Thursday, 8 November 2012

அம்பலப்பட்டு அசிங்கப்பட்டும் கம்பீரமாய் கித்தாப்புக் காட்டும் விகடன்..!



னந்த விகடனின் சென்ற இதழில் வெளிவந்த “நேற்று போராளி இன்று பாலியல் தொழிலாளி” என்னும் நேர்காணலை நாம் வரிக்கு வரி ஆதாரங்களுடன் விமர்சித்து அது ஒரு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நேர்காணல் என அம்பலப்படுத்தினோம். அதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்வினைகள் வந்திருந்தது.ஆனந்த விகடனின் நேர்காணல் உண்மை என்று சொன்னவர்கள் கூடநாம் சொன்ன வாதங்களை மறுக்ககாமல்  மவுனத்துடன் கடந்து சென்றனர்.

ஆனால் ஆனந்த விகடனோ தான் செய்த தவறை சாதுர்யமான வார்த்தை ஜாலத்தின் மூலம் மூடி மறைக்க முயன்றுள்ளது விளக்கம் என்ற பெயரால் இரண்டு பக்கங்கள் வெளிவந்திருக்கும் அந்த எழுத்து சாதுர்யத்தையும் நாம் போஸ்ட்மார்ட்டம் செய்தாக வேண்டியுள்ளது.

(அது போக நாம் சொன்னது போல தனது தவறை மறைக்க விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பழைய பதிவு ஒன்றினை வலிய இந்த நேரத்திற்குத் தொடர்பற்று மீள்பிரசுரம் செய்துள்ளது.)




இனி அந்த விளக்கத்தை ஒவ்வொரு பகுதியாக நாம் சரிபார்ப்போம்.



கருணாநிதி எதுவும் மிகப்பெரிய தவறு செய்து விமர்சிக்கப்பட்டால், நானும் தம்பி முரசொலி மாறனும் திருவாரூர் வீதிகளில்,அந்தக் காலத்தில்  10 வயது இருக்கும் பொழுதே கறுப்புக் கொடி ஏந்திப் போராடினோம்.என்னைப் போய்ச் சந்தேகப்படுகின்றீர்களேஎன்று புலம்பலும் பச்சாதமும் வார்த்தையில் வடித்து நீண்ட அறிக்கை விடுவார்.  தான் செய்த தவறை மறைக்க அதுகுறித்து எதுவும் சொல்லாமல்  பழைய வரலாற்றை எடுத்துப் போடுவார்.

அப்படித்தான் வழவழ கொழகொழ என வழிகிறது மேற்சொன்ன ஆனந்த விகடன் விளக்கமும்.
***






இதற்கு 2 விதமாகப் பதில் சொல்லலாம்.

ஒரு பார்வையில் பார்த்தால்..

இதுகாறும் விகடன் செய்ததற்காய் நன்றி சொல்கிறோம்.அதனால் தான் தினமலர் போன்ற கழிசடைப் பத்திரிகைகளை வாங்காமல் காசு கொடுத்து ஆ.விகடனை வாங்குகிறோம்.

அதற்காய் விகடன் செய்த எல்லாவற்றையும் நாம் ஆதரிக்க முடியாது.அது எப்படி இருக்கும் என்றால்,ஓட்டலில் நீண்டநாளாய் காசு கொடுத்து சாப்பிடுபவனிடம் இவ்வளவு நாள் நாவுக்கு ருசியாக சோறு போட்டேன்இன்னைக்கு கொஞ்சம் மலம் வைக்கிறேன்சாப்பிடு என்று சொன்னால் சாப்பிடவா முடியும்.முடியாதல்லவா.?

அதைப்போல விகடனில் சரியானவற்றைப்  பாராட்டும் அதே சமயம் அயோக்கியத்தனத்தைப் பாராட்ட முடியாது.

