Friday, 11 January 2013

விருது வாங்கலியோ விருது...விகடன் விருது...!



வாசன் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் ஆனந்த விகடன் இதழ் இந்த வாரம் விகடன் விருதுகள் 2012 ஐ அறிவித்துள்ளது.

திரைப்படம்,சின்னத்திரை,பண்பலை வானொலி,நூல்,இலக்கியம்,சிற்றிதழ்,வானொலி,மோட்டார் துறை என பல்துறைகளில் ஆடித்தள்ளுபடி போல் 50 விருதுகளை  வழங்கிக் குவித்துள்ளது.

ஆனால் மொத்த விருதுகளில் திரைப்படத் துறைக்கு 29 விருதுகள்,சின்னத்திரைக்கு 5 விருதுகள்,பண்பலை வானொலிக்கு 3 விருதுகள் என்பதை என்னும் பொழுது எந்தத் துறையை நம்பி ஆனந்த விகடன் இருக்கிறது,எதனை விற்று தனது வருவாயைப் பெருக்குகிறது என்பது விளங்கும்.



மொத்த 50 விருதுகளில்  கல்வி தொடர்பானவை ஒன்று கூட இல்லை என்பது கசப்பான நிஜம்.

அதே சமயம்  சிறந்த மோட்டார் பைக்,சிறந்த கார் என மோட்டார் துறை தொடர்பில் 2 விருதுகள் என்று நீங்கள் வாயைப் பிளக்காதீர்கள்.விகடன் நிறுவனம் மோட்டார் விகடன் என்னும் இதழை நடத்துகிறது.
இந்த விருதுகள் எப்படித் தேர்வு செய்யப்படுகின்றன,இதற்கென குழு எதுவும் அனைத்துத் துறை ஆளுமைகள் பங்களிப்புடன்  பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இருக்கிறதா என்று நமக்குத் தெரியவில்லை.அப்படியெல்லாம் எதுவும் நல்லபடியாய் நட‌க்காது என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.

 (சென்ற ஆண்டு சு.வெங்கடேசனின் 1000 பக்க காவல் கோட்டம் நாவல் அச்சாகி வெளிவந்த  4 நாட்களிலேயே விக‌டன் சார்பில் சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.என்னா ஸ்பீடு.)




விஜய்க்கு சிறந்த நடிகர் விருது வழங்கியது அபத்தம் என்றால் விகடன் நிறுவனம் தனக்குத் தானே விருது வழங்கிக் கொண்டது உச்சக்கட்ட அபத்தம் மற்றும் மோசடி.

விகடன் 2012 ஆம் ஆண்டு  விருதுகளின் பட்டியலைப் பார்த்துக் கொண்டு வந்தால் சின்னத்திரையின் சிறந்த தொடருக்கான 2012 ஆம் ஆண்டிற்கான விருது 'அழகி' என்னும் நெடுந்தொடருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும்,அவர்களின் நேரத்தை வீணடிக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு சிறந்த தொலைக்காட்சித் தொடர் என்ற தலைப்பில் விருது கொடுக்கப் பட வேண்டுமா என்று யாரேனும் வினவலாம்.
ஆனால் எத்தலைப்பின் கீழ் விருது வழங்க வேண்டும் என்று முடிவெடுப்பது  விகடன் நிறுவனத்தின் உரிமை என்று கருதி அதனை நாம் இங்கு விவாதிக்க விரும்பவில்லை.


ஆனால் தேர்வு சரியா என்று பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது.
ஆகவே 'அழகி' கடந்த ஆண்டின் 2012 இன் சிறந்த தொலைக்காட்சித் தொடரா என்று பார்ப்போம்.

மொத்தத்தில் தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் அபத்தம் என்ற வகையில் நாம் இதுவரை எந்த தொடரையும் பார்த்ததில்லை.அதைப் போல அழகி தொடரையும் பார்த்ததில்லை.ஆகவே இந்தத் தொடருக்கு சிறந்த நெடுந்தொடர் என்னும் விருது கொடுத்ததன் தேர்வு குறித்து   நாம் எந்தக் கருத்தையும் தெரிவிக்க இயலவில்லை.

ஆனால் இது தார்மீக ரீதியாக சரியா தவறா என்பது இங்கு விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
ஏனென்றால் அழகி தொடரைத் தயாரிப்பது விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம்.இது வாசன் பப்ளிகேஷன்ஸின் சகோதர நிறுவனம்.(இரண்டு நிறுவனங்களின் பங்குகளும் நிர்வாகமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.)

தனது நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ஒரு தொலைக்காட்சித் தொடருக்குத் தானே விருது வழங்குவது சரியா..?

தேர்வுக்குழு முன்முடிவுடன் செயல்பட்டிருக்கிறது என்று யாரும் நம்பலாமில்லையா..?
இந்த வருடத்தில் வேறு எந்த நிறுவனமும் இதைப்போல தரமான தொடர்களைத் தயாரிக்கவில்லையா..?என்று கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன.

