புலனாய்வு இதழ்களை விமர்சனம் செய்யும் நமது புதிய பகுதி இது.
அன்றாட நாளிதழ்களைத் தாண்டி புதிய செய்திகளையும் புலனாய்வு செய்திகளையும்,விறுவிறு பின்னணிகளையும் தாங்கித் தருகிறார்கள் என்ற நம்பிக்கையில் காசு கொடுத்து புலனாய்வு இதழ்களை வாங்கும் வாசகனை மூடன் என்று நம்பி தங்கள் விருப்பத்திற்கு ஏற்பவும்,விருப்பு வெறுப்புக்கு ஏற்பவும் செய்தி வெளியிடுகிறார்கள் புலனாய்வு புடலங்காய் இதழ்கள்.அதனை சுட்டிக் காட்ட வேண்டியதும் நல்லவற்றைப் பாராட்ட வேண்டியதும் விமர்சனம் செய்வதும் நமது கடமை.
ஆகவே வாரம் ஒரு முறை புலனாய்வுவுவுவு இதழ்களை தோலை உரித்து தோரணம் கட்ட முடிவு செய்துள்ளோம்.
இனி ரெடி ஸ்டார்ட்...
இந்த மூன்று இதழ்களும் 23—4-2012 திங்கள் மாலைக்குள் இறுதி செய்யப்பட்டு அச்சுக்குச் சென்றுள்ளது.அதனை மனதில் வைத்து இந்தச் செய்திக் கட்டுரையைப் படியுங்கள்.
குமுதம் ரிப்போர்ட்டர்.
மதுரை பிரச்சனை,சேலம் பிரச்சனையைத் தொடர்ந்து மூன்றாவது இதழாக திமுக உட்கட்சி பிரச்சனையை அட்டைப் படக் கட்டுரையாகத் தாங்கி வந்துள்ளது.வழக்கம் போல் ஸ்டாலின் ஆதரவுச் செய்திகளும் யூகச்செய்திகளும் இதில் அதிகம் இடம் பெற்றுள்ளது.
இன்னொரு அட்டைப்படச் செய்தியாக தமிழ்நாடு,நெல்லையைச் சேர்ந்த சத்தீஸ்கர் மாவட்ட ஆட்சியரை மாவோயிஸ்டுகள் கடத்தியது இடம்பெற்றுள்ளது.இதனை திருநெல்வேலி செய்தியாளர் அ.துரைசாமி எழுதியுள்ளார். திங்களன்று காலை தினத்தந்தியில் வந்த செய்தியை வெட்டி ஒட்டி இடத்தை நிரப்பியிருக்கிறார்கள்.இதனை எந்த நாட்டில் இருந்தும் யாரும் செய்ய முடியும்.(அன்றைய தினத்தந்தியில் மிக நன்றாக கவர் செய்திருந்தார்கள்) மாவட்ட ஆட்சியரின் பேஸ்புக் பதிவு தொடர்பாக மனுஷ்யபுத்திரன் என்பவரின் பதிவு தொடர்பற்று நிற்கிறது. புதிதாக ஒரு தகவலும் இல்லை. இதற்கு திருநெல்வேலியிலிருந்து புடலங்காய் ரிப்போர்ட்டர் எதற்கு?
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை விசிட் தொடர்பாக இரா.முருகேசன் எடுத்துள்ள சுரேஷ் பிரேமசந்திரன் நேர்காணல்,ராணுவ வீரர் சுட்டுக் கொலை செய்த தில்சன் வழக்குத் தீர்ப்பு,மதுரை பொருளாளர் மிசா பாண்டியன் நேர்காணல் போன்றவை பரவாயில்லை ரகம்.
அக்னி சாட்சியில் அப்துல் கலாமின் அரசியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் என்பவர் எழுதிய என் பார்வை என் கோணம் பதிவாகியுள்ளது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகமான (DRDO) வில் நடைபெறும் ஊழலையும் .அதில் சொல்லியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.பரவாயில்லை போகட்டும்.