இன்னொரு பார்வையில் இதனைப் பார்த்தால்,

விகடன் வெளியிட்ட ஒவ்வொரு செய்திக்குப் பின்னும் விற்பனை நோக்கம் தான் இருக்கிறது. அதன் குழும இதழ்களில் வெளியாகும் அனைத்துச் செய்திகள்,கட்டுரைகள்,தொடர்கள்போன்றவற்றில் எந்த பகுதிகள் வாசகர் ஆதரவு அதிகம் இருக்கிறதுஎது அதிகம் வாசிக்கப்படுகிறது.என்பது போன்ற அனைத்தையும் ஆய்வு செய்வதற்கும்அதனைக் கண்காணிக்கவும் GRM உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டிங் நிறுவனங்களிடம் ஒப்படைத்து அலசி ஆராய்ந்து வருகிறது. 

அது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கும் அறிக்கையைப் பொறுத்துத் தான் எந்த வகைச் செய்திகளை அதிகப்படுத்தலாம்,எதனை நிறுத்தலாம் என்று நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் முடிவெடுக்கும்.சில தொடர்கள் உடனே நிறுத்தப்படுவதும், சில விஷயங்கள் ஜவ்வாய் இழுக்கப்படுவதும் அதனடிப்படையில் தான்.

ஈழப்பிரச்சனை தொடர்பாக எழுதிய பொழுதெல்லாம் விகடன் குழும இதழ்களின் விற்பனை அதிகரித்த காரணத்தால்தான் அச்செய்திகள் தொடர்ந்து முக்கியத்துவத்துடன் இடம் பிடித்து வந்தன.  ஈழச்சிக்கலை எழுதியதால் பத்தாயிரம் காப்பி விற்பனை குறைந்திருந்தால் பக்கம் பக்கமாய் வந்த பல செய்திகளும்,கட்டுரைகளும் இன்பாக்சின் பெட்டிச் செய்தியாகச் சுருங்கியிருக்கும்.

இப்போதுகூட இரண்டு பக்கத்திற்கு விளக்கம் எழுதியிருப்பதன் காரணம், கடந்த இதழில் வந்த இட்டுக்கட்டப்பட்ட பேட்டியை ஒட்டி புலம் பெயர் தமிழர்களிடமிருந்து வரும் விகடனின் இணைய வாசிப்பு வருமானம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதால்தான்

ஆகவே நான் குரல் கொடுத்தேன்,பதிவு செய்தேன் என்று சொல்லிப் போராளி இமேஜ் கொடுக்க வேண்டாம்.

***


                                      

//அவருடைய  அடையாளம் சொல்வது பாதுகாப்பானது அல்ல என்ற நிலையில் அவருடைய அடையாளத்தை மறைத்தே வெளியிட முடிவு செய்தோம்.//

இது மிகப்பெரிய அயோக்கியத்தனம். ஏனென்றால் ஆ.விகடன் பேட்டியில் சொல்லப்பட்டிருப்பது  மிகப்பெரிய குற்றச்சாட்டுசமூகத்தில் நடக்கும் அவலத்தின் உச்சத்தை வெளிக்கொணர்ந்ததாகச் சொல்கிறது. சிங்கள அமைச்சர் கற்பழித்தார் என்ற குற்றச்சாட்டு போர்க்குற்ற ஆவணம். சிங்கள அரசுக்கு எதிராக இன்று அது முக்கியமான துருப்புச்சீட்டு.அதைப்போல இயக்கத்தில் இருந்த போராளிகள் பாலியல் தொழிலாளிகளாக மாறிவிட்டனர் என்பது மிகப்பெரிய அவலம்.

அந்த அலுவலகத்தில் 500 ரூபாய் லஞ்சம் வாங்கினான்இந்த நடிகருக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பு என்பது போன்ற டைம்பாஸ் கிசுகிசுக்களல்ல அது.

அதை உரிய முறையில் நிரூபிக்க வேண்டும். இதற்கு முன் மாதிரியும் இருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அவலத்தை ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சியைச் சேர்ந்த பிரியம்வதா என்னும் முதன்மை நிருபர்  ஈழப்பகுதிகளுக்கு தனி ஆளாகப் பயணம் செய்து அனைத்தையும் பதிவு செய்து சமீபத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.இதற்காக 2012 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான செய்தித் தொலைக்காட்சி (சிறந்த புலனாய்வு செய்தி) விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்ட வீடியோவில் சில பகுதிகள் பேட்டி கொடுத்தவர்களின் பாதுகாப்பு கருதி முகம் மறைத்தும் வெளியிட்டுள்ளது.அது புலனாய்வு.