முதலில் ஊருக்கெல்லாம் அறம் குறித்து போதிக்கும் விகடன் நிறுவனம் தனது நிறுவனம்,தான் அறிவிக்கும் விருதுகளில் தனது நிறுவனம் தயாரிக்கும் தொடருக்கே விருது வழங்கச் செய்திருக்கக் கூடாது.போட்டியிலிருந்து விலகி பிற நிறுவனங்களின் தொடர்களை மட்டும் பரீசீலனைக்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

எங்கள் நிறுவனம் தயாரிக்கிறது என்பதற்காய்,தரமான தொடர் என்றாலும் விருது வழங்கக் கூடாதா..? அதிக அளவு வர்த்தகப் போட்டியுள்ள தொலைக்காட்சித் தொடர்களில் அறம்,தார்மீகம் போன்றவை பார்த்தால் வெற்றிபெற முடியாது.தரமான தொடர் என்றால் யார் தயாரித்தாலும் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவது தவறில்லை,அது எங்கள் நிறுவனம் என்றாலும் சரி தான்.  நாங்கள் நடுநிலையுடன் தான் தேர்ந்தெடுத்துள்ளோம்.எங்கள் தேர்வு சரிதான்.

(எனது வாரிசுகள் என்பதற்காய் அவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்கக் கூடாது என்று எதிர்பார்க்கின்றீர்களா..என்று கருணாநிதி சொல்வாரேஅதைப் போல ?)

இப்படி ஒரு பதில் ஆ.விகடன் நிறுவனத்தால் அளிக்கப்படலாம்.

இந்தப் பதிலை ஒரு வாதத்துக்காய் ஒத்துக் கொண்டால் ஒருவகையில் போனால் போகிறது விகடன் நிறுவனத்தின் தயாரிப்பு அழகி  நெடுந்தொடருக்கு விருது அளித்தது சரி என்று ஒத்துக் கொள்ளலாம்.

ஆனால் இதற்கு முந்தைய ஆண்டுகளின் விகடன் விருதுகள் தேர்வுப் பட்டியலைப் பாருங்கள்.

2011 ஆம் ஆண்டு-திருமதி செல்வம்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)
2010 ஆம் ஆண்டு-தென்றல்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)
2009 ஆம் ஆண்டு-திருமதி செல்வம்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)
2008 ஆம் ஆண்டு-திருமதி செல்வம்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)
2007 ஆம் ஆண்டு-கோலங்கள்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)

இதற்கு என்ன செய்வது..?

 2011 ஆம் ஆண்டு-திருமதி செல்வம்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)
                                       

 2010 ஆம் ஆண்டு-தென்றல்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)
                                             

2009 ஆம் ஆண்டு-திருமதி செல்வம்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)


2008 ஆம் ஆண்டு-திருமதி செல்வம்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)

2007 ஆம் ஆண்டு-கோலங்கள்-சிறந்த நெடுந்தொடர்(விகடன் தயாரிப்பு)

இதற்கு என்ன செய்வது..?

ஆனந்த விகடன் கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் விகடன் விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கி வருகிற‌து.ஆனால் இதுவரை விருது வழங்கப்பட்ட அனைத்து வருடங்களும் சிறந்த தொலைக்காட்சித் தொடர் என்ற பெயரில் வழங்கப்படும் விருதினைத் தனது நிறுவனத்திற்கே வழங்கிக் கொண்டுள்ளது.

அதிலும் 2008,2009,2011 ஆகிய 3 வருடங்கள் திருமதி செல்வம் என்னும் விகடனின் தொடர் சிறந்த தொடராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள‌து.

எத்தனையோ தொலைக்காட்சிகளில் நூற்றுக்கணக்கான தொடர்கள் காலை 10 மணியிலிருந்து நள்ளிரவு வரை இடைவிடாமல் ஒளிபரப்பப் படுகின்றன.ஆனால் அவை எதுவும் தேர்ந்தெடுக்கப்படாமல் தனது நிறுவனம் தயாரிக்கிறது என்பதற்காய் தொடர்ந்து தாங்களே பெற்றுக் கொள்வது எந்த விதத்தில் சரி.?

இது மோசடி இல்லையா..?



ஏதாவது ஒருமுறை என்றால் உண்மையிலேயே சரியான தேர்வு என்று ஒப்புக் கொள்ளலாம்.ஆனால் அனைத்து வருடங்களும் தனது நிறுவனத்திற்கே அளித்துக் கொண்டால் அது மோசடி என்பதைத் தாண்டி அவர்களுக்கே அதில் கூச்சம் இல்லையா ..?



2008 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில்  உளியின் ஓசை படத்தின் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான  விருதை, அப்பொழுதைய தமிழக முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டதற்காக விகடன் குழும இதழ்கள் காமெடி குண்டரிலும்,லூசுப் பையனிலும் எப்படி நக்கலும் நையாண்டியும் செய்தன‌ என்பது இன்னும் நினைவில் இருக்கிறது.

கருணாநிதியைச் சாடி விட்டு அதே தவறை ஒவ்வொரு வருடமும் செய்வது எந்த விதத்தில் நியாயம்..?

விகடன் விருதுகள்-சிறந்த நெடுந்தொடருக்கான விருது ஆயுட்காலம் முழுவதும் விகடன் நிறுவனத்திற்கே உடைமை,வெளி நிறுவனங்கள் இயக்கும் தொடர்கள் இதில் பரிசீலிக்கப்படாது  என்று அறிவித்து விடலாம்.

நல்லவேளை விகடன் நிறுவனம் தயாரித்த சில படங்கள் ஊத்திக் கொண்டதால் தனது திரைப்படத் தயாரிப்பை சற்று நிறுத்தி வைத்துள்ள‌து.
இல்லையென்றால் திரைத்துறை தொடர்பான அனைத்து விருதுகளும் தனக்கே அளித்து தானே பெற்றுக்கொள்ளும்.

