Tuesday, 1 May 2012

நக்கீரன்,குமுதம் ரிப்போர்ட்டர்-"ஆத்தா நான் பெயிலாயிட்டேன்.."


முறைகேடு,குமுதம்,நக்கீரன்,விகடன்


கடைசி பெஞ்சு-புலனாய்வு இதழ்களை விமர்சனம் செய்யும் நமது புதிய பகுதி இது.
சசிகலா கட்சியிலிருந்து நீக்கம்,சேர்ப்பு போன்றவற்றிற்கு பிறகு செய்திப் பஞ்சத்தில் இருந்த புலனாய்ய்ய்வு இதழ்களுக்கு இப்பொழுது நித்தியானந்தா,மதுரை ஆதினம் தீனி போடத் துவங்கியுள்ளனர்.அதிலும் இந்த வாரம் அனைவரும் கவர் ஸ்டோரி வைத்து கல்லா கட்டி விட்டனர்.

இந்த வார ஜூனியர் விகடன் 30-04-2012 திங்கள் காலையிலும் குமுதம் ரிப்போர்ட்டர் திங்கள் மதியத்திலும் நக்கீரன் இதழ் செவ்வாய் காலையிலும் லே அவுட் முடிக்கப் பட்டுள்ளது.
இனி ரெடி ஸ்டார்ட்...

ஜூனியர் விகடன்
மதுரை,சாமியார்,மது,மாது,சூது



நித்தியானந்தா மேட்டர் தான் கவர் ஸ்டோரி.அடடா அடடா ஆதினமே ஆடுது என்ற தலைப்பில் வந்துள்ளது.வழக்கம் போல ஒரு மர்மம்,கொஞ்சம் கிசுகிசு,கொஞ்சம் எதிர்ப்பு,பிடதி,மதுரை நடப்பு, எல்லாம் கலந்து கட்டி வெகு சிரத்தையுடன் பண்ணியுள்ளார்கள்.மேட்டரைப் பார்த்தால் இன்னும் சில வாரங்களுக்கு இழுக்கும் திட்டம் தெரிகிறது.

தமிழர்களை வெளியேற்ற மூன்று அம்சத்திட்டம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள தேவிகுளம்,பீர்மேடு பகுதி தமிழர்களின் குமுறல் வேறு இதழ்களில் பதிவாகவில்லை என நினைக்கிறோம்.

மாவோயிஸ்டுகளை மிரட்டும் கோப்ரா” என்னும் தலைப்பில் விஜயகுமார் ஐ.பி.எஸ்.பேட்டி நமது நிருபர் என்னும் பெயரில் ஒளிந்து வந்துள்ளது. இதில் மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள கிராமங்களில் மத்திய அரசு வளர்ச்சித் திட்டங்களைச் செய்வதான துதி பாடும் முன்னுரையும் இருக்கிறது.நமது நிருபர் என்று ஒளிந்து கொண்டிருந்தால் வேறு யாராக இருக்க முடியும்..? ஜுனியர் விகடன் சிறப்புச் செய்தியாளர் பாலகிஷனைத் தவிர..?


டெல்லி அலுவலகத்தில் இந்தப்பேட்டி எடுக்கப்பட்டது என்று இருக்கிறது.வழக்கமாக முக்கியமான நபர்களின் பேட்டி என்றால் உடன் ஒரு முகைப்படக்காரரும் செல்வார்களே..? பேட்டியின் பொழுது எடுக்கப்பட்ட சிறப்பான புகைப்படமும் வெளியிடுவார்களே.!அதுவும் விகடனில் திறமையான புகைப்படக்காரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களே..?அப்படிப்பட்ட புகைப்படம் எதுவும் இந்தப்பேட்டியில் வெளியிடப்படவில்லையே?பேட்டியின் பொழுது உடன் செல்லும் புகைப்ப்டக்காரர் பெயரும் பதிவாகவில்லையே..?இங்கு எப்பொழுதோ எடுக்கப்பட்ட புகைப்படம் தானே வெளிவந்துள்ளது.


உட்கார்ந்த இடத்தில் இருந்து மேட்டரை முடித்திருக்கலாம்..


அலுவலகத்தை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே பக்கத்தை  நிரப்பி விட்டு டெல்லியிலிருந்து பேட்டி என்று பொய்யாய் எழுதுபவர் ஜூனியர் விகடனில் சிறப்புச் செய்தியாளரா..?

நல்லாத் தானப்பா இருக்கு புலனாய்வு...

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கப்பா..பலே பாலகிஷன் @கனிஷ்கா @சூர்யா நீ திருந்தலையாப்பா இன்னும்..?

அடுத்த சிக்கலில் பா.ம.க.,தராக்கி போன்ற பதிவுகள் பரவாயில்லை.காங்கிரசின் சிங்வி சிடி சர்ச்சை குறித்த பதிவு ஒரு வாரம் தாமதமாக வந்துள்ளது.