ஆ.விகடனின் அந்த பேட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள ’பெண்போராளி’ பற்றி எப்போது இயக்கத்தில் இணைந்தார் எப்போது யாரை திருமணம் முடித்தார். எப்போது பிடிபட்டார், விடுவிக்கப்பட்டார். இப்போது எங்கே தங்கியிருக்கிறார் என்று ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் சொல்லிவிட்டு அவருடைய பெயரை மாற்றிவிட்டோம் படத்தை வெளியிடவில்லை பாதுகாப்பாக இருப்பார் என்று விகடன் சொல்கிறது என்றால் யார் நம்புவார்கள். இதில் உண்மையாகவே விகடன் பாதுகாக்க முயற்சித்திருப்பது தனது இட்டுக்கட்டப்பட்ட பேட்டியை மட்டுமே.
***




//அந்தப்பேட்டியே ஒரு புனைவு எனவும் விகடன் துரோகம் இழைத்து விட்டது எனவும் பேட்டியின் வார்த்தைகளுக்குள் உளவியல் கபடி ஆடிப்பார்த்தனர்.//

இது கலகக்குரலின் மீதான குற்றச்சாட்டு.

நாம் எழுதியது அப்பட்டமான ஆதாரங்களுடன் கூடிய மறுப்பு. அதில் ஒன்றிற்கு கூட நேர்மையாய் நேரடியாய் பதில் சொல்லத் திராணியற்ற நிலையில்தான் ஆ.விகடன் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் வார்த்தைகளுக்குள் கபடி ஆடியுள்ளது.

உண்மையில் வார்த்தைகளுக்குள் கபடி ஆடுவது எது என்றால், ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாறன் சகோதரர்கள் தொடர்பை எழுதும் பொழுது விகடன் குழும இதழ்கள் வார்த்தைகளை நிரப்புகின்றனவே, அது தான். நாம் எழுதியுள்ளதல்ல.
***






//அத்தனை உரிமைகளும் அந்த சகோதரிக்கு உண்டு.//
ஆனால் இங்கு பாதிக்கப்பட்ட சகோதரி யாரையும் ஆ.விகடன் பேட்டி காணவில்லை என்பதைத் தான் நாம் நிருபித்திருக்கிறோம்.

//குன்றின் மீது நின்று யானைப் போர் பார்ப்பதற்கும் யானையின் காலடியில்கிடந்து துடிப்பவர்களுக்குமான வித்தியாசத்தை சகோதரி சுட்டிக்காட்டினார்.//
புலம்பெயர் தமிழர்களுக்கு புத்தி சொல்வது மட்டுமல்ல குற்றச்சாட்டும் வைக்கிறதுஆனால் இது விகடனுக்குத் தான் பொருந்தும். ஈழப்போராட்டம், அது கடந்து வந்த துயரங்கள், வலிகள் அத்தனையையும் பதிவு செய்கிறோம் என்பதைத்தாண்டிபத்திரிக்கை விற்பனை என்ற நோக்கிலிருந்த பார்த்து வந்த விகடன், இப்போது வீரம் துயரம் அவலம் என்ற நிலைகளில் பயணிக்கும் கதை போல ஒரு பேட்டியைத் தயார் செய்திருக்கிறது.
***




//எதிரும் புதிருமாகக் கிளம்பும் எல்லாக் கருத்துக்களையும் மக்கள் மன்றத்தில் இதயசுத்தியோடு விகடன் என்றும் பகிரும்.//

ஆ.விகடன்  தன் மீதான குற்றச்சாட்டைலாவகமாக மடை மாற்றுகிறது. யாரும் எதிர்க்கருத்துக்களைப் பத்திரிகைகளில் பகிரக் கூடாது என்று சொல்லவே இல்லை.அது பத்திரிகைகளின் கடமை.ஆனால் அது உண்மையானதாக இருக்க வேண்டும்.

அந்தோணிசாமி.மார்க்ஸ்போன்றவர்களின் பயணக்கட்டுரையை ஆ.விகடன் சமீபத்தில்வெளியிட்டது. அதை யாரும் எதிர்க்கவில்லை.அதில் உள்ள அபத்தங்களையும் புரட்டுகளையும் மட்டுமே எதிர்த்தார்கள்.

