Friday, 23 January 2015

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே

சிதையும் குழந்தைமை,ஜெயமோகன்


வ்வொரு பத்திரிகையும் தங்கள் குறித்த‌ சில விஷயங்களைப் பெருமிதமாய்ச் சொல்வார்கள்.

தாங்கள் தான் முதன்முதலில் போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தோம், வீட்டு வசதி வாரிய  முறைகேட்டினை அம்பலப்படுத்தினோம், இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாய்ச் செய்து வருகிறோம் என்று, அவர்களுக்கு அதில் உரிமை இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உரிமை கோருவார்கள்,அதில் பெருமிதமும் சாதித்து விட்ட திருப்தியும் வெளிப்படும்.

ஆனால் இந்த 'இந்தியா டுடே'காரர்களுக்கோ வேறு விதமான உரிமை கோரல்.

பாலியல் இச்சைகளின் ஆய்வுகள் தொடர்பான நீண்டகால உரிமை கோரல் தான். தாங்கள் தான்  11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தேசத்தின் தலையணை பேச்சுகளை படம் பிடித்துக் காட்டி வருகிறோம் எங்க‌ளை விட யாருக்கு இதில் தகுதியும் அனுபவமும்  இருக்கிற‌து என . உங்களுக்கு இது வக்கிரமாகவும் கழிசடையின் பிறப்பிடமாகவும் தெரியலாம்,ஆனால் அவர்களுக்கோ அது பெருமிதம்.

ஆனால் அவர்களுக்கே இந்த வழக்கமான பள்ளிய‌றை, கழிப்பறை பாலியல் தொடர்பு ஆய்வுகள்,இட்டுக்கட்டல்கள் அதைத்தொடர்ந்த  பூச்சுகள் அலுத்து விட்டதா என்று தெரியவில்லை.புதிய‌ வெரைட்டியைத் தேடியிருக்கிறார்கள்.

அதனால் தான் வழக்கமான ஆண்- பெண் உறவுகள் தொடர்பான ஆய்வு முடிவுகளைத் தங்களது விற்பனை யுக்தியாய் பயன்படுத்தாமல் இந்த முறை பதின்பருவத்தினர் குறித்த பாலியல் ஆய்வுகள் என்று சொல்லிக் கொண்டு பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமிகள் தொடங்கி  கல்லூரி மாணவ மாணவிகள் வரையிலான  பாலியல் தேர்வுகளை,விருப்பங்களையும் அது குறித்த முடிவுகளை ஆய்ந்தறிவதாகச் சொல்லி 'பதின்பருவத்தில் பூக்கும் காமம்' எனத் தலைப்பிட்டு வெளியிட்டு இருக்கிறார்கள்.

வக்கிரம் பிடித்தவனுக்கு பெற்ற தாய்க்கும், பிள்ளைக்கும், மனைவிக்கும் வித்தியாசம் தெரியாதது போல 'இந்தியா டுடே' காரர்களுக்குத் தெரிய‌வா போகிறது..? விற்பனைக் கச்சாப் பொருளாக எந்தச் சதை கிடைத்தால் என்ன..? அது மனைவியினுடையதானால் என்ன மகளுடையதானால் என்ன..? நமக்கு கல்லா கட்டணும்,சந்தையில் தொடர்ச்சியாய் நிற்க வேண்டும்.தனது உயர்தட்டு வாசகர்களின் வக்கிரத்துக்குத்  தீனி போடணும்.அவ்வளவு தான்.

சனவரி (16-21)2015 நாளிட்ட இதழில் இந்த 'ஆய்வுகள்' மட்டும் மொத்தம் 24 பக்கங்கள்.

இதனைத் தாங்கிய முகப்பு அட்டை. 'பதின்களில் பூக்கும் காமம்'

முகப்பு கட்டுரையின் முதல் பக்கத்திலேயே ஒரு சிறுமி தனது உடைகளைக் களைந்து விட்டு தன்னை விட‌ சற்று வயது அதிகமான‌ ஆணுடன் கட்டித்தழுவி உடலுறவில் இருப்பது போல ஒரு படம் வரையப்பட்டிருக்கிறது. அருகில் அந்த சிறுமியின் பள்ளிக்கூடப்பையும்,பள்ளிச் சீருடையும் கிடக்கிறது.

