போஸ்ட் மார்ட்டம்-புதிய பகுதி.
இதழ்களில் வரும் நேர்காணல்,திரை விமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊர் பாஷையில் சொல்லப் போனால், அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும் பகுதி இது.இந்தப் பகுதி அட்டவணைப்படி வெளிவராது.எப்பொழுதாவது வெளிவரும்.
இனி ரெடி ஸ்டார்ட்..
முதலில் நாம் எடுத்துக்கொண்ட பதிவு ஒரு நேர்காணல். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அவர்களுடனான நேர்காணல் ஆனந்த விகடன் தலைமை நிருபர் கவின் மலர் என்பவரால் எடுக்கப்பட்டு 15-05-2012 தேதியிட்ட இதழில் வெளிவந்துள்ளது.
அதனைப் பார்ப்பதற்கு முன் நேர்காணல் குறித்த பொது வரையறையைப் பார்ப்போம்.
எந்த ஒரு நேர்காணலும் புதிதான ஒரு செய்தியை அதன் வாசகர்களுக்குத் தெரியப் படுத்துவதாக இருக்க வேண்டும். பேட்டி அளிப்பவருடன் ஒரு விவாத நோக்கிலும் விமர்சன நோக்கிலும் இருக்க வேண்டும்.நேர்காணல் கொடுப்பவர் சொல்வதை அப்படியே வாந்தி எடுப்பதாக இருக்கக் கூடாது. நாளிதழ்கள் மற்றும் திரைத்துறை பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் இதன் அளவுகோல் சற்று மாறலாம்.
அதைப் போல அரசியல் பிரபலங்களைப் பேட்டி காணச் செல்லும் பொழுது அன்றைய நிகழ்வு வரைக்கும் அறிந்து வைத்துக் கொண்டு பேட்டிக்குச் செல்வதும் அவர் தொடர்புடைய அனைத்தையும் அவதானித்துச் செல்வதும் மிக முக்கியமானது.
நாம் பேட்டி காண்பது காசு கொடுத்துப் படிக்கும் நமது வாசகனுக்காகத் தானேயொழிய யாரைப் பேட்டி காணச் செல்கிறோமோ அவர்களுக்காக அல்ல.ஆகவே இந்தக் கேள்வி கேட்டால் அவர் கோபித்துக் கொள்வாரே,அடுத்த பேட்டி கிடைக்காதே,பேட்டிக்கு உதவி செய்த நண்பர் வருந்துவாரே என்று நினைத்து அங்கு அமைதியாகப் பதிலை வாங்கி வருவது வாசகனை மடையனாக நினைக்கும் செயல்.இது நிருபரின் தொலைபேசி எண்ணை பேட்டி அளித்தவர் பதிவு செய்ய இது உதவுமே தவிர தொழில் முறையில் அவருக்கு இருக்கும் மதிப்பு போய்விடும்.
இனி போஸ்ட் மார்ட்டம் பகுதிக்குச் செல்வோம்.
ஆனந்த விகடனில் வெளிவந்த பிரகாஷ் காரத் நேர்காணல் இதுதான்.இதனைப் படித்து விடுங்கள்.
இனி இதில் உள்ளவற்றை ஒவ்வொன்றாய் விமர்சன நோக்கில் ஆராய்வோம்.
இதில் தோழர் என்.வரதராஜனின் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு குறிப்பிட்டது (இந்த சொல்லாடல் நமக்கு உவப்பானதாக இருந்தாலும்)தவறானது.
ஏனென்றால் அனைவரும் படிக்கும் பத்திரிகையில் கட்சிகளுக்கு ஏற்பவோ தனது விருப்பங்களுக்கு ஏற்பவோ சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தமிழ் மாநிலக்குழு செயலாளர் என்.வரதராஜன் என்று சொல்வது தான் சரியானது.
ஏனென்றால் நாளைக்கு அன்பில் தர்மலிங்கம் படத்திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொண்டார் என்றால் உடன்பிறப்பு அன்பில் தர்மலிங்கம் என்றோ,
கோல்வால்கர் படத்திறப்பு விழாவில் அத்வானி கலந்து கொண்டார் என்றால் சுயம்சேவக் கோல்வால்கர் என்றோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக நிருபர் எழுத முடியாது.அது சரியானது அல்ல.பொதுவான அடையாளம் தான் பத்திரிகையாளனுக்குத் தேவை.ஆகவே இதைத் தவிர்த்திருக்க வேண்டும்.