உண்மையாக யாரேனும் பாதிக்கப்பட்டிருந்திருந்தால் அதை அசைக்க முடியாத ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தால் யாரும் ஆ.விகடனைக் குற்றம் சாட்டப் போவதில்லை.அதை விடுத்து போகிறபோக்கில் அவதூறுகளை அள்ளித் தெரித்து எழுதியதை யாரும் ஏற்க முடியாது.

//இன்றும் எம்மைச் சூழ்ந்து நிற்கும் கோடானுகோடி வாசகர்களே//

சோனியாகாந்தி,நிதின்கட்காரி,கருணாநிதி,ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகள்  ஊழல்களில் அம்பலப்பட்டாலும்  தங்களின் நேர்மைக்கு தங்கள் பின்னால்  இருக்கும் கோடானுகோடி தொண்டர்கள் தான் சாட்சி என்று சொல்வது போல் இருக்கிறது. விகடனின் கோடிக்கணக்கான வாசகர்களே சாட்சி என்கிற வாதம்.

அதைப்போல விகடன் அதிகம் விற்பனை ஆகிறது என்பதற்காய் அதனை ஆதரவு என்று கருத முடியாது. டாஸ்மாக்கில் கூடத்தான் சாராயம் அதிகம் விற்கிறது.அதனை எப்படி நல்லது என்று கருத முடியும்? அப்படித்தான் விகடன் அதிகம் விற்பனையாகிறது என்பதால் மட்டுமே அது சொல்வது அனைத்தையும் ஆராயாமல் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

//விடு தம்பி//


இந்தப் பகுதியே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல இருக்கிறது. இதில் நமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன.

இலங்கை அரசினை எதிர்த்து பல்வேறு போர்களில் பங்கெடுத்த போராளிசிம்ம சொப்பனமாய் இருந்த போராளி.விகடன் கூற்றுப்படி எளிதாக முகாமில் இருந்து வெளியே வந்து விட்டார் என்பதை ஒரு வாதத்துக்காய்,உண்மை என வைத்துக் கொண்டாலும் கூட,அவர் எளிதாய் கண்காணிப்பு வளையத்தில் இருந்து தப்ப முடியாது.தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார். அவருடைய பேட்டிக்கு எதிர்வினைகள் வந்த உனே அவருடன் எளிதாய் எப்படி விகடன் சார்பில் பேசியிருக்க முடியும்..?அவருக்கு சிக்கல் வராதா..? ( எல்லாம் ஆசிரியர் குழுவிற்குள்ளேயே இன்டர்காமில் பேசிக்கொள்வது தானே என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது.)

அது மட்டுமல்ல. இந்தப் பதில் முழுவதும் தூய ஈழத்தமிழர் பேச்சு வழக்கில் இருக்கிறதுஇதுவே சென்ற இதழ் நேர்காணல் முழுக்க பொய்யானது என்பதை உணர வைக்கும்.

சென்ற இதழ் பேட்டியைப் பாருங்கள்.

ஈழத் தமிழ் வாடை மருந்துக்கும் இல்லை.அங்கங்கே சில சொற்கள் மட்டும் இருக்கிறது. அது தவிர வேறு சொற்பிரயோகம் இல்லை.  மேற்கண்ட. இப்போதைய பெட்டிப் பேட்டியில் முழுக்க முழுக்க ஈழச்சொல்லாடலே பிரயோகிக்கப்பட்டுள்ளது. (இதை எழுத ஆசியர் குழுவினர் எந்த ஈழத்தமிழரிடம் எவ்வளவு நேரம் செலவழித்தனரோ? விகடன் ஆசிரிய குழுவினரின் கடும் ’உழைப்பைப்’ பாராட்டித்தான் ஆகவேண்டும்)

இன்னொன்று

மேலும் புதிதாக எழுதப்பட்டுள்ள விடு தம்பி யில் அந்த பெண்போராளி பேட்டி கொடுக்க மறுத்தும் வலியுறுத்தி வாங்கப்பட்டதான அங்கலாய்ப்பும், இந்த எதிர்வினைகளை அவர் முன்னே எதிர்பார்த்ததாகவும், வெளிப்படுத்தப்பட்டு நான் விபச்சாரியாகவே இருந்துவிட்டுப் போறேன் என்ற கழிவிரக்கத்தோடு முடிக்கப்பட்டுள்ளது.