இவ்வாறு தனது நிறுவனத்திற்கு முறைகேடாக விருதினை வழங்கியதன்  மூலம் தகுதியுடன் விருது பெற்ற‌வர்களின்  விருதுத் தேர்வுகளும் தவறானவை என்று வாசகர்கள் எண்ண வாய்ப்பு ஏற்படுகிறதே..!

நல்லவேளை சிறந்த வார இதழ் விருதை ஆனந்த விகடனுக்கு நீங்களே கொடுக்கலை.அதுவரைக்கும் சந்தோஷம்.

நல்லாத் தான் கொடுக்குறீங்கப்பா விருது...!


தொடர்புடைய இணைப்புக்கள்

http://www.vinavu.com/2012/11/22/the-soap-story/

http://www.youtube.com/user/VikatanTV

Saturday, 5 January 2013

டைம்பாஸில் அருவருப்பு வியாபாரம்...! விகடனில் அறிவுரை வியாபாரம்.....!!

டெல்லியில்  மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டது குறித்து கடந்த வாரம் ஞாநி குமுதம் வார இதழில்ஒரு பதிவு எழுதியிருக்கும் நிலையில் 

http://www.gnani.net/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/

இந்த வாரம் ஆனந்த விகடனில் அது குறித்த பதிவு வெளிவந்துள்ளது.










இந்த செய்திப் பதிவை எழுதியிருப்பவர் தலைமை நிருபர் கவின்மலர். 

இந்த கட்டுரை குறித்து விமர்சிப்பது இந்தப் பதிவின் நோக்கம் இல்லை என்பதால் சுருக்கமாக ஒரு சில வரிகளில் பார்ப்போம்.

தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்ல வேண்டும் என்ற 'அதீத ஆர்வத்தில்'' கட்டுரை சில இடங்களில் இலக்கற்றுப் பயணிக்கிறது.அது தவிர்த்து கட்டுரையில் உபதேசங்களும்தாராளமாய் கிடைக்கின்றன.

ஆண்-பெண் உறவு குறித்தும்,பெண்ணைப் போகப் பொருளாய்ப் பார்ப்பது  குறித்தும் கவலை கொள்கிற‌து.

மேலும்  பத்திரிகையாளனுக்கானஒரு எளிய வசீகர நடை இந்தக் கட்டுரையில் மிஸ்ஸிங்.என்.ஜி.ஓ.க்களின்துண்டுப்பிரசுரவெளியீடு போலகட்டுரை கொஞ்சம் மொக்கைத்தனமாய் இருக்கிறது.

ஆனாலும்ஆ.விகடன் போன்ற மிகப்பெரிய வணிக இதழில் இக்கட்டுரை வெளிவந்துள்ளதன் மூலம் அதிகப் பரப்பு வாசகர்களை சென்றடைவதனால்பாராட்டலாம் தான்.

(இந்த வாரம் விகடன் குழுமத்தில் இருந்துவிடைபெறவிருக்கும் தலைமை நிருபர் கவின்மலர் இந்தியா டுடே இதழில் அடுத்த வாரம் பணியில் சேருகிறார் என்றும்,அதே சமயம் புதிய தலைமுறை தொலைக்காட்சியிலும் ஒரு சீட் பிடித்து வைத்திருக்கிறார்,இரண்டில் எதிலாவது ஒன்றில் சேருவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வாழ்த்துக்கள்.) 

இனி நம் பதிவுக்கு வருவோம்.

இதன் கடைசிப் பத்தியை மட்டும் கவனியுங்கள்.



இனி இதைச் சொல்வதற்கு வாசன் பப்ளிகேஷன்ஸ் (பி)லிமிடெட் நிறுவனத்திற்கு யோக்கியதை இருக்கிறதா..?




தனது நிறுவனத்தில் இருந்து வெளியாகும் டைம்பாஸ் என்னும் வார இதழில்  வக்கிரம்,ஆபாசம்,போன்றவற்றைப் பக்கத்திற்கு பக்கம் கடை விரித்து பெண்களின் உடலை போகப்பொருளாக எண்ணி அதனை எழுத்தாகவும் புகைப்படங்களாகவும் மலிவாக வெளியிட்டு அதைக் காசாக்குவது ஒரு புறம்.

தனது நிறுவனத்தில் இருந்து வெளியாகும்ஆனந்த விகடன் இதழிலோ மேற்கண்டவற்றிற்கு எதிராக  போர்க்குரல் எழுப்பி  காசாக்குவது மறுபுறம்.

டைம்பாஸ் ஒவ்வொரு இதழும் தரங்கெட்டவையாகவும் விமர்சிக்கக் கூட அருகதைக்கு அற்ற‌வையாகவும் இருக்கிறது.
டைம்பாஸ் இதழில் விமர்சிக்க மலைபோல் விஷயங்கள் கொட்டிக் கிடந்தாலும்,தற்பொழுதைய இதழில் வெளிவந்த ஒரு செய்தி போதும்.

அதன் தரத்தையும் அதனை வெளியிடும் நிறுவனத்தின் தரத்தையும் சமுகப் பொறுப்பையும்பறைசாற்ற..!




