Sunday, 2 March 2014

புலனாய்வு புரோக்கர்கள்...!ரகு மணியன் சில வாரங்களுக்கு முன்பு மாட்டுத்தரகர் போல நடந்து கொள்கிறார் என்று விஜயகாந்தை குற்றம் சாட்டினார். அவர் தவறாக உருவகம் செய்து விட்டார் என்பது தான் நம் கருத்து. 

ஏனென்றால் மாட்டின் சொந்தக்காரர் விஜயகாந்த்.அவர் தரகராக முடியாது.அந்த மாட்டைத் தனது பா.ஜ.க.முதலாளிக்காய் விலைக்கு வாங்கும் தரகர்கள் நிறைய நபர்கள் தமிழ்நாட்டில் உண்டு.

ஒருவர் தமிழருவி மணியன். இதழ் வடிவில் ஜூனியர் விகடன்,தினமலர், தினமணி,குமுதம் ரிப்போர்ட்டர்,தொலைக்காட்சி வடிவில் தந்தி டிவி,புதிய தலைமுறை,பாலிமர் ஆகியன இதர தரகர்கள்.

இதில் ஜூனியர் விகடனின் வசீகரம் முதன்மையானது,தொழில் நேர்த்தியானது என்பது ந்ம் கருத்து.

தரகு மணியன் கடந்த சில நாட்களாய் ஒதுங்கியிருக்க, த‌னது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாய் தொடர்ந்து விஜயகாந்தை பா.ஜ.க.அணிக்கு கொண்டு வரும் தரகு வேலையில் இதர தரகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தப் பதிவில் நாம் புலனாய்வு என்று சொல்லிக் கொண்டு தரகு வேலை பார்க்கும் நக்கீரன்,ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர் ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம். 

ஜூனியர் விகடன் சனிக்கிழமையன்று வெளிவந்த இதழில் அது வெளியிட்ட செய்தி தான் இது.ஒரு முறை படித்து விடுங்கள்.
பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கான பேச்சுவார்த்தை இறுதிக்​கட்​டத்​தை எட்டுவதற்கான சூழ்நிலை ஏற்​பட்​டுள்ளது''- என்ற பீடிகையுடன் உள்ளே வந்தார் கழுகார்.

 ''அப்படி முடிந்தால் பி.ஜே.பி-க்கு அது பெரிய சாதனைதான்!'' என்றோம். தலையாட்டியபடியே ஆரம்பித்தார் கழுகார்.

''டிசம்பர் 2-ம் தேதி பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகளை பி.ஜே.பி. தொடங்கியது. இப்போதுதான் அது லேசாக கனிய ஆரம்பித்​துள்ளது என்கிறார்கள். சிங்கப்பூர் செல்லும் முன், பி.ஜே.பி. பிரமுகர்கள் விஜயகாந்த்தைச் சந்திக்க முயற்சித்துள்ளார்கள். அப்போது, 'அனைத்தையும் சுதீஷிடம் சொல்லியிருக்கிறேன். அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிச் சென்றாராம் விஜயகாந்த். 'அகில இந்தியத் தலைமை விரைவில் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 

தமிழகத்தில் போட்டியிடும் பி.ஜே.பி. வேட்பாளர்களில் ஒரு சிலர் பெயராவது அதில் இடம்பெற வேண்டும். நீங்கள் உறுதியாகச் சொன்னால்தான், அதன் அடிப்படையில் எங்களால் முடிவு செய்ய முடியும்’ என்று பி.ஜே.பி. பிரமுகர் சொல்லியிருக்கிறார். 'நிச்சயமாக இரண்டு, மூன்று நாட்களில் உங்களுக்கு நல்ல முடிவு சொல்வோம்’ என்று சொல்லிச் சென்றுள்ளார் விஜயகாந்த். இதைத் தொடர்ந்து பி.ஜே.பி. பிரமுகர்கள் சுதீஷைச் சந்தித்தார்கள்!''

''என்ன பேசப்பட்டதாம்?''

நேரடியாக விஷயத்துக்கு வந்தாராம் சுதீஷ். 'எத்தனை சீட் தருவீர்கள்?’ என்பதுதான் அவரது கேள்வி. 'எங்களால் 12 சீட் கொடுக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்கள் இவர்கள். 'இந்த எண்ணிக்கை மிகக் குறைவு’ என்றாராம் சுதீஷ். 'ம.தி.மு.க., பா.ம.க., ஆகிய கட்சிகளுக்கு சீட் ஒதுக்க வேண்டும். பி.ஜே.பி-யும் கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும். இவை போக கொங்கு கட்சி, பச்சமுத்து ஆகியோருக்கும் இடம் ஒதுக்க வேண்டும். எனவே 12-க்கு மேல் ஒதுக்க இயலாது’ என்று சொல்லியிருக்கிறார்கள் இவர்கள். 'இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும்போது நாங்கள் 19 சீட் கேட்டோம். ஆனால், இத்தனை கட்சி இந்தக் கூட்டணிக்கு வருவதால் நாங்கள் இறங்கி வந்து 16 இடங்கள் கேட்கிறோம். 16 இடங்கள் தருவதாக இப்போது சொன்னால் உடனே, கூட்டணி உறுதியானது என்று டி.வி-யில் ஸ்குரோல் விடுவதற்கு நாங்கள் தயார்’ என்றாராம். 'சிறு கட்சிகள் சில நம் கூட்டணிக்கு வர இருக்கின்றன. அவர்களுக்கு ஐந்து இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீதம் இருப்பது 35 இடங்கள்தான். அதனைத்தான் பி.ஜே.பி., தே.மு.தி.க., ம.தி.மு.க, பா.ம.க. ஆகிய நான்கு கட்சிகளும் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்று இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 'யார் யார் இந்தக் கூட்டணிக்கு வருகிறார்கள் என்பதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு 16 இடங்கள் வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் சுதீஷ். 'எங்களால் 12 இடங்கள்தான் தர முடியும், ஒருவேளை பா.ம.க. வராவிட்டால் 14 இடங்களைத் தரலாம்’ என்று சொல்லியிருக்கிறது பி.ஜே.பி. தரப்பு!''