இங்கே நமக்கு எழுகிற கேள்வி என்னவென்றால். முன்பே அவரைப் பற்றி அனைத்தையும் உறுதிசெய்து விட்டு பேட்டி எடுத்துள்ள நிலையில், எந்த நேரமும் சிங்கள அரசிடமிருந்து ஆபத்தை எதிர்நோக்கி பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பேட்டி வெளிவந்தவுடன் இருப்பவரிடம் பேசுவதற்கான தேவை விகடனுக்கு என்ன வந்தது?

இது வாசகனை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டு கட்டப்பட்ட கட்டம். ஒரு பொய்யை மறைக்க மற்றொரு பொய்யை உருவாக்குவது.

இப்படிப்பட்ட சினிமா பாணியிலான முயற்சிகளால் வாசகர்களை ஏமாற்ற முயற்சித்தால் அதை எப்படி எளிதில் விட்டுவிட முடியும் தம்பி.

நாம் இறுதியாகவும் உறுதியாகவும் சொல்வது இதுதான்.

ஆனந்த விகடனின் சென்ற இதழ் 6 பக்க நேர்காணல், நாம் ஏற்கனவே பல்வேறு தரவுகளுடன் சொன்னது போல் பொய்யாகத் திட்டமிட்டுக் கற்பனை செய்யப்பட்ட பேட்டி.நாம் எவ்வளவு தான் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிருபித்தாலும் ஆனந்த விகடன் அதை மறுத்து 2 பக்கத்தில் விளக்கம் சொல்லியுள்ளது.

ஆனந்த விகடனின் சென்ற இதழ் நேர்காணல் விகடனின் நம்பகத்தன்மை மீது ஏற்பட்ட கறை. 

அதனை 2 பக்கங்கள் இல்லை,மழையளவு சொற்கள் கொண்டு பொழிந்தாலும் அழிக்க முடியாது.

தொடர்புடைய இணைப்புக்கள்

http://kalakakkural.blogspot.in/2012/11/blog-post_4.html
http://www.youtube.com/watch?v=L336faBgWwc



.

6 comments:

T.Thenmathuran said...

//ஈழத் தமிழ் வாடை மருந்துக்கும் இல்லை.அங்கங்கே சில சொற்கள் மட்டும் இருக்கிறது. அது தவிர வேறு சொற்பிரயோகம் இல்லை. மேற்கண்ட. இப்போதைய பெட்டிப் பேட்டியில் முழுக்க முழுக்க ஈழச்சொல்லாடலே பிரயோகிக்கப்பட்டுள்ளது. (இதை எழுத ஆசியர் குழுவினர் எந்த ஈழத்தமிழரிடம் எவ்வளவு நேரம் செலவழித்தனரோ?// அந்தப் பேட்டியை எடுத்தவரே ஒரு ஈழத் தமிழர் தான்... உண்மையில் நீங்கள் தமிழ்ப் படங்களில் பிரயோகிக்கப்படும் ஈழச் சொற்களை எதிர்பார்க்கிரீர்களோ தெரியவில்லை... அவை மட்டக்களப்புத் தமிழ்... மற்றபடி யாழ்ப்பாணம் மற்றும் பல பகுதிகளிலும் தமிழ்நாட்டுத் தமிழ் திரைப்படங்கள் மூலமாகவும், நாடகங்கள் மூலமாகவும் ஊடுருவியுள்ளது... உண்மையில் நாங்கள் சாதாரணமாகப் பேசும் போது ஒரு மொழி வழக்கும்/ ஒரு மேடை/பேட்டியில்/எழுதும் போது ஒருவகையான மொழிவழக்கும் பயன்படுத்துகிறோம்... அதுதான் உங்களுக்கு அந்தப் பேட்டியில் ஈழத் தமிழரின் சொற் பிரயோகம் இல்லாமல்ப் போனமைக்கான காரணம் என்று நினைக்கிறேன்....