இதனை வெளியிட்ட நிறுவனம் தான் பெண்ணின் உடலை போகப்பொருளாய் மாறுவதையும் ஆரோக்கியமான ஆண் பெண் உறவு குறித்தும் கவலை கொள்கிறது.நாட்டில் அனைவருக்கும் வகைதொகையின்றி அறிவுரை சொல்கிறது.கவலை கொள்கிறது.

வாசன் பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் முதலில் ஊருக்கு உபதேசம் செய்யும் முன் அதனைத் தனது நிறுவனத்தில் இருந்து தொடங்குவது நல்லது.

Thursday, 3 January 2013

கலைஞர் தொலைக்காட்சியிலிருந்து ரமேஷ் பிரபா நீக்கம்...!




ரமேஷ் பிரபா


கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ரமேஷ்பிரபா இன்று காலை அதிரடியாக நீக்கபப்ட்டுள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சி நிறுவன குழுமத்தில் இருந்து கலைஞர் தொலைக் காட்சி, இசையருவி, சிரிப்பொலி, கலைஞர் செய்திகள், சித்திரம், முரசு என 6 சேனல்கள் வெளியாகி வருகிற‌து.இதன் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு அதன் தலைவராக கேலக்சி நிறுவனத்தை நடத்தி வந்த ரமேஷ் பிரபா கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார்.

கடந்த 11 மாதங்கள் இப்பொறுப்பை அவர் வகித்து வந்த நிலையில் இன்று காலை அந்தப் பொறுப்பிலிருந்து அவர் திடீரென்று நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காலை அலுவலகம் வந்த பின் தான் அவருக்கு நீக்கம் பற்றி அறிவிக்கப்பட்டதாம்.இதன்பின் அவர் சிறிது நேரத்திலேயே கிளம்பிச்  சென்று விட்டதாக சொல்கிறார்கள்.


அவருக்குப் பதில் கருணாநிதியின் உறவினர் அமிர்தம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.இந்த மாற்றங்களின் பின்னணி விரைவில் தெரியவரும்.


Wednesday, 12 December 2012

Friday, 23 November 2012

பொய்யே பிழைப்பாய் கொண்ட குமுதம் ரிப்போர்ட்டர்...


இலண்டனில் நடைபெற்ற பிரிட்டானிய தமிழர் மாநாடு தொடர்பாய் குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் 2 பக்க  செய்தியை 11-11-2012 தேதியிட்ட இதழில்,அதன் நிருபர் இரா.முருகேசன் பதிவு செய்திருந்தார்.மாநாடு குறித்து கோபி சிவந்தன் கூறிய கருத்து என்று ஒரு கருத்தினையும் அதில் பதிவு செய்திருந்தார். அது புகைப்படத்தில் வட்டம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.



ஆனால் இதழ் வெளிவந்து ஒரு சில நாட்களில்,
கருத்துக் கூறியதாகச் சொல்லப்பட்ட‌ கோபி சிவந்தன் தான் அப்படி ஒரு செய்தியைக் கூறவில்லை என்றும் தம்மை ரிப்போர்ட்டர் இதழில் இருந்து யாரும் தொடர்பு கொள்ள‌வில்லை என்றும் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

அது இதுதான்

இலண்டன் மாநகரில் இம்மாதம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உலகத்தமிழர்; மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் முழுச்செலவுகளையும் பிரித்தானிய தமிழர் பேரவையே ஏற்றுக்கொண்டதாகவும் அந்நிதி அவர்களுக்கு இந்திய உளவு அமைப்பான 'ரோ' மூலமே கிடைத்திருக்கவேண்டும் எனவும் இலங்கைத் தமிழன் கோபி சிவந்தன் குறிப்பிட்டதாக உண்மைக்கு முற்றிலும்
புறம்பான செய்தி ஒன்றை குமுதம் பிரசுரித்துள்ளமை அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிப்பதாக அமைந்துள்ளது.

குமுதம் இதழின் செய்தித் தொடர்பாளர் எவருக்கும் நான் பேட்டி எதுவும் அளிக்காத நிலையில் என்னுடன் எதுவித தொடர்பும் கொள்ளாமல் இப்பிரசுரத்தில்; குறிப்பிடப்பட்ட விடயங்களையும் கோபி சிவந்தனான என்னையும் தொடர்புபடுத்தி;; இச்செய்தியை வெளியிட்டதற்காக குமுதம் வார இதழை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது போன்ற பொய்யான செய்திகளைப் பரப்புவதன் மூலம் தமிழ் உணர்வாளர்களின் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் ஊடகங்களை இனம் கண்டு அவர்களைப் புறந்தள்ளவேண்டும் என்று தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

ஊடக சுதந்திரம் என்பது மக்களிடம் எதுவித தடைகளுமில்லாமல் உலகில் நடப்பவற்றை நடந்தவாறே எடுத்துச் செல்வதற்கு உதவுவது. உண்மைக்கு முற்றிலும் மாறான விடயங்களை எழுதுவதன் மூலம் மக்களிடையே குழப்பங்களை உருவாக்குவதற்குரிய சுதந்திரம் எந்த ஊடகத்திற்கும் கிடையாது. மாறாக அது தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு குற்றமாகவே அமைகின்றது.
- கோபி சிவந்தன் 


முகநூலில் வெளிவந்த மறுப்பு


நம்முன் ஏற்பட்ட கேள்விகள் இது தான்.