''ஏன்... பா.ம.க-வுக்கு என்ன?''

தே.மு.தி.க-வும் பா.ம.க-வும் ஒரே கூட்டணியில் இருப்பது குறித்து சிக்கல் இருப்பதை நான் ஏற்கெனவே உமக்குச் சொல்லி​யிருக்கிறேன். 'விஜயகாந்த் வேண்டாம்’ என்று ராமதாஸ் சொல்லிவருவதாக நீரே அட்டையில் போட்டு இருந்தீர் அல்லவா? அதில் ராமதாஸ் பிடிவாதமாக இருந்தார். ஆனால், அன்புமணிதான், 'பரவாயில்லை, பி.ஜே.பி. கூட்டணியில் சேருவோம்’ என்று சொல்லிவந்தார். உடன்பாடு இல்லாவிட்டாலும் அன்புமணி சொல்கிறாரே என்பதற்காக சம்மதித்தார். 'ஆனால் நம்முடைய மரியாதை குறையக் கூடாது, ஏற்கெனவே நாம் அறிவித்த தொகுதிகளை அப்படியே கொடுத்துவிட வேண்டும். மேலும் நம்முடைய சமூக ஜனநாயகக் கூட்டணியையும் இந்தக் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கட்சிகளுக்கு நான்கு இடங்கள் தர வேண்டும்’ என்று சொல்லிவந்தார். சமூக ஜனநாயக் கூட்டணியில் உள்ள கட்சிகளை பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ப்பது குறித்து இப்போது பேச வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே கழற்றிவிட்டுவிட்டது பி.ஜே.பி. 

அந்தக் கட்சிகளுக்கு உண்மையிலேயே செல்வாக்கு இருந்தால்கூட அவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு இடங்கள் இல்லை என்று பி.ஜே.பி. சொன்னது. இந்த அடிப்படையில் பா.ம.க-வுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. 'நாங்கள் அறிவித்த 10 தொகுதிகளை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். கூடுதலாக அன்புமணிக்கு தருமபுரியைத் தாருங்கள். மொத்தம் 11 தொகுதிகள் வேண்டும்’ என்று பா.ம.க. சொன்னது. 'அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட 10 தொகுதிகள்தான் வேண்டும் என்று சொல்வது சரியானது அல்ல. நீங்கள் அறிவித்ததில் சேலம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மூன்று தொகுதிகள் எங்களுக்கே வேண்டும்’ என்று பி.ஜே.பி. சொன்னது. தே.மு.தி.க. கொடுத்த பட்டியலில் பா.ம.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஆரணி, கடலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஐந்து தொகுதிகள் இடம் பெற்றுள்ளனவாம். புதுச்சேரியில் பா.ம.க. வேட்பாளரை நியமித்துள்ளது. ஆனால், அங்கு என்.ஆர். காங்கிரஸுடன் பி.ஜே.பி-யினர் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்கள். அந்தத் தொகுதியை என்.ஆர். காங்கிரஸுக்குத் தர வேண்டும் என்று பி.ஜே.பி. நினைக்கிறது. 

இந்த அடிப்படையில் பார்த்தால், பா.ம.க-வுக்கு தருமபுரி ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதியுமே சிக்கலாக இருந்தது. இதற்கு மத்தியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராமதாஸ், 'ஒரு வேட்பாளரைக்கூட வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை’ என்று சொன்னார். அது பி.ஜே.பி-யை பின்வாங்க வைத்தது. அவரிடம் பேச்சுவார்த்தையை அப்படியே நிறுத்திவைத்திருந்தார்கள். விஜயகாந்த் தன்னுடைய முடிவைச் சொன்ன பிறகு அடுத்த ஸ்டெப்பை பா.ம.க-வை நோக்கி வைக்கலாம் என்று அமைதியாக இருந்தார்கள் பி.ஜே.பி-யினர்!''''அடுத்து என்ன நடந்தது?''

''இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் அன்புமணியை பி.ஜே.பி. தரப்பில் தொடர்பு கொண்டு பேசினார்கள். 'நீங்கள் எவ்வளவு தருவதாக இருக்கிறீர்கள்?’ என்று அன்புமணி கேட்டுள்ளார். 'எட்டு தொகுதிகளை பா.ம.க-வுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்று சொல்லியிருக்கிறது இந்தத் தரப்பு. 'சிங்கிள் டிஜிட்தான் தருவீர்கள் என்றால் பேசிப் பயனில்லை. டபுள் டிஜிட் தருவதாகச் சொன்னால்தான், பேச்சுவார்த்தையைத் தொடரலாம்’ என்று அன்புமணி சொல்லியிருக்கிறார். 'எங்களுக்கு எட்டு சீட் என்றால் மற்றவர்களுக்கு எத்தனை தரப்போகிறீர்கள்?’ என்று அன்புமணி கேட்க, 'இதை நீங்கள் ஒப்புக் கொண்டால்தான் மற்றவர்களிடம் பேச முடியும்’ என்று சொல்லியது பி.ஜே.பி. தரப்பு. 'கறாராக ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன், பா.ம.க-வுக்கு 10 தொகுதிகள், எங்கள் கூட்டணியில் இப்போது இருக்கும் பி.டி.அரசகுமாருக்கு ஒரு தொகுதி, கொங்கு  நாகராஜனுக்கு ஒரு தொகுதி. ஆக மொத்தம் 12 தொகுதிகளைக் கொடுத்துவிடுங்கள்’ என்று அன்புமணி தனது பக்கத்தைத் தெளிவு படுத்தினாராம். 'அரசகுமார், நாகராஜனுக்கு தொகுதிகள் ஒதுக்க இயலாது’ என்று பி.ஜே.பி. சொல்லிவிட்டது. அதற்கு இரண்டு காரணங்களைச் சொன்னார்களாம். 'அரச​குமார் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது, நாகராஜனை சேர்ப்பதற்கு எங்களது கூட்டணியில் இருக்கும் கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். எங்களுக்கு ஈஸ்வரன் முக்கியம்’ என்று இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 'அரசகுமார் மீது வழக்கு இருக்கிறது என்றால், யார் மீதுதான் வழக்கு இல்லை? அத்வானி மீதும்தான் வழக்கு இருக்கிறது’ என்று பா.ம.க. தரப்பு கேட்டதாகவும், அதுவே பி.ஜே.பி-யை வருத்தப்பட வைத்ததாகவும் சொல்கிறார்கள். 'அத்வானி மீது இருப்பது அரசியல் வழக்கு, அரசகுமார் மீது இருப்பது சீட்டிங் வழக்கு, இரண்டும் ஒன்றா?’ என்று கேட்கிறது பி.ஜே.பி. தொகுதி பிரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இப்படி ஹீட் விவாதங்களாக மாறியது!''