எம்.ஜி.ஆர்.இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவாக அவரது பெரிய படத்துடன் சாத்தூராரைச் சமாளிக்க மும்மூர்த்திகள் என்ற பதிவு எழுதப்பட்டுள்ளது.எழுதியவர் பெயர் இல்லை.ரிப்போர்ட்டர் டீம் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு மேட்டர் வந்துள்ளது.ஆட்சி மேலிடத்தின் கடைக்கண் பார்வைக்காக எழுதியிருப்பார்கள் என நினைக்கத் தோன்றுகிறது.டெஸ்க்கில் உட்கார்ந்து கொண்டே 5 நிமிடத்தில் செய்தி எழுத எதற்கு டீம் என்று தெரியவில்லை...?
உள்பக்க செய்தி
அதே ரிப்போர்ட்டர் கடைசி பக்கத்தில் உதயகுமாரின் முழுப்பக்க விளம்பரமும் வந்துள்ளது.இந்தச் செய்திக்கும் அதற்கும் தொடர்பு இருக்கிறது என்றோ இந்தக் கையில விளம்பரம் அந்தக்கையில் மேட்டர் என்றோ,ஆகவே இது பெய்டு மேட்டர் என்றோ நீங்களாகக் ”கற்பனை” செய்து கொண்டால் அதற்கு எங்களால் தடை விதிக்க முடியாது.
கடைசிப்பக்க விளம்பரம்
மொத்தத்தில் இந்த இதழ் ரிப்போர்ட்டர் வழக்கம் போல தான்.பெரிய முன்னேற்றமோ,பின்னடைவோ இல்லை.
நக்கீரன்
மிரட்டலுக்குப் பயந்து ரஜினி அழுதாரா? என்று அட்டையில் கவர்ச்சிப் பூச்சுடன் வியாபாரத்தை தொடங்கியுள்ளது. சென்ற வாரம் ஜூனியர் விகடன் இதே பிரச்சனையை வைத்துக் கல்லா கட்டிய பிறகு தாமதமாக இதனைக் கையில் எடுத்திருக்கிறது. ஆனால் வழக்கம் போல் உள்ளே ஒன்றும் இல்லை. ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தின் நஷ்டம் குறித்த ஊரறிந்த செய்தி இரண்டு பத்தி மட்டும் தான். ஜுனியர் விகடன் பேட்டியில் சுப்ரமணியம் சொன்னதுக்கு மறுப்புச் சொல்லும் விதமாக ரஜினியை மிரட்டவில்லை,ரஜினி அழவில்லை என்று இன்னொருவரின் மறுப்பை வாங்கி வெளியிட்டு அதனை அட்டையில் வைத்து கனஜோராக விற்பனையை நடத்தியுள்ளது.
சொன்னா நம்ப மாட்டீங்க என்னும் அரசியல் கிசுகிசு பகுதியில் அனைத்துக் கட்சிகள் பற்றியும் சில புரணிகள். எப்பொழுதுமே அதிர்ந்தும் பேசாத தயாளு அம்மாள் இப்பொழுது அழகிரிக்கு ஆதரவாக கருணாநிதியைத் திட்டித் தீர்த்தார் என்று மற்ற இதழ்களில் வந்த செய்தியை இதில் புலனாய்ந்து கூடுதலாக எழுதியிருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மு.க.ஸ்டாலின் இண்டெலக்சுவல் ரசிகர் மன்றத் தலைவரும் எழுத்தாளருமான சோலை தனது கட்டுரையில் வழக்கத்தை விடவும் அதிகம் போற்றிப் புகழ்ந்து எழுதியுள்ளார்.துதிபாடல் விண்ணைப் பிளக்கிறது.போதாக்குறைக்கு இவர்களின் நாறிப்போன வாரிசுச் சண்டைக்கு கிருஷ்ண தேவராயர் காலத்து உதாரணம் வேறு.