 கோபி சிவந்தன்  கருத்தினையே சொல்லாத பட்சத்தில் அப்படி ஒரு கூற்று வெளியிட வேண்டிய அவசியம் ரிப்போர்ட்டருக்கு என்ன அவசியம்..?

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று திரைமறைவில் பேசுவதற்குத் 'தரமுடைய‌' கிசுகிசுவை ஒரு குறித்த நபரின் பெயரில் பகிரங்கமாய் ஏன் ரிப்போர்ட்டர் வெளியிட்டது.

சரி இது தான் போகட்டும்.இதழ் வெளிவந்த பின்னர்,கோபி சிவந்தன் பகிரங்கமாய் மறுப்பு வெளியிட்டும் ரிப்போர்ட்டர் தனது தரப்பில் எதும் விளக்கம் அளிக்கவில்லையே.அது ஏன்..? 

அவர் சொன்ன கருத்தைத் தான் வெளியிட்டிருக்கிறோம்,ஆதாரம் உள்ளது என்றோ,அவர் பொய் சொல்கிறார் என்றோ அல்லது தவறான முறையில் வெளியிட்டு விட்டோம் என்று மறுப்போ விளக்கமோ மன்னிப்போ தெரிவிக்கவில்லை.

வெளிநாட்டில் வாழ்கிறவர்களின் புகைப்படம் ஒன்று கிடைத்தால் போதும், அதை வைத்துக்கொண்டு என்னவேண்டுமானாலும் கதை கட்டிவிடலாம் என்று நினைக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளுரிலுள்ள  அரசியல் கட்சியின் தலைவர்கள் குறித்து இப்படி எழுதிவிட்டு மன்னிப்பு கேட்காமல் இருந்து விடமுடியுமா? 

காசு கொடுத்து வாங்கியவனை மடையன் என்று நினைப்பதைத் தாண்டி,என் கையில் ஊடகம் இருக்கிறது நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதைத் தாண்டி,பக்கங்களை நிரப்ப எதையும் செய்வேன் என்னும் பொறுப்பற்ற தனம் இதில் வெளிப்படுகிறது.

இதுதான் எங்கள் யோக்கியதை என்று வெட்ட வெளிச்சமாய் அம்பலப்பட்டு நிற்கும் குமுதத்திடம் கேட்பதற்கு எந்த நாகரீகமான கேள்வி இருக்கிறது என்று  இதை வாசிக்கிற வாசகர்களே முடிவு செய்துகொள்ளட்டும்.


Thursday, 8 November 2012

அம்பலப்பட்டு அசிங்கப்பட்டும் கம்பீரமாய் கித்தாப்புக் காட்டும் விகடன்..!



ஆனந்த விகடனின் சென்ற இதழில் வெளிவந்த “நேற்று போராளி இன்று பாலியல் தொழிலாளி” என்னும் நேர்காணலை நாம் வரிக்கு வரி ஆதாரங்களுடன் விமர்சித்து அது ஒரு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நேர்காணல் என அம்பலப்படுத்தினோம். அதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்வினைகள் வந்திருந்தது.ஆனந்த விகடனின் நேர்காணல் உண்மை என்று சொன்னவர்கள் கூட, நாம் சொன்ன வாதங்களை மறுக்ககாமல்  மவுனத்துடன் கடந்து சென்றனர்.

ஆனால் ஆனந்த விகடனோ தான் செய்த தவறை சாதுர்யமான வார்த்தை ஜாலத்தின் மூலம் மூடி மறைக்க முயன்றுள்ளது விளக்கம் என்ற பெயரால் இரண்டு பக்கங்கள் வெளிவந்திருக்கும் அந்த எழுத்து சாதுர்யத்தையும் நாம் போஸ்ட்மார்ட்டம் செய்தாக வேண்டியுள்ளது.

(அது போக நாம் சொன்னது போல தனது தவறை மறைக்க விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பழைய பதிவு ஒன்றினை வலிய இந்த நேரத்திற்குத் தொடர்பற்று மீள்பிரசுரம் செய்துள்ளது.)




இனி அந்த விளக்கத்தை ஒவ்வொரு பகுதியாக நாம் சரிபார்ப்போம்.



கருணாநிதி எதுவும் மிகப்பெரிய தவறு செய்து விமர்சிக்கப்பட்டால், நானும் தம்பி முரசொலி மாறனும் திருவாரூர் வீதிகளில்,அந்தக் காலத்தில்  10 வயது இருக்கும் பொழுதே கறுப்புக் கொடி ஏந்திப் போராடினோம்.என்னைப் போய்ச் சந்தேகப்படுகின்றீர்களே? என்று புலம்பலும் பச்சாதமும் வார்த்தையில் வடித்து நீண்ட அறிக்கை விடுவார்.  தான் செய்த தவறை மறைக்க அதுகுறித்து எதுவும் சொல்லாமல்  பழைய வரலாற்றை எடுத்துப் போடுவார்.

அப்படித்தான் வழவழ கொழகொழ என வழிகிறது மேற்சொன்ன ஆனந்த விகடன் விளக்கமும்.
***






இதற்கு 2 விதமாகப் பதில் சொல்லலாம்.

ஒரு பார்வையில் பார்த்தால்..

இதுகாறும் விகடன் செய்ததற்காய் நன்றி சொல்கிறோம்.அதனால் தான் தினமலர் போன்ற கழிசடைப் பத்திரிகைகளை வாங்காமல் காசு கொடுத்து ஆ.விகடனை வாங்குகிறோம்.