தானே துயர் துடைப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பாதிக்கப் பட்ட மக்களுக்கு அனைவரின் பங்களிப்புடன் 22 வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கும் விகடனின் பணி 2 பக்கங்களில் பதிவாகியுள்ளது.இதில் பங்கு கொண்ட அனைவரையும் வாழ்த்துகிறோம்.
கழுகார் பதில்கள் வழக்கம் போல சிற‌ப்பு.

சிற்சில குறைகளும் தென்படுகின்றன.

4 பக்கங்களில் வைகோவின் நீண்ட கட்டுரை வந்துள்ளது.2 பக்கங்களாகச் செதுக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
சட்டமன்றத்தில் பாலபாரதி கை நீட்டிப் பேசினார் என்ற குற்றச்சாட்டு,அதன் பிறகான மன்னிப்பு ,பிரதமரின் செயலாளர் மீதான நில அபகரிப்பு புகார்,கீழ்ப்பாக்கம் குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் இதழில் பதிவு செய்யப்படவில்லை.

கழுகார் பதில்களில் புதுக்கோட்டை இடைத் தேர்தல் குறித்து ஒரு பதில் இருக்கிறது.அது இது தான்.
தேர்தல்,த்முக,கருணாநிதி


இதைப் படித்தால் புதுக்கோட்டையில் திமுக வினர் போட்டியிடுவதற்கு பயப்படுவது போன்ற தொனி இருக்கிறது.

அதே சமயத்தில் மிஸ்டர் கழுகு பகுதியில் புதுக்கோட்டை தேர்தல் பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது.அது இது தான்.
ஜூனியர் விகடன்,விகடன்,ஆனந்த விகடன்


இந்தச் செய்தியைப் படித்தால் புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில் திமுகவினர் போட்டியிட மிகுந்த ஆர்வமாக இருப்பது போன்ற தொனி இருக்கிறது.

கழுகார் பதில்கள் சொன்னது உண்மையா?மிஸ்டர் கழுகு சொன்னது உண்மையா?

அதே போல குண்டு பல்புக்கு டாடா-சபாஷ் தமிழகம் என்னும் தலைப்பில் பாலோ அப் மேட்டர் ஒன்றும் வந்துள்ளது.

குண்டு பல்பினைத் தடை செய்ய வேண்டும் என்று 22.04.2012 தேதியிட்ட ஜூனியர் விகடன் கட்டுரையைப் பார்த்து தமிழக அரசு இந்த முடிவு எடுத்ததாகவும் ஆகவே இது ஜூ.வி.க்கு கிடைத்த வெற்றி என்றும் பழைய கட்டுரையில் கருத்து தெரிவித்த பூவுலகின் நண்பர்கள் டிரஸ்ட்டைச் சேர்ந்த அதே சுந்தர்ராஜன் ஜூவி புகழ் பாடியுள்ளார்.



குண்டு பல்பு,சுந்தர்ராஜன்

இது சரியா..?

சி.எப்.எல்.பல்பிற்கு தமிழகம் மாற வேண்டும் என்பது நீண்ட நாளாக நிறைய தன்னார்வலர்கள்,தன்னார்வக் குழுக்கள் வலியுறுத்திய விஷயம்.ஜூவியும் இதனைப் பதிவு செய்துள்ளது.அதனை தமிழக அரசு இப்பொழுது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.ஆனால் முந்தைய வார ஜூவி கட்டுரையைப் பார்த்து தமிழக அரசு இந்த முடிவு எடுத்தது போல சொல்வது அபத்தம்.



மேலும் சுந்தர்ராஜன் 22.04.2012 இதழில் வலியுறுத்தியது எல்.ஈ.டி.பல்புகள் தான். இந்த இதழிலும் அந்தக் கருத்தினையே வலியுறுத்தியுள்ளார். அதனை இன்னும் அரசு நடைமுறைக்கு கொண்டு வரவில்லை.இந்த நிலையில் ஜூ.வி.சென்ற கட்டுரையில் கருத்து சொன்னவர் இந்த இதழில் ஜூவியையே பாராட்டுவது தேவையில்லாத புகழ்ச்சியாய்த் தெரிகிறது.

எனது இந்தியா தொடரில் எஸ்.ராமகிருஷ்ணன் பயன்படுத்திய ஒரு சொற்றொடர் எழுத்தாளருக்குரிய இலக்கணத்துடன் கையாளப்படவில்லை.இது கண்டிக்கப் பட வேண்டியது.
இந்தியா பிரிவினை,படேல்,எனது இந்தியா


இதனைப் படித்தால் ஜின்னா தங்கள் நாட்டுக்கு உரியதை ரெட் கிளிபிடம் மிரட்டிப் பெறுவதாகவும் நேருவும் படேலும் ஆலோசனை நடத்திப் பெறுவதாகவும் ஒரே தன்மையான சம்பவத்தை இரண்டு மாதிரியாகச் சொல்கிறது.