அதன் தொடர்ச்சியாக 'காதல் வேண்டும் புதிய பதின் பருவ‌த்தினர்,' 'செக்ஸ் பற்றிப்பேசும் நேரம் இது சரியா ?,' 'செக்ஸ் அகராதி-இளசுகளின் வார்த்தைகள்,' 'வளாகத்தில் விளையாட்டுகள்,' 'தொலைந்த பிள்ளைகள்,' 'எல்லாமே இணையத்தில்,''மூன்று நகரங்களின் கதை,' 'கூர் தீட்டப்படும் அழகு,' 'உண்மை தரும் துணிவு,' 'பெருஞ்சுவர் - எல்லைகளை மீறி' என கட்டுரைகள்

ஒவ்வொரு செய்திப்பதிவின் தலைப்பை மட்டும் யாரும் பார்த்தால் முற்போக்கு ஹோல்சேல் குத்தகை எடுத்தது போலத்தெரியும்.விஷயம் படித்தால் காறித்தான் துப்ப முடியும்.





வ்வொரு பகுதி குறித்தும் சில வார்த்தைகள் குறிப்பிட வேண்டுமென்றால்,

'காதல் வேண்டும் புதிய பதின் பருவ‌த்தினர்,'பகுதியில் பள்ளி-கல்லூரி மாணவிகளிடையே,

அ)   10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியர்களில் எத்தனை விழுக்காடு கன்னித்தன்மை மிக்கவர்கள்..?

ஆ) பள்ளி வளாகங்களில் எத்தனை விழுக்காட்டினர் உபயோகப்படுத்திய ஆணுறைகள் கிடக்கின்றன..?

இ) எத்தனை சிறுவ சிறுமியர்கள் ஆன்லைனில் போர்னோ பார்த்திருக்கிறார்கள்.?

ஈ) கன்னித்தன்மையை மதிப்பவர்கள் எத்தனை பேர்..?

இந்தக் கட்டுரையை 'இந்தியா டுடே' இதழின் துணை ஆசிரியர் தமயந்தி தத்தா எழுதியிருக்கிறார்.



நாம் ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும் பொழுது ஏ முதல் இசட் வரை ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் 'இந்தியா டுடே' இதழோ தில்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற‌வர்கள் தொகுத்த 'இளசுகளின் அகராதி' எனத் தலைப்பிட்டு ஒன்றை வெளியிட்டுள்ள‌து.

இதன் படி A பார் ஆப்பிள் அல்ல, தான் படுக்கையைப் பகிர விரும்பும் ஆண்ட்டியை சிறுவன் குறிப்பதாகச் சொல்லும் சொல்லின் முதல் எழுத்து என்கிறது.

G என்பது got if  என்பதன் சுருக்கமாம் அது.

அதாவது வாய்ப்புக் கிடைத்தால் குறிப்பிட்ட நபருடன் படுப்பாயா ? என்பதைக் கேட்கப் பயன்படுத்தும் சங்கேத வார்த்தை என்கிறது. ஆங்கிலத்தில் பெயர்கள் குறிப்பிட்டிருக்கின்றன. தமிழில் பிரியா,ரமேஷ் என இரண்டு பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள்.

K என்பதன் விரிவாக்கம் காமசூத்ராவாம். 69 பொஷிசனின் சுருக்கமாம் அது.

S  என்பது எப்பொழுதும் செக்சுக்குத் தயாரானவரைக் குறிக்கும் எழுத்தாம்.

W என்பதன் விரிவாக்கம் விங்மேன் என்பதன் சுருக்கமாம். அதாவது பாலியல் தரகராம்.

இப்படிக் கஷ்டப்பட்டு 'அகராதி' உருவாக்கியிருக்கிறார்கள்,ஆனால் தொகுத்தவர்களின் பெயர் குறிப்பிடக்கூட இல்லை. எடிட்டோரியல் டீம் இதனைச் செய்திருக்கும் போல.


டுத்து -'டீன் ஏஜ் வாக்குமூலம்' என்று தலைப்பிட்டு இன்னொரு பகுதி.