அடுத்ததாக உதயநிதியின் திரைப்பட வளர்ச்சி(!) பிடிக்காமல் அவரது திரைப்படத்தின் திருட்டு சிடியை அதிமுக,அழகிரி திமுக,மதுரையில் வழங்குகின்றார்கள் என்று இரண்டு பக்க மேட்டரும் வந்துள்ளது.முடியல...சென்னை மண்டலத்தில் கிண்டி டூ தாம்பரம் என்ற பிரகாஷின் ராத்திரி ரவுண்ட் அப் பரவாயில்லை ரகம்.
சட்டிஸ்கரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் கடத்தல் செய்தியும் நிஜமான ரோஜா படக்கதை என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.வழக்கம் போல் திங்களன்று வெளிவந்த நாளிதழ் செய்தியை வைத்து மேட்டர் முடிக்கப் பட்டுள்ளது.ஆனாலும் சட்டீஸ்கரில் இருக்கும் நமது சோர்ஸ்களை விசாரித்து எழுதினோம் என்ற பில்ட் அப்பை படித்தால் எப்ப தான் இவர்கள் திருந்துவார்களோ! என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நக்கீரனில் பாராட்டும்படியான செய்தி எதுவும் இல்லையா? என்று உங்களின் கேள்விக்கு ஒரு ஆறுதல் செய்தி இருக்கிறது.
போர்க்குற்றங்கள் குறித்து இந்தியக்குழு எதுவும் பேசவில்லை என்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரின் ஒப்புதல் நேர்காணலைப் பாராட்டலாம்.இதனை தலைமை நிருபர் ஆர்.இளைய செல்வன் செய்துள்ளார்.
மற்றபடி என்னத்தச் சொல்ல..?
ஜூனியர் விகடன்.
வழக்கம் போல திமுக தான் கவர் ஸ்டோரி.வாரிசுச் சண்டையை சுவாரசியமாகவும் படிக்கும் படியும் எழுதியிருக்கிறார்கள்.கொஞ்சம் பொறுமையா இருப்பா என்று ஸ்டாலினிடம் கருணாநிதி சொன்னதை அருகில் இருந்து கேட்டு எழுதிய கழுகாரின் புலனாய்ய்ய்வு நம்மைப் புல்லரிக்க வைக்கிறது.காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் பற்றிய செய்தியையும் தங்களுக்குத் தெரிந்த அளவில் பதிவு செய்திருக்கிறார்கள்.
கழுகார் பதில்கள் வழக்கம் போல் ரசிக்கும் படியாகவும் காட்டமாகவும் இருக்கின்றன. ஆ.ராசாவுக்கு திமுக அமைச்சர் பதவி கொடுத்தது,காங்கிரஸ் கொடுத்ததா?என்று சிதம்பரத்துக்கு எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளார் கழுகார்.
ஆனால் சாதியக்கட்டுமானங்கள் வலுவாய் இருந்த 58 ஆண்டுகளுக்கு முன்பே பழைய காங்கிரஸ் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பரமேசுவரன் தமிழ்நாட்டில் அறநிலையத்துறை,போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.
மரியாதைக்குரிய கக்கன்
உள்துறை,மின்துறை அமைச்சராக கக்கன் பதவி வகித்துள்ளார்.இது இப்பொழுது கூட யாராலும் நடைமுறைப்படுத்த முடியாதது ஏன் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் கக்கன் இருந்துள்ளார்.சோனியா காங்கிரசின் மீதுள்ள கடுப்பில் பழைய வரலாற்றை கழுகார் மறந்து விட்டார் போலும். இது சோனியா காங்கிரஸ் அது காமராஜர் காலத்து காங்கிரஸ் என்று விளக்கமும் சொல்லலாம்.
கோவில்பட்டி அருகில் உள்ள தென்காசி தொகுதியைச் சேர்ந்த அருணாசலம் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமைச்சராகப் பதவி வகித்தது கழுகாருக்குத் தெரியாமல் இருந்தது மிகப்பெரிய ஆச்சரியம்.