இது அப்பட்டத்தனமான ஒரு சார்பு.

இது எப்படி இருக்கிறது என்றால் ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியாய் இந்தியாவில் குடியேறினார்கள்,மொகலாயர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார்கள் என்று மதவாத வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் வரலாற்றை தங்கள் நோக்கம் போல எழுதியது போல் உள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் இப்படி எழுதுவது சரியல்ல.
ஜூவி க்கு கொஞ்சம் இறங்கு முகம்..



குமுதம் ரிப்போர்ட்டர்
ஆஷா,பேட்டி


48 பக்கங்கள் கொண்ட ரிப்போர்ட்டரில் 9 பக்கங்கள் விளம்பரம் வந்துள்ளது.அதற்கும் சேர்த்துத் தான் காசு கொடுத்து வாங்கினோம்.சரி போகட்டும்.

சத்தீஷ்கரிலிருந்து நேரடி ரிப்போர்ட் என்ற குறிப்புடன் கடத்தப்பட்ட கலெக்டர் மனைவி ஆஷா பேட்டி என்று கவர் ஸ்டோரி வந்துள்ளது.சத்தீஷ்கருக்குச் சென்றிருப்பார்கள் என்று தான் நினைக்கிறோம்.ஆனால் பேட்டி தான் உதைக்கிறது.

பேட்டி என்றால் இதழுக்காக குறைந்த பட்சம் ஒரு 4 கேள்விகள் அதற்கான பதில்களாவது இருக்க வேண்டும்.ஆனால் ரிப்போர்ட்டரில் எதும் இல்லை.மாவட்ட ஆட்சியரின் மனைவி தனது கருத்தைத் தான் சொல்லியிருக்கிறார்.அதிகபட்சம் 100 வார்த்தைகளில் தனது எண்ணத்தைச் சொல்லியிருக்கிறார்.




கருத்துத் தெரிவிப்பது வேறு,பேட்டி என்பது வேறு என்பது தெரியாதா என்ன..?நன்கு தெரியும்.வாசகனை ஏமாற்றுவது தாண்டி இதில் என்ன நோக்கம் இருக்க முடியும்..?ஆனால் கலெக்டர் மனைவி பேட்டி,நேரடி ரிப்போர்ட் என்று ஊரெங்கும் போஸ்டர் அடித்து விற்பனையில் இறங்கியுள்ளது.இது பிராடுத்தனம்.

அபிஷேக் சிங்வி சிடி சர்ச்சை,அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப் பதிவு போன்ற செய்திகள் பதிவாகவில்லை.

மெக்சிகோ சிறுமியை அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப் பட்டது, பதிவாகியுள்ளது சேலம்,திருச்சி,சிவகங்கை பஞ்சாயத்துகளும் பதிவாகியுள்ளன.பரவாயில்லை.
நித்தியானந்தா மதுரை ஆதினமாக நியமிக்கப்பட்ட விவகாரம் 2 பக்கங்களில் நிரப்பப் பட்டுள்ளது.

வம்பானந்தாவில் வழக்கம் போல மு.க.ஸ்டாலின் புராணம்.கருணாநிதி மீது கடும் விமர்சனம்.தா.பாண்டியன் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடப்பது போன்ற பாலா கார்ட்டூன் நன்றாக இருக்கிறது.

இந்த இதழ் பழைய நிலையில் இருந்து சறுக்கி இருக்கிறது.இதற்கும் மேல் சொல்வதற்கு ரிப்போர்ட்டரில் எதுவுமில்லை.

பத்திரிகை,கையூட்டு,லஞ்சம்

நக்கீரன்


நித்தியானந்தா தான் இங்கும் கவர் ஸ்டோரி.இதற்கு மேல் பழி தீர்ப்பதற்கும் வியாபாரம் பார்ப்பதற்கும் நக்கீரனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ன..?ஆனால் ஒரு வருத்தம் இருக்கும்.முன்பு நித்தியானந்தா-ரஞ்சிதா தனிப்பட்ட லீலைகளை இணையத்தில் வெளியிட்டு அதனை விற்றுக் காசு பார்த்தோம்.இப்பொழுது அப்படி ஒரு வாய்ப்பு இல்லையே என்று.அதற்கு என்ன செய்வது?வழக்கம் போல் கலந்து கட்டி அடித்துள்ளார்கள்.ஜூவியில் வராத செய்தி இதில் வந்துள்ளது.பார்ப்போம்.இனி என்ன நடக்கிறது என்று.