அதற்காய் விகடன் செய்த எல்லாவற்றையும் நாம் ஆதரிக்க முடியாது.அது எப்படி இருக்கும் என்றால்,ஓட்டலில் நீண்டநாளாய் காசு கொடுத்து சாப்பிடுபவனிடம் இவ்வளவு நாள் நாவுக்கு ருசியாக சோறு போட்டேன். இன்னைக்கு கொஞ்சம் மலம் வைக்கிறேன். சாப்பிடு என்று சொன்னால் சாப்பிடவா முடியும்.முடியாதல்லவா.?

அதைப்போல விகடனில் சரியானவற்றைப்  பாராட்டும் அதே சமயம் அயோக்கியத்தனத்தைப் பாராட்ட முடியாது.

இன்னொரு பார்வையில் இதனைப் பார்த்தால்,

விகடன் வெளியிட்ட ஒவ்வொரு செய்திக்குப் பின்னும் விற்பனை நோக்கம் தான் இருக்கிறது. அதன் குழும இதழ்களில் வெளியாகும் அனைத்துச் செய்திகள்,கட்டுரைகள்,தொடர்கள், போன்றவற்றில் எந்த பகுதிகள் வாசகர் ஆதரவு அதிகம் இருக்கிறது? எது அதிகம் வாசிக்கப்படுகிறது.என்பது போன்ற அனைத்தையும் ஆய்வு செய்வதற்கும், அதனைக் கண்காணிக்கவும் GRM உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டிங் நிறுவனங்களிடம் ஒப்படைத்து அலசி ஆராய்ந்து வருகிறது. 

அது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கும் அறிக்கையைப் பொறுத்துத் தான் எந்த வகைச் செய்திகளை அதிகப்படுத்தலாம்,எதனை நிறுத்தலாம் என்று நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் முடிவெடுக்கும்.சில தொடர்கள் உடனே நிறுத்தப்படுவதும், சில விஷயங்கள் ஜவ்வாய் இழுக்கப்படுவதும் அதனடிப்படையில் தான்.

ஈழப்பிரச்சனை தொடர்பாக எழுதிய பொழுதெல்லாம் விகடன் குழும இதழ்களின் விற்பனை அதிகரித்த காரணத்தால்தான் அச்செய்திகள் தொடர்ந்து முக்கியத்துவத்துடன் இடம் பிடித்து வந்தன.  ஈழச்சிக்கலை எழுதியதால் பத்தாயிரம் காப்பி விற்பனை குறைந்திருந்தால் பக்கம் பக்கமாய் வந்த பல செய்திகளும்,கட்டுரைகளும் இன்பாக்சின் பெட்டிச் செய்தியாகச் சுருங்கியிருக்கும்.

இப்போதுகூட இரண்டு பக்கத்திற்கு விளக்கம் எழுதியிருப்பதன் காரணம், கடந்த இதழில் வந்த இட்டுக்கட்டப்பட்ட பேட்டியை ஒட்டி புலம் பெயர் தமிழர்களிடமிருந்து வரும் விகடனின் இணைய வாசிப்பு வருமானம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதால்தான்

ஆகவே நான் குரல் கொடுத்தேன்,பதிவு செய்தேன் என்று சொல்லிப் போராளி இமேஜ் கொடுக்க வேண்டாம்.

***


                                      

//அவருடைய  அடையாளம் சொல்வது பாதுகாப்பானது அல்ல என்ற நிலையில் அவருடைய அடையாளத்தை மறைத்தே வெளியிட முடிவு செய்தோம்.//

இது மிகப்பெரிய அயோக்கியத்தனம். ஏனென்றால் ஆ.விகடன் பேட்டியில் சொல்லப்பட்டிருப்பது  மிகப்பெரிய குற்றச்சாட்டு. சமூகத்தில் நடக்கும் அவலத்தின் உச்சத்தை வெளிக்கொணர்ந்ததாகச் சொல்கிறது. சிங்கள அமைச்சர் கற்பழித்தார் என்ற குற்றச்சாட்டு போர்க்குற்ற ஆவணம். சிங்கள அரசுக்கு எதிராக இன்று அது முக்கியமான துருப்புச்சீட்டு.அதைப்போல இயக்கத்தில் இருந்த போராளிகள் பாலியல் தொழிலாளிகளாக மாறிவிட்டனர் என்பது மிகப்பெரிய அவலம்.

அந்த அலுவலகத்தில் 500 ரூபாய் லஞ்சம் வாங்கினான். இந்த நடிகருக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பு என்பது போன்ற டைம்பாஸ் கிசுகிசுக்களல்ல அது.

அதை உரிய முறையில் நிரூபிக்க வேண்டும். இதற்கு முன் மாதிரியும் இருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அவலத்தை ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சியைச் சேர்ந்த பிரியம்வதா என்னும் முதன்மை நிருபர்  ஈழப்பகுதிகளுக்கு தனி ஆளாகப் பயணம் செய்து அனைத்தையும் பதிவு செய்து சமீபத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.இதற்காக 2012 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான செய்தித் தொலைக்காட்சி (சிறந்த புலனாய்வு செய்தி) விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்ட வீடியோவில் சில பகுதிகள் பேட்டி கொடுத்தவர்களின் பாதுகாப்பு கருதி முகம் மறைத்தும் வெளியிட்டுள்ளது.அது புலனாய்வு.

