்பது இன்னும் நினைவில் இருக்கிறது.

கருணாநிதியைச் சாடி விட்டு அதே தவறை ஒவ்வொரு வருடமும் செய்வது எந்த விதத்தில் நியாயம்..?

விகடன் விருதுகள்-சிறந்த நெடுந்தொடருக்கான விருது ஆயுட்காலம் முழுவதும் விகடன் நிறுவனத்திற்கே உடைமை,வெளி நிறுவனங்கள் இயக்கும் தொடர்கள் இதில் பரிசீலிக்கப்படாது  என்று அறிவித்து விடலாம்.

நல்லவேளை விகடன் நிறுவனம் தயாரித்த சில படங்கள் ஊத்திக் கொண்டதால் தனது திரைப்படத் தயாரிப்பை சற்று நிறுத்தி வைத்துள்ளது.
இல்லையென்றால் திரைத்துறை தொடர்பான அனைத்து விருதுகளும் தனக்கே அளித்து தானே பெற்றுக்கொள்ளும்.

இவ்வாறு தனது நிறுவனத்திற்கு முறைகேடாக விருதினை வழங்கியதன்  மூலம் தகுதியுடன் விருது பெற்ற‌வர்களின்  விருதுத் தேர்வுகளும் தவறானவை என்று வாசகர்கள் எண்ண வாய்ப்பு ஏற்படுகிறதே..!

நல்லவேளை சிறந்த வார இதழ் விருதை ஆனந்த விகடனுக்கு நீங்களே கொடுக்கலை.அதுவரைக்கும் சந்தோஷம்.

நல்லாத் தான் கொடுக்குறீங்கப்பா விருது...!


தொடர்புடைய இணைப்புக்கள்

http://www.vinavu.com/2012/11/22/the-soap-story/

http://www.youtube.com/user/VikatanTV

1 comment:

Anonymous said...

சிறந்த தொலைக்காட்சித் தொகுப்பாளர் விருது தொடர்ந்து கோபிநாத்துக்கே வழங்கப்படுகிறதே?