இனி இந்தப் பகுதியைப் பாருங்கள்.
கேள்வி சரியான கேள்வி தான்.ஒரு அரசியல் கட்சித் தலைவராக பிரகாஷ் காரத்தும் தனது பதிலைச் சொல்லியிருக்கிறார்.
ஆனால் பதிலைக் கேட்டவுடன் நிருபராக ஒரு எதிர்க் கேள்வியை கேட்டிருக்க வேண்டும்.கேள்வி இப்படிக்கூட இருந்திருக்கலாம்.
அ)உங்கள் ஆட்சியிலும் நிறைய படுகொலைகள் நடந்தனவே?உங்கள் கட்சித் தொண்டர்கள் மாவோயிஸ்டுகள் மீதும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மீதும் எத்தனையோ தாக்குதல் தொடுத்துள்ளார்களே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
ஆ)பேராசிரியரைக் கைது செய்ததனால் கருத்துச் சுதந்திரம் குறித்துக் கவலை கொள்கின்றீர்கள்.ஆனால் நந்திகிராமில் 14 பேர் சுடப்பட்டு இறந்தார்களே, அதை எப்படி நியாயப் படுத்துவீர்கள்?
ஆனால் விகடன் நிருபரோ கேள்வி கேட்கவில்லை.பதிலில் திருப்தியாகி அடுத்த கேள்விக்குத் தாவி விட்டார்.சரி போகட்டும்.அடுத்த கேள்வியைக் கவனியுங்கள்.
இந்தக் கேள்வியே தவறு.
கூடங்குளம் பிரச்சனையில் உங்களின் நிலை ஏன் மக்களுக்கு விரோதமாக இருக்கிறது என்று தான் இருக்க வேண்டும்.ஆனால் நிருபர் வேறு ஒரு இடத்தில் கேள்வியைத் தொடங்குகிறார்.சரி போகட்டும்.
அரசியல் வாழ்வில் நிருபர்களிடம் எத்தனையோ கடினமான சந்தர்ப்பங்களைச் சந்தித்த பிரகாஷ் காரத்துக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?
வளாவளா கொலாகொலா என்று பதில் அளிக்கிறார்.குறிப்பாக அச்சுதானந்தன் குறித்து பிரகாஷ் காரத் தவறான பதில் சொல்லி நழுவிப் போகிறார்.அவரது பதிலுக்குப் பின் அதிலிருந்தே பல எதிர்க் கேள்விகள் கேட்டிருக்கலாம்.
அ) மத்தியக் கமிட்டி எடுத்த முடிவை மீறிய அச்சுதானந்தனை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பியதாக ஊடகங்களில் செய்தி வந்ததே,அது குறித்துக் கூறுங்கள் என்றோ?
ஆ)ஜெய்தாபூரில்உள்ள அணு உலை தொழில்நுட்ப ரீதியில் பாதுகாப்பற்றது என்பதால் அதனைஎதிர்க்கிறோம்.,கூடங்குளம் அணு உலையில் உயர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அது பாதுகாப்பானது ஆகவே அதை ஆதரிக்கிறோம் என்றும் சொல்கின்றீர்களே,நீங்கள் ஜெய்தாபூரிலும் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தச் சொல்லித் தானே போராட்டம் நடத்த வேண்டும் ஏன் அங்கு அணு உலையைஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றீர்கள்.ஏன் இந்த இரட்டை வேடம்?
என்றோ கேள்வி கேட்டிருக்கலாம்.ஆனால் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.அடுத்து ஒரு கேள்விக்குத் தாவுகிறார் நிருபர்.(நாம் என்ன செய்ய முடியும்?காசு கொடுத்து இதழை வாங்கித் தொலைத்து விட்டோமே..!)
இது ஒரு அபத்தமான கேள்வி.பிரகாஷ் காரத்தின் பதிலில் உள்ள இரட்டைவேடம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்தது தான்.அதை விட்டு விடுவோம்.நிருபர் அதுகுறித்துக் கேட்ட கேள்வி தான் தவறு.