வாங்க கலப்பட டீ சாப்பிடலாம் என்று உடல்நல அக்கறையுடன் எழுதப்பட்ட டி.எல்.சஞ்சீவிகுமாரின் செய்திப்பதிவு நன்றாக இருக்கிறது.பாராட்டுவோம்.ஆனால் ஒரு செய்திப்பிழையும் இருக்கிறது.40 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பி.எச்.டேனியல் எழுதிய நூலின் பெயர் எரியும் பனிக்காடு என்று இருக்கிறது.பி.எச்.டேனியல் எழுதிய நூலின் பெயர் Red tea அதனைத் தமிழில் எரியும் பனிக்காடு என்று மொழி பெயர்த்தவர் இரா.முருகவேள்.அதில் தான் மேற்குறிப்பிட்ட வாசகம் சரியாக வருகிறது.சஞ்சீவிகுமார் மொழிபெயர்ப்பு நூலினையே படித்திருக்க வாய்ப்புண்டு.இதனைச் சரி செய்திருக்கலாம்.ஆனாலும் பரவாயில்லை.
எஸ்.ராமகிருஷ்ணன் தனது பதிவில் இந்தவாரம் தமிழ்நாட்டில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை நன்கு பதிவு செய்துள்ளார்.ராமஜெயம் கொலை பற்றிய பாலோ அப்,சீமான் நேர்காணல்,விஜயகாந்த் சுற்றுப்பயண செய்தி ஆகியவை பரவாயில்லை.
ந.வினோத்குமாரின்,உயிரைக் கொடுத்த பத்திரிகையாளர் என்ற பாகிஸ்தான் செய்தி ஆசிரியர் பற்றிய மரணப்பதிவு இதுவரை எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் வெளிவரவில்லை.பாராட்டுக்கள்.அதனைப் போல முல்லை பெரியாறு பிரச்னையில் துளைகளை முட விடாமல் சதி என்ற செய்தியும் எதிலும் வரவில்லை.
மாவோயிஸ்டுகள் கடத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த சுக்மா மாவட்ட ஆட்சியர் பற்றிய பதிவினை 3 நிருபர்கள் இணைந்து எழுதியுள்ளனர்.பிற இதழ்களுக்குப் பரவாயில்லை.விரட்டும் ஜெ.கிடைக்காத ஜாமீன் என்ற ராவணன்,திவாகரன்,நடராஜன் மீதான வழக்கு அலசலும் ஓ.கே.ஆனால்ம் ராணுவ வீரர் தில்சன் கொலை வழக்குத் தீர்ப்பு பற்றிய பதிவு இல்லாதது ஏமாற்றமே..!
மொத்தத்தில் சிற்சில குறைகள் இருந்தாலும் ஜுனியர் விகடனை 10 ரூபாய் காசு கொடுத்து வாங்கியதற்கு வருத்தப் பட வேண்டியதில்லை.
4 comments:
ஸ்டாலினுக்கு புரமோஷன், அன்பழகனுக்கு டாட்டா என்றது ரிப்போர்டரின் நூறு சதவித பொய் இல்லையா? ரஜினி அழுத கதையை முன்னமே எங்கேயோ வாசித்தாயிற்று. ஜூவி ஓகே.. ஓகே தான்.
நக்கீரனுக்கு 26 மதிப்பெண்ணா???? இது அதிகமா தெரியலை. ஜூவி மட்டும் தான் காசு கொடுத்து வாங்கலாம் போல இருக்கு, எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு அதுக்கு காரணம். எப்பபொழுதாவது ரிப்போர்ட்டர்.
Spr pathivu.
இணையத்தில் எதிலுமே பார்க்கமுடியாது இப்படி ஒரு அலசல்.அருமை அருமை...தொடரவும்...
Post a Comment