ஆ.விகடனின் அந்த பேட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள ’பெண்போராளி’ பற்றி எப்போது இயக்கத்தில் இணைந்தார் எப்போது யாரை திருமணம் முடித்தார். எப்போது பிடிபட்டார், விடுவிக்கப்பட்டார். இப்போது எங்கே தங்கியிருக்கிறார் என்று ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் சொல்லிவிட்டு அவருடைய பெயரை மாற்றிவிட்டோம் படத்தை வெளியிடவில்லை பாதுகாப்பாக இருப்பார் என்று விகடன் சொல்கிறது என்றால் யார் நம்புவார்கள். இதில் உண்மையாகவே விகடன் பாதுகாக்க முயற்சித்திருப்பது தனது இட்டுக்கட்டப்பட்ட பேட்டியை மட்டுமே.
***




//அந்தப்பேட்டியே ஒரு புனைவு எனவும் விகடன் துரோகம் இழைத்து விட்டது எனவும் பேட்டியின் வார்த்தைகளுக்குள் உளவியல் கபடி ஆடிப்பார்த்தனர்.//

இது கலகக்குரலின் மீதான குற்றச்சாட்டு.

நாம் எழுதியது அப்பட்டமான ஆதாரங்களுடன் கூடிய மறுப்பு. அதில் ஒன்றிற்கு கூட நேர்மையாய் நேரடியாய் பதில் சொல்லத் திராணியற்ற நிலையில்தான் ஆ.விகடன் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் வார்த்தைகளுக்குள் கபடி ஆடியுள்ளது.

உண்மையில் வார்த்தைகளுக்குள் கபடி ஆடுவது எது என்றால், ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாறன் சகோதரர்கள் தொடர்பை எழுதும் பொழுது விகடன் குழும இதழ்கள் வார்த்தைகளை நிரப்புகின்றனவே, அது தான். நாம் எழுதியுள்ளதல்ல.
***






//அத்தனை உரிமைகளும் அந்த சகோதரிக்கு உண்டு.//
ஆனால் இங்கு பாதிக்கப்பட்ட சகோதரி யாரையும் ஆ.விகடன் பேட்டி காணவில்லை என்பதைத் தான் நாம் நிருபித்திருக்கிறோம்.

//குன்றின் மீது நின்று யானைப் போர் பார்ப்பதற்கும் யானையின் காலடியில்கிடந்து துடிப்பவர்களுக்குமான வித்தியாசத்தை சகோதரி சுட்டிக்காட்டினார்.//
புலம்பெயர் தமிழர்களுக்கு புத்தி சொல்வது மட்டுமல்ல குற்றச்சாட்டும் வைக்கிறது. ஆனால் இது விகடனுக்குத் தான் பொருந்தும். ஈழப்போராட்டம், அது கடந்து வந்த துயரங்கள், வலிகள் அத்தனையையும் பதிவு செய்கிறோம் என்பதைத்தாண்டிபத்திரிக்கை விற்பனை என்ற நோக்கிலிருந்த பார்த்து வந்த விகடன், இப்போது வீரம் துயரம் அவலம் என்ற நிலைகளில் பயணிக்கும் கதை போல ஒரு பேட்டியைத் தயார் செய்திருக்கிறது.
***




//எதிரும் புதிருமாகக் கிளம்பும் எல்லாக் கருத்துக்களையும் மக்கள் மன்றத்தில் இதயசுத்தியோடு விகடன் என்றும் பகிரும்.//

ஆ.விகடன்  தன் மீதான குற்றச்சாட்டைலாவகமாக மடை மாற்றுகிறது. யாரும் எதிர்க்கருத்துக்களைப் பத்திரிகைகளில் பகிரக் கூடாது என்று சொல்லவே இல்லை.அது பத்திரிகைகளின் கடமை.ஆனால் அது உண்மையானதாக இருக்க வேண்டும்.

அந்தோணிசாமி.மார்க்ஸ்போன்றவர்களின் பயணக்கட்டுரையை ஆ.விகடன் சமீபத்தில்வெளியிட்டது. அதை யாரும் எதிர்க்கவில்லை.அதில் உள்ள அபத்தங்களையும் புரட்டுகளையும் மட்டுமே எதிர்த்தார்கள்.

உண்மையாக யாரேனும் பாதிக்கப்பட்டிருந்திருந்தால் அதை அசைக்க முடியாத ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தால் யாரும் ஆ.விகடனைக் குற்றம் சாட்டப் போவதில்லை.அதை விடுத்து போகிறபோக்கில் அவதூறுகளை அள்ளித் தெரித்து எழுதியதை யாரும் ஏற்க முடியாது.

//இன்றும் எம்மைச் சூழ்ந்து நிற்கும் கோடானுகோடி வாசகர்களே//

சோனியாகாந்தி,நிதின்கட்காரி,கருணாநிதி,ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகள்  ஊழல்களில் அம்பலப்பட்டாலும்  தங்களின் நேர்மைக்கு தங்கள் பின்னால்  இருக்கும் கோடானுகோடி தொண்டர்கள் தான் சாட்சி என்று சொல்வது போல் இருக்கிறது. விகடனின் கோடிக்கணக்கான வாசகர்களே சாட்சி என்கிற வாதம்.

அதைப்போல விகடன் அதிகம் விற்பனை ஆகிறது என்பதற்காய் அதனை ஆதரவு என்று கருத முடியாது. டாஸ்மாக்கில் கூடத்தான் சாராயம் அதிகம் விற்கிறது.அதனை எப்படி நல்லது என்று கருத முடியும்? அப்படித்தான் விகடன் அதிகம் விற்பனையாகிறது என்பதால் மட்டுமே அது சொல்வது அனைத்தையும் ஆராயாமல் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

//விடு தம்பி//


இந்தப் பகுதியே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல இருக்கிறது. இதில் நமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன.

இலங்கை அரசினை எதிர்த்து பல்வேறு போர்களில் பங்கெடுத்த போராளி, சிம்ம சொப்பனமாய் இருந்த போராளி.விகடன் கூற்றுப்படி எளிதாக முகாமில் இருந்து வெளியே வந்து விட்டார் என்பதை ஒரு வாதத்துக்காய்,உண்மை என வைத்துக் கொண்டாலும் கூட,அவர் எளிதாய் கண்காணிப்பு வளையத்தில் இருந்து தப்ப முடியாது.தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார். அவருடைய பேட்டிக்கு எதிர்வினைகள் வந்த உனே அவருடன் எளிதாய் எப்படி விகடன் சார்பில் பேசியிருக்க முடியும்..?அவருக்கு சிக்கல் வராதா..? ( எல்லாம் ஆசிரியர் குழுவிற்குள்ளேயே இன்டர்காமில் பேசிக்கொள்வது தானே என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது.)

அது மட்டுமல்ல. இந்தப் பதில் முழுவதும் தூய ஈழத்தமிழர் பேச்சு வழக்கில் இருக்கிறது. இதுவே சென்ற இதழ் நேர்காணல் முழுக்க பொய்யானது என்பதை உணர வைக்கும்.

சென்ற இதழ் பேட்டியைப் பாருங்கள்.

ஈழத் தமிழ் வாடை மருந்துக்கும் இல்லை.அங்கங்கே சில சொற்கள் மட்டும் இருக்கிறது. அது தவிர வேறு சொற்பிரயோகம் இல்லை.  மேற்கண்ட. இப்போதைய பெட்டிப் பேட்டியில் முழுக்க முழுக்க ஈழச்சொல்லாடலே பிரயோகிக்கப்பட்டுள்ளது. (இதை எழுத ஆசியர் குழுவினர் எந்த ஈழத்தமிழரிடம் எவ்வளவு நேரம் செலவழித்தனரோ? விகடன் ஆசிரிய குழுவினரின் கடும் ’உழைப்பைப்’ பாராட்டித்தான் ஆகவேண்டும்)

இன்னொன்று

மேலும் புதிதாக எழுதப்பட்டுள்ள விடு தம்பி யில் அந்த பெண்போராளி பேட்டி கொடுக்க மறுத்தும் வலியுறுத்தி வாங்கப்பட்டதான அங்கலாய்ப்பும், இந்த எதிர்வினைகளை அவர் முன்னே எதிர்பார்த்ததாகவும், வெளிப்படுத்தப்பட்டு நான் விபச்சாரியாகவே இருந்துவிட்டுப் போறேன் என்ற கழிவிரக்கத்தோடு முடிக்கப்பட்டுள்ளது.

இங்கே நமக்கு எழுகிற கேள்வி என்னவென்றால். முன்பே அவரைப் பற்றி அனைத்தையும் உறுதிசெய்து விட்டு பேட்டி எடுத்துள்ள நிலையில், எந்த நேரமும் சிங்கள அரசிடமிருந்து ஆபத்தை எதிர்நோக்கி பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பேட்டி வெளிவந்தவுடன் இருப்பவரிடம் பேசுவதற்கான தேவை விகடனுக்கு என்ன வந்தது?

இது வாசகனை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டு கட்டப்பட்ட கட்டம். ஒரு பொய்யை மறைக்க மற்றொரு பொய்யை உருவாக்குவது.

இப்படிப்பட்ட சினிமா பாணியிலான முயற்சிகளால் வாசகர்களை ஏமாற்ற முயற்சித்தால் அதை எப்படி எளிதில் விட்டுவிட முடியும் தம்பி.

நாம் இறுதியாகவும் உறுதியாகவும் சொல்வது இதுதான்.

ஆனந்த விகடனின் சென்ற இதழ் 6 பக்க நேர்காணல், நாம் ஏற்கனவே பல்வேறு தரவுகளுடன் சொன்னது போல் பொய்யாகத் திட்டமிட்டுக் கற்பனை செய்யப்பட்ட பேட்டி.நாம் எவ்வளவு தான் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிருபித்தாலும் ஆனந்த விகடன் அதை மறுத்து 2 பக்கத்தில் விளக்கம் சொல்லியுள்ளது.

ஆனந்த விகடனின் சென்ற இதழ் நேர்காணல் விகடனின் நம்பகத்தன்மை மீது ஏற்பட்ட கறை. 

அதனை 2 பக்கங்கள் இல்லை,மழையளவு சொற்கள் கொண்டு பொழிந்தாலும் அழிக்க முடியாது.

தொடர்புடைய இணைப்புக்கள்

http://kalakakkural.blogspot.in/2012/11/blog-post_4.html
http://www.youtube.com/watch?v=L336faBgWwc



.