நேர்காணல் செய்த சமயத்தில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டு விட்டது. அணை பாதுகாப்பானது என்று சொல்லப்பட்டு விட்டது.இதனை முன் வைத்துத் தான் கேள்வி கேட்கப்பட்டிருக்க வேண்டும்.
நீதிபதிஆனந்த் கமிட்டி அறிக்கைக்குப் பின் உங்கள் நிலை என்ன?இனிமேலாவது அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பான தமிழகத்தின் உரிமையை ஏற்றுக் கொள்வீர்களா?
என்று கேட்டிருக்கலாம்.ஆனால் நிருபர் 30 வருடங்களாக முல்லை பெரியாறு விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பற்றி பாமர மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயத்தையே கேள்வியாக்கியுள்ளார்.
பிரகாஷ் காரத்தும் அதே பல்லவியைப் பாடியுள்ளார்.அது கூடப் பரவாயில்லை.அவரின் பதிலில் இருந்தே அடுத்த கேள்வியையாவது கேட்டிருக்கலாம்.
கேரள மக்களின் அர்த்தமற்ற பயத்தைப் போக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையல்லவா?ஆனால் நீங்கள் அதனை ஊதிப் பெருக்குகின்றீர்களே இதுதான் கம்யூனிஸ்டுகளின் பணியா என்று ?.
இத்தனைக்கும் ஆபிசில் ஆசிரியர்,பொறுப்பாசிரியர் உட்பட பாதிப்பேர் முல்லை பெரியாறு தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள்.இதனைப் படிக்கும் மதுரைக்காரன் அவர்களைப் பற்றி என்ன நினைப்பான்?சரி போகட்டும்.
இனி அடுத்த கேள்வி பதிலைக் கவனியுங்கள்.
ஈழப்பிரச்சனையில் இவர்கள் நிலைப்பாடு ஊருக்கும் உலகுக்கும் தெரிந்தது தான். இந்த கேள்வியே கேட்கப்பட்டிருக்க வேண்டியதில்லை.இது தொடர்பாய் கேள்வி கேட்டுத்தான் ஆக வேண்டுமென்றால் இப்படிக் கேட்டிருக்கலாம்.
லெனின் அவர்களின் சுய நிர்ணய உரிமை குறித்து உங்கள் கருத்து என்ன? ஏன் அது ஈழத்திற்குப் பொருந்தாதா? இல்லையென்றால் லெனின் கொள்கை உங்களுக்குத் தொடர்பற்றதா?
ஆனால் கேட்கவில்லை.சரி போகட்டும்.
அப்பொழுதும் கூட பதிலில் இருந்து இன்னொரு எதிர்க் கேள்வி கேட்டிருக்கலாம்.
துரதிருஷ்டவசமாக என்று சொல்கின்றீர்களே?அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்ற சொல்லை போராடும் கம்யூனிஸ்ட் பயன்படுத்தலாமா?அநீதியை எதிர்த்துப் போராடுவது தானே உங்கள் க்டமையாக இருக்க முடியும்?
ஆனால் நிருபர் பிரகாஷ் காரத்தின் கேட்கக் கிடைக்காத பதிலில் திருப்தியாகி அடுத்த கேள்விக்குத் தாவுகிறார்.
நாமும் எதற்கடா இதைப் படித்துத் தொலைந்தோம் என்று யோசிக்கிறோம்.
விகடன்தலைமை நிருபர் கவின்மலர் எடுத்துள்ள நேர்காணலில் உள்ள நிறை குறைகளை மேலே கண்டோம்.இனி விகடன் நிருபர் செய்யத் தவறிய விஷயங்களைப் பார்ப்போம்.
அ)இப்பொழுது குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.பிரணாப் முகர்ஜியும் அமீது அன்சாரியும் முன்னிறுத்தப் படுகிறார்கள்.இருவரும் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்களில் அமீது அன்சாரியை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கக் கூடும் என்ற நிலை இருக்கிறது.
இந்த நிலையில் அது குறித்து ஒரு கேள்வியைக் கேட்டிருக்கலாம். அல்லது இந்தத் தேர்தலில் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள் என்றாவது கேள்வி கேட்டிருக்கலாம்.