''அப்புறம்?''

''அப்புறம் என்ன? முறிவுதான்! பொன்.ராதாகிருஷ்ணனும் அன்புமணியும் நேரடியாகச் சந்தித்துப் பேசுவது என்று முடிவானது. ஆனால், அதற்கு அன்புமணி உடன்படவில்லை. 'பி.ஜே.பி-யுடன் கூட்டணி வேண்டாம் என்று காடுவெட்டி குரு சொல்கிறார். குரு சொல்வதை மீறி ராமதாஸ் செய்ய மாட்டார். ஆனால் அன்புமணியோ, பி.ஜே.பி. கூட்டணி வேண்டும் என்கிறார். அன்புமணியின் ஆசைக்காக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கிறதே தவிர, மற்றபடி உங்களோடு அணி சேர மாட்டார்கள்’ என்ற தகவல் பி.ஜே.பி. தரப்புக்குப் போனது. 'அவர்கள் எதற்காக வேண்டுமானாலும் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தட்டும்,. எங்களைப் பொறுத்தவரையில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளும் எங்கள் அணியில் இருக்க வேண்டும், இருந்தால், அது பலமான அணியாக அமையும் என்று நினைக்கிறோம். அதற்காகத்தான் இந்த ஃபார்முலாவைப் போட்டு டெல்லித் தலைமையிடம் ஒப்புதல் வாங்கினோம். பா.ம.க.-வுக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ அங்குள்ள அனைத்துத் தொகுதிகளையும் கேட்கிறார்கள். அதனால், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு என்ன பயன்? ஏதாவது ஒன்றிரண்டு தொகுதிகளையாவது மற்ற கட்சிகளுக்கு தர அவர்கள் தயாராக இருந்தால்தானே நல்லது’ என்று பி.ஜே.பி. சொல்லி வந்தது. இறுதியாக கடந்த செவ்வாய்கிழமை இரவு மீண்டும் அன்புமணியை பி.ஜே.பி. பிரமுகர் ஒருவர் சந்தித்தார். 'எங்களது இறுதி முடிவு’ என்று சில விஷயங்களைச் சொல்லிவிட்டார்!''

''அது என்ன?''

''எட்டு தொகுதிகள்தான் பா.ம.க-வுக்கு. சேலத்தையும் கிருஷ்ணகிரியையும் பி.ஜே.பி-க்குத் தர வேண்டும். இந்த இரண்டு தொகுதிகளைத் தராவிட்டால், இதில் ஏதாவது ஒன்றைத் தாருங்கள். நீங்கள் அறிவித்துள்ள தொகுதிகளில் திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தே.மு.தி.க-வுக்குத் தாருங்கள். புதுச்சேரியை என்.ஆர். காங்கிரஸுக்குத் தாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். 'ஒரு தொகுதிகூட வாபஸ் வாங்க முடியாது. நாங்கள் சுவற்றில் எழுதிவிட்டோம். பிரசாரம் தொடங்கிவிட்டோம் அதனால் சாத்தியம் இல்லை’ என்று அன்புமணி சொன்னார். 'தொகுதியையும் வேட்பாளரையும் அறிவித்துவிட்டு, கூட்டணி பேசும் முறையே சரியில்லையே’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள் பி.ஜே.பி. ஆட்கள்.''

''முறிந்ததா... தொடர்கிறதா?''

''இந்தப் பேச்சுவார்த்தைக் காட்சிகளை காங்கிரஸ் உன்னிப்பாக கவனித்துவந்தது. குலாம்நபி ஆசாத்தும் அகமது படேலும் அன்புமணிக்கு எப்போதும் நண்பர்கள். அதனால், ஆசாத் அந்த நேரத்துக்காகத்தான் காத்திருந்தார். அன்புமணியிடம் பேசலாமா என்று கேட்டுள்ளார். அன்புமணி, தனது மாமனாரும் ஆரணி தொகுதி எம்.பி-யும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமியுடன் டெல்லி பறந்துவிட்டார். அநேகமாக அகமது படேலைப் பார்த்து பேசுவதற்காகப் போனதாகச் சொல்லப்படுகிறது. 'நண்பர் ஒருவரது வீட்டுத் திருமணத்துக்குத்தான் போய் வந்தோம்’ என்று அன்புமணி சொல்லி வருகிறாராம்!''

''இறுதியாக தே.மு.தி.க-வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?''''13, 14, 15 ஆகிய மூன்றுக்கு இடையில் தான் இழுபறி இருக்கிறது. ஆனால், பி.ஜே.பி. ஒரு கணக்கைப் போட்டு வைத்துள்ளது. தே.மு.தி.க-வுக்கு 12 இடங்கள், பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள், இதனைக் கூட்டினால் 36 தொகுதிகள் ஓவர். மீதமுள்ள நான்கு தொகுதிகளை ஈஸ்வரன், பச்சமுத்து, புதுவை என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுக்கு ஒதுக்கத் திட்டம். ஒரு தொகுதி தலித் கட்சி ஒன்றுக்கு வழங்கத் திட்டம். இந்தக் கணக்கை எடுத்துக் கொண்டு டெல்லிக்கு பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகியோர் சென்றுவிட்டனர். டெல்லியில் நடக்கும் பி.ஜே.பி-யின் பார்லிமென்ட் போர்டு மீட்டிங்கில் எடுக்கப்படும் முடிவின்படி வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம். தமிழக மூவர் குழு ராஜ்நாத் சிங்கை சந்தித்து இந்தப் பட்டியலைத் தர இருக்கிறார்கள்.