எதையும் அறியாத ஒரு 'பச்சைக்குழந்தை' அனைத்தையும் அறியும் நோக்குடன் ஒரு ஆய்வைச் செய்யத்தொடங்கியதாகவும் அதன் முடிவு என்ன என்றும் எழுதியிருக்கிறார்கள்.

எங்கு வைத்து உடலுறவு வைத்துக்கொள்வீர்கள்..? எப்பொழுது வைத்துக் கொள்வீர்கள்..? சுய இன்பம் காண்பதற்கு சராசரி வயது மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும்  என்ன..? மாணவிகளுக்கு சுய இன்பத்தில் திருப்தி உண்டா..?
 24 மணி நேரத்தில் எத்தனை முறை உடலுறவு கொள்ள முடிந்தது ? எத்தனையாவது முறையிலிருந்து வலிக்க ஆரம்பித்தது என்பன போன்ற‌ அனைத்தையும் எழுதி விட்டு இதனை 'பச்சைக்குழந்தை' ஆய்வு செய்ததாகவும்,இந்த ஆய்வின் மூலம் பல தயக்கங்களை உடைத்ததாகவும்,இது குறித்து  தீவிரமாக விவாதிக்க முடிந்ததாகவும் எழுதியிருக்கிறார்கள்.



டுத்து 'தொலைந்த பிள்ளைகள்' என்றொரு பகுதி.

பள்ளி மாணவிகள் பற்றியது. உடல் உறவின் பொழுது, எத்தனை விழுக்காடு பேருக்கு உடைகள் களையப்பட்டது,மார்பகங்களை எத்தனை விழுக்காடு தொடப்பட்டது..? வாய்வழி புணர்ச்சி எத்தனை விழுக்காடு..? பேச்சு மட்டும் எத்தனை விழுக்காடு..?சுய இன்ப விழுக்காடு போன்ற 'அரிய' தகவல்களுடன் ஆய்வு முடிவுகள்.

'செக்ஸ் பற்றிப்பேசும் நேரம் இது சரியா ?' என்ற கட்டுரையை 'இந்தியா டுடே' சீனியர் எடிட்டர் 'காயத்ரி ஜெயராமன்' எழுதியுள்ளார்.

'எல்லாமே இணையத்தில்' என்ற தலைப்பின் கீழ் என்றொரு பகுதி. இந்தப்பகுதிக்கு ஆங்கில பதிப்பில் can you see the boobs ? எனத் த‌லைப்பிட்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்த இதழிலும் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இது போல சிறு சிறு வித்தியாசம் தான்.

இணையத்தொடர்பு எவ்வளவு பாதகங்களை உருவாக்குகிறது என்று சொல்லிவிட்டு 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள். இதனை 'இந்தியா டுடே' வின் சீனியர் கரஸ்பான்டென்ட் 'மரூஷா முசாபர்' எழுதியுள்ளார்.

டுத்ததாய் 'மூன்று நகரங்களின் கதை' என்றொரு பகுதி. அதில் இந்தியாவின் பழமையான மூன்று நகரங்களின் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் பாலியல் விருப்பங்கள்,தேர்வுகள்,உடை,பழக்க வழக்கங்கள் குறித்து ஆராய்வதாகச் சொல்கிறது. இதனை இந்தியா டுடேவின் அசோசியேட் எடிட்டர்களான சுகாரி சிங்,அமிதாப் ஸ்ரீ வத்சவா,ரோகித் பரிகர் ஆகியோர் எழுதியுள்ள‌னர். ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 19 நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் சென்னையும்  இடம் பெற்றுள்ளமையால் அது குறித்து குறிப்பாக எதுவும் இருக்கிறதா எனப் பார்த்தோம். ஆனால் எதுவும் இடம் பெறவில்லை. ஒருவேளை 'இந்தியா டுடே' வின் பிற மொழிப்பதிப்பு எதிலாவது சென்னையின் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் குறித்த இவர்களின் ஆய்வுகள் இடம் பெற்றிருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம். (தேடிக்கொண்டிருக்கிறோம்.)

40 ஆயிரம் விலை மதிப்புள்ள செல்போனுக்காக  மகிழ்ச்சியுடன் தன்னை அளித்த‌ பெண் குறித்து விளக்கி விட்டு ஓரிரு சந்திப்புக்குப்பின் அந்த ஆளுடனான உறவை  மற‌ந்து விட்டதையும் எழுதுகிறது. அதைத் தொடர்ந்து தார்மீகச் சிங்கங்களுக்கு இது குறித்துப் பேசினால் எரிச்சல் உண்டாக்கலாம் எனவும் எழுதியுள்ள‌து.

இப்படி பக்கத்துக்கு பக்க‌ம் டீன் ஏஜ் வயதினரின் என்ற பட்டியலில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியரின் பாலியல் தேர்வு,விருப்பங்கள் என வகை வகையாய் பக்கத்தை நிரப்பியுள்ள‌து இந்தியா டுடே. தாங்கள் சொன்ன விஷயம் படிப்ப‌வர்களுக்குப் புரியாமல் போய் விடுமோ என்ற 'அக்கறையில்' வரைபடங்கள்.'ஈர்க்கக் கூடிய ' தலைப்புகள்.

ங்கில புது வருடத்தின் இரண்டாவது இதழை இப்படி வெளிக்கொணர்ந்து தனது தேக்கமான விற்பனை நிலையைச் சரிக்கட்டி இருக்கிறது. வழக்கமாய் செவ்வாய்க்கிழமை இரவு வரை கடையில் கிடைக்கும் இந்தியா டுடே இதழானது இந்த முறை கடைக்கு வந்த ஞாயிறு மாலையே விற்றுத் தீர்ந்து விட்டது. இந்த சர்வே எப்படியும் 3 மாதங்கள் அதன் விற்பனையைத் தக்க வைக்கும். (அடுத்து இருக்கிறது இன்னொரு சர்வே.! சிறுவ சிறுமியர்களிடையே அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கை என ஒன்றை எடுத்து விட்டால் கிடக்கிறது.எவன் கேட்கப் போகிறான்..?)

பள்ளி,கல்லூரி மாணவிகள் எப்படி உடலுறவு கொள்கிறார்கள்,அதில் மார்பைத்தொடுவது எத்தனை விழுக்காடு../ வாய்வழிப்புணர்ச்சி எத்தனை விழுக்காடு என்பது ஒரு ஆய்வு. ( இதனை எடுத்தார்களா இல்லையா என்ற கேள்வியே இங்கு அனாவசியம்.)அதற்கு ஒரு கவர் ஸ்டோரி. இதற்கு எடிட்டோரியல் குழு.

இது தான் இந்தியாவின் நம்பர் ஒன் செய்திப் பத்திரிகை எனச் சொல்லிக்கொள்ளும் 'இந்தியா டுடே'வின் வழக்கமான லட்சணம். இந்தியாவைப் புரிந்து கொள்ள இதைப்படிக்க வேண்டுமாம்.

இது தான் அவர்கள் கட்டமைக்க விரும்பும் இந்தியா.

*****



ந்தியா முழுவதும் குழந்தைகள் உட்பட இளம் பிராயத்தினர் மீதான பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் முன் எப்பொழுதையும் விட மிக அதிக அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. 'இந்தியா டுடே' இதழே சில இதழ்களுக்கு முன் 'சிதையும் குழந்தைமை' என ஒரு முகப்புக் கட்டுரையை வெளியிட்டது. இன்றோ சிறுவ சிறுமிகளின் பாலியலை கதைகளாகவும் ஆய்வுகளாகவும் அகராதியாகவும் எழுதி எஞ்சியுள்ள‌ பெரும்பான்மை சிறார்களை பாலியல் விருப்பத்துக்குள் தள்ளி விடும் வேலையைத் திட்டம் போட்டுச் செய்கிறது.

பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் சீரழிந்த நிலையை உருவாக்கி, மிக மிகக் குறைந்த விழுக்காட்டினரின்  செயல்களை ஆய்வு என்று அதற்கு நாமகரணம் சூட்டி ஒட்டுமொத்த சமூகத்தின் நடவடிக்கையாக மாற்றி அதனை விற்பனைப் பொருளாக்கி காசு பார்க்கத் துடிக்கிறது வக்கிர 'இந்தியா டுடே' கும்பல். இதுவரை தனது விற்பனைப்பொருளாக பெண்களைப் பயன்படுத்தி வந்த இதழ் இப்பொழுது இளம் பிராயத்தினரைப் பயன்படுத்த தொடங்கி இருக்கிறது.



இந்த இதழில் கண்துடைப்புக்காகவாவது  ஏதாவது மனநல மருத்துவர்,குழந்தைகள் நல நிபுணர் யாரிடமாவது கருத்து வாங்கி மாணவ‌,மாணவிகள் மீதான தனது 'அக்கறையை' வெளிப்படுத்தி இருப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக பக்கத்துக்குப் பக்கம்  ஆணுறை விளம்பரங்கள். வயதான ஆண்களுக்கு எழுச்சியை உண்டாக்கும் Vacurect சாதன விளம்பரமும் பல‌ வண்ண‌த்தில் இருக்கிறது.

அப்படியானால் தங்க‌ள் நோக்கம் என்ன என்பதை வெளிப்படையாகப் பறைசாற்றுகிறது.

எதை வலியுறுத்துகிறது 'இந்தியா டுடே'..?

இதனைப் படிக்கும் இரு தரப்பினரும்  சக பாலினரை   என்ன மனநிலையில் அணுகுவார்கள்..? பெண்களின் மீதான தாக்குதலை எதிர்க்கும் மனநிலையுடன் பயிற்றுவிக்கப்படுவானா அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது தனது இச்சைக்கு அவர்களைப் பயன்படுத்த நினைப்பானா..?

அது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பிரச்சனையையும் 'இந்தியா டுடே' 'கொண்டாட்ட' மனநிலையுடன் அணுகுகிறது. அதனால் தான் ஊதாரித்தனமான செலவுக்காய் 3 ஆண் நண்பர்களுடன் உறவு வைத்திருக்கும் பெண் குறித்துக் கூறும் பொழுது இவரின் செயல் தார்மீகச் சிங்கங்களுக்கு எரிச்சலை உண்டாக்கலாம் என நக்கலாய் எழுதுகிறது.

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களிலாவது அவர்கள் தங்களுக்கு இழைக்கப்ப‌டும் தீங்கு குறித்து தெரிந்திருக்கின்றனர். அதனை எதிர்கொள்ள ஓரளவுக்காவது மன வலிமையும் உடல் பலமும் இருக்கிறது.

ஆனால்  சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதலை எதிர்கொள்ள அவர்களுக்கு எந்த வடிவத்திலும் உரிய பக்குவம் இருப்பதில்லை. ஆனால் அத்தகைய வன்முறையையும் அவர்கள் மீதான பாலியல் சீண்டலையும் 'இந்தியா டுடே' திட்டமிட்டு உருவாக்க நினைக்கிற‌து.

ஆபாச பத்திரிகையை சட்டப்படி இந்தியாவில் பதிவு செய்ய முடியாது. ஆனால் 'இந்தியா டுடே' போன்ற பத்திரிகைகள் அத்தகைய வேலையைத் தான் மறைமுகமாய்ச் செய்கின்றன.  இத்தகைய பத்திரிகைகளைத் தடை செய்வது தான் சரியாக இருக்கும். அதற்கான கோரிக்கைகள் இனி வலுப்பெற வேண்டும்.



டைம்பாஸ்,வண்ணத்திரை,சினிக்கூத்து இதழ்கள் கூட இப்படிப்பட்ட மனநிலையை உருவாக்க முனைவதில்லை. தங்கள் விற்பனைப் பொருட்களாக பெண்களுடன் மட்டும் நிறுத்திக் கொள்கின்றனர்.ஆனால்  'இந்தியா டுடே' பதின்பருவத்தினர் எனச் சொல்லிக் கொண்டு சிறுவ சிறுமியர்களை வைத்து அருவருப்பான இதழை வெளியிட்டிருக்கிற‌து.

இந்த செக்ஸ் சர்வே முழுவதும் டெல்லியில் இருந்து முடிவு செய்யப்பட்டு ஒட்டு மொத்த இந்தியா முழுமைக்கும் 'இந்தியா டுடே' இதழில் ஒன்று போல் வெளியிடப் பட்டிருக்கின்றன.

இதில் குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பெண்களையும் (தென்னக வார்த்தை என லாவகமாய் சொல்லியிருக்கிறார்கள்) மிக இழிவு படுத்தியிருக்கிறார்கள்.

இளசுகளின் அகராதியில், UB என்பது பின்னாலிலிருந்து கவர்ச்சியாகவும் முன்னால் அப்படி இல்லாமலும் இருக்கும் பெண் என்று எழுதியிருக்கிறார்கள். பெண்களை மிக இழிவுபடுத்தியதற்காய் தமிழ்நாட்டு பெண் முற்போக்காளர்கள் எனச் சொல்லப்படுவோர் 'இந்தியா டுடே' சென்னை அலுவலகத்தை இதற்காய் முற்றுகையிட வேண்டும். எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சனத்துக்கு எதிராய், சாரை சாரையாய் அணிவகுத்து பக்கம் பக்கமாய் எழுதி கொடி பிடித்த‌ பெண் 'போராளிகளில்' ஒரே ஒருத்தர் கூட 'இந்தியா டுடே' போன்ற ஊடகத்தை எதிர்த்து முணுமுணுக்க கூட மாட்டார்கள் என்பது தான் கசப்பான உண்மை.

சிலர் நினைக்கலாம் தமிழ் பதிப்பு எடிட்டோரியலில் பெண்கள் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள்.அசோசியேட் எடிட்டர் கவிதா முரளிதரனும்,அசோசியேட் காப்பி எடிட்டர் கவின் மலரும் முற்போக்காளர்கள் என இலக்கிய உலகிலும்,முகநூலிலும் அறியப்படுபவர்கள் அவர்களை மீறி எப்படி இதுவெல்லாம் வந்தது என ? அப்படி நினைத்தால் நினைப்பவர்கள் ஊடக அறியாமையில் இருக்கிறார்கள் எனலாம்.

காவல் நிலையத்தில் மகளிர் காவலர்கள் இருப்பதானலேயே அங்கு செல்லும் பெண்கள் மீதான  மீதான வன்முறைகள்,தாக்குதல்கள்,பாலியல் கொடுமைகள் நின்றுவிட்டனவா.. என்ன..? அது போலத்தான் இங்கும்.

'இந்தியா டுடே' இந்த இதழில் இடம்பெற்றுள்ள வக்கிரமான கட்டுரைகள் டெல்லியில் இருந்து முடிவு செய்யப்பட்டவை,எங்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை  என வாதிடுவது சரியாகாது. அருண் பூரி தலைமையிலான  தமிழ் பதிப்பு எடிட்டோரியலில் இருக்கும் அசோசியேட் எடிட்டர் தமிழ்ப் பதிப்பில் வெளிவந்தமைக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர் தான்.

india today editor arun purie,kavitha muralidharan,kavin malar
இந்தியா டுடே சீப் எடிட்டர் அருண் பூரி


ந்தியாவைப் புரிந்து கொள்ள 'இந்தியாடுடே' வைப்படிக்க வேண்டுமாம்.

'இந்தியா டுடே' வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் பிரதிபலிக்கும் இந்தியாவிலிருந்து தான் இந்தக் கட்டுரை உருவாகியுள்ளது.எந்தச் சமூகத்தில் இருந்து வந்தார்களோ அதன் வக்கிரத்தைப் பிரதிபலிக்கிறார்கள்.

'இந்தியா டுடே'வின்  மேட்டுக்குடியினர் முன்பெல்லாம் பணத்தை அள்ளி இறைத்து அவர்களுக்குப் பிடித்த அழகிகளையும் அல்லது வாய்ப்பிருந்தால் திரை நட்சத்திரங்க‌ளையும்  தங்கள் இச்சைக்குப் பயன்படுத்துவார்கள்.அதற்குத் தோதான தரகர்களை வைத்திருப்பார்கள்.

இப்பொழுது அவர்களுக்குத் தங்களது வழக்கமான விருப்பங்கள் சலித்து விட்டது.அவர்கள் இப்பொழுது தங்களின் வக்கிரத்துக்குத் தீனி போட விரும்புகிறார்கள். அவர்கள் விரும்புவதெல்லாம் புத்தம் புதிய மலர்கள் தான். அதனால் தான் கல்லூரி,பள்ளி மாணவிகளை நோக்கித் தங்கள் வக்கிரப்பார்வையைத் திசை திருப்பியிருக்கிறார்கள்.இது தான் அவர்களின் இப்பொழுதைய விருப்பம்.அதற்கு என்ன விலை கொடுக்கவும் ,எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராய் இருக்கிறார்கள். அதற்கான புரோக்கர்களும் இருக்கிறார்கள். இது மேல் மட்டத்தில் சமீப ஆண்டுகளாய் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அவர்களின் இந்த வக்கிரத்தை பொதுத்தளத்தில் கடைசிக் கட்டம் வரைக்கும் கொண்டு போய் திட்டமிட்ட பண்பாட்டுச் சீரழிவை உருவாக்க நினைக்கும் செயலைத்தான்  'இந்தியா டுடே' செய்கிறது.அதன் விளைவு தான் இந்த இதழ். இதன் தொடர்ச்சியாய் இன்னும் பல வடிவங்களில் பல ஊடகங்களில் வரும்.

பெண்களிடமிருந்து விலகி சிறுமிகளை நோக்கி விபச்சாரத் தரகர்கள் தங்கள் பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள்.

படுக்கையறை செக்ஸ் ஆய்வுகளை ஓரம் கட்டி விட்டு பள்ளிகளில் நடக்கும் பாலியல் ஆய்வுகள் என 'இந்தியா டுடே' கவர் ஸ்டோரி வெளியிடுகிறது.

விபச்சாரத் தரகர்களின் செயல்பாட்டிலிருந்து 'இந்தியா டுடே' வேலை மாறுபட்டிருக்கலாம்.

ஆனால் தன்மை ஒன்று தான்.

தொடர்புடைய இணைப்புகள்

http://kalakakkural.blogspot.in/2014/10/blog-post_27.html

http://kalakakkural.blogspot.in/2013/03/blog-post.html

அம்பை-பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் 

2 comments:

Unknown said...

கலக குரலின் எழுத்து கருத்து சுதந்திரத்தின் மீது கட்ட்விழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை..

Anonymous said...

நீங்கள் விமர்சிக்க விமர்சிக்க கவின்மலர் கிராப் உயரமாகச் சென்று கொண்டு தானிருக்கிறது.

மதுரையில் நடைபெற்ற கருத்துரிமைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் களத்தில் நின்று போராடியவர்கள் ஜெயிலுக்குச் சென்றவர்கள் சொல்லடி கல்லடி பெற்றவர்கள் எத்தனையோ ஆட்கள் இருக்க தங்கத் தாரகை பெயர் தான் பெரிதாய் இடம் பிடித்திருக்குது. மு.ராமசாமி,ஸ்டாலின் ராஜாங்கம்,அ.முத்துகிருஷ்ணன் மீ.த.பாண்டியன்,சந்திரபோஸ் ஆகியோருக்கு கிடைக்காத முக்கியத்துவம் போராளி அக்காவுக்கு கிட்டியிருக்குது.கேட்டால் ஊடகவியலாளராம்.
உண்மையான ஊடகக் காரர்கள் யாருக்கும் கிடைக்காத முக்கியத்துவம் போராளி அக்காவுக்கு மட்டும் எப்படி கிடைக்குது என்பது ஆச்சரியம்.

ஏன் எடிட்டர் கவிதா முரளிதரனைக்கூட யாரும் முதல் வரிசையில் கூப்பிடுவதில்லை. கவினுக்கு தான் அந்த முகராசி.
நீங்க இனியாச்சும் தயை கூர்ந்து அக்காவைத் திட்டி பிராப்லம் ஆக்காதீங்க சாமி.

https://www.facebook.com/ilanthamizhagam/photos/a.554233258033337.1073741833.541216779334985/652529014870427/?type=1&theater