ஆ)விகடன் நேர்காணல் செய்யப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கொல்கத்தா வருகையும் மம்தாவின் சந்திப்பும் உறுதிப் படுத்தப்பட்டுவிட்டது.இதனைக் கேள்வியாக்கி இருக்கலாம்.இது தோழர் பிரகாஷ் காரத்திற்கு சாதகமான கேள்வியும் கூட.
இ)நேர்காணல் செய்ததற்கு 20 நாட்களுக்கு முன்னர் கோழிக்கோட்டில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது ஆண்டு விழாவில் பிரகாஷ் காரத் 3 ஆவது முறையாய் கட்சியின் பொதுச் செயலாளராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.அதன்பின் முதல்முறையாய் தமிழ்நாடு வருகின்றார்.அவருக்கு விகடன் சார்பில் வாழ்த்துச் சொல்லி தொடர்புடைய ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாம்.
உங்கள் காலத்தில் தான் கட்சி மிக மோசமான ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.இதனை எப்படி மாற்றியமைக்கப் போகின்றீர்கள்?
ஈ)இது எதையுமே கேட்காவிட்டாலும் பரவாயில்லை.டெண்டுலகரை நியமித்ததை ஏன் ஆதரிக்கின்றீர்கள் எனறாவது குறைந்த பட்சம் கேள்வி கேட்டுத் தொலைத்திருக்கலாம்.
மேற்கண்ட நான்கு கேள்விகளும் முக்கியமானது. இதற்குப் பதில் வாங்கியிருந்தால் தமிழ்ப் பத்திரிகையில் முதல்முறையாக விகடனில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தவற விட்டுவிட்டார்.அல்லது அவற்றில் கவனம் செலுத்தவில்லை.
ரிப்போர்ட்
ஒட்டுமொத்த நேர்காணலையும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.நேர்காணலுக்கான வரையறையில் இது அடங்கவில்லை.சொன்னதை அப்படியே எழுதி வந்துள்ளார் நிருபர்.இதற்கு ஸ்டெனோ கிராபர் போதும்.
புதிய செய்திகளும் எதுவும் இல்லை.தாம்பரம் கிறிஸ்டியன் கல்லூரியில் தான் படிச்சேன் என்பது உட்பட அனைத்தும் பழைய செய்திகள். மம்தா தொடர்புடைய 2 கேள்விகளும் பதில்களும் கட்சிப் பத்திரிகை படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பிற அனைத்துக் கேள்வி பதில்களும் சில வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்து அனைவராலும் கேட்கப்படுபவை.அதே பதிலைத் தான் நாமும் இந்த நேர்காணலில் படித்திருக்கிறோம். பிறகு என்ன நோக்கத்தில் இந்த நேர்காணல் இடம்பெற்றது என்று தெரியவில்லை.இதற்குப் பதிலாக பாசிமணி விற்கும் பெண்ணைப் பேட்டி கண்டு வெளியிட்டிருந்தால் நமக்கு புதிய செய்தி ஒன்றாவது கிடைத்திருக்கும் என்று உறுதியுடன் நாம் சொல்ல முடியும்.
எந்த ஒரு பிரத்யேக நேர்காணலும் வெளிவந்துள்ள இதழினை என்றும் நினைவு படுத்த வேண்டும்.அதிலும் விகடன் குழும இதழ்கள் trend setter என்று தங்களைக் கருதிக் கொள்பவை. அதற்கான உழைப்பையும் குறைந்தபட்சம் செலுத்தக் கூடியவை.ஆனால் இந்த நேர்காணலிலோ துளியும் அது காணப்படவில்லை.அதற்கான முயற்சியே தென்படவில்லை.