 இரண்டு மூன்று நாட்களுக்குள் தே.மு.தி.க., பா.ம.க. ஆகியவை முடிவைச் சொல்லாவிட்டால் பி.ஜே.பி-யும் ம.தி.மு.க-வும் மற்ற கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கான தொகுதிகளை மட்டும் அறிவித்துவிட்டு, தேர்தல் பணிகளில்  இறங்கத் திட்டமிட்டுள்ளார்களாம். இப்படி இவர்கள் கிளம்புகிறார்கள் என்று தெரிந்ததும் பதற்றமான சுதீஷ§ம் அன்புமணியும் பி.ஜே.பி. குழுவிடம் வலியப் பேசியிருக்கிறார்களாம்!''

''ஆனால், 'எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை’ என்று தே.மு.தி.க-வின் கொள்கை​பரப்புச் செயலாளர் சந்திரகுமார் அறிவித்துள்ளாரே?''

''ஓஹோ! அப்படியா? அது உண்மையானால், பி.ஜே.பி-யினரின் ஃபேஸ்புக்கில், '272 இடங்களில் நாங்கள் ஜெயிப்போம்’ என்ற செய்திக்கு அவர் எதற்காக லைக் கொடுத்தாராம். இன்னொன்றையும் சந்திரகுமார் சொல்லியிருக்கிறார். 'தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான், கூட்டணியை முடிவு செய்வோம்’ என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் ஒரு லாஜிக் வைத்துள்ளார்கள். 'நாம் இப்போதே கூட்டணியை அறிவித்துவிட்டால், நம்மை அவமானப்படுத்த நினைக்கும் ஜெயலலிதா இதனைப் பயன்படுத்திக்கொள்வார். உடனடியாக தே.மு.தி.க-வின் எம்.எல்.ஏ-க்களை உடைக்கப் பார்ப்பார். எனவே, தேர்தல் தேதியை அறிவித்த பிறகு கூட்டணியை அறிவித்துக்கொள்ளலாம்’ என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அதனால்தான், அவர் முடிவுகளை அறிவிக்காமல் இழுக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அவர் சொல்வது சரி என்று நினைப்பது மாதிரியே தே.மு.தி.க. வேட்பாளர் அருண் சுப்பிரமணியன் 27-ம் தேதி அன்று மதியம் முதல்வரைச் சென்று சந்தித்துள்ளார். அருண் சுப்பிரமணியன் மீது வழக்குப் போட்டு ஓட ஓட விரட்டினதும் தமிழக போலீஸ்தான். ஆனால், அரசியல்!''//
***

( //''டிசம்பர் 2-ம் தேதி பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகளை பி.ஜே.பி. தொடங்கியது. இப்போதுதான் அது லேசாக கனிய ஆரம்பித்துள்ளது என்கிறார்கள். //
இது ஆரம்ப பத்தியில் வந்துள்ள‌து..இப்பொழுது தான் லேசாக கனிய ஆரம்பித்துள்ள‌து என்றால் கடந்த மூன்று மாதமாய் எழுதிய‌தெல்லாம் இட்டுக்கட்டப்பட்டதுன்னு நீங்களே ஒப்புக் கொள்கின்றீர்களா..? லேசாக கனிவதற்காய் இதுவரை மலைபோல் எழுதிய செய்திகள் எங்கள் காசிலா..?


ந்த இதழில் இடம்பெற்ற பா.ஜ.க.,தே.மு.தி.க.,பா.ம.க.,என அனைத்துத் தகவலையும் பார்த்தீர்களானால் பா.ஜ.க.அலுவலக வட்டாரத்துத் தகவலாகத் தான் இருக்கும்.பொன்னாரின் செய்தி தொடர்பாளரோ இல்லை ஒரு அல்லக்கையோ ஜூ.வி.நிருபரிடம் வாந்தி எடுத்ததை அப்படியே ஜூவி இதழில் நமக்குப் பரிமாறி இருக்கிறார்கள்.அங்கங்கே மானே,தேனே கூடப் போடவில்லை.தே.மு.தி.க.,கொறடா சந்திரகுமார் முகநூலில் லைக் போட்டது( ! ) மட்டும் தான் ஜூவி புலனாய்வு செய்ததில் புதிய செய்தி.

இந்த வாந்தி செய்திகள் தினந்தோறும் தினமலர்,தினத்தந்தி,மாலைமலர்  தேர்தல் களத்திலும் அப்படியே வெளிவருகிறது.கூட்டணி விரைவில் இறுதியாகும்.அறிவிப்பு வெளியாகும் என தினசரி இதழ்களில் வெளியிட்டு வருகிறார்கள்..

இதைத்தான் ஜூனியர் விகடனும் வெளியிட்டு வருகிற‌து.

இதற்கு எதற்கு ஜூனியர் விகடனைப் படிக்க வேண்டும்.? 

ஆனால் பா.ம.க.வுக்கு 8,தே.மு.தி.க.வுக்கு 12 என கறார் காட்டிய கமலாலய வட்டாரம் சொன்னதை நமக்குச் சொன்ன ஆசிரியர்,  வைகோவுக்கு 6 தொகுதிகள் தான் எனச் சொல்லியதை நம் ஜூனியர் விகடன் ஆசிரியர் மறைத்து விட்டார்.

சரி கிடக்கட்டும்.

இப்படியாக ஜூனியர் விகடனின் தரகு வேலை கொஞ்சம் சிரமத்துடன் தொடர்கிறது.
ஜூனியர் விகடன் பா.ஜ.க.கூட்டணியில் தே.மு.தி.க.,கட்சியைச் சேர்க்க தரகு வேலை பார்க்கிறது என்றால் நக்கீரனோ தனது  தி.மு.க.கூட்டணியில் காங்கிரசைச் சேர்க்கத் தொட‌ர்ந்து தரகுப் பணியைச் செய்கிறது.