Anonymous said...

கிறுக்குத்தனமான பதிவு.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

விகடனின் கட்டுரை பற்றிய 'கலகக் குர'லின் பதிவைக் கடந்த செவ்வாயன்று படித்தேன். அருவெறுப்படைந்தேன்! படிக்கும்பொழுதே, அதில் எழுப்பபட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கும் கேள்விகளுக்குமான பதில்கள் எனக்குத் தோன்றத்தான் செய்தன. ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்லி, இப்படிப்பட்ட கீழ்த்தரமான கட்டுரைகளை முக்கியத்துவப்படுத்தி விடக்கூடாது என்று விட்டு விட்டேன். மேலும், நான் பதிலளிப்பதை விட ஆனந்த விகடனே பதிலளித்தால்தான் உங்களையெல்லாம் நம்ப வைக்க முடியும் எனவும் கருதினேன்.

சில நிமிடங்களுக்கு முன்புதான் இந்த வார ஆனந்த விகடன் கைக்கு வந்து சேர்ந்தது. இத்தனை ஆண்டுக்காலமாக, ஈழத் தமிழர்களுக்கான எழுத்துப் போராளியாய்த் திகழும் விகடன் நேற்றுப் பிறந்தவர்களின் குரல்களுக்கும் மதிப்பளித்து இறங்கி வந்து விரிவாகப் பதிலளித்திருப்பது கண்டு வியந்தேன்! அதைப் படித்து முடித்த உடனே இதழை மூடிக் கீழே வைத்து விட்டு இங்கே வந்து பார்த்தேன். ஊஹூம்! நீங்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. எனவே இனியும் நான் உங்களைச் சும்மா விடுவதாக இல்லை.

என்னய்யா பெரிய ஆதாரப்பூர்வம், ஆதாரப்பூர்வம் என்கிறீர்கள்? நீங்கள் அந்தப் பதிவில் அப்படி ஆதாரப்பூர்வமாக என்ன எழுதி விட்டீர்கள்? நீங்கள் காட்டிய ஆதாரங்கள் எல்லாமே, கட்டுரையை எழுதிய அருளினியனின் பின்புலத்தைப் பற்றித்தான். முதலில் ஒரு கட்டுரையை ஆதாரப்பூர்வமாக மறுப்பது என்றால் என்னவெனத் தெரியுமா? அந்தக் கட்டுரையின் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் எதிரான, அதைப் பொய் என நிரூபிக்கக் கூடிய ஆதாரம் எதையாவது காட்ட வேண்டும். அப்படி எதையாவது நீங்கள் காட்டியிருக்கிறீர்களா? இல்லை. நீங்கள் எழுதியிருப்பவையெல்லாம், அந்தக் கட்டுரையின் நம்பகத்தன்மைக்கெதிரான கேள்விகள் மட்டும்தான். அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக என்னால் உடைத்துக் காட்ட முடியும்! பார்க்கிறீர்களா?...

இன்று போய் நாளை வருகிறேன்! ஆனந்த விகடனின் கட்டுரை பற்றி நீங்கள் எழுதிய அந்த முதல் கட்டுரை, இன்றைய கட்டுரை என இரண்டிலும் இடம்பெற்றிருக்கக் கூடிய ஒவ்வொரு குற்றச்சாட்டையும் உடைத்தது, உங்கள் குட்டையும் உடைக்கிறேன். துணிவிருந்தால் வெளியிடுங்கள்! காத்திருங்கள்!

கறுத்தான் said...

அய்யா !அம்பலப்பட்டு போனவன் வாய் திறக்க மாட்டான் ஆனால் இவர்கள் மலை முழுங்கி கள் மூவாயிரம் ஆண்டு கால அனுபவம் ஆயிற்றே.................... நாத்திகன் புத்தனையே கடவுள் அவதாரம் ஆக்கியவர்கள்..............ஆனால் இவர்கள் கொட்டம் இனி எடுபடாது . ஆகவே சோர்வு வேண்டாம் தொடரட்டும் உங்கள் பணி

Anonymous said...

very good analysis...

Anonymous said...

சோர்வு வேண்டாம் தொடரட்டும் உங்கள் பணி...