தலைமை நிருபர் கவின்மலர் |
இப்பொழுது உள்ள நிருபர்களிடம் காணப்படும் குறை என்னவென்றால் மிக விரைவாக தாங்கள் யாரைப் பேட்டி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.அதன்பின் தனது நண்பர்கள் மூலமோ,சோர்ஸ் மூலமோ பிரபலங்களிடம் பேட்டிக்கும் ஒப்புதல் வாங்கி விடுகிறார்கள்.அலுவலகத்திலும் அனுமதி பெற்று பக்கங்களை ஒதுக்கி விடுகிறார்கள்.அவ்வளவு தான்.இந்த வாரம் நம்ம பைலைன் வருது என்று சந்தோஷப்படுகிறார்கள்.ஆனால் இதில் செலுத்தும் அக்கறையையும் ஆர்வத்தையும் பேட்டிக்கான தயாரிப்புக்களில் சிறிதும் செலுத்துவதில்லை.குறைந்த பட்சம் அன்றாட செய்தித் தாள்களைக் கூடப் படிப்பதில்லை.
இந்தப் பேட்டியையே எடுத்துக் கொள்ளுங்கள்.
பிரகாஷ் காரத் நேர்காணலை எவ்வளவோ சிறப்பாகச் செய்திருக்க முடியும்.தயாரிப்புக்களுடனும் முன்னேற்பாடுகளுடனும் சென்றிருந்தால் பிரகாஷ் காரத்திடம் இருந்து பல்வேறு விஷயங்களை வெளிக் கொணர்ந்திருக்க முடியும். வெகு சிலவற்றை நாமே சுட்டிக் காட்டினோம். பேட்டிக்குச் செல்லும் முன் அன்றாட நாளிதழ்களைப் படித்திருந்தாலோ,அல்லது இணையத்தைப் பயன்படுத்தியிருந்தாலோ ஓரளவுக்குச் சிறப்பாய் செய்திருக்க முடியும்.அப்படிச் செய்திருந்தால் விகடனின் சிறந்த நேர்காணலில் ஒன்றாக ஆகியிருக்கும். எத்தனையோ சிறப்பான முத்திரை பெற்ற நேர்காணல்கள் விகடனில் வெளிவந்துள்ளன. படிக்கும் அறிவார்ந்த வாசகனும் விகடனை வாங்கியதற்கு மகிழ்ந்திருப்பான்.இத்தனைக்கும் நேர்காணலுக்குச் சென்றவர் மாணவ நிருபர் அல்ல.விகடன் தலைமை நிருபர்.
அனைத்தையும் பரிசீலித்துப் பார்த்தால்,ஆனந்த விகடன்இந்த நேர்காணலுக்கு தலைமை நிருபரையும்,தலைமை புகைப்படக்காரரையும் அனுப்பியிருக்கத் தேவை இல்லை.கேள்விகளை அஞ்சலிலோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்பிப் பதில் பெற்றிருக்கலாம்.அல்லது தீக்கதிர் நிருபரிடம் கேள்விகளைக் கொடுத்து பதில் வாங்கி வரச் செய்திருக்கலாம்.இரண்டு பக்கங்கள் வீணானது தான் மிச்சம்.
போஸ்ட் மார்ட்டம் ஒவர்.
இந்த நேர்காணலில் பாராட்டும் அம்சம் எதுவும் இல்லையா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.அதுவும் இருக்கிறது.
விகடன் நிறுவனம் மாணவ நிருபர் திட்டம் ஒன்று நடத்துகிறதே.அதில் பங்கேற்பவர்களிடம் இதனை அளித்து ஒரு நேர்காணல் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று படிக்கச் சொல்லலாம்.
அம்புட்டுத்தான்.
19 comments:
Arputhamana vimarsanam... Thodarattum ungalin tholurippu pani!
இத்தனைக்கும் நேர்காணலுக்குச் சென்றவர் மாணவ நிருபர் அல்ல.விகடன் தலைமை நிருபர்.//மாணவ நிருபர்களை அசிங்கப் படுத்த வேண்டாம் தோழரே...
பேஸ்புக்கில் ”வீராவேசமாக” எழுதுவதை மட்டும் தகுதியாகக் கொண்டு நிருபர் வேலைக்கு ஆள் எடுத்தால் இப்படித்தான் இருக்கும்.அவங்க இதுக்குச் சரிப்பட மாட்டாங்க பாஸூ...
பேட்டிக்குச் செல்லும் முன் அன்றாட நாளிதழ்களைப் படித்திருந்தாலோ,அல்லது இணையத்தைப் பயன்படுத்தியிருந்தாலோ ஓரளவுக்குச் சிறப்பாய் செய்திருக்க முடியும்.//பேஸ்புக்ல அக்கப்போர் பேசவே எங்களுக்கு நேரம் சரியா இருக்கு.இதுல்ல பேட்டிக்கு கேள்வி தயாரிக்க நேரம் எங்க கிடைக்குதுங்க....
