நடந்த சம்பவத்தை அப்படியே ரிப்போர்ட் செய்வதற்குப் பதில் அதில் கற்பனையைக் கலந்து எழுதுவதில் கிரைம் பீட் நிருபர்களுக்கு நிகர் அவர்களே தான்.
பெரும்பாலும் இவர்கள் காவல்துறையினர் அளிக்கும் செய்தியை அப்படியே நகல் எடுத்து வாசகர்களுக்கு அளித்தாலும் தங்கள் கற்பனையையும் சென்டிமென்ட்டையும் கலக்கத் தவறுவதில்லை. சம்பவம் நடக்கும் பொழுது அருகில் இருந்து பதிவு செய்தது போல் அவ்வளவு 'துல்லியமாய்' விவரணைகள் இருக்கும். இதில் மாலைமலர்,தந்தி நிருபர்கள் ஒருவகை என்றால்,தினமலர் நிருபர்கள் இன்னொரு வகை.
அது தொடர்பான சிறு பதிவு.
இரண்டு நாட்களுக்கு முன் வேளச்சேரி சாலையில் நள்ளிரவு குடிபோதையில்,அதி வேகத்தில் கார் ஓட்டி 3 பேரைக் கொலை செய்த சம்பவத்தை அனைத்து நாளிதழ்களும் பதிவு செய்துள்ளன.
சம்பவத்தில் வயதான பெண்மணி உட்பட உறங்கிக் கொண்டிருந்த மூவர் பலியாகினர். நள்ளிரவு நேரத்தில்,அதிக குடிபோதையில் வாகனம் ஓட்டும் அனைவரும் மிதமிஞ்சிய வேகத்தில் தான் ஓட்டுவர்.அதிலும் இந்த சம்பவத்தைப் பார்க்கும் பொழுது வாகனத்தை கட்டுப்பாடற்ற வேகத்தில் ஓட்டி வந்துள்ளது தெரிகிறது. மோதிய வேகத்தில் ஒருவர் பலியானதும்,மீதமுள்ள இருவர் சற்று நேரத்தில் பலியானதும் அதன் மிதமிஞ்சிய வேகத்தை நமக்குச் சொல்கிறது.
உழைக்கும் மக்கள் என்பதாலும் நள்ளிரவு என்பதாலும் யாரும் விழித்திருக்க வாய்ப்பும் இல்லை. மேலும் பெரும்பாலான விபத்துக்களைப் போல கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது. ஆகவே சம்பவத்தை எதிர்கொள்ளவோ,அதில் இருந்து யாரும் தப்பிக்க எண்ணுவதற்கோ துளியும் வாய்ப்பு இல்லை.
இந்த விபத்தில் ஒரு கைக்குழந்தை தப்பித்து விட்டது. காரை ஏற்றிக் கொலை செய்த சம்பவ இடத்தில் குழந்தை இல்லாததே இதற்கு காரணம்.
இதனை மாலை மலரும்,தினமணியும் சரியாகப் பதிவு செய்துள்ளன. தினமலரோ அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது கைக்குழந்தை என எழுதுகிறது.
பிற நாளிதழ்களோ,கர்ப்பிணிப்பெண் கார் தன் மீது மோத வருவதைக் கண்டு தனது கைக்குழந்தையைத் தூக்கி எறிந்து அவன் உயிரைக் காப்பாற்றினார் என உருக்கம் காட்டியுள்ளன.
இது குறித்து ஒவ்வொரு நாளிதழும் என்ன மாதிரி செய்தி வெளியிட்டிருக்கிறது என்று பார்ப்போம்.
வழக்கமாய் இது போன்ற கதைகளை உருவாக்குவதில் எக்ஸ்பர்ட்டான 'மாலை மலர்' இந்த முறை வாய்ப்பைத் தவறவிட்டு விட்டது.