டெசோ அறிவிப்பும் கருணாநிதியின் துதி பாடலும் 2 பக்கங்களில் வந்துள்ளது.ஊர் உலகத்து செய்திகள் பேசும் சொன்னா நம்ப மாட்டீங்க பகுதியில் திமுக புரணிகள் எதுவும் இல்லை.

சென்னை தாதாக்களிடம் வெடிகுண்டு,திருச்சி மலைக்கோட்டைக்கு ஆபத்து,போலீஸ் அதிகாரிகளுக்கு மாந்திரிகம்,சேலம் அங்கம்மாள் காலனி பதிவு போன்ற ஏரியா செய்திகள் சிறப்பு.

சிறைப்பட்ட சிறைத்துறை என்னும் குணங்குடி அனீபா,மன்னிப்பது விந்தை என்னும் பாலபாரதி பேட்டி போன்றவையும் பரவாயில்லை.
அன்புமணி மீதான குற்றப் பத்திரிகை மருந்துக்கும் பதிவாகவில்லை.(டச்சில் இருக்கிறார் போலும்...)

கருணாநிதி அந்தோணி சந்திப்பு குறித்து நக்கீரனிலும் ஜூனியர் விகடனிலும் வேறுவேறாக புலனாய்ய்ந்திருக்கிறார்கள்.
ஜுனியர் விகடன்,ரிப்போர்ட்டர் தவறவிட்ட ஒன்றிரண்டு செய்திகளை நக்கீரன் சரியாகச் செய்துள்ளது.மற்றபடி சென்ற இதழுக்குப் பரவாயில்லை ரகம்.

3 comments:

Anonymous said...

பிரமாதமான அலசல்.... ஆனால் மார்க் தான் கொஞ்சம் இடிக்கிறது...ஜீவியைக் காட்டிலும் நக்கீரனுக்கு அதிகப்படியான பாராட்டுகள் இருந்தும் மார்க் குறைவாக இருப்பது ஏன்??? எனவே உங்களுக்கு 65 மார்க் தான்.... வாகை

kamalakannan said...

Kazhukarin sothapplai suttikkatti, avarai nallapadi vazhinataththukirerkal. Umathu sevai thodarattum.
KAMALAKANNAN, TRICHY

Anonymous said...

புலனாய்வு இதழ்களுக்கான மதிப்பெண்களை ஒவ்வொரு இதழிலும் அதன் செயற்பாட்டை வைத்து மட்டுமே அளவிடப்படக்கூடாது..அனைத்து சூழ்நிலையிலும் இதழ் நடந்து கொண்ட முறைக்காயும் அதன் தரத்தை மதிப்பிட வேண்டும்.அதற்கு என்றும் ஒரு மதிப்பெண்களை ஒதுக்க வேண்டும்.

நக்கீரன்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற இதழ்கள் முறையே கருணாநிதிக்கும்,ஜெயலலிதாவுக்கும் துதிபாடுகின்றன.நக்கீரன் திமுகவின் வாரமிருமுறை இதழ் போல் செயல்படுகிறது. ரிப்போர்ட்டர் ஜெயலலிதாவைத் துதி பாடுகிறது.இவை நடுநிலை அல்ல.

கீழ்ப்பாக்கம் குண்டு வெடிப்பு,சட்டசபையில் சபாநாயகரின் போக்கினை விமர்சித்தல் போன்ற செய்திகளை நக்கீரன் சிறப்பாய் செய்தது உண்மை தான்.ஆனால் அதன் நோக்கம் அதிமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் தான்.

இதே சம்பவம் திமுக ஆட்சியில் நடந்திருந்தால் நக்கீரன் விமர்சித்திருக்குமா..?கண்டிப்பாய் விமர்சித்திருக்காது.முடிந்தால் பாலபாரதியைத் திட்டி ஒரு நேர்காணல் வெளியிட்டிருக்கும்.ஏனென்றால் அதன் நோக்கம் இதழ்களுக்கான நெறிமுறையுடன் செயல்படுவதல்ல.திமுக ஆதரவுக்காய் இதழ் நடத்துவது தான்.காசு கொடுத்துப் படிக்கும் நமக்கு அது தேவை இல்லை.அதற்கும் சேர்த்துத் தான் அளவுகோல் வகுக்க வேண்டும்.

நாம் காசு கொடுத்து வாங்குவது புலனாய்வு இதழ்கள் என்னும் அடிப்படையில் தான்.நமது எம்.ஜி.ஆரு.க்கும் முரசொலி க்காக அல்ல.
இந்த இரண்டு இதழ்களுடன் ஒப்பிட்டால் ஜூனியர் விகடன் எப்பொழுதும் ஒரு நடுநிலை முகத்தை (பெயரளவுக்கேனும்) வைத்திருக்கிறது. அப்படிப்பாருங்கள் நண்பரே...