உங்க பொன்னான நேரம் வீணாகலாமா..?அந்த நிருபர் ஒரு லூசுங்க.யாரு எது சொன்னாலும் கேட்காதுங்க...தனக்குத் தான் எல்லாம் தெரியும் அப்படிங்குற நெனப்புல இருக்குங்க..ஆனா ஒன்னுந்தெரியாது அதுக்கு அப்படிங்குற உண்மை அதுகுத் தெரியாதுங்க..
தொடரட்டும் உங்கள் பணி.பட் இத விடுங்க இது திருந்தாத கேசு.
கவின் மலர் எடுத்துள்ள நேர்காணலில் தவறுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் அவர் சி.பி.எம் ஆதரவாளர். தீக்கதிர் பொறுப்பாசிரியர் குமரேசன் அல்லது நிருபர் கவாஸ்கர் இவர்களில் யாராவது ஒருவர் இந்த பேட்டியை ஏற்பாடு செய்திருப்பார்கள். நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் கேள்விகளை கேட்டால் தோழர் வருத்தப்படுவார் என்பது அவருக்கு நல்லாவே தெரியும். அப்புறம் ஆ.விகடனில் நேர்காணல் என்றால் அருள் எழிலன் எழுத்துக்கள்தான் படிக்க தூண்டும். பாவம் அங்கு அவர் இப்போது இல்லை.
நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் கேள்விகளை கேட்டால் தோழர் வருத்தப்படுவார் என்பது அவருக்கு நல்லாவே தெரியும்.//டோலர் வர்த்தப்ப்டுவாரா..அது சரிங்க..அப்படின்னா காசு கொடுத்து விகடன் வாங்குன நாங்க என்ன இளிச்சவாடர்களா..?வோட்டு போட்டாலும் தப்பு.விகடன் வாங்குனாலும் தப்பா?
கவின் மலர் எடுத்துள்ள நேர்காணலில் தவறுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் அவர் சி.பி.எம் ஆதரவாளர்.//அப்புடியா சன்கதி.அவர் எப்ப யார் கேட்டாலும் இல்லைன்னு தான் சொல்றார்
துரதிருஷ்டவசமாக என்று சொல்கின்றீர்களே?அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்ற சொல்லை போராடும் கம்யூனிஸ்ட் பயன்படுத்தலாமா?அநீதியை எதிர்த்துப் போராடுவது தானே உங்கள் க்டமையாக இருக்க முடியும்?
atheppudI appuram cpm medaiyila kavin malar paattu paaduna visuvasam enna aakurathu..?
i am disappointed that kavin malar has succumbed to her marxist sympathies, and did a bad interview with prakash. truly prakash, i do not know, how he managed to get 'elected' a third time as cpi(m) secretary - i guess accountability is not a virtue of that party. if you want a honest and interesting interview of kavin, maybe she should interview modi. or at worst J :)
ஆனந்த விகடனில் ஓரளவுக்கு நேர்த்தியாக எழுதக்கூடியவர் கவின். அவருடைய கட்டுரையை இந்தளவுக்கு ஆராய்ந்திருக்க வேண்டியதில்லை. சமீபத்தில் விபத்தில் சிக்கிய அவரை உங்களின் விமர்சனமும் பாதித்திருக்க கூடும். ஒரு கட்டுரையை எழுதும் முன்னர் அவர்களுடைய தற்போதைய சூழ்நிலையையும் மனதில் கொள்ளலாமே ப்ளீஸ்...
ஆனந்த விகடனில் ஓரளவுக்கு நேர்த்தியாக எழுதக்கூடியவர் கவின். //இதக் கேட்டாச் சிப்புச் சிப்பா வருது அண்ணாத்தே..ஏன்னா ஆபிசில கேட்டா அவருக்கு நியூஸ் சென்ஸ் துளியும் கிடயாதுன்னு ஆபிசுல சொல்றாங்க..அர வேக்காட்டுத்தனமா எதையும் பண்ணுவாருன்னும் பேஸ்புக்ல தான் நல்ல கவித எழுதுவாருன்னும் சொல்றாங்க.நெசந்தானுங்களா......