மாலை மலர் |
தமிழ் முரசு |
'தமிழ் முரசோ' கர்ப்பிணிப்பெண் தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று துணிச்சலாய் தனது கைக்குழந்தையைத் தூக்கி காப்பாற்றினார் என்று திரைக்கதை வடிவமைத்துள்ளது.
மாலை நாளிதழ்களைப் பார்த்த காலை நாளிதழ்கள் என்ன செய்யும்..?
தினகரனும்,தினத்தந்தியும் அச்செய்தியை நகல் எடுத்து கர்ப்பினிப்பெண் காப்பாற்றிய குழந்தைக்கு கட்டம் கட்டி செய்தி வெளியிட்டுள்ளனர்.'தி இந்து' நாளிதழோ கொஞ்சம் மாற்றி இச் செய்திக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் ஒருவர் சொன்னதாய் வெளியிட்டுள்ளது.
தினத்தந்தி,தினமலர்,தினகரன்,தமிழ் முரசு உள்ளிட்டு அனைத்துப் பத்திரிகைகளும் உறக்கத்தில் தான் இந்த கொடூரம் நடந்ததாக கூறியுள்ளனர்.தலைப்பும் அப்படியே வைத்துள்ளனர்.
உறங்கிய பெண் எழுந்து குழந்தையைத் தூக்கி எறிந்தாரா என்ன..? அவ்வளவு நேரம் குடிகாரர்கள் காத்திருந்தனரா என்ன..?
தினமணி |
தினமலர் |
தினத்தந்தி |
தினகரன் |
தி இந்து |
சம்பவ இடத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தைப் பலரிடம் விசாரித்து நடந்தது என்ன என்பதை விசாரித்து,அதனை ஒன்றுக்கு பலமுறை யோசித்து அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து வெளியிடும் போக்கு துளியும் இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இந்த கொடூரமான சம்பவத்திலும் தாய்மை,பாசம்,செண்டிமென்ட் என இவர்களுக்கு உருக்கம் தேவைப்படுகிறது வணிக நோக்கத்தில்,அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும்.
இவர்கள் அனைவரும் நிருபர் வேலையை விட்டு விட்டு திரைக்கதை எழுதப்போனால் அங்கிருப்பவர்களுக்கு பிழைப்பு இல்லை என்பதால் தான் அதைச் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்.
***
தொடர்புடைய செய்தி
இது தொடர்பாக இன்னொரு செய்தி வெளியிட்டுள்ளது 'தி இந்து' நாளிதழ்.
அதில் இந்தச் சம்பவம் குறித்து அங்கிருந்த பலரிடம் கருத்து வாங்கி வெளியிட்டுள்ளது. விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கருத்து கூறியுள்ளனர்.அதில் ஒருவர் அங்குள்ள சாலை வசதி குறித்து குறை கூறியுள்ளார்.இது ஒரு பத்தி வருகிறது.அந்தக் கருத்தில் தவறும் இல்லை.
ஆனால் மூன்று பேரைக் காவு வாங்கிய சம்பவத்துக்கும் சாலை வசதிக் குறைபாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் சாலை வசதி சரி இல்லாததினால் தான் இந்த விபத்து நடந்தது என்று பொருள்படும் படி தலைப்பு வைத்துள்ளது தி இந்து.
யாரோ ஒரு 'அறிவுக்கொழுந்து' தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும். அவருக்கும் இத்தலைப்பைச் சரி பார்த்து ஒப்புதல் அளித்த இன்னொரு அறிவுக்கொழுந்துக்கும் கண்டிப்பாய் நல்ல சம்பளம் இருக்கும்.
தொடர்புடைய இணைப்புகள்
http://tamilmurasu.org/inner_tamil_news.asp?Nid=64300
http://www.dinamalar.com/news_detail.asp?id=1091339
http://www.dailythanthi.com/News/State/2014/10/13104716/Platform-Sleeping-3-killed-in-car-Arrested-drunk-driver.vpf
http://www.maalaimalar.com/2014/10/13111155/3-killed-in-car-collided-in-ve.html
No comments:
Post a Comment