அது நடப்பு இதழில் வெளியிட்ட செய்தி தான் இது.

// தி.மு.க.தரப்பில் என்ன நடக்குதுன்னு சொல்லுப்பா..?

கூட்டணிக்குள் மறுபடியும் நுழைஞ்சிடணும்னு கனிமொழி, தயாநிதி இவங்க மூலமா தி.மு.க கதவைத் தட்டிய காங்கிரசுக்கு கலைஞர்கிட்டேயிருந்து சரியான ரிப்ளை வராததால, சாட்சிக்காரங்க காலிலே விழுறதைவிட சண்டைக்காரர் காலிலேயே விழுந்திடலாம்னு நினைச்சி, கூட்டணிக்குத் தடை போடும் மு.க.ஸ்டாலின்கிட்டேயே பேச காங்கிரஸ் மேலிடம் முயற்சி செய்வதா போன முறை பேசிக்கிட்டோமே.. யார் மூலமா பேசினாங்களாம்?''

""டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரிச்சேங்க தலைவரே.. சோனியா, அகமது பட்டேல் இவங்களெல்லாம் ஆலோசிச்சி, நீலகிரி தொகுதி முன்னாள் எம்.பி. பிரபுவை பேச வச்சிருக்காங்க. ராஜீவ்காந்தியோட நண்பரான பிரபு, சோனியாகாந்திக்கு நம்பகமானவரு. அவர்கிட்டே போனில் பேசக்கூடிய ஒரு சில காங்கிரஸ் பிரமுகர்களில் பிரபுவும் ஒருத்தர். அவர்கிட்டே காங்கிரஸ் மேலிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைச்சப்ப, ஸ்டாலின் எனக்கு நல்ல நண்பர்தான். அவங்க கட்சிக்காரங்களுக்கு எங்க காலேஜில் சீட் கொடுக்கச் சொல்லி சிபாரிசு செய்தாருன்னா உடனே ஓ.கே. பண்ணிடுவேன். அதையும் தாண்டி எங்களுக்குள் நல்ல நட்புறவு உண்டு. நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிப் பேசிடுறேன்னு பிரபு சொல்லியிருக்காரு. சொன்ன மாதிரியே, ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு ஸ்டாலினை வீட்டில் சந்திச்சி பிரபு பேசியிருக்காரு. ஸ்டாலின் மருமகன் சபரீசனும் இருந்திருக்காரு.''

""கூட்டணி முடிவாயிடிச்சா?''

""காங்கிரஸ் மேலிடத்தோட ஆசையையெல்லாம் ஸ்டாலின்கிட்டே சொன்ன பிரபு, தமிழ்நாட்டில் தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கூட்டணி அமைஞ்சா அதுதான் வெற்றிக்கூட்டணியா இருக்கும். எனக்கு தனிப்பட்ட முறையில் ஜெ.வின் அரசியல் பிடிக்காது. அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி இருந்தப்பவே தேர்தல் பிரச்சாரத்தில் அவரோடு எனக்கு மோதல்தான். நானும், எங்க தலைமையும் தி.மு.க கூட்டணியைத்தான் விரும்புறோம்னும் சொல்லியிருக்காரு. எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட ஸ்டாலின், 2ஜி விவகாரத்துல தி.மு.கவை காங்கிரஸ் களங்கப்படுத்திடிச்சி. 

இலங்கைப்பிரச்சினையில் நீங்க செஞ்ச தவறுகளெல்லாம் தி.மு.க மேலே பழியா விழுந்து எங்களுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்குது. இப்படிப்பட்ட நிலையில, மறுபடியும் கூட்டணி அமைஞ்சா அதை மக்கள்கிட்டே எடுபடும்னு எனக்குத் தோணலைன்னு சொல்லியிருக்காரு.''

""சரியான பாயிண்ட்டுதான்… அதுக்கு பிரபுகிட்டே ஏதாவது பதில் இருந்துச்சா?''

""இதெல்லாம் மேலிடத்துப் பிரச்சினையாச்சே.. அதனால, சோனியாவுக்கே போன் போட்டு, ஸ்டாலினோட கேள்விகளைப் பற்றி சொல்லிட்டு, ஸ்டாலின்கிட்டேயே போனைக் கொடுத்துட்டாரு பிரபு. கலைஞரோட உடல்நலத்தையும் ஸ்டாலினோட உடல்நலத்தையும் விசாரிச்ச சோனியா, கட்சிக்காக ஸ்டாலின் ஒவ்வொரு ஊரா சளைக்காம டூர் போறது பற்றிக் கேள்விப்பட்டதா சொல்லி பாராட்டியிருக்காரு. 

பிரபுகிட்டே ஸ்டாலின் வச்ச கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், சில விஷயங்கள் எனக்கே தெரியாம நடந்திருக்கலாம். அதுக்காக வருத்தம் தெரிவிச்சிக்கிறேன். நேரில் விளக்குறதுக்கு ராகுலை அனுப்பி வைக்கிறேன். சரி பண்ணிடலாம். நம்ம கூட்டணிக்குள்ளே மற்ற கட்சிகளும் வரும். ஸ்ட்ராங்கான கூட்டணி யை அமைச்சிடலாம்னு சோனியா சொல்லியிருக்கிறார். எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட ஸ்டாலின், நான் அப்பாகிட்டே பேசிட்டு சொல்றேன்னு மட்டும் சொல்லியிருக்காரு. சோனியா பேசியதில் ஸ்டாலினுக்கு ரொம்ப சந்தோஷமாம்.''

""எமர்ஜென்சி காலத்துக்குப்பிறகு தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி அமைச்சப்ப, கடற்கரைப் பொதுக்கூட்டத்திலேயே இந்திராகாந்தி ஓப்பனா வருத்தம் தெரிவிச்சாரு. அதுபோல, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மறுபடி அமைஞ்சா சோனியாவும் ஓப்பனா வருத்தம் தெரிவிப்பாரா?''

""அதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்ங்க தலைவரே.. .. .. காங்கிரஸ், தி.மு.க. பக்கம் தே.மு.தி.க.வை இழுக்கும் முயற்சி டெல்லி வரைக்கும் சீரியஸா நடந்தாலும் இன்னும் ரிசல்ட் கிடைச்சபாடில்லை. அதே நேரத்தில், தே.மு.தி.க- பா.ஜ.க கூட்டணி உறுதியாகிட்டதா, பா.ஜ.க தரப்பிலிருந்து மீடியாக்களுக்கு செய்தி வருது. ஆனா, தே.மு.தி.கவோட கொ.ப.செ. சந்திரகுமா ரோ இதுக்குப் பதில் சொல்லும்போது, இதுவரை அதிகாரப்பூர்வமா யார்கிட்டேயும் தே.மு.தி.க சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தலைன் னும், சிங்கப்பூரிலிருந்து 3-ந் தேதி விஜயகாந்த் வந்தபிறகுதான் கூட்டணி பற்றி தெரியவரும்னும் சொல்றாரு. 

என்னதான் நடக்குதுன்னு விசாரிச் சேன். தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு கூட்டணியை அமைச்சிடணும்னு முதல்முறையா தீவிரமா களமிறங்குன பா.ஜ.க தரப்புக்கு மூச்சு முட்டுது. கூட்டணி முயற்சியில் ஈடுபட்ட சில பேர், ஒரு நாலு நாள் லீவு எடுத்துக்குறோம்னு கேட்கக்கூடிய அளவுக்கு நிலைமை இருந்திருக்குது. ம.தி.மு.க., ஐ.ஜே.கே. போன்ற கட்சிகள்தவிர மற்ற கட்சிகளை இழுக்கும் முயற்சியில் பா.ஜ.க நினைச்ச அளவுக்கு எதுவும் நடக்கலை.''

""பா.ம.கவுடனான கூட்டணி என்ன நிலையில் இருக்குது?''

""ராமதாஸ் ஆரம்பத்திலிருந்தே சரியா பிடி கொடுக்கலை. அன்புமணிதான் பா.ஜ.க கூட்டணி யில் ஆர்வமா இருந்தாரு. ராமதாஸ் குடும்பத் தாரும், மத்தியில் அடுத்தது பா.ஜ.க ஆட்சிதான். அன்புமணி மினிஸ்டராகுற சான்ஸை ஏன் தடுக்கணும்னு கொக்கிப்போட, அதற்கப்புறம்தான் ராமதாசும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சரி சொன்னாரு. ஆனா, பா.ஜ.க தரப்பிலோ பா.ம.க தன்னோட வேட்பாளரை அறிவிச்ச சேலம் தொகுதியைக் கேட்டாங்க. ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதால சேலத்துல அனுதாப அலை வீசும்ங்கிறது பா.ஜ.க கணக்கு. அடுத்ததா, மயிலாடுதுறை தொகுதியையும் பா.ஜ.க கேட்டது. அங்கே தி.மு.க கூட்டணியில ம.ம.க போட்டியிடும்ங் கிறதால அதை எதிர்த்து பா.ஜ.க நிற்பதுதான் சரியா இருக்கும்னும், 2001 சட்டமன்றத் தேர்தலிலேயே மயிலாடுதுறையில் பா.ஜ.க ஜெயிச்சிருக்குன்னும் காரணங்கள் சொல்லப்பட்டிருக்குது. அதுபோல கிருஷ்ணகிரியையும் பா.ஜ.க கேட்டிருக்குது. பக்கத்திலே கர்நாடகா இருப்பதால, அங்கேயிருந்து பா.ஜ.கவுக்கு ஆதரவான காற்று கிருஷ்ண கிரி வரைக்கும் வீசும்ங்கிறது அவங்க எதிர்பார்ப்பு.''

""பா.ம.க தரப்பில் புயல்காற்றே வீசியிருக்குமே!''

""இருக்கிற தொகுதி களில் 3 தொகுதிகளை பா.ஜ.கவுக்குக் கொடுக்க பா.ம.க தயாரா இல்லை. அதுமட்டுமில்லீங்க தலை வரே.. பா.ஜ.க தரப்பு தே.மு.தி.ககிட்ட பேசுனப்ப அவங்க கொடுத்த லிஸ்ட்டில் பா.ம.க போட்டியிடுற 10 தொகுதிகளில் சிதம்பரம், புதுச்சேரி, திருவண்ணாமலை இந்த மூன்றைத் தவிர மற்ற 7 தொகுதிகளும் இருந்திருக்குது. இது ராமதாசுக்குத் தெரிஞ்சதும் செம டென்ஷனாயிட்டாரு. அன்புமணி யும் டென்ஷனானதோடு டெல்லிக்குப் போயிட்டாரு. அவர் காங்கிரஸ் கூட்டணிக்காக அகமது பட்டேலை சந்திக்கப் போறாருன்னு தகவல்பரவ ஆரம்பிச்சிடிச்சி. அன்புமணியோ ஆல் இந்தியா மெடிக்கல் கவுன்சில் உறுப்பினர் வீட்டு விசேஷத்துக்குப் போனதா சொன்னாரு. பா.ம.க. உருவாக்கிய அணியில் இருக்கும் கொங்கு மண்டல நாகராஜுக்காக கோவை தொகுதியை பா.ஜ.க.கிட்டே கேட்கிறாராம் ராமதாஸ். கோவையை பா.ஜ.க. தன்னோட நம்பிக்கைக்குரிய தொகுதியா நினைக்குது. அதைத் தரத் தயாரா இல்லை. இப்படி பா.ம.க.வோடு ஏகப் பட்ட உரசல்கள் இருப்பதால அதைக் கழட்டிவிட்டுட லாம்ங்கிற யோசனையும் பா.ஜ.க.விடம் இருக்குதாம். அதாவது கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளே... பா.ம.க. வெளியே... அப்படின்னு ப்ளான் பண்ணப்பட்டி ருக்காம்.''

""தே.மு.தி.க.வை வச்சி ஏகப்பட்ட நியூஸ் வந்துக் கிட்டிருக்குது. உண்மையில் என்னதான் நடக்குதாம்?''