சமீபத்தில் விபத்தில் சிக்கிய அவரை உங்களின் விமர்சனமும் பாதித்திருக்க கூடும்.//காசு கொடுத்து புக் வாங்குறது நாலு விஷயம் படிக்குறதுக்கு.இப்படி எழுதுனா திட்டாம என்ன செய்வாங்க.அதுவுமில்லாமல் யாரையும் கண்டமேனிக்குத் திட்டுவது கவின் மேடம் கைவந்த கலை சாரே...
மதன் ஆனந்த விகடன் பிரச்சனையை பற்றிய அலசலை எதிர்பார்க்கிறோம்.
கவின் அக்கா ஒரு மக்கா..?இது தெரியாதா உங்களுக்கு மக்கா..?அரைகுறைகளைப் பற்றி எழுதி உங்கள் தரத்தைத் தாழ்த்த வேண்டாம் நண்பரே..?அந்தளவுக்கு ஒர்த் இல்ல....
குடும்ப வன்கொடுமையில் பெண்கள் பாதிப்பை சொல்லும் இந்தவாரக்கட்டுரையில் தான் ஒரு அரைகுறை என்று மறுபடியும் நிறுபித்திருக்கிறார் நிருபர் கவின்மலர்.. முதல்ல முணு மேட்டர் அப்புறம் தெரிஞ்ச அதாவது பேஸ்புக் படிக்கிறவுங்களுக்கு தெரியுற விஷ்யம் அப்புறம் முன்றாவது தனக்கு தெரிந்த பிரபலங்கலிடம் பேட்டி அப்பாடா இந்தவாரம் பைலைன் வந்துடுச்சு..பெண்களின் குடும்ப வன்கொடுமையை இவ்வளவு எளிமையா(கேவலமா) பாக்கியராஜ் படம் மாதிரி அல்லது கே.பி படம் மாதிரி கட்டுரை எழுது கவின்மலர் என்ற பெண்ணுக்கு எப்படித்தான் தோனுச்சோ... கலக்குரல் நடத்தும் கலகக்கார பத்திரிக்கையாளர்களே நீங்க கிழிக்கிறதுக்கு ஆயிரம் கரப்ரட் ஆளுங்க இருக்காங்க அதைவிட்டுட்டு இந்த மாதிரி அரைவேக்காட்டு செம்புதூக்கிகளை பற்றி எழுதாதீங்க இதுங்க கொஞ்ச நாள்ளல அதுவா காணமப்போயிடும்..
கவின்மலர் இந்தவாரம் விகடனில் திருமாவளவனை பேட்டி எடுத்துள்ளார்.அதில் நிறைய அபத்தங்களும் திரிபுகளும் இருக்கின்றன.அதைக் கண்டிப்பாக எழுதுங்கள்.எதிர்பார்க்கிறோம்.
ஜூனியர் விகடனில் அ.மார்க்ஸ் எழுதி வரும் ஈழப் பயணத்தொடரைக் கூர்ந்து கவனியுங்கள்.அதனைப் போஸ்ட் மார்ட்டம் செய்யுங்கள்.சமூகத்துக்கு உபயோகமாய் இருக்கும்.
// தமிழ் மக்களை ஒடுக்க கூலிக் கும்பல்களையும் படையையும் வைத்திருப்பது போல், தமிழ் மக்களை பிளக்க கட்சிகளையும், தத்துவங்களையும் நாடுகின்றது. புலமை சார்ந்த புத்திஜீவிப் பிரமுகர்களை அடிப்படையாகக் கொண்டு அது இயங்குகின்றது. இதை அரசு செய்யவில்லை என்று யாரும் மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியாது. இதுதான் இன்றைய அரசியல் எதார்த்தம். இந்த வகையில் இதில் யார் ஈடுபடுகின்றனர்? அரசியலில் ஒரு கருணா, டக்கிளஸ், பிள்னைளயான், கே.பி போல் இலக்கியம் மற்றும் தத்துவத்துறையில் யார்? இங்கு வெளிப்படையாக இயங்கும் இவர்கள் போல், இதை மூடிமறைத்தபடி இயங்குவபர்கள் யார்? அவர்களின் இலக்கிய - தத்துவார்த்தம் எந்த வகையில், இன்று அதை வெளிப்படுத்துகின்றது?//
//அதாவது அ.மார்க்ஸ் தமிழ் மக்களுக்குள்ளான முரண்பாடுகளை கூர்மையாக்கும், தத்துவங்களை விதைத்தபடி, தமிழ் மக்கள் படுகின்ற துன்பங்கள் பற்றிய புலமை வாய்ந்த அறிக்கையை வெளியிடுவார். இதுதான் அவரின் இரு எதிர் முனை முகங்கள். இதைக்காட்டி கொண்டு குலைக்க ஒரு கூட்டம், நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு இவர் பின்னால் அலைகின்றது.//
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8598%3A2012-07-09-06-32-07&catid=359%3A2012
இந்த வரையறைக்குள் தான் அவரது தொடர் அமையும் என எதிர்பார்க்கிறோம்.தொடர்ந்து வாசியுங்கள் நண்பரே...
கவின்மலர் போன்ற கத்துக்குட்டிகளை விட்டுவிடுங்கள்.அரைகுறை அறிவில் துள்ளுகிறார்கள்.
கலகக்குரல் எனக்கு சமீபத்தில்தான் அறிமுகமானது. நானும் ஊடகக் குடும்பம்தான் என்பதால் தொடர்ந்து கலகக்குரலைப் படித்து வருகிறேன். படிக்கும் தகவல்கள் குருதியைக் கொதிக்கச் செய்வதாகத்தான் இருக்கின்றன. ஆனால் தவறு செய்பவர்களைத் திருத்த நம்மால் எதுவும் செய்ய முடியாது என்னும் போது கோபம் வருத்தமாகக் குறைந்து விடுகிறது.
அண்மையில் என் விகடன்-புதுச்சேரி பதிப்பில் படித்த செய்தி தொடர்பான எனது ஆதங்கத்தை கலகக்குரலில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
புதுச்சேரி சூரியன் எஃப்.எம்மில் வேலை செய்து கொண்டிருந்த உமா எனபவர் இன்னும் சில நாட்களில் சீன வானொலியில் பணி புரிய சீனா பறக்க இருக்கிறார் என்ற தகவலுடன் அவருடை பேட்டி வெளியாகி இருந்தது.
2010லேயே புஷ்பா ரமணி என்ற பத்திரிக்கையாளர், சீனா சென்று சீன வானொலி தமிழ்ப்பிரிவில் ஓராண்டுபணிபுரிந்து விட்டு திரும்பினார். அவர் தமிழகத்திலிருந்த சென்ற முதல் பெண்.
அவரது குடும்ப நண்பரான, உலகப் புகழ் பெற்ற தமிழ் பத்திரிக்கையாளர் குமுதத்தில் அவரைப் பேட்டி எடுக்கச் சொல்லி, அப்போது தலைமை நிருபராயிருந்த திரு சந்திரசேகரிடம் (விசி) ரிடம் பரிந்துரை செய்தார். ஆனால் அவர் புஷ்பா ரமணியிடம் பேசிவிட்டு, ஆசரியரின் அனுமதி பெற்று பேட்டிக்கு மறுபடியும் அழைப்பதாகச் சொன்னார் ஆனால் வழக்கம் போல் அது ஒரு கண்துடைப்பாயிற்று. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், புஷ்பா ரமணி அவர்கள், ஒரு வருடம் குமுதம் சிநேகிதியில் வேலை செய்தவர். கிட்டத்தட்ட 20 வருடங்களாக பகுதி நேர பத்திரிக்கையாளராகவும், முழு நேரப் பத்திரிக்கையாளராகவும் இருப்பவர். மேலும் 1993 லிருந்து விஜய், சன் டிவி உட்பட பல தொலை காட்சிகளில் நிகிழ்ச்சிகளை வழங்கியவர்.
அவருடைய வெளிநாட்டு அனுபவங்களைத் தமிழ் பத்திரிக்கைகளில் எதுவும் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டாததன் காரணம் என்ன?
வழக்கம் போல் *யாருக்குத் தெரியும்?*
Post a Comment