""அவங்க ஏரியாவில் பேசிப் பார்த்தேன். எடுத்த எடுப்பிலேயே, பேசுவதற்கும் பேச்சுவார்த்தைக்கும் வித்தியாசம் இருக்குதுன்னு சொன்னாங்க. என்ன வித்தியாசம்னு கேட்டேன். கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்போறது நாங்க யாரும் கிடையாது. சுதீஷ் சாரும் எடுக்க முடியாது. பிரேமலதா அண்ணியும் எடுக்க மாட்டாங்க. கேப்டன் மட்டும்தான் முடிவு எடுப்பாரு. அவரோடு பேசினாத்தான் அது கூட்டணிப் பேச்சுவார்த்தை. மற்றவங்ககிட்டே பேசுறதெல்லாம் வெறும் பேச்சுதான்னு விளக்கம் சொன்னாங்க. அதோடு, இதுவரைக்கும் பா.ஜ.க தரப்பிலிருந்து விஜயகாந்த்கிட்டே பேசுனது பொன்.ராதாகிருஷ்ணனும் இல.கணேசனும்தான்னு சொன்னவங்க, அதெல்லாம் நடந்து இரண்டு மாசத்துக்கு மேலே ஆயிடிச்சி. அப்பவே அவங்க கிட்டே எந்த உறுதிமொழியும் கொடுக்காம, தே.மு.தி.க பொதுக்குழுவுக்குப் பிறகு முடிவைச் சொல்றேன்னு எங்க கேப்டன் அனுப்பி வச்சிட்டாரு. அதற்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் பா.ஜ.ககிட்டே எந்தப் பேச்சு வார்த்தையும் கேப்டன் நடத்தலைன்னு க்ளியரா சொல்றாங்க.''

""சரி, சாதா பேச்சு யார் யார்கூட நடந்துக்கிட்டிருக்குதாம்.. கேட்டியா?''

""சுதீஷ்கிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு இவங்களெல்லாம் சில முறை நேரிலும், பல முறை போனிலும் பேசியிருக்காங் களாம். அவங்க சொல்றதைக் கேட்டுக்கொள்ளும் சுதீஷும், இதையெல்லாம் நான் கேப்டன்கிட்டே சொல்லிடு றேன்னு மட்டும்தான் சொல்றாராம். இதில்கூட, பா.ஜ.க தரப்பு தே.மு.தி.க அலுவலகத்துக்கு வந்து பேசி யிருக்குதே தவிர, தே.மு.தி.கவிலிருந்து யாரும் பா.ஜ.க அலுவலகத்துக்குப் போகலைங்கிறதையும் சுட்டிக் காட்டுறாங்க. பா.ஜ.க போலவே தி.மு.க தரப்பிலிருந்தும் சாதா பேச்சுகள் நடந்துக்கிட்டுத்தான் இருக்குதாம். எஸ்றா சற்குணத்தில் ஆரம்பிச்சி, ஆற்காடு வீராசாமி ஆட்கள், ம.ம.க நிர்வாகிகள், திருமாவளவன், ஃபார்வர்டு ப்ளாக் சந்தானம் இவங்களெல்லாம் விஜயகாந்த்தை நேரிலேயே சந்திச்சி, கூட்டணி பற்றி வலியுறுத்தியிருக்காங்கன்னு சொல்லும் தே.மு.தி.க. உயர்மட்டம், தி.மு.க தரப்பிலிருந்து வந்து பேசுறவங்க வெளியே போய் பேட்டி கொடுக் குறப்ப, கூட்டணிக்கு அழைச் சிருக்கோம்னுதான் சொல்றாங்க. ஆனா, பா.ஜ.க தரப்பிலிருந்து, கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டிடிச்சின்னு பரப்பி விட்டுடு றாங்கன்னு சொல்லுது.''

""விஜயகாந்த் ஒரு முடிவை எடுத்து அறிவிச்சிட்டா, எதையும் பரப்ப முடியாதே?''

""இரண்டு நாளைக்கு முன்னாடி சுதீஷ்கிட்டே பொன்.ராதா பேசுறப்ப, நீங்க எதிர்பார்க்கிற எல்லாத்தையும் நிறைவேத்துறோம். கூட்டணியை அறிவிச்சிடுங்கன்னு சொல்லியிருக்காரு. அதோடு, நீங்க வருவது உறுதின்னா பா.ம.க நமக்கு வேணாம்னும் சொன்னாராம். அப்பவும் சுதீஷ், எல்லாத்தையும் கேப்டன் கிட்டே சொல்றேன்னுதான் சொல்லியிருக்காரு. விஜய காந்த்தோ, ம.தி.மு.கவை தவிர வேறெந்த அரசியல் கட்சியும் பா.ஜ.கவோடு கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமா அறி விக்கலைங்கிறதையும், மற்ற மாநிலங்களிலும் பா.ஜ.கவோடு கூட்டணி சேர கட்சிகள் தயங்குறதையும் கவனிச்சிக்கிட்டுத்தான் இருக்காராம். இதுபற்றி சிங்கப்பூரிலிருந்து அடிக்கடி சுதீஷ்கிட்டே பேசுறாராம்.''//

 ***
க்கீரன் தான் சார்ந்திருக்கும் கட்சியில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொண்டு விட்டாலும் சில நேரம் அந்த முடிவில் கொஞ்சம் அலைபாயும்.கனிமொழி ஆதரவுச் செய்தி என்று அப்பொழுதுக்கு அப்பொழுது கொஞ்சம் அந்தக் கோஷ்டியிலும் துண்டு போட்டு வைக்கும்.   ஸ்டாலின் தனது உட்கட்சி தலைமைப் போட்டியாளர்களை ஒழிக்க காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று மறுத்தால் கனிமொழி,தயாநிதி மாறன்,பாலு ஆகியோர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் கூட்டணியை நாடுவது போல நக்கீரனும் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிற‌து.

நக்கீரனுக்கு அல்லது அதன் நெருக்கமான வட்டாரங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்ன பங்கோ,என்ன பிரச்சனையோ..?எதற்கு காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறதோ ? யாருக்குத் தெரியும்? 

அதனால் தான் கடந்த சில இதழ்களாக ஒவ்வொரு இதழிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை காங்கிரஸ் காரனை விட அதிகம் எதிர்நோக்குகிறது.செய்தியை உருவாக்குகிறது.அதன் உச்சகட்டமாக ஸ்டாலினிடம் சோனியா வருத்தம் என்று யாரும் சொல்லாத கற்பனையை எழுதுகிறது. ஆனால் ஸ்டாலினோ ரெண்டு நாளைக்கு ஒருமுறை இதனை மறுக்கிறார்.இந்த இதழ் வெளிவந்த பின்பும் மறுத்துள்ளார்.அதே நேரம் ஜூனியர் விகடன் நக்கீரன் இரண்டு இதழ்களும் வெளியிடும் கற்பனைச் செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாய் இருக்கும். தே.மு.தி.க.-பா.ம.க.குறித்து வெளியிடும் ஜூனியர் விகடன் செய்திக்கு மாற்றுச்செய்தியையும் நக்கீரன் வெளியிடும்.


சுதீஷ் இடம் எல்லாம் சொல்லி விட்டேன்,அவரிடம் பேசி விடுங்கள்  என்று விஜயகாந்த் சொன்னதாக ஜூனியர் விகடன் எழுதினால், எனக்கு அதிகாரம் இல்லை என சுதீஷ் சொன்னதாக நக்கீரன் செய்தி வெளியிடும்.


எதிர்க் கூட்டணி உருப்பட்டு விடக்கூடாது என்பதில் இரண்டு இதழ்களுக்கும் 'நல்ல' எண்ணம்.ந்த இரண்டு இதழ்களைப் போல அல்லாமல் இன்னொரு புலனாய்வுவு இதழான குமுதம் ரிப்போர்ட்டரின் பிரச்சனையோ வேறு மாதிரியானது.

நரேந்திர மோடி,ஜெயலலிதா இருவரும் பிரதமராக வேண்டும் என்று ஒரே நேரத்தில் எழுதிக் காட்ட  வேண்டிய விசுவாசத்திலும் நிர்ப்பந்தத்திலும் அது இருக்கிறது. சோவுக்கு ஏற்பட்ட நிலை தான் குமுதம் ரிப்போர்ட்டருக்கும்.

அதனால் அந்த இக்கட்டில்,இரண்டு கட்சிகளையும் விமர்சிக்காமல் மீதமுள்ள அனைத்துக் கட்சிகளையும் விமர்சித்து  எதையாவது பொய்யையும் புரட்டையும் எழுதி  விற்றுப்பிழைக்க வேண்டிய நிலையில் இருக்கிற‌து.ஆகவே விஜயகாந்தும் கருணாநிதியும் தான் அந்த இதழுக்கு இலக்கு.

எப்படியாவது செட்டியார் சொத்தை நிரந்தரமாக அபகரிக்க வேண்டியதனால் இந்த நிலை.


நாம் இந்த இதழ்களின் நிலையைப் புரிந்து கொள்கிறோம்.

ரகு வேலை என்பது அவ்வளவு சுலபமல்ல.ஒரு வீட்டை வாடகைதாரருக்கும் உரிமையாளருக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்படுத்தி வாடகைக்கு விடுவதிலேயே எவ்வளவு சிரமப்பட வேண்டி இருக்கிற‌து. அதிலேயே அந்த நிலை என்றால் நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்த முக்கியப் பங்காற்றும் இந்தக் கூட்டணி விவகாரத்தில் ஊடகங்களின் தரகு நிலை கஷ்டமானது தான் .


கடந்த 4 மாதங்களாய் கஷ்டப்பட்டுத் தஙக்ளின் விருப்பமான கூட்டணியை புகழ்ந்து, அலை வீசுது,புழுதி பறக்குது என வானவில் வாக்கியங்களை உருவாக்கி, மேலும் அதில் சரிப்பட்டு வராத‌ கட்சியை ஒருவாரம் மிரட்டி, அடுத்த வாரம் விமர்சித்த கட்சியை மீண்டும் புகழ்ந்து,சில நேரம்  இட்டுக்கட்டிய செய்திகளை வெளியிட்டு எதிர்க் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கி,அடுத்த வாரம் அதனைத் திசை திருப்ப இன்னொரு ஆதரவுச் செய்தியை வெளியிட்டு என சகல வித்தைகளையும் காட்டி எழுதி தாங்கள் உருவாக்க நினைத்துள்ள கூட்டணியை வெற்றிகரமாய் உருவாக்க வேண்டும்.அதன்பின் விருப்பமான அளவில் அவர்களுக்குள் தொகுதிகளைப் பிரிக்க வேண்டும்.

அதன் பின் அவர்களை வெற்றிபெறச் செய்ய நிறைய உழைக்க வேண்டும்.இது எல்லாம் கைகூடினால் அப்பொழுது மகிழ்ச்சியும் ஆதாயமும் கிட்டும்.தாஙக்ள் வரிந்து கட்டி எழுதும் கட்சிகளுக்கிடையே 
கூட்டணி உருவாகவில்லையென்றாலோ அல்லது உருவாக்கிய கூட்டணி வெற்றி பெறவில்லையென்றாலோ  அப்பொழுது தோல்வி மட்டுமல்ல ஆதாயமும் நிறுவனங்களுக்கு கிட்டாது.

வாடகைக்கு வீடு பிடிக்கும் தரகனுக்காவது ஒரு வீடு இல்லாவிட்டால் இன்னொரு வீடு.ஆனால் இவர்களைப் போன்ர ஊடக முதலாளிகளுக்கோ அடுத்த தேர்தலுக்கு ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஆகவே பதட்டத்திலும் பயத்திலும் இருக்கிறார்கள். இவர்களை நம்பி 
காசு கொடுத்து வாங்கும் வாசகன் நிலை தான் பரிதாபமாய் இருக்கிற‌து. 


 

No comments: